ஊர் மாப்பிள்ளை

This entry is part 5 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து பரந்த ஓர் ஊர்க் குடும்பத்தின் விழுதாகத்தான் இருக்க வேண்டுமாம். உறுதியாக இருந்தார் சாந்தினி. அவர் நினைத்தபடியே பதவி உயர்வு கிடைத்துவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள், மாப்பிள்ளை தேடும் வேலைகள் தொடர்கின்றன.

திருச்சியில் ஒரு பெரிய உணவுக்கடை வைத்திருக்கும் புண்ணியமூர்த்தியின் மகன் சாமியப்பாவுக்கு சாந்தினி பற்றிய தகவல் கிடைக்கிறது. கேட்டரிங் முடித்துவிட்டு அப்பாவோடு தொழிலுக்கு துணையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு துருவமாக இருந்தார். அங்கு வேலை செய்யும் 50 பேரோடு அவரும் ஓர் ஆள். அவ்வளவுதான். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அடிக்கடி குளிர் யுத்தம்.

‘இவன் சொல்றதெல்லாம் கேட்டால் தொழில ஊத்தி மூடவேண்டியதுதான். இவன் செய்யுற வெள்ளாமெ வீடு வந்து சேராதுங்க’

என்று சாமியப்பா காதுபடவே அடிக்கடி சொல்கிறார். அவர் கடையைவிட  ஒரு பெரிய கடையை நடத்திக் காட்டவேண்டும். திருச்சியில் அல்ல. வெளிநாட்டில். ‘திருச்சியில் நான் என்ன செய்தாலும் பேரும் புகழும் அப்பாவுக்குத்தான் போகும். ‘ என்று சாமியப்பா நினைத்தார். சிங்கப்பூர் பெண் சாந்தினி தன் எதிர்காலத்திற்கான சரியான தேர்வாக இருக்கலாம்.  சாந்தினி நினைத்ததுபோல் விரிந்து படர்ந்த ஆலமரத்தின் விழுதாக ஊர் மாப்பிள்ளை. இருவருக்குமே ஏகப்பட்ட சம்மதம். திருமணம் நடந்தது.

சிங்கப்பூர். நான்கறை வீடு. திருமாணமாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரே மகள் கலா. இப்போது தொடக்கநிலை 6. காலையில் கலாவை பள்ளிக்கு தயார்படுத்திவிட்டு, பணிப்பெண்ணிடம் அன்றைக்கான வேலைகளைச் சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டுவிடுவார் சாந்தினி. சரியாக 7 மணிக்கு தன் இருசக்கர வாகனத்தில் கலாவை பள்ளிக்கு அழைத்துச் சென்று விரல் பிடித்து வகுப்புவரை கூட்டிச் சென்று, கையில் 3வெள்ளி காசு கொடுத்துவிட்டு, கன்னத்தில் முத்தமிட்டு முடிந்தால் வகுப்பாசிரியருக்கு ஒரு ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு வருவார் சாமியப்பா. பள்ளி  முடிந்து ஒரு நாள்கூட அப்பாவுக்காக காத்திருந்ததே இல்லை. முன்கூட்டியே சென்று காத்திருந்து அழைத்துவருவார். வெள்ளிக்கிழமைகளில்  பாப்புலர் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்று பேனா பென்சில் ரப்பர் ரூலர் பேப்பர், ஹைலைட்டர் வகைவகையாய்  வாங்கிக் கொடுத்து கலாவுக்கு விருப்பமான மெக்டோனலோ சப்வேயோ அழைத்துச் சென்றுவிட்டு வீட்டுக்கு அழைத்துவருவார்.

சாமியப்பா நினைத்தபடி உணவுக்கடை வைத்து 15 ஆண்டுகளாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். போடுகிற காசெல்லாம் எங்கு போகிறதென்றே தெரியவில்லை. லாபத்தில் பங்கு தருவதாகச் சொல்லி ஊரிலிருந்து 2 பேரை வரவழைத்து அவர்களிடமிருந்து வாங்கிய ஒரு பெரிய தொகை கடையில்தான். ஒரு கடன் நிறுவனத்தில் சாந்தினியைச் சாட்சியாக்கி வாங்கிய ஒரு பெரிய கடனும் கடையில்தான். யோகாம்பாளிடம் சீட்டுப்போட்டு பெரும் தொகை தள்ளி எடுத்து அந்தக் காசும் கடையில்தான். லாபத்திற்கும் வாங்கிய காசுக்கு வட்டிக்கும் சரியாக இருக்கிறது.  வீட்டுச்செலவுக்கு அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை.. வாழ்க்கை வண்டி தள்ளாடுகிறது. ஆனாலும் ஓடுகிறது.

ஒரு சனிக்கிழமை இரவு. அன்றுதான் சாந்தினியும் சாமியப்பாவும் குடும்பப் பிரச்சினைகளைப் பேசுவார்கள். சாந்தினிதான் தொடங்கினார்.

‘நம்ம குடும்பத்துக்கு என்ன செலவாகுதுன்னு தெரியுமா? தெரியாதா? கடெ நடத்துறதெ யோசிக்கிறிங்க. குடும்பம் நடத்துறதெ யோசிக்கிறிங்களா?  ஹெச்டிபி காசு, மெய்டு காசு, ஃபோன் காசு, டிவி காசு, டவுன் கவுன்சில், தண்ணிக்காசு எல்லாம் சேத்துப்பாருங்க. அது போக வீட்டுச்சாமானுக்கு ஆயிரம் தேவப்படுது. மொத்தமும் ஐயாயிரத்தெ சர்வ சாதாரணமாத் தாண்டுது. வாய்க்கும் வயித்துக்குமே வாழ்த்தா நாளக்கி ஒரு பெரிய செலவுன்னா எங்க போறது?  கலா ஆஸ்திரேலியாவுக்கோ அமெரிக்காவுக்கோ படிக்கப் போறேன்னு சொன்னா எப்புடி அனுப்புறது? யோசிச்சிங்களா? சே! ஊர் மாப்பிள்ளைதான் வேணும்னு கேட்டேன். இப்ப ஏன் கேட்டோம்னு இருக்கு? ‘ சொல்லிவிட்டு சாமியப்பாவை நிமிர்ந்து பார்த்தபோது சாமியப்பாவால் சாந்தினியின் கண்களை எதிர்கொள்ள முடியவில்லை. இரண்டு கொள்ளிக் கட்டைகள் பற்றி எரிகின்றன.

‘எனக்குத் தெரியுது சாந்தி. எப்பவுமே வெயிலடிக்காது. மழை பெய்யும். பொறுத்துக்க. கொஞ்சம் பொறுத்துக்க. நா ஜெயிப்பேன். நிச்சயமா ஜெயிப்பேன்.’

‘நாள்கணக்கா, மாசக்கணக்கா, வருஷக்கணக்கா? எப்புடி பொறுக்குறது? ஆபீஸ்ல என்னோட வேல செய்ற எல்லார் வீட்லயும் புருஷங்கதான் செலவுகள கவனிச்சுக்கிறாங்க. பொண்டாட்டிக்கு கார் வாங்கிக் கொடுத்து வேலக்கி அனுப்புறாங்க. நா அதுக்கெல்லாம் ஆசப்படல. இந்த பில்களையாவது மாசாமாசம் கட்டுங்க. மொத்தம் 1000 வரும். அந்தக் காசாவது எனக்கு மிச்சப்படட்டும்’

அந்த மாத முடிவில் எல்லாம் சிவப்பு பில்களாக சாந்தினியை முற்றுகையிட்டன. நம்பிக்கையை மொத்தமாக இழந்தார் சாந்தினி. சாமியப்பாவின் கடைக்குச் சென்றார் அத்தனை பில்களையும் அந்த கேஸ் கவுண்டரில் போட்டுவிட்டு சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இவர்களை கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டார்.

‘நானே கட்டிர்றேன். ஆனா இன்னிக்கு சொல்றேன். இந்த பில்கள தினமும் பாருங்க. இதப் பாத்துட்டு கடய தொறங்க. ஏதாவது செஞ்சே ஆகணும்னு தோணும். அதுவரக்கும் உசுரு இருந்தா எல்லாம் ஓடட்டும்.’

கலாவின் அறையில் கலாவின் கட்டிலுக்குப் பக்கத்தில் ஓர் ஒற்றைப் படுக்கையை தரையில் விரித்து சாந்தினி படுத்துக் கொண்டார். துணையாக இருக்கவேண்டியர்கள் தூரமாகிவிட்டார்கள்.

பள்ளியில் கலாவுக்கு பக்கத்தில் உட்காருபவன் விஷ்ணு. விஷ்ணுவிடம் மட்டும்தான் கலா பேசுவாள். விஷ்ணுவை அவன் அம்மாதான் பள்ளிக்குக் கூட்டி வருகிறார்.  கலா கேட்டாள்

‘விஷ்ணு. ஏன் ஒங்க அப்பா வர்றதேயில்ல?’

‘அவரு அம்மாவெ டிவோர்ஸ் பண்ணிட்டாரு கலா.’

‘அய்யோ! அப்புடீன்னா அம்மாவோட தனியாவா இருக்கே’

‘ஆமா’

‘ஒனக்கு ஒங்க அப்பாவ தேடி வராதா?’

‘வரும். எங்கே இருக்கார்னு தெரியலியே. பாக்கணும்போல இருக்கு. எதெ வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் குடுத்துருவாரு. ஒன்னுன்னா ரெண்டு வாங்கித்தருவாரு. அம்மாக்கிட்ட ஒரு பேனா வாங்கிக் கேட்டா இருந்த பேனா எங்கே போச்சுன்னு கேப்பாங்க. அதுக்கு நான் கணக்கு சொல்லனும். அப்பாவத்தான் எனக்குப் புடிக்கும். ஆனா அவரப்பத்தி அம்மாக்கிட்ட பேசவே பயமா இருக்கு கலா. ‘

சில வினாடிகள் மௌனம்.  கண்ணீரைக் கொட்டிவிட்ட மௌனம்.. விஷ்ணு சொன்னான்.

‘அம்மா அப்பா சேந்திருக்குற குடும்பத்தில பொறக்கனும். இல்லாட்டி செத்துப் போயிறனும்.’

‘அப்புடிச் சொல்லாத விஷ்ணு. ஒங்க அப்பா வந்துருவாரு. ஒன்னப் பாக்க ஒரு நாளு வருவாரு. ‘

வீட்டில் கலாவோடுதான் சாந்தினி படுத்துக் கொள்கிறார். சாந்தினியின் அலுவலகத்தில் ஒரு குழுவை ஜப்பானுக்கு 5 நாள் பயணமாக   அனுப்புகிறார்கள். அதில் சாந்தினியும் இருந்தார். நாளைக்காலை 5 மணிக்கு விமானம்.  கலாவுக்கு என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் யோசித்து யோசித்து செய்துவிட்டு, ஒரு வாரத்துக்கு தேவையான சாமான்களை வாங்கிப் போட்டுவிட்டு,  பணிப்பெண்ணிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பெரிய பட்டியலை எழுதிக் கொடுத்துவிட்டு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் சாந்தினி. சாமியப்பா அறையில் விழித்துக் கொண்டுதான் படுத்திருக்கிறார். வழக்கம்போல் அவர்தான் கலாவை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  அதை அவர் எப்போதும்போல் செய்துவிடுவார். அவரிடம் பேச என்ன இருக்கிறது? ஆனாலும் சாமியப்பா எதிர்பார்த்தார். சாந்தினி எதிர்பார்த்தபடி அவரால் எதுவும் செய்ய முடியவில்லைதான். ஆனால் செய்ய வேண்டும் என்றுதானே ஒவ்வொரு மூச்சும் அவருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. பெட்டியை இழுத்துக் கொண்டு சாந்தினி வெளியேறிவிட்டார்.  ஜன்னல் வழியாக சாந்தினி ‘க்ராப்பில்’ ஏறுவதைப் பார்த்துவிட்டு சில நிமிடங்கள் அப்படியே உறைந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டார்.

5 நாட்கள் ஓடிவிட்டன. சாங்கி விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார் சாந்தினி. தொலைபேசி சாமியப்பாவிடமிருந்து ஒரு சேதியை அறிவிக்கிறது.

‘பயணம் நல்லபடியாக இருந்திருக்கும். இன்றுமுதல் நான் வெளியே தங்கிக் கொள்கிறேன். எப்போதும்போல் கலாவை அழைத்துப்போவதும் அழைத்து வருவதும் என் வேலை. சாப்பாடும் வெளியே பார்த்துக் கொள்கிறேன்’

அந்தச் செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சாந்தினி. ஒரு வாரம் தங்குவார். வாடகை கொடுக்க முடியவில்லை யென்று மீண்டும் வந்துவிடுவார். கொஞ்ச நாள் போகட்டும்.  ஒரு முடிவு வரும். ‘முடிவை எழுதிக் கொண்டுதான் பிரச்சினைகளே முளைக்கின்றன’ என்று யாரோ சொன்னது சாந்தினிக்கு ஞாபகம் வந்தது. அன்று வெள்ளிக்கிழமை.. பள்ளி 2 மணிக்கே முடிந்துவிட்டது. கலாவை அழைத்துக்கொண்டு பாப்புலர் புத்தகக் கடைக்கு வந்தார் சாமியப்பா.  அங்குள்ள ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.  சில நிமிடங்கள் சாமியப்பா அன்னாந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார்

‘கலா. ஒங்கிட்ட கொஞ்சம் பேசனும்மா.’

‘என்னப்பா?’

‘அம்மாவுக்கு என்னப் புடிக்கல. ஜப்பானுக்குப் போகும்போது என்கிட்ட போயிட்டு வாரேன்னு சொல்லல. நா ஒன்னோட அப்பாம்மா. நா எதுக்காகம்மா வீட்ல இருக்கணும். ரொம்ப அவமானமா இருக்கும்மா. என்னால தாங்க முடியல. ஆனா எனக்கு நீ வேணும். வீட்டுக்கு வராட்டியும் எங்கேயும் போகமாட்டேன். நாந்தான் ஸ்கூலுக்கு கூட்டிப்போவேன். ஆனா வீட்டுக்கு வரமாட்டேன். வீட்ல சாப்பிட மாட்டேன். 7 மணிக்கு மெய்டோட கீழ எறங்கிடு. நா லிஃப்ட்டுக்கு பக்கத்துல காத்துக்கிட்டிருப்பேன். எங்களுக்குள்ள பிரச்சினெ என்னெக்காச்சும் தீந்திடும். ஆனா இது ஒனக்குத் தெரியணும்மா. அதுனால சொல்றேன்.’

‘அப்பா என்னெ விட்டுப் போயிடாதீங்கப்பா.

சாமியப்பா வயிற்றில் முகம் புதைத்து அழுதாள் கலா.

‘உயிரே போனாலும் ஒன்னவிட்டுப் போகமாட்டேம்மா’

அன்று இரவு. கலா கட்டிலில். சாந்தினி வழக்கம்போல் தரையில். ஒற்றை மெத்தையில். சாந்தினி தூங்கிவிட்டார். விடாமல் ஒரு சப்தம் கேட்கிறது. அது ஒரு ‘கேவல்’ சத்தம். நீண்ட அழுகைக்குப் பின் குழந்தைகளுக்கு வரும் ‘கேவல்’ அது. கண்களைத் திறக்காமலே அந்த சப்த்த்தை கேட்கிறார் சாந்தினி. வெடுக்கென்று எழுந்து கலாவைப் பார்த்தார். வயிறு பள்ளமாகிப் பள்ளமாகி சமநிலைக்கு வருகிறது. தொண்டைக்குழி உள்ளேபோய் வெளியாகிறது. கண்ணீர் கிட்டத்தட்ட தலையணையை நனைத்துவிட்டது.

‘கலா. என்னம்மா? ஏம்மா அழுகுறே?’ வயிறு வலிக்குதா? தல வலிக்குதா?’

‘இ..இ..ல்..ல ….ம்…மா… அப்பா எங்கம்மா?

‘இன்னும் வரலம்மா.’

‘இனி வரவே மாட்டாராம்மா?’

‘கடையில ஏதோ வேலயாம். வருவாரும்மா.’

‘இல்லம்மா. நீ பொய் சொல்றே. அப்பா வரமாட்டாரு. நா வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. அம்மா! அப்பா போனதுமாரி நீயும் என்னெவிட்டு போயிருவியாம்மா? நீயும் பொயிட்டா நா எங்கம்மா போவேன்?’

‘கலா…….’

‘எனக்கு அப்பா வேணும்மா. அப்பாவெ வெரட்டிராதம்மா. அவரு நல்லவரும்மா. அவரு எப்புடியும் காசு குடுப்பாரும்மா.’

‘அப்பா வருவாரும்மா. நாளக்கி அவரு வீட்ல இருப்பாரு கலா.’

கலா இந்த அளவுக்கு அப்பாவை விரும்புவது சாந்தினிக்கு தெரியவந்த அதிர்ச்சியான உண்மை. தான் நினைத்தபடி அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிடமுடியாது. சாந்தினிக்குப் புரிகிறது.

‘நீ தூங்கும்மா. நாளக்கி அவரு வருவாரு. ‘

கேவல் அடங்கிவிட்டது. கொஞ்சம் மைலோ போட்டுக் கொடுத்து சமாதானப்படுத்திவிட்டு தூங்கப்போட்டதாய் நினைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தார் சாந்தினி.  தொலைபேசியை எடுத்தார்.

‘கலாவுக்கு தலைவலி. காய்ச்சல், ஒரு அட்டை பெனடால் வாங்கிக் கொண்டு உடனே வீட்டுக்கு வரவும்.’

ஒரு குறுஞ்செய்தியை சாமியப்பாவுக்கு அனுப்பினார். அடுத்த நொடி பெனடாலோடு சாமியப்பா வந்து நிற்கிறார்.  கதவு திறந்தே இருந்தது. கலாவின் அறைக்கு விரைந்தவரை எதிரே நின்று

‘கலாவெ அப்புறம் பாக்கலாம். கொஞ்சம் அந்த சோஃபாவில உக்காருங்க.  …

15 வருஷமாச்சு. நம்ம விஷயத்தெ எப்பவாவது நா கலாக்கிட்ட சொல்லியிருக்கேனா?  என்ன சொன்னீங்க கலாக்கிட்ட?  எனக்கு ஒங்களப்பிடிக்கலேன்னு சொல்லியிருக்கீங்க.  இனிமே வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. எப்புடியாச்சும் கலாவும் என்னெ வெறுக்க வச்சு என்னெச் சாகடிக்கனும் அதானே ஒங்க ஆச. இந்த வயசுல அவள்ட்ட பேசவேண்டிய பேச்சா இது.’

சாந்தினி முடித்துவிட்டார். ஒரு நிமிடம் உலகம் மொத்தமும் காணாமல் யோய்விட்ட அமைதி. மொத்த சப்தங்களும் செத்துவிட்ட அமைதி. தன் இரு கைகளையும் நெஞ்சின்மீது கட்டிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார் சாமியப்பா.

சாந்தி. நீ சொல்றதுமாரி இல்ல. உன் பக்கந்தான் நியாயம் இருக்கு. என் பக்கம் இப்போதக்கி நியாயமில்லே. ஒனக்குள்ள பிரச்சினைகளப் பேசுறதுக்கு ஒன்னோட ஆஃபீஸ்ல ஃரண்ட்ஸ்க இருக்காங்க. எல்லாத்தயும் பேசிக்கலாம். எனக்கு யாரு இருக்கா சாந்தி. யார்ட்ட பேசுவேன். கடன்காரங்கள்ட பேசமுடியுமா? என் வேலக்காரங்கள்ட பேசமுடியுமா? இந்தப் 15 வருஷத்துல என்னோட ஒரே நட்பு நீ மட்டுந்தானெ சாந்தி. அடுத்து கடெ. ஒனக்கிட்ட பேசமுடியாது. கடெக்கிட்டயும் பேசமுடியாது  நா ஒன் புருஷன் சாந்தி. ஜப்பானுக்குப் போகும்போது எனக்கிட்ட சொல்லாம போனதெ என்னால தாங்கமுடியல சாந்தி. யார்ட்டயாவது சொல்லி அழனும்  யார்ட்ட சொல்லுவேன்.  கலாவிடம் சொன்னேன். என்னெக் காப்பாத்திக்கிறதுக்காக சொன்னேன். ஒன்ன தண்டிக்கிறதுக்காகச் சொல்லலே. எப்படியாவது சம்பாதிச்சு ஒன்ன சந்தோஷமா வச்சுக்கிறனும்னு ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்ருக்கேன் சாந்தி. எதுவுமே செய்யக்கூடாதுன்னு வீம்பா இருந்தா நீ சொன்னது நியாயம். என் தனிப்பட்ட சந்தோஷத்தெ நெனச்சுப் பாத்ததே இல்ல சாந்தி. அப்பா என்னெ மதிக்கலேன்னு கோபமா இருந்தேன். அதெல்லாம் வெத்து ஈகோ.  நம்மல நாமே ஏமாத்திக்கிறோம். அப்பாக்கிட்ட பேசிட்டேன். அவர்ட்ட ஒதவி கேக்கக்கூடாதுன்னு நெனச்சேன். கேட்டுட்டேன். 16 வருஷமா எனக்கு ஒன்னுமே செய்யலேன்னு அழுதாரு தெரியுமா? ஃபொன்ல அழுதாரும்மா. அவரு எவ்வளவு பெரிய மனுஷன். எங்க அப்பாங்கிறத  விட்டுத்தள்ளு. என்னெ மன்னிச்சுக்கடான்னு சொல்லி அழுதாரு. ஒரு பெரிய தொகைய தர்றதாச் சொன்னாரு. ஒரு வாரத்தில வந்திடும். எல்லாக் கடனையும் முடிச்சுருவேன். ஒரு கேட்டரி்ங் ஆர்டர் வந்திருக்கு. அதுல கெடக்கிற லாபம் வீட்டுச் செலவுக்குப் போதும். ஒரு மழ பெய்யும்னு சொன்னேன். பெய்யப் போகுது சாந்தி. நம்ம ஒறவு முக்கியமே இல்ல. கலா முக்கியம். ‘

பேசிமுடித்த சாமியப்பா.  சாந்தினியின் கண்களைச் சந்தித்தார். அந்தக் கண்களில் இரு குளிர் நிலவுகள் ஜொலித்தன. நெஞ்சில் கட்டியிருந்த கரங்களை சாந்தினி மெதுவாகப் பற்றினார். உள்ளங்கைகளிலிருந்து ஒரு இதமான சூடு நரம்பு மண்டலம் முழுழும் பரவியது. இருவருமாக வந்து கலாவைப் பார்த்தார்கள். அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த ஊர்மாப்பிள்ளையின் கரத்தை இல்லை விரிந்து படர்ந்த ஆலமரத்தின் விழுதை பற்றிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

யூசுப் ராவுத்தர் ரஜித்   

Series Navigationஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *