வரவு உரைத்த பத்து

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 5 in the series 27 ஜனவரி 2019
  1. வரவு உரைத்த பத்து

பொருள் தேடச்சென்ற தலைவன் திரும்பி வருகின்றான். அவன் வரவைப் பற்றியே இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் சொல்லப்படுவதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது

====================================================================================

வரவு உரைத்த பத்து—1

அத்தப் பலவின் வெயில்தின் சிறுகாய்,

அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்

காடுபின் ஒழிய வந்தனர்; தீர்க,இனி

பலிதழ் உண்கண் மடந்தை!நின்

நல்எழில் அல்குல் வாடிய நிலையே

[அத்தம்=பாலை நிலம்; சுரம்=வழி; எழில்=அழகு; அல்குல்=அடிவயிறு; அருந்தினர்=உண்டனர்]

பணம் தேடப் போன அவன் ஊருக்குத்திரும்பி வரான்னு தோழி அவகிட்டச் சொல்ற பாட்டு இது

”அந்தக் காட்டுவழியில போறவங்க வெயிலாலக் காய்ஞ்சு போன பலாமரத்தோட சின்னக் காயைத் தின்னுக்கிட்டே போறாங்களாம். அப்படிப்பட்ட காட்டைப் பின்னால உட்டுட்டு அவரு திரும்பி வந்துட்டாரு. அதால பல இதழ் இருக்கற பூவுல மை வச்சாப்போலக் கண்ணு இருக்கறவளே! ஒன்னோட நல்ல அழகான அடி வயிறு வாடியிருந்த நெலமை மாறிப் போயிடும்”

=====================================================================================

வரவு உரைத்த பத்து—2

விழுத்தொடை மறவர் வில்இடத் தொலைந்தோர்

எழுத்துடை நடுகல் அன்ன விழுமிணர்ப்

பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்

வெஞ்சுரம் ’அரிய’ என்னார்

வந்தனர் தோழி!நம் காதலோரே

[விழுத்தொடை மறவர்=குறி தவறாமல் அம்பு செலுத்தும் திறமை உள்ள நறவர்; நடுகல்=இறந்தவர்க்கு எழுப்பும் கல்; பிணர்=சொரசொரப்பு; இருஞ்சினம்=கோபம் உடைய; உறைக்கும்=திரியும்]

அவன் வந்துட்டான்னு தோழி வந்து சொல்ற பாட்டுதான் இது.

“தோழி! அந்தக் காட்டு வழியில குறிபிழையாம அம்பு போடற வீரருங்களால செத்துப் போனவங்களுக்கு நடுகல் நட்டு இருப்பாங்க. சொரசொரப்பான தும்பிக்கை இருக்கற கோபமான யானையெல்லாம் திரிஞ்சுக்கிட்டு இருக்கற வெப்பமான அந்த வழியைக் கடக்க முடியாதுன்னு நெனக்காதே! நம்ம தலைவரு அந்த வழியைக் கடந்துட்டு நம்ம கிட்ட வந்துட்டாரு”

=====================================================================================

வரவு உரைத்த பத்து—3

எரிக்கொடிக் கவைஇய செவ்வரை போலச்

சுடர்ப்பூண் விளங்கும் ஏந்துஎழில் அகலம்

நீஇனிது முயங்க, வந்தனர்;

மாஇருஞ் சோலை மலைஇறந் தோரே.

[எரிக்கொடி=தீச்சுடர் வரிசை; கவைஇய=சூழ்ந்த; செவ்வரை=சிவந்த மலை; முயங்க=கூடுமாறு]

போன பாட்டு மாதிரிதான் இது. தோழி சொல்ற பாட்டு.

”தீச்சுடரானது கொடி போல வரிசையா சூழ்ந்து இருக்கற செவந்த மலைபோல, நல்லா வெளிச்சம் வீசற நகையெல்லாம் போட்டு இருக்கற அகலமான மார்போட நீ கூடறதுக்கு நெறய சோலையெல்லாம் இருக்கற மலையெல்லாம் கடந்து போன அவரு திரும்பி வந்துட்டாரு”

=====================================================================================வரவு உரைத்த பத்து—4

ஈர்ம்பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை

மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்

அரிய சுரன் வந்தனரே;

தெரிஇழை அரிவை!நின் பண்புதர விரைந்தே

[ஏற்றை=ஆண்நாய்; மறி=குட்டி; மான்பிணை=பெண்மான்;பிணவு=பெண்நாய்; கழியும்=விலகிப் போகும்; ஈர்=குளிர்ச்சி, அன்புடைமை]

கடந்த பாட்டு போலவேதான் இதுவும். தோழி சொல்ற பாட்டு இது.

”அன்போட இருக்கற அதோட பெண்நாயைப் புணர்ந்த பெண் செந்நாய் குட்டியோட கூடிய பெண் மானைக் கொல்லாம வெலகிப் போகும். அப்படிப்பட்ட காட்டைக் கடந்து நம்ம தலைவரு வந்திட்டாரு. நல்ல அழகான நகையெல்லாம் போட்டிருக்கற ஒன் அழகி மேலும் அழகாக்க வேகமா வந்துட்டாரு.

====================================================================================

வரவு உரைத்த பத்து—5

திருந்துஇழை அரிவை! நின்நலம் உள்ளி,

“அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுக”எனச்

சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்

சிறுகண் யானை திரிதரும்

நெறிவிலங்கு அதர கானத் தானே.

[இழை=அணிகலன்; உள்ளி=நினைத்து; பொருட்பிணி=பொருளாகிய பிணி; அதர=வழி; கானம்=காடு]

பொருள் தேடப் போனவன் அங்கியே தங்கிடாம கிடைச்சது போதும்னு திரும்பிட்டான். அவன் வந்து அவகிட்டச் சொல்ற பாட்டு இது.

”நல்லாத் திருத்தி செஞ்ச நகையெல்லாம் போட்டிருக்கறவளே! ஒன்னைப் பத்தி நெனச்சேன். பணத்து மேல வச்ச ஆசை வாழ்கன்னு சொல்லிட்டு அதை வெலக்கிட்டேன். யாருகிட்டயும் சொல்லாம வந்துட்டேன். புள்ளியோடச் சின்ன கண்ணெல்லாம் இருக்கற யானையெல்லாம் திரிஞ்சுக்கிட்டுக் கெடக்கற காட்டு வழியைக் கடந்து வந்துட்டேன்”

=====================================================================================

வரவு உரைத்த பத்து— 6

உள்ளுதற்கு இனிய மன்ற! செல்வர்

யானை பிணித்த பொன்புனை கயிற்றின்

ஒள்எரி மேய்ந்த சுரத்திடை

உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே

[பொன்பிணை=பொன்னால் செய்யப்பட்ட கயிறு; உள்ளுதற்கு=நினைத்தற்கு; வாங்க=மீட்டுக் கொள்ள]

போன வேலையை முடிச்சுக்கிட்டு வந்த அவன் அவளைப் பத்தி அவகிட்டயே புகழ்ந்து பெசறான்.

”ரொம்பப் பெரிய பணக்காரங்க அவங்களோட யானையப் பொன்னால செஞ்ச கயித்தாலக் கட்டி வச்சிருப்பாங்க. காட்டு வழியில் எரியற நெருப்பு அந்தக் கயித்தைப் போல இருக்குது. அந்த வழியில போகச்ச ஒன் குணமெல்லாம் நெனவுக்கு வந்து என் மனசைத் தடுத்திட என்னையும் இங்கக் கொண்டு வந்து சேத்திடுச்சு.

=====================================================================================

வரவு உரைத்த பத்து—7

குரவம் மலர, மரவம் பூப்ப,

சுரன்அணி கொண்ட கானம் காணூஉ

’அழுங்குக, செய்பொருட் செலவு’என விரும்பி நின்

நலங்கவிழ் மாமை கவின்

வந்தனர் தோழி!நம் காதலோரே

[குரவம்=குரவ மலர்; மரவம்=மராமரம்; சுரன்=காடு; காணூஉ=கண்டு; அழுங்குக=அடங்கி ஒழிவதாக; கவின்=அழகு பொருந்த; அலிழ்=ஒழுகும்;,சொட்டும்]

அவ அவனையே நெனச்சு வருந்திக்கிட்டு இருப்பாளேன்னு அவன் நெனக்கறான். அதால மிக வேகமா திரும்பி வர்றான். தோழி அதப் பாக்கறா. தோழி அவகிட்டச் சொல்ற பாட்டு இது.

”தோழி! அவரு குரவம்பூவும் மரவம் பூவும் பூத்ததாலக் காடு அழகா இருக்கறதைப் பாத்திருப்பாரு. இனிமே பணம் தேடப் போறத உட்டுடுன்னு மனசை அடக்கி ஒன்கிட்ட வந்து சேர்றதையையே நெனச்சு ஒன் மாமை நெறம் மறுபடியும் அழகா மாறணும்னு வந்துட்டாரு.

=====================================================================================

வரவு உரைத்த பத்து—8

கோடுஉயர் பல்மலை இறந்தனர் ஆயினும்,

நீட விடுமோ மற்றே நீடுநினைந்து

துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி

உடைத்துஎழு வெள்ளம் ஆகிய கண்ணே?

[கோடு=மலை உச்சி; நீட=நீட்டிக்க; இறந்தனர்=கடந்தனர்; நீடு நினைந்து=மிகுதியாக நினைந்து; உடைத்து எழும்=அணையை உடைத்து வரும் வெள்ளம் போன்ற]

அவனப் பிரிஞ்சு அவ ரொம்பவும் வாடறா. அதப் பாத்த தோழி கவலப்படறா. அப்பதான் அவனும் வர்றது தூரத்துல தெரியுது. ஒடனே தோழி ஊட்டுக்கு ஓடிப் போயி அவகிட்டச் சொல்ற பாட்டு இது.

”அவரு பல மலைகளையும் தாண்டித்தான் போயிருக்காரு. இங்க நீ அவரையே நெனச்சுக்கிட்டு இருக்க; அதாலத் தொடைக்கத் தொடைக்க நிக்காம அணையை ஒடச்சுக்கிட்டு வர்ற வெள்ளம் போல கண்ணீரு ஒன் கண்ணிலேந்து வருது. அது அவர அங்க அதிகமான நாளு தங்க உடுமா? அதால சீக்கிரம் வந்துட்டாரு பாரு.

வரவு உரைத்த பத்து—9

அரும்பொருள் வேட்கையம் ஆகி,நின் துறந்து

பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்

தவநனி நெடிய ஆயின; இனியே

அணியிழை உள்ளியாம் வருதலின்,

நணிய ஆயின சுரத்திடை ஆறே

[வேட்கை=விருப்பம்; நணிய=அருகே; அதர்=வழி; துறந்து=பிரிந்து; தவநனி=மிகுதி; சுரம்=காடு]

அவன் திரும்பி வந்துட்டான். அப்ப அவ அவன்கிட்ட நீ போய் வந்த பயணம் எப்படி இருந்திச்சுன்னு கேக்கறா. அதுக்கு அவன் சொல்ற பாட்டு இது.

”கிடைக்கறதுக்குக் கஷ்டமான பணம் தேடி நான் பெரிய மலை இருக்கற காட்டு வழிப் போகச்ச அந்த வழி ரொம்ப நீளமா இருந்துச்சு. ஆனா ஒன் நெனப்போடு திரும்பி வர்றச்ச அதே வழி கிட்டக்க இருக்கற மாதிரி இருக்கு”

=====================================================================================

வரவு உரைத்த பத்து—10

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீள்இடை

அரிய ஆயினும் எளிய வன்றே;

அவவு உறுநெஞ்சம் கவவுநனி விரும்பிக்

கடுமான் திண்தேர் கடைஇ,

நெடுமான் நோக்கி!நின் உள்ளியாம் வரவே

[என்றூழ்=வெயில்; அவவு=விருப்பம்; கவவு=முயக்கம்; கடுமான்=விரைவாகச் செல்லும் குதிரை; நெடுமான்=நீண்ட கண்உடைய அவள்; உள்ளி=நினைத்து]

பணம் தேடப் போன அவன் திரும்பி வந்துட்டான். அவளும் அவனும் மகிழ்ச்சியா இருக்காங்க. அப்ப தோழி, “போன வழி ரொம்ப கடுமையானதுன்னு தெரிஞ்சுக்கிட்டு திரும்பி வந்தீங்களா”ன்னு கேக்கறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

”போன வழி பூரா எல்லாம் நெருப்பால தீஞ்சு இருக்கு; நெருப்புப் போல வெப்பம் கடுமையா இருக்கு; அந்த வழி திரும்பி வர்றதுக்குக் கஷ்டம்தான்; ஆனா மான் போல கண் இருக்கறவளே! என் மனசுல ஒன்னைத் தழுவற ஆசைஇருக்கு; அதால வேகமாப் போற குதிரை பூட்டின தேர ஓட்டிக்கிட்டு நான் ரொம்ப சுலபமா வந்துட்டேன்”

அவளயே நெனச்சுக்கிட்டுத் தேர ஓட்டிக்கிட்டு வந்ததால கஷ்டமான வழியும் சுலபமாச்சாம்.

———————————————————வரவு உரைத்த பத்து நிறைவு—————————————-

Series Navigation2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்துணைவியின் இறுதிப் பயணம் – 10
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *