தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது குறித்தும், தலைவனின் அன்பு குறித்தும் கூறி ஆற்றுப் படுத்தும் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தோழியின் கூற்றாக அமைந்துள்ளன.
=====================================================================================
1.வான்பிசிர்க் கருவியில் பிடவுமுகை தகைய,
கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே;
இனையல் வாழி, தோழி! எனைய தூஉம்
நிற்துறந்து அமைகுவர் அல்லர்,
வெற்றி வேந்தன் பாசறை யோரே.
[பிசிர்=நுண்ணிய மழைத்துளி, முகை=மொட்டு; தகைய=மலர; கற்ப=துவலையாய்த் தூவ; இனையல்=வருந்தாதே]
அவ அவன் இன்னும் வராததால வருத்தத்தோடு இருக்கா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது. ”தோழி, வாழ்க! வருத்தப் படாதே. மானத்துலேந்து வந்த மழைத்துளியால பிடவ மொட்டெல்லாம் பூத்திடுச்சு. காடு அந்த மழையை ஏத்துக்கற கார்காலம் ஆரம்பிச்சிடுச்சு. வெற்றியே எப்பவும் கொண்ட நம்ம வேந்தனோட பாசறையிலிருக்கற ஒன் தலைவரு வந்துடுவாரு.
====================================================================================
2. ஏதில பெய்ம்மழை கார்என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதைநிலை நோக்கி,
எவன்இனி மடந்தை!நின் கலிழ்வே? நின்வயின்
தகைஎழில் வாட்டுநர் அல்லர்;
முகைஅவிழ் புறவின் நாடுஇறந் தோரே.
[ஏதில=காரணமில்லாமல்; கலிழ்=அழுதல்; தகை=தகுதி வாய்ந்த; முகை=மொட்டு]
கார்காலம் வந்திருச்சே; அவரு இன்னும் வரலியேன்னு அவ கவலைப்படறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”பெண்ணே! கார்காலத்துக்குக் கொஞ்ச நாள் முன்ன பெஞ்ச மழையைக் கார்காலமுன்னு நெனச்சு மயங்கிய கொன்றை மரமெல்லாம் மாலைகளைத் தொங்கவிட்டது போல இருக்கற மலர்க்கொத்துல பூத்திருச்சுங்க. அதைப் பாத்துட்டு நீயும் மயங்கிப் போயி கார்காலம் வந்திடுச்சுன்னு நெனச்சுக்கிட்டுக் கலங்குற. அரும்பெல்லாம் பூத்து வாசனை வீசற காட்டைக் கடந்து போன ஒன் காதலருக்கு ஒன் அழகை வாடச் செய்யற கொடுமையான மனசு கிடையாது.
=====================================================================================3. புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலம்மிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே; நேரார்
நாடுபடு நன்கலம் தரீஇயர்,
நீடினர் தோழி!நம் காத லோரே.
[புதல்=புதர்; மிசை=மேல்; தொடரி=தொகுத்து; தகை=தகுதி; புனைய=செய்ய, தரீஇயர்=தருவதற்காக; நேரார்=பகைவர்; கலம்=அணிகள்]
கார்காலம் வந்தும் அவன் இன்னும் வரல. அவளுக்குத் துன்பம் அதிகமாயிடுச்சு, அவ ரொம்பவும் துக்கப்படறா. அதைப் பாத்த தோழி அவன் வராம இருக்கறதுக்கு ஒரு காரணம் கூறி அவளுக்கு ஆறுதல் சொல்ற பாட்டு இது.
”தோழி பொதர்ல எல்லாம் நல்ல வாசனை இருக்கற பூவெல்லாம் பூத்திருக்கு. அதை எல்லாம் பறிச்சுத் தொடுத்து அதை ஒன் தலையில வச்சு அழகு பாத்து மகிழ்ச்சி அடையவரு வராம இருக்கமாட்டாரு. ஆனா அங்க எதிரிங்க நாட்டுல இருக்கற நல்ல அழகான நகையெல்லாம் ஒனக்குக் கொண்டு வந்து தர்றதுக்காகத்தான் இன்னும் காலம் தாழ்த்தி வராம இருக்காரு.
=====================================================================================
4. கண்எனக் கருவிளை மலரப் பொன்என
இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்
நல்தோள் மருவரற்கு உலமரு வோரே.
[கருவிளம்=கார்காலத்தில் கருமையாகப் பூக்கும் ஒருவகை மலர்; இதைத் தற்காலத்தில் காக்கட்டான் பூ என்பர்; அற்சிரம்=முன்பனிக்காலம்; பீரம்=பீர்க்கங்கொடி;இவர்கொடி=படருகின்ற; உலமருவோர்=சுழல்பவர்]
கார்காலம் வந்தும் அவன் வரல; அவர் வரேன்னு சொன்ன பருவம் வந்தும் வரல; அவர் பருவத்தையே மறந்துட்டார்னு அவ பொலம்பறா. அப்ப தோழி, அவருக்கு ஏதோ தடங்கல் வந்திருக்கும்னு சொல்ற பாட்டு இது.
”தோழி! ஒன்னோட அழகான தோள்களைத் தழுவப் பவிதமான துன்பங்களை எல்லாம் ஏத்துக்கிட்டக் காதல் கொண்டவருதான் அவரு. கார்காலத்துல பூக்கறக் கருவிளைப் பூவெல்லாம் பூத்து இருக்கு. பொதர்ல படர்ந்து கெடக்கற பீர்க்கங்கொடியிலப் பொன் போல இருக்கற பூக்கள் பூத்துள்ளன. இந்தக் காலத்தை எப்பவுமே அவரு மறக்க மாட்டாரு.”
====================================================================================5. 5. நீர்இகுவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்,
கார்செய் கானம் கவின்பட, கடைஇ,
மயங்குமலர் அகலம் நீஇனிது முயங்க,
வருவர்; வாழி, தோழி!
செருவிங் குரிசில் தணிந்தனன் பகையே.
[இகுவுதல்=தவழ்ந்து பாய்தல்; பரி=குதிரை; கானம்=காடு; கடைஇ=செலுத்தி; அகலம்=மார்பு; முயங்க=கூட; குரிசில்=அரசன்]
அவன் வரேன்னு சொன்ன கார்காலத்துல வரல. அதால அவ ரொம்பவும் வருந்திக் கெடக்கறா. அப்ப அங்கேந்து வந்த தூதருங்க அரசன் வேல முடிஞ்சு போச்சு. அவன் சீக்கிரம் வந்திடுவான்னு சொல்றாங்க. அதைத் தோழி வந்து சொல்ற பாட்டு.
”தோழி! போர்க்களத்துல அரசரு பகை தணிந்து போயிட்டாராம். அதால, நீர் வீழ்ச்சி போல அசைஞ்சு அசைஞ்சு போற குதிரைங்கள்ளாம் பூட்டின தேருல, காட்டையெல்லாம் பின்னாடி உட்டுட்டு, அவனோட அகலமான மார்பை, நீ தழுவிக்கறதுக்கு அவன் வந்திடுவான்.
=====================================================================================6. வேந்துவிடு விழுத்தொழில் எய்தி, ஏந்துகோட்டு
அண்ணல் யானை அரசுவிடுத்து, இனியே
எண்ணிய நாளகம் வருதல் பெண்இயல்
காமர் சுடர்நுதல் விளங்கும்
தேமொழி அரிவை! தெளிந்திசின் யானே.
”விழுத்தொழில்=தூது போன்ற சிறந்த தொழில்; எய்தி=மேற்கொண்டு சென்று; ஏந்து கோட்டு அண்ணல் யானை=வளைந்து உயர்ந்துள்ள கொம்புகளை உடைய யானை; நாள்கம்=நாள்களுக்குள்; காமர்=அழகு]
அவன் வராததால அவ ஒடம்பு ரொம்ப மெலிஞ்சு போயிருக்கா. அப்ப தோழி, ”அவரு போன வேலையை நல்லபடியா முடிச்சுட்டு வருவாருன்னு நான் தெளிவா இருக்கேன். அதால நீயும் கவலையை உட்டுட்டு இரு”ன்னு சொல்ற பாட்டு இது.
”அழகான நெத்தியையும், இனிப்பான பேச்சும் கொண்டவளே! அரசருக்காக நல்ல சிறந்த தொழிலை ஏத்துக்கிட்டு அவரு போயிருக்காரு. பெரிசான வளைஞ்ச கொம்போட இருக்கற யானைய வச்சிருக்கற அரசன்கிட்டேந்து சீக்கிரமா அவரு வந்திடுவாருன்னு நான் தெளிவா இருக்கேன். அதால நீயும் கவலையை உட்டுடு.”
=====================================================================================7. புனைஇழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை! ‘வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிது’ எனத் தங்காது
நம்மினும் விரையும் என்ப,
வெம்முரண் யானை விறற்போர் வேந்தே.
[சாஅய்=மெலிந்து; இழை=ஆபரணம்; நொந்து=வருந்தி; இனையால்=அழாதே; நீடினர்=காலம் தாழ்த்தினர்; இகுளை=தோழி; விறல்=வெற்றி]
கார்காலம் வந்தும் அவன் வரல; அதால அவ மெலிஞ்சு போயி வாடறா. அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்ற பாட்டு இது.
”தோழியே! நீ வாழ்க! போட்டிருக்கற நகையெல்லாம் நெகிழ்ந்து போற மாதிரி மெலிஞ்சு போயி மனசு வருந்தாதே. போருக்காக வந்தவங்க அவங்க அவங்க ஊட்ட உட்டு வந்து ரொம்ப நாளாச்சுன்னு கொடுமையான யானைப்படையை வச்சிருக்கற அரசரு நெனச்சுக்கிட்டு, பாசறையில இனிமே தங்கிக்கிட்டிருக்காம சீக்கிரம் வருவாருன்னு சொல்றாங்க.
8. வரிநுணல் கறங்க, தேரை தெவிட்ட,
கார்தொடங் கின்றே காலை; இனி,நின்
நேர்இறைப் பணைத்தோட்கு ஆர்விருந்து ஆக,
வடிமணி நெடுந்தெர் கடைஇ,
வருவர் இன்றுநம் காத லோரே.
[வரிநுணல்=தவளை வகைகளுள் ஒன்று; கறங்க=ஒலிக்க; தேரை=தவளை வகைகளில் ஒன்று; தெவிட்ட ஒலிக்க; காலை=காலம்; இறை=சந்து,கக்கம்; வடிமணி=வடிக்கப்பட்ட மணி]
அவனைப் பிரிஞ்சிருக்கறாதால அவ ரொம்பவும் வருந்தறா. அப்ப தோழி அவக்கிட்ட கார்காலம் வந்திடுச்சு. சீக்கிரம் அவன் வந்திடுவான்னு சொல்ற பாட்டு இது.
”வரிகளைத் தன் மேல வச்சிருக்கற தவளையெல்லாம் கத்துதுங்க. தேரைகளும் கத்துதுங்க. கார்காலம் இப்ப தொடங்கிடுச்சு. ஒன் அழகான பருத்த தோகளுக்கெல்லாம் விருந்து தர்றதுக்காக மணி கட்டியிருக்கற தேரில அவரு சீக்கிரம் இன்னிக்கே வருவாரு. அதால நீ கவலப்படாத”
=====================================================================================9.பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலனேர்பு
அங்கண் இருவிசும்பு அதிர, ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்;
காண்குவம்; வம்மோ, பூங்க ணோயே.
[தினைஉணங்கல்=காய்ந்த தினை; செம்பூழ்=காடை; வலனேர்பு=வலமாக எழுதல்; ஏறு=இடி; பெயல்=மழை; வம்மோ=வருவாயாக]
கார்காலம் வந்தும் அவன் வரல. அவனைப் பிரிஞ்சு அவ ரொம்பவும் வாடி மெலிஞ்சு போறா. அப்ப தோழி ஆறுதல் சொல்ற பாட்டு இது.
”பூப்போன்ற கண்ணிருக்கறவளே! பசுமையான தெனையைக் காய வச்சிருக்காங்க. அதைச் செவப்பான காடையெல்லாம் வந்து எடுத்துக்கிட்டுப் போயித் தின்ற முல்லை நெலத்தைச் சேந்தவன் நம்ம தலைவன். அவன இங்கக் கொண்டுவந்து தர்றதுக்காக மேகமெல்லாம் வலமா எழுந்து, மானமே அதிரும்படி இடி இடிச்சு மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. அவனும் வந்திடுவான். நாம நேராப் பாப்போம். வா.
====================================================================================
10.இருநிலம் குளிர்ப்பவிழி, அல்கலும்
அரும்பனி அளைஇய அற்சிரக் காலை
உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை!
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே?
[அல்கல்=தினந்தோறும்; இருநிலம்=பெரிய நிலம்; காட்சி=அறிவு; அளைஇய=கலங்கச் செய்த; அற்சிரம்=பனி; மாமை=மாந்தளிர் போன்ற; கவின்=அழகு; உள்ளார்=நினையார்]
அவனையே நெனச்சு வருந்தற அவளைப் பாத்து தானும் வருந்திய தோழி, சொல்ற பாட்டு இது.
”ஒளி வீசற நகையெல்லாம் போட்டிருக்கறவளே! இந்தப் பெரிசா இருக்கற நெலம் குளிர்ற மாதிரி தெனம் காத்து வீசறப் பனிக்காலத்துல அவரு ஒன்னை நினைக்காம இருந்தாலும், ஒன் பெருமையும், ஒன் மாந்தளிர் போன்ற அழகும் ஒன்னை மறக்க உடுமா?”
=======================================
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்
- வள்ளுவர் வாய்மொழி _1
- துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]
- போர்ப் படைஞர் நினைவு நாள்
- முதுமை
- மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:
- 7. தோழி வற்புறுத்தபத்து
- சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “
- மழைப்பருவத் தொடக்கம்
- மந்தைவெளி மரணக்கிணறுகள்