க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.

author
0 minutes, 15 seconds Read
This entry is part 13 of 23 in the series 26 ஜூலை 2020

எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதைகளைப் படித்தபின் வடசென்னை வாழ்வின் மீது ஒரு மணம் எழுந்தது.  ஒரு பத்து நாளைக்கு அந்தப் பக்கம் போய் தங்கி ‘அவர்களை’ பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.   அவற்றில் பல விஷயங்கள் மனதில் மகிழ்ச்சி தரக்கூடியவை:

தேசம்மா

தேசம்மா சோறு

பொக்னா சோறு

மீன்குழம்பு

இல்லாமல்லி

கல்யாணி

திருப்பாலு

குட்டை கை மல்லய்யா

நந்தவனம் என்கிற இடுகாடு

சுலாப் இன்டர்நேஷனல்

மரண குத்து

மாங்குடி மைனர் இப்படிப் பல.

      இப்படி, க. அரவிந்த் குமார் எழுதிய ‘தேசம்மா’ என்கிற நூலின் தலைப்பை பார்த்ததும் தன்னியல்பாக ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.  சரி, இன்னொரு வடசென்னை வாழ்க்கையை பார்க்கப் போகிறோம் என்று ஒரு எதிர்பார்ப்பு.  எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் சில வடசென்னைக் கதைகளும் இந்த நூலில் இருக்கின்றன.

முதல் கதை மஞ்சு வாரியர்.  ஒரு நீண்ட கதை, சிறுகதைக்கான ஒரு வரையறைக்குள் நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  “நிஷாகந்தி பூக்கும் காலத்தில் இரவில் விழித்திருந்து மொட்டவிழும் முதல் நொடிக்காகக் காத்திருப்பாள் சௌதாமினி’’ – இது நமக்கு ஆச்சரியம் தரும் ஒரு அழகான செய்தியாய் இருக்கிறது.  இந்தக் கதையை தொகுப்பின் முதல் கதையாக வைத்திருக்கக் கூடாது.

தேசம்மா சிறுகதை தொடங்கும்போதே, ‘வில்லியன்’, ‘பரவன்’ என்கிற குல வேற்றுமையை சுட்டிக்காட்டி தொடங்குகிறது.   மீனவர் குல வழக்கு சொற்கள் ஆசிரியருக்கு கைவந்திருக்கிறது.  கதை தளத்திற்கு தகுந்தாற்போல் உவமைகளை கையாண்டிருக்கிறார் –  ‘’வலை கண்ட மீன்களாய் தெறித்தோடினர் சிறுவர்கள்” (2) குளவி வேடனும், சொறி மீனும் ஒண்ணாகுமா? என்பது போல.  ஜாதி ஆணவத்தை ஒரு வரியில் அழுத்தமாய் பதிகிறார், ‘வில்லியனுங்க கடல்ல கால் வைக்கக் கூடாதுனு சொல்லிக்கிட்டு இருக்கேன், என் வூட்டுல கை வைச்சா எப்புடி?’

வில்லியன் மக்கள் கடலேறி மீன் பிடிக்க தடுக்கப்பட்டவர்கள்.  அவர்களில் பிச்சை என்கிற காதலன், கட்டுமரம் ஏறி மீன் பிடிக்கச் செல்வதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருக்கிறான் என்பது அவர்களின் வாழ்க்கை முறையை நமக்கு காட்டுகிறது.

காதலன் இறந்து கிடக்க, ஜாதிப் பிரச்சினை பெரிதாகிறது.  கடலோரத்தில் மீன்பிடி தொழில் செய்யும் எளிய மக்களிடமும் ஜாதிப் பிரச்சினைகள் இருக்கின்றதா என்கிற ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் தருகிறது தேசம்மா சிறுகதை.  ஊருக்குள் அனுமதி மறுக்கப்படுகிற ‘காட்டாயி’ தற்கொலை செய்து கொண்டதும் ‘தேசம்மா’வாக பார்க்கப்படுவது மட்டும் கதையில் கொஞ்சம் ஒட்டாமல் தெரிகிறது.  காரணம், தேசம்மா என்கிற கடல் தெய்வ வழிபாட்டின் தொன்ம்ம் குறித்தான எந்த சுட்டலும் இக்கதையில் இல்லை, அதனோடு காட்டாயியின் குணாம்சம் எங்கும் பொருத்திக் காட்டப்படவில்லை என்பதால் இருக்கலாம்.

“வருத்தச்சி கதையில், ‘ஆம்பளைக்குப் பாடு கடல்ல, பொம்பளைக்குப் பாடு கரையில…” என்று ஒரே வரியில் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை கூறுகிறார்.  கடலால் மாண்டுபோகிற ஆண்களால்,  ‘வருத்தச்சி’ என்கிற பெண்கள் சமூகம் ஒன்று உருவாகியிருப்பதே நமக்கு தெரிவதில்லை.  நிலையாமை என்பது நிரந்தரமாய் அங்கு நங்கூரமிட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறார்.  கடலுக்குள் தொழிலுக்குச் செல்கிறவர்கள் யாராவது உயிரிழந்தால், அந்த போட்டின் டிரைவர்தான் அதற்கு முழுப் பொறுப்பு.  கொலை வழக்காகத்தான் அது பதிவு செய்யப்படும் என்று எழுதியிருக்கிறார்.  இந்த சட்டம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.  சட்டம் செய்பவர்கள் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதை அறிவார்களா?

மீன்பிடி தடைக்காலம் என்பது அரசாங்கத்தின் ஒரு நல்லெண்ண அடிப்படையிலான செயல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனால் அதனுள்ளும் இருக்கிற அரசியல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.  வாழ்க்கை முழுக்க, தினமும் கடுமையாக உழைத்து துயரப்படுகிற ‘வருத்தச்சி’ களின் வாழ்க்கையை துயரோடு சொல்கிறார்.  ஒரு நாள் சற்று அதிகமாக சம்பாதித்துவிடுகிறாள்.  பொறுக்காமல் சுனாமி வந்து சுருட்டிச் செல்கிறது அவர்களை.  யாரை நோவது?

‘சாமந்தி’, ‘நாயக்கர் காலம்’ போன்றவை வழக்கமான கதைகளாக உள்ளன.  புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.  ‘ராஜாதி ராஜா’ எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிற ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் கதை. நிகழ்வின் உண்மைத்தன்மை காரணமாக கதையா கட்டுரையா என்கிற குழப்பத்தை தருகிறது.

பெரும்பாலான கதைகளிலும் முடிவில் மரணத்தை வைக்கிறார்.  மரணம் என்பது எல்லோரைப் போலவும் இவரை மிகவும் பாதித்திருக்கிறதா அல்லது மரணம் தான் பல பிரச்சினைகளுக்கு தீர்வு என்று சொல்ல வருகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

‘வளையல்’ – ஜாதீய பேதங்களால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டு, ஒரு சிறுமி தற்கொலை செய்து கொள்கிற ஒரு துயரமான கதை.  ஆனால் ஒரு பத்திரிக்கைச் செய்தியைவிட ஒரு புனைவு எப்படி மேம்படுகிறது, எப்படி வேறுபட்டு வாசகனை ஈர்க்கிறது என்பதை ஒரு எழுத்தாளர் கண்டுகொண்டு அதன்படி வெளிப்படுத்தவேண்டும்.  அதுவே அக்கதையின் வெற்றியாக இருக்கும்.  அந்த நோக்கில் அரவிந்த் குமார் இன்னும் முயற்சி செய்ய வேண்டும்.

சிவிகம்பூ சேரா – மீண்டும் ஒரு கதை மட்டுமே. இஸ்லாமிய குடும்பத்து வழக்காடு மொழியை, சொற்களை சேகரித்து கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பது பாராட்டிற்குரியது.  தன்வீர் என்கிற மாமியாரின் சொற்கள் தேள் போல கொட்டுகின்றன.  அவளின் மனமாற்றம் ஒரு நல்ல பாத்திர படைப்பு.

ஹவில்தார் குப்புலிங்கம் நம் பக்கத்து அக்கத்தில் நடக்கிற ஒரு குடும்ப பிரச்சினை.  பிரச்சினைக்கான காரணத்தை சூசகமாக சொல்கிறார்.

டினு மோரியா – திருடர்களுக்கான தொழில் நுட்பங்களை விரிவாக  சொல்கிறது.  வேதகிரியின் சங்கு, அடிமை பாலகனே கதைகள் அமானுஷ்ய கதைகள் போலிருக்கிறது.

கடைசிச் சொத்து ஒரு வரலாற்று புனைவு.  மாசாத்துவானின் பொறாமையை மையமாக வைத்து, அதுவே கோவலனின் கொலைக்கு காரணமாக முடிவதாக எழுதியிருக்கிறார். மாசாத்துவானின் மனநிலையை புதிய கோணத்தில் பார்த்திருக்கிறார்.  ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நம்மை யோசிக்க வைக்கிறார். இப்படியொரு பார்வைக்கு சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.  சரித்திர கதைக்கான ஒரு நடையை கையாள முயற்சித்திருக்கிறார்.

சிறுகதைகளுக்காக அரவிந்த் குமார் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிகழ்வுகளும், களமும், மக்களும் பாராட்டுக்குரியவை.  சிறுகதைகளுக்கான வரையறை என்னவென்பதை அறிந்து கொண்டு கதைகளை மேலும் மெருகூட்ட முயற்சி செய்வாரேயானால் இவர் ஒரு சிறந்த எழுத்தாளராக பரிமளிப்பார் என்பதில் ஐயமில்லை.  மேலும் வளர வாழ்த்துகிறேன்.

சீராளன் ஜெயந்தன்

வேளச்சேரி

31.5.2020

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 9இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *