“கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 8 in the series 5 மே 2019

மஞ்சுளா கோபி


கால் பட்டு உடைந்தது வானம் – இலங்கை மலையக மண்ணைச் சேர்ந்த எஸ்தரின் இக்கவிதைத் தொகுப்பு என் கையில் கிடைத்து நான் வாசிக்க ஆரம்பித்தவுடன் எவரும் அறியாத ஒரு குகைக்குள் செல்வதைப் போலவே உணர ஆரம்பித்தேன். அந்த இருளின் அமைதியை, அவருக்குச் சொந்தமான ஒன்றை நமக்கு வெளிச்சமாக்கி இருக்கும் இத்தொகுப்பை நாம் வாசிப்பதின் வழியேதான், அந்த இருளையும், வெளிச்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். எஸ்தரின் கவிதைகள் வழியாக அடையாளப்படும் ஒரு துண்டு வானமாகட்டும், அவரின் மண்ணை அடையாளப்படுத்தும் அவரது மொழியாகட்டும், நான் அவரிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டியிருக்கிறது.
இத்தொகுப்பில் வாசிப்பிலிருந்து நம்மை விலக விடாத மொழி ஒன்றை எஸ்தரின் கவிதைகளின் வழியே தொடர்ந்து காணலாம்.
“சரிபாதி அருகில் வந்தும்
தனித்துப் போனாம்
அப்படித்தான்
மழைபெய்த நாளொன்றிலும்
தனித்தனியாக
குடைகள் வாங்கினோம்
நீயே சொல்
இந்த வானத்தை
மழை எப்போது பிரிந்ததென்று
நாடற்றவனின்
மனம்போல
குடை மட்டும் நனைகிறது”.
தொகுப்பின் முதல் கவிதையே அவரது அடையாளத்தை சொல்லிவிடுகிறது.
நாடற்றவனுக்கு நிலம் இல்லை; அந்த நிலத்திற்கு மேலே தெரியும் வானமும் இல்லை; அந்த வானத்தின் பொழிவாய் காணும் மழையும் இல்லை.
குடை மட்டும் நனைவது அவரின் கற்பனைக்கான ஒரு நற்சான்றுதான். இதன் வழியே கடக்க அவரின் வலியும், வரலாறும் புரிகிறது.
மழை என்பது இவருக்கு காதலின் அடையாளம் என்பதுபோல் பல கவிதைகளில் மழையை பெய்ய வைப்பதும், பேச வைப்பதுமாக இருக்கிறார்.
மழை ஓய்ந்தும் மழைத்தாகம் தீராமல் இருப்பதும், காலத்தின் பெருவெளியில் தவறவிட்ட காதலும், மழை பெய்து கொண்டிருக்கும் தருணத்தில் ஆவி பறக்கும் தேநீருடன் இவர்கள் அருந்தத் தொடங்கிய காதலும் பேசிக் கொண்டேயிருக்கிறது.
“ஒரு நெடும் பயணத்தைக் கடந்து
பெரும் சமுத்திரத்தில்
வந்து வந்து வந்து
ஓய்வெடுக்கும் நதியை
குழந்தை மனதைக் கூட்டிவந்து
கும்மாளத்துடன்
பருகுகிறேன்”.
ஒரு கவிமனம் தனி ஆளுமையில் எவ்வளவு கரைந்து கிடந்தாலும், குழந்தை மனதோடு குதூகலித்து திரிவதற்கு அதற்கான குழந்தமையை திரும்பப் பெற வேண்டும்.
எஸ்தர் குழந்தை மனதைக் கூட்டிவந்து கும்மாளத்துடன் பருகுவதற்கு ஏற்ற ஒரு சந்தர்ப்பம் இக்கவிதை வாயிலாகக் கிடைத்திருக்கிறது. ஆனாலும், ஒரு முரணோடுதான் இக்கவிதையை அணுக முடிகிறது. ஒரு நெடும் பயணத்தைக் கடந்து வந்து, பெரும் சமுத்திரத்தில் வந்து ஓய்வெடுக்கும் நதியை விட, ஓடிக் கொண்டே இருக்கும் நதியை நாம் குதூகலத்துடன், கும்மாளத்துடன் பருகலாம். நதி ஓய்வு கொண்டால் கும்மாளம் எப்படி வரும்? எஸ்தரின் பார்வையிலிருந்து நான் இதை விலகியிருந்துதான் கவனிக்க முடிகிறது.
“புடவை மடிப்புக்களான இந்த வாழ்வு
என்றோ ஒரு நாள்
பறவை மடிப்புக்களாக
ஆகும்
சிறகை கோதிக் கோதி
திசைகளை அளந்திடுவேன்
………………………………
………………………………
பெண்ணிற்கான வாழ்வு என்பது சிலர் தொடங்கும் இடத்திலிருந்தே வெளிப்படுகிறது. பலருக்கு புடவை மடிப்புகளாகவே இருந்து விடுகிறது. ஆனால், எஸ்தர் அதை பறவை மடிப்புகளாக என்றோ ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுடன் தனது மொழியின் திசையறிந்து சிறகு கோதுகிறார். மொழியின் பலத்துடன் பெண் அடைய வேண்டிய இலக்கை சுட்டிக் காட்டும் இக்கவிதையில் அவருக்கான வாழ்வியல் அணுகுமுறையை அவர் தனக்குத் தானே ஒரு தெளிவான மனச்சித்திரத்துடன் உருவாக்குகிறார். அதைக் கவிதையாக்கும் அனுபவம் உள்ள எஸ்தரின் கவிதை மொழி வெகுவாக கவர்ந்திழுக்கக் கூடியது.
வாழ்வியல் அனுபவங்கள் மகா தத்துவங்களை எத்தனையோ மகானுபவர்களின் வழியாக கொண்டு வந்து கொட்டி வைத்திருக்கிறது. ஆனால், தத்துவங்களிலிருந்து விலகி வாழும் உலகியல் வாழ்க்கையை நாம் பலரிடம் பார்க்கிறோம். ஏனெனில், உலகியல் வாழ்க்கையில் நாம் தத்துவங்களை புரிந்து கொண்ட அளவில் அதை ஏற்று நடப்பது சிரமம். நம் காலக்கவிஞன் கண்ணதாசனை விடவா? அவர் அள்ளித் தெளித்த தத்துவப் பாடல்கள் இன்றும் நம் செவிகளில் இனிமையான திரை இசைப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நம் காலம் தந்த கவிஞன்தான் கண்ணதாசன்.
எஸ்தரின் தலைப்பிடாத கவிதையொன்று, நம் கண் முன்னே தத்துவ தரிசனமாகவே காட்சிப்படுகிறது.
“இருப்பது ஏனோ ஒரு மதுக்குடுவை
நமக்குள் ஏன் பலநூறு மயக்கங்கள்
ஏழு வண்ண வானவில்தானே அழகு
ஆயிரம் வண்ணங்களை
நாம் ஏன் அள்ளிப் பூசியிருக்கிறோம்
ஒரே நதி என்பதாலா
இன்னும் நாம் நீராட மறுக்கிறோம்
இதயத்திற்குத்தான் நான்கு அறைகள்
அதற்கு ஏன் ஆயிரம் வாசல்கள்
இருப்பது ஒரு மரணம்
எந்நேரமும் நாம்
ஏன் இறந்து கொண்டிருக்கிறோம்”.
இவரது கேள்விகளின் முன்னே வாழ்க்கையும் ஒரு கேள்விக்குறியாகிக் கிடக்கிறது. மனிதன் எதையும் வாழ்ந்து தீரவில்லை. வாழத் தெரியாமலேயே வாழ்;விற்கான தீர்வுகளை அவன் தேடி அலைகிறான். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமுமாக வாழ்வு அவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. அவனோ, வாழ்வின் ஒரு சிறு துளியைக் கூட மகிழ்ச்சியுடன் அணுக முடியாமல் தீராத வலியுடன் தன் வாழ்வினை கடந்து செல்கிறான். எஸ்தரும் தன் கேள்விகளின் வழியே வாழ்வைக் கடந்து செல்லும் நிதானத்தோடு பயணிக்கிறார்.
“இங்கே மனிதனாவது சாதாரணம்
மனிதர்களுக்கான மனிதனாவதே சாகாவரம்”

என்று எடுத்துரைக்கும் இவரது கவிதையில் துயர கீதங்களை இசைத்துப் போகும் இவரது மனம் அவரது மண்ணையும் மக்களையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறது. கவிதையில் சில எடுத்துரைப்புகள் மண் சார்ந்த துயரங்களையும், சுமைகளையும், அதிகாரங்களுக்கெதிரான விடுதலையை கோருவதையும் கவிதையில் அவதானிக்க முடிகிறது.
இருள் பற்றிய பாடலை (பக்கம் 77) புனையும் போது, இரவுக்கு வெளிச்சமானதொரு கண் உண்டு என்று கூறும் போது, வரியிலிருந்து நான் அதைக் கடந்து போக முடியாமல் தவித்தேன். அச்சமூட்டும் இருளிலிருந்து விலகி அதன் துல்லியமான அசைவுகளை நுட்பமாக கவனித்திருக்கும் எஸ்தரின் பார்வையை வியக்காமலிருக்க முடியவில்லை.
ஆண் மனதில் பெண் பற்றிய பிம்பம் எத்தனை கயமைகளை உள்ளடக்கியது. இந்தக் கயமைகளை உடைக்கும் பெண் எழுத்துக்கள் ‘பெண்ணியம்;’ என்ற ஒரு வகைமைக்குள் மட்டுமே சிறகடித்துக் கொண்டிக்கின்றன.
ஆனால், எஸ்தரின் கவிதைகளோ, இரு நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, அடிமைகளாய் இருளில் இருந்த நாம் அறியாத இலங்கை ஹட்டன் பகுதி மலையக மக்கள் கூட்டத்திலிருந்து வருகிற துயரச் செய்திகள் ஆகும்.
பொதுவாகவே, ஈழத் தமிழ்க் கவிதைகளில், அந்த மண்ணுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை உணர முடியும். புலம் பெயர்ந்து வெவ்வேறு உலகின் வெவ்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும், அந்த மண்ணின் விடுதலைக்காக கனவு கண்டவர்களோடு படைப்பாளிகள் தங்களது கனவுகளையும் தங்களது புதிய படைப்புக்களில் இணைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
எஸ்தர் தனது நினைவிலிக்குள் பதுங்கியிருக்கும் சகல துயரங்களையும் தானே நதியாகவும் கடலாகவும் கடந்து சென்று, இப்பூமியில் வாழும் சகல மனிதர்களின் இதயத்தையும் ஈரமாக்கி பார்ப்பதற்கு தனது கவிதைகளின் வழியே முயன்றுள்ளார்.
மேகம் சுமந்து வரும் மழையைப் போல், இவரது கவிதை மொழி காதலைச் சுமப்பது தெரிந்தாலும்,

    தேகத்தில் எத்தனை வலி
    அதை விடு
    நம் தேசத்தில் எத்தனை வலி
    அதை பாடு

என்று சொல்லும் போது,
மேற்குக்கரைச் சூரியன் போல், சிவந்தும் மறைந்தும் போன அவரது மூதாதையர்களின் துயரக்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
காலத்தோடு கவிதை செய்யக் கற்றிருக்கும் எஸ்தர் ‘கால்பட்டு உடைந்தது வானம்’ என்ற தொகுப்பின் வழியாக மொழியின் சலசலப்பை நம் விழிகள் விரிய விரிய படிப்பதற்காகவும் சுவைப்பதற்காகவும் மட்டும் தரவில்லை.
வேறுபட்ட நிலவுலகில், மனிதர்களாகிய நாம் வாழ்ந்தாலும், நம் மொழியையும், நமக்கான உணர்வுகளையும் உறக்கத்தில் தொலைத்து விடாமல், மொழியாலும், இனத்தாலும் உணர்வுகளின் வழியே நாம் ஒன்றிணைய இத்தொகுப்பின் மூலமாக தன் கையிலிருக்கும் கவிதைகளை நமது கவனத்தில்; பதியமிட்டுள்ளார். நம் தமிழ்;ச் சூழலில் கவிதைகள் எப்போதும் வாசகர்களின் கவனத்தைக் கோருவதாகவே உள்ளது.
வாசகர்கள் தமது வாசிப்பின் வழியே நமது மொழியின் புதிய குரலை கைப்பற்றும் தருணமிது.
-மஞ்சுளா.
ஆசியர்: எஸ்தர், வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12ஃ293இ இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014இ பக்கங்கள்:136, விலை ரூ.120ஃ- தொலைப்பேசி-91-9841450437.

Series Navigationகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சிஅளவளாவல். புத்தகம் பகிர்தல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *