திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 13 in the series 11 ஏப்ரல் 2021

கோ. மன்றவாணன்

நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள். ச் போடக் கூடாது என்று, ச் – ஐ சிவப்பு மையால் மறைத்திருந்தேன். ஆனால் அச்சகத்தார் ச் – ஐ நீக்காமல் அச்சடித்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ச் போட்டு அடிப்பதுதான் சரி என்றார்கள். அனைவரும் அப்படித்தான் அச்சடிப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்களின் வாதத்துக்கு ஆதரவாகத் தமிழாசிரியர் ஒருவரின் வீட்டு அழைப்பிதழையும் காட்டினார்கள். அதிலும் திருநிறை என்பதற்கு, ச் சேர்த்து இருந்தார்கள். 

 

தற்காலத்தில் வாட்ஸப்பிலும் முகநூலிலும் திருநிறை என்பது பற்றியும் திருவளர் என்பது பற்றியும் பலவாறாக எழுதி வருகிறார்கள். அவரவர் மனப்போக்கில் புதுப்புதுப் பொருள்கள் சொல்லித் தமிழ் இலக்கணத்தைச் சிதைக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாகத் திருவளர் செல்வன் திருவளர் செல்வி பற்றி முகநூலோர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஒரு குடும்பத்தில் மூத்த மகனுக்கோ மூத்த மகளுக்கோ திருமணம் செய்யும் போது, அழைப்பிதழில் திருவளர்ச்செல்வன் என்றும் திருவளர்ச்செல்வி என்றும் எழுத வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு அச்சிட்டால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகனின் மூத்த மகளின் திருமணம் என்று தெரிந்துகொள்வார்களாம். மேலும் அந்தக் குடும்பத்தில் அடுத்த திருமணத்துக்கு மணமகனோ மணமகளோ உள்ளார்கள் என்பதையும் திருவளர் என்ற சொல் குறிப்பு உணர்த்துகிறதாம். ஆனாலும் இங்கேயும் திருவளர் என்பதற்கு,  ச் சேர்த்தே எழுதுகிறார்கள்.

திருநிறைச் செல்வன் / திருநிறைச் செல்வி என்றால் இளைய மகன் / இளைய மகளின் திருமணமாகும் என்கிறார்கள். திருநிறை என்று அடைமொழி போட்டால் அவர்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன. இதுவே இறுதித் திருமணம் ஆகும் இனி அவர்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படுமாம். இங்கும் திருநிறை என்பதற்குப் பின் ச் சேர்த்தே எழுதுகிறார்கள்.

இதுபோல் இவர்கள் எழுதுவதற்கும்  சொல்வதற்கும் என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தேன். வளர் என்ற சொல்லும் நிறை என்ற சொல்லும்தாம் காரணங்கள் என அறிந்தேன். திருவளர் என்பதில் உள்ள வளர் என்ற சொல்லை வைத்து, அந்தக் குடும்பத்தில் திருமணம் வளர்கிறதாம். அதாவது மேலும் திருமண நிகழ்வுகள் அந்தக் குடும்பத்தில் உண்டு என்பதைக் குறிக்கிறதாம். திருநிறை என்ற சொல்லில் உள்ள நிறை என்ற சொல்லை வைத்து, அந்தக் குடும்பத்தில் அத்துடன் திருமண நிகழ்வு நிறைவு அடைந்துவிடுகிறதாம். வேறு திருமண நிகழ்வுகள் இல்லையாம்.

நிறை என்ற சொல்லை வினைத்தொகையாகக் கொள்ளாமல், நிறையோடு ச் சேர்த்தால் இன்னொரு பொருளும் வரும்.  நிறைச் செல்வன் என்றால் எடை மிகுந்தவன் என்று பொருள். அஃதாவது பருமனானவன் என்று பொருள். மணமகனோ மணமகளோ பருமனாக இருந்தால் அழகாகவா இருப்பர். திருநிறை செல்வன் என்றிருந்தால், அழகு மிகுந்தவன், செல்வம் மிகுந்தவன் என்று பொருள் என நகைச்சுவையாகக் கவிஞர் முடியரசன் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூருகிறேன். ஆனால் அதை நான் இங்கே வாதுரையாக வைக்கவில்லை. ஒரு சொல்லுக்கு இரு பொருள்களும் பல பொருள்களும் தமிழில் உண்டு. அதை வைத்து விளையாடுவது புலவர்களின் சாமர்த்தியம்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். மணமகன் மூத்தவராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். திருமண அழைப்பிதழில் அவரைத் திருவளர் செல்வன் என அடைமொழி இட்டு அழைப்போம். மணமகள் இளையவராக இருக்கிறார் எனக் கருதுவோம். அவருக்கு அடுத்ததாக அந்தக் குடும்பத்தில் வரன் இல்லை. அதனால் அதே திருமண அழைப்பிதழில் மணமகளுக்கு முன் அடைமொழியாகத் திருநிறை செல்வி என்று அச்சிடுவோம். ஒரே அழைப்பிதழில் மணமகனுக்குத் திருவளர் செல்வன் என்ற அடைமொழியையும் மணமகளுக்குத் திருநிறை செல்வி என்ற அடைமொழியையும் அச்சிட்டால் பொருத்தமாக இருக்குமா?

இலக்கண நுட்பம் தெரிந்த இன்னொரு சாரார் இருக்கிறார்கள். இவர்கள் திருவளர் என்பதையும் திருநிறை என்பதையும் ஒரே கருத்தில் பார்க்கிறார்கள்.  ஆனால் திருவளர் என்பதிலும் திருநிறை என்பதிலும் ச் சேர்த்தால் ஒரு காரணமும்- ச் சேர்க்காமல் எழுதினால் வேறு காரணமும் சொல்கிறார்கள்.

திருவளர் செல்வன் திருவளர் செல்வி என ஒற்று மிகாமல் எழுதினால் அந்தக் குடும்பத்தில் திருமணம் செய்வதற்கான இளையவர்கள் இருக்கிறார்கள் எனப் பொருளாம். திருவளர்ச் செல்வன் திருவளர்ச் செல்வி என ஒற்று மிகுந்து எழுதினால் அந்தக் குடும்பத்தில் அது கடைசித் திருமணமாம். அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணம் இதுதான். திருவளர் என்று ச் சேர்க்காமல் எழுதினால் இன்னும் வளரும் எனப்  பொருள் என்பதால் அந்தக் குடும்பத்தில் அடுத்த திருமணத்துக்காக இளைய மகன் / இளைய மகள் இருக்கிறார்கள் என அறியலாமாம்.. திருவளர்ச் என்று ச் சேர்த்து எழுதினால் வளர்ச்சி முடிந்துவிட்டது ஆகும். அதனால் அந்தக் குடும்பத்தில் அதுவே கடைசித் திருமணம் ஆகும் என்கிறார்கள். இதே கருத்தைத் திருநிறை என்ற அடைமொழிக்கும் பொருத்துகிறார்கள். அதன்படி மணமகன் அடைமொழியில் ச் சேர்த்தும் மணமகள் அடைமொழியில் ச் சேர்க்காமலும் அச்சிட்டால் எப்படி இருக்கும்? ஏதோ இலக்கணப் பிழை என்று தோன்றாதா?

திரு என்பதற்கு அகரமுதலியில் உள்ள பொருள்கள் வருமாறு :

திருமகள், செல்வம், சிறப்பு, அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத் தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலையணிவகை, சோதிடம் கூறுவோன்.

இத்தனைப் பொருள்கள் இருந்தாலும் இடம், பொருள், ஏவல் என்பவைக்கு ஏற்பவே  பொருள் உணர வேண்டும்.

திருமண அழைப்பிதழில் திருவளர் திருநிறை என வரும் சொற்களில் உள்ள திரு என்பதற்குப் பொதுவாக அழகு, பொலிவு, செல்வம், நல்வினை, பாக்கியம் என்றே பொருள் உரைக்க வேண்டும். இந்தத் திருவளர் அடைமொழியானது “திருமணம் வளர்” என்ற பொருளில் வரவில்லை. திருநிறை அடைமொழியானது,  “கடைசித் திருமணம்” என்ற பொருளில் வரவில்லை.

திரு என்பதற்குத் திருமணம் என்ற பொருளும் இல்லை. இருப்பினும் திரு என்பதற்கு மாங்கல்யம் என்ற பொருள் உண்டு. அது மணமகனை… மணமகளைக் குறிக்கும் அடைமொழிகளுக்குப் பொருந்தாது. மாங்கல்யம் என்பது மணமகள் மட்டுமே அணிவது என்பதையும் கருத்தில் கொள்க. மேலும் மாங்கல்யத்துக்கும் அடைமொழி சேர்த்துத் திருமாங்கல்யம் என்கிறோம். தாலி இல்லாமலும் திருமணம் நடக்கிறது. திரு என்ற சொல்லின் பொருள் மிகமிக உயர்ந்தது. மிகவும் விரிவானது. திருமணம் என்பதும் ஓர் ஆபரணத்துக்குள் அடங்கிவிடாது. அதையும் தாண்டி, அதையும் தாண்டிப் புனிதமானது…. தெய்வீகமானது…. என எப்படி வேண்டுமானாலும் உங்களின் உயர்எண்ணங்களுக்கு ஏற்பச் சொல்லிக் கொள்ளுங்கள்.

இன்னொரு கோணத்தில் வாதிடலாம். திருவளர் திருநிறை என எப்படி அடைமொழி இட்டாலும் அந்த அழைப்பிதழில் இன்னாரின் மூத்த மகன் / மூத்த மகள் (ஜேஸ்ட குமாரன் / ஜேஸ்ட குமாரத்தி) என்றும் இன்னாரின் இளைய மகன் / இளைய மகள் ( கனிஷ்ட குமாரன் / கனிஷ்ட குமாரத்தி) என்றும் ஏன் குறிப்பிடுகிறார்கள்? அவ்வாறு குறிப்பதாலேயே திருவளர் என்பதற்கும் திருநிறை என்பதற்கும் அவர்கள் சொல்லும் விளக்கம் பொருந்தாது என அறியலாம்.

திருவளர் என்பதும் திருநிறை என்பதும் வினைத்தொகைச் சொற்கள் ஆகும்.. இச்சொற்கள் முக்காலங்களையும் காட்டும். திருநிறை என்றால் இன்னும் திரு நிறையும்… நிரம்பும்… மிகும்… என்று பொருளாகும். திரு நிறைதல் என்பது முற்றுப் பெறுவதில்லை. திருநிறைச் என்று ச் போட்டு எழுதினால் திரு நிறைந்துவிட்டது என்று பொருள் தந்துவிடும். திருவளர் என்றால் மேலும் திரு வளரும்… பெருகும்… மிகும்… எனப் பொருள் வரும். திருவளர்ச் என்று ச் போட்டு எழுதினால் திரு வளர்ந்து முடிந்துவிட்டது என்று பொருள்தரும்.

திருமணம் செய்துகொள்ளும் மணமகனோ மணமகளோ மேலும் மேலும் செல்வங்கள் / வளங்கள் பெற்று வாழ வேண்டும் என்றுதான் வாழ்த்துவோம். வளங்களோ செல்வங்களோ நிறைவடைந்துவிட்டது / வளர்ந்து முடிந்துவிட்டது என்று சொல்வோமா?

திருவளர் என்பது, ஏற்கனவே திரு வளர்ந்து இருந்தது. தற்போதும் வளர்கிறது. இனியும் வளரும் என மூன்று காலங்களிலும் பொருள் உணர்த்தும்.  இதுதான் வினைத்தொகையின் சிறப்பு ஆகும். அது போலவே திருநிறை என்பதும்.

முடிவாக….

அந்தந்தக் குடும்பத்தில் முதல்  திருமணமா கடைசித் திருமணமா என்பதை வெளிப்படுத்த திருவளர் திருநிறை ஆகிய அடைமொழிகள் உருவாகவில்லை.

திருவளர் என்றால் அழகு, செல்வம், நல்வினை, பாக்கியம் போன்ற சிறப்புகள் வளர்கின்ற செல்வன் / செல்வி என்று பொருள் உணர்வதே சரியாகும். அது போலவே திருநிறை என்றால் மேற்சொன்ன சிறப்புகள் நிறைகின்ற செல்வன் / செல்வி என்று பொருள் உணர்வதே சரியாகும்.

திருமண அழைப்பிதழில் பொதுவாகத் திருவளர் என்ற அடைமொழியையும் திருநிறை என்ற அடைமொழியையும் ஒரே கருத்தில் பயன்படுத்தலாம்.

மணமகனுக்குத் திருவளர் செல்வன் என்று அடைமொழி இட்டால் மணமகளுக்கும் திருவளர் செல்வி என்று அடைமொழி இட வேண்டும். மணமகனுக்குத் திருநிறை செல்வன் என்று அடைமொழி இட்டால் மணமகளுக்கும் திருநிறை செல்வி என்று அடைமொழி இட வேண்டும். மணமக்களில் ஒருவருக்குத் திருநிறை என்றும் மற்றொருவருக்குத் திருவளர் என்றும் கலப்படமாக எழுதக் கூடாது.

மேலும் புதுவாழ்வு தொடங்கும் மணமக்களைப் பொறுத்த வரையில் திருவளர் என்பதும் திருநிறை என்பதும் வினைத்தொகை ஆகும். ஆகவே, ஒற்று மிகாமல் திருவளர் செல்வன், திருவளர் செல்வி, திருநிறை செல்வன், திருநிறை செல்வி என்றே எழுத வேண்டும்.

 

 

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்
author

Similar Posts

Comments

  1. Avatar
    BSV says:

    ஷ்ரேஸ்ட புத்திரன், புத்திரி – மூத்த மகன், மூத்த பெண்
    கனிஷ்ட புத்திரன், புத்திரி – இளைய மகன், இளைய பெண்//

    மொழி இடையூறாக இருக்கக் கூடாது. எனவே சமஸ்கிருத சொற்களை தேர்ந்தெடுக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *