தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

This entry is part 9 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா

கள்ளி – 6

சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா தாள அசுரர்களையெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்த கை. இங்கே இருக்கிற கீர்த்தி போதாதென்று நினைத்தோ என்னவோ பல பாஷைகள் பேசுகிற சங்கீதக் கோஷ்டியோடு அவரை வெள்ளைக்கார நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவர் போனார். ஆறு மாசம் சுற்றினார். மேதையை இறைத்து எல்லோரையும் பிரமிக்க அடித்தார். வெள்ளைக்கார நாடுகளை ரசித்தார். அனுபவித்தார். திரும்பி வந்தார். மலை, காடு, மேடு, பள்ளம், சோறு, சக்தி,ஆய்ச்சல் – இப்படியெல்லாம் ஓடி விட்டு வந்த மோட்டார் மாதிரி திரும்பி வந்தார். இங்கே வந்து செய்த முதல் கச்சேரியிலேயே நிமிஷத்துக்கு இரண்டு அபஸ்வரங்களாக உதிர்த்தார். வாசித்துக் கொண்டே வருகிறவர் திடீர் என்று வேறு தாளத்தில் வாசிப்பார். ‘பெரியவா சீமையை ரொம்ப ரஸிச்சுட்டாப்பல இருக்கு  ‘ என்று வேறு சொல்லிச் சொல்லி அவரைக் குழியை வெட்டி இறக்கினார்கள் ரசிகப் பிரபுக்கள். பிடிலின் வில்லை விட்டு பர்மிட் விஸ்கி பாட்டில்களையும் அதன் நிழலுக்குள்ளே ஒண்டி வந்த அதிகப்படி சீசாக்களையும் பற்றிக் கொண்டது அவர் கை. பிரபுக்களுக்கும் சபைகளுக்கும் பதிலாக நண்பர்கள் காப்பாற்றி வருகிறார்கள்.

கிருஷ்ணன் அவர்களில் ஒருவர். ஆனால் கதை நடக்கும் அன்று கிருஷ்ணன் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார். ஆபிசிலிருந்து வீடு திரும்பும் அவரால் சட்டையைக் கழற்ற முடியவில்லை. விட்டேன் விட்டேன் என்று வேர்வை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.வேர்வை மட்டுமில்லை. பிடிக்கப் பிடிக்கத் தைத்திருந்த தையலும் சேர்ந்து கொண்டது. மூன்று கஜம் வாங்கினால் இந்த வேதனைகளைத் தவிர்க்க முடியாது என்றுதான் மூன்றேகால் கஜமாக வாங்கிக் கொடுத்து தாராளமாகத் தை என்று சொன்னது. தையற்காரன் போன்ற மனிதப் புழுக்களின் அற்பத்தனம். க்ஷவரத் தகட்டால் சட்டையைக் கிழித்தது விடலாமா என்று ஒரு கணம் நெஞ்சக குமுறல். புறக்கடைக்கு ஓடி குளுகுளுவென்ற தண்ணீரைக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் கிருஷ்ணன்.

அப்போது சுப்பண்ணா வந்து விட்டார். சுப்பண்ணாவின் குழந்தைக்குப் பத்து ரூபாய் ஸ்கூல் பணம் கட்டினால்தான் பரீட்சை எழுத முடியும் என்று ஹெட்மாஸ்டர் சொல்லி விட்டார். அவரைப் பார்த்ததும் குரோதமும் வெறுப்புமாக நெஞ்சில் மாறி மாறிப் பாய்கிறது கிருஷ்ணனுக்கு. இரண்டு மூன்று இடங்களில் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை என்று கிருஷ்ணன் வந்தவரிடம் சொல்கிறார்.அவரை வீட்டுக்குள் கிருஷ்ணன் கூப்பிடவில்லை, கிருஷ்ணனுக்கு அவர் வெளியே போனால் போதும் போலிருக்கிறது.  கிருஷ்ணன் என்கிட்டே இருந்தால் கொடுத்து விடுவேன் என்று சொல்லி அவரை அனுப்பி விடுகிறார். காபி தரட்டுமா என்று கேட்டு வரும் மனைவியிடம் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொள்கிறார். மொட்டை மாடிக்குப் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார்.

வீட்டில் பெட்டிக்குள் பதினைந்து ரூபாய் இருக்கிறது. ஆனால் எடுத்துக் கொடுக்கலாம், ஆனால் ஏன் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இருநூறு முன்னூறு என்று கைமாற்றாக வாங்கிக் கொண்டு விட்டு திருப்பித் தரும் நினைவே இல்லாமல் அவரை ஏமாற்றிய நண்பர்கள் நினைவு வருகிறது. பாட்டு வாத்தியார், ரங்கசாமி, வெங்கடாச்சாரி,தேவாச்சரியம், கிட்டண்ணா, சங்கரய்யர் ! எவ்வளவு பேர்கள்? உங்களுக்கெல்லாம் கடன் கேட்க என் மாதிரி அன்றாடங்காச்சிதானா அகப்பட்டான் என்று குமுறுகிறார். கிருஷ்ணனுக்குத் தன் மீதே கோபம் வருகிறது. பட்டணத்துக்கு வந்து மாறிவிட்ட தன் மீதே கோபம். தன்னையே சுக்குநூறாகக் கிழித்துப் பட்டணத்து அசுரனான பணமுடைக்கு முன்னால் பலியாக வைக்கப்பட வேண்டியதை நினைத்து மனவலி தாளாமல் முனகுகிறார்.

அப்போது குளிர் காற்று வீசி, மின்னல் சொடுக்கி, மடேர் என்று உலோகப் பாளம் வெடிக்கிறாற்போல் பேரொலி எழுந்து மழை வருகிறது.சாதாரண மழை இல்லை. ஒரே கனமும் இரைச்சலுமாக விழுந்த மழை.பட்டணம் முழுதும் குளிக்கும் மழை. இன்னும் இரவு முழுவதும் இப்படியே பெய்ய வேண்டும்.இப்படியே மின்ன வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது.

அப்போது “நீ இங்கியாப்பா நிக்கிறே?” என்று கிருஷ்ணனின் குழந்தை மாடிப் படியேறி வந்து கேட்கிறது. மொட்டை மாடியைப் பார்க்க ஓடுகிறது.

“எங்கம்மா ஓடறே? துணி உலத்திருக்கியா?” என்று கூட ஓடி, மழைக்குப் பயந்து சார்ப்பிற்குள்ளேயே தடைப்பட்டு நிற்கிறார்.

“நீ போப்பா. பேசாம நின்னிண்டுருக்கியே. இஞ்ச வாப்பா…இது ரெண்டையும் உள்ளே கொண்டு வய்யி. எனக்குத் தூக்க முடியலேப்பா” என்று சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே கத்துகிறாள் குழந்தை. மின்னலில் குழந்தையின் முகம், உடலெல்லாம் பளிச்சிடுகிறது.அவர் இரண்டு தொட்டியையும் உள்ளே கொண்டு வைத்த பின், அவசர அவசரமாகத் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரைக் கையால் இறைத்து வடிக்கிறாள் குழந்தை.

“உனக்குத் தெரியாதாப்பா, இதுக்கு ரொம்பத் தண்ணியே கூடாதுன்னு!” என்று அவரைக் கடிந்து கொள்கிறாள்.

இரண்டும் கள்ளிச் செடிகள்; சப்பாத்தி மாதிரி தட்டையில்லை. உருண்டைக் கள்ளிகள், சாம்பல் நிறக் கள்ளிகள். இலை இல்லை. தண்டு தண்டாகப் பக்கவாட்டில் காய்கள் போல உருண்ட கள்ளிகள். ‘இது பாலைவனத்துக் கள்ளிப்பா. தண்ணி ரொம்ப ஊத்தப்படாது’ என்று வாங்கி வந்த உடனேயே எச்சரித்திருந்தாள் அவள்.காலையில் கண்ணைப் பிட்டுக் கொண்டவுடன்,மாடிக்குப் போய் ஒரு தடவை பார்ப்பாள். பள்ளிக்கூடம் போகுமுன் ஒரு தடவை, திரும்பி வந்ததும் வராததுமாக ஒரு தடவை. நிலாக் காயும் போது இரவில் பல தடவை. மலரோ காயோ இதுவரை ஒன்றும் கொடுக்க

வில்லை. இருந்தால்தானே கொடுக்க? எது அழகில்லை? மழை வெய்யில் மின்னல் எருமை மரவட்டை எல்லாம் அழகுதான். எலும்பும் தோலும் துந்தனமுமாக வளர்ந்த பிச்சைக்காரனும் அழகுதான் என்று கிருஷ்ணன் நினைக்கிறார்.

இதன் பின் கிருஷ்ணன் கீழே போய்ப் பெட்டியில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு குடையுடன் தெருவில் இறங்குகிறார். இரண்டு தெருக்களுக்கு அப்பால் இருந்த சுப்பண்ணா வீட்டை நோக்கி நடக்கிறார். அங்கு சுப்பண்ணாவைப் பார்த்து ஏதோ நண்பரிடம் கடன் கிடைத்தது என்று சொல்லி பத்து ரூபாயை  சுப்பண்ணாவிடம் கொடுக்கிறார். சுப்பண்ணா”இப்படிக் கொட்டற மழையிலே மூணாம் மனுஷா கிட்டப் போயி…ஹ்ம்ம்…சத்குரோ” என்று பெருமூச்சு விடுகிறார்.

அந்தப் பெருமூச்சில் லேசாக ‘அந்த’ வாசனை வீசுகிறது. தன் வாயிலிருந்து வரும் பட்டணத்து வாடைக்கு ஏற்ற வாசனைதான் என்று கிருஷ்ணன் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்.

எது கிருஷ்ணனின் மனதை மாற்றியது? எந்த வித முன்முடிவும், அபிப்பிராயங்களும் தாக்காத ஒரு மனதில் ததும்பிப் பொங்கும் அன்பை, யாரும் அவ்வளவாக மதித்துக் கொண்டாடாத கள்ளி மீது காண்பிக்கும் குழந்தையின் செயலா? ‘மலரோ காயோ இதுவரை ஒன்றும் கொடுக்கவில்லை. இருந்தால்தானே கொடுக்க?’ என்பது கள்ளியை அல்ல சுப்பண்ணாவைச் சுட்டிக் காண்பிக்கிறது. ஒரு பிச்சைக்காரனும் அழகு என்று உணரும் தருணம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பிறந்த சுப்பண்ணா மீது கிருஷ்ணன் முன்பு கொண்டிருக்கும் குரோதமும், வெறுப்பும் அர்த்தமற்றது என்று உணர்த்துகிறதா? கதையில் மனிதர்களை சூரியனின் வெப்பத்திலிருந்து மழையின் இதம் வந்து காப்பாற்றுவது தற்செயலல்ல, அது இயற்கையின் நியதி என்பது தவிர, மாற்றுக்  கருத்துக்கள்,  மாறும் சூழ்நிலைகள் ஆகியவை வாழ்வின் பரிணாமத்தோடு இழைந்து செல்பவை என்றும் ஒருவர் உணர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Series Navigationகட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்எனது யூடூப் சேனல்
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    J.Bhaskaran says:

    அழகான கவிதை போன்ற கதை.” கதையில் மனிதர்களை சூரியனின் வெப்பத்திலிருந்து மழையின் இதம் வந்து காப்பாற்றுவது தற்செயலல்ல, அது இயற்கையின் நியதி என்பது தவிர, மாற்றுக் கருத்துக்கள், மாறும் சூழ்நிலைகள் ஆகியவை வாழ்வின் பரிணாமத்தோடு இழைந்து செல்பவை என்றும் ஒருவர் உணர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.” – உண்மைதான். கள்ளிச் செடியைப் போற்றும் குழந்தை மனதை நிறைக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *