கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 13 in the series 11 ஏப்ரல் 2021

அழகியசிங்கர்

 

 

             இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

 

            ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.  ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம்.  அப்போதுதான் 

           நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.

 

 

நிஜம்

 

நிஜம் நிஜத்தை நிஜமாக 

நிஜமாக நிஜம் நிஜத்தை 

நிஜத்தை நிஜமாக நிஜம் 

நிஜமே நிஜமோ நிஜம் 

நிஜமும் நிஜமும் நிஜமாக 

நிஜமோ நிஜமே நிஜம் 

நிஜம் நிஜம் நிஜம்

 

 

 

என்ன அர்த்தம் என்று சொல்லவில்லை.  ஆத்மாநாம் சிரித்துக்

கொண்டார். ஞானக்கூத்தன் இந்தக் கவிதையைக் குறித்துச் சொன்ன விஷயம் இன்னும் விசேஷ கவனம் பெற்றது.  

 

            முதலில் ஆத்மாநாம் இந்தக் கவிதையை எழுதிக்கொண்டு ஞானக்கூத்தனிடம்தான் படிக்கக் கொடுத்தார்.  ஞானக்கூத்தன் அதைப் படித்துவிட்டு சிரியோ சிரி என்று சிரித்தாராம்.

 

          இப்படி விதம்விதமாய் எழுதி சோதனை செய்து பார்ப்பதில் ஆத்மாநாமிற்கு விருப்பம்.  இதில் நிஜம் எது?  நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது நிஜம் மாறிவிடுகிறது.  நேற்றைய நிஜம் இன்றைய நிஜம் இல்லை.  இன்று நிஜம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நாளை மாறிவிடும்.

          உண்மையில் நவீன கவிதை என்பது ஆத்மாநாமிடம்தான் ஆரம்பிக்கிறது. 

 

          அவர் பெரும்பாலும் தன்னைப் பற்றிய கவிதைகளையே எழுதியிருக்கிறார்.  தன் சிந்தனையில் தோன்றுகிற தாறுமாறான எண்ணத்தையும் கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

          அவருடைய கவிதைகளில் பொது உடைமை தத்துவமும் உண்டு. 

                               பிச்சை

 

                     நீ ஒரு பிச்சைக்காரனாய் போ

                     பிச்சை பிச்சை என்று கத்து

                     உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.

                     எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்

                     உன் பசிக்காக உணவு

                     சில அரிசி மணிகளில் இல்லை 

                     உன்னிடம் ஒன்றுமே இல்லை

                     சில சதுரச் செங்கற்கள் தவிர”

                     உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை

                     உன்னைத் தவிர

 

“                   இதனைச் சொல்வது

“                   நான் இல்லை நீதான்

 

 

          ஆத்மாநாமின் இந்தக் கவிதை ஒரு முக்கியமான கவிதை.  உண்மையில் பிச்சையைப் பற்றி ஒரு தத்துவத்தையே கொண்டு வருகிறார்.  இதேபோல் சமூக சிந்தனை அதிகமாக உள்ளது இவர் கவிதைகளில்.   கடைசி வரியில்  ‘இதனைச் சொல்வது நான் இல்லை நீதான்,’ என்கிறார்.

 

          இந்தக் கவிதை மூலம் ஒரு தீர்ப்பும் கூறுகிறார்.  பிச்சையை நீக்க முடியாது என்கிறார். உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை.  அப்படியென்றால் யாரிடம் இருக்கிறது.  இன்றைய அரசியல்வாதியிடம்.  அவர்கள் நினைத்தால் யாரும் பிச்சை எடுக்காமல் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியுமா?  ‘சில அரிசி மணிகளில் இல்லை’ என்கிறார் ஆத்மாநாம்.

  

          ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தைக் கூறுவதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி ஆத்மாநாம் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கூட்டங்களுக்குச் செல்வார்.

 

          முன் யோசனை எதுவுமின்றி கவிதை எழுத வேண்டுமென்று நினைக்கிறார் ஆத்மாநாம்.  அவருடைய கவிதை தலைப்பிடப்படாதது என்ற கவிதையைப் பார்க்கலாம். இது ஆத்மாநாமின் அற்புதமான கவிதை. 

 

                    

          எடுத்த உடனே, 

 

 

          இந்தக் கவிதை

          எப்படி முடியும் 

          எங்கு முடியும் 

          என்று தெரியாது

 

          திட்டமிட்டு முடியாது

          என்றெனக்குத் தெரியும்

          இது முடியும்போது

          இருக்கும் (இருந்தால்) நான்

          ஆரம்பத்தில் இருந்தவன்தானா

 

          ஏன் இந்தக் கேள்வி

          யாரை நோக்கி

         

          இன்றிரவு உணவருந்தும் 

          நம்பிக்கையில் இங்கிருப்பேன்

 

          இப்படியும் ஓர் நம்பிக்கை

 

          இருந்த நேற்று

          எனக்கிருண்ட கணங்கள்

 

          அவற்றின் தவளைக் குரல்கள்””

          கேட்கும் அடிக்கடி

          அதனை ஒதுக்கத் தெரியாமல்”

          தவிக்கையில்

 

          நிகழ்ச்சியின் சப்தங்கள்

          செவிப்பறை கிழிக்கும்

 

          நாளை ஓர் ஒளிக்கடலாய் 

          கண்ணைப் பறிக்கும்

 

          இருதயம் 

          இதோ இதோ என்று துடிக்கும்

 

          ஆத்மாநாமின் தன்னைப் பற்றிய கவிதை.  இம்மாதிரியான ஒரு கவிதையை ஆத்மாநாமை தவிர வேற யாரும் எழுதியிருக்க முடியாது.  தன்னைப் பற்றி வெளிப்படுத்தும்போது தன்னையே உரித்து கவிதை மூலம் காட்டுகிறார்.  

 

          இதில் ஒரு வரி வருகிறது.

 

          இருண்ட நேற்று 

          எனக்கிருண்ட கணங்கள்

 

அவர் ஏன் அப்படி எழுதியிருக்கிறார்.  அவருடைய மனக் கிலேசத்தைத்தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார்.

         

          நிகழ்ச்சியின் சப்தங்கள்

          செவிப்பறை கிழிக்கும்

 

ஏன் இப்படி எழுதியிருக்கிறார்?  மென்மையான மனம்  கொண்ட ஆத்மாநாமிற்கு நிகழ்ச்சியின் சப்தங்கள் அலற வைக்கின்றன.  இப்படிப்பட்ட சூழலில் இந்தக் கவிதை எப்படி முடியும் என்று தெரியாதுதான்.  முடியும் போது ஆரம்பத்தில் இருப்பவன்தானா என்ற கேள்வியைக் கேட்கிறார். மனநிலை என்பது எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகிறது.  அப்படி மாறும்போது எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 

 

          2083 ஆகஸ்ட் 11 என்ற கவிதையை ஒரு இன்லென்ட் லட்டரில் பதிவு எடுத்து அவர் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பினார் ஆத்மாநாம்.

 

          அது ஒரு வினோதமான கவிதை.  ‘என் கவிதை ஒன்று இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் கிடைத்தது  என்று ஆரம்பிக்கும்.  இறுதி வரிகளில் ஒரு திகைப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

 

 

          அப்பொழுதுதான்

          ஒரு அணுகுண்டு வெடித்த

          சப்தம் கேட்டது

          இருவரும் 

          அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம் என்று முடித்திருப்பார்.   இந்த விபரீதமான வரிகள்தான் கவிதை.

 

          இன்று புதிதாக எழுத வருகிற கவிஞர்களுக்கு ஆத்மாநாம் ஒரு முன்னோடி.  கொண்டாடப்பட வேண்டியவர்.  

 

 

Series Navigationஎஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *