கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

author
1
2 minutes, 38 seconds Read
This entry is part 4 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்

      ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.

      அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டு வியந்தேன்.

      கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? – உன்

      கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?

      என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்களும் கேட்டு இருப்பீர்கள். ஜெய்சங்கரும் கே.ஆர்.விஜயாவும் அந்தப் பாடலுக்கேற்ப நடித்துள்ளார்கள். நான் படம் பார்க்கவில்லை என்பதால் பாட்டின் கதைச்சூழல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாட்டின் சொல்லிலும் பொருளிலும் கரைந்து போனேன்.

      பாடலை எழுதியவர் கண்ணதாசன். அவரைக் குறித்து எத்தனையோ வலைக்காட்சிப் பதிவுகளும் தொலைக்காட்சிப் பதிவுகளும் வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலின் சிறப்புக் குறித்து யாரும் ஏதும் சொல்லவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எழாமல் இல்லை. இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம்.

      அந்தப் பாட்டின் பொருளுக்கு ஏற்ற சூழ்நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் வரக்கூடும்.

      காதல் பருவத்தில்… காதலி காதலனைச் சந்தேகப் படுவது உண்டு. காதலன் வேறு பெண்ணுடன் பேசிவிட்டால் போதும். துயில் மாத்திரைகள் விழுங்கினாலும் காதலியின் மனம் உறங்கவே உறங்காது. அவளின் மூச்சுக் காற்று பட்டுத் தீவிபத்துக் கூட ஏற்படலாம்.

      கணவன் அடிக்கடி தாமதமாக வந்தாலும்- கணவனுக்கு அடிக்கடி எந்தப் பெண்ணிடம் இருந்தாவது அழைப்புகள் வந்தாலும்- யாரேனும் ஒரு பெண்ணுடன் கணவன் நீண்ட நேரம் சிரித்துப் பேசினாலும் மனைவியின் மனதில் சந்தேகச் சூறாவளி சுழன்று அடிக்கும்.

      “வள்ளலார் நகருக்கு எப்படிங்க போகணும்” என்று வழிகேட்ட பெண்ணுக்கு வழிகாட்டிய கணவனை வறுத்து எடுக்கும் மனைவி எங்கேனும் இருக்கலாம். “எத்தனையோ பேர் இருக்காங்க. அவ உங்ககிட்ட வந்து ஏன் வழி கேக்குறா” என்ற கேள்வியில் இருந்து திருவிளையாடல் ஆரம்பம் ஆகிவிடும்.

      இப்படிச் சந்தேகப்படும் பெண்களைச் சமாதானம் செய்வது என்பது சாதாரணமான ஒன்றல்ல. உண்மையைப் புரிய வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. என்னதான் விளக்கம் சொன்னாலும்… அந்த விளக்கத்தில் இருந்தே சந்தேக இழை திரித்து மேலும் மேலும் பின்னிச் செல்வார்கள். சந்தேகம் என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. ஆண்களையும் அது ஆட்டிப் படைக்கும்.

      இதுபோல் ஒரு சந்தேகச் சூழலில்… காதலன் காதலியைச் சமாதானப் படுத்தவும் உண்மையைப் புரிய வைக்கவும் முயல்கிறான். அந்தச் சூழலில் இந்தப் பாடலைப் பொருத்திக் கேளுங்கள்.

      பாடல் வழியாக இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடலில்தான் கவிஞரின் திறன் பளிச்சென மின்னுகிறது. ஒன்றை ஒன்று மிஞ்சிச் செல்வது போலவே இருவரின் வாதங்களும் ஏறுமுகத்தில் ஏறிக்கொண்டே இருக்கும். இப்படி எழுதுவது என்பது எல்லாராலும் முடியாது.

            கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? – உன்

            கண்ணே உண்மைசொல்லும் சாட்சியா?

      கண்ணால் காண்பது எல்லாம் உண்மையாகி விடாது. பனை மரத்தின் கீழ் அமர்ந்து பால் பருகினாலும் கள் குடித்தான் என்றுதான் உலகம் நம்பும். அந்தப் பழைய பழமொழி போலத்தான் நாம் காணும் காட்சிகள் இருக்கும் என்பதாக இந்த வரிகளின் மூலம் காதலன் சொல்கிறான். டாஸ்மாக் கடை இருக்கும் வழியாக நடந்து வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறான் என்றே நம்புவார்கள் என்று புதுமொழியும் எழுதிக் கொள்ளலாம்.

      பெண்கள் என்றாலே அவர்களுக்குச் சந்தேகம் அதிகம் இருக்கும் என்று எல்லாரையும் போலவே அவனும் நினைக்கிறான். பலவீனர்களிடத்தில் சந்தேகம் எழும் என்பது உளவியல் சார்ந்த கருத்து. பெண்களும் பலவீனம் ஆனவர்கள்தானே! அதனால் அவளைப் பார்த்து, “தேகம் முழுவதும் உனக்குச் சந்தேகம் தானா” என்று கேள்வி கேட்கிறான். அவள் முகம் சிவந்துபோய் மேலும் கோபப் படுகிறாள். கோபப் படும்போது கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்தால் கோரமாகத் தெரியும். ஆனால் அவளின் கோபமும் அவனுக்கு அழகின் அலங்காரமாய்த் தெரிகிறது. அதுதான் அன்பின் மாயவித்தை. “உன் கோபம் வான வில்லின் வர்ண ஜாலமா” என்று வருணனை செய்கிறான். பெண்ணிடத்தில் அழகை வருணனை செய்தால் அவர்கள் மயங்கி விடுவார்கள் என்பது ஆண்கள் கண்டறிந்து வைத்துள்ள கைமருத்துவம். அந்த வருணனைக்கு எல்லாம் அவள் மயங்கவும் இல்லை. சந்தேகம் அகலவும் இல்லை.

            அதைத்தான்…

            இளம்பெண் தேகமே வெறும் சந்தேகமா?

            கோபம் வான வில்லின் வர்ண ஜாலமா?  – என்கிறான்.

அந்த வருணனையைக் கேட்டதும் அவள் அலட்சியமாகப் பழித்துக் காட்டுகிறாள்.

      காதலன் அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறான். “மூடி இருக்கிற கைகளில் என்ன இருக்குன்னு எப்படிச் சொல்ல முடியும். அதில் முத்தும் இருக்கும்” என்கிறான். “ஏன் அதில் முள்ளும் இருக்கலாம்ல,” என்று அவள் சொல்கிறாள்.     “உன்னைத் தேடி வந்திருக்கிற இந்தக் கண்களுக்குள் இருக்கும் காதலை… அதன் தேவையை நீ அறிய மாட்டாயா” என்கிறான். அந்தக் கண்களுக்கு ஒரு பார்வை அல்ல… நூறு பார்வைகள் இருக்கும் என்று பதிலடி கொடுக்கிறாள்.   

            “மூடிக் கொண்ட கைகளிலே

                  முத்தும் இருக்கும் – ஒரு

                  முள்ளும் இருக்கும்.

            தேடி வந்த கண்களுக்குத்

                  தேவை இருக்கும் – நூறு

                  பார்வை இருக்கும்.

சொல்வதை நம்பாமல் இப்படிப் பதில் சொன்னால் என்னதான் செய்வான் அவன்.

      “உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இனி இல்லை” என்றவாறு அவள் நடந்து கொள்வதை அவன் சண்டையாகக் கருதவில்லை. காதலியின் அன்பைப் புரிந்தவன் என்பதால் அதை ஊடலாகவே எண்ணுகிறான். “என்ன செய்வது.. ஊடல் செய்ய உனக்கு நேரம் இருக்கு” என்பான். அதற்கு அவள் “என் நெஞ்சில் எவ்வளவு பாரம் இருக்குன்னு உனக்குத் தெரியுமா” என்கிறாள்.  “ஒருநாள் உண்மை தெரியும்போது உன் நெஞ்சம் திறக்கும். அப்ப என்னைப் பத்தி தெரிஞ்சிக்குவ” என்பான். அதையும் அவள் நம்ப மாட்டாள். அப்படி உண்மை தெரிவதாகக் காட்டும் நாடகத்திலும் வஞ்சம்தான் இருக்கும் என்கிறாள்.

            ஊடல் செய்ய பெண்களுக்கு

                  நேரம் இருக்கும் – நெஞ்சில்

                  பாரம் இருக்கும்

            உண்மை கண்ட பின்னாலே

                  நெஞ்சம் திறக்கும் – அதிலும்

                  வஞ்சம் இருக்கும்.

இப்படி எடுத்து எறிந்து அவள் பேசினாலும் அவன் விக்ரமாதித்தன் போல் மனம் தளராமல் மீண்டும் சமாதானம் முயற்சியில் ஈடுபடுகிறான். “ஏதோ உன்னப் பாத்துப் பேசி சமரசம் ஆகலாம்னு வந்திருக்கேன். ஆனால் நீ ரொம்ப கோபப்படுறீயே” என்று சொல்கிறான். “என்னை ஏன் பார்க்குறே? அங்க அவளைப் பார்த்தது போதாதா” என்று குத்திக் காட்டுகிறாள். அவள் மனம் இரங்கியும் வரவில்லை இறங்கியும் வரவில்லை என்பதை உணர்ந்த அவன் சொல்கிறான். “இவ்ள காலம் நாம பழகினோம் பேசினோம். இப்ப பிரியிறதுன்னா அது எவ்ளோ பாவம்னு தெரியுமா உனக்கு” என்று அவளின் பாவச் செயலை உணர்த்துகிறான். ஆனால் அதற்கும் அவள்  சளைக்கவில்லை. “இது ஒண்ணும் பாபம் இல்ல. இப்பவாவது ஒங்களப் பத்தித் தெரிஞ்சுதே. யப்பா இது என் பெண்மைக்கு லாபம்” என்று உறுதியாக இருக்கிறாள். இதைவிட அவனைக் கழற்றிவிட வேறு வார்த்தை தேவையில்லை.

            பார்த்துக் கொஞ்சம் பேச வந்தால்

                  எத்தனை கோபம் – அங்கே

                  பார்த்தது போதும்

            பழகிய பின் பிரிவது என்றால்

                  எத்தனை பாபம் – என்

                  பெண்மைக்கு லாபம்

      இவ்வளவு நடந்த பிறகும்… அவள் முற்றிலும் வெறுக்கிறாள். எனினும் அவன் தன் முயற்சியைத் தொடருகிறான். அவள் மீது அவன் கொண்ட தூய காதல்தான் அதற்குக் காரணம்.

      கடைசியாகக் கடவுளை அழைத்துவர முடிவு செய்துவிட்டான். “எனக்காகத் தெய்வமே நேரில் வந்து சாட்சி சொன்னாலாவது உன் கோபம் தீரும் இல்லியா” என்கிறான். அதற்கு அவள்,  “ஓ… கடவுளும் பொய்சாட்சி சொல்லக் கிளம்பிட்டாரா” என்று தெய்வத்தையே நம்ப மறுக்கிறாள்.

      கடவுள் வந்து சொன்னாலும் அவள் நம்ப மாட்டேன் என்கிறாள். வேறு என்னதான் ஒரு காதலன் செய்ய முடியும். எப்படித்தான் அவளை நம்ப வைக்க முடியும்? என்ன செய்துதான் அவளைச் சமாதானப் படுத்த முடியும்? ஒரு வழியும் அவனுக்குத் தெரியவில்லை. நமக்கும்தான் தெரியவில்லை. “உன் கைகளில் நான் உயிர விட்டிடுறேன். அப்பவாவது உனக்கு என் மீது பாசம் வந்தா சரி” என்று மனம் நொறுங்கிப் போய்  இறக்கத் துணிகிறான். இந்த நேரத்தில் எந்தப் பெண்ணுக்கும் இரக்கம் தோன்றிவிடும் என்றுதான் எல்லாரும் நம்புவோம். ஆனால் அதற்கும் அவள் “உயிரும் வேஷம் போட்டு நடிக்குமா?” என்று கேள்விக் கணை  தொடுத்து அவனை ஏற்க மறுக்கிறாள். கோபத்திலிருந்து கொஞ்சமும் இறங்க மறுக்கிறாள்.

            தெய்வம் வந்து சாட்சி சொன்னால்

                  கோபம் தீருமா? – தெய்வம்

                  பொய்யும் கூறுமா?

            கைகளிலே உயிர் இழந்தால்

                  பாசம் தோன்றுமா? – உயிரும்

                  வேஷம் போடுமா?

      ஆமாம்…

      ஆதாம் ஏவாளுக்குப் பிறகு… காதலனைச் சந்தேகப் படாத காதலி யாரும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

…….

Series Navigationகண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?
author

Similar Posts

Comments

  1. Avatar
    Valavaduraiyan says:

    திரைப்படப் பாடலில் கூட எப்படி இலக்கியத்தைக் காணலாம் என்பதைக் கட்டுரை மிகச் சிறப்பாக விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *