_ லதா ராமகிருஷ்ணன்
‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற சக மனிதர்களுக்கு ஒரு எளிய நன்றியறிவிப்பாக 5.4.2020 இரவு ஒன்பது நிமிடங்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு மெழுவர்த்தி, அலைபேசி விளக்கு டார்ச் விளக்கு போன்றவற்றை ஏற்றச்சொல்லி இந்தியாவின் பிரதமரிடமிருந்து வந்த வேண்டுகோள் முகநூலில் பல பேரால் எள்ளிநகையாடப்பட்டது; கேவலம் செய்யப் பட்டது.
இப்படிச் செய்தவர்களில் நிறைய தமிழ் எழுத்தாளர்களும் உண்டு. ’பிரதமர் சொன்னது போல் விளக்கேற்றிவிட்டேன். இனி அடுத்து தீமிதிக்கச்சொல்வாரா?” என்று ஏளன மாகக் கேட்டிருந்தார் ஒரு பெண் படைப்பாளி. விளக்கேற்றுவதுபோல் கவனமாகத் தன்னைப் படம்பிடித்துப்போட மறக்காதவர் தீமிதித்து அதையும் ஒரு புகைப்படம் எடுத்துப்போட்டிருக்கலாமே என்று தொன்றியது.
இது ஜனநாயக நாடு, இங்கு எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்க யாருக்கும் உரிமை உண்டு என்பதையெல்லாம் மறந்து பிரதமரின் இந்தத் திட்டத்தை வரவேற்ற எழுத்தாளர்களை அவர்கள் சார்ந்த மதரீதியாகப் பழித்துப்பேசினார்கள் சில எழுத்தாளர்கள்.
முன்பெல்லாம் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மதமல்லாத இன்னொரு மதத்தைக் கொச்சையாக வசைபாட ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். இப்போது இந்துமதமென்றால் அதை எந்த மதத்தவரும் எத்தனை வேண்டுமானாலும் கொச்சையாகப் பழிக்கலாம். எந்தக் கவலையுமில்லை. எத்தனைக் கெத்தனை கொச்சையாகப் பழிக்கிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்கள் அறிவுசாலிகள். இந்து மதத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் பலர் இந்தக் கண்ணோட் டத்துடன் இயங்கிவரு வதைக் காணமுடிகிறது. ’காவி’ போன்ற பல வார்த்தைகள் இவர்களால் திரும்பத் திரும்பக் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
மதரீதியான மூடநம்பிக்கைகளைச் சாடுவதென்றால் இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது இந்துமதம் மட்டுமே. இந்தப் போக்கு அவர்களுக்குப் பலவகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது. இன்று உலகமே ஒரு global village ஆகிவிட்ட நிலையில் இந்துமதத்தவர்கள் சிறுபான்மையினத்தவர்களாக இருப்பது இதற்குக் காரணமா யிருக்க வழியுண்டு என்று சொல்லப்படுகிறது.
பிரதமரின் மேற்குறிப்பிட்ட திட்டத்தை வரவேற்ற எழுத்தாளர்களை அவர்கள் சார்ந்த சாதிரீதியாகப் பழித்துப்பேசினார்கள் வேறு சில எழுத்தாளர்கள். அவர்களை ஆதரித்த மூத்த எழுத்தாளர்களும் உண்டு. இப்படிப் பேசியவர்களின் சாதி மதம் என்று பார்க்க ஆரம்பித்தால், பேச ஆரம்பித்தால் இதற்கு முடிவேயில்லை.
“ESTABLISH LARGESCALE COMMUNITY ENGAGEMENT FOR SOCIAL & BEHAVIOURAL CHANGE APPROACHES.” என்ற உலக சுகாதார மையத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத்தான் உலக நாடுகள் இத்தகைய கூட்டிணைவு நிகழ்வுகளைக் கட்டமைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தானே. இதை ஏன் இத்தனை ஏளனம் செய்யவேண்டும்? அவதூறு செய்ய வேண்டும்? வெறும் கைத்தட்டச் சொல்வதோடு அரசுகள் வாளாவிருந்துவிட்டன என்ற தோற்றத்தை உருவாக்க இத்தனை திட்டமிட்டரீதியில் ஏன் பாடுபடவேண்டும்?
அத்தனை மனிதநேயத்தோடு நுட்பமாக கவிதை எழுதுகின்ற, நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இப்படி விளக்கேற்றுபவர்கள் மூளை பிறழ்ந்தவர்கள் என்றும், கொரோனா இவர்களையெல்லாம் காவு கொள்ளும் புத்திசாலியாக இருக்கலாகாதா என்றும் ஆதங்கப்பட்டதைப் படித்து அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு அருமையான படைப்பாளி கொரோனா மோடியின் சதி என்று முடிந்த முடிவாக தீர்ப்பெழுதியிருக்கிறார்.
வேற்று மதத்தைச் சேர்ந்த இலக்கியவாதி ஒருவர் கொரோனா நெருக்கடியால் பிரதமர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக மேற்பார்வைக்கு அனுதாபம் கலந்த ஆய்வலசலாக, எனில், உண்மை நோக்கம் பிரதமரை மட்டந்தட்டுவதாக எழுதியிருந்தார். இவருடைய கவிதை இவர் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்ப தாகக் காட்டுவதாக முன்பொரு சமயம் ஓர் உளவியல் மருத்துவர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்தபோது சக கவிஞருக்காக நான் வரிந்துகட்டிக் கொண்டு சண்டைபோட்டது நினைவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட கவிஞர் உளவியல் மருத்துவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)
மேலும், நிலைமையை சமாளிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் பிரதமர் சிறுவயதிலிருந்தே தனக்குத் தெரிந்த மதநம்பிக்கையின்படி விளக்கேற்றச் சொல்வதாகவும், அதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை எனவும் கருத்துரைத்திருந்தார் கவிஞர். டார்ச்லைட் ஏற்றலாம், மௌபைல் வெளிச்சம் காட்டலாம், மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்று பிரதமர் சொன்னதெல்லாம் அவருடைய காதுகளை ஏன் எட்டவேயில்லை என்று மிகவும் வருத்தமாயிருந்தது.
இன்னொருவர் பார்ப்பன குலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிலர் இந்த விளக்கேற்றலை வரவேற்று எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ‘கொரோனா இங்கே வந்து பல வருடங்களாகிவிட்டன என்று எழுதியிருந்தார்.
முன்பு திருமதி நிர்மலா சீதாராமனைப் பார்க்கச்சென்ற நான்கு பத்திரிகையாளர்களை அவர்கள் அமைச்சரிடம் என்ன பேசினார்கள் என்பதொன்றும் அறியாமலே(அப்படியே மரியாதை நிமித்தம் பார்க்கச்சென்றாலும் என்ன தவறு?) ‘சொம்புதூக்கிகள்’ என்று அடைமொழியிட்டுப் பழித்த படைப்பாளிகளுக்கு ஊடகவியலாளர்களாக உள்ள சக படைப்பாளிகள் கண்டனம் தெரிவிக்காததோடு ‘லைக்’ போட்டுப் பாராட்டினார்கள் ஃபேஸ்புக்கில். முதன்முறையாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதை (உடனே இந்திராகாந்தி அம்மையார் தான் முதன்முதலாக அந்தப் பகுதியை வகித்தார் என்று திருத்துபவர்கள் அவர் மிகவும் சொற்ப காலமே பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார் என்பதைக் கண்டுகொள்ள மாட்டார்கள்) பாராட்ட மனமில்லாமல் ‘ஊறுகாய் மாமி’ என்று அவரை சாதிரீதியாகப் பழிப்பவர்களே தமிழக அறிவுசாலிகளாக அறியப்படுகிறார்கள்.
பார்ப்பனர்கள் மட்டும்தான் (அல்லது, பார்ப்பனர்கள் எல்லோருமே) திரு.மோதியை ஆதரிக்கிறார்கள் என்ற பார்வையை முன்வைப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை. அதேபோல், நாட்டின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது பார்ப்பனர்களால்தான் என்று பேசிவருவதும். சிலர் இதைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். தப்லீக் ஜமாத் விஷயத்திற்காக ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையுமே குற்றஞ்சாட்டுதல் எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இது.
வேறு சிலர் ‘சீனாவைப் பார் – எத்தனை விரைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறது என்று சிலாகிக்கிறார்கள். அது ஆதாரபூர்வமான உண்மையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, சீனா தானே கொரோனாவின் பிறப்பிடம், அந்த நாடு நோய்த்தொற்று குறித்து வெளியே சொல்லத் தாமதப்படுத்தியது தானே இன்றைய உலக நெருக்கடிக்குக் காரணம் என்பதைப் பேச அவர்கள் தயாராக இல்லை.
இப்படித்தான், மோடி அரசை மோசடி அரசாகக் காண்பிப்பதே குறியாய் வெறுப்பு உமிழ்ந்துகொண்டிருக்கும் அறிவுசாலிகள் அனேகம்பேர். இலங்கையில் ஒரு தேவாலயத்தில் குண்டு வெடித்தபோது படைப்பாளிகள் ஒரே குரலாக அதைக் கண்டித் தார்கள். இங்கே அப்படியில்லை. எது நடந்தாலும் அதை மோடி அரசைப் பழிக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக் கிறது.
எந்தவொரு இனம், மதம் சார்ந்த மனிதர்களையும் ஒரேயளவாய் மொந்தையாக்கிப் பேசுதல் எந்தவிதத்திலும் சரியல்ல. எந்தவொரு சாதி, இன,மதம் சார்ந்து ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு முதலாய் பல பாகுபாடுகள் கட்டாயம் உண்டு.
அதேபோல், மாற்றுக்கருத்து கொண்டவர்களை சாதிரீதியாக மதிப்பழிக்கும் முயற்சி அதைச் செய்பவரின் அடாவடிப்போக்கையே அம்பலப்படுத்துவதாகும்.
ஒரு கட்சியில் இணைந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்கள் (அந்தக் கட்சிகளிலிருந்து அவர்களுக்கு ஊதியம் முதலாய் பல்வேறு வசதிகளும் பதவிகளும் கிடைப்பதையும் அறிய முடிகிறது) இப்படி தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மதத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவையும் எதற்கெடுத்தாலும் கேவலம் பேசிக்கொண்டேயிருப்பது முகநூலில் முனைப்பாக நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுடைய கட்சித் தலைவர்கள்கூட இப்படி மட்டமாகப் பேசுவதில்லை. அல்லது, எதிர்க்கட்சிக்கார்களை கொச்சையாகப் பழிப்பதற்கென்றே சில பேச்சாளர்களைக் கட்சிகள் நியமிப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறதே – அதுவா இது?
அந்த வேலையை எழுத்தாளர்கள் செய்ய வேண்டுமா? எழுத்தின் வலிமையை நன்றாகவே அறிந்தவர்கள் எழுத்தாளர்கள். அவர்களில் சிலர்தான் Pogrom, Islomophobia என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் இசுலாமிய சகோதர சகோதரிகளுக்குப் பாதுகாப்பேயில்லை என்பதான ஒரு பொய்யான பீதியூட்டும் செய்தியைத் திரும்பத்திரும்ப சமூக ஊடகங்களில் பரப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இதுபோதாதென்று, விளக்கேற்றல், கைத்தட்டல் போன்றவையெல்லாம் வெறும் பாவனைகள் என்றும் உயர்தட்டு மக்களும், மத்தியதர வர்க்கத்தினரும் இந்த பாசாங்குகளை மேற்கொள்கிறார்கள் என்றும் ஏதோ தனக்கு மட்டும்தான் சக மனிதர்களிடம் மெய்யான அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதுபோலும் சிலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் சில படைப்பாளிகள் சிலரும் இப்படிப் பதிவிட்டிருந்ததுதான் மிகவும் வருத்தத்தை அளித்தது.
’தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலை தான்.’
உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை.’
பாவனை என்று மிகப் பொதுப்படையாக சகமனிதர்களைப் பகுப்பதும் அப்படித்தான். அவரவர் பாவனை அவரவருக்குத் தெரியும். அப்படிப் பார்த்தால் கைத்தட்டுவது, விளக்கேற்றுவது ஆகிய செயல்பாடுகள் மூலம் மட்டும்தானா சகமனிதநேயம் இருப்பதாக பாவனை செய்ய முடியும்? சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டே குடிசைவாசிக்காக உருகுவதாய் கவிதை எழுதிக்கூட பாவனை செய்ய முடியுமே!
’நினைத்தபோதெல்லாம் விமானத்தில் பறப்பவர் விமானத்தில் பறக்கும் பணக்காரர்களால் கொரோனா வந்திருப்பதாக’ அறச்சீற்றம் சீறி தன்னை வெகு சாமர்த்தியமாக சமூகப்பொறுப்பிலிருந்து விலக்கிக் கொண்டுவிடும் பாவனை _
நாற்பதாண்டுகளாக அரசு உயர்பணியில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தபடியே தன்னையும் அடித்தட்டு மக்களில் ஒருவராகத் தொடர்ந்து பேசிவரும் பாவனை_
சகமனிதநேயம் என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தை, சமூகத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் பாவனை _
அவ்வழி சமூக அவலங்களுக்கான பொறுப்பிலிருந்து தன்னை வெகு சுலபமாக விலக்கிக் கொண்டுவிடும் strategyத்தனமான பாவனை _
என்று நம்மிடையே எத்தனையெத்தனை பாவனைகள்.
இன்னும் நிறைய சொல்லலாம். மேல்தட்டு வாழ்க்கை வசதிகளோடு வாழ்ந்துவரும் படைப்பாளிகள் ’பேச வேண்டியதைப் பேசி’ வெகு சுலபமாகத் தங்களை ‘இல்லாதவர்க ளோடு’ இணைத்துக்கொண்டு ஏழைப் பங்காளனாகிவிடுவது இங்கே அத்தனை இயல்பான ஒரு நடைமுறையாக நிலவுவதும் நடப்புண்மை தானே.
23 நாய்கள் வளர்க்கும் ஏழை’ என்று முன்பு அத்தகையதொரு புரட்சிகர இதழியலாளர் குறிப்பிடப்பட்டது நினைவுக்கு வருகிறது.
சமீபத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பால்கார் பகுதியில் எழுபது வயது சந்நியாசி உட்பட மூவர் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது இடையே மஹராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பால் கார் (Palghar) மாவட்டத்தில் Gadchinchale கிராமத்தின் ஒரு கூட்டம் அவர்களுடைய காரை வழிமறித்து அவர்களை அடித்தே கொன்றிருக்கிறது. போலீஸ் அங்கே வந்தும் காப்பாற்ற முடியவில்லை(காப்பாற்ற முனையவில்லை, என்பது சிலரின் வாதம்.) இது குறித்து ஏதும் சொல்லாமல் பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மௌனம் காத்தனர்.
ஓர் இசுலாமியர் இறந்தால் உடனே இந்தியாவில் இசுலாமியர்கள் கொன்றழிக்கப் படுகிறார்கள் என்று அறிக்கைகள் விடும் திருமதி சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த lynching குறித்து ஏதும் சொல்லாதது ஏன் என்று கேள்வியெழுப்பி அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை ஒளிபரப்பிவந்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆர்னாப் கோஸ்வாமி யும் அவருடைய மனைவியும்(அவரும் அந்த சேனலின் மூத்த ஊடகவியலாளர்) சென்ற கார் தாக்கப்பட்டது. தாக்க வந்தவர்களை இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக அடையாளங்காட்டிய மஹராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த, தற்போது ஆர்னாப் கோஸ்வாமிக்கான பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருக்கும் காவலர் சொன்னதை முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மறுத்தது. திரு. ஆர்னாப் கோஸ்வாமி ஐந்துமணிநேரம் போராடிய பிறகுதான் அதை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கமுடிந்தது.
பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்று ஆவேசமாக முழங்கும் எதிர்க்கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ் ‘பால்கார் படுகொலை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் திருமதி சோனியா காந்தி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்காக அவர் மேல் 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டன. அவை யாவும் காங்கிரசும் அதன் ஆதரவுக்கட்சிகளும் ஆளும் மாநிலங்களிலிருந்தே போடப்பட்டுள்ளன. ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவில் தண்டனை கிடைக்கக்கூடிய ‘கிரிமினல்’ வகையான வழக்குகள்.
அவதூறுக்காளானவர்தான் வழக்குதொடுக்கவேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் மூன்றுவாரங்களுக்கு ஆர்னாபைக் கைது செய்யத் தடைவிதித்து, தொடுக்கப்பட்ட 200 வழக்குகள் ஒரே தன்மையானவை, ஒரேவிதமான வாசகங்களைக் கொண்டவை என்பதால் அவற்றில் ஒரே ஒரு வழக்கை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கும் உச்சநீதிமன்றம் சமூகத்தின் நான்காம் தூணாக விளங்கும் இதழியலாளர்களும் ஊடகவியலாளர்களும் தகவல்களை மக்களுக்குத் தருவதற்கான உரிமை பெற்றவர்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.
அப்படியே அந்த சேனல் காங்கிரஸ் தலைவரை அவதூறு செய்வதாகப் பட்டால் வழக்குத் தொடுத்திருக்கலாம். உன்னை இல்லாமலாக்கிவிடுவோம் என்று அச்சுறுத்து வதும். அதை முயற்சிப்பதும்தான் பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தை மதிப்பதாக முழங்குவோர் செய்யும் செயலா? இந்தத் தாக்குதல் குறித்தோ, இந்தத் தாக்குதலை வெடிவைத்துக் கொண்டாடிய காங்கிரஸார் குறித்தோ தமிழக மோடி-எதிர்ப்புப் படைப்பாளிகளும் அறிவுசாலிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
மாறாக, ’தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்ற கூற்றின் உண்மைக்கு ஆதாரம் வடக்கே ஆர்னாபுக்கு தனி சேனல் உருவாக்கித்தந்த பிஜேபி தமிழகத்தில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேக்கு வெறும் இணையதளம் மட்டுமே உருவாக்கித்தந்திருப்பதுதான்’ என்று ஏளனம் செய்திருக்கிறார் ஒரு கட்சிசார்ந்த தமிழகப் படைப்பாளி – கம் – இதழியலாளர். அவருக்கு அவர் கட்சி சேனல் உருவாக்கித் தராததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கத் தோன்றுகிறது.
இத்தனைக்கிடையிலும் மிகப்பெரிய ஆறுதல் _ இந்திய மக்கள் என்றுமே யோசிக்கும் திறனுடையவர்கள். மந்தைகளல்ல.
- இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….
- வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்
- 3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
- மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு
- இழப்பு !
- அழகாய் பூக்குதே
- ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்
- நான் கொரோனா பேசுகிறேன்….
- தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]
- சாளேஸ்வரம்
- கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா
- கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?