மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு

author
0 minutes, 6 seconds Read
This entry is part 16 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

அழகர்சாமி சக்திவேல்

விஜயா என்கிற விஜயன்

முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில சீனர்களும், சில மலாய்க்காரர்களும், சமூக சேவை செய்ய, வந்து இருந்தார்கள். இதோ, எய்ட்ஸ் பரிசோதனை செய்யும், மொபைல் லேப், டெஸ்டிங் வேனும், வந்து சேர்ந்து விட்டது. எல்லா, சமூக சேவகர்களும் சுறுசுறுப்பானோம். வேனில் நான் ஏறினேன். தேவி, கீழேயே நின்று, எய்ட்ஸ் பரிசோதனை செய்ய வந்தவர்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளைச் செய்தாள். வந்தவர்களுக்கு, உட்கார நாற்காலிகள் கொடுப்பது, அவர்களுக்கு, எய்ட்ஸ் பரிசோதனை செய்யும் விண்ணப்பம் கொடுப்பது, பெயர் மற்றும் விலாசம் எழுதாமல், எய்ட்ஸ் குறித்த அவர்களது பிரச்சினைகளை மட்டும், பூர்த்தி செய்ய உதவி செய்வது போன்ற வேலைகள் எல்லாம், தேவி நன்கு செய்து கொண்டிருந்தாள்.

நான், வேனில் இருந்தபடியே, கூட்டத்தை கவனித்தேன். கூட்டத்தில், ஒரு குறிப்பட்ட நபர்கள், அரசாங்கத்திடம் லைசென்ஸ் வாங்காமல் செக்ஸ் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள். செக்ஸ் தொழிலில் கிடைக்கும், குறைந்த வருமானத்தில் வாழும் அந்த செக்ஸ் தொழிலாளர்கள், ஒரு பெரிய சிங்கப்பூர் மருத்துவ கிளினிக்கில் போய், பரிசோதனை செய்யும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள். எனவே, அவர்கள் உயிர்வாழ, இந்த இலவச எய்ட்ஸ் பரிசோதனை சேவை, அவர்களுக்கு அவசியம் தேவை.

கூட்டத்தில் இருந்த, இன்னும் கொஞ்சம் பேர், இந்தியத் தொழிலாளர்கள். இன்னும் கொஞ்சம் பேர், பதின்ம வயதைத் தாண்டிய மாணவர்கள். பாதுகாப்பாய் ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளாதவர்கள். சிலர், ஆணுறை போட்டு, உடல் உறவு கொண்டபோதும், ஆணுறை, இடையில் கிழிந்து போனதால், பயந்து போய், பரிசோதனை செய்ய வந்தவர்கள். இப்படி பல ரகத்தில், கூட்டத்தில் ஆட்கள் இருந்தார்கள். அமைதியின்றி, பதட்டத்துடன் இருந்தவர்களுக்கு, தேவி ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவர்கள ஒவ்வொருவராய், வேனுக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தாள் தேவி.

எனது வேலை, வேனுக்குள் வருபவர்களிடம், எய்ட்ஸ் குறித்த கேள்விகள் கேட்பது, அப்புறம், எய்ட்ஸ் பரிசோதனை செய்வது, பரிசோதனை முடிவுகளை அவர்களிடம் சொல்வது, அப்புறம் கடைசியில், அவர்களுக்கு, ஆணுறையின் அவசியத்தைக் கூறி, அவர்களுக்கு, இலவச ஆணுறைகள் வழங்குவது போன்ற வேலைகள்தான். நான் எல்லா வேலைகளையும், நல்லபடியாக செய்துகொண்டு இருந்தேன். செக்ஸ் குறித்த, அந்தரங்கக் கேள்விகளை, நான், வந்தவர்களிடம் பொறுமையாகக் கேட்டேன். சிலர், உடனே புரிந்துகொண்டு பதில் சொன்னார்கள். சில தமிழ்த் தொழிலாளர்களிடம், செக்ஸ் குறித்த, அந்தரங்கக் கேள்விகளைக் கேட்பது, கடினமாக இருந்தது. அதில் ஒருவரோடு நடந்த சம்பாஷணை இது.

“அண்ணே.. வேனுக்குள் வாங்கண்ணே..”

“வரேம்மா.. ஏதோ இலவசமா கொடுக்கறதா சொன்னாங்க. அதான் உள்ளே வந்துட்டேன். 

“நீங்க உங்க மனைவி தவிர வேற யார் கூடவாவது செக்ஸ் பண்ணுவீங்களா?”

தயங்கிக்கொண்டே, “ம்ம்.. பண்ணுவேன்.. குடும்பம் இங்கே இல்லே.. அதனால.. மாசத்துக்கு ஒரு முறை.. பொம்பளைக்கிட்டே போவேன்.”

“ஓரல் செக்ஸ் பண்ணுவீங்களா அண்ணே?”

“அப்படின்னா”

நான், எனது குரலைத் தணித்து, “அண்ணே.. கீழே நாக்குப் போடுவீங்களா?”

அவர், பதட்டத்துடன் “சே.. சே.. அந்தப் பழக்கம் எல்லாம் கெடையாதும்மா”

“சரிங்க அண்ணே.. ஆனல் செக்ஸ் பண்ணுவீங்களா அண்ணே?”

“அப்படின்னா?”

நான் மறுபடியும் குரல் தணித்து, “குண்டி அடிப்பீங்களா அண்ணே?:

அவர் கோபத்துடன், “என்னம்மா.. இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி? அசிங்கமா இருக்கே.. அதுவும் நீங்க ஒரு பொண்ணு.. இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாமா?”

அவர் பதிலில் எனக்கு இப்போது சுர்ர் என்று கோபம் வந்தது. “நானும் ஒருவகையில் ஆண்தான் அண்ணே” என்று முணுமுணுத்துக்கொண்டே, எனது மார்பகங்களைக் கவனித்தேன். பைண்டர் சற்றே விலக, மார்பகங்கள் வெளியே தெரிந்தது கண்டு, எனக்கு எரிச்சல் ஆக இருந்தது. நான், எரிச்சலை கஷடப்பட்டு அடக்கினேன்.

“இன்னும் ஒரு கேள்விண்ணே, பொம்பளைக்கிட்டே போறப்ப, ஆணுறை போடுவீங்களா?”

அவர் ரொம்ப யோசித்து, “எனக்கு உறை போட்டா சந்தோசமா இருக்காது, பொம்பளைகிட்டே, அதுக்குக் கொஞ்சம். கூடக் காசு கொடுத்தாப்போதும், உறை போடாமச் செய்ய விடுவாங்க”

“அண்ணே.. அப்ப, நீங்க நிச்சயம் சரியான இடத்துக்குத்தான் வந்து இருக்கறீங்க.. இனிமே அப்படிச் செய்யாதீங்க, எய்ட்ஸ் வரலாம்” நான் இப்போது, பரிசோதனையைத் தொடங்கினேன். அவருக்கு எய்ட்ஸ் இல்லை. திரும்ப அவரை அழைத்தேன். விவரம் சொன்னேன். அண்ணன் சந்தோசமானார்.

“என்னம்மா.. ஏதோ, இலவசமாக கொடுக்கறதாச் சொன்னாங்களே?”

எனக்கு, இப்போது சிரிப்பு வந்தது. நான், என் மார்பகப் பிரச்சினையை மறந்தேன். சில, ஆணுறைப் பாக்கட்டுகளை, அவரிடம் எடுத்து நீட்டினேன். “இனிமே, உறை போடாம, செக்ஸ் பண்ணாதீங்க.. சரியா?” அவர், வந்தவரை லாபம் என வாங்கிக்கொண்டு போனார்.

இன்றைய சேவை, எல்லாம் இனிதே முடிந்தது. நான் தேவியிடம் விடை பெற்றுக்கொண்டு, வீடு வந்து சேரும்போது, இரவாகிவிட்டது. வீட்டின் கீழே, மரியா, எனக்காகக் காத்துக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்ததும், மோகத்தோடு சிரித்தாள்.

நான், அவளை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.

“அப்பா.. சாப்பிடுங்கப்பா”

அப்பா, இப்போது என்னையும் அந்தப் பெண்ணையும், மாறிப் மாறிப் பார்த்தார். அவர், பார்த்த பார்வையில் இருந்த கோபம், என்னில் பயத்தை உருவாக்கியது. “அப்பா.. கண்டுபிடித்து விட்டாரோ?”

வாங்கி வந்த, சாப்பாட்டை, அவர் அருகில் வைத்து விட்டு, நான் மரியாவோடு, உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டேன்.

தேவன் என்ற தேவி

சமூக சேவை முடிந்து நான் அறை திரும்பியபோது, போலிஸ் சிலர், கேளிக்கை விடுதியின் கீழே, நின்று கொண்டு இருந்தார்கள். போலிஸ் ரெய்டு நடப்பது எனக்குப் புரிந்துபோனது. நான், சரேலென, எதிர்ப்பக்கம் நடந்தேன். கொஞ்ச தூரம் போய், வேறு பாதையில், நான் மறைந்தேன். நல்ல வேளை, போலிஸ் என்னை கவனிக்கவில்லை. இருப்பினும், எனது இதயம் படக் படக் என, அடித்துக்கொண்டே இருந்தது.

நான் அருகில் இருந்த, தேநீர்’ விடுதிக்குள் நுழைந்து, ஒரு மறைவான இடமாகப் பார்த்து, உட்கார்ந்துகொண்டேன். “எப்போதுதான் இது போன்ற, போலிஸ் தொல்லையில் இருந்து, நான் விடுபடுவேனோ?” நான், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன்.

“பாவம்.. ராணி அக்கா என்ன ஆனாளோ? நானாவது பரவாயில்லை. சிங்கப்பூர் திருநங்கை.. ஆனால், ராணி அக்காவோ, மலேசியத் திருநங்கை.. என்னைப் போலவே, அறுவைச்சிகிச்சை செய்யாதவள்.. தண்டனை கடுமையாக இருக்கும்”.. என் மனம், இன்னும் பதறியது.

“நான் எப்போது மஞ்சள் அட்டை வாங்குவேன்?”, இப்போது, எனது கண்களில், என்னையும் அறியாமல், கண்ணீர் வந்தது.

சிங்கப்பூரில், செக்ஸ் தொழில் செய்வது என்பது, ஒரு பிரச்சினையான விஷயம் இல்லை என்பது உண்மைதான். சட்டப்படி நடக்கும் செக்ஸ் தொழிலுக்குள், போலீஸ், தேவையில்லாமல், உள்ளே நுழைவதில்லை, என்பதும் உண்மைதான். ஆனால், செக்ஸ் தொழில் செய்ய விரும்புவோர், அரசாங்கத்திடம் இருந்து மஞ்சள் அட்டை வாங்க வேண்டும் என்பது சட்டம். செக்ஸ் தொழில் செய்பவர், மஞ்சள் அட்டை வாங்குவதற்கு, அடிப்படை நிபந்தனையாக, அவரது Identification Card என்ற அடையாள அட்டையில், “பெண்” என்று குறிக்கப்பட்டு இருக்கவேண்டும். “பெண்” என்று, குறிப்பிடப்படாத யாரும், சிங்கப்பூரில், செக்ஸ் தொழில் செய்ய, சட்டப்படி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிங்கப்பூரில், ஒரு திருநங்கை, செக்ஸ் தொழில் செய்ய வேண்டும் என்றால், முதலில், அவர் முறையான அறுவைச்சிகிச்சை செய்து, ஆணில் இருந்து பெண் ஆக மாற வேண்டும். அடுத்து, அந்த அறுவைச்சிகிச்சை சான்றிதழை எடுத்துக்கொண்டுபோய், சிங்கப்பூர் குடிநுழைவு அலுவலகம் சென்று, அவரது அடையாள அட்டையில், “பெண்” என்று மாற்றம் செய்து கொள்ளவேண்டும். ஆணில் இருந்து பெண்ணாய் மாறுபவருக்கு மட்டுமே இந்த சட்ட விதிகள் என்று இல்லை. பெண்ணில் இருந்து ஆணாய் மாறுபவருக்கும், இதே விதிகள்தான். முறையான, மருத்துவ அறுவை சிகிச்சை, அவசியம் தேவை.

கடைசியாய், பெண்ணாக ஆகி, அடையாள அட்டை பெற்ற திருநங்கை ஆகிய ஒருவர், செக்ஸ் தொழில் செய்ய விரும்பினால், அப்போது மட்டுமே, அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்படும்.

அப்படி மஞ்சள் அட்டை வாங்கியவர், மாதா மாதம், மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மஞ்சள் அட்டை வாங்கியவருக்கு, போலீஸ் பாதுகாப்பு உண்டு. அவர், சிங்கப்பூர் சட்டப்படி, மற்ற குடிமகன்கள் போல நடத்தப்படுவார். ஆனால், செக்ஸ் தொழில் செய்யும் எல்லாத் திருநங்கைகளும், அறுவைச்சிகிச்சை செய்து கொண்டு, செக்ஸ் தொழில் செய்வதில்லை. இங்கேதான் போலீஸ் தொல்லை வருகிறது.

உண்மை என்னவென்றால், திருநங்கைகளில் ஒரு குறிப்பட்ட பகுதியினர், செக்ஸ் தொழிலுக்கு வருவதற்கு ஒரு காரணம், அந்த ஆணில் இருந்து, பெண்ணாய் மாறும், அறுவைச்சிகிச்சை செய்துகொள்வதற்காக, ஆகும் பணம் சேர்ப்பதற்குத்தான். கூடவே, ஆண் சந்தோசமும் கிடைக்கிறது, என்றாலும், அப்படி ஒன்றும் செக்ஸ் தொழிலில், ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளாத, திருநங்கையால், எளிதில் பணம் சேர்த்துவிட முடிவதில்லை.

நான், இந்த செக்ஸ் தொழிலுக்கு வந்த பின்னால், அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளத் தேவையான பணத்தை, எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்றுதான், இன்றளவும் போராடுகிறேன். ஆனால், நடப்பதோ வேறு.

வருகிற ஆண்களில் சிலர் பேசியபடி பணம் கொடுப்பார்கள். சிலர், எல்லாம் முடிந்தபிறகு, பாதிப்பணம் மட்டுமே கொடுப்பார்கள். நான், தகராறு செய்தால், “போலீஸ் போய் புகார் கொடுப்பேன்” என்று மிரட்டுவார்கள். சிங்கப்பூர் சட்டத்தை மீறி, செக்ஸ் தொழில் செய்யும் என்னால், ஒன்றும் பேச முடியாமல் போகும்.

சிலர், ஆணுறை போட்டுக்கொள்ள மறுப்பார்கள். அவர்களிடம் கெஞ்சிப் போராட வேண்டும். சிலர், ஆணுறை போட்ட கொஞ்ச நேரத்தில், எனக்குத் தெரியாமலே, அவிழ்த்து எறிந்துவிட்டு, வல்லுறவு கொள்ளுவார்கள். நான்தான், எப்போதும், அந்த மாதிரி நேரங்களில், கவனமாக இருக்கவேண்டும். அடிக்கடி, நானும், எய்ட்ஸ் பரிசோதனை, செய்து கொள்ளவேண்டி வரும். எயிட்ஸ் அல்லாத, மற்ற மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், சில நேரங்களில், நான் செலவு செய்யவேண்டி வரும்.

சில நேரங்களில், கோவிலுக்குப் போகும்போதோ, அல்லது வேறு சாப்பாட்டுக் கடைகளுக்கு சாப்பிடப் போகும்போதோ, சில ஆண்களின், சகிக்கமுடியாத, வன்முறைகளுக்கு, நான் உள்ளாக நேரிடும். அது போன்ற நேரங்களில், போலீசிடம் போனால், போலீஸ் என்னையும், சந்தேகக் கண்ணோடு பார்க்கும். வன்முறை சம்பந்தபட்ட கேள்விகளோடு, என்னிடம் கேட்கப்படும் இன்ன பிற கேள்விகள், எனது செக்ஸ் தொழில் சம்பந்தமான கேள்விகளாகவும், மாறிப் போய்விடும்.

போலீஸ், என்னைக் பெயர் சொல்லிக் கூப்பிடும் போதெல்லாம், எனது அடையாள அட்டையில் உள்ள, “தேவன்” என்ற, எனது ஆண் பெயரையே, குறிப்பிடுவார்கள். அவர்கள் செய்வதே நியாயம் என்றாலும், அதுவே, எனக்குப் பெரிய உறுத்தலையும், மனச் சங்கடத்தையும் ஏற்படுத்தும். “ஏன் ரிப்போர்ட் செய்யப் போனோம்,” என்ற உணர்வையும், சிலநேரங்களில், நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண், தனது கைப்பையில், ஆணுறை வைத்து இருந்தால், அது “பாதுகாப்பான உறவுக்கான வழி” என்று பாராட்டப்படும். ஆனால், அதே ஆணுறை, அறுவைச்சிகிச்சை செய்து கொள்ளாத என் போன்றோரின் கைப்பையில் இருந்தால், நான், சாப்பாட்டுக்கடையில், சாப்பிட்டுக்கொண்டு  இருந்தாலும், அது, சந்தேகக்கண்ணோடு பார்க்கப்படும்.

ரொம்ப நேரம் ஆகிவிட்டது. “ராணி அக்காவிற்கு என்னவாயிற்றோ?” எனது மனம் பதறியது. நான் வேகமாக, கேளிக்கை விடுதி நோக்கி நடந்தேன்.

விஜயா என்கிற விஜயன்

இரவு என்னோடு இருந்த மரியா, காலையில் எழுந்து, அவள் வீட்டுக்குப் போய் விட்டாள். நான், காலையிலேயே, குளித்து முடித்து விட்டேன். “அப்பாவிற்கு, காலைச் சாப்பாடு கொடுக்க வேண்டும்” என்று, என் மனது, எனக்கு அறிவுறுத்தியது.

இரவுதான் எனக்கு வேலை என்பதால், நானே, இன்று சமைத்தேன். அப்பாவிற்குப் பிடித்த, காரசாரமான மாகி கோரெங் செய்தேன். தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு, அப்பாவிடம் போனேன். எனது மனது, படக் படக் என்று அடித்துக்கொண்டது.

அப்பாவிடம் தட்டை நீட்டினேன். அப்பா அதை வாங்க மறுத்து, என்னையே முறைத்துப் பார்த்தார். “அப்பா” எனது குரல் குழறியது.

“நான், முடமாகி மட்டும்தான் போயிட்டேன். மூளை ஒண்ணும் செத்துப் போகலே.. நீ எனது கண்ணு முன்னாடியே.. இப்படி, கேவலமாக நடந்துக்கறதைப் பாத்துக்கிட்டு, நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்”

“அப்பா” நான், இப்போது அப்பாவின் கால்களில் விழுந்து கதறினேன். “என்னை மன்னிச்சிடுங்கப்பா” நான் அழுது கொண்டே சொன்னேன். அப்பா, ரொம்ப நேரம், பேசாது இருந்தார். சாப்பிடவும் இல்லை.

“என்ன நடக்குது.. உண்மையைச் சொல்லு” அப்பா, அமைதியாகக் கேட்டார்.

நான் உண்மை எல்லாவற்றையும் சொன்னேன். தெய்வத்திடம் முறையிடுவது போல, நான் பொல பொலவென்ற, கண்ணீருக்கிடையில், சொல்லி முடித்தேன்.

“எனக்கு பெண் என்று சொல்லிக்கொள்ளப் பிடிக்கலை அப்பா. நான் ஆணாக மாறவோ, என்னிடம் காசு இல்லப்பா”. நான், அப்பாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

அப்பா, இப்போது எனது தலையை ஆறுதலாகத் தடவினார்.

“நீ ஆண் ஆகவேண்டும் என்று முடிவெடுத்ததில் தவறில்லை. ஆனால், அதைக் காரணமாக வைத்து, நீ நடந்து கொள்ளும் விதம்தான், எனக்குப் பிடிக்கவில்லை”

“அப்பா,,” நான் குனிந்திருந்த எனது தலையை நிமிர்த்தி, அப்பாவைப் பார்த்தேன். என் மனதில், இப்போது நம்பிக்கை துளிர்த்து இருந்தது.

அப்பா தொடர்ந்தார். “நானும், உனது அம்மாவும், உன்னை வறுமையில் வளர்த்தோம் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த வறுமையைத் தாண்டி, உன்னை நேர்மையாகவும் வளர்த்தோம். அந்த நேர்மை, உன்னிடம் இப்போது இல்லையே அது ஏன்?” அப்பா, கேட்ட கேள்வி, எனக்கு முழுதாய்ப் புரியவில்லை.  

“நீ ஆண் ஆகவேண்டும் என்றால், அதற்கான உண்மையான முயற்சியைச் செய். நீ, ஆண் என்று பெயர் மாற்றி வாழ, முறையான அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று, அரசாங்கம் நிபந்தனை விதித்தால், அதை நேர்மையான வழியில் எதிர்கொள். அது உன்னால், ஏன் முடியாது?” அப்பாவின், இந்த அறிவுரை, என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

“யோசித்துப்பார்.. நான் ஒரு ஆண்  என்ற காரணத்தால், எனது இஷ்டத்திற்கு, பல பெண்களிடம் படுத்துப் படுத்து, எழுந்து இருந்தால், அப்போது, என்னை உனக்குப் பிடித்து இருக்குமா? உனது அம்மாவிற்குத்தான், என்னைப் பிடித்து இருந்து இருக்குமா?”

“உண்மைதான் அப்பா.” நான், தலை குனிந்தேன். அப்பா, பேசிக்கொண்டே போனார்.

“எனக்கு நீ செய்யும் மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை, சாப்பாடு என்று உனக்கு பல செலவுகள் இருக்கும்போது, நீ அறுவைச்சிகிச்சை செய்ய, பணம் சேர்ப்பது கடினம்தான். ஆனால், உன் நேர்மையான முயற்சி ஒரு போதும் தோற்காது. நிச்சயம் கடவுள் உனக்கு உதவி செய்வார்.”. அப்பா சொல்லிக்கொண்டே, எனது தலையைக் கோதினார். படிக்காத அந்த அப்பாவிற்குள் இருக்கும் அக்கறையும், பாசமும் என்னை இன்னும் கொஞ்சநேரம் அழ வைத்தது.

அப்பா தூங்கிப் போனார். நான் சந்தோசமாக எனது அறைக்கு வந்தேன். மனம் அமைதியாய் இருந்தது. “முயற்சி செய்.. முயற்சி செய்” என்ற அப்பாவின் வார்த்தைகள், எனது மனதில் பதிந்து போனது. நான், அடுத்த முயற்சிக்குத் தயாரானேன்.

தேவன் என்ற தேவி

நான், அந்த நள்ளிரவில், வேகமாய் கேளிக்கை விடுதி வந்து சேர்ந்தேன். வந்ததுமே, ராணி அக்காவைத்தான் முதலில் தேடினேன். “ராணி அக்கா ராணி அக்கா” வென்று, நான் பதற்றத்துடன், அறைக்கதவைத் தட்டினேன்.

ராணி அக்காதான், கதவைத் திறந்தாள். நான், ராணி அக்காவை, ஆவேசமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். என்னால், என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணி அக்காவும் அழுதாள்.

அந்த இரவு எனக்கு நிம்மதியைத் தரவில்லை. “அறுவைச்சிகிச்சைக்கு, இந்தத் தொழிலில் இருந்துகொண்டு, நிச்சயம் பணம் சேர்க்கமுடியாது. ஏதாவது செய்தாகவேண்டும். ஏதாவது செய்தாக வேண்டும்”. நான், இரவு முழுதும் சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.

விஜயா என்கிற விஜயன் மற்றும் தேவன் என்கிற தேவி

அப்பா சொன்ன வார்த்தைகளின் நினைவுகளோடு, நான், இரவு வேலைக்குத் தயார் ஆனேன். அப்போதுதான் அந்த விளம்பரம், எனது கண்ணில் பட்டது.

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான், அந்த விளம்பரம் கொடுத்து இருந்தது.

“தாங்கள் வ்சதியற்றவர்களுக்காக ஒரு இணையதளம் தொடங்கி இருப்பதாகவும், அந்த இணையத்தளத்தில், கண் ஆபரேசன் செய்யக் காசு இல்லாத ஏழைகள், கேன்சர் போன்ற நோய்களுக்கு, சிகிச்சை செய்யக் காசு இல்லாத ஏழைகள், “காசு கொடுங்கள்”, என்று இலவசமாக விளம்பரம் செய்து கொள்ளலாம் என்றும், அந்த ஏழைகள் தரும் அப்படிப்பட்ட விளம்பரங்கள், பல பணக்காரர்களுக்கு, மெயில் மூலம், அனுப்பப்படும் என்றும், அதனால், ஏழைகள் பணம் பெற்றுப் பயன் பெறலாம்” என்றும் அந்த விளம்பரம் குறிப்பிட்டு இருந்தது. விளம்பரத்தைப் படித்ததும், நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.      

நான் அடுத்தநாள், அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தேடித் போனேன். அங்கே, என்னைப் போலவே, தேவியும் வந்து இருந்ததைப் பார்த்தபோது, என்னுள் சந்தோசம் இன்னும் கூடியது.

இருவரும், எங்கள் நிலைமையை, தொண்டு நிறுவனத்துக்கு, எடுத்துச் சொன்னோம். அந்த மேடம், நிதானமாகக் கேட்டார்கள்.

“சாரி.. உங்களுக்கு உதவ முடியாது” என்று, அந்த மேடம் சொன்னபோது, எனது தலையில், இடி விழுந்ததுபோல இருந்தது.

ஆனால், தேவி மனம் தளரவில்லை. “ஏன் மேடம் எங்களுக்கு உதவமுடியாது? நாங்களும் பணம் இல்லாத ஏழைகள்தானே?” தேவி தைரியமாகக் கேட்டாள்.

“ஆனால்.. உங்கள் பிரச்சினை ஒன்றும் கேன்சர், பார்வையின்மை போன்ற வாழமுடியாத, அல்லது உயிர்போகும் பிரச்சினைகள் கிடையாதே? அப்படி இருக்க, நாங்கள் எப்படி உங்களுக்காக விளம்பரம் கொடுக்க முடியும்” என்று மேடம் சொன்னபோது, தேவிதான் அழுதுகொண்டே கெஞ்சினாள்.

“உண்மைதான் மேடம்.. எங்கள் பிரச்சினை, உயிர்போகும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நாங்களும், உடம்பில் உயிர் இருந்தும், தினம், தினம் அவமானத்தால், செத்துப் செத்துப் பிழைக்கிறோம் மேடம்.” தேவி, மேடத்திடம் கதறினாள். நானும், தேவியோடு சேர்ந்து மன்றாடினேன்.

மேடம் மனம் கடைசியில் இளகியது. எங்கள விளம்பரங்களுக்கும் மேடம், இடம் தந்தார்கள். இளகிய மனங்கள் பலர், பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள்.

தேவி மற்றும் விஜயன்

நானும், தேவியும், சிங்கப்பூர் குடிநுழைவு அலுவலகத்திற்குள் இருந்து, இப்போது வெளியில் வந்தோம். எங்கள் இருவரின் கைகளிலும் அடையாள அட்டைகள். எனது அட்டையில் விஜயன் என்ற ஆண் பெயர். அவளது அட்டையில் தேவி என்ற பெயர் மாற்றம்.

அப்பா.. எவ்வளவு சந்தோசம்.. இந்த ஒரே ஒரு பெயர் மாற்றத்திற்கு நாங்கள் இருவரும் சந்தித்த துக்கங்கள், செத்துப் பிழைத்த நாட்கள், இனிக் கிடையாது.

நான், எனது நெஞ்சைத் தடவினேன். அங்கே, இப்போது, அந்த மாங்கனிகள் இல்லை.     

“அப்பா சொன்ன படி, நான் யாராவது ஒரு நல்ல பெண்ணோடு, விஜயனாக வாழ்க்கை நடத்தப் போகிறேன். தங்கச்சி தேவி, நீ இனி, மஞ்சள் அட்டை வாங்கப் போகிறாயா?” நான் தேவியைப் பார்த்தேன்.

“நிச்சயமாக இல்லை அண்ணா. நானும் ஒரு நல்ல பையனைத் தேடுவேன்”

தேவி தீர்க்கமாகச் சொல்லிக்கொண்டே, அவள் மாங்கனிகளை, சேலை கொண்டு மறைத்தாள், புன்னகையுடன் பிரிந்து போனாள்.   

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationபெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டிகோவை ஞானியும் நிகழும் கவிதையும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *