நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை

author
2
0 minutes, 26 seconds Read
This entry is part 4 of 9 in the series 31 மே 2020

கோ. மன்றவாணன்

      ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் உண்டு. அவர்களே கால தேவனை மதிப்பவர்கள். “கூட்டம் வந்ததும் தொடங்கி விடலாம்” என்று அமைப்பாளர்களில் ஒருவர் சொல்வார். காத்திருப்போம் காத்திருப்போம் காலம் கரைந்துகொண்டு இருக்கும். ஆறரைக்குத் தொடங்கிவிடலாம் என்பார்கள். அந்த ஆறரையை அவர்கள் மறந்து விடுவார்களோ என்னவோ…?  மணி ஏழு நோக்கி ஏறுநடை போட்டபடி இருக்கும். ஓரளவு கூட்டம் வந்திருக்கும். அதற்குமேல் வருவோரைப் பற்றி ஏன் அமைப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்க வேண்டும்? சரியான நேரத்தில் வந்தவர்களை மதிப்பதில்லை. வராதவர்களை மதித்துக் காத்துக் கிடக்கிறார்கள். இது சரிதானா?

      ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் கால தாமதமாகவே தொடங்குகின்றன. இதில் யாருக்கும் வியப்பு இல்லை. இணையவழிக் கூட்டத்துக்கும் அந்த நிலைமை நேரலாமா?

      சில நாட்களுக்கு முன் இணையவழிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது. காலை 11 மணிக்குத் தொடங்குவதாக அழைப்போவியம் அனுப்பி இருந்தார்கள். 11.25 வரை நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. பலர் இணைப்பில் இருந்தார்கள். தங்களுக்கு வசதிபட்ட நேரத்தில் ஒவ்வொரு கவிஞராக இணைந்தார்கள். அப்போதும் நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் இன்னும் இணைப்பில் வரவில்லையாம். ஒருங்கிணைப்பாளர் அவருக்கு அலைபேசினார். இதோ வருகிறேன் என்றார். அவர் வந்த பிறகே தொடங்கினார்கள். முதல் கவிஞர் கவி படித்தார். இரண்டாம் கவிஞரை அழைத்த போது, அந்தத் தலைவர் குறுக்கிட்டார். காலம் குறைவாக உள்ளதால் இனிவரும் கவிஞர்கள் தங்கள் கவிதையில் பத்து வரிகளை மட்டும் படிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். கவிஞர்கள் தடுமாறினார்கள். சரியான நேரத்தில் தொடங்கி இருந்தால் இந்தச் சங்கடம் நேராது இருந்திருக்குமே.

      சுவைஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, அழைப்பிதழில் இடம்பெற்றவர்கள் முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்பது அவை நாகரிகம்.

      சிறப்பு விருந்தினர் வந்த பிறகுதான் நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்று சிலர் குறியாக இருப்பார்கள். உள்ளூர் எம்எல்ஏ வந்த பிறகுதான் விழாவைத் தொடங்க வேண்டும் என்பார்கள். அப்படியானால் அது, உரிய நேரத்தில் வந்து காத்திருப்பவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை அன்றி வேறென்ன?

      பட்டிமன்ற நடுவர், கவியரங்கத் தலைவர், கருத்தரங்கத் தலைவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்றோர் வரத் தாமதம் ஆவதாலும் நிகழ்ச்சியைத் தொடங்க முடியாமல் தவிக்கின்ற அமைப்பாளர்களைப் பார்த்திருக்கிறோம். ஒருவர் வரத் தாமதம் ஆனால் வேறு ஒருவரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி விடுகிற துணிவுடையோரும் உண்டு.

      தாமதம் என்பது நேரத்தை வீணடிப்பது. அதுவும் தங்கள் தாமதத்தால் பிறரின் நேரத்தை வீணடிப்பவர்களை என்ன செய்வது? குழுவாகச் சுற்றுலா சென்றவர்களுக்குத் தெரியும். ஒருவர் வருகைக்காக மற்ற அனைவரும் காத்தழியும் அவலம்.

      அனைவருக்கும் நிகழ்ச்சி பயன் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சற்றுக் காலம் தாழ்த்துகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். முக்கிய விருந்தினர் வந்த பிறகு தொடங்குவதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை என்று சிலர் கூறலாம். ஏதோ பத்துப் பேரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்குவது சுவை சேர்க்காது என்பாரும் உளர்.

      தாமதமாக நிகழ்ச்சியைத் தொடங்குவதால் மொத்த நிகழ்ச்சி நிரலிலும் அவசரகதி ஏற்படுமே தவிர, சுவை பயக்காது. முன்னதாகவே வந்துவிட்ட தேநீர்க் குடுவையும் சில்லிட்டுப் போயவிடும்.

      இலக்கிய உலகில் இன்னொரு விசித்திரம் நடக்கிறது….

      ஒரே நிகழ்ச்சியை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, அறுபெரும் விழா என்று சிலர் எண்வித்தை செய்து நடத்துகிறார்கள். அழைப்பிதழ்களில் உள்ள பெயர்களை அடைமொழி சேர்த்துப் படித்தாலே போதும். நிகழ்ச்சி நேரம் முடிந்துவிடும். அவர்களுக்கு நேரத்தைப் பற்றிய கவலை அறவே இல்லை.

      சொன்ன நேரத்தில் எந்தக் கூட்டம் தொடங்குகிறது? ஆறு மணி என்று போட்டிருந்தால் ஏழு மணிக்குப் போனால் போதும் என்ற மனப்பான்மை வளர்ந்ததற்கு யார் காரணம்?

      காரணமே, உரிய நேரத்தில் வராதவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தாம்.

      இதுபோன்ற கூட்டங்கள் காலம் கடந்து தொடங்குவது வழக்கமாகி விட்டது. அதனால்தான், சரியான நேரத்துக்கு வர நினைப்போரும் தாமதமாக வருகிறார்கள்.

      கடலூரில் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி என்றொரு கவிஞர் இருந்தார். 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மூன்று முறை தமிழ்நாட்டு அரசின் பரிசுகள் பெற்றவர். ஒரு முறை புதுச்சேரி அரசின் பரிசு பெற்றவர். இவர் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதைவிட பிறரை முன்னிலைப் படுத்துவதே தன் நோக்கமாகக் கொண்டவர். கவிஞர்களில் / பேச்சாளர்களில் பெரும்பாலோர், யாரோ மேடை போட்டுக் கொடுத்தால் ஆவேசமாகக் கவிபாடி / உரையாடி ஆகாயத் தேரில் பறப்பார்கள். யாரோ சில கவிஞர்கள்தாம் / பேச்சாளர்கள்தாம் மற்றவர்களுக்குப் பொதுநோக்கோடு மேடை அமைத்துத்  தருகிறார்கள். மேடையில் பேசி மின்னுவோரைவிட, நிகழ்ச்சியை அமைப்பவர்களே தமிழ் வளர்ச்சிப் பணிகளில் முதன்மையானவர்கள்.

      க.பொ.இளம்வழுதி நிறைய இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியவர். அவர் நடத்தும் கூட்டங்களில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கும் நேரத்தையும் முடிக்கும் நேரத்தையும் யாருக்காவும் எதற்காகவும் விட்டுத் தரமாட்டார். அழைப்பிதழில் மாலை 6.31 என்று அச்சிட்டு இருப்பார். அரங்கில் யார் வந்தாலும் வராவிட்டாலும் 6.31க்கு மொழிவாழ்த்து ஒலிக்கும். முடியும் நேரம் 8.15 என்றிருக்கும். அதே நேரத்தில் நிகழ்ச்சியை நிறைவு செய்துவிடுவார். ஒருமுறை நன்றியுரை ஆற்ற நேரம் ஒதுக்க முடியாமல் மணி 8.14ஐ நெருங்கிய போது அவர் மேடையில் தோன்றி “நன்றி“ என்ற ஒற்றைச் சொல்லோடு நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

      இதனால் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி கூட்டம் என்றாலே உரிய நேரத்தில் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் ஏற்பட்டுவிட்டது. 08.15க்கு கூட்டம் முடிந்துவிடும் என்ற உறுதி நிலைநாட்டப்பட்டதால் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தை மனைவியிடம் துல்லியமாகச் சொல்ல முடிந்தது. எப்பொழுது வருவார் என்று அவரும் காத்திருக்க வேண்டியது இல்லையே!

Series Navigationஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  Valavaduraiyan says:

  இன்றைய இலக்கியக்கூட்டங்களின் தொடக்கம் பற்றிய அருமையான படப்பிடிப்பு. உண்மையில் வரும் சுவைஞர்களைப்பற்றி அமைப்பாளர்கள் நினைப்பதே இல்லை. சுவைஞர் ஒருவர் தம் பிற வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து இலக்கிய தாகம் கொண்டு வருகிறார். அவரை நோகடிக்கலாமா? பிறகு இலக்கியக் கூட்டங்களுக்கு யாரும் வருவதே இல்லை என்று புலம்புவதில் என்ன பயன்?

 2. Avatar
  சு.கருணாநிதி says:

  நான் நினைத்துக்கொண்டிருந்தது அப்படியே படமாகியிருக்கிறது.மிக நல்ல பதிவுஎனக்குப்பிடித்திருக்கிறது.
  “நம்மாக்களின்ர நிகழ்ச்சிதான தாமதமாகித்தொடங்கும் சுணங்கிப்போகலாம்தான…”என்று பாரவையாளர்களும் இப்படியே தாமதமானால்… கிறீன்விச் அச்சைகூட இடம்மாற்றி வைச்சிருவாங்கள் நம்ம தமிழுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *