குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

This entry is part 9 of 13 in the series 22 மார்ச் 2020

  

 

     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

     குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,”  இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். ” என்கிறார்.

     குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்ச்சிகள் திரண்டு மேலெழுந்து பொங்கும் இயல்பு கொண்டவை.

அரிய சொற்றொடர்கள் விரவிக் கிடக்கின்றன.தனித்தன்மை கொண்ட நடை சாத்தியமாகி இருக்கிறது.

நல்ல படிமங்கள் காணப்படுகின்றன.

     ‘ நின்றுவிட்ட காலம் ‘ — புதிய படிமத்துடன் தொடங்குகிறது.

கருமேகம் தரையிறங்கி

உறைந்திருக்கிறது கடும் மலையாய்

   — பூமி எப்படி இருக்கிறது என்று ஒரு விளக்கம் தருகிறார்.

பூமியின் சூன்யத்தை நிரப்புகிறது

பசுங்கிளிகள் பூத்த மரவாசனை

   — இயற்கை அழகை ரசிக்காத கவிஞர்தான் யார் ?

வனவெளியின் ஒருமையைக் குலைக்கிறது

தூய அருவியின் வெண்பாடல்

    — புதிய உவமை பொருத்தமாகத்தான் இருக்கிறது.

    ‘ தவச்சாலை ‘ சொல் அடர்த்தி கொண்ட கவிதை. மொழியின் சாறு வாசகன் மனத்தில் மெல்லப் பரவி

இலக்கியத் தித்திப்பை உருவாக்குகிறது.

அழகிய கனியாய்

நிலவு தொங்குகிறது

மெல்லக் கரைந்து வழிகிறது

காந்த ஒளிச்சாறு

இருள் பூத்த காடாகிறது

வானம்

   — இதைத் தொடர்ந்து மூன்று வரிகளில் கவிதை முடிகிறது. வாசகன் ஒரு வினாவிற்கு விடை தேடுகிறான்.

மூலத்தில் புதைந்த சொல்லொன்று

முலைப் பாலாய்த் துளிர்க்கும்

இருள் படியும் கவிதைப் பள்ளங்களில்

   — கவிஞர் மனத்தில் உள்ள அந்தச் சொல் எது ? என் யூகம் ‘ அழகு ‘ என்பதுதான். பல யூகங்களிக்கு

இடமிருக்கிறது. புதிய படிமம் காத்திரமாக உள்ளது.

   ‘ நதி ‘ என்ற கவிதை இருண்மையோடு காணப்படுகிறது.

    ‘ பூனையைப் போல அலையும் வெளிச்சம் ‘ என்ற புத்தகத் தலைப்புக் கவிதையிலும் ஆங்காங்கே தெளிவின்மை காணப்படுகிறட்து.

கதவுகளை ஓசைப்படாது திறந்து

மழை பெய்கிறதாவெனக்

கை நீட்டிப் பார்க்கிறது வெளிச்சம்

   — என்ற கவிதையின் தொடக்கம் மரபுப் பாங்கில் நீர்த்துப் போயிருக்கிறது.

‘ பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள் ‘ என்ற வரியை எப்படிப் புரிந்துகொள்வது ?

பூமியின் நிலப்பரப்பு , நீர்ப்பரப்பு இரண்டையும் குறித்துச் சொல்கிறாரா? கவிஞருக்கே உரிய மனப்படமா?

மதில் சுவரென விடைத்து நிற்கும்

இரவு முதுகின் மீதமர்ந்து

கூடலின் பேரொளியைச் சுவீகரிக்கும்

நிலவின் அகன்ற வழியால்

   — ஆர்ப்பாட்டான சொல் வீச்சால் கவிதையின் அர்த்தம் திணறுகிறது.

     ‘ கற்தேவதைகள் ‘ கவிதையில் கற்பனை அலங்காரம் பதிவாகியுள்ளது.

கல்லின் தோலுரித்து

உயிர்க்கும் சிற்பம்

வெளிச்சத்துக்கு வெட்கித்து

நிழல் திரையுனூடாக

அசையும் இருளுரு

   — என்று கவிதை தொடங்குகிறது. சிலைக்கு யார் துணை ? தனிமைதான்.

காலோடு அறைந்த

கால ஆணி

வெயிலையும் மழையையும்

சபித்திருக்கிறது

வெளவால்களின் எச்ச வீச்சமும்

தனிமையின் வனாந்திரமும்

கூட

   — என்ற பத்தி முக்கியமானது. ‘ காலோடு அறைந்த ‘ என்ற குறிப்பு நுணுக்கமானது.

கடவுளின் அருள் வழிந்த

சிற்பங்கள்

தேவதைகளாகி உலவக்கூடும்

   — மேற்கண்ட வரிகள் கவிதையின் கருப்பொருளாகும்.

ஏனோ

மனித வாசனை கேட்டால் மட்டும்

ஜடமாகி இளைக்கின்றன

   — என்று கவிதை முடிகிறது. அழகான , புதிய கற்பனைக் கவிதை. இத்தொகுப்பின் ஆகச்சிறந்த

கவிதையாக நான் இதை ரசித்தேன்.

‘ குடுகுடுப்பைச் சிறுவன் ‘ கவிதை ஒரு குட்டிக்கதை. அந்தச் சிறுவன் வாழ்க்கை பற்றிய விளக்கம் தருகிறான்.

நீந்திக்கிட்டேயிருக்கிறதுதான்

மீனுக்கு வாழ்வும் சாபமும் அக்கா

   — என்கிறான். எளிய உவமை, ஆழமான பொருள்

அந்தச் சிறுவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு போய்விட்டான். எப்படிப் போனான் ?

இனி எப்போதும் வராத

காலத்தின் சாயலாய் மறைந்தான்

குடுகுடுப்பைச் சிறுவன்

   — என்கிறார் குட்டி ரேவதி. விதி முன் செல்ல ஸ்ரீரமன் பின் சென்றதைக் கம்பன் குறிப்பிட்டது நினைவு

வருகிறது.

   ‘ நகரும் கூடு ‘ என்ற கவிதையில் நம்பிக்கை மிகுந்த ஒரு தனி நபர் குரல் ஒலிக்கிறது.

ஊரோரம் காவல் இருக்கிறது ஆறு

பளபளக்கும் நீண்ட கத்தியாய்

…………….

இராவணத் தலைகள் போல் வீடுகள்

சாய்ந்து கிடக்கின்றன எங்கெங்கும்

   — கவிதை முடியும் போது ஒரு அசாதாரண படிமம் .

என் கூட்டையே ஒரு கனியென

அலகில் ஏந்திச் செல்கிறேன்

ஒளி பாயும் திசை நோக்கி

இக்கவிதையில் மரபின் தாக்கம் அழகாகப் பதிவாகியுள்ளது.

   ‘ காவியம் ‘ கவிதை கூடல் பற்றிப் பேசுகிறது. காமம் துய்த்தல் கலை முலாம் பூசப்பட்டிருக்கிறது.

என்னிலிருந்தும் உன்னிலிருந்தும்

உயிர்த்தீ தன் வெப்பத்தை

கசியச் செய்தது

உன் கண்ணிலிருந்து கிளம்பிய

கருணை அம்பு குத்திய நோவில்

மயங்கினேன்

………………..

   — இது போன்ற நடையில் நகர்கிறது கவிதை. கவிதையில் இரண்டு வரிகளில் சொற்கள் இல்லை.

புள்ளிகள் மட்டுமே வரிசையாக உள்ளன. ” சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை ” என்று கண்ணதாசன் சொன்னது போல காலியான இடங்களை அவரவர் கற்பனைக்கேற்ப நிரப்பிக் கொள்ளலாம்.

வானையே

தன் கால்களில் இடுக்கிக்கொண்டு

இழுத்துச் செல்லும்மேகப்பறவையின் விடுதலை

   — என்று ஒரு கவிதையில் [ மரணவேடிக்கை ] எழுதியுள்ளார். அதீதமான கற்பனை , எனவே பூதாகரமான படிமம். மாய யதார்த்த உத்தியாகவும் இதைப் பார்க்கலாம்.

   நிறைவாக , குட்டி ரேவதி கவிதைகள் மனநிறைவு தருகின்றன.

Series Navigation“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *