கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்

author
0 minutes, 36 seconds Read
This entry is part 8 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

 

அழகர்சாமி சக்திவேல் 

அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த தொற்றுநோய் சுகாதார நிலையத்தில், கிட்டத்தட்ட இருநூறு பேர்கள், கூடியிருந்தார்கள். எல்லார் கையிலும், எரியும் மெழுகுவர்த்திகள். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம், சுகாதார நிலையம் அமைந்த அந்தப் பரந்த புல்வெளியின் இருளில், ஒரு அழகான ஓவியம் போலத் தெரிந்தது. நாங்கள், பரந்த புல்வெளியின், நடுவில் இருந்த அந்த எய்ட்ஸ் பிரிவு மையத்திற்கு, கையில் மெழுகுவர்த்தியோடு, ஊர்வலமாய்ப் போக ஆரம்பித்தோம். 

சிங்கப்பூரில், எய்ட்ஸ் நோயால் இறந்து போனோர், எத்தனையோ பேர். அத்தனை பேரின் ஆன்மாக்களும் சாந்தியடைய, வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலம்தான் இது.   

எனக்கு முன்னால், என் மனைவி பங்கஜம், நர்ஸ் உடையில் நடந்து கொண்டு இருந்தாள். கூடவே, அவளோடு நர்ஸ் வேலை பார்க்கும் அவளது தோழி சியாமளாவும் நடந்து கொண்டு இருந்தாள்.  

இருவருமே. இந்த டான்டாக்செங் மருத்துமனையில், தாதிமை வேலை செய்பவர்கள்தான். முக்கியமாய், இருவருமே, சிங்கப்பூர் எய்ட்ஸ் நோயாளிகளின் நலனுக்காய், இந்த எய்ட்ஸ் மருத்துவமனையில் அரும்பாடு பட்டவர்கள். 

கூட்டம் நகர்ந்தது. சியாமளா எனது மனைவியிடம் பேசுவதை, என்னால் கேட்க முடிந்தது. “பங்கஜம்.. உனக்கு நினைவு இருக்கிறதா? பத்து வருடங்களுக்கு முன்னர், இங்கே எத்தனை எய்ட்ஸ் நோயாளிகள், நம் கண் முன்னாடியே இறந்துபோய் இருக்கிறார்கள். அதுவும், சில சின்ன வயதுப் பையன்களும் பெண்களும், வாழ வேண்டிய வயதில், வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, இங்கே வந்து, நாள்தோறும் கதறிக்கொண்டிருக்கும், கொடுமையை நாம் எத்தனை முறைப் பார்த்துப் பார்த்து, மனதைக் கல்லாக்கிக் கொண்டு வேலை செய்து இருக்கிறோம்?” சியாமளா, பெருமூச்சு விட்டாள். 

பங்கஜம் தலையாட்டினாள். “உண்மைதான் சியாமளா.. அந்த நாட்கள் கொடுமையான நாட்கள்.. மார்ச்சுவரி என்ற பிணவறைக்குப் பக்கத்திலேயே, இந்த எய்ட்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளாய், வாட்டசாட்டமாய், முதலில், மருத்துவமனைக்குள் வருகிற எத்தனையோ பேர், கொஞ்சம் கொஞ்சமாய், உடலும் வற்றி, மனதும் வற்றி, கடைசியில் பிணமாகி.. ஐயோ.. எத்தனை எய்ட்ஸ் பிணங்கள் சியாமளா? மிகவும் வருத்தமான விஷயம்தான் சியாமளா” 

சியாமளா, இப்போது பங்கஜத்தைப் பார்த்தாள். “அதிலும், அந்தக் காலங்களில், நிறைய ஹோம்செக்ஸ் ஆண்கள்தான், எய்ட்ஸ் நோயாளிகள் ஆக இருந்திருக்கிறார்கள், இல்லையா பங்கஜம்?” 

பங்கஜம் இப்போது வேகமாகக் குறுக்கிட்டாள். “அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது சியாமளா. எய்ட்ஸ் என்ற நோய்க்கு, ஹோமோசெக்ஸ்தான் காரணம் என்று, அந்தக்காலக்கட்டத்தில், சமூகம் தவறாக நினைத்துக்கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை. உண்மையில், ஆணோ, பெண்ணோ அல்லது ஓரினச்சேர்க்கையாளரோ, யாராய் இருந்தாலும், அவர்கள் கொள்ளும், பாதுகாப்பற்ற உடல் உறவே, எய்ட்ஸ் நோய்க்குக் காரணம் சியாமளா” 

சியாமளா, இப்போது பங்கஜத்தைப் பார்த்தாள். “என் பங்கஜம்,, நீ ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறாயா பங்கஜம்?” சியாமளா கேட்டாள். 

“நிச்சயமாக சியாமளா.. ஓரினச்சேர்க்கை என்பது ஒரு வகை உடல் ஆசை அவ்வளவே. உண்மையில், எனக்கு நிறைய ஓரினச்சேர்க்கை பெண் நண்பர்கள் இருக்கிறார்கள் சியாமளா. நான், அது போன்ற ஆசை இல்லாதவள் என்றாலும், நான் அவர்களையும் ஆதரிக்கிறேன்”  

பங்கஜமே தொடர்ந்து பேசினாள். “உனக்குத் தெரியுமா சியாமளா? நம் தோழிகள், ஸ்டெல்லாவும், ரோஸியும் லெஸ்பியன் பெண்கள்தான், அவர்கள் இருவரும், எனது வீட்டிற்கு, அடிக்கடி சாப்பிட வருவார்கள் சியாமளா. அவர்களை, வரவேற்று உபசரிப்பதில், நான் இதுவரை, எந்த வேறுபாடும் காட்டியதில்லை சியாமளா”  

எனது மனைவி பங்கஜம் அப்படிச் சொன்னபோது, நான் அவளை ஆச்சரியமாகப் பார்த்தேன். “ஓ.. ஸ்டெல்லாவும், ரோஸியும் லெஸ்பியன் காதலிகளா.. எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே”. 

பங்கஜம், இன்னும் பேசிக்கொண்டே போனாள். அவள், பேசப் பேச, எனது ஆச்சரியம் கூடிகொண்டே போனது.  

“என் மனைவி பங்கஜமா இப்படிப் பேசுகிறாள்? நான் இரவில், அடிக்கடி காணும் அந்தக் கனவு, அந்தக் கனவால், நான் அலறிக்கொண்டே எழுந்து உட்கார்ந்துகொள்ளும் நிலை. இதெல்லாம் ஏன் என்று, பங்கஜத்திற்கு இன்று வரை தெரியாது. இப்போதாவது, அந்தக் கனவிற்கான அந்த உண்மையை, நான் சொல்லிவிடலாமா?” என் மனம் நிம்மதியின்றி, இப்போது தவித்தது. 

ஊர்வலம் முடிந்தது. அடுத்து கூட்டம் ஆரம்பித்தது. எய்ட்ஸ் நோய் குறித்தும், பாதுகாப்பான உடலுறவு குறித்தும், சில பேச்சாளர்கள் விரிவாகப் பேசினார்கள். எனக்கு, இதுவரை தெரியாத எவ்வளவு விஷயங்கள்? செக்ஸ் குறித்த எனது கண்ணோட்டம், கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தது. 

இறுதியில், எனது மனைவியும், அவளது தோழி சியாமளாவும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காக, பாராட்டப்பட்டார்கள். கூட்டத்தில், உட்கார்ந்து, பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, அது பெருமையாக இருந்தது. 

எல்லோருக்கும், சாப்பாடு கொடுத்தார்கள். அந்த, இரவு விருந்து, மிகவும் அருமையாக இருநதது. 

மதுரை நகரத்தில், ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவனான, எனது பெயர் ராமராஜன். இளம்வயதில், நன்கு படித்து, சிங்கப்பூரில் ஒரு பொறியாளர் வேலை தேடிக்கொண்டு, சிங்கப்பூரிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டேன். சிங்கப்பூர் வந்த பிறகே, பங்கஜத்தைச் சந்தித்தேன். அவள் அழகில் மயங்கி, கல்யாணமும் முடிந்தது. எங்கள், இன்பமான இல்லற வாழ்க்கைக்கு ஆதாரமாய், இரண்டு குழந்தைகள். 

“என்னங்க.. விழா, நல்லா இருந்துச்சு.. இல்லே?” பங்கஜம், எனது நினைவைக் கலைத்தாள். 

“ஆமாம் பங்கஜம். கூட்டத்தில், நான் சில எய்ட்ஸ் நோயாளிகளையும் பார்த்தேன். அவர்கள், கைகளைக் குலுக்கி, நான் ஆறுதல், தெரிவித்தேன் பங்கஜம்” 

“ஓ அப்படியா? வெரி குட்” பங்கஜம், என் மீது சாய்ந்துகொண்டே நடந்தாள். எனக்கு, இன்பமாய் இருந்தது. 

“பங்கஜம்.. உன்னிடம் நான் ரொம்ப நாளா, ஒரு விஷயம் சொல்லாமலேயே இருக்கிறேன் கண்ணம்மா” நான் குழைந்தேன். 

பங்கஜம், ஒன்றும் பேசாமல் என்னைப் பார்த்தாள். “அதுதான் பங்கஜம், பல ராத்திரிகளில், நான் படுக்கையில் இருந்து, அலறிக்கொண்டு எழுந்து உட்காருகிறேனே.. அந்த விஷயம்” 

“ஆமாம்.. அதைப்பத்தி நானே உங்களிடம் பலமுறைக் கேட்டும், நீங்கள் சொல்லவில்லை. இப்போதாவது சொல்லுங்க” பங்கஜமும் கொஞ்சினாள். 

இதுதான் நல்ல தருணமென்று, நானும் எல்லா உண்மைகளையும் சொன்னேன். எனது பதின்ம வயதில் இருந்து, அரித்துக்கொண்டே இருந்த அந்த உண்மைகளை எல்லாம், அவளிடம் சொல்லி முடித்தேன். 

“இவ்வளவுதானா” பங்கஜம், கலகலவென்று சிரித்தாள். எனக்கு, அவள் சிரிப்பு, ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

“கவலையை விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள். பேசிக்கொண்டே, நான் கார் ஓட்டினேன். வீடும் வந்து சேர்ந்து விட்டோம்.  

களைப்பில், பங்கஜம் உறங்கிப் போனாள். நான் மட்டும், இன்னும் உறங்கவில்லை. என் நினைவுகள், எனது பதின்மவயதுப் பருவத்தை, அசை போட்டது. 

மதுரை நகரின் மத்தியில், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட, எங்கள் தெருவில் மட்டும், சுமார் முன்னூறு வீடுகள் இருக்கும். ஒரு வீட்டிற்கும், இன்னொரு வீட்டிற்கும் இடையில், சந்துகள் வைத்துக் கட்டப்படாத, அந்த வீடுகளில், எங்கள் வீடுதான், மிகப்பெரிய வீடு. அப்பாதான், எங்கள் தெருவின் ஊர்ப் பெரியவர்.  

தெருவில் நடக்கும் அத்தனை பிறப்பு, இறப்பு, வயதுக்கு வரும் பெண்களின் சடங்கு, காளியம்மன் திருவிழா, கரகாட்டம், தெருக்கூத்து, அரசியல் கூட்டங்கள், அத்தனையிலும், அப்பா இருப்பார். அவர் கூடவே, அவர் சொல்வதை எல்லாம், தட்டாது செய்யும், எங்கள் ஊர்க் கவுன்சிலரும் இருப்பார். இந்த இருவர் சொல்வதையும், ஊர் எப்போதும் மதித்துக் கேட்கும்.  

இந்தக்காலத்தில், எங்கள் தெருவில், நிறையப் பெண்கள் படித்து முன்னுக்கு வந்து விட்டார்கள். கல்வி, அரசியல், விளையாட்டு, வணிகம் என, எங்கள் தெருப் பெண்கள், இப்போது, கால் பதிக்காத இடமே இல்லை. 

ஆனால், எனது கல்லூரிக்காலம் அப்படியில்லை. அந்தக் காலங்களில், எங்கள் தெருவில் இருந்த, கிட்டத்தட்ட, எல்லாப் பெண்களுமே, படிப்பறிவு இல்லாதவர்கள். கிராமத்திலிருந்து, நகரத்து ஆண்களைக் கல்யாணம் செய்துகொண்டு வந்து, புதிதாய் நகர வாழ்க்கை, வாழ ஆரம்பித்தவர்கள்.  

வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சுண்ணாம்பு என்று, எப்போதும் வாயைச் சிவக்க வைத்துக்கொள்வதுதான், தெருவில் இருந்த பெண்களின், முக்கியமான பொழுதுபோக்கு. அதிலும், வசதிபடைத்த பெண்கள், வெற்றிலை பாக்கோடு, கட்டைப் புகையிலை போடும் வழக்கமும் வைத்து இருந்தார்கள். எனது அம்மாவும், அந்தப் புகையிலைக்காரிகளில் ஒருத்திதான். வசதி வாய்ந்த பெண்கள் சிலர், சுருட்டுப்பிடிக்கும் பழக்கத்தையும் வைத்து இருந்தார்கள். அம்மாவிற்கு என்னவோ, அந்தப் பழக்கம் மட்டும் கிடையாது. 

படிப்பறிவு அறவே இல்லாத, எங்கள் தெருப்பெண்கள் மத்தியில், ஆண்கள் வைத்ததுதான் சட்டம். பெண்கள் என்றால், வாய்க்கு ருசியாய், நன்கு சமைத்துப் போடவேண்டும். நிறையப் பிள்ளைகள் பெற்றுத் தரவேண்டும், விரும்பியபோதெல்லாம், செக்ஸ் இன்பம் தரவேண்டும். இதைத் தவிர, பெண்கள் மீது, எங்கள் தெரு ஆண்களுக்கு, வேறு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. 

அப்பாவும் அப்படித்தான். அவரும், அந்தக் கவுன்சிலரும் சேர்ந்து அடிக்கும் கூத்து, எங்கள் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.  

அப்பா ஒரு பெண்பித்தர் என்ற விசயம், நான், எனது பதின்ம வயதை எட்டும் வரை, எனக்குப் புரியவில்லை. நான் எனது விடலைப் பருவத்தை எட்டியபோதோ. எனக்கு அது ஒரு பெரிய தப்பாகத் தெரியவில்லை.  

“பெண்ணைப் பலவந்தம் செய்வதுதான் ஆண்மையின் அடையாளம்” என்று, அந்தப் பதின்மவயதில், நான் நினைத்த முட்டாள்தனத்தை, இப்போது நினைத்தால், எனக்கு வெட்கமாக இருக்கிறது. 

எனது பதின்மவயதும், என்னைச் சும்மா விடவில்லை. வீட்டில் அம்மா, தினம், கறியும் மீனுமாய் ஆக்கிப்போட்டு, ஆக்கிப்போட்டு, என் பதின்ம வயது உடம்பு, ஏகத்துக்கும் தினவெடுத்துப்போய் இருந்தது. 

நான், பள்ளியில் படித்தபோதும் சரி, கல்லூரியில் படிக்கும்போதும் சரி, எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பவன். பள்ளியிலும், கல்லூரியிலும், எதையுமே, அறிவியல் கண்கொண்டு பார்க்க, கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை, எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. காரண, காரியம் இல்லாமல், ஒழுக்கம், அது இது என்று பேசிய ஆசிரியர்களிடம் இருந்து நான் கொஞ்சம் விலகியே இருந்தேன். மனிதனின் சுயகட்டுப்பாட்டிற்கு, அதுவும் தேவை, என்ற விசயம், அந்தப்பதின்ம வயதில் எனக்குப் புரியவில்லை. காரணம், நான் வளர்ந்த, அந்தத் தெருவும்,  தெரு ஆண்களின் ஆண்வர்க்க போக்கும் ஆக இருக்கலாம். 

நான், கல்லூரியில், எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பதில், அப்பாவிற்கு ஏகத்திற்கும் பெருமை. அந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே, அப்பா, அதற்குமேல், என்னை ஒருபோதும் கண்காணித்தது இல்லை. நான் அப்பா போல. செக்ஸ் பித்துப் பிடித்தவன் இல்லை என்றாலும், எனது அறிவை மீறிய எனது வயதுக்கோளாறு, அந்தப் பதின்மவயதில், என்னைச் சும்மா விடவில்லை.  

அந்த வயதில், ஊரில், உள்ள ஒவ்வொரு பெண்ணும், எனக்கு அழகாய்த் தெரிந்தாள். இரவெல்லாம், தெருவில் இருந்த எவளாவது ஒருத்தி, என் கனவில் வந்துவிடுவாள். அப்படி என் கனவில் வரும் பெண்களில், வயது வித்தியாசம் எல்லாம் இல்லை, குமரி முதல், கிழவி வரை, என் பருவ உணர்வைத் தூண்டும் எல்லாப் பெண்களுமே, என் கனவுக்குள் அடக்கம்தான். அதில் மிக மிக முக்கியமானவள்தான், தட்டுவாணி தங்கம்மா.     

பாம்பே கக்கூஸ் என்று தமிழர்கள் சொல்லக்கூடிய, தற்கால, நவநாகரீகக் கழிப்பறைகள் இல்லாத, அந்தக்காலங்களில், வசதி படைத்தவர்கள், எடுப்புக்கக்கூஸ் மட்டுமே, தத்தம் வீட்டில், கட்டி வைத்து இருந்தார்கள்.  

கிராமங்களில் வாழும் பெண்கள், குளத்தோரமோ, அல்லது ஆற்றோரமோ வெளிக்கிப் போவார்கள். ஆனால், எங்கள் தெருவோ நகரத்தின் நடுவில் இருந்தது, கிராமங்களில் இருப்பது போன்ற மறைவிடங்கள் இங்கே கிடையாது. இருப்பினும், தெருவோரத்தில், அங்கங்கே, நாற்றம் வீசும், சில பொதுக்கழிப்பறைகள், எங்கள் தெருப்பெண்களுக்கென உண்டு. ஆனால், அங்கேயெல்லாம், வசதிபடைத்த பெண்கள், போகமாட்டார்கள். பணக்கார வர்க்கத்திற்கான ஏற்பாடுதான், இந்த எடுப்புக்கக்கூஸ்.  

விடியற்காலையிலேயே, நீண்ட மூங்கில் கழியுடன், இணைத்துக் கட்டப்பட்ட, தட்டினைக் கொண்டு, எடுப்புக்கக்கூஸில் நிறைந்து கிடக்கும், மலத்தினை வாரி, கூடைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு போய், முனிசிபல் லாரிகளில், கொட்டுவதுதான், தட்டுவாணி தங்கம்மாவின் வேலை. தட்டைக்கொண்டு, மலம் வாருவதால், தங்கம்மா போன்ற பெண்கள், ஆரம்பத்தில், தட்டுவாரிணிகள் என்று அழைக்கப்பட்டார்கள். காலப்போக்கில், தட்டுவாரிணி என்ற அந்த வார்த்தை, தட்டுவாணி என்று ஆகிப்போனது. என் மனதை அரித்த தங்கம்மாவையும் தட்டுவாணி தங்கம்மா என்றுதான், எங்கள் தெரு அழைத்தது. 

விடியற்காலையில், தங்கம்மா, மலம் வார வருகிறபோது, ஆண்கள் யாரும் அவளோடு பேச மாட்டார்கள். ஆனால், மலம் வாரி கூடையில் போட்டு, முனிசிபல் லாரியில் கொட்டி முடித்துவிட்டு, குளித்துவிட்டு, தங்கம்மா வருகிறபோது மட்டும், அந்தந்த வீட்டு ஆண்கள், அவளை சைட் அடிக்க வந்துவிடுவார்கள். அப்படி, ஒரு குதிரை மாதிரியான, கிண் என்ற நெடிய தேகம், தங்கம்மாவிற்கு. 

இந்தக்கால டாக்டர்கள், மனிதனின் பல நோய்களுக்கு, மலப்பரிசோதனை செய்கிறார்கள். ஆனால், தங்கம்மாவிற்கு இதெல்லாம் அனுபவத்திலேயே அத்துப்படி. அவள், அள்ளுகிற மலத்தின் தரத்தை வைத்தே, அந்தந்த வீட்டில், என்ன நோய் இருக்கிறது, என்பதை, சாமர்த்தியமாக கண்டுபிடித்து விடுவாள் தங்கம்மா.  

கெட்டி மலம், கூழ் மலம், பச்சை மலம், சிவப்பு மலம், இப்படி மலங்களைப், பல வகையில், தரம் பிரித்து, ஒரு வீட்டில் நடக்கும், நல்லது, கெட்டதுகளைக் கணித்து விடக்கூடிய, கெட்டிக்காரிதான் தங்கம்மா. 

எங்கள் தெரு ஆண்களின் அந்தரங்க நடவடிக்கைகள், அவர்கள் கட்டும், கைலியின் ஈரத்தில் மட்டுமே தெரிவதில்லை. அல்லது, அவர்கள் படுக்கும், கயிற்றுக்கட்டிலின், தொய்ந்த நாடாக்களில் மட்டுமே தெரிவதில்லை. கூடவே, சில நேரங்களில், ஆண்களின் அந்தரங்க நடவடிக்கைகள், எடுப்புக் கக்கூசிலும் தெரியும். அவை எல்லாமே, தங்கம்மாவிற்குத் தெரிந்துபோகும். சில நேரங்களில், அந்த வீட்டு ஆண்களைக் கேலி செய்து பேசுவாள். அவமானம் என்று எண்ணி, அந்த வீட்டு ஆண்கள், தங்கம்மா வந்தால், வெளியே வரவே மாட்டார்கள். 

பெண்களின் மாதவிடாய் என்ன நாளில் வருகிறது. என்ன நாளில் போகிறது, மாதாமாதம், ஒழுங்காக வருகிறதா, எப்போது நின்று போனது. அந்த வீட்டு பெண்கள் கர்ப்பமா, இப்படி எல்லாக்கதைகளையும், தங்கம்மா, அந்த எடுப்புக்கக்கூஸ் மூலமே, தெரிந்துகொள்வாள். எல்லாம் தெரிந்தவன்தான் கடவுள் என்றால், தங்கம்மாவும் ஒருவகையில் கடவுள்தான். 

ஒவ்வொரு நாளும், மலம் அள்ளுமுன், அதன் மேல், சாம்பலைத் தெளிப்பாள் தங்கம்மா. அப்படித் தெளிக்கும் சாம்பலை, அந்தந்த வீட்டுப் பெண்கள்தான் கொடுக்கவேண்டும். சில பெண்கள், சின்ன அலுமினியத்தட்டில் சாம்பல் வைப்பார்கள். சில பெண்கள், கூடையில் சாம்பல் வைப்பார்கள். எடுப்புக் கக்கூசிற்குள் இருக்கும், மலத்தின் அளவிற்கேற்ப, சாம்பலைத் தூவுவாள் தங்கம்மா.  

சில வீடுகளில் சாம்பல் கொஞ்சமாய் வைத்து இருப்பார்கள். அது போன்ற, வீடுகளில், மற்ற வீடுகளில் இருந்து, கூடைகளில் கிடைத்த, உபரி சாம்பலைப் பயன்படுத்துவாள் தங்கம்மா. “அம்மா.. சாம்பல் நீங்க இன்னிக்கு, ரொம்பக் கொஞ்சமாக் குடுத்தீங்க. அதுனால, நான் போட்ட சாம்பலுக்கு, கூடுதலா காசு கொடுக்கணும்.. ஆமா”. சாம்பலுக்கான, காசைக் கறந்து விடுவாள், தங்கம்மா. 

“அது எப்படிடி தங்கம்மா.. என் வீட்டு சாம்பலை, அவ வீட்டுக்குப் போடலாம்?” இப்படிச் சில சண்டைகள். “ஏண்டி தங்கம்மா.. அவ வீட்டு சாம்பலை.. ஏண்டி.. என் வீட்டுலே போடறே?” இப்படிச் சில சண்டைகள். வருகிற, எல்லா சண்டைகளுக்கும், நியாயம் சொல்லும் நாட்டாமை, தங்கம்மாதான்  

தங்கம்மாவை, தெருவில் யாரும் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அவள், ஒரு நாள் மலம் அள்ளாவிட்டால், வீடும், தெருவும் நாறும்.  

தங்கம்மா, சில நேரங்களில், சாராயம் சாப்பிட்டுவிட்டு, தெருவில் நின்று, சலம்பல் பண்ணுவாள். ஆனாலும், யாரும் அவளை, அதிகம் எதிர்த்துப் பேச மாட்டார்கள். அப்பாவைப் பார்த்தால் மட்டும், கொஞ்சம் பயப்படுவதுபோல், பம்முவாள். ஆனால், அது கூட, அவள் நடிக்கும் நடிப்புத்தான்.  

பல நேரங்களில், அப்பாவைப் பார்த்தால், ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பாள். அவள் சிரிக்கும், நக்கல் சிரிப்பின் காரணம், அந்த வயதில் எனக்கு விளங்கவில்லை. ஆனால், அப்பாவிற்கு மட்டும், “சுர்” என்று ஏறும் கோபத்தில், தங்கம்மாவை,  கெட்ட வார்த்தையால்த் திட்டுவார். அப்போதும், அந்த நக்கல் சிரிப்பை நிறுத்தாமல், தங்கம்மா ஓடி மறைவாள்.    

தங்கம்மா, எல்லா வீடுகளிலும், மலம் அள்ளுவதற்குக் கூலியாக, காசு மட்டுமே வாங்குவாள். ஆனால், எங்கள் வீட்டில் மட்டுமே, அம்மாவிடம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று, உரிமையாய் வாங்கிக்கொள்வாள் தங்கம்மா.  

முக்கியமாய், அம்மா கொடுக்கும், அந்த வெற்றிலை, கொட்டைப்பாக்கு மற்றும் அந்தக் கட்டைப் புகையிலை. அதற்காகவே, எங்கள் வீட்டில் ரொம்ப நேரம், அம்மாவிடம் பேசிவிட்டுப் போவாள் தங்கம்மா.  

புறம்பேசுவதில், பெருவிருப்பம் கொண்ட எனது அம்மாவிற்கு, அண்டை வீடுகளில், நடக்கும் எல்லா விசயங்களையும் சொல்லுவது, தங்கம்மாதான். தங்கம்மா, எவ்வளவு புறம் சொல்லுகிறாளோ, அந்த அளவிற்கு, அவளிற்கு கட்டைப் புகையிலை, கூடுதலாக அம்மாவிடம் இருந்து கிடைக்கும். 

“சுர்” என்று நாக்கில் ஏறும், அந்தக் கட்டைப் புகையிலை கொடுக்கும், போதைக்கு, எங்கள் தெருவில் இருக்கும், பல பெண்கள் அடிமையாய் இருந்தார்கள். புகையிலை கொடுக்கும், அந்தப் போதையில், தங்கம்மா, ஞானி போல, அம்மாவிடம், மணிக்கணக்காய் பேசிக்கொண்டு இருப்பாள்.. 

அந்தமாதிரி நேரங்களில், நான் தங்கம்மாவின், நெட்டை உடல் அழகில், மயங்கி நிற்பேன். தங்கம்மா மீது எனக்கு இருந்தது, நிச்சயமாக, காதல் கண்ணோட்டம் இல்லை. வெறும் காமக் கண்ணோட்டம்தான். 

கோயிலுக்குள் அவளை, உள்ளே விடுவார்களா என்பது, இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால், நான் கோவிலுக்குள் போகும்போது எல்லாம், கோவில் தூண்களில், பெருத்த, வடிவான மார்பகங்களுடனும், சிறுத்த இடையுடனும் கூடிய, கறுத்த யட்ச கன்னிகைகளில், எனக்குத் தங்கம்மாதான் தெரிவாள்.  

“என்றாவது ஒரு நாள் தங்கம்மாவை..”, இப்படிப் பேசிய ஆண்கள், எங்கள் தெருவில் அதிகம். அப்படிப் பேசுவதை, என் காதுபடக் கேட்கும் போதெல்லாம், நான் தவியாய்த் தவிப்பேன்.  

அந்தத் தவிப்பு ஒரு நாள் எல்லை தாண்டியபோது, நான் தங்கம்மாவின் குடிசையில் போய் நின்றேன். 

சுடுகாட்டை ஒட்டியிருந்தது தங்கம்மாவின் குடிசை. இருள் கவிழ ஆரம்பிக்கும், அந்த வேளையில், நான் வேகமாய், தங்கம்மா குடிசை நோக்கி நடந்தேன். போகும்போதே, தங்கம்மா புருஷன் எனது நினைவில் வந்தான்.. சீமைத்தண்ணி வண்டி வைத்து, கெரசின் விற்கும் அவனுக்கு ஏற்கனவே ஒரு மனைவி உண்டு. தங்கம்மா, அந்த சீமத்தண்ணி வண்டிக்காரனுக்கு வப்பாட்டியாய்த்தான் இருந்தாள்.  

சீமத்தண்ணிக்காரன், வாரம் ஒருமுறை தங்கம்மாவிடம் வருவான். குடித்துவிட்டு, தங்கம்மாவிடம் சண்டை போடுவான். தங்கம்மாவும், அவனை நன்கு மிதிப்பாள். அப்புறம். இரவு தங்கம்மா கூடவே தங்குவான். விடிகாலை எழுந்து போவான். அப்புறம், அடுத்த வாரம்தான் வருவான். அதுவரையில், தங்கம்மாவை, மற்ற ஆண்கள் கொள்ளை அடிப்பார்கள். 

“தங்கம்மா ஏன், பிடிக்காத அந்த சீமைத்தண்ணி வண்டிக்காரனோடு வாழ்கிறாள்?. ஏற்கனவே, சீமத்தண்ணிக்காரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டே, ஏன், இன்னும் மற்ற ஆண்களை, அனுமதிக்கிறாள்?” இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், எனக்கு ரொம்பகாலம் விடை தெரியவேயில்லை. ரொம்பநாள் கழித்து, விடை தெரிந்துகொண்ட போதோ, நான் சுத்தமாக நொறுங்கிப் போனேன். 

தங்கம்மா குடிசையை நான் நெருங்கி விட்டேன். குடிசையின் வெளியில், அந்த சீமத்தண்ணி வண்டி நிற்கவில்லை. எனக்கு இப்பொது மனதில் ஒரு நிம்மதி வந்தது. 

குடிசை பக்கத்தில், நான் போனபோதுதான், என்னால், யாரோ சிரிக்கும் அந்த சத்தத்தைக் கேட்க முடிந்தது. அந்தச் சிரிப்புக்குரல், தங்கம்மாவுடையதுதான். “யாரோ அவள் கூட உள்ளே இருக்கிறார்கள்.” நான் சரேலென, இருட்டோடு இருட்டாய், அவள் வீட்டு ஜன்னலோரம் போய் மெல்ல எட்டிப் பார்த்தேன். 

தங்கம்மா, இன்னும் சிரித்துக்கொண்டேதான் இருந்தாள். அவளை, ஒருவன் கட்டிப்பிடித்து, ஆவேசமாய்.. ஆனால், அத்தனை வலியிலும், தங்கம்மா சிரித்துக்கொண்டே இருந்தாள். நான், அந்த மண்ணெண்ணெய் விளக்கின், மங்கலான ஒளியில், உள்ளே இருக்கும் அந்த ஆண், யார் என்று பார்த்தேன். அது.. அது.. அப்பா… 

என் சப்தநாடி ஒடுங்கியது. காட்சியை, அதற்கு மேல் காண எனக்கு மனதில்லை. நான், அப்படியே, ஜன்னலுக்குள் கீழ், உட்கார்ந்து கொண்டேன். 

எல்லாம் முடிந்தது. அப்பா, அயர்வாய் வெளியே வந்தார். தங்கம்மா, இன்னும் அந்த நக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே வெளியே வந்தாள். 

“அடியே.. எப்பப்பார்த்தாலும், என்னைப்பார்த்தா, ஏன் புள்ளே, சிரிச்சுக்கிட்டே இருக்கே? கிறுக்கச்சி.. கிறுக்கச்சி..” அப்பா, அதற்குமேல் கெட்ட கெட்ட வார்த்தைகளாக பேசினார். பணத்தை, அவள் மூஞ்சியில், விட்டெறிந்துவிட்டு, நடந்து போனார். இருளில் மறைந்து போனார். 

அவர் போன மறுகணமே, தங்கம்மா, நான் இருக்கும் ஜன்னல் பக்கம், வேகமாக வந்தாள். “யார் அது.. வெளியே வாய்யா” தங்கம்மா, அதட்டிய அதட்டலில், நான் மிரண்டு போனேன். “எப்படி கரெக்டாகக் கண்டுபிடித்தாள்?” நான், புரியாமல் விழித்தேன். 

தங்கம்மா கையில் இப்போது, அந்த மண்ணெண்ணெய் விளக்கு இருந்தது. கிட்ட வந்து, என் அடையாளத்தைக் கண்டுபிடித்து விட்டாள்.  

“சின்னையாவா..” நான், அவள் அதிர்ந்துபோவாள் என நினைத்தேன். ஆனால், அவளோ சிரித்தாள். “உள்ளே வா ராசா.” தங்கம்மா, என்னைக் கூட்டிக்கொண்டு , குடிசைக்குள் போனாள். 

பக்கத்தில் இருந்த சட்டியை அடுப்பில் வைத்து, குவளையில் இருந்த பாலைக் காய்ச்சினாள். காபித்தூள் போட்டு வடிகட்டி, சீனி போட்டு, என்னிடம் நீட்டினாள். நான் பேசாது, வாங்கிக் குடித்தேன். 

நான், குடிக்கும் வரை, என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள் தங்கம்மா.  

“அப்பா இப்பதான் வந்துட்டு போனார். என் உடம்பு உங்களுக்கும் வேணுமா ராசா?” தங்கம்மா, இப்போதும் என்னையே பார்த்துக்கொண்டே இருந்தாள்.  

தொடரும் 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *