எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

author
0 minutes, 54 seconds Read
This entry is part 11 of 12 in the series 24 மே 2020

 

எம். வி வெங்கட்ராம் (பி.1920 – . 2000)

‘இலக்கிய வட்டம்’ என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. இரண்டு பத்திரிகைகள் நடத்தி சேதப்பட்டவர் அவர். தேனீ மாத ஏடு நடத்தி எனக்கு உண்டான நஷ்டத்தின் அளவு அவருக்குத் தெரியும். படைப்பாளிகளின் கலை ஆர்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு எவ்வளவு கொடிய சோதனைக்குக் காரணம் ஆகிறது என்று எனக்கு மட்டுமல்ல,அவருக்கும் தெரியும். இலக்கிய வட்டத்தால் உடனடியாகப் பாதிக்கப்படப் போகிறவர்கள்  ஸ்ரீமதி க.நா.சு.வும், மகளும்தான். ஆனால் அவரோ உற்சாகமாகப் பேசினார்: “எம்.வி.வி. முதல் இதழிலிருந்தே நீர் எழுத வேண்டும்.”

எழுதுவதைக் காசாக்க வேண்டிய இக்கட்டில் இருந்தவன். நான் .என்இலக்கியப் படைப்புகளை உடனடியாக வெளியிட்டு உரிய சன்மானம் கொடுக்க சுதேசமித்திரன் இருந்தது. ஆனால் அந்த வருவாய்  கொண்டு ஒரு பெரிய குடும்பத்தைக் காக்க முடியாது. சமையல் குறிப்புகள் முதல் என்சைக்ளோபீடியா வரை  – பதிப்பகத்தார் வேண்டுவதை எல்லாம் என் பேனா நாளுக்கு 12 மணி நேரம் உழைத்து உற்பத்தி செய்து வந்தது. இலக்கிய வட்டத்தில் இரண்டு கட்டுரைகளும், ஒரு கவிதையும் எழுதியதாய்   ஞாபகம்.

ஒரு முறை அவர் வீட்டுக்குப் போன போது ‘ஓய், இலக்கிய வட்டம் சர்குலேஷன் 7000 தாண்டி விட்டது. இனி சந்தா வாங்க மாட்டோம் என்று அறிவிக்கப் போகிறேன்’ என்றார்.

அந்த சுகமான கற்பனையின் அடிச்சுவட்டினில் நானும் நடந்தேன்: ‘க.நா.சு., 5000 பிரதிகள் அச்சானாலே உங்களுக்கு ஏக நஷ்டம் ஆகும். 7000 என்றால் தாக்குப் பிடிக்க முடியாது; உடனே அறிக்கை விடுங்கள்’ என்றேன்.

சில நாளுக்குப் பிறகு மறுபடியும் அவரைப் பார்க்கப்போனேன்.  க.நா.சு  நாற்காலிகளுக்கு அப்பால் தரையில் அமர்ந்து ஒரு சிறு கட்டு, 200, 300 இதழ்கள் இருக்கலாம் – இலக்கிய வட்டம் இதழ்களை ‘ஸ்டேபிள்’ பண்ணிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கடிதக் கட்டு மேல் ஒரு டவல் போட்டு விட்டு நாற்காலிக்கு வந்தார்.

‘பிரஸ்காரனோடு பெரிய தொல்லையாய் போச்சுய்யா – ‘ என்றார்.

‘பில் பாக்கியா சார்?’ என்று பரிவோடு விசாரித்தேன்.

‘பாக்கியா? ஃபுல் பேமென்ட்டும் அட்வான்சா  வாங்கிக் கொண்டுதான் அச்சடிப்பான். கொஞ்சம் பாக்கி என்றாலும் பேப்பரைத் தொடமாட்டான். 7000 காபியும் பிரிண்ட் ஆகி நாலு நாள் ஆகிறது. ‘ஸ்டேபிள்’ பண்ணித் தராமல் நடையாய் நடக்க வைக்கிறான் 200 காபி கொடு. மெட்றாஸிலே மட்டும் டிஸ்ட்ரிபியூட் செய்கிறேன் என்று வாங்கி வந்தேன்’ என்று அவர் சமாளித்ததை மிகவும் ரசித்தேன். உள்ளொன்று இருக்க, புறமொன்று பேசும் இலக்கியவாதியின் அழகான பாசாங்கு ! அது ஒரு மகாவித்தை ! அந்த வித்தையில்  க.நா.சு மட்டும் அல்ல, நானும் வல்லவனே !

                                                                 *****

பிறகு ஒரு நாள் என் மயிலை முகவரிக்கு இலக்கிய வட்டம் இதழ் ஒன்று வந்தது.  க.நா.சுவின் விமரிசனப் பாணி  பிடிக்காவிட்டாலும் அவருடைய விமரிசனங்களை – என் பார்வைக்கு வருவதை – நான் தவறாமல் படிப்பேன். அவருடைய நடையும் சொல்லழகும் எனக்கு சுகமானவை. வீடு தேடி வந்த இலக்கிய வட்டத்தைப் புரட்டிய போது ‘நித்ய கன்னி’ என்ற தலைப்பு கண்டு எனக்கு வியப்பு உண்டாயிற்று.இந்த என் நாவலின் நடையழகு, சீரான பாத்திர படைப்பு முதலியவை பற்றி ஏராளமாகப் பாராட்டியிருந்தார். என்ன எழுதியிருந்தார் என்று எனக்கு நினைவில்லை. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், ‘சந்திரோதயம்’ காலத்தில் ‘மேனகையை’ நிராகரித்தவர். மித்திரனில் ஓராண்டுக்கு முன் என் மகாபாரதக் கதைகளை ‘பழைய கதை களின் புதுமெருகுதானே’ என்று கேலி செய்தவர். திடீரென்று நித்ய கன்னியின் இலக்கியத் தரத்தை எப்படி உணர முடிந்தது?  க.நா.சு  என்னைப் பாராட்டி எழுதிய முதல் கட்டுரை இதுதான்; ஒரு பக்கமோ.ஒன்றரைப் பக்கமோ இருந்தது. முதற்பக்கத்தில் ஓரமாகப் பாத்தி கட்டி என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார்.’ இந்த இலக்கிய ஆசிரியர் மணிக்கொடிக்காரர்’ என்று 10, 12 வரிகள் எழுதி ‘இவர் ஒரு சௌராஷ்டிரர்’ என்று முடித்திருந்தார். இந்த முடிப்பு எனக்கு ஆத்திரமூட்டியது.அவரைப் பார்த்து சுட்டுக் தள்ளி விடுவது என்று தீர்மானித்தேன்.

ஆனால் ஒரு வாரம் பத்து நாள் வரை நான் அவரைச் சந்திக்க முடியவில்லை. அப்புறம் ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது  ‘உம்ம நித்ய கன்னியை பத்தாவது முறையாக இப்போதுதான் படித்து முடித்தேன்’ என்று என்னை ஆரவாரமாக  வரவேற்றார்.

அவரைச் சுட விரும்பிய துப்பாக்கி இந்த முகஸ்துதியைக் கேட்டதும் என் பையில் விழுந்து விட்டது.  

(எம்.வி.வெங்கட்ராமின் “என் இலக்கிய  நண்பர்கள்” நூலிலிருந்து)  

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய “என் இலக்கிய நண்பர்கள்” புத்தகத்தில் அவர் க.நா.சு.வுடன் பழகிய போது நடந்த சில சம்பவங்களை எழுதியிருக்கிறார்.அதில் ஒரு பகுதி. அவரது நூறாவது ஆண்டு நிறைவு நடைபெறும் (இந்த வருடம் இந்த மாதம்) இத்தருணத்தில்.

Series Navigationமொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *