மறு பிறப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 17 in the series 11 அக்டோபர் 2020

குணா


வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை. எங்களைத் தவிர அங்கு வந்த யாருக்கும் இல்லை. ஆனால் போய் வந்த மறுநாள் சளி கோத்துக் கொண்டது. எனக்கும், என் உற்றாளுக்கும். அத்துடன் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. அதற்கான அத்தனை அறிகுறிகளும்.

சோதிக்க முகாமிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பார்த்ததும் ஒத்தி வைக்க மனமில்லாது, போய் சோதிக்க சென்று வந்தோம். எந்தவித சங்கடமும் இல்லாமல் எங்களை தனிமைப் படுத்திக் கொண்டோம். பரிசோதனை முடிந்து மூன்று நாட்களாகும் என்றார்கள் விடை தெரிய. இருந்தும் நாங்கள் வீட்டுக்குள்ளேயே ஒதுங்கிக் கொண்டோம். ஒரு நாள் தானே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இது பாரத தேசம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு தான் முடியும் என்ற நிலைமை. நூற்று முப்பது கோடி மக்கள். எங்கு தொட்டால் எதில் தொடரும் என்று யூகிப்பதே கஷ்டம். இதில் என்ன செய்து எதை கண்டு பிடிக்க…

மூன்று நாள் கழித்து எங்களுக்கு தெரிய வருவதற்கு முன் சுகாதாரத்துறை எங்கள் வீட்டை முற்றுகையிட்டு விட்டது. தட்டியடித்து போஸ்டர் ஒட்டி… வந்த கொரோனாவைவிட அந்த கொடுமை பெருங்கொடுமை. அத்தோடு நிற்காமல், அரசு மருத்துவ மனையில் போய் பதிவு செய்து தங்க வேண்டும் என்ற ஆணை வேறு. அதைவிட கொடுமை வேறு வேண்டாம். படுக்கை பற்றாமல் கீழெல்லாம் மக்கள். பேருக்கு தடுப்பென்ற பிரிவு. எந்த அளவுக்கு அது பாதுகாக்கும் என்று அவற்றை பரிந்துரைத்தவர்களுக்குத்தான் தெரியும்.

நாங்கள் முன்பேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்று வற்புறுத்திச் சொல்ல ஓரளவுக்கு சமாதானமானது போலானாலும், எனக்கு வயது காரணமாய் மருத்துவமனைக்கு போயே ஆக வேண்டும் என்றார்கள். அதை தடுக்க என்ன வழியென்று தேடிய போது வடக்குத் தெரு மாரிமுத்து சொன்னது அவர்களை ஒத்துக் கொள்ள வைத்தது. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து விடுகிறேனென்று. அரசு மருத்துவ மனைகளில் இடமில்லாதது அதற்கு ஒத்துப் போய்விட்டது.

இருந்தாலும், மருத்துவர் ஒருவரின் பரிந்துரையும், அவர் கண்காணிப்பில் இருக்கப் போவதாய் சான்று தந்த பின்னரே அதற்கு ஒத்துப் போனார்கள்.

இது, சாதாரணமாய் வாங்கும் மருத்துவச் சான்றிதழ் போலில்லை. போகப் போவதாய்ச் சொன்னால் போக வேண்டும். யாரும் சும்மா ஒப்புக்கு தராமல், உத்தரவாதத்தை சரி பார்த்துக் கொண்டார்கள்… அவரவர் வாழ்க்கைப் பிரச்சினை. ஏதாவது தவறு செய்தால் எந்த விதத்திலாவது அவர்களை வந்து சேர்ந்து விடுமோ என்ற பயம்.

ஆம்புலன்ஸில் வந்து ஏற்றிக்கொண்டு போவதாய் சொன்னார்கள். விடியற்காலை வந்து விடுவதாய் சொன்னார்கள்.

என் மனைவிக்கு பரவாயில்லை. வெகு ஆரம்ப நிலை. வீட்டிலிருந்து மருந்து உட்கொண்டு கவனித்துக் கொள்ள வேண்டுமென்றார்கள். பரிந்துரை செய்த மருத்துவர் கண்காணிப்பில் கொள்வதாய் சொல்லி என்னை மட்டும் போகச் சொல்லியிருந்தார்.

மனைவிக்கும் சங்கடம். எப்படி விட்டு தனியாக அனுப்புவது. தானும் வந்து விடுகிறேனென்றாள். இருவரும் சேர்ந்து சென்றால், ஒரே அறை தருவார்களாம். அடுத்த தெரு மணியக்காரர் வீட்டில் சொன்னார்கள். எல்லாம் அலைபேசியில் தான். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு. அத்தனை பேரும் நான் போகும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள். இருவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து தேறி வந்துவிட்டதாய் சொன்னார்கள். மூத்தவரும் சிறு குழந்தையும் தப்பி விட்டார்கள். எந்த விதத்தில் அது தாக்குகிறது என்று புரிபடவில்லை. அவர்கள் சொன்னது தான் ஓரளவுக்கு ஆறுதலாய் இருந்தது. இருந்தாலும் நம்பிக்கையில்லை.

அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை. போனால் திரும்பி வருவேனா என்ற கேள்வி தொக்கி நின்றது. வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து தெரு வாசல் வரை கிட்டத்தட்ட தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தேன். வீட்டை அங்குலம் அங்குலமாய் பார்த்தேன். இவற்றோடு உள்ள பந்தம் முடியப் போகிறது என்ற எண்ணம் தலை தூக்கியிருந்தது.

தொடர்ந்து அலைபேசியும், தொலைபேசியும். கொரோனாவினால் இருந்த அசதியைவிட வந்த தொல்லைபேசிகளுக்குப் பதில் சொல்லியே அதிக அசதி வந்து விட்டது. அலைபேசியை ஆஃப் பண்ணி வைத்து விட்டோம். தொல்லை பேசியை எடுக்கவேயில்லை. செத்துவிட்டதாய் உயிரோடிருக்கும் போதே விசாரிப்பது போலிருந்தது.

அந்த இரவு கொடூரமாயிருந்தது.

ஒரு கட்டத்தில் அசதி அதிகமாக, மடக்கு நாற்காலியை முற்றத்தில் இட்டு தாழ்வார இடையில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு சாய்ந்து விட்டேன்.

வானத்தில் நிலா. மேகக் கூட்டங்களினூடே வேகமாய் போனது… எப்பொழுதும் ஆனந்தமாய் அதைப்பார்த்து இப்படியே சாய்ந்து உறங்கிய காலங்களுண்டு. இன்று அப்படியில்லை. என்னைக் கூட்டிக் கொண்டு போகும் நேரம் வெகு சீக்கிரம் என்னை நோக்கி வருவது போலிருந்தது.

ஒரே பையன். ஊரில் உள்ள எல்லோரையும் போல அமெரிக்க வாசம். வெகு நாளாய் கூப்பிட்ட போது போயிருக்கலாம். பேரப் பிள்ளைகளைப் பார்த்து வெகு நாட்களாயிற்று. அவர்களோடே இருந்திருப்போம். இப்பொழுது… நான் போய்ச் சேர்ந்தால் வருவார்களா…

வந்தால் என்ன… வராவிட்டால் என்ன… நாம் போய்ச் சேர்ந்த பிறகு நமக்கென்ன… அலைபேசியில் பேசி முடித்து விட்டார்கள். ஒவ்வொருவராய்… மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என பேசி முடித்த பின் தான் அசதி அதிகமானது போலிருந்தது.

போய்ச் சேர்ந்தால் ஒதுக்கப்பட்ட சாவு தான். கிருமிகள் பரவாமல்… எத்தனை பார்த்தோம்… கொத்து கொத்தாய்… ஆனால் இப்பொழுதெல்லாம் செய்திகளில் வருவதில்லை. சரியாகிவிடுமோ… சரியாகும் சதவீதம் அதிகம் என்கிறார்கள்.

இருக்கும் சொத்து பத்துகள் என்னவாகும், நாங்கள் இரண்டு பேரும் போய்ச் சேர்ந்து விட்டால்… வந்து எடுத்துச் செல்வானா… வரப்போவதில்லை என்று தீர்மானமாய் சொல்லி விட்டான்.

போன வாரம் வரை பேசும் போது அவர்களை பத்திரமாய் இருக்கச் சொன்னோம். அங்கு தான் அதிகமாய் இருக்கிறதென்று… இப்பொழுது தலை கீழாய் மாறிவிட்டது.

என்ன தான் ஆறுதலாய் பேசினாலும் ஏதாவதென்றால் வரமுடியுமா என்ற ஆதங்கம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தளர்த்திவிட்டார்களாமே… ஆனால் விமான சேவை எதுவும் சரிவர தொடங்கவில்லை.

அதையெல்லாம் கடந்து விட்டோம் என்ற எண்ண அலைகள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. நாம் போன பிறகு என்ன நடந்தாலென்ன…

விடி வெள்ளி வெளி வந்து பிரகாசிக்கத் தொடங்கியது. நான் அசந்து போனேன்.

“வா மகனே” என்று யாரோ அழைப்பது போலிருந்தது. “என்னங்க, வண்டி வந்து விட்டது”. என் மனைவி தொட்டு எழுப்பியது.

இரவே தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டேன்.

நீலம், சிவப்பு என பளீர் பளீர் என்று விட்டு விட்டு எரிந்த ஆம்புலன்ஸ் விளக்கு எனக்கு அபாய மணி அடிப்பது போலிருந்தது.

ஒரு முறை திரும்பவும் வாசல் முதல் கொல்லைப்புறம் வரை நடந்தேன். மனைவியை ஒருமுறை கட்டித் தழுவினேன். இதுவரை மற்றவர் முன்னிலையில் அவ்வாறு செய்ததில்லை. இப்பொழுது தோன்றியது.

மனைவிக்கும் கொரோனா இல்லையென்றால், இது கூட செய்ய முடியாது தானே… இன்னும் தனிமைப் பட்டிருப்போம்.

புறப்பட்டேன். மூன்று மணி நேரப் பயணம். அந்த மருத்துவ மனைக்கு. பிராணவாயு போதிய அளவு இருந்ததால் வேறு எதுவும் தற்போதைக்குத் தேவையில்லை, சாதாரணமாகவே போகலாம் என்றார்கள். நான் மட்டும் தனியாக உள்ளில். போகும் வழி தோறும் வெளியில் பார்த்துக் கொண்டே சென்றேன்.

விடியற்காலை… அத்தனை சுறு சுறுப்பாகவில்லை. வெளியில் வந்தவர்களும் அப்பொழுது தான் தூக்கம் கலைந்து அன்றாட வேலைகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஆம்புலன்ஸ் சிப்பந்தி கண்ணாடி வழியாய் பின்புறம் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை முறை, எத்தனை பேருக்கு இந்த சேவை செய்வார்கள். தொற்று பற்றிக் கொள்ள அநேக சந்தர்ப்பங்கள். அவர்களுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம். எனக்கு எந்த கடமைகளும் இல்லை. பேரப் பிள்ளைகளின் கல்யாணம் பார்ப்பதைத்தவிர… அதுவும் கடமையில்லை ஆக்ஞம். இந்த சிப்பந்திகளுக்கு… இளம் வயது… குடும்பம்… பிள்ளைகள்… இருக்கும்.

சாதாரணமாய் இருந்தால் குசலம் விசாரிப்பது என் வழக்கம். இப்பொழுது நான் தனிமைப் படுத்தப் பட்டுள்ளேன்.

இப்படித்தான் அந்த கிரகப்பிரவேசத்திற்கு வந்த மின்விளக்கு போடுபவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். முந்தைய நாள் தான் ஒரு சாவுக்கு போய் வந்தானாம். அவனுக்கு நெருங்கிய உறவாம். சாவுக்கு பெரும்பாலானவர்கள் வரவில்லையாம். சாவு எதனால் என்ற சந்தேகத்தினால் வரவில்லையாம்.

ஆனால் எனக்கு… சாவு என்றால் இதனால் தான்… என்ன செய்வார்கள். சேவை மையங்கள் உள்ளனவாமே… அவர்கள் வந்து அனைத்து உதவிகளும் செய்து அடக்கம் செய்து விடுகிறார்களாம்.

ஒரு வேளை அது கொரோனா சாவாயிருக்குமோ… பேசிக் கொண்டிருந்த அவனிடமிருந்து தொற்றியிருக்குமோ… வந்தவர்களுக்கு அதன் உக்கிரம் தெரிவதற்குள் அடுத்தவர்களுக்கு தொற்றிவிடுமாமே… அது போல் தொற்றியிருக்குமோ…

எதுவானால் என்ன… வந்துவிட்டது.

அந்த மருத்துவமனை வந்ததும், தனிவழியாய் எனக்கான அறைக்கு கூட்டிச் சென்றார்கள்.

அது மருத்துவமனை போன்ற உணர்வே இல்லாமலிருந்தது. எனக்கென தனி அறை. பிரத்யேக மருத்துவர்கள். வந்தார்கள்.

“வணக்கம் கல்யாணம்” சொன்ன மருத்துவரின் பெயரைப் பார்த்தேன். ‘ரிச்சி க்ரேவால்’ வட இந்தியப் பெயர். அட்சர சுத்தமாய் தமிழ் பேசினார்.

“என்ன பயமா… ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் போல இதுவும் நோய்… அவ்வளவு தான். என்ன பண்ணணும்னு எல்லாருக்கும் தெளிவு வந்துடுச்சு. அதனால… ஒரு வாரம்… இருங்க… அப்புறம் சாதாரணமா வீட்டுக்குப் போயிடலாம்”.

“இவர் சொல்வது நிஜமா… ஆறுதலுக்காக சொல்கிறாரா…” ஆனால் ஒன்று நிச்சயம். மற்றவர்களைப் போல் அவர்கள் வெகு தூரம் தள்ளி ஓடவில்லை. தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன்… தேவையான தூரத்தில்…  அது எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

முதல் நாளில் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். எனது உடல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள என்றார் ரிச்சி.

நல்ல உணவு. காலையில் விருப்பப்படும் ஏதாவது. உணவக பாணியில். பத்து மணிக்கு நெல்லிக்காய் சாறு, மதிய உணவு, மாலையில் கொறிக்க, இரவு நல்ல சத்தாய்…

மனைவியை தொடர்பு கொண்டேன். பெரிய, சிறியனவாய் பரிந்துரைத்த மாத்திரைகளாய்… உண்ண உணவை தானே தயாரித்து… எந்தவித உதவிகளும் இல்லாமல்… காய்ச்சல், சளி குறைந்ததாகவும், அசதி மட்டும் அதிகமிருப்பதாய், ஒரு முறை வீடு முழுவதுமாய் கிருமி நாசினிகள் தெளித்ததாகவும்… அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

எனக்குள் சங்கடம் மேலோங்கியது. இங்கு எனக்கு ராஜ உபசாரம். அங்கு அவள் தனிமையில்…

மறு நாளிலிருந்து மருத்துவம் தொடங்கியது. தேவையான மருந்துகள் நரம்பு வழியாய்… கையை நீட்டிப் படுத்ததைத் தவிர எதுவும் தெரியவில்லை. உடல் அசதிகள் மறைந்து… ஆரோக்கிய உணவுகளுடன்..

மருந்துகள் உட்கொள்வது சிரமமாய் இருப்பதாய் மனைவி சொன்னாள். எனக்கு எதுவும் தெரியவில்லை.

தொடர்ந்து அலைபேசியில் மற்றவர்களுக்கு தொல்லைப் பேச்சாகி… ஒரு சுற்று எல்லோரிடமும் பேசி முடித்து விட்டேன்.

என் அத்தை மகனிடம் பேசி, மனைவிக்குத் தேவையானவற்றை வெளியிலிருந்து செய்யச் சொன்னேன். ஒரு சில மருந்துகள் மருத்துவர் பரிந்துரைப்பில், வெளியிலிருந்து வாங்கி கொண்டு போய் வெளியிலேயே தொங்கவிட்டு வந்ததாய் சொன்னான்.

என்ன ஒரு தாக்கம். இருக்கும் போதே யாருமில்லாத நிலை. நாட்டுக்குள் ஒரு வனவாசம். இருக்கும் வீடே வனமாகிப் போனது.

நாட்கள் செல்லச் செல்ல எனக்குள் ஒரு புது தெம்பு வருவது போலிருந்தது. மணியக்கார வீட்டிலிருந்து வந்தவர்களில் இருவர் குணமாகி போய்விட்டனர்.

நாட்கள் வெகு சீக்கிரமாய் நகர்ந்தது போலுணர்ந்தேன். அந்த நாளும் வந்தது. ரிச்சி சொன்னார். “கல்யாணம்… நாளை நீங்கள் வீட்டுக்குப் போகலாம். ஒரு வாரத்திற்கு எங்கும் வெளியில் போகாதீர்கள். அப்புறம் உங்கள் சகஜ வாழ்க்கை”.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் சொல்வது நிஜமா… நான் பார்த்துப் பார்த்து கட்டிய என் வீட்டைப் பார்க்கப் போகிறேன்.

கிளம்பினேன். நீல பச்சை விளக்குகளோடு வந்த அதே ஆம்புலன்ஸ், விளக்குகள் இல்லாமல். அந்த மாலை நேரம் புதுப் பொலிவோடு தெரிந்தது. இருந்தும் எப்படி… இதற்கா இவ்வளவு சொன்னார்கள்… வந்தால் அவ்வளவு தானென்று…

குணமாவதும் எப்படி… அவர்கள் கொடுத்த மருந்து போதும் என்ற தைரியம் தந்தார்கள்.

வீட்டிற்குப் போனதும், மனைவிக்கு எப்படி என்று பார்த்து விட்டு ஒரு முறை பரிசோதித்துவிட வேண்டும். நினைத்துக் கொண்டேன்.

ஆம்புலன்ஸ் போய் வீட்டு வாசலில் நின்றதும் சுற்றி உள்ளவர்கள் ஒரு மாதிரியாய் பார்ப்பது போலிருந்தது. அது என் மனப்பிரம்மை என தேற்றிக் கொண்டேன்.

மனைவி மிகவும் களைப்பாய் இருப்பது போலிருந்தது. நான் உட்கொண்ட அதே மருந்துகள் தானாம். எனக்கு தெரியாமல் ஏற்றி விட்டார்கள். மனைவிக்கு அத்தனையும் மாத்திரைகளாய்… ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதனால் வந்த பலவீனம். எனக்கு போஷாக்கான உணவு வேறு. ஆனால் கொரோனாவிற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.

மறுநாள் தேடிப் பிடித்து பரிசோதனைக்கு கொடுத்து விட்டு வந்தோம். மூன்று நாட்களாகியும் எந்த பதிலும் இல்லை, என்றால் எதுவும் இல்லை என்று அர்த்தம். இது தான் நடைமுறை.

சுகாதாரத்துறையை கூப்பிட்டேன். இருந்த அடைப்பு, மறைப்புகளை நீக்கி விட்டார்கள்.

அவ்வளவு தான், எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்.

சாதாரணமாய் முடி திருத்த வரும் சண்முகத்தை கூப்பிட்டேன். “உங்களுக்கு நோவாமே சாமி” என்றான். அது சரியாகிவிட்டது என்று நான் சொன்னது, அவனுக்கு காதில் ஏறியதாய் தெரியவில்லை. அவன் வரவில்லை.

சரியென்று ஊரை விட்டு சற்று தொலைவில் பக்கத்து ஊர் சலூனுக்குப் போனேன். அங்கு முடி திருத்தினான். திருத்தும் போதே கேட்டான். “உங்களுக்கு சரியாயிடுச்சுங்களா… மத்தவங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லிங்களே…”

முடி திருத்திவிட்டு வரும் போது எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது… இப்படித்தானே எல்லோரும் நினைப்பார்கள்… இது தெளிய எவ்வளவு நாளாகும்… என்னால் ஒன்றும் இல்லையென்று, என்னுடன் பழகுபவர்கள் மூலம் தெரியவர வேண்டும். அவர்களுக்கு வேறு எங்கிருந்தும் வராமல், அந்த அஞ்ஞாத வாசம் முடியும் வரை. நான் இன்னும் தொற்று வியாதிக்காரன். 

சந்தோஷமில்லாத ஒரு புது பிறப்பு.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationகவிதைகள்கொ பி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *