3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

This entry is part 5 of 14 in the series 26 ஏப்ரல் 2020

குமரி எஸ். நீலகண்டன்

கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த குறும்படம் ஒன்று இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாய் வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறும்படம் பல இளைஞர்களையும் அதே போன்ற முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உந்துதலை அளித்திருக்கிறது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் தரமணி சீர்மிகு சட்டப் பள்ளியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூன்று பேர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் 3 இன் கொரோனா அவுட் என்ற படமாகும். அலைபேசி கேமராவிலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அங்கதம் தொனிக்க தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மாணவர்கள் என். சூர்யா, சச்சின் ராஜ், ஆர். இனியன் ஆகிய மூவரும் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தர்ம்புரி ஆகிய இடங்களில் அவரவர் வீடுகளிலிருந்து அவர்களுக்கான பாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். மூன்றே தினங்களில் இசை, வசனம் ஆகியவற்றை முறையாய் கோர்த்து தொகுத்து ஒரு அழகான குறும்படமாய் சமூகத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்திற்கான கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களுடன் நடித்தும் இருக்கிறார் மாணவர் என்.சூர்யா. கொரோனா ஊரடங்கில் ஒரு அறைக்குள் வாழுகிற மூன்று இளைஞர்களின் சில மணிநேர சம்பவங்களைக் கொண்டதுதான் இக்கதை. மூன்று இடங்களில் படத்தினை ஒளிப்பதிவு செய்த உணர்வு குறும்படத்தின் எந்தப் பகுதியிலும் வெளிப்படாமல் வெற்றிகரமாக படத்தை அளித்திருக்கிறார்கள். 

கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றின் அவசியத்தை பிரச்சார தொனியில்லாது கதையோடு இழைந்தோடும் விதத்தில் சொல்கிறது இந்தக் குறும்படம். இந்தக் குறும்படத்தின் இணைப்பு இதோ. 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *