வெகுண்ட உள்ளங்கள் – 9

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 23 in the series 26 ஜூலை 2020

கடல்புத்திரன்

                                           ஒன்பது

ஐயனார் திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது அது அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று,  ஆடு  வெட்டும் வேள்வி சிறப்பாக நடை பெறும். அன்று எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக் கொள்ளும். ஆண் பகுதியினர் வீட்டிலே கசிப்பு. கள் போத்தல்களைச் சேர்ப்பார்கள். பெண்கள் வீடு மணக்க ஆட்டுக்கறி சமைப்பார்கள்.

ஒவ்வொரு வள்ளக்காரர்களும் இரவில் தம்மொடு தொழிலுக்கு வந்தவர்களை. வருபவர்களை, நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்கள்.

செல்லன் அப்படி கனகனைக் கூப்பிட்டிருந்தான். வீட்டுக்குள் நுழைகிற போது ருசியான மணம் அவனை மயக்கியது. அவன் வயசு மட்டத்தில் ராஜன், குகன், சபேசன் போன்ற பெடியள்க‌ளும் செல்லன் வயசு மட்ட ஆட்களுமாக பலர் இருந்தனர்.

ராஜன், அண்மைக் காலமாக ஊரால் விமர்சிக்கப் பட்டு வருபவன். வடக்கராலியில் இருக்கிற‌ குலனைப் பகுதியில் மணம் முடித்தவன். மனைவியைத் தினமும் அடித்துத் துன்புறுத்துவதாக அவனைப் பற்றிச் செய்திகள் சதா வந்து கொண்டிருந்தன. வதந்திகள் பல. அதனால் பொதுவாக அவனை பலருக்குப் பிடிக்காதிருந்தது.

வெறியில் இருந்த அவன் கனகனை விமர்சிக்க வெளிக்கிட்டான். “பெரிய‌ இயக்கப் பிரபு வந்திட்டார்’ நீ அவனின் (திலகனின்) கையாள் தானடா” என சேட்டைப் பற்றினான். “என்னைப் பற்றிக் கதைக்க உனக்கு என்னடா இருக்கிறது, பொத்தடா வாயை” என அவனைப் பிடித்துத் தள்ளினான். அவன் தொடர்ந்து தாக்க முயற்சிக்கவே.கனகனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. உருட்டித் தள்ளினான். பலருக்கு இவன் அவர்களுடன் சேர்வது பிடிக்காமலே  இருந்தது. அந்த நினைப்பினாலும் கனகன், மறிக்க வந்தவர்களையும் உதைத்துத் தள்ளினான். செல்லன் பாய்ந்து இவன் திமிர,திமிரப் பிடித்தான். மற்றவர்கள் ராஜனை அமுக்கினார்கள்.

“வளர்ந்து விட்டவன்’ என்ற நினைப்பு செல்லனுக்கு அப்பவே உறைத்தது. தனியாளாக தொழில் செய்யக்கூடிய வல்லமை படைத்தவன். ராஜனைப் பார்த்தான். அவன் சிறிது மோடன்.

மருண்டு நின்ற கமலத்தையும் செல்லமணியையும் பார்த்தான். அவனுள் ஏதோ யோசனைகள் எழுந்தன. ஒருமாதிரி இருவரையும் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தான். பரிமாறுகிற போது கமலம் கனகனை அனுதாபத்துடன் பார்த்தான்.

கை கழுவியதோடு அவன் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டான்.

மனசு  குழம்பியிருந்தது. நேரே வீட்டை போய் சேர்ந்தான். நேரம் சாமத்தை எட்டுவதாக இருந்தது. கதவு சாத்தியிருந்தது.

தட்டி எழுப்ப மனம் இல்லாததால் முன்னால் இருந்த மண் விராந்தையில் காலை நீட்டிப் படுத்தான். குளிர் தரை மனசுக்கும் இதமாக இருந்தது. முகிற் கூட்டங்களின் அசைவும் நட்சத்திரங்களின் மினு மினுப்பும் சிந்தனை ஒட்டத்தைத் தீவிரப் படுத்தியது.கூடுதலாக உழைப்பைப் பெற வழிபார்க்க வேண்டும். எப்படி முயலலாம் ?, தற்போதைய நிலையில் வீட்டுச் செலவுக்கு முப்பது முப்பதைந்தே வருகிறது. அதோடு, கொஞ்சம் கறியும் வருகிறது. சிறிய வள்ளங்களில் தொழில் நடப்பதால் அங்கே வளப்பம் நிலவவில்லை. பெரிய வள்ளம் இல்லாதிருந்ததும்,கடல் வலயச் சட்டங்களும் அவர்களைப் பெரிதாகப் பாதித்திருந்தன.

‘சுயமான தொழில் ஒரளவு பரவாயில்லை போல பட்டது. பகலிலே கடையும் ஒன்று போட்டால் ஒரளவு சமாளிக்கலாம் என நினைப்பு திடப்பட்டது.

அப்படியே கிடந்தவன் தூங்கிப் போனான்.

அடுத்த நாள் தொழிலுக்குப் போக அலுப்பாக இருந்தது !. வாசிகசாலைக்குப் போய் பேப்பரைப் பார்த்து விட்டு.செல்லன் வீட்டுக்குப் போனான். விருந்தின் குப்பைகள் துப்புரவாக்கப் படாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. வலையை எடுத்துப் போட்டு சரி பார்க்கத் தொடங்கினான். திருவிழாவின் போதும் நண்பர் செட்டைக் காணவில்லை. பிறகும் கண்ணில் படவில்லை. ‘எங்கே போய் தொலைந்து விட்டார்கள்?” அவனால் யோசிக்க முடியவில்லை.

மன்னி வீட்ட போகாமல் வந்திருந்தான். கமலம் தேத்தண்ணி கொண்டு வந்து வைத்தாள். அவளுடன் கதைத்துப் பார்த்தால் என்ன? என்று தோன்றியது. மன்னியிட சினேகிதி . இவளுக்கு திலகனைப் பற்றி எதுவாச்சும் தெரிந்திருக்கும்.

“மச்சான் ஆட்களை காணவில்லை. உனக்கும் ஏதும் தெரியுமா ?” என்று கேட்டான். அவள் அவனைப் பார்த்து முறுவல் பூத்தாள். நேற்று நடந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.

“அவயள் காம் வீட்டை திரும்ப கொடுத்திட்டினமாம்” என்றாள். மேற் கொண்டு கேட்க தயக்கமாக இருந்தது. மன்னியிட்ட ஒருக்கா போய் வருவது நல்லது போலப் பட்டது. “அப்பா வந்தால் சொல்லு. மன்னி வீட்டை நிற்கிறேன்” என்று விட்டு கப்பை அவளிடம் கொடுத்து விட்டு எழும்பினான்.

அங்கே. மன்னி சமைத்துக் கொண்டிருந்தார். “உன்ரை கொண்ணரை காணலை. இண்டைக்கும் ஏதும் புதுப் பார்ட்டி நடக்கிறதோ?” என்று கேட்டார். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. செல்லனையும் காணவில்லை. ஒருவேளை இருக்குமோ ? என்று நினைத்தான். “தெரியவில்லை” என பதிலளித்தான்.

, இண்டைக்கு தொழில் இருக்காது போல தோன்றியது. “மச்சான் ஆட்கள் எல்லாம் எங்கே மன்னி” என்று விசாரித்தான். “போட் ஒட்டத்தை கையளிக்கினம்’ என்றான். ‘நீ காணலையா?” என்றார். “அப்பா வந்திட்டார். உன்னை வரட்டாம்” என்றாள் மன்னியிடம் வந்த‌ கமலம். தொழிலுக்குப் போகப் போறார் என்று புரிந்தது. படலையைத் திறந்து கொண்டு உள்ளே போகிற போது செல்லன் வலையை ஒழுங்கு பண்ணுவதில் மும்முரமாக இருந்தான்.

தொழிலில் ஈடுபடுற போது.சுயநினைப்புகள் பறந்து போகிறது.

வலையை இழுத்து கடலில் போட்ட பிறகு சிறிது ஒய்வு கிடைத்திருந்தது.செல்லன் பீடி ஒன்றை எடுத்து பத்த வைச்சான். கனகன் அவனிடமிருந்து வெத்திலை பாக்கை வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். நிலா வெளிச்சம் இரவை பகலாக்கியது. கோட்டைப் பக்கமிருந்து அடிக்கப்பட்ட ஒரு குண்டு எங்கேயோ விழுந்து வெடிக்கிற சத்தம் கேட்டது. கடற்கரைப் பக்கமிருக்கிற அந்தக் கோட்டையால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அயலில் இருந்த குடியிருப்புகளும் கடை கண்ணிகளும் அதிகமாகக் கதி கலங்கின. “சரிதான். இவங்கட கொட்டத்தை அடக்கினால் எவ்வளவு  நிம்மதியாக இருக்கும்” செல்லன் அலுப்புடன் பெருமூச்சு விட்டான்.

சத்தம் அடங்கிவிட இயல்பான போக்கில் கதைக்கத் தொடங்கினார்கள்.

ராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. இவனைப் பற்றிய விமர்சனம் வாலையம்மன் பகுதி முழுதும் பரவியிருந்தது. ‘இவயள்ட பெடியன் இன்னொரு பகுதியில் முடிச்சுவிட்டு தலை கீழா நிற்கிறான்’ என்ற போது ஊரே திட்டியது. குலனைக்கும் இவர்களுக்கும் இரத்தத் தொடர்பு இருந்தது. இவர்களின் ஒரு வேர்ப்பகுதி (சகோதரர்களின்
பிள்ளைகள் என) அங்கே, வேரூன்றி , தொழிலை விட்டு படிப்பு உத்தியோகம் என‌  இவற்றில் வெகுவாக முன்னேற்றம் அடைந்து விட்டிருந்தது. எழுபது எழுபத்தைந்து குடும்பங்கள் இருந்த போதும் பார்க்கிறபோது எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள்.

தொழில் செய்பவர்க ளை எண்ணி விடலாம். ஒன்றிரண்டு பேராக அருகிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது .அந்த அருகிற வீதத்தில் அகப்பட்ட ஒரு குடும்பம். அவளுடைய அப்பன் கடலுக்குப் போய் வந்து கொண்டிருந்தவன்.அவனுக்கு புத்தியும் சிலவேளை சுகமில்லாது போய் விடும். அங்கிருந்த‌ அவளின் சித்தப்பன்.அண்ணனின் போக்கைக் கவனித்து விட்டு நல்ல பெடியன் என்று ராஜனுக்கு கட்டி வைத்திருந்தார். படிப்பறிவுக்கு வாலையம்மன் பகுதி , அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. அதனால் அவன் உடம்பு வளர்ந்திருந்த காட்டு மனிதன் போல இலகுவில் பொறுமையிழப்பவனாய் இருந்தான்.தொழில் செய்கிறவன் மகள் என்பதால் அவளை முடித்திருந்தான். இளவயதிலே, அவள் தாய் இறந்து போனதும், தகப்பன் தாய் மேல் வைத்திருந்த அளவுக்கு அதிகமான அன்பு அப்பனைக் குடிகாரனாக்கி விட்டிருந்தது. விதி, அவளை மோசமான நிலைக்குத் தள்ளி விட்டது. அதனால் அவள் பிரச்சனைக்குள்ளான போது அனாதரவானாள்.

.அவள் சிறு வயசு பெட்டையாய் வேறு இருந்தாள். வயசு வித்தியாசம் கூட‌ சிறிது அதிகம்.இவன் எதிர்பார்ப்புக்கும் அவளுக்கும் பெரிய இடைவெளி வீழ்ந்தது. அதை அறியும் வயசு  அவளுக்கு இருக்கவில்லை.அது இருவர் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி விட்டது.

“உவன் மனிசியைப் போட்டு அடிக்கிறானாம்” கனகனின் பேச்சைக் கேட்டு விட்டு செல்லன் சிரித்தான்.

“ஊர் உலகத்தில் நடக்காததா?” உனக்கு அவன் மேல் ஆத்திரம்” என்றான். தொடர்ந்து “குடும்ப விசயம் பாரு. மோசமானாலும் யாரும் கதைக்கேலாது” என்றான்.

“வாசிகசாலைக் குழு தலையிடலாம் தானே” என்றான் அவன். “தம்பி உவயளோட சேர்ந்து இப்படிக் கதைக்கிறாய்” என்றான். இப்படித் தர்க்கித்துக் கொண்டிருக்கிற போது பிளாஸ்டிக் படகு ஒன்று தீவுப் பக்கமாக நோக்கி இரைந்து கொண்டு வந்தது.

கூப்பிடு தொலைவில் வந்த போது அன்டன் மோட்டரைப் பிடித்திருப்பது தெரிந்தது.அவன் ‘அன்டன்’ என்று கத்திக் குரல் கொடுத்தான். அவனும் சிலோ பண்ணி.திருப்பிக்  கொண்டு வள்ளத்திற்கு  கிட்ட ஒட்டி வந்தான். அவனோடு நகுலனும், திலகனும் இருப்பது  தெரிந்தது. “என்னடாப்பா, விசயம் . பெரியவர் ஒருத்தரையும் ஊர்ப் பக்கம் காணலையே ?” என்று கேட்டான்.

“அக்கா சொல்லியிருப்பாவே “ என்றான் திலகன்.

“கொடுத்து விட்டாச்சா?” என்று கேட்டான்.

“ஒம் ! ” என்ற அன்டன், “இனி, இவனும், தீவுக்கு போகப் போறான்” என்று சோகமாக. சொல்ல‌ ,செல்லனுக்கும் திலகன் மேல் அனுதாபம் பிறந்தது. “தம்பி அக்காவைப் பார்க்க அடிக்கடி வருவியோ?” என்று கேட்டார். “வராமல் அண்ணை.கிழமையிலே ஒரிரு நாள் வரக் கூடியதாகயிருக்கும். இந்த ஏ.ஜி.ஏ.யிலே தொடர்ந்து வேலை செய்யக் கேட்டிருக்கிறேன். ஒம் என்றவர்கள்’ எப்படியும் இங்காலப் பக்கம் வந்து விடுவேன்” என்று பதிலளித்தான்.

“எங்களை எல்லாம் மறந்து விடுவியோ?” கனகு கேட்டான். “எப்படி மறக்க முடியும்?” என அவன் கண் கலங்க பதிலளித்தான்.

“சரி, கனகு நாங்கள் தீவு எ.ஜி.எ.யை சந்தித்து விட்டு திரும்பவும் வேண்டும். பிறகு சந்திக்கிறோம்” என்று விடை பெற்றான். கையசைவோடு பிரிந்து சென்றார்கள்.
நட்பை சுமந்த அவர்களின் நடத்தைகளை சூழவுள்ளவர்கள் எப்படி விமர்சித்தாலும் தொடரவே செய்யும்.

படகு விரைந்தது. அன்டனும்,நகுலனும் திலகனோடு தீவுக்கே போய் விட்டிருந்தார்கள்.ஒவ்வொரு நாளும் மிதவைச்சேவையும்  நடை பெற்றுக் கொண்டே இருந்தது. படகு  சேவையும் நடை பெற்றது. படகுக்காரர்கள்,பாதை தெரிந்தவர்களையும் பாவித்துக் கொண்டிருந்தார்கள். சிலர், சுகவீனம் என்றால் படகிற்கான வாடகையை 75 ரூபாவைப் பெற்று விட்டு பெடியள்களிடமே சேவையில் ஈடுபட விட்டு விடுகிறார்கள்.அன்டன்,நகுலனைப் போல கடலைத் தெரிந்த பெடியள்கள் தீவுப் பகுதியிலும் இருந்தார்கள்.கரைக்குப் போனால் அன்டனையும் நகுலனையும் சிலவேளை வெவ்வேறு படகுகளிலும்,சிலவேளை ஓரே படகிலுமாகக் காண முடியும் திலகனை அவர்களைப் போல அப்படி பொதுவாக‌ காண முடிவதில்லை.

Series Navigationமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்றுக. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *