கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து

This entry is part 5 of 9 in the series 24 பெப்ருவரி 2019

வதை

சொர்ணபாரதி

அட்சயபாத்திரத்தை

யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்

திரிந்துகொண்டிருந்தாள் அறச்செல்வி

நிலாவில் இருந்துவந்த ஒரு கானகன்

சிலகாலம் அப்பாத்திரத்தைச் சுமந்துசென்றான்

அக்கரைப் பணத்தில் காலங்களை விற்று

மேற்குமலையோரம் பதுங்கிய ஒரு மாயக்காரன்

தன் பங்கிற்குக் கொஞ்சம் சுமந்தான்

இடைவெளியில் வார்த்தைமலர்களால்

வசப்படுத்திய மகிழ்ச்சி மைந்தன்

ஒரு துரோகப் பாட்டிசைத்து

பாத்திரத்தை வீசிச் சென்றான்

எப்போதும் காதலைச் சுமந்தபடி

வந்துநின்ற உதயகுமாரனைப் புறந்தள்ளிய அறச்செல்வி பிள்ளைப்பிராயத்து பளிக்கறையில்

தஞ்சம் புகுந்தாள்

வளர்ந்துநின்ற பளிக்கறையோ

அறச்செல்வியைச் சிறைப்படுத்தி

தன் ‘ப்ராப்பர்ட்டி’ என்றது

வேலெடுத்துப் போர்புரிந்த

கோட்டையின் துவிபாஷி மீது

வெஞ்சினம் கொண்ட அப்பளிக்கறை

உள்ளிருந்து யாரையும்

காணவிடாது பேசவிடாது

மறைத்துக்கொண்டது

பளிக்கறையின் நெருக்குதலைப்

புறந்தள்ள முடியாத புலம்பல்

உதயகுமாரன் என்ன செய்ய

மூச்சுத்திணறிய அறச்செல்வி

வெளியில் வர முடியாமலும்

யாரையும் காணமுடியாமலும்

தவித்துக்கொண்டிருக்கிறாள்

பிணங்களின் வாடையிலிருந்து

எழுந்துவந்த பெருநரியாய்

மாறிய அப் பளிக்கறை கூரிய தன் நகங்களைக்

கொள்ளுகின்ற கிளைநதியின்

கரைவரை பரப்பியது.

ஒரு கவிஞருடைய சில கவிதைகளை மட்டுமே படித்து அல்லது மற்றவர்கள் மேற்கோள் காட்டியிருக்கக்கூடிய கவிதைகளை மட்டுமே படித்து இவர் இந்த மாதிரி தான் கவிதை எழுதுவார், இந்த மாதிரி கவிதைகளைத் தான் எழுதுவார் என்ற முடிவுக்கு வருபவர்கள் நிறைய பேர்.

அதேபோல் தான் இலக்கியப் பத்திரிகைகளாகப் பரவலாகப் பேசப்படும் இதழ்களில் வரும் கவிதைகளே சமகாலத் தமிழ்க்கவிதைகளாக அவற்றை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொள்பவர்கள் உண்டு.

கல்வெட்டு பேசுகிறது என்ற மாதாந்திர இதழ் வடசென்னையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட சக-கவிஞர்களால் நடத்தப்பட்டு வந்தது; நடத்தப்பட்டுவருகிறது. கொஞ்சம் பக்கங்கள் தான். அரசியல்-சமூக-இலக்கிய விஷயங்கள் இடம்பெறும். ஒருமுறை அதில் ஒரு இலக்கிய உலகப் பிரபல கவிஞருடைய எழுத்து குறித்து ஒருவர் எழுதிய விமர்சனத்தை, ‘அதெப்படி அவ்வளவு பெரிய கவிஞரை இவ்வளவு சின்ன பத்திரிகை எழுதத் துணியலாம்’ என்றவிதமாய் ஒருவர் குற்றஞ்சாட்டி எழுதியிருந்தார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ (வரி சரியா – தெரியவில்லை) என்ற வரி என் நினைவுக்கு வந்தது.

கல்வெட்டு பேசுகிறது தோழர்கள் கனல்பறக்க இலக்கிய விவாதம் செய்வார்கள். அடுத்த நிமிடம் எலோருமாகச் சேர்ந்து சிரித்தபடி தோளில் கைபோட்டு தேனீர் அருந்திக்கொண்டிருப்பார்கள்! எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அந்த எளிய இதழில் எத்தனையோ நல்ல கவிதைகள் வந்திருக்கின்றன. சில கவிதைகள் மிக சாதாரணமாக இருக்கும். இவற்றை எந்த அடிப்படையில் வெளியிடுகிறீர்கள் என்று கேட்டால் பத்திரிகையை நடத்திவந்த கவிஞர் சொர்ணபாரதி நட்பின் அடிப்படையில்தான் என்று இயல்பாகச் சொல்வார்!

நட்பின் அடிப்படையில் சில சாதாரணக் கவிதைகளையும் வெளியிடுவது, அதேமாதிரி சாதாரணக் கவிதைகளை இன்னொரு இதழ் வெளியிட்டால் அதைக் குத்திக் கிழிப்பது, அதேசமயம் தன் நட்பினர் எழுதும் சாதாரணக்கவிதைகளை அத்தனை ஆர்வமாக வெளியிட்டு அது முதல்தரமான கவிதை என்று துண்டுபோட்டு தாண்டாத குறையாய் சாதிப்பது – இதெல்லாம் எல்லாச் சிற்றிதழ்களுக்கும், சிற்றிதழ்க்காரர்களுக்கும் பொதுவான குணாம்சமாக இருப்பதை கவனித்திருக்கிறேன்!

ஒரு கவிஞர் வெவ்வேறுவிதமான கவிதைவடிவங்களை செய்துபார்க்க முற்படுவதுண்டு. ஆனால், நிறைய சமயங்களில், ஒரு கவிஞரின் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கவிதைகளே திரும்பத்திரும்ப வாசகர்களுக்குத் தரப்படும்போது அவர் இப்படித்தான் எழுதுவார் என்ற கருத்து உருவாகிவிடுகிறது.

கல்வெட்டு பேசுகிறது கவிஞர்கள் சொர்ணபாரதி, ஆசு சுப்பிரமணியன், விஜேந்திரா, அமிர்தம் சூர்யா, தமிழ் மணவாளன் போன்றோர் தமிழ்க்கவிதைப் போக்குகள் குறித்த பிரக்ஞையோடு அவை சார்ந்த பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதையும் அதேபோல் கவிதையில் பல்வேறு வடிவங்களை முயன்றுபார்ப்பதையும் அவர்களுடைய படைப்பாக்கங்கள் எடுத்துக்காட்டு கின்றன.

மேலேயுள்ள கவிதை கவிஞர் சொர்ணபாரதி எழுதியது. நேரிடையாக அர்த்தத்தைத் தரும் கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், அதுவே அவருடைய பாணி என்ற முடிவுக்கு வருபவர்கள் அவருடைய கவிதைகளை சரியாகப் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். இதற்கு மேலேயுள்ள கவிதையே சாட்சி.

புராணங்கள், காப்பியங்கள் போன்றவற்றிலிருந்து ஒரு சில உவமைகள், குறியீடுகள் ஆகியவற்றை இடம்பெறச் செய்து கவிதை உருவாவது ஒருவிதம். ஒரு கவிதை முழுக்க புராண அல்லது காப்பிய நிகழ்வின் பின்னணியில் இயங்குவது ஒருவிதம். இரண்டாம்வகைக் கவிதை அந்தக் குறிப்பிட்ட காப்பியம் நமக்கு முழுமையாக அல்லது ஓரளவேனும் தெரியாதபோது அதற்குள் நம்மை அனுமதிப்பதேயில்லை. அது கவிதையின் தவறல்ல.

தன் மேதாவிலாசத்தைக் காட்டிக்கொள்ளவே இப்படி எழுதுகிறார் – வேறு வழக்கமான நேரிடையான விதத்தில் கவிஞர் எழுதியிருக்கலாமே என்று குற்றஞ்சாட்டுவது சரியல்ல. தான் சொல்லவந்ததை அடர்செறிவாகச் சொல்ல தன் கவிதையை இப்படி ஒரு காவியப்பின்புலத்தில் சொல்வதே சரி என்று கவிமனம் உணர்ந்திருக்கிறது. அப்படி உணர்ந்தபின் வேறு எப்படி எழுதவியலும்?

ஒரு வாசகராக, இந்தக் கவிதையைப் புறமொதுக்கவிடாமல், புரிந்தும் புரியாமலுமாய் இருந்தும் இக்கவிதையை மீண்டும் மீண்டும் என்னை வாசிக்கச் செய்வது எது?

’வதை’ என்ற தலைப்புக்கும் அட்சயபாத்திரம் என்ற சொல்லுக்கும் இடையே இதில் உணரக்கிடைக்கும் ஒரு தொடர்பு. அட்சயபாத்திரம் என்ற வார்த்தை இதில் பின்னணியாக உள்ள காப்பியம் மணிமேகலை என்பதை எடுத்துக்காட்டுகிறது. மணிமேகலை காப்பியத்தை நான் முழுவதும் படித்ததில்லை. கதையும் ஓரளவே தெரியும்.

நிறைய புராண -இதிகாச – காப்பியங்களெல்லாம் நம்மில் பெரும்பாலோருக்கு ஓரளவு தான் தெரியும். நாம் படித்த சில செய்யுள்கள், பிறர் திரும்பத்திரும்ப முன்வைக்கும் சில கருத்துகள் – இப்படி.

ஆனால், அட்சயபாத்திரம் கவிஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்று விரும்பும் ஒன்று. சமூகப் பிரக்ஞையுள்ள யாரும் – மனிதநேயமுள்ள எவரும் விரும்பும் ஒன்று.

அதேசமயம், அட்சயபாத்திரம் சரியானவர் கையில் இருந்தால்தான் அது மற்றவர்களுக்குப் பயனளிக்கும். தகாதவர் கையில் போய்ச்சேர்ந்தால்….?

இந்தக் கவிதையில் மணிமேகலை என்ற பெயர் வருவதில்லை. அறச்செல்வி என்றே குறிப்பிடுகிறார் கவிஞர். உரியவரிடத்து அந்த அட்சயபாத்திரத்தை ஒப்படைக்க அவள் படும் வதையே கவிதை என்பது புரிகிறது.

இந்தக் கவிதையில் வரும் பாத்திரங்கள், நிகழ்வுகள் யாவும் மணிமேகலை காவியத்தில் வருவதாகவே இருக்கலாம். அப்படியென்றால், இந்தக் கவிதை காப்பியநாயகிக்கும் நிஜவுலகிற்கும் இடையே எந்த இணைப்பையும், ஒப்புநோக்கலையும் சாத்தியப்படுத்தவில்லையா?

நவீன தமிழ்க்கவிதை அப்படியிருப்பதில்லை. அது சமகாலத்தை ஏதோவொரு வகையில் பிரதிபலிக்கிறது; பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்தக் கவிதையில் அந்த இணைப்புக்கண்ணி எது? பளிக்கறை (பளிங்கு மண்டபம்?) அறச்செல் வியை சிறைப்படுத்தி தன் ‘ப்ராப்பர்ர்டி’ என்றது. இந்த ப்ராப்பர்ட்டி என்ற ஆங்கிலவார்த்தை மிகுந்த பிரக்ஞையோடு இங்கே இடம்பொருத்தப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த வார்த்தையில் அட்சயபாத்திரத்தைக் கையிலேந்திய அறச்செல்வி அட்சயபாத்திரமாகவே மாறிவிடுவது புரிகிறது.

அட்சயப் பாத்திரம் என்பது இந்து தொன்மவியலின் படிதர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மையுடையது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவை உண்டார்கள். மணிமேகலை இலக்கியத்தில் அட்சயப் பாத்திரத்தை ஒத்த அள்ள அள்ள உணவை வழங்கும் பாத்திரமாக அமுத சுரபிஎன்னும் பாத்திரம் சுட்டப்படுகிறது. இந்தப் பாத்திரத்தைக் கொண்டு ஆபுத்திரனும்மணிமேகலையும் வரியவர் பசியைப் போக்கினர் என்று விக்கீபீடியாவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அட்சயபாத்திரம் அவளுடைய அன்பு, அன்புள்ளம் என்று கொள்ளலாமா? அல்லது, ஆபுத்திரனாக நம்பிய சிலரோடு அவள் மேற்கொண்ட நலப்பணி என்று கொள்ளலாமா?

தன்னை சுய ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட நபும்சகர்களிடமிருந்து விடுபட்டு பாதுகாப்புக்காய் தன் பிள்ளைப் பிராய பள்ளிக்கறையில் தஞ்சம் புகுகிறாள் அறச்செல்வி என்கிறது கவிதை. காவியத்தில் அப்படித்தான் இடம்பெற்றிருக்கிறதா?

ஆமெனில் அது இங்கே பிறந்த வீடு என்று பொருள்தருகிறதா? அல்லது தன் மனம் என்று பொருள் தருகிறதா? அல்லது கட்டிய கணவனா?

பளிக்கறை வளர்ந்துவிட்டதென்றால்?

கோட்டை துபாஷி யார்? அவன் வேலெடுத்துப் போர்புரிந்தது அட்சயபாத்திரம் என்ற கலயத்திற்கா? அல்லது அதுவாக மாறிவிட்ட பெண்ணுக்காகவா?

பளிக்கறையின் நெருக்குதலைப் புறந்தள்ள முடியவில்லை. இங்கே, மூச்சுத்திணறுவதும், கையறுநிலையும் குறிப்புணர்த்தப்படுகிறது. ஒரு கோபத்தில் அந்த அன்பே உருவான பெண் யாருக்கோ மனைவியாகிவிட் டாளா?

உதயகுமாரன் என்ன செய்ய என்பதில் உதயகுமாரனும் நிராதரவாய் நிற்பது புரிகிறது.

மூச்சுத்திணறினாலும் வெளிவர முடியாத நிலை. இது தானாகத் தேடிக்கொண்ட திருமணபந்தமா?

பளிக்கறை பிணங்களின் வாடையிலிருந்து எழுந்துவந்த பெருநரியாய் மாறி தன் (குத்திக் கிழிக்கும், கிழித்துக் குதறும், காயப்படுத்தும், ரணவலியேற்படுத்தும்) கூர்நகங்களை ‘கொள்ளுகின்ற கிளைநதியின் கரைவரை’ பரப்பியது என்று படிக்கும்போது பளிக்கறை மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல் ஒரு பேயுரு கொள்கிறது. கிளைநதி யின் கரைவரை’ – இந்த சொற்றொடருக்கான அர்த்தம் காவியத்திற்குள்ளேயே தேடிக்கண்டடைய வேண்டியதா? அதைத் தாண்டிய அளவிலா?

இந்தக் கவிதையை உள்வாங்குவதில் எதிர்ப்படும் இத்தனை தடைகளையும் மீறி இந்தக் கவிதை தன்னைப் புறக்கணிப்பதையும் தடுக்கிறது! திரும்பத் திரும்ப இதைப் படித்து ஒரு புதிர்வெளியில் அலைவதைப்போல் அலைக்க ழியச் செய்கிறது.

இந்தக் கவிதையை இன்னும் மேலான அளவில் உள்வாங்கவே மணிமேக லைக் காவியத்தை முழுமையாகப் படிக்கவேண்டும் என்ற விழைவை ஏற்படுத்துகிறது.

அறச்செல்வி என்ற வார்த்தைப் பிரயோகம் கவிதைக்குள் இருக்கும் பெண்ணின் மேன்மையையும் அவளுடைய அலைக்கழிப்பிற்கெல்லாம் காரணம் அவளல்ல என்ற உண்மையையும் கோடிட்டுக்காட்டிவிடுகிறது.

தகுதியற்றவர்களின் கையில் சிக்கி நல்லவர்கள் துன்புறுவது எத்தனை வருத்தமளிப்பது?

அதுவும், அட்சயபாத்திரம் வைத்திருப்பவள்?

அட்சய பாத்திரம் கைவசம் இருப்பதாலேயே வாழ்க்கை ஆனந்தம் என்று சொல்லிவிடமுடியாத நிலை நெஞ்சில் அறைகிறது.

நெஞ்சை உறுத்தும் ஒரு விஷயத்தைக் கவிஞர் எழுத்தில் பதிவுசெய்ய விழைகிறார். அதற்கான ஆகச்சிறந்த வார்த்தைகளைத் தேடித்தேடி அட்சயபாத்திரம், அறச்செல்வி என்ற வார்த்தைகளோடு சேர்த்து அந்தக் காவியநாடகத்தையே பின்னணியாகக் கொண்டு கவிதை அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார். அல்லது, வாசித்த காப்பியம், நெஞ்சை அலைக்கழிக்க, அதை வேறுவேறு கோணங்களில் புனைந்துபார்க் கிறார்.

இந்த முனைப்பில் கவிஞரே அட்சயபாத்திரமாகிறார்; அறச்செல்வி யாகிறார்; பளிக்கறையாகிறார்; கிளைநதியாகிறார்….. எல்லாமுமாகிறார்; எல்லாவற் றையும் இயங்கச்செய்கிறார்; வழிநடத்துகிறார். கவிஞருக்குத் தெரியும் தான் கட்டிய கவிதைவீட்டின் ஒவ்வொரு செங்கல்லையும் கவி அறிவார் என்பது என் நம்பிக்கை.

ஷெர்லாக் ஹோம்ஸ் ஒவ்வொரு ‘கேஸையும்’ துப்புத்துலக்கிய பின் அவருடைய உதவியாளரான வாட்ஸன், அட, இவ்வளவுதானா விஷயம்!’ என்பானாம். அதுபோலவே, விடுபட்ட ஒரு அர்த்த(சாத்தியக்)கண்ணி கையில் சிக்கிவிட்டால் பின் கவிதை எளிமையாகப் பிடிபட்டுவிடலாம்.

கவிஞர் சொர்ணபாரதியை நான் அறிவேன். ஆனாலும் அவரிடம் இந்தக் கவிதையைப் பொருள்பெயர்த்துத்தரும்படி கேட்டதில்லை.  

புதிர்வெளியில் அலைந்து புதையலைக் கண்டெடுப்பதே வாசகார்த்தம்!

Series Navigationகவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்துரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *