நுரை

This entry is part 12 of 14 in the series 18 அக்டோபர் 2020

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக இருக்கலாம். கல்யாணப் பெண்ணைவிட அமர்க்களமாய் அவர்கள் அலங்காரம். ஒருவேளை பார்க்கும் வழியில், ஒருவேளை ரயில் நிலையத்தில் கூட யாராவது அவளைப் பார்த்து காதல் கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பும் மயக்கமுமான பெண்கள். சின்ன ஸ்டேஷன் துணிகள் திணிக்கப்பட்ட பை போல, நபர்களால் நிரம்பி வழிந்தது. அழகிப் போட்டி ஆரம்பிக்கிறாற் போல ஓர் அமர்க்கள தொனியில் இருந்தது பிளாட்பாரம். ரயிலே ஒரு ஆர்ப்பாட்டத்துடன் பந்தாவாக உள்ளே நுழைந்தது. தாமதமாக வரும் ரயிலுக்கு இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். அந்தப் பெட்டியில் அந்தக் கல்யாண கோஷ்டி முண்டி வந்து ஏறிக் கொண்டது. அதுவரை காத்திருந்த அந்த நேரம், இதோ வந்துவிட்டது… ஒரு முகூர்த்தத்துக்குப் போல எல்லாரும் விரைத்து நிமிர்ந்தார்கள். கல்யாணப் பெண்ணுக்கு முதல் மரியாதை. மாப்பிள்ளை அவள் கையை மென்மையாகப் பற்றி பெட்டிக்குள் ஏற்றிவிட, என கையை நீட்ட, பின்னணியில் ‘ஓஹோ’… என ஒரு சப்த எழுச்சி. பெண்ணுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பேசாம இருங்கடி… என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு. என்றாலும் அவளுக்கு அது பிடித்தும் இருந்தது. எது, அவன் கை நீட்டியதா, சொந்தக்காரர்கள் கூட்டம் சப்தமெடுத்ததா, என்றால் இரண்டும்தான். ஏற்கனவே ரோஜா பௌடர் அப்பியிருந்த அந்த முகம் இன்னும் கனிந்து சிவந்து பொலிந்தது. ஒரு குழந்தையின் புரியாத மழலை போல தஸ் புஸ்சென்று என்னவோ பேசியபடி ரயில் கிளம்பியது.

கல்யாணம் என்று வந்துவிட்டாலே மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஒரு அசட்டுக் களை வந்துதான் விடுகிறது. அது வராதபோதும் சுற்றியிருப்பவர்களின் கேலியும் கிண்டலும் அதை வரவழைக்காமல் விடுவது இல்லை. கல்யாணம் பற்றி, கல்யாணம் ஆகிறவர்களை விட அதை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அதிக சுவாரஸ்யப் படுகிறார்கள். அவர்களில் கல்யாணம் ஆனவர்களுக்கோ தங்கள் கல்யாண ஞாபகம்… இன்னும் கல்யாணம் ஆகாதவர்களுக்கோ எதிர்காலக் கனவு… என்று இந்த நேரம் எல்லாரையுமே சற்று அசட்டுக் களையுடன் ஆக்கி விடுகிறது காலம். ஏன் அவை அசட்டுக் களை என்கிறோம். அங்கே அறிவை மீறி, சிறிது மீறி, கற்பனையும் மகிழ்ச்சியும்… நெகிழ்ச்சியும், உணர்வுகளும் மேல் தளத்துக்கு வருகின்றன. பாய்ந்து பெருகும் நதியாய்க் காலம். மகிழ்ச்சி என்பது காலத்தின் நுரை.

உள்ளே நிறையக் கூட்டம் இருந்தது. அந்தப் புது மாப்பிள்ளை உள்ளே வந்ததும் இங்கே என் மனைவிக்கு உட்கார இடம் இருக்கிறதா என்று அத்தனை கூட்டத்திலும் ஆர்வமாய்த் தேடியது வேடிக்கையாய் இருந்தது. தான் கூட நின்று வர அவன் தயார். “உட்கார்றியா?” என அவள் காதருகே சின்னக் குரலில் அவன் கேட்கவும் செய்தது மூர்த்திக்குச் சிரிப்பை வரவழைத்தது. எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். அதில் மனைவி வேலைக்குப் போகிற முதல்நாள் அன்றைக்கு அவள் கணவன் பஸ்சில் போவான். ஒரு பெண்ணை இடித்துவிட்டு “சாரி” சொல்வான்… என்று நீளும். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள், என மூர்த்தி ஆச்சர்யப் பட்ட கதை.

அவன் அருகே சிறிதே சிறிது இடம் இருந்தது. இதில் பெரிய ஆள் என்றால் ஒருத்தர் உட்கார முடியாது தான். மூர்த்தி சட்டென எழுந்து கொண்டு மாப்பிள்ளையிடம் “நீங்க வேணா உட்காருங்க…” என்றான். “இல்ல. இருக்கட்டும்… நீங்க?” என்றான் மாப்பிள்ளை நன்றியுடன். அவன் அந்த இருக்கையை மறுக்கவில்லை. தன் மனைவிக்காக இருக்கையை விட்டுத் தருகிறவர்கள் தேவர்களாகவும், விட்டுத் தராதவர்கள் அரக்கர்களாகவும் தோன்றும் நேரம் அது. “நான் அடுத்து அரைமணில இறங்கிருவேன்” என்றான் மூர்த்தி.

மாப்பிள்ளை புது மணப்பெண்ணை ஒரு பார்வை பார்க்க அவள் சற்று வெட்கத்துடன் அந்த இருக்கையில் அமர்ந்தாள். அத்தனை பேர் மத்தியில் அவளை அவன்… அவ‘ர்’ எத்தனை உபசாரமாக நடத்துகிறார், என்று ஒரு பெருமை வேறு. அவள் அருகே அந்தச் சிறு இடைவெளி. மூர்த்தி சிரித்தபடி “நீங்களும் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க” என்றான். அப்படி அவன் எடுத்துக் கொடுத்தது, அது மாப்பிள்ளைக்குப் பிடித்திருந்தது. அந்தச் சின்ன இடத்தில் அவர்கள் இருவருமே நெருக்கியடித்து அமர்ந்து கொண்டார்கள். ரயில் இப்போது ஒரு ஊளையாய் விசில் கிளப்பியது. கல்யாணப் பார்ட்டி என்று தம்பதியர் கூட எட்டு பத்து பேர் ஏறி யிருந்தார்கள். அவர்களும் மூர்த்தியின் அந்த விட்டுக்கொடுத்தலை ரசித்தார்கள். அவர்கள் அவனைப் பார்த்து சிநேகமாய்ப் புன்முறுவல் பூத்தார்கள். ரயில் ஆட ஆட அவர்களும் இடது வலது என்று ஆடியபடி நின்றிருந்தார்கள். ரயிலின் அசைவும் தாளமும் ஆட்டமும் ஒரு நாடகம் போல இருந்தன. நாட்டிய நாடகம்.

ஓரக் கண்ணால் அந்த தம்பதியரைப் பார்த்தபடி வந்தான் மூர்த்தி. கல்யாணம் முடிந்து நேற்று இவர்களுக்கு முதலிரவும் முடிந்திருக்கும், என்று நினைத்துக் கொண்டான். ஒரு பூனையைத் தூக்கி பால் கிண்ணத்தின் அருகில் காட்டினாற் போல காலம் அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறது. எதிலும், எது எதிலும் சந்தோஷம் கண்டன கண்கள். எனக்கு இனி வாழ்வில் பிரச்னையே இல்லை என்று ஒரு திகட்டல். பிரச்னை இல்லை என்பதல்ல. வந்தாலும் அதை இரண்டு பேருமாய், நாங்கள் சேர்ந்தே சமாளிப்போம்… என ஒரு கனவு. அறையில் குத்துவிளக்கை ஏற்றி வைத்தாற் போல எல்லாம் குளுமையாய் அழகாய் இருந்தது அவர்களுக்கு. சிறு வெளிச்சத்தில் எல்லாமே அழகு பெறுகின்றன, நம் மனதில் கவிதைகளைத் தந்தபடி.

ஹா ஹா சிலர் வாழ்க்கையில்… ரெண்டு பேருமா சேர்ந்தே சமாளிப்பதா, அவர்கள் ஒருவருக்கு மற்றவர் தான் பிரச்னையே என்றும் ஆகி விடுகிறது உண்டு. அதெல்லாம் பற்றி இப்ப என்ன, இப்போது இது மகிழ்ந்து திளைப்பதற்கான காலம். அவளது உடலோடு அவன் ஒட்டிக் கொண்டிருந்தான். காலம் அவர்களைப் பசை போட்டு ஒட்டி யிருந்தது. சட்டுச் சட்டென்று அவர்கள் சுற்றுப்புற உலகத்தையே மறந்து போனார்கள் போல இருந்தது. அவன் அவள் காதருகே எதோ சொல்லியபடி வந்தான். அவளுக்கானால் அப்படியொரு பூரிப்பு அதைக் கேட்க. உருப்படியாய் என்ன பெரிய விஷயம் பேசிவிடப் போகிறார்கள். இப்போது காடு கழனி, ஊர் உலகம் என்றா கவலைப்பட முடியும்? அவன் என்ன பேசினாலும் அவளுக்குச் சிரிப்பு. காலம் அப்படி. பேசுகையில் வேண்டுமென்றே அவன் அவளது கன்னத்தைக் கடிப்பது போல உதடுகளால் உரசினான் தீக்குச்சியாய். காமத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தாள் அவள்.

பெண்ணின் மாமா ஒருத்தர் அந்த ஜமாவில் இருந்தார். ரொம்ப உற்சாகமான மனுசர் போலிருந்தது. அவர் பேச எல்லாரும் வரிக்கு வரி சிரித்தார்கள். இந்த மாதிரி மகிழ்வான கூடுகைகளில் இப்படி யாராவது ஒருத்தர் உற்சாகத்தை மேலும் மேலும் பொங்கச் செய்ய என்று அமைந்து விடுகிறார்கள். அல்லது அந்த ஜமா, அவர்களே யார் என்ன சொன்னாலும் வெடித்துச் சிரிக்கிற அளவில் தங்கள் அளவிலேயே உற்சாகமாய் உணர்ந்தும் இருக்கலாம். ஒல்லியான சின்ன உருவம் மாமா. ஆளும் குட்டைதான். “எங்க கல்யாணத்துல…” என அவர் ஆரம்பிக்கும் போதே அவருக்கே சிரிப்பு. நல்ல நகைச்சுவையைச் சொல்ல ஒரு முன்தயாரிப்பு அவசியம். ஆனால் அங்கே எல்லாருமே அவர் வாயைப் பார்த்தபடி இருந்ததால் அது தேவையாய் இல்லை. அவர் என்ன சொல்லப் போகிறார், என்பது போல அவரது மனைவி, மாமியும் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். இந்த மாதிரி நகைச்சுவை நிமிடங்களில் கூட்டத்தில் யார் மீது வேண்டுமானாலும் கல்லெறித் தாக்குதல் நடந்துவிடும், வேடிக்கைக்காக.

“என்னாச்சி மாமா…” என்று மாப்பிள்ளை அதில் கலந்து கொண்டது அவருக்குப் பிடித்திருந்தது. தானும் கல்யாணப் பெண்ணும் மாத்திரம், நாங்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டு வருகிறோம், என்று ஆகிவிடக் கூடாது, என் அவன் நினைத்திருக்கலாம். மூர்த்தி அந்த மாமாவைப் பார்த்தான். “ஹா ஹா…” என்று மாமா வெற்றிலைச் சிவப்பாய்ச் சிரித்தார். “எங்க முதலிரவு முடிந்து காலைல சீக்கிரமே எழுந்து இவ வெளில வரா. பாத்தா…” என்று நிறுத்தினார். மாமிக்கு என்னவோ போலாகி விட்டது. பதில் அவளுக்கு மாத்திரமே தெரியும்… என்ற நிலை. கல்யாணப் பெண் இப்போது புன்னகையுடன் மாமாவைப் பார்த்தாள்.

“இவ இருட்டுல பிளவுசை, இன்சைட் அவ்ட் – மாத்திப் போட்டுக்கிட்டு, வெளிய வந்திருக்கா.  தையல் தெரியறாப் போல…” ஒரு சின்னப் பெண்ணுக்கு முதலில் அது புரிந்து அவள் மாமியின் தோளைத் தொட்டு கை தட்டினாள். அட அப்பிடியா, என பிறகு எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள். மாமிக்கு எல்லார் முன்னாலும் இப்படி மாட்டிக்கொண்ட சங்கோஜம். “போதும்… இதெல்லாமா எல்லார் முன்னாடியும் பேசறது?” என்றவள், அவளும் விடவில்லை.

“அந்த ராத்திரி, எங்களை பெரியவங்க ஒரு ரூமுக்கு அனுப்பி வெச்சாங்க இல்லியா? அந்த அறைக்கதவுக்கு உயரத்தில் உள்த் தாழ்ப்பாள் தான் இருந்தது. இவரு எவ்வளவு குட்டை பாருங்க. இவர் துள்ளித் துள்ளிப் பார்த்தார். எட்டவே இல்லை…” என்றாள் மாமி. மாமா முகத்தில் அசட்டுக் களை. அல்லது கல்யாணக் களை என்பதே அதுதானோ? மாமி பக்கத்தில் இருந்த அந்தக் கல்யாணமாகாத பெண்… “அடாடா. அப்றம்? ராத்திரியே நடக்கல்லியா?” என்று கேட்டாள்.

“நான் உயரம்தானே?” என்று மாமி சிரித்தாள். ”நானே போயி அந்தத் தாழ்ப்பாளைப் போட்டேன்…”

ஹோவென்று அந்தப் பத்து பேரும் கொண்டாடினார்கள் அதை. கையில் எடுத்துப்போன பலசரக்குப் பொட்டலத்தை உடைத்து விட்டாற் போல சிரிப்பு அங்கங்கே சிதறியது.

“அப்ப காலைல வெளில வரும்போதும் நீங்கதான் தாழ்ப்பாளைத் திறந்தீங்களா மாமி…”

திரும்ப வெடிச் சிரிப்பு. மூர்த்திக்கு எல்லாமும் பிடித்திருந்தது.

நிலவரத்தின் போக்கை மாற்ற மாமா முன்வந்தார். “உங்க ராத்திரி எப்பிடி? ஒண்ணும் பிரச்னை இல்லையே…” என்று புதுமணத் தம்பதியரைப் பேச்சுக்குள்ளே கொண்டுவந்தார். எல்லார் முன்னாலும் கல்யாணப் பெண்ணுக்குச் சிரிக்க முடியவில்லை. அவள் தலையைக் குனிந்து வாய்பொத்திச் சிரித்தாள். இப்போது கேள்வி அவர்கள் பக்கம் டென்னிஸ் பந்து போல வந்து விழுந்துவிட்டதில் பெண் சிறிது திகைத்துவிட்டாள்.

“எங்க ராத்திரில… என்னாச்சின்னா…” என்று பெண்ணையே பார்த்தபடியே மாப்பிள்ளை புன்னகையுடன் ஆரம்பிக்க, மெஹந்தியிட்ட விரல்களால் அவள் சட்டென அவன் வாயைப் பொத்தினாள். அதற்கும் எல்லாரும் சிரித்தார்கள். “சரி. அப்புறமா நீங்க என்கிட்ட தனியா சொல்லுங்க மாப்ளை…” என்று மாமா விட்டுக் கொடுத்தார். “நீ எனக்குச் சொல்லுடி…” என மாமி மணப்பெண்ணைச் சேர்த்துக் கொண்டாள். அந்தத் துடுக்கான சிறுபெண் “தனித்தனியா எல்லாருக்கும் தெரிஞ்சா அது ரகசியமா?” என்றாள். திரும்பவும் சிரிப்பு.

ஒவ்வொரு அலையாக சிரிப்பு வந்து வந்து அவர்களை மோதிக் கொண்டிருந்தது. சாப்பிட உட்கார்ந்த போது சற்று வேட்டியை நெகிழ்த்திக் கொண்டு உட்கார்ந்து வயிறுமுட்ட சாப்பிடுகிறாப் போல, எல்லாமே திருப்தியாக இருந்தது அவர்களுக்கு. ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம், எல்லாருக்கும். அந்த தம்பதியரை வைத்து எல்லாருமே சந்தோஷமாக உணர்ந்தார்கள்.

மூர்த்திக்கு எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு நகைச்சுவை ஞாபகம் வந்தது. பையன் அப்பாவிடம் கேட்டானாம். “அப்பா நீயும் அம்மாவும் கல்யாணமாகி தேனிலவு போனீங்களே. அப்ப நான் உன்கூட வந்தேனா, அம்மாகூட வந்தேனா?” அப்பா பதில் சொன்னாராம். “போகும் போது என்கூட வந்தே. வரும்போது அம்மாகூட வந்தே.”

ரயில் எங்கோ அத்துவான வெளியில் சிறிது நின்றது. எங்கிருந்தோ, விற்பனைக்கு என்று ஆட்கள் மரங்களாக முளைத்து கிளைகளான கைகளில் கொத்துக் கொத்தாய் வைத்திருந்த வெள்ளரிப் பிஞ்சுகளை விரல்கள் போல நீட்டினார்கள்.

“வேணுமா?” என்று மாப்பிள்ளை பெண்ணிடம் கேட்டான். அவள் தலையாட்டி மறுத்தாள். ஈருடல் ஓருயிர் என்று மயக்கமான கால நிலை அது. காலம் அவர்களை மந்தரித்து விட்டிருந்தது. பெருங் கனவொன்று இன்று அவர்களுக்கு நனவாக வழங்கப் பட்டிருக்கிறது. அதில் இருந்து கலைத்துக் கொள்ள அத்தனை அவசரம் காட்ட வேண்டியது இல்லை தான், என நினைத்துக் கொண்டான் மூர்த்தி. இந்தக் கனவுகளின் பலத்தில் மீதி நாட்களின் கசப்பை நாம் சமாளிக்கிற தெம்பை வரவழைத்துக் கொள்ளலாம், என்று தோன்றியது.

ரயில் திரும்ப அசைவு கொடுத்துக் கிளம்பியது. மூர்த்தியின் அலைபேசி அடித்தது. “இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்தில் வந்துருவேன் முரளி…” என்றான் மூர்த்தி. “அப்பாவுக்கு எப்பிடி இருக்கு?” என்று கேட்டான். மறுபக்கம் சிறு மௌனம். அதுவே உறைத்தது. “சொல்லு முரளி…” என்று அழுத்தமாய்க் கேட்டான். அப்பா இறந்து விட்டார்.

ரொம்ப உடம்பு முடியவில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகத் தகவல் கிடைத்து மூர்த்தி அவசர அவசரமாகக் கிளம்பி யிருந்தான். ஒருவேளை அவன் பயந்து கொள்வான் என்பதால் சீரியஸ், என்று பொய் சொன்னார்களோ? அவர்கள் பேசும்போதே அப்பா இறந்திருக்கலாம்… என்றுகூட இருக்கலாம்.

அம்மா முகத்தைத்தான் பார்க்க சகிக்காது இனி. ரொம்பத் தெம்பான மனுஷி. வீட்டில் அவள் ராஜ்ஜியம்தான். காலம் அவள் தைரியத்தை அசைத்துப் பார்க்கிறது.

அவனது யோசனையை இடைவெட்டினாற் போல குபீரென்று சிரிப்புச் சத்தம் ஊடறுத்தது. கல்யாணப் பெண் வெட்கத்துடன் மாப்பிள்ளையை முதுகில் குத்தியபடி சிரித்தாள். அது ஓர் உலகம். அவர்களைச் சுற்றிலும் பொரி போலச் சிதறுகிறது சிரிப்பு. மகிழ்ச்சி என்பது காலத்தின் நுரை என்பதைப் போலவே, இன்னொரு தருணத்தில், துயரம் என்பதும் காலத்தின் நுரைதான் என்று நினைத்துக் கொண்டான் மூர்த்தி.

மெல்ல ரயில் வேகம் குறைந்து நிலையத்துக்குள் நுழைந்தது. வாசலைப் பார்க்கப் பெட்டியுடன் நடந்துபோனான். ஸ்டேனுக்கே முரளி வந்திருந்தான். கீழே இறங்கியபோது அதுவரை இல்லாத பெரும் துக்கம் அவனைச் சூழ்ந்து கொண்டது. முரளியைப் பார்த்த கணம் வேறொரு உலகின் சூழலுக்குள் அவன் இழுத்துக் கொள்ளப் பட்டாற் போலிருந்தது.

Series Navigationஇயற்கையுடன் வாழ்வுரௌடி ராமையா
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *