‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 18 in the series 21 ஜூன் 2020

  1. நேர்காணல்

தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.

மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.

அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?

கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.

அவள் பணி கேள்விகள் கேட்பது.

அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்

மாதவருமானம்.

”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”

”கி.மு. 300”

”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”

”பி.கி 32”

”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”

ஒரு லட்சம்.

”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”

”ஆறு கோடி”.

”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”

”நான் தான்”.

”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
‘உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?’ என்றேன்.

‘நிச்சயமாக நீங்களில்லை’ என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.

‘நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்’ என்று
ஒரு நாலாந்தரத் திரைப்பாடலாசிரியரைச் சொன்னபோது அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றார் அந்தப் பெண்.

  •  
  • ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

தேவைப்படும் பொருட்கள்:

கொஞ்சம் சாம்பிராணி
நான்கைந்து ஊதுபத்திகள்
எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு

கூடுதல் குறிப்புகள்:

மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும்
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.

புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).

திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).

ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.

ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.

நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.

கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?

இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.

இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.

அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.

சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.

அதைவிட எளிதாக _

இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.


Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பைபிள் அழுகிறது
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *