கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா

author
0 minutes, 8 seconds Read
This entry is part 13 of 14 in the series 26 ஏப்ரல் 2020

ஜெ பாஸ்கரன்

சிறுகதை இலக்கியம் படைப்பதுதான் சிரமமானது. நன்கு வளர்ந்து வரும் இலக்கியப் பகுதியும் இதுதான் என்பார் க. நா.சு.இதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எந்த ஒரு சிறுகதையையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு சிறுகதையை வாசித்தவுடன், அது ஏற்படுத்தும் தாக்கம், ஒரு வாசகனை பாதிக்கிறதென்றால், அக்கதை ஒரு நல்ல சிறுகதையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது என் எண்ணம்.

ஸிந்துஜாவின் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. எல்லாக் கதைகளிலும், நாம் அன்றாடம் காணும் மனிதர்கள், தங்கள் சுயத்தை மறைக்காமல், சிந்தித்தும், பேசியும், பழகியும் வருகிறார்கள். ஒண்டுக் குடித்தனங்கள், மத்திய தர வர்க்கத்தில் உழலும் தன்மானஸ்தர்கள், சில மேட்டுக்குடி மேதாவிகள் என நம் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்தக் கதைகளில் காணமுடிகிறது. எளிமையான வார்த்தைகளில் சின்னச் சின்ன உரையாடல்கள், மனித உறவுகளின் சிக்கல்களையும், அதனால் எழும் மன உளைச்சல்களையும் மிக நுணுக்கமாக சொல்லிச் செல்கின்றன. ஆங்காங்கே, சொற்களை விட மெளனங்களே சூழ்நிலையையும், ஆழ்மன விகாரங்களையும் முகத்தில் அறைகின்றன! பங்களூரு, மதுரை, தஞ்சாவூர், டெல்லி என எல்லா இடங்களும் அவர் புழங்கிய இடங்கள் – அதனால் கதையில் வரும் பாத்திரங்களும், ஆபீஸ், வீடு என்பவையும் விவரிக்கப் படும்போது ஊர்களின் மண் வாசனையோடு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தி, மனக் கண் முன் காட்சிகளாய் விரிகின்றன!

எதைச் செய்தாலும், அதற்கொரு விளம்பரம் தேவையாய் இருக்கிறது – அது தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குச் செய்யும் சிறு உதவியாய் இருந்தாலும் அப்படித்தான். லிங்கி தன் எஜமானியிடம் உதவியைப் பெறுவதற்குக் காத்திருக்க வேண்டியதிருக்கிறது – இந்திராம்மாவின் புகழ் பாட நீலாக்கா வர வேண்டியதிருக்கிறது! தற்பெருமையும், புகழ் விருப்பும், விளம்பரமும் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டுவிக்கின்றன என்பதைச் சொல்லும் கதை – ‘நிழலுக்குப் பின் வரும் வெயில்’.

குடிகாரக் கணவனின் சந்தேகமும், கொடுமையான சொற்களும் மனைவி சாவித்திரியை காயப் படுத்துகின்றன. போதாக்குறைக்கு, கோபத்தில் அடிக்கிற அடியில் அவள் காது கிழிந்து, இரத்தம் கொட்டுகிறது. மாடி வீட்டுக்கு ஏதோ வேலையாய் வந்திருந்த நண்பன் துரையுடன் பேசிக்கொண்டிருந்ததுதான் இந்தக் கோபத்திற்குக் காரணம் – ஆபத்தில் உதவும் துரையிடம் அன்பாக இருக்க நினைத்த சாவித்திரி மனம் நெகிழ்ந்து, துரையின் தோளில் சாய்ந்து கொள்கிறாள். “இருவருக்கும் குடும்பம் இருக்கு; விட்டு வெளியே வரமுடியாது. ஆனா, நாம நாம்பளா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்கிட்டவங்களா, வந்து போற சந்தோஷங்களையும், கஷ்டங்களையும் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிறவங்களா அன்பா, பரிவா இருக்கிறதுக்கு யார் தடை போடமுடியும்? யாருக்கு அந்த அதிகாரம் இருக்கு?” என்கிறாள்.

ஆழ்மனதில் கசப்புகளுடன், வெளியில் சிரிப்புடன் வளைய வரும் – சாவித்திரியைப் போல – எத்தனைப் பெண்களைப் பார்க்கிறோம்? வேறு விதமாக சாவித்திரியை நினைக்க முடியவில்லை! சாவித்திரியைப் போலவே ஸிந்துஜாவின் பெண் பாத்திரப் படைப்புகள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நியாயமானவை; அடுத்த வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கலவரம் செய்யாதவை; விதிவிலக்காக விதிகளை மீறத் தயங்காதவை!!

‘உள் வெளி’யின் பெரிய, சின்ன மன்னிகளும், ‘பிணை’யின் அபிராமியும், ‘எல்லை’யின் ஶ்ரீமதியும், ‘விலகும் திரைகளும் சரியும் பிம்பங்களும்’ ஜானகியும் இதைத்தான் வேறு வேறு சூழல்களில், தங்களை வெளிப்படுத்துகிறார்கள்- ஸிந்துஜாவின் பெண் பாத்திரங்கள் சுதந்திரமானவர்கள் – சிக்கலில்லாமல் சிந்திக்கின்றவர்கள்!

‘விடுதலை’ – வித்தியாசமான முடிவைக் கொண்டது. வெளி உலகை விட சிறையே சுகமானது என்கிற கதை.

‘அசூரன்’ – மனைவி, ஒரு ஆண் குழந்தை, ஒரு போன் கால் இவற்றைச் சுற்றி ஒரு சிறுகதை. பங்களூரில் கிளம்பும் ரயிலில் செந்தில் ஏறுகிறார். போனில் பேசும் மனைவியிடம் எரிந்து விழுகிறார் – பேசும் குழந்தையைத் திட்டுகிறார். இறங்க வேண்டிய திருவள்ளூர் போகுமுன் மீண்டும் போன் கால். மனைவியிடம் அன்பாகப் பேசுகிறார். குழந்தை பற்றி மிகவும் கரிசனத்துடன் கேட்கிறார். ‘என்ன சமையல் இன்னிக்கு’ என்ற கேள்விக்கு பதிலும், அதற்குப் பிறகு இவர் சொல்வதும்தான் கதையின் முடிவு! “அடப் பாவி !”. என்று முடிக்கறார் கதைசொல்லி – பல கதைகளில் நமக்குத் தோன்றுவதும் இதுதான் – ஜெஃப்ரிஆர்ச்சர் ஸ்டைலில், இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பம்!!

‘சிகரம்’ – வாழ்வில் பணம், அதைவிடவும் செய்யும் வேலையில் பக்தி என்பதை வலியுறுத்தும் கதை : “அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, நான் சாப்பிடற ஒரு வாய் சாதத்தை வேதம்தான் எனக்குப் போடறது. அதுக்குக் கைமாறா நான் மூச்சு இருக்கற வரைக்கும் புரோகிதம் பண்ணிண்டுதான் இருப்பேன்”
“விசேஷங்களை பண்ணி வக்யணும். குழந்தை குட்டிகளை ஆசீர்வாதம் பண்ணணும். எல்லோரும் சந்தோஷமா இருக்கிறதை சந்தோஷமா பார்க்கணும்னு இருக்கு” என்னும் கண்டு சாஸ்திரிகள்தான் ‘சிகரம்’!

‘மரத்தை வணங்காத செடி’ – சமூகத்தில் இருக்கும் தீண்டாமை அவலத்தைச் சொல்கிறது. ‘அம்மிணி’ – ஒருதலைக் காதலையும், ‘ஸ்பரிசம்’ – வள்ளி என்னும் நேர்மையும், உண்மையும் கலந்த பெண்ணின் நெஞ்சுரத்தையும், ‘கீறல்’ – ‘குற்றவாளி, அதே குற்றத்தைச் செய்யும் பிறரைக் கேள்வி கேட்கமுடியாது’ என்பதையும் உணர்த்தும் அழகான சிறுகதைகள்!

‘எதிர்பார்ப்புகள்’ – மருது, மாலதி தம்பதி சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தி வருவது – அழகும், அறிவும் ஒரு சேர இருப்பதில்லை – அவை மனிதாபிமானத்துடன் ஒன்று சேரும்போது, வாழ்க்கை வெற்றிதான் – எதிர்பார்ப்புகள் இல்லாத வெற்றி!

வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

(சிறுகதைத் தொகுப்பு – கண்மணி கிரியேடிவ் வேவ்ஸ், சென்னை 17.

செல் : 97910 71218  விலை: Rs. 160/- ).

Series Navigationசாளேஸ்வரம்கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *