கவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்து

This entry is part 4 of 9 in the series 24 பெப்ருவரி 2019

‘ரமேஷ் பிரேதனி’ன்

‘காந்தியைக்கொன்றதுதவறுதான் என்ற கவிதையை முன்வைத்து

_ லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த தாக்கம் இன்னும் அகலவில்லை. உலக இலக்கியத்தின் எந்தவொரு முதல்தரமான, கவித்துவம் மிக்க அரசியல்கவிதையோடும் இணையாக நிற்கக்கூடிய காத்திரமான கவிதை இது.

இந்த நீள்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிக் கவிதைகளாக, தன்னிறைவு பெற்ற கவிதைகளாக வாசிக்கப்படத் தக்கவை; பொருள்தரத் தக்கவை.

இந்தக் கவிதை அல்லது கவிதைகளில் அங்கிங்கெனாதபடி காந்தி என்ற வார்த்தை அல்லது பெயர் வருகிறது. ஆனால், இந்தக் கவிதை காந்தியைப் பற்றியதல்ல என்பதே ஒரு வாசிப்பாளராக எனக்கு ஏற்படும் முதல் புரிதல்.

[மீண்டும் சொல்லத்தோன்றுகிறது – நான் இந்தக் கவிதை குறித்து முன்வைக்கும் கருத்துகள் கவிதை வாசிப்பில், அதுவும் ஒருசில வாசிப்புகளில் எனக்குக் கிடைத்தவை மட்டுமே. இந்தக் கவிதைக்கான உரையாக இதை நான் தர முன் வந்தால் என்னைவிட அறிவிலி யாரும் இருக்கமுடியாது]

நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் – அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமூம்பாவைக் கொன்றதும்
தவறுதான் – என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ
மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது
ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு
வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது
நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்

இந்த ஆரம்பவரிகளில் வரும் இருவர் , அந்த நான் – நீ யார் யார்? நான் என்பது நானில்லை என்பதேபோல் நீ என்பது நீயில்லை என்பதும் கவிதை வாசிப்பாளர்களுக்குத் தெரிந்த விஷயம்தான். கவிஞரும் கவிதைக்குள் ஒலிக்கும் குரல் அல்லது குரல்களுக்குரியவர்களும் வேறுவேறு நபர்கள் என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். நமக்குள்ளேயே வேளைக்கொன்றாக ஒலிக்கக்கூடிய வேறுவேறு குரல்கள் இருப்பதையும் நாமறிவோம். நான் இங்கே குறிப்பிடும் நான் என்ற சொல் கவிதையில் இடம்பெறுகிறது. ஆனால் நாம் இடம்பெறுவதில்லை. ஏனெனில் நான் தான் நான் நீ நாம் அவர்கள் இவர்கள் எல்லாம். நீ என்று சுட்டப்படுபவருக்கும், நான் என்று சுட்டப்படுவருக்கும் இந்தக் கவிதையில் தனித்தனி அடையாளம் இல்லை. நான் – நீ என்று சொல்வதெல்லாம் ஒருவகைத் தப்பித்தலே; ஒருவகையில் தப்பித்தலே. யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து தப்பித்தல்? நமக்குள் மேலோங்கியிருக்கும் நமக்குப் பிடிக்காதவர்களிட மிருந்து; நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் நம் வெறுப்புக்குரியவர்களிட மிருந்து; நமக்குள் இல்லாதிருக்கும் நாம் விரும்பத்தக்கவர்களிடமிருந்து. நமக்குள் பொன்சாய் மரமாய் குறுகிநின்றுகொண்டிருக்கும் கைப்பொம்மையா யிருந்து நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் நம் மனசாட்சியாகிய நாமாகிய நாமுக்கு – நாமற்ற நாமுக்கு.

ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு
வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது

’ஒவ்வொருவரையும் கொல்வதற்கான காரணங்கள் என்னிடம் உண்டு/ அவை வலுவான காரணங்கள்’ என்று சொல்லும் வரிகளில் வலு என்பது தீர்க்கமான காரணங்கள் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளதா, அல்லது might is right என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளதா – வலுவான காரணங்கள் என்பது மிகச் சரியான, மிக நியாயமான காரணங்கள் என்ற பொருளைத் தருவதாக இருந்தாலும் ‘அவற்றை உன்னால் மறுக்கமுடியாது’ என்று கவி அல்லது கவிதைக்குள் ஒலிக்கும் குரல் யாரிடம் சொல்கிறது? தூலமான இன்னொருவரிடமா? அல்லது சூக்குமமான இன்னொருவரிடமா? Self-justification or self-defense?  

ஏனெனில் கவிதையின் ஆரம்பத்திலேயே அக்குரல் காந்தியைக் கொன்றது தவறுதான் என்று சொல்லிவிடுகிறது. அதோடு நில்லாமல் இயாசுவைக் கொன்றதும்,சேகுவேராவைக் கொன்றதும், லுமூம்பாவைக் கொன்றதும் தவறுதான் என்றும் சொல்லிவிடுகிறது. காரணங்கள் சரி – ஆனால், கொன்றது தவறு என்றால்…? எனது தவறுகளை நீ ஒவ்வொரு முறையும் மன்னித்துவிடுவதால் ஒவ்வொரு முறையும் மன்னித்துவிடுவதால் நேரும் தவறு இது:

நான் காந்தியைக் கொன்றது
தவறுதான்அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமூம்பாவைக் கொன்றதும்
தவறுதான்என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ
மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது

இங்கே தவறு என்பது ஒரு நல்லவரைப் படுகொலை செய்வதாகிறது. நல்லவரோ, கெட்டவரோ – யாரையும் கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை – உடல்ரீதியாகவும், உளரீதியாகவும். ஆனால், உடல்ரீதியாக எவரொருவரையும் கொலைசெய்யாதவர் நம்மில் பப்பலர். கொலை தவறு என்பதாலா? அல்லது, தண்டனைக்கு பயந்தா என்ற கேள்வியும் உண்டு. ஆனால், மனரீதியாக நாளும் பொழுதும் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; செய்துகொண்டிருக்கிறோம்.

நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்

மேற்கண்ட வரிகள் Non-Violence is a form of violence, என்ற வாசகத்தை நினைவுபடுத்தியது. 


ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்

இந்த வரிகளில் நீ என்பது பெண்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவரைச் சுட்டுகிறதா? பெண்பாலினத்தையே சுட்டுகிறதா? கவிதைக்குள் ஒலிப்பது ஆண் குரல் தான் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா?

ஒரு கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு அவருடைய கவித்துவத்திற்கென்று இருக்கக்கூடிய ஆதாரசுருதி போன்ற ஒன்றைத் தெரிந்துகொள்ள இயலும். அப்படி வாசகர் கண்டடைவது சரியானதாகவே இருக்கும் என்பதல்ல. ஒரு வாசகராக அவரால் தான் விரும்பிப் படிக்கும் collective consciousness, collective responsibility,  mob psychology

ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்

மன்னித்தல், மன்னித்தல் போல நடித்தல் – குற்றமற்றவராக இருத்தல் அகிய மூன்று வெவ்வேறு நிலைகள் முன்வைக்கப்படுகின்றன. மன்னிப்பதாலேயே ஒருவர் குற்றமற்றவராகிவிடுவாரா என்ற கேள்வி ஆகமாட்டார் என்ற பதிலை உள்ளடக்கியிருக்கிறதா? அப்படியெதுவும் இல்லையா? மன்னிப்பது போல் நடிப்பதாகச் சொல்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட அந்த பதில் அழுத்தம் பெறுகிறதா? அல்லது, அந்தக் கேள்வி அழுத்தம் பெறுகிறதா?


வரலாறு நெடுக்கவும்
ஆணாகிய நான் கொலைத்தொழிலைத் தொடர்கிறேன்
பெண்ணாகிய நீ என்னை மன்னித்தபடியேஇருக்கிறாய்
கடைசியாக என்னை நானே
கொன்றுகொள்ளும்போது
உனது கைகளில் ரத்தக்கறை படியும் என்பதை
மறந்துவிடாதே

வரலாறு நெடுக்கவும் ஆணாகிய நான் கொலைத்தொழிலைத் தொடர்கிறேன் என்ற வரி ‘யாருக்காக? என்ற கேள்வியை உள்ளடக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஒருவரைக் குற்றவாளியாக உணரவைத்துக்கொண்டேயிருப் பதன் மூலம் நம்முடைய குற்றங்களை பிறர் கண்களிலிருந்து மறைக்கவும், நம் குற்றங்களை நினைவுபடுத்திக்கொள்ளாமல் நம்மை பாதிக்கப்பட்டவர் களாக, பெருந்தன்மையாளர்களாகக் காண்பித்துக்கொள்ள முடிகிறது. பெண்கள் ஆண்டால் உலகில் போரே இருக்காது என்று பொதுப்படையாகப் பேசுபவர்கள் உண்டு. அப்படி திட்டவட்டமாகச் சொல்லமுடியுமா?  ஆதிக்கப்போர், உரிமைப்போர் என்று போரில் இருவகை உண்டு என்ற கருத்து எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை ‘போர் போர்தானே’ என்பதும். இவர் குற்றவாளி, இவர் பலிகடா என்று வாழ்நாளுக்குமாக ஒருவரை முத்திரை குத்திவிட முடியுமா? ஒரு தருணத்தில் குற்றவாளியாகிறவர் இன்னொரு தருணத்தில் பலிகடா நிலையை எய்துவது நடப்பதேயில்லையா? ஒரு தற்கொலையில் வேறு யாரும் கொலையாளியில்லையா? தற்கொலையும், கொலையும் தனிமனிதச் செயல்பாடுகள் மட்டுமா?

நீ
ஆயுதமற்ற கொலைகாரி
நான் கொலை செய்யும் நிரபராதி
சதாம் உசேனைப் போல

ஆயுதமிருந்தால்தான் கொலைசெய்ய முடியுமா? கொலை செய்யும் நிரபராதி இருக்கமுடியாதா என்ன? சதாம் உசேனைப்போல கொலை செய்யும் நிரபராதி என்ற வரியை இன்னும் பெரிய படுகொலையாளர்களுடனான ஒப்புநோக்கல் என்பதாகவும், ஒரு விஷயத்தில் நிரபராதி நிலையிலுள்ள ஒருவர் வேறொரு விஷயத்தில் கொலைசெய்பவராக இருப்பதுதான் இயங்கியல் என்பதாகவும் கொள்ளலாம்.

நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் – ஆனால்
என்னை நீ மன்னித்தது
பெருந்தவறு

கொலைசெய்வதைக் காட்டிலும் மன்னித்தது பெருந்தவறு என்ற வரிகள் மீண்டும் வருகின்றன. இதன் நோக்கம் என்ன? கொலைக்கும் மன்னிப்புக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவா? ஒருவர் காந்தியைக் கொன்றதற்காக அவரை இன்னொருவர் எதற்கு மன்னிக்கவேண்டும்? காந்தியைக் கொன்றது என்றால் அவரது வாழ்நெறிகளையா? அவற்றில் குறிப்பாக எதை? நான் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக்கொள்ளும்போதே, அது தவறுதான் என்று சொல்லும்போதே நான் குற்றவாளிக்கான கடும்தண்டனையை அனுபவித்துவிடுகிறேன், அல்லது அனுபவித்துக்கொண்டி ருக்கிறேன் – இதில் உன் மன்னிப்பு என்பது கூடுதல் தண்டனையா? பாவம்பார்த்துத் தரப்படும் தண்டனைக்குறைப்பா? ஒருவருக்குத் தரப்படும் மன்னிப்பு எப்போது தவறாகிறது? அந்த மன்னிப்பு பாவனையாகும்போதா? அந்த மன்னிப்புக்கான நோக்கம் தவறாகும்போதா? அந்த மன்னிப்புக்கான நோக்கம் நிறைவேறாதபோதா?

’நான் காந்தியைக் கொன்றது தவறுதான் – ஆனால் என்னை நீ மன்னித்தது பெருந்தவறு என்ற நான்குவரிகள் இன்னும் நிறைய அர்த்தசாத்தியங்களை மனதில் உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றன. ’நான் காந்தியைக் கொன்றதற்காக என்னை நீ மன்னித்தல் என்பது உன்னை நீ காந்தியாக்கிக்கொள்ளும் எத்தனம் – எங்கு என்ன தவறு நடந்தாலும் உடனே தவறிழைத்தவர்கள் சார்பாய் பேசப்புகு கிறவர்களின் உண்மையான நோக்கம் அந்தத் தவறுக்கான பொறுப்புத்துறப்புதான். என்னை நீயோ உன்னை நானோ கொன்றுவிட்டால் பின் ஒருவரையொருவர் மன்னித்துக்கொள்ள முடியாது. அதைவிட, காந்தியைக் கொன்றதுபற்றி கருத்து ரைத்துக் கொண்டிருப்பது சுலபம். இப்படியாக பலவிதமாய் இந்த வரிகள் அர்த்தமாகின்றன.

எனது ஆயுதத்தை எப்படியேனும்
உன்னிடம் தந்துவிட வேண்டும்
ஆயுதம் கைமாறும் அக்கணம்
நான் உன்முன் செத்துவிழுவேன்
நீ உனது முதல் கொலையை
என்னிலிருந்து ஆரம்பிப்பாய்

கையில் ஆயுதம் வைத்திருப்பதாலேயே ஒருவர் கொலையாளியாகிவிட மாட்டார். அதுவும் என் கையில் உள்ள ஆயுதம் கர்ணனின் கவசகுண்டலம்போல் காலங்காலமாய் என் கையில் திணிக்கப்பட்டது. என்னை இயல்பாக இருக்க விடாமல் இம்சிக்கிறது. கொலைசெய்ய முடியும் என்று எனக்கு உருவேற்றிக் கொண்டேயிருக்கிறது. மிகவும் கனக்கிறது. இதைத் தூக்கிக்கொண்டே எத்தனை காலம் நடக்கமுடியும். எனக்கு மூச்சுவாங்குகிறது; தலை சுற்றுகிறது. கையிலுள்ள ஆயுதத்தை நான் இன்னொரு கைக்கு மாற்றிவிட விரும்புகிறேன். ’ஆயுதம் கைமாறும் அக்கணம் நான் உன் முன் செத்துவிழுவேன் என்றால் – இந்த ஆயுதத்தை சுமந்து சுமந்து நான் செத்துப்பிழைத்துக்கொண்டிருக் கிறேன் – எந்த நேரமும் இற்றுவிழுந்துவிடுவேன் என்ற அர்த்தமா? உன்முன் விழுவேன் என்றால்? நம் கண்ணால் காணாதவரை எந்தச் சாவும் செய்திதான் என்று அர்த்தமா? செத்துவிழுந்தவரிலிருந்து முதல் கொலையை ஆரம்பித்தல் என்றால் – பலவீனமானவர்களை, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவர்களை ஏறி மிதித்துக் கொலைசெய்துதானே நம் சிற்றரசுகள், பேரரசுகள் எல்லாமே உருவாகின்றன.


காந்தி ஆவேனா
இயேசு ஆவேனா
செத்த பிறகு சொல்

ஆக, காந்தியோ இயேசுவோ ஆவேன் நான் என்பது நிச்சயம். அதாவது, நான் குற்றமற்றவன். அல்லது, இறந்ததாலேயே எனக்கும் ஒளிவட்டம் கிடைத்துவிடலாம். ‘செத்த பிறகு சொல்’ – நான் செத்தபிறகோ அல்லது நீ செத்தபிறகோ?

சாவு என்பது முடிவா? அல்லது ஆரம்பமா? சாபமா? வரமா? காந்தி இறந்துவிட்டாரா? இன்னும் வாழ்கிறாரா? காந்தியைச் சுட்டவரை மன்னிப்பதன் மூலம் நாம் காந்தியாகப் பார்க்கிறோமா? காந்தியாக முயற்சிக்கிறோமா? அவர் அறிந்த காந்தியும் இவர் அறிந்த காந்தியும் ஒருவர்தானா? காந்திக்கே காந்தி ஒருவர் மட்டும்தானா?

பின்வரும் வரிகள் இந்த நீள்கவிதையில் இடம்பெறும் 11 பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை மனதில் உருவாக்கும் அடுக்கடுக்கான எண்ணங் களை எழுதிக்கொண்டே போகலாம்.

ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்

மேற்கண்ட மூன்றுவரிகள் ஒருவர் கொலைசெய்யப்பட்டதாலேயே தியாகி யாகிவிடுவதையும், கொடூரர்கள் இருப்பதாலேயே புரட்சிக்காரருக்கும், மகாத்மாவுக்குமான தேவை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம்.

மோகன்தாஸ் எனது கனவில் வந்து
சொன்ன முகவரியில்
நான் பெற்ற துப்பாக்கி
மேலும் ஓர் உண்மையைச் சொல்கிறேன்
எனக்குச் சுடத்தெரியாது
அத்துப்பாக்கி தன்னைத்தானே
இயக்கிக்கொண்டது

துப்பாக்கி தன்னைத்தானே இயக்கிக்கொண்டது என்ற வரிகள் சுடத் தெரியாதவன் கையில் திணிக்கப்படும் துப்பாக்கி – சுயமாய் சிந்திக்கத் தெரியாதவன் மனதில் உருவேற்றப்படும் கருத்தாக்கங்களை உருவகப்படுத்து வதாகக் கொள்ளலாமா?

மோகன்தாஸ் ஒரு கோழை
அவன் ஒருபொழுதும் தற்கொலைக்குள்
அமிழமாட்டான்
நான் ஒருபொழுதும் கோழையைக் கொல்லமாட்டேன்
சரி தோழி
நீயாரைக் கொல்ல விழைகிறாய்
யாரைப் பிறப்பிக்க விழைகிறாய்
இக்கணம்
உடனே சொல்

மோகன்தாசையும்
மோகன்தாஸையும்
தோழா

மோகன் தாசுக்கும் மோகன் தாஸுக்கும் இடையேயான வித்தியாசம் கண்டிப்பாக எழுத்தோடு நின்றுவிடவில்லையல்லவா?

எனக்குத் தெரியாது
என்னைச் சுட்டவனைப் பற்றி
ஆனால் எனது மரணத்திலிருந்து நீள்கிறது
அவனது வாழ்க்கையைப் பற்றிய வாக்கியம்
முடிவற்ற வாக்கியம்
எனது மரணத்தைப் போல

உண்மையாகத்தான் சொல்கிறேன்
நான் இன்னும் சாகவில்லை
ஏன் அவனை என்பொருட்டு
கொன்றீர்

உண்மையைத்தான் உங்களிடம் கேட்கிறேன்
என்னைக் கொன்றவனை நீங்கள் கொன்றீர்
இப்போழுது நானும் அவனும் ஒரே நிறையல்லவா

என்னை அவன் கொன்றது
தவறுதான் – ஆனால்
அவனை நீங்கள் கொன்றது
என்னை மீண்டும் ஒருமுறை கொன்றது

கொலைக்குக் கொலை தீர்வாகக் கொள்ளப்படும் அவலநிலையும், ஒருவர் கொலைசெய்யப்பட்டபிறகும் அவர் இறப்பற்று இருக்கும் முரணும் இந்த வரிகளில். அகிம்சை மன்னிப்பை மனதார போதித்தவரைக் கொன்ற நபரைக் கொல்வது ஒருவகையில் அவருடைய வாழ்நெறிகளை மதிப்பழிப்பதுதானே? அதுவும் ஒருவகை கொலை தானே? பழிக்குப் பழியும் கொலை; ஒருவகையில் மன்னித்தலும் கொலை…. பின், என்னதான் செய்யவேண்டும்?

காந்திக்கு நாம்
செய்ய வேண்டியதெல்லாம்
காந்திக்கு காந்தியை
பலியிட்டுக் காட்டுவது

கடவுளுக்குக் கடவுளையே
பலியிட்டோம் நாம்

இந்த வரிகளில் என்ன குறிப்புணர்த்தப்படுகிறது? காந்தியைக் கடவுளாக்கிவிட் டோம் – எனவே, அவரையே அவருக்கு ஆகுதியாக்கவேண்டும் என்றா? காந்தியை மட்டுமா கடவுளாக்கினோம்? கடவுளுக்குக் கடவுளையே பலியிட்டோம் என்பதில் கடவுள் என்பதாக நாம் கொள்ளும் அத்தனை நன்னெறிகளும் பலியிடப்பட்டுவிட்டன – அதாவது இல்லாதொழிக்கப்பட்டுவிட் டன என்பது சுட்டப்படுகிறதா?

இந்தக் கவிதை காந்தி என்ற பிம்பத்தை, கருத்தாக்கத்தை மறுதலிக்கிறதா? மதிப்பழிக்கிறதா? அப்படியல்ல என்பதை கீழ்க்காணும் பகுதி புலப்படுத்துவ தாகத் தோன்றுகிறது.

நிலாவில் ஒரு சிறு பகுதியைச் செப்பனிட்டு
அதற்கு காந்தி நகர் எனப் பெயரிட்டு
நான் மட்டுமே வாழ்கிறேன்
வேறு யாரும் அந்த மண்டலத்தில் இல்லை
முதல் மனிதன் நான்

பூமிக்கு மேலே அந்தரத்தில்
ஒரு மணல் தீவு

காந்தியை நான் கொன்ற பிறகு
நிலாவுக்கு வந்துவிட்டேன்
கொன்றதன் காரணம் இங்குக் கூறத்
தேவையில்லை
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு
கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர்
முகம்கொள்ளக் கூசினோம்

காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம்
யாருமற்ற அந்தரத் தீவில்

காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்

காந்தியை நான் கொன்ற பிறகு
நிலாவுக்கு வந்துவிட்டேன்
கொன்றதன் காரணம் இங்குக் கூறத்
தேவையில்லை

கொன்றதன் காரணத்தை ஏன் கவிதையில் கூறாமல் தவிர்க்கிறார் கவி? காரணம் இல்லையா? சரியில்லையா? அல்லது, அவரைக் கொன்றதற்கான காரணம் இருந்ததைப்போலவே கொல்லாமலிருப்பதற்கான காரணமும் இருந்ததா? இருக்கிறதா?


ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு
கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர்
முகம்கொள்ளக் கூசினோம்

தன்னைக் கொன்றவனுக்கு காந்தி ஏன் நன்றிகூறவேண்டும். செத்துச்செத்துப் பிழைப்பதற்கு பதில் ஒரேயடியாகச் சாகடித்ததன் மூலம் நிறைய மன உளைச்சல்களிலிருந்து, அலைக்கழிப்பிலிருந்து, அமைதியிழப்பிலிருந்து தான் காப்பாற்றப்பட்டுவிட்டோம் என்ற ஆசுவாசத்தில் எழுந்த நன்றியுணர்வா அது?

காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம்
யாருமற்ற அந்தரத் தீவில்

காந்தியை, காந்தி என்ற கருத்தாக்கத்தை, உணர்வைப் பெற மனிதமனம் முதிர்ச்சியடைய வேண்டுமா? யாருமற்ற அந்தரத்தீவில் ஏன் உலாவருகிறார்கள். பலர் சூழ இவ்வுலகில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது என்பதாலா?

காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்

யார் கொன்றாலும் காந்தி இறப்பார்; இருப்பார். ஆனால், நான் கொன்றதன் மூலம் நான் காந்தியை மட்டுமா கொன்றேன்? நான் கொன்றது காந்தியா? காந்தி என்பது யார்? நான் கொலைகாரனாகிவிட்டேனே? கொலையின் கறை படிந்துவிட்டதே என் கைகளில்?

கவிதையின் இறுதிப்பகுதி இதோ:

காந்தியைக் கொன்றது தவறுதான் – 10

நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து
அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தியாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்

ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே

என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னைச் சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள
கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்

திடுக்கிட்டு கனவிலிருந்து
வெளிப்பட்டேன்
உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்
விளக்கைப் போட்டேன்
சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்

வியர்வைப் புழுக்கத்தில்
என் நெற்றிக் குங்குமம் வழிந்து
மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது
நத்தையைப் போல
காந்தியின் ரத்தம்

கனவில் வந்த காந்திக்கு முப்பத்தியாறு வயது. தன்னைவிட மூன்று வயது இளையவர் என்கிறார் கவிதைசொல்லி. அந்த வயதிற்குள் காந்தி என்னவெல்லாம் செய்துவிட்டார் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா? தனக்கும் இன்னும் வயதிருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறாரா? கவிதைசொலி இருக்கையிலிருந்து எழுந்து காந்தியை அதில் அமர்த்திவிட்டு தான் கீழே அமர்ந்துகொள்வதில் சம்பிரதாயமான மரியாதை செய்தலைவிட ஒரு உணர்தலின் வழியான பிரியம்தானே அதிகம் வெளிப்படுகிறது. ஆனால், தயங்கினாலும் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க அவரைச் சுட்டுவிடுகிறாரே. அது அவருக்கு அமைதியளிக்கும் என்று எண்ணியா?

நிறைய நிறைய யோசிக்கவைக்கும் கவிதைகள், அல்லது நீள்கவிதையின் பகுதிகள். இந்தக் கவிதைகளில் கவித்துவம் மிக்க வரிகளைப் பற்றி தனியாக நிறைய எழுதலாம். சில வரிகள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.

ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே

ஒரு கவிஞரைத் தொடர்ந்து வாசித்துவரும்போது அவருடைய கவித்துவத் தின் குவிமையமாக, திட்டவட்டமாக அவைதான் என்று சொல்லமுடியாவிட்டாலும், சில பார்வைகள் பிடிபடும். அப்படி கவிஞர் ரமேஷ் பிரேதனின் கவிதைகளுடைய குவிமையமாக எனக்குப் பிடிபடுவது COLLECTIVE CONSCIENCE – AS AGAINST MOB PSYCHOLOGY.

Series Navigationஒண்ணும் தப்பில்லகவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *