மனமென்னும் பேய் (பேய்ச்சி நாவலை முன்வைத்து)

author
2
0 minutes, 58 seconds Read
This entry is part 7 of 7 in the series 14 ஜூன் 2020

                       எஸ்.ஜெயஸ்ரீ

       பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி.

பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி.  பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி.  அது மட்டும் புது மொழியிலும் மாறாதது;  அதுவேதான்.  பெண்ணின் மன வேதனை, அதில் அவள் நெஞ்சுக்குள் கனன்றிக் குமுறும் கனல் அது தன் கொழுந்து விட்டெறியும் தீ நாக்குகள் அடங்கும் வரை ஓயாது.  அவளுடைய இந்தக் குமுறல் அவளுக்கு மனதாலும், உடலாலும் தீங்கிழைப்பவர்களை ஜென்ம ஜென்மமாகத் தொடர்ந்து அழிக்கிறது. இதை மண்ணோடு மறைந்த அந்தப் பெண்ணும் அறிவதில்லை. அழிக்கப்படுபவனுக்கும் என்ன தவறு தான் செய்தோம் எனத் தெரிவதில்லை. தன் வாழ்க்கையில் நடைபெறும் சுகக் கேடுகளை வைத்து, சரிவுகளை வைத்து, நிம்மதியிழப்புகளை வைத்துப் பின்னர் அறிந்து கொள்கிறான். கர்ம வினைகள் எனும் ஞானம் பெறுகிறான். ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிந்து போகும் தருணத்திலோ, மேலும் மேலும் துன்பங்களில் உழலும்போதோ மட்டுமே அவனுக்குப் புரிகிறது. இதை ஆரம்பத்திலேயே புரிந்து கொள்பவன் இந்த ஜென்மத்திலாவது நல்வினைகளைப் புரிவோம் என்று தெளிகிறான்.

           நாட்டார்  கதைகள்  பலவற்றிலும்  சொல்லப்படும்  ஒரே விஷயம் பெண்களைத் தவறாகப் பார்க்காதே; பெண்களுக்குத் துரோகம் செய்யாதே என்பதுதான். இன்றும் கூட வெறும் நடுகல்லாகவும், சிறிய கோவிலாகவும் இருக்கின்ற வழிபாட்டுத்தலங்களில், வருடந்தோறும் கொடையும், திருவிழாவும் நடைபெறுகின்றன. கிராமத்துத் தேவதைகளாக, கண்கண்ட தெய்வங்களாக வணங்கப் படுகின்றனர். இந்தத் தல வரலாறுகளையோ, இதன் கதைகளையோ ஆராயும்போது, அந்தக் கிராமத்துத் தேவதை என்பவள் யாராலோ, எதற்காகவோ வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக இருப்பாள். அவளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவோ, அவளுக்குச் செய்யப்பட்ட வஞ்சனைக்குப் பரிகாரமாகவோ அவளுக்குப் படையலும், விழாவும் எல்லாம்.  இது ஒரு விதத்தில் அவளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தில்,  துடிக்கும் குற்றவுணர்வை ஈடுகட்டும் முயற்சிதான். பெரும்பாலும் பெண் தெய்வங்களே காக்கும் தேவதைகளாக வணங்கப்படுகிறார்கள். ஆதிநாள் தொட்டு, அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்லவே?

     இப்படியான எண்ணங்களின் நீட்சியாக மலர்ந்திருப்பதுதான், சமீபத்தில் வெளிவந்துள்ள  ம.நவீன்  அவர்களின் முதல் நாவல் “பேய்ச்சி”.  நாவல் வாசிக்கும்போது துளிக்கூட சலிப்பு தட்டாமல் ஒரு த்ரில்லர் படிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கிறது. ஆனால், சாதாரண ஒரு நாவல் போலவும் இருக்கிறது. இந்தக் கலவைதான் இன்னும் சுவாரசியமே. கதைக்களம் பினாங்கு, பட்டர்வொர்த், மலாயா என  இருக்கிறது. ஆனால், அப்படி நில வேறுபாடு தோன்றாமல், நம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் நடைபெறுவது போல ஒரு உணர்வைக் கொடுக்கிறது. புது விதமாக நாவலை, இருபது வருடங்களுக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒரு அத்தியாயமும், இருபது வருடங்களுக்கப்புறமுமான காலக் கட்டமாக அடுத்த அத்தியாயமுமாக மாற்றி மாற்றி வரையப்பட்டிருப்பது சுவாரசியம் கூட்டுகிறது.

         சிதம்பரத்தில் நடராஜருக்கு இணையாக போற்றப்படுபவள் தில்லைக்காளி.  ஒரே கோவிலில், இரு சன்னதிகள். ஒருவள் சாந்த சொரூபியாக, கருணை ததும்பும் அம்பாளாக எல்லையம்மன். மற்றொரு புறத்தில் செக்கச் சிவந்த மேனியோடும், உருட்டி விழிக்கும் கருவிழிகள் கொண்ட, ரௌத்ரம் வழியும் ஒரு நமுட்டுப் புன்னகையோடு காட்சி தருபவள் தில்லைக் காளி.

தாண்டவம் ஆடும் போட்டியில் தோற்றுப் போனதால், அவள் கோபத்தோடு எல்லையில் சென்று அமர்ந்ததாக கதை. ஆனால், அவள் ஏமாற்றப்பட்டவள் என்றே தோன்றும்.  போட்டி என்று வந்த பிறகு, அவளை குறுக்கு வழியில் வெற்றி கண்ட ஒரு ஆணின் அகங்காரத்தை பொறுக்க முடியாமல், ரௌத்ரம் கொண்டு அங்கே போய் அமர்ந்திருப்பதாகவே தோன்றும்.

         ”பெண் தன்மை சக்தி மிக்கது, அது அழிக்கும்; உருவாக்கவும் செய்யும். பெண் தன்மை என்பதே பற்றுக் கொண்ட சக்திதான்.” நாவலில் வரும் வரிகள்.

.        கருணையும், அன்பும், அடுத்தவர் துன்பம் கண்டு தவிக்கும் மனமும் வாய்க்கப் பெற்றவர் எல்லோருமே தெய்வ உள்ளம் வாய்க்கப் பெற்றவர்தாம். இப்படியான மனம் இயற்கையிலேயே அமையலாம். அல்லது பக்குவப்படுத்தி கொள்வதால் வாய்க்கலாம். இந்தத் தன்மை கொண்டவர்கள் எல்லாமே பெண்மைத் தன்மை கொண்டவர்கள்தாம். பெண்மைக்குத் தாய்மை என்பது வாய்க்கப் பெற்றதால் இந்தப் பெண்மையும், தெய்வத் தன்மையும் அவளுக்கு அமைந்து விடுகிறது.

        ஆண்கள் பெண்களை காமம் துய்க்கும் உடலாகப் பார்ப்பதும், காமத்தையே ஆழ்மனதில் வைத்துக் கொண்டு, நல்ல வேஷம் போட்டாலும் அது ஏதோ ஒரு சமயத்தில் வெளிப்பட்டு விடுகிறது. காமம் அவனை வெல்லும்போது அவன் மனிதத் தன்மையிலிருந்து விலகியவனாகிறான். தன்னிலை இழந்து குற்றம் புரியும் மதம் கொண்ட மிருகமாகிறான்.

     நாவலில் ஓலம்மா  ஒரு கருணை உள்ளம் கொண்ட பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறாள். அவளால், தன்னைச் சுற்றியுள்ளவர்களை மட்டுமல்லாது. பறவைகள், விலங்குகள், பச்சைபயிர்கள் என எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அன்பு செய்ய முடிகிறது. பறவைகளையும், பயிர்களையும் ஆசை ஆசையாக வளர்க்கிறாள். ஊரே, செம்பனைத்தோட்டத்திற்காக காலி செய்யும்போதும், அவள் அந்த மண்ணை விட்டுச் செல்ல மனமில்லாதவளாய் மண்ணின் மீது பற்றுக் கொண்டவளாக  இருக்கிறாள். தன்னைச் சுற்றியவர்கள் கொத்துக் கொத்தாக இறந்துபடும்போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது வரை அவள் தெய்வத் தன்மை பொருந்தியவளாகத்தான் இருக்கிறாள்.  அந்த உயிரிழப்புகளுக்குத் தன் கணவனும் ஒரு விதத்தில் காராணம் என்பதை அறியும்போது அவள் பேய்த் தன்மை அடைந்தவளாகவும் ஆகிறாள். அவனையும், அந்த இறப்புகளுக்குக் காரணமான பெண்ணையும். கொல்லவும் கொல்கிறாள்  தன்னைத் தனிமையாக உணரும்போது தான் அன்பு செய்த உயிர்கள் எல்லாவற்றையும் தானே அழிக்கிறாள். தன்னையும் மாய்த்துக் கொள்கிறாள். ஓலம்மாவே எல்லையம்மன்; அவளே தில்லைக் காளி.

         பணம் சம்பாதிப்பதற்காக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கும் சின்னி அதைத் தவிர தனக்கு வேறு தொழில்கள் தெரியாது என்று கேவுகிறாள். அவளுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. சாராயத்தையும், காமத்தையும் சேர்த்தே விற்கிறாள். (சின்னியும், ஓலம்மாவும் குழந்தையோடு தனித்து விடப்பட்டவர்கள்தான். இப்படி பெண்ணின் இருவேறு குணாதிசயங்களோடு பாத்திரங்களைப் படைத்துக் காட்டியிருப்பது சிறப்பு.)  தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மணியத்திற்குத் தன்னைக் கொடுக்கிறாள்.  ஓலம்மாவாலேயே கொல்லப்படுகிறாள்.

               மணியம் தனக்கு வேலை கொடுத்த முதலாளி வீட்டுப் பெண்ணிடமே காமம் கொள்கிறான். காமப் பித்தேறியவனாகும்போது மனிதன்  மனிதம் துறந்தவனாகிறான். ஒரு குழந்தையோடு, எங்கிருந்தோ வந்தவளை, தன் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால், அவளோடு உறவு கொள்ளும்போது, தொந்தரவாக இருக்கும் ஓலம்மாவின் மனநிலைப்பிறழ்வு கொண்ட குழந்தையான குமரனைக் கொல்லும் எண்ணம் கொண்டவனாக மாறுகிறான். ஒரு குழுவுக்குத் தலைவனாக இருப்பவன், அதே குழுவின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் கள்ளச் சாராயம் காய்ச்சும் சின்னியின் மேல் கொண்ட காமத்தினால், மறைமுகமாக அந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகிறான். சிலம்பம் சுற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருந்தவன், தன் குருவுக்குப் பிறகு தானே வழி நடத்துபவனாக இருக்க நினைத்தவன், பணம் கிடைக்கும் வேலை என்றவுடன் அதை விட்டு வெளியேறுகிறான். குடிக்க மட்டும் கூடாது என்ற தன் குருநாதரின் போதனையைக் கைவிடாமல் இருந்தவன், காமப் பேய்க்கு ஆட்படுகிறான். அப்போது குருவின் “ போதை என்பது கள்ளும், சாராயமும் குடிப்பது மட்டுமல்ல” என்ற வார்த்தைகள் ஒலிக்கின்றன. மது, மாது, பணம் இவையெல்லாம் மனித வாழ்வை அழித்துவிடும் என்பதைக் காலம் காலமாக நமக்கு புராணங்களும், இதிகாசங்களும், நீதி நூல்களும் சொல்லித்தானே வருகின்றன? இதையே நவீன நாவலும் நமக்குச் சொல்கிறது சுவாரசியமாக.

        பெண்களின் சாபம் தலைமுறைகளையே அழிக்கும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் ஒரு விஷயம் வருகிறது. கணவனை இழக்கும் கைம்பெண்கள் பொது மகளாக ஆக்கப்படுவாள்; அதற்கு அடையாளமாக அவளுக்கு வெள்ளிக் காப்பு அணிவிக்கப்படும். அதை அவள் மறுக்கவும் கூடாது. இப்படி ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்கு மீறி ஆண்கள் படுத்திய பாடுதான் அடுத்தடுத்த தலைமுறையில் குழந்தை இல்லமாலேயே செய்கிறது. இது நாவலின் கடைசியில் மாலதி தனக்கு பாட்டி கொடுத்த வளையல் என்று பேய்ச்சியின் முன் வைத்து வழிபடுவதாக அந்தத் தொடர்ச்சி விடாமல் கொண்டு வந்து முடித்தது சிறப்பு.

     கோப்பேரன், தமிழகத்தின் தென் கோடியிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து குழந்தையோடு காரைக்குடியின் செட்டியார் மூலம் மலாயா வந்து சேர்கிறார். அந்தக் குழந்தை ராமசாமி, ஒரு மூன்றாம்பாலினத்தவராக வளர்ந்து, மருத்துவம் செய்பவராக இருக்கிறார். இவர், ஓலம்மாவுக்கு நட்பாக இருக்கிறார்., அவர் ஓலம்மாவின் கணவன் மணியம் கேட்கும்போது, ஓலம்மா மகன் குமரனைக் கொல்ல மருந்து கொடுக்கிறார். அவரே, ஓலம்மா வந்து அழும்போது மணியத்தைக் கொல்லவும் மருந்து கொடுக்கிறார். சின்னியை ஓலம்மா கொலை செய்ய சாட்சியாக இருக்கிறார். ஆஸ்துமாவினால் கஷ்டப்படும் வாத்தியாருக்கு, ஒரு இரவுக்குத்தானே என்று சாராயம் அருந்தச் செய்கிறார். அது விஷச் சாராயம் என்பதால் வாத்தியாரின் உயிரையும் பலி வாங்கி விடுகிறது. அந்த தருணத்தில் தான் கையறு நிலையில் இருந்தாலும், இந்த நான்கு கொலைகளும் நடப்பதற்கு அவர் தானே காரணம் என்று மனதை வருத்திக் கொள்கிறார். அவ்ருடைய இந்தக் குற்ற உணர்வே அவரை பேயாக ஆட்டுவிக்கிறது.

      ஓலம்மாவின் பேரன் அப்போய், ராமசாமியைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும்போது, அவருக்கு இந்தக் குற்றவுணர்வுகள் மேலேழும்பி வருகின்றன. அப்போய் ஒரு விதத்தில் சின்னியின் வடிவோ எனத் தோன்றுகிறது. அவன், அவரை அருவியின் விளிம்பு வரை அழைத்துச் சென்று மூழ்கச் செய்கிறான். இந்த இடத்தில் நாவலாசிரியர், ஒரு அழகான காட்சியை அமைத்திருக்கிறார். சின்னியின் கடைசித் தருணத்தில் அவளுடைய வெண்ணிற கைப்பை ஒரு சிறிய பட்டாம்பூச்சி போல பறந்து சென்றது என்கிறார். இப்போது அப்போய் ராமசாமியை காட்டுக்குள் அழைத்துச் செல்லும்போது, அவன் முன்னால் ஒரு சிறிய வெள்ளைப் பூச்சி பறந்து கொண்டே வரும். அருமையான படிமம் இது. அதே போல, எந்தச் சத்தகத்தினால், தான் ஆசைஆசையாக வளர்த்த வாழையையும், தன் பேரனின் நிழலாக இருந்த கருப்பன் என்ற நாயையும் வெட்டித் தள்ளினாலோ. அதே சத்தகம் கொண்டு தன் கழுத்தையும் அறுத்துக் கொள்கிறாள். அவள், வாழையையும், பேய்ச்சியாக வணங்கப்படும், கல்லையும் எல்லாவற்றையுமே தன் மொத்தக் குடும்பத்தின் அழிவிற்கும், பிரிவிற்கும் காரணமான சின்னியாகவே பார்க்கிறாள். தான் கொலைக் குற்றம் புரிந்த குற்றவுணர்வே அவளை தன்னை மாய்த்துக் கொள்ளத் தூண்டுகிறது.

        கோப்பேரன் ஏதோ ஒரு சிலை வடிவமைப்பைப் பார்த்து, தன் குழந்தையைத் தாயே தின்று விடுவாள் என்று பயந்து ஓடுவதும்,, ராமசாமி தண்ணீரில் மூழ்குவதும், ஓலம்மா தன்னை மாய்த்துக் கொள்வதும் எல்லாமே ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி என்பதை விட, அது ஒரு பேய்ச்சி என்பதை விட, குற்றம் புரிந்த மனிதர் யாராயிருந்தாலும், அவரவர்களுக்கு அவரவர் குற்றவுணர்வேதான் பேய்ச்சியாக இருந்து கொல்கிறது.

      பாமாயில் உற்பத்திக்காக, செம்பனைகள் வளர்ப்பு என்பது ஆரம்பமான காலக் கட்டத்தினை சீன முதலாளிகள் குடியிருப்பவர்களிடம் நிலத்தை விட்டுத் தரும்படிக் கேட்பதை சரியாக நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

நாவல்,  வடிவமைப்பு, விறுவிறுப்பு என வாசகரைக் கட்டிப் போடுகிறது. சில இடங்கள் மிக அழகாக இருக்கிறது. ராமசாமி வெற்றிலை போடும் விதத்தை வர்ணித்திருப்பது ரொம்ப அழகு. அதே போல், இறந்து போனவர்களின் நினைவுகள், எப்படித் தேய்ந்து மறையும் என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறார்.  புல் டோசர்களை பெரிய மிருகங்களோடு ஒப்பிட்டிருப்பது அழகு. அதை விட அழகு, வாத்தியார்  தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் மரப்பெட்டியின் கதவுகளைத் திறப்பதை, காதலன், தன் காதலியின் தாவணியை விலக்குவது போல என்பது.  நாவல் விவரிக்கும் பேய்ச்சியின் முகத்தை முகப்போவியமாக மிக அழகாக வடிவமைத்திருக்கும் ஓவியருக்கும், புத்தகத்தை மிகச் சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் யாவரும் பப்ளிஷர்ஸும் பாராட்டுக்குரியவர்கள்.

                                 ————————–         

Series Navigationஒளிவட்டம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Valavaduraiyan says:

    நல்ல விமர்சனம்.ஓலம்மாவின் பாத்திரப்படைப்பயும் மணியத்தின் படைப்பையும் நன்கு உள்வாங்கி எழுதி உள்ளார். தொன்மம். பெண்ணியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *