தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

author
2 minutes, 7 seconds Read
This entry is part 15 of 18 in the series 21 ஜூன் 2020

              

                                            

             வாய்எழப் புகைந்து கீழ்வயிற்றெரிந்து மண்டுசெந்

            தீஎழுக் கொளுந்திஅன்ன குஞ்சி வெஞ்சிரத்தவே.              [121]

[மண்டுசெந்தீ=மிகுதியான பசி நெருப்பு; கொளுந்தி=எரிவது;குஞ்சி=தலைமுடி’]

பேய்களின் அடிவயிற்றில் பசித்தீ பற்றி எரிகிறது. அது வாய்வழியே வெளியேறுவது போலத் தோன்றுகிறது. அப்பேய்கள் சிவந்த செம்பட்டை நிறமுடைய தலைகளைக் கொண்டிருப்பனவாகும்.

=====================================================================================                  புரண்டு போத வேரி வாரி போன போன பூமிபுக்கு    

                  இரண்டு போதும் உண்டும் உண்டிலாதபோல் இருப்பவே  [122]

[வேரிவாரி=மதுக்கடல்; புக்கு=சென்று]

            பேய்கள் மதுவானது  கடல் போல எங்கே பெருகிக் கிடக்கிறதோ அங்கு சென்று வேண்டிய மட்டும் நன்கு குடிக்கின்றன. புரண்டு கிடக்கின்றன. நன்கு இரண்டு வேளைகளும் உண்கின்றன. ஆனால் இவற்றின் வயிறு மட்டும் எதையுமே உண்ணாதது போல ஒட்டிக்கிடக்கிறது.

=====================================================================================

                   பாதியில் பிலந்துழாவு பாறுகால மாறுகால்

                  ஓதியில் செவிதுளைத்தி ளைக்கும் முத்துடுப்பவே.        [123]

[பாறு=உலர்ந்த குச்சி; ஓதி=ஓணான்; முத்துடுப்பு=முதிய உடும்பு]

      பேய்களின் கால்கள் உலர்ந்த குச்சி போல இருக்கும். அவற்றை அவைத் தொங்கவிட்டால் அவை பாதாளத்தின் பாதி அளவு இருக்கும். இப்பேய்களின் காதுத் துளைகளில் ஓணானும், உடும்பும் குடியிருக்கும்.

=====================================================================================                          

                   எழும்கடல் பகைப்பிணத்தும் ரவிதிகந்த எல்லைபோய்

                  விழும்கடல் பகைப்பிணத்தும் ஓடிஉண்டு மீள்ள்பவே.      [124]

[ரவி=சூரியன்; திகந்தம்=திசையின் எல்லைகள்]

            சூரியன் காலையில் உதிக்கும்போதும், மாலையில் மறையும்போதும் பல்லாயிரம் அசுரர்களைக்  கொன்று  குவிக்கிறான் என்பது ஒரு நம்பிக்கை. அப்படிச் சூரியன் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் எல்லைகளில் குவிக்கின்ற பிணங்களை எல்லாம் இந்தப் பேய்கள் உண்டு மீண்டு வரும்.

=====================================================================================                      

             எயிறிரண்டு தட்டினூடும் இவ்விரண் டெழுந்துபாழ்

            வயிறறிந்து தாழ்செறிந்து வைத்த ஒத்த வாயவே.           [125]

[எயிறு=பல்;தட்டு=தாடை; இவ்விரண்டு=இரண்டும் இரண்டும் சேர்ந்து நான்கு; தாழ்=தாழ்ப்பாள்]

      பேய்களின் மேலும் கீழும் உள்ள இரண்டு தாடைகளிலும் மொத்தம் நான்கு கோரைப்பற்கள் உள்ளன. அப்பேய்கள் இந்த உலகையே தம் வயிற்றுப் பசிக்கு உணாவாய்க்கொண்டு அழித்து விடாதிருக்க அப்பற்கள் தாளிட்ட கதவுகளாய் இருக்கும்.

=====================================================================================        

             வயங்களில் புறப்பொருப்பில் வேரிவாரி வந்துதிக்

            கயங்களில் கடாம்மிடா மடுத்தெடுத்த கையவே           [126]

[வயம்=நீர்; புறம்-அடுத்து; பொருப்பு=மலை; வேரிவாரி=மதுக்கடல்; திக்கயம்=திசை யானை; கடாம்=மதநீர்; மிடா=குடம்; மடுத்தெடுத்த=குடிக்க எடுத்த

            பேய்கள் நீர் சூழ்ந்துள்ள மலைகளுக்கு அடுத்துள்ள மதுக்கடலில் உள்ள மதுவை முகந்து கொண்டு வரும். திசை காக்கும் யானைகள் சொரியும் மதநீரையும் கொண்டு வரும். அவற்றை இரண்டு குடங்களில் தூக்கித் தம் கைகளால் குடிக்கும்.

=====================================================================================     

       உலர்எலும்பொடு ஒசிநரம்பின் உடலில்நின்ற குடலைபோன்று

      அலர்சிலம்பி இழைசுழன்று வெளிஅடங்க அணிவவே.             [127]

[ஒசியும்=துவளும்; குடலை=கூடு; வெளி=இடைவெளி; அடங்க=மூட;]

      உலர்ந்துபோன எலும்புகளுக்கு இடையே துவளும் நரம்புகளுடன் கூடு போல நிற்கும் பேய்களின் உடலில், சிலந்திப் பூச்சிகள் தங்கள் வாய் நூலால் வலை பின்னி அந்த நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் இடைவெளியாக உள்ள மூட்டையை மூடும்.

=====================================================================================

      குறிக்கும் எம்கொழுக்களுக்கு மிக்குஅடிக் கொடுக்கொடுத்து

      எறிக்கும் எப்பிறைக்கும் எட்டிரட்டி நெட்டெயிற்றவே.         [128]

[கொழு=ஏரின் கொழுமுனை; எறிக்கும்=ஒளிரும்; பிறை=பிறைச் சந்திரன்; எட்டிரட்டி=எட்டின் இரண்டு; பதினாறு; எயிறு=பல்]  

      பேய்களின் கூரிய பற்களுக்கு ஏரின் கொழுமுனையை உவமையாகச் சொல்லலாம். ஆனால் அதை அடித்துத் துரத்திவிட்டு, ஒளிமிக்க வளைந்த பிறைநிலவைக் காட்டிலும் பெரிய, வளைந்த பதினாறு பற்களை உடையவை இப்பேய்கள்.

=====================================================================================

       கதுப்பிறக்க கழுக்களில் பழுக்களைக் கடித்துழிப்

      புதுப்பிணத் திரைப்பு மிக்கடிப் பொருப்பொருப்பவே.    [129]

கதுப்பு=தாடை; கழு=கழுமரம்; பழு=விலா; பொருமல்=பெருமூச்செறிதல்]

      அப்பேய்களுக்குக் கழுமரத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் உடல்களைப் பற்றி இழுத்துத் தம் தாடை கிழியத் தின்றாலும் பசி அடங்காது. இன்னும் புதிதாகப் பிணக்குவியலை விரும்பி அவை பெருமூச்சுவிடும்,

=====================================================================================

      புரக்கும் அற்புதத்தி உயிர்க்கிழத்தி புக்குழித் தமக்கு

      இரக்கம் அற்றிருப்பதற்கு எடுத்து உளைத்திருப்பவே.         [130]

[புரக்கும்=காக்கும்; அற்புதத்தி=அற்புதங்கள் நிகழ்த்துபவள்; கிழத்தி=தலைவி; உளைத்தல்-வருந்துதல்]

      நம்முடைய அறிவுக்குச் சிறிதும் எட்டாத அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய இறைவி புகுந்துள்ள இடமான சிவபெருமான், இன்னும் தங்களைக் கவனிக்காமல் இருப்பதை எண்ணி வருந்தித் தலைவியான காளியிடம் சில பேய்கள் முறையிட்டு வருந்தும்.

=================================================================================

Series Navigationதொற்று தந்த மாற்று வழிக் கல்விவெகுண்ட உள்ளங்கள் – 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *