நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….

This entry is part 9 of 9 in the series 2 ஜூன் 2019

எழுத்தாளர் அசோகமித்திரனின் கதையொன்றில் ஒரு இளைஞன் கடையொன்றில் நுழைந்து அங்குள்ள அரும்பொருட்களைப் பார்த்துக்கொண்டே போவான். ஒன்றிரண்டு பொருட்களின் விலையைக் கேட்பான். ‘நீ வாங்கிக் கிழிக்கப்போகிறாய்’ என்ற எகத்தாளச் சிரிப்போடு கடை சிப்பந்தி அலட்சியமாக பதிலளிப்பான். ’இந்த மாதிரி இளக்காரச் சிரிப்புகளையெல்லம் ‘சப்’பென்று அறைந்து நீக்கினாலே போதும் – உலகின் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று எண்ணிக்கொண்டே அந்த இளைஞன் வெளியேறுவான்.

இது மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்யவே சில பேரறிவுசாலிகள் நம்மிடையே இருக்கிறார்கள். அதே இகழ்ச்சிச் சிரிப்போடு அவர்கள் ’இந்தியப் பிரதமர் திரு. மோடி பதவியேற்றதும் எந்த அயல்நாட்டுக்குப் போகலாம் என்று சிந்திப்பதாக முகநூலிலும், ட்விட்டரிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் அத்தனை இளக்காரமாக, அவர்களுடைய இரண்டாந்தோலாகிப்போன இகழ்ச்சிச் சிரிப்போடு திரும்பத் திரும்பப் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் பிரதமர் வெளிநாடுகளுக்குப் போவது ஊர்சுற்றவா? திரு. மோடி குறித்த அத்தகைய பிம்பத்தை உருவாக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறவர்கள் தங்களுக்குரிய பதவி வழியான வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களே. ஃபேஸ் லிஃப்ட் செய்யவும், பிள்ளைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும், விமானத்தில் அடிக்கடி பறப்பவர்கள், பிள்ளைகளை மேலைநாட்டுக் கல்விக்கூடங்களில் படிக்கவைத்திருப்பவர்கள், மேலைநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், சொத்து வாங்கிக் குவித்திருப்பவர்கள் ஒரு நாட்டின் பிரதமர் பணி நிமித்தம் அயல்நாடுகளுக்குப் பயணமாவதைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

தொலைக்காட்சி மெகா சீரியல்கள், மினி சீரியல்கள் எல்லாமே நகைக்கடை விளம்பரங்களாகிவிட்டன. அண்டானையும் குண்டானையும் தொங்கட்டான் களாக மாட்டிக் கொண்டிருக்கும் பணக்கார எஜமானிகள் கொடுமைக்கார மாமியார்கள், அல்லது சமூக சேவகி மாமியார்கூட ஏழைப் பணிப்பெண்ணை அவள் சிறுமியாகவும் இருக்கலாம், அல்லது மருமகளை எத்தனை கேவலமான வார்த்தைகளில் மதிப்பழிக்க முடியுமோ – அநாதைக் கழுதை, மலட்டுச் சிறுக்கி இத்தியாதி அத்தனை கேவலமாக மதிப்பழிக்கலாம்.

புடம் போட்ட பகுத்தறிவுவாதிகளாகப் பறைசாற்றிக் கொள்வோரின் தொலைக்காட்சிகளிலெல்லாம் பேய், பிசாசு, மந்திரவாதி, பில்லிசூனியக்காரி கோலோச்சலாம். (இதற்கெல்லாம் மக்கள் தொலைக் காட்சி முடிந்தவரை விதிவிலக்காகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது) இதைப்பற்றியெல்லாம் கருத்துரைப்பதற்கு அவர்களு’க்கெல்லாம் நேரமிருப் பதில்லை.

ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் பணிநிமித்தம், அவருக்கு இருக்கும் அரசாங்க அனுமதியின் பேரில் வெளிநாடு பயணமானால் அது எள்ளத்தக்க விஷய மாகிவிடுகிறது. ’தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பதாய்’ யாரும் அதை கேலிசெய்யலாம். இதில்கூட பரம்பரைச் செல்வந்தர்கள் அல்லாதவர்கள் வெளிநாடு போனால் அதை எள்ளிநகையாடும் ஒரு மேட்டிமைத்தனம் உள்ளுறைந்திருக்கிறது)

ஊர் சுற்றவும், ஸெல்ஃபி எடுத்துக்கொள்ளவும், ஃபேஸ் லிஃப்ட் செய்யவும், தமிழ் இலக்கியத்தின் நிரந்தரப் பிரதிநிதிகளாகவும்,இன்னும் எதெதற் கெல்லாமோ வெளிநாடு பயணம் சென்றுவருப வர்கள் நாட்டின் பிரதமர் வெளிநாடு செல்வதை அத்தனை எள்ளிநகையாடுகிறார்கள்.

எங்கள் பணத்தில் நாங்கள் போகிறோம். ஆனால் எங்கள் வரிப்பணத்தில் பிரதமர் போகிறார் என்று நியாயம் பேசுவோருக்கு –

உங்கள் பணம் உண்மை யில் உங்கள் பணம்தான் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா?

சக மனிதர் நம்மைப்போல் வாழமுடியாமல் சாக்கடையில் உழலும்போது சுக வாழ்வு வாழும் யாருடைய மனசாட்சியும் இந்தக் கேள்வியைக் கண்டிப்பாகக் கேட்கும். கேட்கவேண்டும்.

’நேசமணி’யின் தலையில் மேலிருந்து வேகமாக வந்திறங்கும் சுத்தியலைக் கண்டு அப்படி விழுந்து விழுந்து சிரித்து அதை அப்பழுக்கற்ற நகைச்சுவையாக ரசிப்பவர்களுக்கும் மனசாட்சி இருக்குமென்றே நம்புகிறேன்.

(2)

’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’…… ’செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் “ – இப்படி நிறைய வரிகளை, வாசகங்களை, மேற்கோள் காட்டுவோம். ஆனால், மொழிப்பற்று என்ற பெயரில் எழுத்தாளர்கள் கூட மொழி குறித்து நடுவண் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள ஆரம்ப கட்ட வரைவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலேயே ‘இந்தித் திணிப்பு’ என்று சாடத்தொடங்கியாயிற்று.

தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கட்சிகளுடையதாய் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) இருப்பதால் அவற்றில் நடைபெறும் விவாதங்களி லெல்லாம் பெயருக்குக் கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் இடம்பெருகிறார்களே தவிர மற்றபடி பேச எடுத்துக்கொள்ளப்படும் கருப்பொருளும் சரி, அது நெறிப்படுத்தப்படும் விதமும் சரி அவரவர் கட்சிக்கான (indoor) பிரச்சாரமேடையாகவே அமைவது கண்கூடு.

இன்று உலகமே ஒரு Global Village ஆக சுருங்கியிருக்கும் நிலையில் எத்தனை மொழிகள் கற்றுக்கொண்டாலும் நல்லதுதான். அதுவும், இன்று மொழிபெயர்ப்புக்கான தேவையும் அதன் வழியான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியோடு வேறு ஓரிரு இந்திய மொழிகளும், மேலைநாட்டுமொழிகளும் தெரிந்திருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்று எண்ணுவதைத் தவிர்க்கமுடிவதில்லை.

திணிப்பு என்று சொல்பவர்கள் பள்ளிப்படிப்பு என்பது மாணாக்கர்கள் விரும்பும் விதமாகவா அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இதுவும் ஒருவகைத் திணிப்பு தான். ஒரு விஷயம் தம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகிறதா என்று அதனால் பாதிக்கப் படுகிறவர்கள் தான் சொல்லவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் பிள்ளைகளே தமிழ் உச்சரிப்பிலும் வாசிப்பிலும் எத்தனை பின் தங்கியிருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்தால் தெரியும். அவர்கள் நாளும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக் காட்சி சேனல்களில் எல்லாம் தமிழ் எத்தனை பாடுபடுகிறது, பிழையாக உச்சரிக்கப்படுகிறது என்று நாம் எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தாய்மொழி வழியான கல்வி தான், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு மிகவும் ஏற்றது என்பது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொண்டுள்ள உண்மை. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதை ஆக்கபூர்வமான வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

அதைவிட்டு, இந்தி கற்றுக்கொண்டாலே நாம் வடநாட்டவருக்கு அடிமைப்பட்டுவிடுவோம், இரண்டாந்தரப் பிரஜை களாக்கப்பட்டுவிடுவோம் என்பதாகவெல்லாம் மக்களை, பள்ளி மாணாக்கர்களைக் கலவரப்படுத்துவதும், இந்தி வந்தால் இந்தியா (அல்லது குறைந்தபட்சம் தமிழகம்) கந்தகபூமியாகும் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டுவதும் தேவையற்ற விஷயம். தமிழகத்தில் எந்தக் கலவரமாவது வெடித்து ரத்த ஆறு ஓடாதா என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருப்போரை எண்ணி வருத்தமாயிருக்கிறது.

இப்படி சூளுரைப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழிக் கல்வி கற்கச் செய்திருக்கிறார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள் – தெரியவில்லை.

அரசுப்பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கவேண்டும். அவர்கள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விவாதம் சில நாட்கள் முன்னர் எழுந்தபோது, அது தனிநபர் உரிமை என்றவிதமாய் எதிர்வினையாற்றப் பட்டது.

ஆனால் இப்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ள ஒரு வரைவுத்திட்டத்தை எதிர்த்து இத்தனை ஆக்ரோஷமாகக் குரலெழுப்பவேண்டிய அவசியம் என்ன? நிதானமாக எதிர்வாதத்தை முன்வைக்கலாமே? தமிழகத்தை நடுவண் அரசு வஞ்சிக்கிறது என்று ஏன் திரும்பத் திரும்ப இளையதலைமுறையினர் மனங்களில் உருவேற்றப் பார்க்கவேண்டும்? அப்படிச் செய்வதால் யாருக்கு என்ன லாபம்?

முன்பொரு சமயம் இத்தகைய சூழல் ஏற்பட்டபோது ஒரு பத்திரிகை தமிழ் வழிக் கல்வி, இந்தி கற்கக்கூடாது என்று முழங்குவோரின் பிள்ளைகள் எந்தெந்த பள்ளிகளில் எந்த மொழி மூலம் பயில்கிறார்கள் என்ற பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட்டது.

ஒரு மொழியைக் கற்கவிடாமல் பாமர மக்களைத் தடுத்து, அதே மொழியின் பயன்களைத் தாமும் தம் பிள்ளைகளும் அனுபவித்துக்கொண்டிருப்பது என்பது என்னவிதமான மனிதநேயம்? சமூகப் பிரக்ஞை?

  •  
Series Navigationதிருப்பூர் சக்தி விருதுகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *