திரைகடலோடியும்…

author
0 minutes, 1 second Read
This entry is part 8 of 13 in the series 21 பெப்ருவரி 2021

 

குணா (எ) குணசேகரன்

செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே,

ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,

ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்

நல் அராக் கதுவியாங்கு, என்

அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே

 

 

 

உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் வருமானத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வழக்கம். அடிப்படைத் தேவைக்குள் வீடும் அடங்கியது ஒரு அசாதாரணம். வாழ்நாளுக்குள் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி குடியேறிவிடவேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்திற்கு அது அதிகப்படி. அதுவும் தனியொரு வருமானத்தில் நிச்சயம் கட்டுபடியாகாது.

 

சுந்தரம் அப்படியொரு வகை. ஐந்து பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பிள்ளை. பிள்ளைகளை கரையேற்றுவதே சிரமம். வாடகை வீட்டிலேயே வாழ்ந்து போய் விட்டார், அவனது தந்தை. ஒண்டு குடித்தனம், வாடகை வீட்டு கஷ்டங்கள் என வாழ்ந்து விட்டதால் எப்படியும் ஒரு சொந்த வீடு வாங்கி வாழ்ந்து விட வேண்டும் என்ற உள்ளூர வெறி என்றே சொல்லலாம். அது திருமணத்திற்கு பின்னர் இன்னும் கூடிப் போனது.

 

மூத்தவன் முன்னமே வெளிநாடு சென்றுவிட்டான். இரண்டாவது என்றாலும், கூடப் பிறந்த சகோதரிகளை கரையேற்ற தோள் கொடுத்து, அவர்களின் அடுத்த தேவைகளை நிறைவேற்றி, பின்னர், வீட்டைக் கட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கும் போது, மகள் குதிர்ந்து நின்றாள், அவளது கல்லூரி படிப்பு வேறு, அடுத்து மகன், பள்ளி இறுதியாண்டு. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, அந்த விளம்பரத்தைப் பார்த்த்தான்.

 

அரபு நாட்டில் ஒரு வேலை வாய்ப்பு. போட்டு வைத்தான். கிடைத்தால் பார்ப்போம் என்று.

 

அவ்வப்போது சொல்வாள் அவனது பத்தினி… “வர்ற சனிப் பெயர்ச்சியில் உங்க ராசிக்கு வர்றார். பொங்கு சனி. தூக்கி நிறுத்திட்டுத்தான் போவார்”.

 

நித்திய கஷ்டங்கள்… கைக்கும் வாய்க்கும் என்றிருக்கும் காலங்களில் இப்படி யாரேனும் சொன்னால் எவ்வளவு ஆறுதலாயிருக்கும். அனுபவித்தால் தான் தெரியும். அப்படித்தான் சுந்தரத்திற்கும்.

 

சொல்லி வைத்தாற்போல்… அந்த வேலையும் கிடைத்து விட்டது. உடனடியாக குடும்பத்துடன் போக முடியாது. அப்படியே இருந்தாலும், பள்ளி போகும் மகனையும், கல்லூரி போகும் மகளையும் எப்படி அழைத்துச் செல்வது. இரண்டும் கெட்டான் சமயம். முன்பொரு காலத்தில் இப்படியொரு வாய்ப்பு வந்த போது, பெற்றவளின் அழுகை, உற்றவளின் குழம்பிய நிலையென்று போகாமல் போனது நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு இப்பொழுது தான் சனி சுந்தரத்தின் வீட்டுக்குள் நுழைகிறார் பொங்கு முகத்தோடு. உண்மை தான் போலும்.

 

இதை எப்படி சொல்வது? விட்டுச்செல்ல வேண்டும் என்பது நிதர்சனம். இவ்வளவு நாள், குடும்பமென்று தோள் கொடுத்து, அவன் கூட பிறந்தவர்களை கரை சேர்க்க உறுதுணையாய் இருந்து, பிள்ளைகள் வளர்ந்த நேரத்தில், வழிகாட்ட வேண்டிய நேரத்தில்… அவர்களை… விட்டுச் செல்ல வேண்டும் என்பது நிதர்சனம்.

 

இருந்தும் இது அவசியம். திக்குத் தெரியாது நிற்கும் நேரத்தில், வந்த வழிகாட்டி போல… முன்பு வந்த போது, உற்றவளோடு போயிருக்க முடியும். மூத்தவன் போன போதே, அவனுமாய் சேர்ந்து… இப்பொழுது பெற்றதுகளையும் உற்றவளையும் கூட்டிச்செல்ல முடியாமல், சமாதானப் படுத்தி, புரிய வைத்து, புறப்பட வேண்டும். ஆனால் போய்த்தான் ஆகவேண்டும். அடுத்த தலைமுறையாவது இந்த வீடு வாங்க வேண்டும் என்ற உத்தியில்லாமல்… அப்படியே இருந்தாலும் நிம்மதியாய்… தாராளமாய்… அவசியம் என்றில்லாமல், அதுவும் ஒரு அங்கமென…

 

வாய்ப்பு வந்தது முதல் சுந்தரம் ஒரு நிலையில்லை.

 

உற்றவளிடம் சொல்ல வேண்டும். எப்படி?

 

குழம்பியவர்களுக்கு வழிகாட்டி போல… எந்த ஒரு மனநிலைக்கும் ஆறுதல் என… காத்திருக்கும் கடற்கரையும்… ஒத்துப் போகும் அலைகளும்… இதமான காற்றும்…

 

காலம் காலமாய் அது தானே…

 

நாளை விடுமுறை. அன்று மாலை வேலை முடிந்து வந்ததும் மெல்ல அழைத்தேன். “பீச்சுக்குப் போகலாமா?” – கேட்ட சுந்தரத்தை வித்தியாசமாகப் பார்த்தாள். நெடுநாளாக இல்லாமல் இப்பொழுது என்னவென்று. திருமணமான புதிதில் ஒரு குதூகலம் இருந்திருக்கும்

இளம் வயதாயிருந்தால் ஒரு மகிழ்ச்சி இருந்திருக்கும்.  இவன் என்னவோ சொல்லப் போகிறான், அதற்குத்தான் இந்த பீடிகை என்று உணர்ந்திருக்க வேண்டும். ஆமோதித்தாள்.

 

அமைதியாக இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள். சாதாரணமாய் இருந்திருந்தால். ‘ப்ரேக்’ அழுத்தும் ஒவ்வொரு முறையும் மெதுவாக ஒத்தியிருப்பாள், எனக்கு இதமாக… உள்ளிருக்கும் உளைச்சல்களுக்கு  ஆறுதலாக… இன்று அப்படியில்லை. பின்னால் அமர்ந்திருப்பதாகவே தெரியவில்லை.

 

வண்டியை நிறுத்தி இறங்கியதும் அமைதியாக தொடர்ந்தாள்.

 

அலையின் ஓசை ஒரு ஆதரவாய் இருந்தது. அலைக்கு பக்கமுமில்லாமல், தூரமுமில்லாமல், இருவரும் அருகருகே அமர்ந்தனர்.

 

“வைஷ்ணவி வளர்ந்து விட்டாள். அடுத்து அவளுக்கென்று ஒரு நல்ல வாழ்க்கை… சுதர்சன் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்குப் போக வேண்டும், நம்மைப் போலல்லாமல். நமக்கென்று ஒரு வீடு வேண்டும் வெகு நாளாசை” – அலையைப் பார்த்தவாறு சொல்லிக்கொண்டே போனான்.

 

இது ஒன்றும் புதிதல்லவே. இவன் என்ன சொல்ல வருகிறான்.

வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சுந்தரத்திற்கு அது புரிந்திருக்க வேண்டும். மேல் சட்டை பையிலிருந்து அந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்தான். அந்த வேலைக்கான உத்தரவாதம்.

 

அந்த காகிதத்தைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது. “சந்தோஷம் தானே… இதற்கு ஏன் இத்தனை…” – கேட்ட அவள் யோசித்திருக்க வாய்ப்பில்லை.

 

“அடுத்த மாதம் போய் சேர வேண்டும்” – சுந்தரம் அவளையே பார்த்தான்.

 

அவளுக்கு புரிந்திருக்க வேண்டும். அவனருகில் நெருங்கி அமர்ந்தாள். அவன் கையை இறுக பற்றி தோளில் சாய்ந்தவாறு கடலைப் பார்த்தாள்… பார்த்துக் கொண்டே இருந்தாள்…

 

என்ன ஒரு வாழ்க்கை. சுற்றம், சொந்தம், பந்தம், எல்லோரும் அவரவர் வாழ்வில் புகுந்து கொள்ள… நாம் வேண்டியதை பெற்றுக் கொள்ள… நாம் பெற்றவர்கள் நிம்மதியாய் வாழ… பணம் வேண்டும். அதைப் பெற நாம் ஓட வேண்டும். ஓடி அமர ஒரு இடம் வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். நாம் உருவாக்கிய பணம். காலம் காலமாய்… உரு மாறி, வெவ்வேறு வடிவங்களாய்… அதை நோக்கி நம்மை ஓட வைத்து… என்னவென்று புரியாமல்… அதுவும் பிரதானமாய்… அது இல்லாமல் இல்லை என்று நினைக்க வைத்து… அதையே தலையானதாக்கி… நம்மை கருவியாக்கி… நம்மைக் கொண்டு மற்றவர் அதைப் பெற்று… அதற்குப்பின்…? இதைப் பிரதானமாக்கி நம்மை ஓட வைத்தவர்கள் போய் விடுவார்கள்… அவர்கள் வாழ்க்கையை நோக்கி… புதிய அத்தியாயத்தை அவர்கள் தொடங்க… இது தான் வாழ்க்கையா… இதற்கிடையில் நமக்கென ஒரு வாழ்க்கையில்லை…? அது என்ன சேர்ந்து வாழ்தலா… இல்லை பிரிந்து சேர்ந்து வாழ்தலா? 

 

ஒரு பெருமூச்சு விட்டு சுந்தரத்தையே ஏக்கமாகப் பார்த்தாள். உன் வாழ்நாள் முழுதும் என்னோடு சேர்ந்து வாழ்வேனென்று சொன்னாயே… பிரிவும் வாழ்வென்று சொல்லப் போகிறாயா… உன் சோக காலங்களில்… சோர்ந்த நேரங்களில் என் மடி சாய்ந்தாயே… இனி உனக்கு தேவையில்லையா… பணம் வந்திட அவை தேவையில்லையோ…? என் சோகம் என்னோடு… உனக்குத் தெரியவில்லையென்று சொல்லவில்லை. உனக்குள்ளும் இருக்கும். நீயும் சொல்ல மாட்டாய். இல்லையேல் ஏன் என்னிடம் தனிமையில் சொல்கிறாய். நான் உன் அந்தரங்கம் என்று தானே… நானிருப்பேன். என்றும் எந்த நிலையிலும்… உன்னோடு… உன்னருகில்… உன்னுள்ளில்…

 

இருட்டு வருகிறேனென்று சொன்னது.

 

“போகலாம்” எழுந்து நடந்தாள். அதில் ஒரு தீர்மானம் தெரிந்தது. அத்தோடு சங்கடமும் வெளிப்பட்டது.

 

போகும் போது எந்த சலனமும் இல்லாமல் சுந்தரத்தின்  பின்னால் சாய்ந்தவாறு வந்தாள்.

 

வீட்டிற்குப் போனதும் பட்டும் படாமல்… இதுதான் நமக்கு என்று பிள்ளைகளிடம் சொன்னாள். வைஷ்ணவி ஒருவித ஏக்கத்தோடு சுந்தரத்தைப் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தன. சுந்தரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டாள். அதில் ஒரு ஏக்கம், ஒரு சோகம், ஒரு சந்தோஷம், இருந்தும் எங்களுக்காகத்தானே இந்த பிரிவு என்ற யதார்த்தம் உணர்ந்திருந்தாள். சுதர்சன் பள்ளிப் பருவத்திற்கே உரிய மகிழ்ச்சியுடன் கூடிய கேள்விகளுடன்…”டாட் சேர்ந்து போக முடியாதா… நான் யுனி போனப்புறம் நீங்களும் மம்மியும் சேர்ந்திருப்பீங்க தானே…” அவனுக்குள் வந்த ஏக்கம் சுந்தரத்தின் உற்றாளை ஏன் சுந்தரத்தையும் கண் கலங்க வைத்தது.

 

கூடப் பிறந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களுக்குப் பிறந்தவர்கள் என எல்லோரும் வந்தார்கள். அவர்களுக்கும் சந்தோஷம். அடுத்த கட்ட தேவைகளுக்கான ஆயத்தங்கள் அவர்கள் பேச்சில் தெரிந்தன. இவன் போனால் அத்தனையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற யத்தனங்கள்… பிரியப் போகிற கவலை சிறிதும் இல்லை.

 

சிறிது காலமாய் பிணக்கத்தில் இருந்த இரண்டாவது தங்கையும் வந்திருந்தாள். “அப்போத்தான் முடியல… இப்போவாவது முடியும்னு நினைக்கிறேன்” – விட்டுப் போனதாய் அவள் நினைக்கும் கடன்களுக்கு அஸ்திவாரம் போட்டுப் போனாள்.

 

வெளிநாடு போய் வெகு காலமாய் தொடர்பில் இல்லாத மூத்தவன் தொலை பேசினான். “இவ்வளவு நாள் தான் கஷ்டம் என்றிருந்தாய். இனி ஒரு கவலையில்லை. நல்லவிதமாய் பார்த்துக் கொள்” – எந்த வித சுக துக்கங்களுக்கும் வந்திராத, சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய நேரத்தில், வர முடியவில்லை என்று மனைவியின் பின் முதுகில் பதுங்கிக் கொண்டவன் சொன்னான்.

 

நண்பர்கள் வந்தனர். தேவையென்றால் உதவிக்கு அங்கு யாரைப் பார்க்க வேண்டும், என்னென்ன தேவையென்று பார்த்துப் பார்த்து செய்தார்கள். சுந்தரம் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்க அடிக்கடி குடும்பத்துடன் வந்து போனார்கள். வேண்டியதை கேட்டு கேட்டு, யோசித்துச் செய்தார்கள். சுந்தரத்தின் மனைவிக்கு நாங்கள் இருக்கிறோம் என்று உணர்த்தி நின்றார்கள்.

 

புறப்படும் நாளும் வந்தது. நண்பர்கள் அனைவரும் புடை சூழ… விமான நிலையத்தில்… தர்மச்ங்கடமாய் இருந்தாலும் சுந்தரத்துக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம், நிம்மதி… இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று.

 

“பார்த்துக் கொள். இதுவும் கடந்து போகும். நமக்கென ஒரு நல்ல வாழ்க்கைக்காக..” – சுந்தரம், உற்றாளின் கைப் பற்றி தனிமையில் கிசுகிசுத்தான்.

 

“பொங்கு சனி என்னைப் பொங்க வைத்து விட்டான்… நாம் பொங்க வேண்டுமென்று… அவள் கண்கள் கலங்கியிருந்தன…”

 

– குணா (எ) குணசேகரன்

 

 

Series Navigationரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடுபாதி உயரத்தில் பறக்குது கொடி !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *