ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது

author
0 minutes, 1 second Read
This entry is part 17 of 18 in the series 21 ஜூன் 2020


க. அசோகன்

 வேகமாய் வந்தும் பயனில்லாமல் போய்விட்டது. ஏதோ இன்று மாலை ஐந்தரை மணி மாதிரியே இல்லை. சூரியன் உச்சியில் நின்று கொண்டு இறங்கமாட்டேன் என்று சொல்வது போல இருந்தது. உறுதியாகத் தெரிந்தது இன்று மாலை பஸ் போய்விட்டது.
 அதுசரி அது என்னிக்குத்தான் சரியாக வந்தது. சில நேரம் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி, சிலநேரம் பத்து நிமிஷம் கழித்து கூட வந்திருக்கிறது. கடிகாரத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது.
 நெற்றியில் படிந்;திருந்த வியர்வையை ஒரு முறை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை. நான் பயந்தமாதிரியே ஆகிவிட்டது. பஸ்ஸைத் தவற விட்டுவிடுவேன் என்று நினைத்தேன். அப்படியே நடந்துவிட்டது. இனி ஆறேகால் பஸ்தான். அது வரை என்ன செய்வது?
 சாலையின் எதிர்ப்புறம் இருந்த பெரியண்ணன் கடையைப் பார்த்தேன். இது போல் பஸ்ஸைத் தவறவிடும் நேரங்களில் அவர் கடையில் தான் தஞ்சமடைவேன். அதற்காக மட்டுமல்ல வேறு யாரேனும் பைக்கில் வருபவர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி, நான் தங்கியிருக்கும் பகுதியில் இறக்கிவிடச் சொல்லி என்னை, அவர்களுடன் அனுப்பி வைப்பார்.
 எனது இருப்பிடம் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்குதான் ஓரளவு கடைகள் இருந்தன. ஹோட்டல் ஒன்றும் இருந்தது. நான் வேலைநிமித்தம் முதன் முறையாக அந்த இடத்தில் தான் வந்திறங்கினேன். அதுவே அப்போது கிராமம் மாதிரிதான் தோன்றியது.
 பிறகு நான் பணியமர்த்தப்பட்டிருக்கும் இடத்திற்கு காலையில் வந்திறங்கியபின்தான் கிராமம் என்பது என்னவென்று புரிந்தது. வழி நெடுகிலும் ஏராளமான தோப்புகள். எல்லாமே பெரும்பாலும் மாந்தோப்புகள் அல்லது தென்னந்தோப்புகள் நிறைந்திருந்தன.  தோப்புகளினூடாக குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான ஒற்றையடிப்பாதைகள் தாறுமாறாக விலகி எங்கெங்கோ உள்ள சிறு சிறு கிராமங்களுக்கு வழியமைத்துக் கொண்டிருந்தன. அவற்றிக்குள்ளாக ஒரு சிலர் எதைஎதையோ தலையில் சுமந்து சென்றுகொண்டிருந்தனர். சிலர் மூட்டைகளில் தூக்கிச் சென்று கொண்டும், சிலர் வந்து கொண்டும் இருந்தனர்.
 பிறகுதான் தெரிந்தது அந்த ஒற்றையடிப் பாதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கிராமங்களுக்கு இட்டுச் செல்கின்றனவென்று. நான் தங்கியிருக்கும் இடத்தில் உள்ள பெரிய கடைகளில் இருந்து மொத்த விலையில் வாங்கிச் சென்று கிராமங்களில் சில்லறை விலைக்கு விற்றுவந்தனர் என்று அறிந்து கொண்டேன். அதனால் தானோ என்னவோ நான் காலையில் வரும் பஸ்ஸில் மனிதர்களுக்கு நிகராக மூட்டைகளும் இடத்தை அடைத்துக் கொண்டுவிடும்.
 நான் வேலை செய்யும் வங்கி இந்த கிராமத்தில்தான் இருந்தது. வங்கிக் கட்டிடத்தைச் சுற்றி சில கடைகள் இயங்கி வந்தன. மற்றபடி குடியிருப்புகள் எனச் சொல்லும்படியாக் அடுக்கி வைக்கப்பட்ட மாதிரி ஓட்டு வீடுகள், கூரை வேயப்பட்ட ஓலைக் குடிசைகள், தான் இருந்தன. பழைய மண்டபம் ஒன்றும் இருந்தது. ஊரின் கோடியில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தது. இவைகளைக் கொண்டதுதான் அந்த ஊர்.
மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக வந்து வாங்கிச் செல்;வார்கள். அவர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தேவையான அனைத்தும் அந்தக் கடைகளில் இருந்தன. இங்குள்ள மக்கள் அனைவர்க்கும் விவசாயம் தான் பிரதான தொழில். தேங்காய், மாங்காய் இரண்டும் முக்கியமான விளைபொருட்கள். எங்கள் வங்கியில் மாடுவளர்ப்பு, பெண்கள் சுய உதவிக்குழு ஆகியவற்றிற்காக மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. ஏனெனில் மற்ற கடன்கள் எதுவும் திரும்பவராது என எங்கள் வங்கி நினைத்திருக்கலாம். அதுவும் கொடுத்த கடன்களை திரும்ப வசூலித்துத் தரவேண்டும், என்ற எழுதப்படாத விதி இருப்பதால் அதிகாரிகள் கடன்தர சுணக்கம் காட்டி வந்தனர்.
 வெயில் உரைத்தபோது கால் வலிப்பது போல் உணர்ந்தேன். பெரியண்ணன் கடையை நோக்கி நடந்தபோது கடைபூட்டியிருந்தது. ஓலையின் குறுக்காக போடப் பட்டிருந்த பெஞ்சு என கொள்ளத்தக்க வகையில் இருந்த மரப் பலகைமட்டும் அப்படியே இருந்தது. ஒரு முறை சாலையை ஏறிட்டுப் பார்த்தேன். பஸ்ஸோ, வண்டியோ என எதுவும் வருவதான அறிகுறியேதும் தென்படவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.
 எல்லோரும் என்னிடம் ‘வண்டி வாங்கிக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு வசதியானது. இந்தக் கிராமத்திற்கு வரும் பஸ்ஸையெல்லாம் நம்பக் கூடாது ஸார்’, எனச் சொன்னார்கள்.
 நான், ‘அதெல்லாம் வேண்டாம். எனக்கு அதெல்லாம் ஒத்து வராது.’ அப்படி இப்படி யென்று சொல்லி மழுப்பிவிட்டேன். ஆனால் எனக்கு எப்போதுமே அதில் ஒரு பயம் இருந்தது. இயந்திரத்தை அடக்கியாளும் மனிதனின் சாமர்த்தியம் அந்த வண்டியை ஓட்டும் கலை எனக்கு இல்லையெனப் பட்டது.
 அதற்கு மட்டுமா பயந்தேன். எல்லாவற்றிற்குமே தான் பயந்திருந்தேன். அற்ப விஷயங்களுக்குக் கூட நான் பயப்படுவேன். பயம் என்பது ஓர் உணர்வு போலன்றி உடலின் ஒரு பகுதியேயென நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
 ‘ஸார் என்ன பஸ்ஸ_க்கா?’ – என்று யாரோ சாலையின் எதிர்முனையில் ஒருவர் கேட்டபோதுதான், நான் அதிலிருந்து மீண்டு அவரை நோக்கினேன். 
 ‘ஆமாம், என்றேன், அவரை சட்டை செய்யாமல்.
 ‘அது அப்பவே போயிடுச்சு ஸார். இனி 6:20க்குத்தான் உங்களுக்கு வண்டி,’ என்று சொல்லிக் கொண்டே என்னை நெருங்கி வந்தார்.
 ‘ம்…ம்… தெரியும். அதுதான் உட்காhந்திருக்கிறேன்’, எனச் சொல்லி அவரை ஏறிட்டுப் பார்த்தேன். அவரை எங்கோ பார்த்தது போல இருந்தது. சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவரின் முகம் என்னில் நன்றாகப் பதிந்திருந்தது.
 அவர் என்னருகே வந்துநின்று மெல்ல சிரித்தார். ‘சாப்பிட்டீங்களா ஸார்?’ என்றார். ‘நம்ம வீடு இதோ எதிரில்தான் இருக்கு. டீ தருவிக்கட்டுமா?,’ என்றார். அவர் கை காட்டிய இடத்தைப் பார்த்ததும் தான் எனக்கு அவரை ஞாபகம் வந்தது.
 நான் இந்த நேரத்தில் என்னுடைய மேலாளரை நினைத்துக் கொண்டேன். அவர் மட்டும் இன்று வந்திருந்தால் எனக்கு பஸ்ஸைப் பற்றிய கவலையே வந்திருக்காது. நானும் அவரும் ஒன்றாகவே போயிருக்கலாம். இன்று இந்த ஆளிடம் மாட்டிக் கொண்டேனே என்று தவித்தேன்.
 ஒரு நாள் குமார் ஸார் என்னிடம்;, ‘ஸார் வாங்க இன்னிக்கு ஒருரவுண்டு போய்ட்டு வந்து அப்புறமா நம்ம ரூமுக்கு போகலாம்,’னு கூப்பிட்டார்.  அவரிடம் நான் மறுத்து ஏதும் பேசமுடியவில்லை. அதற்கு அவர் என் மேலாளர் என்பதையும் தாண்டி அவர் மீது நான் பெரும் மரியாதையும், அன்பும் கொண்டிருந்தேன். 
 ‘இப்ப போனாதான் ஸார், மாடு பால் கறந்து பூத்துக்குக் கொண்டு போற வேலையை தொடங்கியிருப்பானுங்க. போனா கையும் களவுமா பிடிச்சிடலாம்.’
 நான், ‘ம்’, என்றேன், கொஞ்சம் அடக்கமாக. ஏனெனில் இந்தக் கடன் வசூலிக்கும் வேலை எனக்கென்னவோ பிடிக்கவேயில்லை. அதற்கெல்லாம் ரொம்ப தைரியம் வேணும். அது மட்டுமில்லாம கொஞ்சம் கூட பயப்படுறது தெரியாத மாதிரி காட்டிக்கணும். எனக்கு அது சுத்தப்படாது.
 நாங்கள் கடன் வசூலிக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் விதவிதமாய் நடந்து கொள்ளுவார்கள் அல்லது நடிப்பார்கள். சிலபேர் எங்களைக் கண்டதும் ஓடிவிடுவார்கள், சிலர் கவனிக்காதவாறு நடந்து கொள்வார்கள். சிலர் எங்களை மிரட்டுவார்கள். இன்னும் சிலர் காலில் கூட சாஷ்டாங்கமாக விழுவார்கள்.
 இதில் எந்த சூழ்நிலை வந்தாலும் எனக்கு கலக்கமாகத்தான் இருக்கும். எனக்கென்னவோ ஒரு பயம் வந்துவிடும். ஆனால் குமார் நிதானமாக இருப்பார். எந்த வித சலனமும் இன்றி, கடனைத் திருப்பிக் கேட்கும் தோரணையில் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்வார். 
 சில சமயங்களில் அவர் கேட்பதுண்டு. ‘ஸார், இன்னிக்கி நான் ரொம்ப பேசிட்டேனோ. அவன் ரொம்பவும் ஆபத்தான பேர்வழி. இனி உள்ளுர்க்காரன் எவனையாவது கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும்.’ இதெல்லாம் அவர் கடன் வசூலிக்கும் போது அந்த இடத்தில் தெரியவே தெரியாது.
 நம் உணர்திறன் அத்தனையும் அடக்கிக் கொண்டு உருமாறி இருந்தால் மட்டுமே இந்த வேலையில் வெற்றி பெற முடியும் என்று சொல்வார்.
 எனக்கு அந்த ஊர்களில் நிலவரையறைகள் கொஞ்சம் நன்கு என்பதாலும் உள்ளுர்காரர்களுக்கு நான் பரிச்சயமானவன் என்பதாலும் என்னையே பெரும்பாலும் அழைத்துச் செல்வார். 
 அன்றும் அப்படித்தான் அழைத்துச் சென்றார். அந்த ஊர் மெயின்ரோட்டிலிருந்து குறுக்கா செல்லும் ஓரு பாதை வழியாகச் சென்றால் சீக்கிரம் ஊரை அடைந்து விடலாம். 
 நாங்கள் அந்த ஊருக்கு ஓர் ஆளைத் தேடிப்போனோம். அவன் எங்கள் வங்கியில் சில வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தான். ஆனால் முதல் இரண்டு மூன்று தவணைகளுக்குப்பின் கடனைக் கட்டவே இல்லை. கிடப்பில் போடப்பட்டிருந்த iஃபலை குமார் தேடி எடுத்துவிட்டார். அதில் முகவரி சரியானதாக இல்லை.
 நான் வழக்கம் போல பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அந்த புல்லட் வண்டி அந்த குறுக்குப் பாதையில் போகும் போது நான் கேட்டேன், ‘இங்கே எங்கே ஸார்?’
 ‘அதான் ஸார் அந்த மாட்டுலோன் பெருமாள் பெண்டிங் கேஸ். அவன் இங்கேதான் இருக்கான்.’
 ‘புடிச்சிட்டீங்களா? எப்படி ஸார்?’
 ‘இன்னிக்கு அந்த iஃபலை பாத்துக்கிட்டே இருந்தப்போ அவருக்கு ஜாமீன் போட்ட ஒரு ஆளைப் பத்தி அதிலே இருந்துச்சி’. நேரே அவனே இன்னிக்கு பாங்க்குக்கு வந்திருந்தான். நான் சந்தேகத்தோட அந்த ஆள் நீதானா என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று ஒத்துக் கொண்டான். அவன் கிட்டேயே பெருமாளைப் பற்றி விசாரிச்சேன். அவன் இந்த ஊர்லதான் எங்கேயோ இருப்பதாகச் சொன்னான. ‘அந்த பெருமாள், லோனைக் கட்டலேன்னா நீ தான் கட்ட வேண்டி வரும்’, என்று மிரட்டி அனுப்பினேன்.
 அவன் என்னிடம், ‘அதெல்லாம் கண்டிப்பா கட்டிடுவான்,’ என்றான்.
 ‘எப்படிய்யா சொல்றே ரெண்டு வருஷம் கட்டாதவன் இப்ப எப்படிக் கட்டுவான்,’ என்று சீறினேன்.
 அந்த ஆள் என்னைப்பார்த்து, ‘நம்பிக்கைதான் சாமி! அவன் ரொம்ப நல்லவன் சாமி. எப்புடியும் கட்டிடுவான்,’ என்றான்.
 ‘பைத்தியக்காரன் என நெனச்சிக்கிட்டான் ஸார்.’ வண்டி பாதையை ஆக்கிரமித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இருபுறம் புதர்கள் மண்டிக்கிடந்தன.
 ‘இங்கெல்லாம் வீடு இருக்கிற மாதிரியே இல்லை ஸார்’, என்;றேன்.
 ‘கடன் வாங்கி கட்டாதவனுங்க எல்லாம் இந்த மாதிரி தான் எங்கேயாவது ஒளிஞ்சு இருப்பானுங்க’.
 நாங்கள் சென்ற பாதை தார் ரோட்டை தாண்டி மண் பாதையில் இறங்கி நேராக சென்று கொண்டிருந்தது. பாதை நேராக சென்று கொண்டே இருந்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு பம்ப்பு குழாயடி இருந்தது. அங்கே யாரோ நிற்பது போல பட்டது. நேராக அங்கே சென்றோம்.
 வண்டியை விட்டு நான் இறங்கியதும் அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி என்னை, ‘என்ன ஸார் இவ்வளவு தூரம்?’ என்றாள்.
 குமார் ஸார் மெலிதாக சிரித்தார்.
 நான் பெருமாள் வீட்டு விபரத்தை அந்த பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வண்டியில் ஏறியதும் என்னை இடித்துக் கொண்டே சொன்னார், ‘உங்களுக்குன்னு இந்த ஊர்ல ஒரு இமேஜ் இருக்கு ஸார்,’ என்றார் கிண்டலாக.
 ‘நான் மானேஜர் என்றாலும் என்னைவிட நீங்கதான் இங்கே பாப்புலர்,’ என்றார்.
 ஒரு வீட்டின் முன் நாங்கள் நிற்பதைப் பார்த்து ஒரு நடுத்தர வயது பெண்மனி உள்ளிருந்து வெளியே வந்தாள். அவள் வருகையை நான் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே நின்றேன். ஏனெனில் அந்த வீட்டின் வாயில் வெகு குறுகலாக இருந்தது. கிட்டத்தட்ட அந்தப் பெண் விழுந்து எழுந்த மாதிரியே நடந்து வந்தாள். 
 குமார் அந்த அம்மாளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்தப் பாதை வழியே ஒருவன் வந்தான். அவன்தான் நாங்கள் தேடி வந்த மாட்டுலோன் வாங்கிய பெருமாள். அவனைக் கண்டதும் அந்த அம்மாள் வீட்டினுள் சென்றுவிட்டாள்.
 அவனிடம் குமார் ஸார் விசாரணைக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார். நான் அப்படியே அந்த வீடு, சுற்றுப்புறம், என எல்லாவற்றையும் நோட்டமிட்டுக் கொண்டேயிருந்தேன். வீட்டின் முன் நின்றிருந்த மாடு எங்களை ஒரு மாதிரி பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தது. நான் அருகே சென்று அங்கு வைத்திருந்த தொட்டியைப் பார்த்தேன் அது காய்ந்துபோய்க் கிடந்தது. அந்த மாட்டிற்கு தண்ணீர், உணவு கொடுத்திருக்கவில்லையெனத் தெரிந்துகொண்டேன்.
 வீட்டின் பக்கவாட்டில் சென்று பார்த்தேன். அங்கு சன்னலா அல்லது ஓட்டையா என்று தெரியாதபடி ஓர் இடைவெளி இருந்தது. வீட்டின் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டதா அல்லது சுவர் உடைந்து இப்படி ஆகிவிட்டதா என்று தெரியாத மாதிரி இருந்தது. அதன் வழியே பார்ததேன். அந்த அம்மாள் கதவின் இடுக்கின் வழியே கூனிக்குறுகி நின்று வெறித்தபடி வெளியே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 திடீரென்று திரும்பியவள் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த போட்டோ முன்பு போய் நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆனால் அவள் அந்த போட்டோவை வெறிபிடித்தபடி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
 நான் கொஞ்சம் தள்ளி நின்று அந்த போட்டோ இருந்த திசையைப் பார்த்தேன். அந்த வீட்டில் இருந்த ஒரே நவீன விஷயம் அந்த கலர் போட்டோ மட்டுமே. வேறெதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை. அந்த வீட்டில் மின்சார வசதிகூட இல்லை. நான் போட்டோவைப் பார்த்தேன். அதில் ஒரு வாலிபன் நின்றவாறு இருந்தான். 
 அந்தக் கதவின் அருகே கூர்ந்து பாhத்;தபோது இன்னொரு உருவம் தெரிந்தது. வயது வந்த இளம் பெண். அவள் இன்னொரு கதவின் அடியைப் பற்றியபடி கால்கள் மடங்காமல் அல்லது மடக்கமுடியாமல் தரையில் கிடக்க, தன் உடம்பை வளைத்து, கதவின் இடுக்கின்வழியே வெளியே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் மிகுந்த கலவரமடைந்திருந்தது. அந்த வீட்டின் இருளிலும் அவளது கண்கள் தெளிவாகத் தெரிந்தன. அந்த கண்களில் அப்படி ஒரு சோகம், பயம் கவ்விஇருந்தது.
 எனக்கு என்னவோபோல் இருந்தது. நான் மளமள வென்று வீட்டின் முன்புறம் சென்று வண்டி நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தேன். ஏதோ ரொம்ப புழுக்கமான ஓர் இடத்திலிருந்து விடுபட்டு வந்ததைப் போல உணர்ந்தேன். நீண்டதொரு பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
 ‘ஸார் என்ன ஆச்சு? – என்று கேட்டுக் கொண்டே குமார் ஸார் என்னை நோக்கி வந்தார்.
 ‘ஒன்னுமில்லை ஸார்? என்ன சொல்றார் பெருமாள்?’ என்று கேட்டேன்.
 ‘என்னென்னவோ கதைகதையா சொல்றான். எனக் கென்னவோ இந்த ஆளெல்லாம் லோனைக் கட்டறமாதிரி தெரியலே. பேசாமெ நாம் கேஸ் iஃபல் பண்ணிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க?’
 ‘ஆமாம் ஸார் அதுதான் சரி.’ என்றேன் நான்.
 அவ்வப்போது அந்த காடசிகள் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டே இருந்தன. பிறகு எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தன இந்த நாள் வரை.
 ‘ஸார் நம்மவீடு பக்கந்தான், டீ தருவிக்கட்டுமா?’
 ‘இல்லை வேணாம். நான் டீ, காபி சாப்பிடறதில்லே’ என்றேன்.
 நாங்கள் இருவருமே மெயின்ரோட்டின் நடுவில் நிற்பதாகவே எனக்குப்பட்டது. என்னருகே இருந்த ஒரு கல்லின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான். அன்னிக்கு பார்த்தற்கும் இன்று பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. இப்போது சட்டை போடாமல் நிக்கர் வெளியில் தெரியும் படி தூக்கிக் கட்டியிருக்கும் கைலியுடன் இருந்ததால் அவன் எங்கோ வேலை செய்துவிட்டு இப்போதுதான் வந்திருப்பது போலத் தோன்றியது. அவன் நிக்கர் டிராயரிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.
 நான் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 ‘சாருக்கு வீடு ரொம்ப தூரமோ?’ என பீடியை இழுத்துக் கொண்டே கேட்டான்.
 ‘இல்லை பக்கம்தான் இங்கே,’ எனச் சொல்லிவிட்டு அமைதியானேன். 
 ‘ஸார் நான் தான் பெருமாள். என்னை ஞாபகமில்லையா?’ என்றான்.
 நான் தெரியாதவாறு விழித்தேன்.
 அப்பொழுது அவன் என்னிடம், ‘போன வாரம் கூட வூட்டாண்ட வந்திருந்தியே ஸார்,’ என்றான். அவன் குரலில் கொஞ்சம் உற்சாகம் தெரிந்தது.
 ‘ம்….. ம்….. ஞாபகம் இருக்கு,’ என்று பட்டும் படாமலும் சொன்னேன்.
 கொஞ்சம்நேரம் அமைதியாக இருந்தான். சற்றுநேரம் கழித்து அவனே தொடர்நதான், அன்னிக்கு நீங்களும் ஸாரும் வந்தப்ப என் பெண்டாட்டியும், புள்ளையும் கொஞ்சம் பயந்திட்டாங்க,’ என்றான்.
 என் பதிலை எதிர்பார்க்காமல் அவனே தொடர்ந்தான், ‘நான் தான் அவளை மடக்கினேன். ஏண்டி நாமதான் லோன் வாங்கினோம் பணம் கட்டலை. அவங்க கடனைக் கேட்க வராங்க. நியாயப்படி நாமதான் அவுங்ககிட்டே போயிருக்கனும். தப்பு நம்ம மேலதான்,’ என்று அவளை அடக்கினேன்.’
எல்லோரும் சொல்லும் சாதாரண பதில் தான்.  இது போன்ற நிறைய பதில்களை இதற்கு முன்னே கேட்டிருக்கிறேன்.  இதை நினைத்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.
 நான் சிரித்ததை என் முகபாவத்தைக் கொண்டு கவனித்திருக்க வேண்டும். நான் அவனைப் பார்த்த போது தலை குனிந்து கொண்டே இருந்தான்.
 ‘நீ வந்திலே ஸார் என் வூடு அந்த தோப்புலதான் இருக்கு,’ எனச் சொல்லியவாறே என்னைப் பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். பின் அவனே தொடர்ந்தான், ‘அந்த இடம் முதல்லே ஒரே மண்ணும், புழுதியும், கரையான் புத்துமா இருந்துச்சு நாங்கதான் அதை சமப்படுத்தி வீடா கட்டிமுடிச்சோம். எங்க அப்பனுக்கு நாலு புள்ளைங்க நான் என் தம்பி, ரெண்டு தங்கச்சி என நாங்க ஆறு பேர் இருந்தோம். எங்க ஆத்தா ஒரு நாள் தண்ணி எடுக்க குடத்தோட ரோட்டுக்கு போனா,’ என நிறுத்தினான்.
 மீண்டும் என்னைப் பார்த்து பேசலானான், ‘அங்கனக்குள்ளேதான் எங்க ஆத்தா லாரில அடிபட்டுக் கிடந்தா. நாங்கெல்லாம் அவமொகத்த பார்க்ககூட முடியாமே போச்சு. எனக்கு அப்ப பன்னெண்டு வயசு. எங்களோட கொல்லைல தேங்காய் பறிக்கப் போய்டுவேன். ரொம்ப கஷ்டமா இருக்கும் அப்போ. கால்லாம் வலியெடுக்கும். உடம்பெல்லாம் கீறல் ஏற்பட்டு ரத்தகளமா இருக்கும். வீட்டுக்கு வர்றப்ப மனசே விட்டுப் போய்டும். ஆனா எங்க அப்பன் ரொம்ப தெம்பா இருப்பாரு. அடுத்த நாள் சோர்வா இருந்தா சொல்லுவாரு. இன்னிக்கு வர்றது நேத்தவிட நல்லதுன்னு நெனச்சுக்கோ. அதுதாண்டா உன்னைப் பிழைக்க வைக்கும்,’ என்பார்.
 ‘உழைச்சு, உழைச்சு எங்க அப்பன் எந்திரம் போல ஆயிட்டாரு. ஒரு நாள் சாயங்காலம் மரம் ஏறப் போனாரு. அங்கேயே விழுந்து இறந்து கிடந்தாரு. எங்கப்பன் இறந்தப்ப மூத்தவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம் நான்தான் எல்லாம்.’
 ஊர்ல எல்லாரும் பேசுனாங்க எங்கப்பன் ஆவி எனக்குள்ளே பூந்திடுச்சினு. அப்படி வேலை செஞ்சேன். நான் மரம் ஏறுனா அப்படி ஒரு ராசின்னு சொல்லுவாங்க சின்னப்புள்ளயெ ஒரு எடத்துலே கட்டிக் கொடுத்துட்டேன். என் தம்பி கொஞ்சம் படிச்சான். மரவியாபாரம் கமிஷன் மண்டிக்கு வேலைக்குச் சேர்த்து விட்டேன். அப்போதிலிருந்து இனி கவலையில்லை நல்லா வருவான் அப்படின்னு நெனச்சிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள் என்னவோ இங்கிலீஸ் வியாதின்னு சொன்னாங்க என்னானு தெரியலே கமிஷன் மண்டியிலேயே மயக்கம் போட்டு விழுந்திட்டான்னு கொண்டு வந்து கட்டில்ல போட்டடாங்க. ரெண்டு நாள் அவன் பக்கத்திலேயே இருந்தேன். இரண்டாம் நாள் சாயங்காலம் என்னெப் பார்ததுக்கிட்டே கண்ணிலேர்ந்து தாரைதாரையா கண்ணீர் வழிஞ்சுச்சு. நீ ஒன்னும் கவலைப்படாதேடா நான் பாத்துக்கிறேன்,’ என்று சொல்லித் தேற்றினேன்.
 என்னைப் பார்ததுக் கிட்டே என் கண் முன்னாலயே செத்துப் போனான். அவன் வேலைக்குப் போயிருந்தப்ப எங்க வூடு குடிசையிலேர்ந்து களி மண் வீடுகட்டி ஓடு வேஞ்சோம். எங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். எங்க ஆளுங்க என்னென்னவோ பேசுனாங்க. எனக்கு ரொம்ப தெம்பா இருந்திச்சு. ஆனா கூட்டைக் கலைச்ச மாதிரி ஆச்சு அவன் சாவு.
 ‘என் பெண்டாட்டி ஒரு மகராசி. அவ வந்தப்புறம் தான் கொஞ்சம் தைரியம் வந்திச்சு எனக்கு. ஒரே பையன் ரெண்டு பொட்ட புள்ளைங்க. செக்குமாடு மாதிரி சுத்திசுத்தி உழைச்சேன். பொட்ட புள்ளைய கரை சேக்கணுமே. ஒரு நாள் என் ரெண்டாவது புள்ள பள்ளிக்கூடத்திலிருந்து வந்து நடக்க முடியலேன்னு ஒரே அழுகை. காலு என்னமோ பண்ணுதுனு சொல்லி அழுவுது. டாக்டர் கிட்டே தூக்கிட்டு போய் பாத்தோம். ஏதோ ஒரு வியாதி இடுப்புக்குக் கீழே வேலை செய்யாதுன்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யுறதுன்னு தெரியலே. அப்படியே மனசு ஒடஞ்சு போயி உட்கார்ந்துட்டேன்.’
 என் பையன் தோள்ல கையெ வெச்சு, ‘விடுப்பா உன் தங்கச்சியெ நீ பாத்த மாதிரி என்; தங்கச்சியெ கடைசிவரைக்கும் நான் பாத்துக்கிறேன்,’ என்று சொன்னான்.
 ‘எம் பையன் கொஞ்சம் படிச்சவன். ரொம்ப சுமார் தான் ஆனா நல்ல கெட்டிக்காரன். என் தம்பியே எனக்கு மகனா வந்தமாதிரி எனக்குத் தோனும். மூத்தவளுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சேன். அந்த மாப்பிள்ளை நல்ல பையன், காசு பணம், அழகு எல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா நாம செய்ய வேண்டியதைச் செய்யணும்ல. நான் அவனுக்கு செய்யவேண்டிய முறை யெல்லாம் செஞ்சு முடிச்சேன்.’
 அப்ப இருந்த மானோஜர், ஏதோ மாட்டுலோனே போட்டுக் கொடுத்தாரு. லோன ஒழுங்கா கட்டிடுங்கன்னு சொல்லி கொடுத்தாரு. நானும் தவனைகளை சரியாவே கட்டினேன். பையனும் வேலைக்குப் போக ஆரம்பிச்சான். மெட்ராஸ்ல ஏதோ மெக்கானிக் வேலை அப்படின்னு போனான். ஆறு மாசம் கழிச்சு வந்தான். தாடி, மீசையெல்லாம் வெச்சுக்கிட்டு பித்துப் பிடிச்சவன் மாதிரி இருந்தான். நான் ஒருநாள் தோப்பு வேலைக்குப் போய்ட்டேன். அவளும் காட்டு வேலைக்குப் போய்ட்டா. சின்னப்புள்ளே மட்டும் அவன்கிட்டே ஏதோ பேசிக்கிட்டே இருந்திருக்கு. அவன் எதுவுமே பேசலையாம். கொஞ்ச நேரம் கழிச்சு பாப்பா தூங்கிப் போயிடுச்சு. அப்புறம் எந்திருச்சு பாத்திருக்கா அவன் திண்ணையிலே மல்லாந்து கிடந்திருக்கான். வாயிலே நுரை தள்ளியிருக்கு. பாவம் அந்த புள்ள பாத்து பயந்துடுச்சு. ‘அந்தக் காலைத் தேய்ச்சுக்கிட்டே வெளியே வந்து கத்தியிருக்கு. அப்புறம் எல்லோரும் ஓடிவந்து பார்;த்தப்ப அவன் கதை முடிஞ்சிடுச்சு. இதைச் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குச் செல்லும் பாதையை வெறித்தபடியே பார்த்தான்.
 ‘நல்லா ஞாபகமிருக்கு ஸார். என் பையனைப் பத்தி சேதி வந்தப்ப இங்கனே வந்து நின்னுட்ட அந்த வீட்டுக்குப் போக மனசே வரலை. ரொம்ப இருண்டு போச்சு வானம்.’
 ‘எல்லாம் முடிஞ்சு ரெண்டாம் நாள் சாங்கியம் செய்றப்ப தலை சுத்தற மாதிரியே இருந்துச்சு. அப்படியே நெஞ்சு மேலே யாரோ அமுக்கற மாதிரி பாரமா இருந்துச்சு. அப்படியே விழுந்துட்டேன். எந்திரிச்சு பாக்கறேன். ஆஸ்பத்திரிலே கிடக்கிறேன.
 ‘ஆச்சு! அது இதுன்னு சொல்லி அதுவும் ஒரு வருஷம் ஆச்சு. வேலைக்கும் போகலே. பாங்க்ல இருந்து யாரும் வந்தாங்களான்னு கேட்பேன்.’ என்; பெண்டாட்டி, ‘அதெல்லாம் கட்டிக்கலாம். நீ முதல்ல பொழச்சு எந்திரிச்சுவா,’ ன்னு சொல்லிட்டா. அவ என்ன செய்வா பாவம்! ஒத்த பொம்பளை.’ 
 போன வாரம் நீங்க வர்றதுக்கு முன்னாடி எனக்கு ஜாமீன் போட்ட அண்ணாமலை வீட்டுக்கு வந்தார். நான் அவர் கையைப் பிடிச்சு நான் என் தலையை அடமானம் வச்சாவது கட்டிடறேன். உனக்கு ஒன்னும் வராது போன்னு சொன்னேன். அந்த ஆளு முழுசா என்னை நம்பி போனார்.  பணம் ஏற்பாடு பண்ணதான் அன்னிக்கு வெளியே போயிட்டு வந்தேன். அப்பதான் நீங்க என் வீட்டுக்கு வந்திருந்தீங்க,’ என்றான் ஒரு மெல்லிய சிரிப்போடு.
 எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு அன்னிக்கி. சரி பணம் கிடைச்சவரை கொஞ்சமாவது கட்டணுமே, அப்படின்னு ஒரு வீராப்பு. சாருகிட்டே கூட அன்னிக்கி அதான் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகவாவது கட்டிடறேன்னு சொன்னேன்.
 இன்னிக்கு காலையிலே நான் வேலைக்குக் கிளம்பிட்டேன். மரம் ஏறி ரொம்ப நாளாச்சு. நேரா முதலாளி வீட்டுக்குப் போனேன். அவரு என்னைப்பார்த்து, ‘என்ன பெருமாளு அந்த பழைய தெம்பு வருமான்னு கேட்டு’ சிரிச்சார்.
 முன்ன மாதிரி இல்லேன்னாலும் கொஞ்சம் வேகமாதான் செஞ்சேன். 20 மரம் ஏறிட்டேன். உச்சி வேளைக்கு மேலே முடியலே. நெஞ்சு ஏதோ குத்தறாப்லெ இருந்துச்சு. அப்படியே மரநிழல்லே சாஞ்சு உட்கார்ந்திட்டேன். சாயங்காலம் முதலாளி முழு நாளுக்கான சம்பளம் கொடுத்தார்.
 முதலாளி ‘தினமும் கிடைக்கிறதை விட இன்னிக்கு இருபது காய்கள் அதிகமாக கிடைச்சிருக்கு நீ ரொம்ப கைராசியான ஆளு பெருமாளு,’ அப்படின்னு சிரிச்சார்.
 என் அதிர்ஷ்டம் என்னிக்கும் எனக்கு உதவாது. எப்போதும் அது மத்தவங்களுக்குத்தான் உதவும் போலன்னு நெனச்சுக்கிட்டேன் சார்.
 நெறைய தடைவ யோசிச்சிருக்கேன், நான் ஏன் இனி வாழணும்னு. எங்கம்மா போனதிலிருந்து எனக்கு தோனிக்கிட்டே இருக்கு. ஆனா வாழணுமே. எம் பையன் செத்த பிறகு அடுத்த நாள் எனக்கு பசிக்குது. எழவு வேறே என்ன செய்யுறது. போனவங்களெ நெனச்சுகிட்டே இருந்தா நம்மளும், நம்மைச்சுத்தி இருக்கிறவங்களும் என்ன ஆவாங்க.
 ‘ஏதோ ஒரு வகையில் நான் அதிர்ஷ்டக்காரன் தான்.’ எனச் சொல்லிவிட்டு ரோட்டைப் பார்த்தான். அந்த மூலைக்கல்லின் பக்கம் ஒரு முறை பார்த்து விட்டு, ‘என்னைவிட்டு ஒவ்வொருத்தரா போறப்ப என்னைத் தாங்கிக்க யாரோ ஒருத்தர் இருந்துகிட்டே இருக்காங்க இல்ல.’
 ‘எங்க அப்பன், என் தம்பி, என் மகன், என் பெண்டாட்டி, என் மகள், அண்ணாமலை, முதலாளி என யார் யாரோ. ஏன் என் வீட்டு மாடு கூட, மரம், செடி, கொடி, ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது அப்படின்னு தோனும்போது இந்த கொடுப்பினை எனக்கு இருக்குன்னு தோனும்.’
 ‘சில நேரங்கள்ல விடியற பொழுது நம்மளோடதா இருக்காது. ஆனா அதுக்காக பொழுதே விடியாமெ இருக்கனும்னு நெனக்கிறது மடத்தனம் இல்iயா?’ 
 ‘ஏன்னு தெரியல எங்கப்பன் சொன்னாரே அதெ நெனச்சுகிட்டே தான் படுப்பேன். இன்னிக்கு நடந்ததை விட நாளைக்கு நல்லதே நடக்கும் அப்படின்னு சொல்லிக் கொண்டே என்னைப் பார்த்தான்.’
 நான் அவனைப்பார்த்தேன். ‘சார் பஸ் வந்திடுச்சு,’ ன்னு சொன்னான்.
 எழுந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றின ஒன்று வாழ்வை நகர்த்துவதில் பெருமாளுக்கு பயம் கிடையாது.
 மற்றொன்று பெருமாளைப் பற்றி அண்ணாமலை சொன்னது, அந்த ஆள் சொன்னது உண்மைதான் என குமார் சாரிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

ஏதோ இன்று நான் போகவேண்டிய தூரம் ரொம்பவும் தொலைவாகத் தோன்றியது எனக்கு.

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 4விமரிசனம்: இரு குறிப்புகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *