கவிதையும் ரசனையும் – 6

author
1
3 minutes, 36 seconds Read
This entry is part 9 of 10 in the series 6 டிசம்பர் 2020

அழகியசிங்கர்

            போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன்.  வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன்.

            நானும் படிப்பதற்காக  மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன்.  அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது.  எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது.

            முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம்.  மொழிபெயர்ப்புக் கவிதைகளை சி சு செல்லப்பா அவர் எழுத்து பத்திரிகையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.  அவர் மூலம்தான் இது தொடங்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது.

            புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்தபோது (மணிக்கொடியில் ஆரம்பித்த அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது) சுஜாதா மூலம் வணிகப் பத்திரிகைகளில் பரவத் தொடங்கின. 

            ஆனால் ஏனோ மொழிபெயர்ப்புக் கவிதைகள் வணிகப் பத்திரிகைகளைச் சீண்டவில்லை. 

            ‘மாற்று இதயம்’ என்ற பெயரில் சி.சு செல்லப்பா ஒரு கவிதைத் தொகுதியை மே 1974ல் கொண்டு வந்தார்.  அதில் ‘வெளிக்குரல்கள்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அவர் வெளியிட்டுள்ளார். 

            மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிடுவதற்குக் காரணத்தை சி.சு. செல்லப்பா கூறும் காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

            ‘தமிழ் புதுக்கவிதை முயற்சிக்கு வெளிநாட்டு இலக்கியப் பாதிப்பு உண்டு.  பாரதிக்கும் பிச்சமூர்த்திக்கும் சி மணிக்கும் பிரிட்டீஷ், அமெரிக்க, பிரஞ்சு கவிகளின் செல்வாக்கு இருப்பதைப் பார்க்கலாம். அந்த மொழி கவிதைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  உருவ, உள்ளடக்க, உத்தி அம்சங்களில் அவை எவ்வளவு சாதனை காட்டி இருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால் தமிழ் புதுக்கவிதை படைப்பாளர்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் காரியம் செய்யாமல், புதுக்கவிதை அடுத்தடுத்து உயர்ந்த கட்டங்களுக்குப் போக வழிவகை கையாள சாத்தியமாகும்.   

            சி சு செல்லப்பாவைப் புதுக்கவிதை எழுதுவதற்கும் நிறையா கவிதைகளை மொழிபெயர்த்து கைபழகிக் கொண்டதாகக் கூறுகிறார்.அவர் மொழிபெயர்ப்பு கவிதைகளில் ஒன்றிரண்டு பார்க்கலாம்.

            வில்லியம் காரலஸ் வில்லியம் கவிதையான  ‘சக்தி’  என்ற கவிதையைப் பார்ப்போம்.

             ஆள் நீள

            பருமன் மடிப்பு

            பழுப்புத்தாள் ஒன்று

            தெருவில் 

            காற்றில்

            சுருண்டு சுருண்டு

            மெதுவாக

            உருள

            கார் ஒன்று

            அதன் மீதேறி

            தரையோடு அரைத்தும்

            மனிதன் போல்

            இல்லாமல்

            எழுந்து 

            மீண்டும்

            காற்றில்

            சுருண்டு சுருண்டு

            முன்போல்

            உருண்டது

            ‘லாங்ஸ்டன் ஹியூஸ்’ கவிதையைப் பார்ப்போம்.

            ‘கலப்பு’ என்பது அக் கவிதையின் தலைப்பு.

            என் தந்தை ஒரு வெள்ளையன்

            என் தாய் ஒரு கறுப்பி

            என் வெள்ளை தந்தையைச் சபித்தால்

            என் சாபம் எனக்கே திரும்பும்

            என் கறுப்புத் தாயைச் சபித்தால்

            அவள் நரகத்தில் இருக்க விரும்பினால்

            அந்த கெட்ட விருப்புக்கு வருத்தம்

            அவள் நன்றாக இருக்கட்டும் அதுவே

            என் இப்போதைய விருப்பம்

            என் தந்தை இறந்தது அழகிய பங்களாவில்

            என் தாய் செத்தது ஒரு குடிகையில்

            நான் சாகப் போவது எங்கேயோ

            நான் வெளுப்பும் இல்லை கருப்பும் இல்லையே 

            பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு சிறுபத்திரிகைகள்தான் தான் அடைக்கலம் கொடுக்கின்றன.  ஆனால் இன்னும் கூட வணிக ரீதியாக இயங்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரம் செய்வதில்லை.  ஏன் என்று தெரியவில்லை?

            ஆனால் ஒருவர் விதம்விதமாக கவிதைகள் எழுத வேண்டுமென்று நினைத்தால் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பலவிதங்களில் எழுத உதவும்.  இதை சி சு செல்லப்பா புரிந்து வைத்திருந்தார்.

            மேலே குறிப்பிடப்பட்ட லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதையைப் பார்ப்போம்.  தந்தை வெள்ளையனுக்கும் தாய் கறுப்பிக்கும் பிறந்திருக்கும் பையன் வழியாக இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கிறது.  பையனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சாகப் போவது எங்கே?  அவன் கருப்புமில்லை வெளுப்புமில்லை. அவன் தந்தை ஒரு வெள்ளையன் என்பதால் அவன் அழகிய பங்களாவில் இறந்து போகிறான். அவன் தாய் செத்தது ஒரு குடிசையில்.  அவன் வெள்ளைத் தந்தையைச் சபித்தால் என் சாபம் எனக்கே திரும்பும் என்று கவிகுரலோன் கூறுகிறான்.

            லாங்ஸ்டன் ஹியூஸ் ஒரு நீக்ரோ கவிஞர்.  இன்னும் அதிகமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து ஆராய வேண்டும் என்று தோன்றுகிறது.

            ‘பிரமிள் படைப்புகள்’ என்ற புத்தகத்தில் கவிதைகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அதில் எஸ்ரா பவுண்ட் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் பிரமிள்.  அதில் ஒரு கவிதை. 

சுருட்டுக்கடை

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

நெடர்களைப் போஷிக்கும் புதனே! 

கெஞ்சிக் கேட்கிறேன்,

காலாகாலத்தில் 

எனக்கொரு

நட்டுக்கடை வைத்துக்கொடுங்கள் சாமி!

விதவிதமாகப் பதனிட்டு 

கண்ணாடி பீரோவினுள் 

அழகான பெட்டிகளில் 

அடுக்கப்பட்ட 

வெவ்வேறு வெட்பதட்பங்களின் 

சுருட்டுக்கள். 

கூடவே, எடைபோட 

எண்ணெய்ப் பிசுக்கு 

ரொம்பவும் இல்லாத ஒரு தராசு. 

இன்னும் ஒன்று – 

கலைந்த தலைமயிரைச் செப்பனிட்டு, 

சிறுவிஷமச் சொற்கள் பரிமாற 

அவ்வப்போது சில 

வேசிகளும் வரவேண்டும். 

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

திருடர்களைப் போஷிக்கும் புதனே! 

எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி! 

இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் – 

நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற 

இந்த எழுத்துத் தொழில் தவிர.  

            இந்தக் கவிதையைப் படிக்கும்போது சிரிப்பு தாங்க முடியவில்லை.  கவிதையில் திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்கிறார் தெரியுமா? சுருட்டுக் கடை வைத்துக்கொடுக்க அருள் புரிய வேண்டும் என்கிறார்.

            ஒரு கவிதையை எப்படியெல்லாம் கற்பனை செய்யலாம்  என்பதற்கு இது முன்மாதிரி.  எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் இதுமாதிரியெல்லாம் எழுதி உள்ளார்.

            கடைசியில் முடிக்கும்போது திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்கிறார் என்றால் மூளை தேவைப்படுகிற எழுத்துத் தொழில் தவிர இதை அளிக்கச் சொல்கிறார்.

இப்படி சிறுபத்திரிகைகளில் வரும் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை இன்னும் பின்னால் ஆராய்ந்து பார்ப்போம்.

04.12.2020

Series Navigationஎஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    மொழி பெயர்ப்பு கவிதைகள் குறித்து அழகியசிங்கரின் அறிமுகக்கட்டுரை சுவையாக இருந்தது.எந்தப்பொருளை கவிதையாக எழுதினாலும் அதில் உண்மையும் , உணர்வும், எடுத்துரைக்கும் பாங்கும் இருக்கவேண்டும் என்று உணர்த்தும் நல்ல கட்டுரை.வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *