கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது

author
1 minute, 7 seconds Read
This entry is part 1 of 12 in the series 4 அக்டோபர் 2020

கோ. மன்றவாணன்

     கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே…

      தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி இருந்ததா என்றால் இருந்தது என்பதுதான் பதில். அப்படியானால் கள் விகுதி பின்னர் வந்தது என்று எப்படிப் புறந்தள்ள முடியும்?

      முதலில் தொல்காப்பியத்தில் பார்ப்போம்.

      கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

      கொள்வழி உடைய பலவறி சொற்கே

                        – தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல் 15

      இந்தக் கள் விகுதி அஃறிணைப் பலவின்பால் இயற்பெயர்க்கு வரும் என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் என்று உரைவிளக்கம் தருகின்றனர். ஆகத் தொல்காப்பியர் காலத்தில் கள் விகுதி இருந்துள்ளது.

      கீழ்க்கண்ட குறள்களைக் காண்போம் :

      துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

      மற்றை யவர்கள் தவம் – குறள் 263

      வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

      பூரியர்கள் ஆழும் அளறு  – குறள் 919

      அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

      அவாஉண்டேல் உண்டாம் சிறிது – குறள் 1075

ஆக இந்த மூன்று குறள்களிலும் கள் விகுதி வந்துள்ளது.

      இக்குறள்களில் முதல் குறளில் உள்ள “மற்றையவர்கள் தவம்” என்பது தவறு. “மற்றையவர்கண் தவம்” என்பதே சரி.  இந்த இரண்டும் “மற்றையவர் கடவம்” என்று புணரும். அந்த “மற்றை யவர்க டவம்” என்பதைத்தான் சொல்பிரித்து எழுதியவர்கள் “மற்றையவர்கள் தவம்” என எழுதிவிட்டனர் என்று கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் தெரிவிக்கிறார். இது குறித்துக் கள் மயக்கம் என்ற தலைப்பில் அவரொரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அந்தக் குறளை விட்டுவிடுகிறேன். ஆனால் அடுத்துவரும் இரு குறள்களில் உள்ள கள் என்பது கள் விகுதிகள்தாம். அவற்றை யாரும் கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபாகக் கொள்ளவில்லை. அந்தக் கால முறைப்படி உயர்திணைச் சொற்களுக்குக் கள் விகுதி வராது. அஃறிணைச் சொற்களுக்கு மட்டும்தாம் கள் விகுதி வரும். அந்த வகையில் பூரியர்கள், கீழ்கள் ஆகிய சொற்கள் உயர்திணையாகிய மக்களைச் சுட்டுகின்றன. ஆனால் வள்ளுவர் ஏன் உயர்திணையில் கள் விகுதியைச் சேர்த்தார் என்ற கேள்வி எழுகிறது? அதற்கும் புலவர் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளிக்கிறார். அவர்கள் மக்கள் என்றாலும் அவர்களிடத்தில் உயர்பண்புகள் இல்லாமையால் அஃறிணையாக உணர்த்திக் “கள்” விகுதியைச் சேர்த்து எழுதி உள்ளார் என்பதுதான் அந்த விளக்கம். இவ்வாறு சொற்களில் குறியீட்டுத் தன்மைகளை ஏற்படுத்திப் பொருள் உணர்த்துவது கவிஞர்களுக்கே உரிய தனி அதிகாரம்.

      தொல்காப்பியம், திருக்குறள் மட்டுமல்ல. பிற சங்க இலக்கியங்களிலும் கள் விகுதி ஆளப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்தில் அரண்கள் என்றும் ஐங்குறு நூற்றில் மயில்கள் என்றும் கலித்தொகையில் சொற்கள் என்றும் எடுத்துக் காட்டுகள் உள்ளன.

      எது எப்படி இருப்பினும் தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் சங்கப் புலவர்கள் காலத்திலும் கள் விகுதி இருந்துள்ளது. ஆனால் கள் விகுதி பிற்காலத்தில் வந்தது என்று சில கட்டுரைகள் வந்துள்ளன. இதிலிருந்து ஓர் உண்மையை ஊகித்து அறியலாம். முற்காலத்தில் கள் விகுதியின் பயன்பாடு மிகக்  குறைவாக இருந்துள்ளது. பிற்காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம் ஆனது என்று அமைதி கொள்ளலாம்.

      அடுத்ததாகக் கள் விகுதியை அஃறிணைக்கு மட்டும்தான் சேர்க்க வேண்டுமா? உயர்திணைக்குச் சேர்க்கக் கூடாதா? எனக் கேள்விகள் எழுகின்றன.

      என்னதான் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளித்தாலும் மேற்கண்ட குறள்களில் இலக்கணப்படி உயர்திணையான மக்களைச் சுட்டியபோது “கள்“ விகுியை வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். எனவே கள் விகுதியை இரு திணைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று வாதிட முடியும். பொதுவாக முற்காலத்தில் அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் கள் விகுதி பொருத்தப்பட்டது.

      அரசர் என்ற சொல் ஒருமையா பன்மையா என்றால் பன்மை என்றே நம் இலக்கணம் சொல்கிறது. அரசர் என்ற சொல்லுக்கு ஒருமை என்ன என்று கேட்டால், அரசர் என்றே சொல்வார்கள். இருவராக இருந்தாலும் அரசர் என்றே எழுதுவார்கள். அரசர் என்பது ஒருமையா பன்மையா என்பதை எண்ணிக்கையை வைத்தே ஊகித்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அரசன் என்றால் ஒருமைதான் என்று முடிவாகத் தெரியும். ஆனால் தமிழ்ப்பண்பாட்டில் அரசன் என்று அன் விகுதி போட்டுச் சொல்வதை மதிப்புக் குறைவாகக் கருதுகிறார்கள். அதனால் அர் என்கிற பன்மை விகுதியை இட்டு அரசர் என்று மரியாதையாகச் சொல்வது வழக்கமாகி இருக்கிறது. இதனை மரியாதைப் பன்மை என்று இலக்கணம் சுட்டுகிறது. இது போலவே அரசி என்பது ஒருமையைக் குறிக்கும். ஆனால் அரசியார் என்று மரியாதைப் பன்மையில் சொல்வார்கள்.

      புலவர் என்ற சொல் ஒருவரைக் குறிக்கிறதா ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிக்கிறதா என்றால் இரண்டையும் குறிக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க என்ன வழி?

      புலவர் என்றால் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். புலவர்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பதாகச் சொல்லலாம் என்று முடிவு செய்துவிட்டால் ஒருமை பன்மை சிக்கல் தீர்ந்துவிடும்.

      ஆனால் புலவர் அரசர் என வருகிற சொற்களில் ஏற்கனவே “அர்” விகுதி வந்துவிட்டது. புலவர்கள்,  அரசர்கள் ஆகிய சொற்களில் அர் என்ற விகுதியும் அத்துடன் சேர்ந்து கள் விகுதியும் உள்ளது. ஒரு சொல்லில் இரு விகுதிகள் வருவன சரியில்லை என்று சிலர் கூறுகிறார்கள், இரு விகுதிகள் வந்தால் என்ன குறைந்துவிடும்?

      தமிழில் உள்ள விகுதிகளைப் பட்டியல் இட்டுள்ளனர். அதன்படிச் சில பகுசொற்களை நுட்பமாக ஆராய்ந்தால் இரு விகுதிகள் இருக்கும். ஆனால் இறுதி விகுதிக்கு முன் வரும் விகுதியைச் சாரியை என்று சொல்லிவிடுகின்றனர். வந்தனர் என்ற சொல்லை வா+த்(ந்)+த்+அன்+அர் என்று பகுத்துரைக்கலாம். இப்பகுப்பில் அன்+அர் என இருவிகுதிகள் உள்ளன. ஆனால் இங்கே அன் என்பதைச் சாரியை என்கின்றனர். ஒரு சொல்லில் ஒரு விகுதி மட்டும்தான் வரும் என்று உறுதியாக இருக்கின்றனர். விகுதி என்றாலே இறுதி என்றுதான் பொருள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல் வந்தார்கள், அரசர்கள் போன்ற சொற்களில்  உள்ள அர் ஆர் ஆகியவற்றைச் சாரியை என்றோ, வேறொன்றாகவோ சொல்லிக் கொண்டால் என்ன என்றோர் எண்ணமும் எழுகிறது. இதை இன்றைய நிலையில் யாரும் ஏற்க மாட்டார்கள். சில தமிழறிஞர்கள் சொல்வது போல் அரசர்கள் என்பதிலும் வந்தார்கள் என்பதிலும் இரு விகுதிகள்தாம் வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். தற்கால நடைமுறையில் இரு விகுதிகள் கொண்ட சொற்கள் வந்துவிட்டன. அதனால் ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்று இசைவு தந்தால் தமிழ்த்தாய் மறுப்பாளா என்ன?

      மரியாதைப் பன்மையை முன்னிட்டு நாம், யாம் என்று சிலர் சொல்லியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் என்பதும் யாம் என்பதும் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்ற கேள்வி முன்னரே எழுந்துள்ளது. அதனால்தான் நாங்கள் என்றும் யாங்கள் என்றும் உயர்திணையில் “கள்” சேர்த்து ஒருமை பன்மை மயக்கத்தைத் தெளிய வைத்துள்ளார்கள்.

      இவ்வாறு மரியாதைப் பன்மையில் ஏற்படும் ஒருமையா பன்மையா என்ற குழப்பத்தைத் தீர்க்க அர் விகுதியோடு கள் விகுதியைச் சேர்த்து வந்துள்ளோம். இது நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உள்ளது. எந்த இடரும் ஏற்படுவதில்லை.

      சங்க காலத்தில் கள் விகுதி அஃறிணைப் பன்மைக்கு வந்துள்ளது. வராமலும் இருந்துள்ளது. கள் விகுதி இல்லாமல் அஃறிணைப் பன்மையை எவ்வாறு சுட்டினார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.

      குறுந்தொகையில் “காலே பரிதப்பினவே” என்றொரு சொல்தொடர் உள்ளது. இதன் பொருள் கால்கள் ஓய்ந்தன என்பதாகும். காலே என்பதில் உள்ள கால் அஃறிணை ஒருமை ஆகும். பரிதவிப்பினவே என்பதில் பன்மை வினைமுற்று இருக்கிறது. இந்த வினைமுற்றைக் கொண்டு கால் என்பது கால்கள் என உணர்த்தி உள்ளார்கள். இதுபோலவே “கலுழ்ந்தன கண்ணே” என்றொரு சொல்தொடர் நற்றிணையில் உள்ளது. இதன் பொருள் அழுதன கண்கள் என்பதாகும். கலுழ்ந்தன என்ற பன்மை வினைமுற்றைக் கொண்டு கண் என்பதைக் கண்கள் என்று உணர்த்தினர். நெகிழ்ந்தன வளையே என்றும் நற்றிணையில் உள்ளது.

      தற்காலத்தில் நாம் “பறவைகள் வந்தன” என்று எழுதுகின்றோம். இந்தச் சொல்தொடரில் “வந்தன” என்னும் பன்மை வினைமுற்று இருந்தாலும் பறவைகள் என்பதில் “கள்” விகுதி சேர்ந்து உள்ளதைக் கவனியுங்கள். சில சங்க இலக்கியங்களில் கையாண்டவாறு பறவை வந்தன என்று எழுதி, பன்மை வினைமுற்றைக் கொண்டு பறவை என்பது பறவைகள்தாம் என உணர்த்தலாம். ஆனால் இன்றைய தமிழாசிரியர்கள் பறவை வந்தது என்று திருத்துவார்கள். ஆகவே, அப்படி இப்படி என்று எப்படியும் ஒருமை பன்மை மயக்கம் வந்துவிடக் கூடாது என்ற கூடுதல் முன் எச்சரிக்கையோடுதான் இந்தக் கள் விகுதியை இணைத்திருக்கிறார்கள்.

      வந்தார்கள் என்று எழுதக் கூடாது. வந்தனர் என்றுதான் எழுத வேண்டும் என்று சிலர் இன்றும் விடாப்பிடியாகச் சொல்லி                   வருகின்றனர் / வருகின்றார்கள். இதுபற்றிப் பார்ப்போம்.

      ஆடு வந்தது என்று அஃறிணை ஒருமையைச் சுட்டுகிறோம்.

      ஆடுகள் வந்தன என்று அஃறிணைப் பன்மையைக் குறிக்கிறோம்.

      இதில் உள்ள வந்தன என்பதில் இருந்துதான் வந்தனர் என்று உயர்திணைப் பன்மையை உருவாக்கிக் கொண்டுள்ளோம். ஆனால் தற்காலப் பேச்சு வழக்கில் வந்தனர் என்று சொல்வதில்லை. ஒருமையில் வந்தார் என்றும் பன்மையில் வந்தார்கள் (வந்தாங்க) என்றும் பேசுகின்றோம். வந்தனர் என்ற பயன்பாடு நீண்ட காலமாகவே உள்ளது. வந்தனர் என்றாலும் வந்தார்கள் என்றாலும் பொருள்குழப்பமோ ஒருமை பன்மை மயக்கமோ ஏற்படவில்லை. ஆக வந்தனர் என்றும் பயன்படுத்தலாம். வந்தார்கள் என்றும் பயன்படுத்தலாம் என்று நெகிழ்வதே சரியாகும். கற்றலிலும் கற்பித்தலிலும் வந்தார்கள் என்பது எளிமையானது. பன்மைப் பெயர்ச்சொற்களிலும் பன்மை வினைமுற்றுகளிலும் கள் விகுதியைச்  சேர்ப்பது தெளிவு கிடைப்பதற்கே.

      எனவே

      தொல்காப்பியத்தில் சொல்லிவிட்டதால் கள் விகுதியை அஃறிணைப் பன்மைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர்திணைப் பன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கைவலிக்கப் பிடித்துத் தொங்க வேண்டாம். எளிமை இனிமை தெளிமை கருதி விதி தளர்த்தல் செய்யலாம். நமக்கு முன்பே விதி தளர்த்தல் நடந்தும் விட்டது. பல தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

      தற்காலத்தில் கள் விகுதியை உயர்திணைக்கும் பயன்படுத்தலாம் அஃறிணைக்கும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்துகொள்வதே தமிழுக்கு நலம் சேர்க்கும். அதுபோலவே ஒருமையா பன்மையா என்பது பற்றிய தெளிவுக்காக ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்றும் இசைந்து கொடுப்பதே தமிழுக்கு வளம் சேர்க்கும்.

      இனி, யார் என்ன செய்தாலும் எப்படி அழுது புரண்டாலும் தமிழில் கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது.

Series Navigationகவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *