அஸ்தி

author
0 minutes, 31 seconds Read
This entry is part 4 of 13 in the series 3 மே 2020

ப.ஜீவகாருண்யன்

                                      

கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள்.

“அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் அண்ணியும் தாயாரா இருங்க. பதினோரு மணிக்கு மகாபலிபுரம் போய்டலாம்.”

தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்தேன்.

தங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது. வேலூர் கல்லூரி ஒன்றில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தங்கை மகன் பாஸ்கர் இருசக்கர வாகன விபத்தில் இருபது நாட்களுக்கு முன்பு உற்றாரைப் பெற்றாரை நிலைகுலைத்து இறந்து விட்டான். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த மகளுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த தங்கைக்கும் அவள் கணவருக்கும் பேரன் பிறந்த ஏழாம் நாளில் பேரிடி விழுந்து விட்டது.

‘வசதி இருக்கிறது. ஒரு பிள்ளை தானே. அனுபவிக்கட்டும்!’ என்று மகனை அவன் போக்கில் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். முப்பதாயிரம் ரூபாயில் கைபேசி, லட்ச ரூபாயில் ரேஸ் பைக். இப்படி அவன் கேட்டதை எல்லாம் தடையில்லாமல் வாங்கிக் கொடுத்தார்கள்; கெடுத்தார்கள். இன்று ஆசை மகனை இழந்துத் தவிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்த போது பாஸ்கரின் செயலைப் பார்த்து தங்கையை எச்சரித்தேன்.

‘பாஸ்கர் நடவடிக்க எனக்குப் பிடிக்கல, கௌரி.’ என்றேன்.

கௌரி திகைப்புடன் என்னைப் பார்த்தாள்.

‘தோள் வழியா செல் போன அழுத்திப் பேசிக்கினு ரேஸ் பைக்குல அவன் போற வேகம். பாக்கறப்பவே பகீர்னுது; பதற வைக்குது. ‘இதெல்லாம் சரியில்லடா’ன்னு சொல்லக் கூடாதா?’ என்றேன்.

 ‘சொன்னா எங்கண்ணா கேக்கறான்? சொன்னா ‘வயசுப் பசங்க இப்டிதா இருப்பாங்க. இதையெல்லாம் பெரிய விஷயமா பேசாத’ன்றார், மாமா. அப்றம் நா இன்னா செய்றது?’ என்று,  ‘தான் மகனுக்கு செல்லம் கொடுக்க வில்லை’ என்பது போல கணவரின் மீது குற்றம் சுமத்தினாள் கௌரி. அன்று அதற்குமேல் தங்கையிடம் பாஸ்கர் குறித்து எதுவும் என்னால் பேச இயலவில்லை.

நான் பயந்தபடியே நடந்து விட்டது. ‘திமிரியில் கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்து வருகிறேன்.’ என்று தனது ரேஸ் பைக்கில் புறப்பட்டவன் கலவைக்குத் திரும்பும் வளைவில் எதிரில் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதித் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த அடி பட்டு அங்கேயே துடிதுடித்து இறந்து போனான். எதிரில் வந்த இளைஞனும் குற்றுயிரும் குலையுயிருமாக, ‘வேலூர் மருத்துவ மனையில் காப்பாற்றி விடலாம்’ என்னும் நம்பிக்கையுடன்  கொண்டு சென்றவர்களை ஏமாற்றி விட்டான். இளைஞர்கள் இருவரின் தாறுமாறான வேகமும் தலைக் கவசம் அணியாத அலட்சியமும் அவர்களின் விலை மதிப்பற்ற இன்னுயிரைப் பலி கொண்டு விட்டது.

அரசுப் பள்ளியில் அப்பாவுக்கு ஆசிரியர் உத்தியோகம். வசதியான, விசாலமான மாடி வீடு. ஆற்காடு நகருக்கு மேற்கில் வேலூர் சாலையை ஒட்டிய இறக்கத்தில் ஐந்து ஏக்கர் வளமான நஞ்சை. இப்படிக் குறையில்லாதவனாக இருந்த பாஸ்கர், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவனாகப் பெற்றவர்களையும், எங்களையும் பரிதவிக்க வைத்து விட்டுப் பதினெட்டு வயது முடிவதற்குள் அநியாயமாகப் போய் விட்டான்.

மகாபலிபுரம் கடலில் அஸ்தியைக் கரைக்கப் போகிறார்கள். அஸ்தியைக் கடலில் கரைத்து ஆகப் போவது என்ன?

மனம் பாஸ்கர் போய் விட்ட வெறுமையில் வெறுத்துப் போயிருந்தது எனக்கு. அதுவுமில்லாமல் மகாபலிபுரம் சென்றபோதெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களாகிப் போன விசித்திரமான நிகழ்வுகளால், ‘ஆமா, மகாபலிபுரம்.’ என்று யோசிக்கும் மனநிலைக்கு நான் ஆட்பட்டிருந்தேன்.

தங்கையின் கணவரைப் போலவே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நான் குடும்பத்துடன் மட்டுமென்றில்லாமல் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் உல்லாசப் பயணமாகப் பல முறை மகாபலிபுரம் சென்றிருக்கிறேன்.

கடலும், யானையும் யாருக்கும் எப்போதும் பார்க்கச் சலிக்காது என்பார்கள். கடலும், யானையும் மட்டுமல்ல. கடல் மல்லையின் காணற்கரிய அந்தக் கற்சிற்பங்களும் சந்தேகமில்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கச் சலிக்காதவை தான். மகாபலிபுரம் செல்லும் ஒவ்வொரு முறையும் கல்லிலே கலை நயம் மிளிரும் பாண்டவர் ரதங்களை, அந்தப் பாண்டவர் ரதங்களுக்குக் காவல் போல காலம் காலமாக ஒரே இடத்தில் நிலையாய் நின்று காணும் கண்களைக் கொள்ளை கொள்ளும் யானையை, சிங்கத்தை, நொடிக்கு நொடி முட்டி மோதிக் கரையைத் தொட்டு விடத் துடிக்கும் அலை அழகிகளிடமிருந்து தப்பித்து கடலோரக் காவியங்களாக நிற்கும் இரட்டைக் கோயில்களை, சக குரங்கின் தலையில் பேன் பார்க்கும் பெரிய குரங்கை, உயிர்ப்புடன் அடி மேல் அடி வைத்து நடக்கும் பாவனையில் காட்சி தரும் கம்பீர யானையை  மற்ற பல பகீரதன் தவக்கோலப் புடைப்புச் சிற்பங்களை, ‘அடடா! என்ன அழகு!’ என்று வாய் பிளக்க வைக்கும் மகிஷாசுர மர்த்தினியை, கலங்கரை விளக்கத்தை, ‘எப்படி இவ்வளவு பெரிய பாறை ஒரு சிறு துளியில் ஒட்டி நிற்கிறது?’ என யோசிக்க வைக்கும் வெண்ணைக்  கல் பாறையை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வியந்திருக்கிறேன். ‘கல்லிலே இந்த அரிய கலைப் பொக்கிஷங்களை உருவாக்கிய – கல்லில் கலை நயம் கண்ட அந்தக் கலைஞர்கள் எப்படியிருந்திருப்பார்கள்? என்ன வயதினராக இருந்திருப்பார்கள்? இந்தப் பணியில் கலைஞர்களை ஈடுபடுத்திய அரசன் எவ்வாறு இருந்திருப்பான்? கலைஞர்களின் பெயர்கள் என்னவாக இருந்திருக்கும்?’ என்றெல்லாம் பலவகையில் யோசித்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன்.

வேறு வகையில், மகாபலிபுரத்திற்குச் சென்ற ஒவ்வொரு பயணத்திலும் மறக்க முடியாததாக ஏதாவது ஒரு நிகழ்வு அங்கு என்னளவில் அரங்கேறிவிடும் அதிசயத்திற்காகவும் வியப்பும் பயமும் எனக்கு ஒருங்கே ஏற்படுகிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களுடன் அங்கே நான் பயணித்த போது முற்றிலும் யாரும் எதிர்பாராத ஒரு விபரீதம் எனக்கு நேர்ந்தது. பகீரதன் தவச் சிற்பங்களுக்குப் பக்கத்திலிருக்கும் குடைவரை மண்டபத்தை ஒட்டி மாணவ, மாணவியர் வரிசையிட்டு நடந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ ஓடி வந்த கொம்புகள் முறுக்கேறிய  கொழுத்ததொரு  ஆட்டுக் கிடா யாரும் கொஞ்சமும் எதிர் பாராத வகையில் என்னருகிலிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை மூர்க்கத்துடன் மோதிக் கீழே தள்ளியது. ஆட்டுக் கிடாயின் செயலில் அதிர்ந்து போன நான் அலறலுடன் மாணவனைத் தூக்கி விடக் கீழே குனிந்தேன். ஆனால் நினைத்துப் பார்க்கவும் நேரமில்லாத தாக்குதலாக மாணவனைத் தூக்கும் முயற்சியிலிருந்த என்மேல் மாணவனை மோதிப் பின்வாங்கி ஓடிய கிடா பசித்ததொரு புலி போலப் பாய்ந்து மோதிற்று. கிடா மோதிய வேகத்தில் நிலை தடுமாறி ஐந்தாறு அடிகள் தூரப் போய் விழுந்த எனது வலக்கை முட்டி ரத்தக் குழம்பாகச் சிராய்த்துப் போயிற்று. அணிந்திருந்த வெள்ளை முழுக்கைச் சட்டை முட்டி சிராய்த்த இடத்தில் அலங்கோலமாகக் கிழிந்துத் தொங்கிற்று. நிலைமை மேலும் மோசமாவதற்குள் சக ஆசிரியர்களும் மாணவர்களும் அருகிலிருந்த சில பயணிகளும் கிடாவை அதட்டி விரட்டியபடி ஓடோடி வந்து என்னையும் மாணவனையும் கிடாவிடமிருந்து காப்பாற்றித் தூக்கினர். கிடா மோதியதில் மாணவனுக்குப் பெரிதாகக் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எனக்கு கைக்காயம் ஆறிச் சரியாவதற்குச் சரியாக ஆறு மாதம் ஆகி விட்டது. பள்ளியிலும் ‘ஆட்டுக் கிடாவுடன் மோதிய அசகாய சூர ஆசிரியர்!’ என்னும் கேலிப் பட்டமும் எனக்கு உரிமையாகிப் போனது.

நினைத்துப் பார்க்கும் எந்த நேரத்திலும் எனது உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே நடுங்க வைப்பதாக இருக்கிறது அந்த பாழாய்ப்போன ஆட்டுக் கிடா நிகழ்வு.

இரண்டாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் சென்றிருந்த போது அங்கே எனக்கு வேறு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.

கலங்கரை விளக்கம் பார்த்துக் கீழிறங்கி வந்ததும் மனைவியும் பிள்ளைகளும் பாண்டவர் ரதங்கள் இருக்கும் சாலையில், ‘கடைகளில் சிலைகள் பார்த்து வருகிறோம்’ எனக் கூறிச் சென்றனர். நான் மூன்று சாலை முடுக்கில் இருக்கும் பெரிய நாவல் மரத்தடியில் ஓய்வாக நின்று கொண்டிருந்தேன்.  ‘கடந்த முறை நேர்ந்த கிடா விபரீதம் போல எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது’ என்னும் வேண்டுதலுடன் நான்கு திசைகளிலும் கண்களை ஓட்டி எச்சரிக்கையாயிருந்தேன். பங்குனி மாதத்தின் பன்னிரண்டு மணி வெய்யிலுக்கு நாவல் மரத்தடியில் இளநீர் வியாபாரம் காய் ஒன்று நாற்பது ரூபாய் என்னும் கணக்கில் ஜோராக நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு நடு வயதுப் பெண் கேஸ் சிலிண்டரை வைத்து வாழைக்காய் பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்தாள். சுற்றுப் புறத்தை வேடிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தவனை முப்பது வயது மதிக்கத்தக்க அழகானதொரு வெளிநாட்டு இளைஞன் நெருங்கினான். ‘எக்ஸ்யூஸ்மி, சார்!’ என்று என்னெதிரே ஐநூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டி, ‘ப்ளீஸ் சேஞ்ச்!’ என்றான்.

‘ரெண்டு பஜ்ஜி சாப்டுட்டு ஐநூறு ரூபாய நீட்றான். கடையையே நா லேட்டாத்தாம் போட்டன். வியாபாரமே இப்பத்தா ஆரம்பிக்குது. எடுத்ததுமே ஐநூறு ரூபாய நீட்டுனா சில்ரைக்கு எங்க போறது?’ என்று பொத்தாம் பொதுவாகப் பேசினாள் பஜ்ஜிக் கடைக்காரி. நான் அவளிடம், ‘இந்த ஆள் எவ்ளோமா கொடுக்கணும்?’ என்றேன். ‘ரெண்டு பஜ்ஜி. இருபது ரூபா சார்.’ என பதில் வந்தது பெண்ணிடமிருந்து. நான் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களைப் பெண்ணிடம் கொடுத்தேன்.  ‘தான் சாப்பிட்ட பஜ்ஜிக்கு இந்த ஆளைப் பணங் கொடுக்க வைத்து விட்டோமே!’ என்னும் குற்ற உணர்ச்சியில் எனக்கு நன்றி சொன்ன இளைஞன், என்னிடம் நெருங்கி நின்று  ‘செல்பி’யில் நிறத்திலும் வயதிலும் நேர் எதிராக இருக்கும் இரண்டு உருவங்களையும் ஒன்றாகப் பதிவு செய்து கொண்டான்.

விசாரிப்பில் இளைஞன், நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நார்வே நாட்டுக்காரன் என்பது தெரிந்தது. கூடவே, வயது முப்பது. திருமணம் ஆகி விட்டது. இந்தியாவுக்கு வருவது இது தான் முதல் முறை. மனைவி எட்டு மாத கர்ப்பமாக இருப்பதால் உடன் அழைத்து வரவில்லை என்கின்ற விவரங்களும் தெரிந்தன.

பருத்தி அரைக்கால் சட்டை, முண்டா பனியன் போன்ற வடிவில் முரட்டு வெள்ளை டி-ஷர்ட், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த ஷூக்கள், தோளைத் தொட முனையும் செம்பட்டைச் சிகையை மேலும் அழகாக்கும் முனைப்பிலான வட்ட வடிவ வெள்ளைத் தொப்பி அலங்காரத்துடன் மேனாட்டுக்காரர்களின் பொதுமையிலிருந்து வித்தியாசப்படும் கருத்த கண்களுடன் இளைஞன் ஆணழகனாக பளிங்குச் சிலை போல இருந்தான்.

‘மகாபலிபுரம் எப்படியிருக்கிறது?’ என்ற என் கேள்விக்கு இளைஞனிடமிருந்து கொச்சையான ஆங்கிலத்தில் விரிவாக பதில் வந்தது.

‘அருமையாக அழகாக இருக்கிறது.  ‘எப்படி இவ்வளவு அழகாக இவைகளைச் செய்ய முடிந்தது?’ என்று மிகவும் வியப்பாக இருக்கிறது. அஜந்தா, எல்லோராவைப் பார்த்தேன். அந்தச் சாயல் இங்கே இந்த மகாபலிபுரத்திலும் தெரிகிறது. காஞ்சிபுரம், சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை, இராமேஸ்வரம் கோயில்களெல்லாம், ‘இயந்திரங்கள் இல்லாத காலத்தில் இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று?’ என்னும் மிரட்சியை – பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இவை யாவும் மகத்தான மனித உழைப்பைப் பறைசாற்றுகின்றன.’

‘ஆமாம். மகத்தான மனித உழைப்பு இந்தக் கலைப்பொக்கிஷங்களின் ஒவ்வொரு அணுவிலும் ஒளிந்திருக்கிறது.’ என்ற எனது விளக்கத்துக்கு இசைவாகப் புன்னகைத்தான் இளைஞன். அவனிடத்தில் நான் குரலடக்கிச் சொன்னேன்.

‘வெளிநாட்டுப் பயணங்களில் இது போன்ற பஜ்ஜி எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிடாதீர்கள். மஞ்சட் காமாலை பாதிப்பு ஏற்படும்; வேறு பாதிப்புகளும் ஏற்படும்.’ எனது அன்பான எச்சரிக்கைக்கு இளைஞனின் பதிலாக அவனிடமிருந்து மெலிதாகப் புன்னகை மலர்ந்தது.

‘இப்படிப் பட்ட காணற்கரிய கலைப் பொக்கிஷங்களைக் கொண்ட தேசத்தாராகிய இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள்; கொடுத்து வைத்தவர்கள். ஒரு முறை எங்கள் நாட்டுக்கு வாருங்கள்!’ எனக்கூறித் தனது முகவரி அட்டையை என்னிடம் கொடுத்த இளைஞன் வணங்கி விடைபெற்று நகர்ந்தான்.

எனது மகாபலிபுரப் பயணப் பதிவேட்டில் ஆட்டுக்கிடா நிகழ்வுக்கு நேரெதிர் நிகழ்வு நாயகனாக அந்த நார்வே நாட்டு இளைஞன் பதிவாகி நெஞ்சில் நிறைந்து நிற்கின்றான்.

நாங்கள் கணவனும், மனைவியும் ‘வேன்’ எப்பொழுது வருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.  ‘இண்டியன் பங்க்ச்சுவாலிட்டி’யாக தங்கை சொன்ன உறுதிக்கு ‘வேன்’ முக்கால் மணி நேரம் தாமதமாக வந்தது.

                                                  ***

ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக இருபத்தைந்து பேர்களை அடக்கிக் கொண்டு பயணித்த  ‘வேன்’ மகாபலிபுரம் வந்து சேர்ந்தது. எங்கு பார்த்தாலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கான செவ்வாடைப் பக்தர்களின் கூட்டம் நிறைந்து தெரிந்தது.  வர விருப்பம் இல்லையென்ற நிலையிலும் துக்கக் காரியமாக இருந்த காரணத்தில் தங்கை, தங்கையின் கணவருக்காக வர வேண்டியதாகி விட்டது. ‘வந்த இடத்தில் இந்த முறை இங்கே என்ன அனுபவம் ஏற்படப் போகிறதோ?’ என்னும் யோசனைக் கிளர்ந்தது.

சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் மகாபலிபுரத்தில் சந்தித்துக் கொண்டதன் பின்னணியில் கடற்கரைக் கோயில், ஐவர் ரதங்கள் பார்ப்பதற்குத் தலா நாற்பது ரூபாய் கட்டணம் விதித்திருப்பது அறிந்து திகைப்படைந்தேன்.

 ‘வேலியாகியிருக்கும் இரும்புக் கம்பிகளிலிருந்து விலகி எத்தனையோ பேர் பாண்டவர் ரதங்களை, யானையை, சிங்கத்தைத் தொட்டுப் பார்க்காதவர்களாக-தூரப் பார்வையாளர்களாகவே போய் விடுவார்களே!’ என்று யோசித்தேன்.

யாரை குறை சொல்வது?

அனைவரும் பாஸ்கரின் அஸ்தியுடன் கடற்கரைக் கோயிலின் அருகில் கரையில் ஒன்றாகக் கூடி நின்றோம். கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர், “இங்க கூட்டமா இருக்கு. அஸ்திய இங்க விட வேணா. கூட்டமில்லாத இடத்துக்கு அப்டி போவோம்.” என்று நேராகக் கையை நீட்டினார். பெரியவர் சொல்வது சரியெனப் பட்டது அனைவருக்கும். அனைவரும் வேறிடம் நோக்கி நகர்ந்தோம். கூட்டம் குறைவாக இருந்த ஓரிடத்தில் கால்களில் ஒட்டியிருந்த மணலை உதறிக்கொண்டு நின்றோம்.

கௌரி, மகன் போன துயரத்தின் நினைவில் துவண்டு போய் நிற்க அவள் கணவரே எல்லாக் காரியங்களையும் கையிலெடுக்க வேண்டியதாயிற்று. அலைகள் சாடி வரும் திசைக்கெதிராக அஸ்திக் கலயத்தை வைத்து வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் சேர்ந்ததாக மணலில் திருநீற்றையும், குங்குமத்தையும் கொட்டியவர் கற்பூரம் கொளுத்த முனைந்த நேரத்தில் ஒரு நடுவயதுக்காரர் சொன்னார்.

“இந்த மாதிரி சடங்க எல்லாம் ஐயர வச்சி செய்யணும். செஞ்சா நல்லது.” என்றார். எல்லோரும் அந்த நடு வயதுக்காரர் சொல்வதை ஏற்றுக் கொள்பவர்கள் போல அமைதியாய் நின்றனர். ஆனால், என்னால் எல்லோரையும் போல பேசாமலிருக்க முடியவில்லை. ஐயரைப் பரிந்துரைத்த அந்த நடு வயதுக்காரர் மீது எரிச்சலுடன் கூடியதாகக் கோபம் ஏற்பட்டது எனக்கு.

“அஸ்தியைக் கரைக்கறதுக்கு யாராவது ஐயர அழைச்சி வருவாங்களா?” என்ற என்னை அந்த நடு வயது ஆசாமி கூர்ந்த பார்வையுடன் முறைத்தார்.

“நீங்க என்ன பெரியார் கட்சியா?” என்றார்.

“அஸ்தி கலைக்க ஐயர் வேணான்றவன் பெரியார் கட்சிக்காரனாத்தா இருக்கணுமா?”

“அஸ்தி புனிதமானதுங்க. அதனாலதா நேரு தன்னோட அஸ்திய கங்கையிலயும் இந்தியா முழுக்கவும் தெளிக்கணும்னு சொன்னார். புனிதம்ன்றதாலதா காந்தியோட அஸ்திய கன்னியாகுமரியில காந்தி மண்டபத்துல வச்சிருக்கறோம்.”

“அப்டி, அஸ்தி புனிதமானதுன்னா செத்துப்போறவங்க ஒவ்வொருத்தர் அஸ்தியையும் காந்தி அஸ்திய பாதுகாக்கற மாதிரி அவங்கவங்க வீட்லயாவது பாதுகாக்கணுந்தானே? அதுவுமில்லாம நாஸ்திகர் நேரு தன்னோட அஸ்தி சாம்பல நாடுமுழுக்கத் தெளிக்கச் சொன்னதுக்குக் காரணம் அவரோட நாட்டுப் பற்று. இதுல புதுசா நீங்க அஸ்தி கரைக்க ஐயர அழைச்சாந்திருக்கலான்றதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்களேன்.” என்ற என்னை கௌரியும் என் மனைவியும் ஒன்றாக அடக்கினர்.  

அஸ்தி கரைக்க அதிக கூட்டமில்லாத இடத்தைப் பரிந்துரைத்த முதியவர் நாங்கள் இருவர் மோதி முடிவதற்காகக் காத்திருந்தவர் போலப் பொறுமையாக வாய்திறந்தார்.

“அஸ்திய கரைக்கறதுக்கு பொதுவா யாரும் ஐயர கூப்ட மாட்டாங்க. ஐயர அழைச்சி வரலாம் – வேணான்றது அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம்.”

முதியவரைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது எனக்கு. கையெடுத்தும் கும்பிட்டேன். எனது வணக்கத்தை ஏற்றுக் கொள்பவராக இளஞ்சிரிப்பு சிரித்தார் முதியவர்.

கற்பூரக் கட்டி கனன்று எரிந்து கொண்டிருக்க பாஸ்கரனின் அஸ்திக் கலயத்தை கௌரியும் அவள் கணவரும் நீர் நிறைந்த கண்களுடன் தெறித்தேறும் கடலலைப் பரப்பில் மிதக்க விட்டுக் கைகூப்பினர்.

நான் என் மனைவியிடம் சொன்னேன்.   

“நான் செத்ததும் இந்த மாதிரி ஐயரு, நொய்யருன்னு எந்தத் தொந்தரவும் வேணா. சடங்கு, சம்பிரதாயம், கருமாதி, காரியங்க எதுவும் செய்ய வேணா. எரிக்க, பொதைக்கன்னு எடுத்தும்  போக வேணா. பொணத்த எதுனா ஒரு ஆஸ்பிட்டலுக்கு ஆய்வுக்குக் குடுத்துடு!”

புதியதொரு ஜந்துவைப் பார்ப்பது போல் என்னை மிரட்சியுடன் பார்த்த என் மனைவி, “இதுக்கு முன்ன வந்த மகாபலிபுரம் பயணம்லா உங்களுக்குதா வித்தியாசமா இருந்தது. ஆனா, இந்தப்  பயணம் எனக்கு வித்தியாசமானதா ஆயிடுச்சி!” எனச் சொல்லிச் சிரித்தாள்.

“இந்தப் பயணம் உனக்கெந்த வகைல வித்தியாசமாயிடுச்சி?” என்னும் கேள்வியுடன் மனைவியைப் பார்த்தேன்.

“புறப்படும் போது நல்லாருந்த மனுஷன் வந்த இடத்துல திடீர்னு இப்டிப் பைத்தியமாயி நிக்கறது என்னளவுல வித்தியாசந்தான?”

‘ஆயிரம், லட்சம் அல்லது பல லட்சம் சராசரி மனிதர்களில் வித்தியாசப்பட்டுக் கோடியில் ஒருவனாக யோசிப்பவன் பைத்தியமா? என்ன சொல்கிறாள் இவள்?’

மனம் பேதலித்துப் போனது எனக்கு.

                                   ***

Series Navigationதேவையற்றவர்கள் நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *