கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.

This entry is part 10 of 13 in the series 29 மார்ச் 2020

_ லதா ராமகிருஷ்ணன்

//மைக்கேல் லெவிட்  (*விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்கபிரித்தானியஇசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும்சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு,” ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.//

கொரோனா கிருமி: உயிர்மவியல் துறையில் நோபல் விருது பெற்ற மைகேல் லெவிட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உயிர்மவியல் பேராசிரியர் மற்றும் 2013ஆம் ஆண்டு வேதியல் பிரிவில் நோபல் விருது பெற்றவர் இந்த நோய்க் கிருமியின் தாக்கமும் அதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையும் அமெரிக்கா வில் எதிர்பார்த்ததை விட சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

இந்த நோய்க்கிருமிகள் தொடர்பாய் தன்வசம் உள்ள மாதிரிகள் அவை குறைவதற்கு மாதக்கணக்காக, வருடக்கணக்காக வெல்லாம் ஆகாது என்றும், இந்த நோய்க்கிருமிகளால் லட்சக்கணக்கான மரணங்க ளெல்லாம் நேராது என்றும் உணர்த்துவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து இரண்டு ஆங்கில ஏடுகளில் வெளியாகி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப் பட்டிருக்கும் செய்திகளிலிருந்து திரட்டப்பட்ட விவரங்கள் இங்கே தமிழில் தரப்பட்டுள்ளன.

இதற்கு முன் திரு. லெவிட் சீனாவில் எப்போது இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கம் தோன்றும் உச்சகட்டத்தை எட்டும் என்று மிகச்சரியாகக் கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LA Times க்கு அவர் தந்துள்ள பேட்டியில் இந்தத் தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் அதன் தீவிரமும் அதனாலான பாதிப்புகளும் எப்போது குறையும் என்பது குறித்து திட்டவட்டமான தேதியைத் தன்னால் தரவியலாதென்றும் ஆனால் இந்தக் கிருமிகளின் பரவல் வேகம் குறைந்துவருவதற்கான தெளிவான அறிகுறிகளைக் காணமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

”நாம் முக்கியமாகச் செய்யவேண்டியது தனிநபர் அளவிலும் சமூகரீதியாகவும் ஏற்பட்டுள்ள பீதியைக் கட்டுப்படுத்துவது. எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறுகிறார் அவர்.

Calcalist என்ற இஸ்ரேல் நாட்டின் நிதி சார் கையேடு ஒன்றில் இந்த நோய்க்கிருமிகள் அதிவேகமாகப் பரவக்கூடியவை என்ற தங்கள் கணிப்பிற்குப் பல அமைப்புகள் பயன்படுத்தும் மாதிரிகளை தான் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“அதிவேகப் பரவலை முன்வைக்கும் மாதிரிகளில், மக்கள் புதிய மனிதர்களை தினந்தினம் சந்தித்துக் கொண்டேயிருப்பதால் அவர்கள் நாளும் நோய்க்கிருமிகளால் பீடிக்கப்பட்டுக் கொண்டே யிருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், பொதுவாக நம்முடைய சமூக வட்டம் என்று எடுத்துக்கொண்டால், நாம் பரிச்சயமான சில பேரையே திரும்பத்திரும்ப சந்திக்கிறோம்.” என்று கூறும் திரு.லெவிட் அனைவரும் பயணமாகக்கூடிய அரசுப்பேருந்துகள் போன்ற பொதுவான வாகனங் களில் புதிய மனிதர்களை நாம் தினந்தினம் சந்திக்கவேண்டி யிருக்கிறது என்றாலும், அந்த வண்டியில்கூட, சிறிது காலத்திற்குப் பிறகு பெரும்பாலான பயணிகள் ஒன்று நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டவர்களா யிருப்பார்கள்; அல்லது, அப்படி பீடிக்கப்படாதவர்களாயிருப்பார்கள்”. என்கிறார்.

சமூகரீதியாய் விலகியிருத்தலை (social distancing) வலியுறுத்தி மேற்கொள்ளப் பட்டிருக்கும் நடவடிக்கைகள் இந்த நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்க மிகவும் பயனுள்ளவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் திரு.லெவிட்.

இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் உடல்ரீதி யான விலகலைக் கடைப்பிடித்தலும் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை மற்றவர்களி டமிருந்து தனிமைப்படுத்தி வைப்பதும் மிக மிக அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார்.

அப்படி எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் தனிமைப் படுத்தவேண்டியது இன்றியமை யாதது. இந்த நோய்த்தொற்றுக்கான எதிர்-நடவடிக் கைக ளையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் தேவையான கால அவகாசம் கிடைக்க வும் இந்தத் தனிமைப்படுத்தல் அவசியம் என்று சுட்டிக்காட்டும் திரு.மைக்கேல் லெவிட், அப்படிச் செய்யவில்லையானால் ஒரே சமயத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 20000 பேர் அருகிலி ருக்கும் ஒரே மருத்துவமனைக்கு வரும் நிலை ஏற்படும், இதனால் நம்மிடம் உள்ள உடல்நலன் சார் பாதுகாப்புக் கட்டமைவுகள் சீர்குலைந்துபோகும் நிலை ஏற்படும் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

நாம் செய்யவேண்டியது கொரோனா குறித்து மக்களை உரிய அளவு எச்சரிக்கை செய்யும் அளவில் உரிய தகவல்களைத் தருவதுதான். ஒரேயடியாக மக்களை அச்சுறுத்துவதல்ல; ஆதாரபூர்வமற்ற தகவல்களைப் பரப்புவதல்ல என்று வலியுறுத்திக்கூறியுள்ளார் திரு.லெவிட்.

கொரொனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர் களை தனிமைப்படுத்தி வைத்தல் மிக முக்கியம் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மக்கள்தொகையின் ஒரு பகுதியினர் இந்தத் தொற்றுக்கிருமியினால் பாதிப்படைய மாட்டார்கள் எனவும், இயல்பாகவே அதற்குரிய நோய்த்தடுப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கருதுகிறார்.

”சீனா ஏறத்தாழ முழுவதுமான தனிமைப்படுத்தலில் இருந்ததை நாம் அறிவோம். மக்கள் மிக அத்தியாவசி யமான பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே சென்றார்கள். சக மனிதர்களுடனான உடல்ரீதியான அண்மையையும் தொடர்பையும் அறவே விலக்கிக்கொண்டார்கள். ஹூபே (Hubei) மாகாணத்திலுள்ள வுஹானில்(Wuhan) தான் கொரோனாத் தொற்றால் மிக அதிகம் பேர் பாதிக்கப் பட்டார்கள். அங்கே யிருந்த மக்களில் அனைவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருந்தும் அந்தப் பகுதியின் மக்கள்தொகையில் 3 சதவிகிதம் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ‘டயமண்ட் ப்ரின்ஸஸ்’ கப்பலிலும்கூட அதிலிருந்தவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் 20 சதவிகிதம் அளவுகூட இல்லை. இந்த உண்மைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்க, மக்களில் கணிசமானோருக்கு இந்த நோய்த்தொற்றுக்கான எதிர்ப்புசக்தியும் தடுப்பாற்றலும் இயல்பாகவே அமையப்பெற்றிருப்பதை உணரமுடிகிறது” என்றும் சுட்டிக்காட்டுகிறார் திரு. மைக்கேல் லெவிட்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே சீனாவில் தினசரி இந்தத் தொற்றுக்கிருமியால் புதிதாகப் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, “இனிவரும் நாட்களில் இந்தத் தொற்றுக்கிருமி காரணமாக நேரும் இறப்புகளின் கணக்குவிகிதம் குறையும் என்பதையே இது குறிப்புணர்த்துகிறது என்று கூறினார் மைக்கேல் லெவிட். அதேபோல், இந்தத் தொற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் தினமும் குறைந்துகொண்டே வந்தது. இந்தத் தொற்றுக் கிருமியால் மிக அதிகமான அளவு பாதிக்கப்பட்டிருந்த ஹூபேய் மாகாணம் இரண்டு மாத முழு ஊரடங்குக்குப் பின் இப்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தயாராகி விட்டது.

இன்னும் சொல்லப்போனால் கொரோனா கிருமிகளால் 80,000 பேர் சீனாவில் பாதிக்கப்படக் கூடும் என்றும் 3250 மரணங்கள் நிகழக்கூடும் என்றும் திரு.மைக்கேல் லெவிட் கணித்துச் சொன்னார். இந்த மார்ச் 24 அளவில், சீனாவில் கொரோனா பதொற்று பீடித்தவர் களின் எண்ணிக்கை 81,171. இறந்தவர்களின் எண்ணிக்கை 3.277.

இப்பொழுது உலகின் மற்ற பகுதிகளிலும், தினமும் 50க்கும் மேல் கொரானாவால் புதிதாகப் பாதிக்கப்படுவதாக அறிவிக்கும் 78 நாடுகளில் பலவற்றில் ‘குணமாதலின் அறிகுறிகளை’ப் பார்க்க முடிவதாகத் தெரிவிக்கிறார் திரு லெவிட். ஒரு நாட்டில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை அவர். மாறாக, ஒரு நாட்டில் தினமும் புதிதாக இக்கிருமியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையே தன் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார்.

அப்படி சீனாவிலும் தென் கொரியாவிலும் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருவதாக புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டு கின்றன.

கொரோனா கிருமியால் பாதிக்கப்படுபவர்கள், இறப்ப வர்கள் என்று தரப்படும் எண்ணிக்கைகள் அதிகமா கவே இருந்தாலும் இந்த நோய்க் கிருமியின் பரவல் வேகம் குறைந்திருப்பதற்கான அறிகுறிகளைக் காணமுடிகிறது என்கிறார் திரு.லெவிட். அதே சமயம், தன் புள்ளிவிவரங்கள் அத்தனை தெளிவாக இல்லை யென்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பரிசோதனை நடைபெற முடிந்தது போன்ற போதாமைகளின் காரணமாக பல பகுதிகளிலிருந்து பெறப்படும் அதிகாரபூர்வமான எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

ஆனாலும், கிடைக்கும் புள்ளிவிவிரங்களிலும் இந்த நோய்த்தொற்றுப் பரவல் விகிதத்தில் அறியக்கிடைக்கும் தொடர்ச்சியான சரிவு நோய்த்தாக்கம், மரணம் தொடர்பான பெருங்கூச்சலுக்கப்பால் ஏதோ ஒன்று நேரியவிதத்தில் இந்தத் தொற்றை எதிர்த்துச் செயல்பட்டுக்கொண் டிருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது என்கிறார் திரு. லெவிட்.

திரு.மைக்கேல் லெவிட்டின் கருத்துகள் உலகெங்கி லும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக உள்ளது. அதே சமயம், உலக நாடுகள் இந்த நோய்க்கிருமியின் தாக்கத்தைக் குறைக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு, நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கவேண்டியதன் அவசியத்தையும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் திரு. லெவிட்.

குறிப்பாக சமூகரீதியாய் விலகியிருத்தல் மிக மிக அவசியம் என்கிறார். அதற்கென விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

முக்கியமாக, அதிக எண்ணிக்கையில் ஓரிடத்தில் ஆட்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில், இந்த நோய்க்கிருமி மிக மிகப் புதிது என்பதால் உலக மக்கள் அதற்கான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வழியில்லை என்று கூறும் திரு.லெவிட் “உங்கள் நட்பினரோடு மதுவருந்தி மகிழ இது நேரமல்ல” என்று எச்சரிக்கிறார்.

இன்னும் மேம்பட்ட அளவில் இந்த நோய்த்தொற்று பாதிப்பை ஆரம்பக் கட்டத்திலேயே – பரிசோதனையால் மட்டுமல்லாமல் இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்படுவதைப்போல், உடலின் வெப்பநிலை சார் தொடர் கண்காணிப்பின் மூலமாக வும், உடனடியாக சமூகரீதியான விலக்கம் மூலமாகவும் கண்டறிதல் – இந்த நோய்த் தொற்று தொடர்பான நம் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் திரு.லெவிட்.

மேலும், நோய்த்தடுப்பு ஊசி, மருந்து குறித்து இத்தாலி மக்களுக்கு இருக்கும் எதிர்ப்புணர்வே அங்கே இந்தத் தொற்று மிக வேகமாகப் பரவியதற்கான காரணங் களில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறும் திரு.லெவிட், ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கியம் என்றும், ஏனெனில் ஃப்ளூ காய்ச்சலின் மத்தியில் ஏற்படும் கொரோனாத் தொற்றுப்பரவல் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் என்பதோடு கொரொனா கிருமித்தொற்று கண்டுபிடிக் கப்படாமல்போகும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என்கிறார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கொரோனா தொற்று குறித்த திரு.மைக்கேல் லெவிட் கணிப்புகள் இன்னும் பல மாதங்கள், பல வருடங்கள் இந்த நோய்த்தொற் றோடு நாம் போராடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று பரவலாக கருத்துரைத் துக் கொண்டிருக்கும் பலருடைய கணிப்புகளுக்கு நேரெதிர் நிலையில் இருக்கின்றன.

(*கொரோனா நோய்க்கிருமிகள் குறித்த செயற்கைக் கோள் படங்கள் அமெரிக்காவில் இந்த நோய்த்தொற்றின் பரவல் குறைந்திருப்பதைக் காட்டுகின்றன என்று கூறப் படுகிறது.)

கொரோனாத்தொற்றுகளின் விளைவாய் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிநிலையில் அமைப்புசாரா தொழிற்துறை, தினக்கூலியை நம்பியிருக்கும் உழைப்பாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்று கூறும் திரு.மைக்கேல் லெவிட் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகெங்கும் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் செயல்பாடுகள் சார் மந்தநிலையே நம் முன் இருக்கும் மிக மோசமான நெருக்கடி என்று வருத்தத்தோடு கூறுகிறார்.

2013இல் வேதியல் பிரிவில் நோபெல் விருது பெற்றவரான திரு. மைக்கேல் லெவிட் உலகம் அழியப்போகிறது என்று கூறும் தொற்றுநோயியல் நிபுணர்கள் சிலர் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறார்.

கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அத்தனை பயங்கரமாக இல்லை என்றும், குறிப்பாக சமூக ரீதியான விலகலை அனுசரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளைப் பொறுத்தவரை, அத்தகைய அவலமான காட்சி சற்றும் புலப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறுகிறார்.

பீதியடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதே மிக மிக அவசியம், பிரபஞ்சத்தின் பேரியக்கத்தில் நாம் நலமடைந்து மீள்வோம் என்கிறார் அவர். உலக மக்கள் அமைதியிழந்து அலைக்கழியும் இந்த நாட்களில் திரு.மைக்கேலின் சிந்தனைகள் நம்பிக்கையொளிக் கீற்றாய் ஆறுதலளிக்கின்றன.

  •  
Series Navigationஒருகண் இருக்கட்டும்மாயப் பேனா கையெழுத்து
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *