தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 1 of 8 in the series 17 மே 2020

                                        

              ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்

                  காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81

[ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]   

 அலைகள் பெரு முழக்கமிடும் கடலில் தோன்றிய ஊழித்தீயை விடக் கொடியனவாம் அத் தேவமாதர்களின் கடைக்கண் பார்வை;

====================================================================================

                   புங்கப் படைவிழிக் கடையிலன்று இவர்புரூஉப்

                  பங்கத்து அகிலமும் படுகொலைப் படுவதே.

[புங்கம்=அம்பு; விழிக்கடை=கடைக்கண் பார்வை; புரூஉ=புருவம்; பங்கம்=துன்பம்; அகிலம்=ஆடவர் உலகம்;

      கொல்லும் ஆயுதம் போல இருக்கும் அப்பெண்களின் கடைக் கண் பார்வையால் அல்லாமல், இவ்வுலகின் ஆடவர்கள் எல்லரும் துன்பத்திற்கு ஆளாவது அவர்களின் வளைந்த நெற்றிப் புருவத்தாலேயே ஆகும்.

=====================================================================================

                  நச்சுக்கண் முலைமேல் இடுதுநிற்கும், நகுபொற்

                  கச்சுக்கும் அடையப் புடவிகை அடைகொலோ!  [83]

நச்சு=நஞ்சு; நகுபொற்கச்சு=நல்ல அழகிய மார்பில் அணிந்துள்ள கச்சு; புடவிகை=புடவை; அடைகொலோ=அடைக்கலமோ]

      அவர்களுடைய மார்பகங்களின் கண்கள் நஞ்சு போல உயிரைக் கொல்லக்கூடியவை; அவை மறையுமாறு கட்டப்பட்டுள்ள அழகிய மார்புக் கச்சுக்கும், உடுத்தி உள்ள புடவைக்கும் இவ்வுலகம் அடைக்கலமாயிருக்கிறது போலும்.

=====================================================================================

                   மின்போல்வர் அவரே; அவர் மருங்குல் இனிவேறு

                  என்போல்வது என் எண்ணுவதென்? இல்லை இணையே   [84]

[மருங்குல்=இடை; இணை=ஒப்பு;]

      அந்தப் பெண்களே மின்னல் போல இருக்கின்றனர். எனவே அவர்களின் இடைக்கு எதை உவமையாகச் சொல்வது? இணையாகச் சொல்ல எதுவுமே இல்லை.

===================================================================================

                   நின்றகன்ற இடை நேடிவரை நேமியளவும்

                  சென்றகன்றன நிதம்பம் நடுஇல்லை திசையே    [85]

[நேடி=தேடி; நேமி=சக்கரம்; நிதம்பம்=மறைவிடம்;

      அந்தப் பெண்களின் இடை கண்களுக்குத் தெரிவதில்லை. அவை சக்கரவாளக் கிரி என்னும் மலை வரை வளர்ந்து மேலே வளர வழி இல்லாததால் அவர்களின் அகன்ற மறைவிடத்தோடு நின்றனவாம்.

=====================================================================================

                   அங்ங்கண் முளரிமலர் அன்மையது திங்கள் அறியத்

                  திங்ங்கள் அன்மை அரவு அறியஇலகும் திலகமே.       [86]

[முளரி=தாமரை; திங்கள்=சந்திரன்; அன்மை=அதுவாக; அரவு=பாம்பு [ராகு]; இலகு=விளங்கும்; திலகம்=பொட்டு]

            இப்பாடலில் ‘ங்’ என்பது ஒற்றளபெடையாகும். அப்பெண்கள் ஏன் முகத்தில் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா? முகத்தைத் தாமரை என்றெண்ணிச் சந்திரன் வருந்தாமல் இருக்கவும், மேலும் முகத்தை முழுநிலவு என்றெண்ணி இராகு என்னும் பாம்பு  பிடிக்காமல் இருப்பதற்காகவும்தான்.

=====================================================================================

      அடைய மோகினிகள் ஆயினர்கொல் அவ்வுரு நினைந்து

      உடைய மோகினியை ஒக்கஉளர் யோகினிகளே.               [87]       

[மோகினி=மயக்கும் பெண்; ஒக்க=போல; யோகினி=துர்க்கைக்கு ஏவல் செய்யும் பெண்களுக்குத் தலைமையானவர்]

      எல்லாரையும் மயக்கி உயிரைக் கவரும் மோகினிகளானத் தேவர் உலகப் பெண்கள்  யோகினிகளாக மாறிவிட்டனரா? இல்லை. அவர்கள் துர்க்கையின் அருளால் மோகினி ஆனவர்கள். எனவே அவர்கள் யோகினி போலவே இருக்கிறார்கள்.

=====================================================================================                

             சூழும் மின்னொளி நிவந்து சுரநாடியர் கொடிகளும்      

             தாழும் மின்மினிகளாக உளர் சர்மினிகளே.             [88]

[நிவந்து=மேலெழுந்து; சுரநாடியர்=தேவருலகப் பெண்கள்; தாழும்=ஒளி குறைந்து; சர்மினியர்=சருமம் எனும் தோலாலான ஆடை போர்த்தியவர்கள்]

      தோலாடை போர்த்திக் கொண்டிருக்கும் தேவியின் திருக்கோயில் பணிப்பெண்களின் முன்னே தேவமாதர்கள் எல்லாம் சூரியன் முன் ஒளி குறைந்து காணப்படும் மின்மினிகள் போன்றவர்களாவர்.

=====================================================================================

                   தரவரும் புடவிகுறைய உளர் சாகினிகளே

                  பரவருந் தகையநாயகி பதாகினிகளே              [89]

[தரவரும்=பிரமன் அளித்த; புடவி=பூமி; சாகினி=ஏவலர்; நாயகி=துர்க்கை; பதாகினி=பதாகை கொடி கொண்டு செல்லும் டிப்படையினர்]

      தேவி துர்க்கையின் கொடி பிடித்துக் கொண்டு வரும் கொடிப்படையினர் தொகையானது பிரம்மன் படைத்துள்ள இப்பூமி சிறியதாகி விட்டதோ என எண்ணும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

======================================================================================                       

                   நகுதரும் கடவுள் இத்தகைய மாதர் நகைபோய்

                  மொகுமொகு என்று அகிலலோகமும் முழங்குவனவே.   [90]

[நகுதரும்=சிரிப்பு]

      கடவுளாகிய தேவி துர்க்கையின் திருக்கோயிலில் எங்கும் நிறைந்திருக்கின்ற மோகினிகள், யோகினிகள், சாகினிகள் என்னும் எல்லாப் பெண்களும் சிரிக்கின்ற சிரிப்பானது எல்லா உலகங்களிலும் சென்று முழக்கமிடும்.

Series Navigationகொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *