பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி

This entry is part 4 of 5 in the series 9 டிசம்பர் 2018

பொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயன்று கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கவர்னர் பேடி நிர்வாகம் தெரிந்தவர். அதேசமயம் அரசாங்க அலுவலங்கள் பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே இயங்கவேண்டும் என்கிற நல்லெண்ணமுடைய அப்பாவிப் பெண்மணி. தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டான் என்று அவர் மனதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் விடாமுயற்சியை அவர் கைவிடுவதில்லை என்பதால் கிரண்பேடி மீது எனக்கு மரியாதை உண்டு.

அரசு அலுவலகங்களுக்கு விசிட் செய்து அத்தைப்பாட்டி ஸ்டைலில் அவர் நடத்தும் நேர்காணல்கள் வெட்டித்தனமாக சம்பளமும், கிம்பளமும் வாங்கிக் கொண்டு சீட்டைத் தேய்த்துக் கொண்டிருக்கும் அரசு ஊழியனுக்கு அப்பட்டமான எரிச்சலை ஊட்டுபவை. கவர்னர் கேட்டுத் துளைக்கும் நியாயமான கேள்விகளுக்குப் பெரும்பாலும் அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை என்பது ஒரு துயரமானதொரு விஷயம்.

சமீபத்தில் கவர்னர் பேடி சமுதாய நல அலுவலகத்திற்கு விசிட் அடித்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. தமிழக, பாண்டிச்சேரி அரசு அலுவலகங்களில் காணப்படும் அதே எரிச்சலும், புளித்த முகபாவமும் கொண்ட அரசு அதிகாரிகள் வரிசையாக நின்று கவர்னரை வரவேற்கிறார்கள். ஒவ்வொருத்தனும் அல்லது ஒவ்வொருத்தியும் தான் ஃபலானா டைரக்டர் அல்லது டிக்கானா சூப்பர்வைசர் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் எண்பது சதவீதம் பேர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. (தமிழே தெரியாத பாண்டிச்சேரி அலுவலகர்களும் உண்டு எனக் காண்க! தெலுங்கு மட்டுமே அறிந்தவர்கள் அவர்கள். பாண்டிச்சேரியின் ஆந்திரப்பகுதியான ஏனாம் பகுதிக்காரர்களாக இருக்கலாம்).

ஒரு அரசு உயரதிகாரிக்குத் தமிழுடன் ஆங்கிலமும் அறிந்திருக்க வேண்டியது மிக, மிக அவசியம் (ஹிந்திதான் அரக்கியாயிற்றே!). அதிலும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பகுதிகளில் வேலை செய்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

மேற்படி சோஷியல் வெல்ஃபேர் ஆஃபிசர்களுக்கு சுமாரான ஆங்கில அறிவு இருக்கிறதேயன்றி கிரண்பேடி சொல்வதனைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே இங்கு யான் சுட்டிக்காட்ட விழையும் ஒரு கருத்து எனக் காண்க. உடனே, நான் தமிழுக்கு எதிரானவன் எனக் கொடி பிடிக்காதீர்! அதுவல்ல யான் இங்கு சொல்ல விழைவது.

அலுவலகத்தின் நுழைவாயிலில் இருக்கும் ஃபலானா/டிக்கானா ஆஃபிசர்களின் லிஸ்ட் இருக்கிற போர்டைப் படிக்கிற கிரண்பேடி அருகிலிருக்கிறவரிடம், ‘ஆனால் எந்த அலுவலகம் எங்கு இருக்கிறது என்கிற வழியைக் காட்டும் போர்டு இல்லையே. இந்த அலுவலகத்திற்கு வருகிறவர்கள் எப்படி வழி கண்டுபிடித்துப் போவார்கள்?” என்கிறார். அசட்டுச் சிரிப்பு பதிலாக வருகிறது. “இங்கு வருபவர்கள் எல்லோரும் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்கள். தொலைதூரத்திலிருந்து காசு செலவழித்து இங்கு வரும் ஏழைகளுக்குச் சரியான வழிகாட்டல் இல்லாவிட்டால் சிரமமல்லவா? உடனடியாக இங்கு ஒரு வரவேற்பாளரை நியமித்து வருபவர்களை விசாரித்து உதவி செய்ய ஆவண செய்யுங்கள்” என்கிறார். எல்லோரும் தலையை ஆட்டுகிறார்கள்.

டைரக்டரின் அறைக்குள் நுழையும் கிரண்பேடி அங்கிருந்த அத்தனை உயரதியாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார். அனாதைகள், ஏழைகள், முதியோர்கள், ஊனமுற்றவர்களுக்கு உதவுவதற்கான சட்டங்கள் பலவும் மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல சட்டங்கள் மாறியிருக்கின்றன. அந்த ஒவ்வொரு சட்டத்தையும் படித்து அதனைப் பின்பற்றுவதுதான் இந்த சோஷியல் வெல்ஃபேர் டிபார்ட்மெண்டின் முக்கியவேலை.

“அந்த சட்டங்களை எத்தனைபேர்கள் படித்திருக்கிறீர்கள்” எனக் கேட்கிறார் கிரண்பேடி.
அமர்ந்திருந்த அத்தனைபேர்களும் திருதிருவென விழிக்கிறார்கள். அதாகப்பட்டது அந்த அலுவலகத்தில் இருக்கும் ‘எவனுமே’ அல்லது ‘எவளுமே’ அந்த சட்டங்களைப் படித்ததில்லை என்கிற உண்மை உறைக்கிறது கிரண்பேடிக்கு. எரிச்சலும், கசப்பும் தோன்றினாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“அதையெல்லாம் படிக்காமல் எப்படியய்யா ஒருத்தன் இருபத்தைந்து ஆண்டுகள் இந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடியும்?” என்கிறார் ஆச்சரியத்துடன். “குறைந்தபட்சம் அந்தச் சட்டங்களின் பிரதியாவது யாராவது வைத்திருக்கிறீர்களா?” எனக் கேட்கிறார். மீண்டும் அத்தனைபேர்களும் திருதிருவென விழிக்கிறார்கள்.

இறுதியில் ஒரே ஒரு பெண்மணிமட்டும் ஓடிப்போய் அந்தச் சட்டங்கள் அடங்கிய காகிதத்தை கிரண்பேடியிடம் கொடுக்கிறார். “இந்த நான்கு பக்க டாகுமெண்டைக் கூடவா நீங்கள் படிக்காமல் வேலை செய்கிறீர்கள்? அரசாங்கத்தின் சட்டத்தைப் படித்து அதனை இம்ளிமெண்ட் செய்வதல்லவா உங்கள் வேலை?” என்று அவர்களை வறுத்தெடுத்துக் கொண்டுக்கையில் தாங்க முடியாமல் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

பெரும்பாலான பாண்டிச்சேரி அரசு அலுவலங்களில் கணிணியைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் பலகோடி ரூபாய்களை பாண்டிச்சேரிக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது. அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான் போலிருக்கிறது. நிர்வாகம் சீர்பட்டால் கொள்ளையடிப்பது குறைந்துவிடும் என்பதற்காக அதனைச் சரிசெய்யாமலேயே வைத்திருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ‘நூறு கிரண்பேடிக்கள் வந்தாலும் திருத்தவே முடியாது’ என்பதே என் கணிப்பு.

இத்தனை சிரிய பாண்டிச்சேரியே இந்த அழகில் இருந்தால் தமிழ் நாட்டு அரசு அலுவலகங்களைக் குறித்துக் கேட்கவே வேண்டாம். நிர்வாகச் சீர்கேட்டின் ஊற்றுக் கண்ணே தமிழ் நாட்டில்தான் இருக்கிறது.

சாதிவாரியான இட ஒதுக்கீடுகளை ஒழித்து திறமையானவர்களை அரசுப் பணிகளில் அமர்த்தாதவரை, “வேலை செய். அல்லது வெளியே போ” போன்ற Hire and Fire பாலிசிகளை நடைமுறைப்படுத்தாதவரை, இலஞ்சம் வாங்கினால் அவனது/அவளது சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஜெயிலில் தள்ளாதவரை இந்திய/தமிழக/பாண்டிச்சேரி அரசு அலுவலகங்கள் இயங்கும் விதம் மாறவே மாறாது என்கிறேன் நான்.

Series Navigationமதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *