புஷ்பால ஜெயக்குமார்
1
அவள் ஒருத்தி இறந்துவிட்டாள்
என்று சொல்லலாம் தத்துவார்த்தமாக
மிக மென்மையான அவள் அழகும்
பூ போட்ட அவளது உடையும்
என்னோடு சாகும் அல்லது
அவளோடு (அவள் மறந்துவிட்டாலும்)
இந்த காதல் யாருக்குச் சொந்தம்
என்று விசாரணையில் தெரியவரும்
அது பிரித்தளித்த இரண்டு வாழ்க்கை
கிளைவிட்டுப் பரவுகிறது
எல்லாம் மாறிவிட்டது
எல்லாம் புதைந்தும் போய்விட்டது
ஒன்றிரண்டு நினைவுச்சின்னத்தைத் தவிர
என் தலையில் இருக்கும் செல்களின்
கூட்டமைப்பில் சில மிச்சங்களை வடித்தெடுக்கிறேன்
ஒரு கோட்டிலே பல புள்ளிகள் இருப்பதுபோலே
ஒன்றில் காதல் மற்றொன்றில் நானென
நினைத்தபோது ஒரு ரோஜா இதழ்
காற்றில் பறக்கிறது
2
கீழும் மேலும்
அலைவுரும் நான்
முரணியக்கத்தில்
ஐம்பதுக்கு ஐம்பது
என்று சொல்வதற்கில்லை
உண்டா இல்லையா
ஆமாம் இல்லை
வரும் போகும்
நானும் நீயும்
நியாயமானவனில்லை
சுதந்திரத்தின் விருப்பம்
பறவையின் இறக்கையில் இல்லை
கீழ்மையின் ஸ்பரிசத்தை
உச்சத்தில் வைத்த
தீமையின் மலர்கள்
இன்புறும் கனவை
வழிய விடுகிறேன்
கொட்டிய பாலில்
உள்ளிருந்து அள்ளி
எஃகு போல் கரையாத
காக்கையின் மௌனத்தில்
இருக்கிறேன் நான்
3
அந்நாட்டுத் தலை நகரத்தின்
தெருவோரத்து நடை பாதையில்
அம்மனிதன் நடந்த போது
அப்புத்தகத்தின் முதல் வரி எழுதப்பட்டது
அதற்காக பல்வேறு
சரித்திர நிகழ்வுகள் அலசப்பட்டது
சாத்தியப்பாடுகள் சொற்கள்
குறியீடுகள் மந்திர மாற்றங்கள்
கதைக்கு மறுபக்கத்தில் உதவிய
புள்ளிவிவரங்கள் செதுக்கிய பாதையில்
இன்னொருவர் எழுதிய
தகவல் களஞ்சியத்தின்
முன்னோடியின் முன் ஓடும்
மனிதர்களின் அவதானிப்பு
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
நட்சத்திரத்தின் கடந்த காலம்
கண்ணுக்குத் தெரிவது போல்
இப்பொழுது என்ன நடக்கிறதெனச்
சொல்ல வந்தவன்
4
எங்கும் பாதை நான் கை வைத்த இடமெல்லாம்
இரவோ பகலோ என் உணர்ச்சிகளின்
விருப்பத்தில் நான் போகிறேன்
மனதில் நின்று பார்க்கிறேன்
கடந்த காலம் நிகழ் காலம்
எதிர் காலம் எனப் பிரித்தலன்றி
நித்தியத்தின் மீதமர்ந்து காண்கிறேன்
தலை சாயும் நினைவுகள்
கிள்ளி எறிந்த விதைகளாய்
பூ பூக்கும் கொடியெனப் படர்ந்து
நரம்பில் செய்திகளை எக்காலத்திற்குமான
வகைமாதிரியான வாழ்க்கையை
அள்ளி தெளித்திடும் ஒரு நான்
காத்திருப்போர் பட்டியலில்
கோமாளியெனக் கூறிய வித்தைக்காரன்
வீணாய்ப்போனவனின் மிஞ்சும்
நிழல் படக் காட்சிகள்
உறைந்ததை உருக்கி எடுக்கும்
வெப்பமென நான்
புஷ்பால ஜெயக்குமார்
இக்கவிதைகளை தங்கள் பத்திரிக்கையில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.