நெஞ்சில் உரமுமின்றி

author
0 minutes, 9 seconds Read
This entry is part 16 of 17 in the series 2 மே 2021

 (கௌசல்யா ரங்கநாதன்) .

….. ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை  கடந்த சில நாட்களாய் என் ஆருயிர்  பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில் மெய் சிலிர்த்துப்போவேன் நான். பொறியியல்  படிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கியவள் அவள், அதுவும் கோல்ட் மெடலுடன்.  அதனால் அவளுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் லட்சங்களில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் தேடி வந்தும், அவள் என்னவோ, அரசுத்துறையில், சம்பளம் குறைவாயிருந்தும் அதையே தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

என்னே உன் நாட்டு பற்று அப்பப்பா, என்று கிண்டலடித்ததுண்டு நானும் என் சகாக்களும் அப்போதெல்லாம்.. அவளும்.நானும் தெருக்களில் பாண்டியாடி, காக்கைக்கடி கடிகடித்து எதையுமே பகிர்ந்துண்ட நாட்கள்தான் எத்தனை, எத்தனை! அப்பப்பா . இவை யாவையுமே மலரும் நினைவுகளாய் வந்து என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்ததொரு வேளையில்தான் அவளிடமிருந்து, வந்த அந்த துயரச்செய்தி என்னை நிலை குலைய வைத்தது. அவளைக் காதலித்து  இரு பக்க பெற்றோறையும் பகைத்துக்கொண்டு, கடிமணம் செய்து கொண்டு,”அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும், பயனும் அது” என்ற குறள் வாக்கியத்துக்கொப்ப, மிக, மிக அன்னியோன்னியம்  காட்டி ஆதர்ச தம்பதிகளாய் வாழ்ந்து வந்த உமாவின் கணவன் ஒரு நாள் காய்ச்சலில், அதுவும் தன் 45 வயதில், இவ்வுலகை விட்டுப் போய்விட்டானாம். அவர்களுக்கு  அட் லீஸ்ட்,ஒரு குழந்தையாவது இருந்திருக்குமேயாகில் கொஞ்சம் ஆறுதலாய் இருக்குமே, அது கூட ஏன் இல்லாமல் போயிற்று என்றும் தோன்றியது, என்றாலும் அவள் என்னவோ அதை ஒரு குறையாய் நினைக்கவில்லை.

 

  “சல்தா ஹைனு விடுடி” என்பாள் ஒரு புன்னகையூடே. . கணவனின் அகால மரணத்தை உணர்ந்தும் இரு பக்க பெற்றோர்களும் அவளிடம் வந்து அன்பு காட்டி, அரவணைத்திருக்கலாம். ஆனால்  சே! சா¢யான வீம்பு பிடித்தவர்கள். உமாவின் கணவன் உடல் தகனமூட்டப்படும் வரை மட்டுமே இருந்துவிட்டு, தத்தம் வீடுகளுக்குப்போய் விட்டனர். “வாழ்க்கையில் வந்து போகும் சவால்க¨ எதிர்கொள்ள என்னை தயார்படுத்தி வருகிறேன் ஜானு.  மனதை தேற்றிகொள்ள அரும்பாடு பட வேண்டியிருக்கு. “இதுவும் கடந்துபோம்” என்று மனதை தேற்றிக்கொள்ள முடியலை. 

 

“புனரபி ஜனனம், புனரபி மரணம்” இது பஜ கோவிந்த வார்த்தை.  அதாவது பிறப்பும், இறப்பும்  தொடர்ந்துகிட்டே இருக்கும், என்றவாறு அவள் உரையாடல் நீளும்.  தீர்க்கதர்சி அவள். எனக்கு, இந்த சமயத்தில் உமா அருகில் இருந்து ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.  இரவு படுத்தால் தூக்கம் வரவில்லை  என் மன ஓட்டம் அறிந்த என் கணவர் ” உன் தோழியைப் பார்க்க  பாரதம் போய் வர, நான் ஏற்பாடு பண்ணிட்டேன்”, என்று சொல்லி எனக்கான ஃப்ளைட் டிக்கெட் கொடுத்து என்னை வழி அனுப்பி  வைத்தார்.  தோழியுடனும் பத்து நாட்கள் இருந்தார் போலவும் ஆச்சு. .. என் பெற்றோர் , மாமனார், மாமியாரை பார்த்தாற்போலவும்  ஆச்சு என்பதால் தோழிக்கு முன்னறிவிப்பு கூட கொடுக்காமல் பாரதம் போய் அவள் முன் நின்ற போது நான் எதிர்ப்பார்த்ததற்கு நேர் மாறாய், அதாவது அழுது வடிந்து கொண்டு  கூந்தலை கூட முடியாமல் சோக சித்திரமாய், முழங்கால்களில் முகம் புதைத்திடாமல் தன் வீட்டில் டி.வி.டி. ப்ளேயா¢ல்  புதுப்படம் ஒன்றில் மூழ்கியிருந்தாள்.

 முகத்தில் சமீபத்தில் கணவனை இழந்த சோகச்சுவடே இல்லை.    பாவம் .. இருக்கட்டும் அவள் இப்படியே எப்போதும் மகிழ்ச்சியாய் என்று நினைத்துக்கொண்டேன். மறந்தும் சம்பிரதாயம், அது, இது என்று அவளே மறந்து போய்க்கொண்டிருக்கிற  பழைய நினைவுகளை கிளறி வேதனைக்குள்ளாக்க மாட்டேன் ஒரு போதும் என்ற எண்ணத்துடன் “ஹாய் உமா,  HOW ARE YOU? என்று கலகலவென புன்னகையூடே நான் கேட்க  அவளும்” WHAT A SURPRISE ?  ஜானுவா இது?நான் காண்பது என்ன கனவா , அல்லது நினைவா? “என்று புகழ் பெற்ற சினிமா வசனத்தை அதே ஏற்ற இறக்கத்துடன் கேட்க “போதும்டி போதும்” என்று   நான் சொல்ல, அவள் என் கைகள் பற்றிக்கொண்டு, தன் அருகில் அமர்த்திக்கொண்டவள், என்ன நினைத்தாளோ என்னவோ, டி.வி.டி.ப்ளேயரை ஆஃப் பண்ணினாள்.  

பிறகு, படு காஷுவலாக “எப்ப கிளம்பினேடி  ஸ்டடேட்ஸை விட்டு? என்ன சாப்பிட்டே?   இரு, இரு, நமக்குள்ள ஒரு ஒற்றுமை பார்த்தியா? உனக்கு கோதுமை அல்வா ரொம்ப பிடிக்கும்ல.  இன்னைக்கு என்னவோ, என் உள்ளுணர்வு சொல்லிச்சு அல்வா பண்ணினேன்.  உன் தோழி உன்னை தேடி வந்தாலும் வரலாம்  உன்னைப்பார்க்கனு.எப்படிடி நான் நினைச்சாப்போலவே நீ திடுதிப்புனு வந்து நிற்கிறே.?  ஊம்.. வாடி  சேர்ந்தே சாப்பிடலாம்,” என்றவள், இரு தட்டுகளில் அல்வாவும், உருளைக்கிழங்கு போண்டாவும் கொண்டு வந்து வைத்து “சாப்பிடுவோமா..  உனக்கு ஒன்றும் பீப்பீ, சுகர், கொலாஸ்ட்றல்னு இல்லையே.  எனக்கு இல்லைம்மா.” என்றவள், என்ன நினைத்துக்கொண்டாளோ என்னவோ உரத்த குரலில் “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பியே, நண்பியே,.நண்பியே! இந்த நாள்அன்று போல் இன்பமாய் இல்லையே” என்றவள் முகத்தில் கணவனை சமீபத்தில் இழந்த சோகச்சுவடே.. ஊஹூம்.  என்ன இரும்பு மனுஷி இவள் என்று  திகைப்பாய் இருந்தது.

அவள் மூடை மாற்ற எண்ணி, ” HOW ABOUT YOUR JOB AND LIFE ? “என்றேன்.   “AS USUAL” என்றாள்.அவள்  அரசு அலுவலகம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பவள்.  கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.  பொழுது விடிந்து பொழுது போவதற்குள் தினம், தினம் சண்டை, சச்சரவு, யூனியன் பிரச்சினை, “வாழ்க, ஒழிக, ஜிந்தாபாத், ஜிந்தாபாத்.  தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக..” என்று தொட்டதற்கெல்லாம். மதிய உணவு இடைவேளைகளின் போது கேட் மீட்டிங். அப்பப்பா.  தினம் மண்டையைப் பிய்த்துக்கொண்டு, ஓடும் அளவுக்கு.  நிறைய பேர்கள் படிக்காத லேபரர்கள் என்பதால் கேட்டுக்கொள்ளாத முரண்டு பிடிக்கும் சுபாவம்,  இதில் அரசியல் கட்சிகள் தலையீடு வேறு .. இப்படி காலை முதல் மாலை வரை பிரச்சினைகள், பிரச்சினைகள், பிரச்சினைகள்  தான்.    இவற்றை திறம்பட யார் மனமும் புண்படாமல் அன்பாய் அவர்களிடம் பேசி விளங்க வைக்க படாதபாடு பட வேண்டும்.. 

சில ஊழியர்கள் தவறு செய்து விட்டு தன்னிடம் வரும்போது  அவர்கள் தவறுணர்த்தி “இனிமேல் இப்படி செய்யாதீங்க” என்று ஓரல் வார்னிங் மட்டுமே,  ஒரு தாய் உள்ளத்துடன், கொடுத்து அனுப்புவாள்.  பிறகும், மேலும், மேலும்,” சிலர் “இவள் என்ன ஒரு பொம்பிளைதானே, என்ன செஞ்சுட முடியும்” என்று தொடர்ந்து தவறிழைத்தால் அவர்களுக்கு எழுத்து பூர்வமான மெமோ கொடுத்து விளக்கம் கேட்கப்படும். என்ன செய்தும் அவளால் தன் அலுவலகத்தில் புழங்கிடும் கையூட்டு, மெத்தனப்போக்கு, இவற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதற்கு சில ஊழியர்களும் கூட விதி விலக்கல்ல.  வேலியே பயிரை மேய்ந்தால்  என்ற கதைதான்.  ஊம்  இன்றைய  நாட்டு நடப்பு இப்படிதான் என்றாகி விட்டிருக்கிறது.

இன்று, அரசு வேலையில் கை நிறைய சம்பளம், இன்ன பிற வசதிகள்  தனியார் துறைக்கு ஈடாக வழங்கப்படுகிறதுதான் என்றாலும் ஆசை யாரை விட்டது.  பணம், பணம், பணம் என்பதே தாரக மந்திரமாகி விட்டதொரு சூழலில், மற்றதெல்லாம் புறம் தள்ளப்பட்டு விடுகின்றன.   இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவங்களை எத்தனை அன்னா ஹஸாரேக்கள் வந்தாலும் திருத்த முடியாது.  மக்கள் பணத்திலிருந்துதானே, மக்களுக்கு சேவை செய்ய சம்பளம் இன்ன பிற வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்றது.” என்பாள் வேதனை கலந்த புன்னகையுடன். தன் அன்பு கணவன், தன் மீது ஒரு ஈ உட்கார்ந்தால் கூட பதறித் துடித்து போனவன், இன்று  தன்னுடன் இல்லையே என்று நினைத்து மூலையில் முடங்கிப் போகாமல் தன் பணி.. தன் ஊழியர்கள் போக்கு, சுணக்கமில்லாத வேலை, கூடவே ஊழியர்கள்பால் , அன்னார் குடும்பம் பற்றி அக்கறை கலந்த விசா¡¢ப்பு, முடிந்த வரையில் உதவி,அதற்கு விதிகள் இடம் கொடுக்காவிட்டாலும் “விதி முறைகளை தளர்த்தி உதவி செய்ய ரெகமன்ட் செய்கிறேன்” என்று மேலிடத்துக்கு நோட் போட்டும், பர்சனலாகவும் மேலுள்ளவர்களிடமும் பேசி, அதுவும் இயலாதபோது,  தன் சொந்த பணம் கொண்டோ உதவிடும் மனப்பாங்கு எத்தனை பேர்களுக்கு வரும், அதுவும் இந்த காலத்தில். அப்போதெல்லாம் “உமா தி கிரேட்” என்றே  கத்தத் தோன்றும். 

அப்படி ஒரு  such a nice personality  அவள். நானே சில  சயமங்களில் அவளிடம் உன்னைப்போல ஒரு சினேகிதி கிடைக்க  நான் கொடுத்து வைத்திருக்கணும்டி” என்பேன்.   இப்படி எதை, எதையோ நான் அவள் வீட்டில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, உமா என் சிந்தை கலைத்து “ஊம் உன்னவர் நினைவு  வந்துடுத்தாக்கும். நியாயம் தானே” என்றாள்..  அவள் ஆழ் மனத்தில் தன் கணவன் நினைவு இருந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கிறது என்று எனக்கு விளங்காமல் இல்லை.  “கடவுளே அவளுக்கு மன அமைதியைக்கொடு” என்று இறைஞ்சுவதைத்தவிர  நான் வேறு என்ன செய்துவிட முடியும்..!  அதுவும் வெளி நாட்டில் செட்டிலாகி விட்ட என்னால். 

 “என்ன,  நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே?” என்ற உமா முகம் பார்த்து “உன்னால் மட்டும் எப்படிடி எல்லாம் மனத்தில் போட்டு வச்சுக்கிட்டு வெளியில் எதையுமே காட்டிக்காம  இருக்க முடியுது” என்று மனதுக்குள் மட்டுமே கேட்க முடிந்தது,   தொடர்ந்து, அவள்  ” வெளி நாட்டிலிருந்து என்னை பார்க்க வந்த உன் மூடை I HAVE SPOILED.  PL. PARDEN ME ” என்றாள்.. இவள் என் மூடை ஸ்பாயில் பண்ணி விட்டாளா.  நான் அல்லவா? ஊம் என்ன மனத்திண்மைடி உனக்கு.. “கனவு கண்டது போதும்டி.  வா, வா, இன்னைக்கு உன் கூடத்தான் லன்ச், ஒரு ஸ்டார் ஓட்டல்ல.  தென் வீ கோ டு எ லேடஸ்ட் மூவி. ஒகே.” என்றாள் முகத்தில் வருத்தத்தையே காட்டிக்கொள்ளாமல்.   நானும் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ” ஹாய் எப்ப புக் பண்ணினே” என்ற போது ” இப்பதான் ..  நீ  முகம், கை, கால்கள், வாஷ் பண்ணப் போயிருந்தியே பாத்ரூமுக்கு அப்பதாண்டி. 

ஏன்   DO YOU HAVE ANY OBJECTION OR PRE- OCCUPATION?  ஃபிராங்கா சொல்லுடி”  என்ற போது “நோ, நோ  .  எனகென்னடி அப்ஜெக்க்ஷன்.?  உன் கூடஇருக்கணும்  சில நாட்களாவதுனுதானே ஐ ஹாவ் கம் ஆல் அலாங் ஃப்ரம்  ஸ்டேட்ஸ்.  வா போகலாம்” என்ற போது  “அட மறந்துட்டேண்டி பேச்சு சுவாரசியத்தில்.  உனக்கு ஃபில்டர்  காபினா ரொம்ப பிடிக்கும்ல .  டிகாக்க்ஷன் போட்டு, பால் சூடா காய்ச்சி வச்சிருக்கேன். இரு கலந்து எடுத்துக்கிட்டு வரேன்” என்று சொல்லி அவள் உள்ளே போன போது  என்னால் துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை.. நான் ஒன்றும் ஸ்திதப்பிரதிக்கியன்  அல்லவே.  சாதாரண மனுஷி, ரத்தமும், சதையும் கலந்த  பிறவி தானே.   ஆனால் நீ ஒரு இரும்பு மனுஷிடி.   நான் நினைத்து வந்ததே வேறு..  இங்கு, உமா அழுத கண்களும், சிந்திய மூக்குமாய், கிழிந்த புடவையுடனும் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆனார்போல இருப்பாள்னு நினைச்சு வந்ததற்கு நேர்மாறாய்!!  தோழி நீ என்றென்றும் இப்படியே இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்தேன்.

வேற என்ன செய்ய?”என்றபோது, தோழி “கம்மான்யா..குயிக், குயிக், குயிக், நேரமாயிட்டே போகுதுல்ல. ” என்றபோது வாசலில் வாட்ச்மேன் வந்து “மாடம் கால்டாக்சி வந்திருக்கு” என்றார். ” எதுக்குடி கால் டாக்சி?” என்ற போது “பின்ன நடராஜா சர்வீஸ்ல போகலாம்னிறியா, இந்த கொளுத்தற வெயில்ல” என்றாள். வீட்டைப்பூட்டிக்கொண்டு வெளியே கிளம்ப எத்தனிக்கையில், “அம்மா, அம்மா” என்று யாரோஅழைப்பது கேட்க யாராய் இருக்கமுடியும் இந்த வேளையில்..  இரு பார்த்துட்டு வரேன்” என்று  வாயிற் பக்கம் போனவள்  யாரையோ “வாங்க, வாங்க..  உள்ள வாங்க” என்றாள். வருகை பு¡¢ந்த பெண்மனியும் “அட என்னம்மே,  உள்ள வானுல்லாம் கூப்பிடறே துஷ்டி விசா¡¢க்க வந்தவங்க கிட்டல்லாம், ” என்ற போது உமா இறுக்கமாய் இருந்தாள்.  தொடர்ந்து வந்த பெண்மணி “என்னம்மே  துஷ்டி நடந்த வூடாட்டமாவா இருக்கு இது?. இருந்தாலும் பாவம்மே நீயி.  இப்படியொரு நிலைமை உனிக்கு வரத்தாவலை. 

ஊம் என்ன பண்றது” என்றவள் “ஆனா ஒண்ணும்மா.  அவங்க, அவங்க செய்யற தப்புக்கு அந்த கடவுள் கை மேல கூலி கொடுத்துடறான்ல.  ஆனா சில கஸமாலங்களுக்கு விளங்காம  இன்னா ஆட்டம் போடுதுங்க”  என்றவள், கண்களில் குரோதம் காணப்பட்டது.  இங்கு துஷ்டி கேட்க வந்ததாக சொன்னவள்,  ஏன் எதை, எதையோ பேசவேண்டும்? என்றெண்ணி உமாவை நிமிர்ந்து நான் பார்க்க, அவளோ கண்களால் கம்முனு இரு என்று சைகை செய்தாள்.    தொடர்ந்து, வந்திருந்த பெண்மணி அழ ஆரம்பித்தாள் பெரும் குரலில்..  “நிறுத்துங்கம்மா ..ஏன் இங்கே வந்து  அழறீங்க?” என்ற உமாவிடம்” துக்கம் நடந்த வீட்ல துஷ்டி பாட்டு பாடாம, தாலாட்டா பாடுவாங்க. நல்லா இருக்குதே உன் நாயம்” என்றாள்.

“இருங்கம்மா.  நீங்க பாட்டுக்கு காலிங் பெல்ல அடிச்சீங்க.  உள்ள வந்தீங்க.அழ ஆரம்பிச்சுட்டீங்க.  நாங்க சோகமாயிருக்கோம்னு உங்க கிட்ட சொன்னமா?. உங்களை கூப்பிட்டமா வந்து துக்கம் கேளுங்கனு” என்ற உமாவைப்பார்த்து “அட என்ன தாயீ நீயி?”  துக்கம் நடந்த வூட்டுகெல்லாம் யாரும் வெத்திலை பாக்கு வச்சு அழைக்கமாட்டங்கம்மா.  ” என்றாள். தொடர்ந்து  அவள் சொன்னாள் உமாவிடம் “என்ன இருந்தாலும் உன்னிய இப்படி விட்டுட்டு உன் வூட்டுக்காரன்  அல்பாயுசில போயிருக்க வேண்டாம்தான்.இந்த துக்கம் மறக்க முடியாதுதான் லேசில.” என்றாள். “ரொம்ப நன்றிமா..  போய் வாங்க.  நாங்க வெளில போகணும்.  இன்னொண்ணுமா, போறதுக்கு முன்னால. இங்கே நான் ஒண்ணும் துக்கத்தில் இல்லை,  வருத்தப்படலை என் புருஷன் போனதுக்கு..  பிறப்பும், இறப்பும்  சகஜமானதுதானே.!  என்னவர் முன்ன போயிட்டார். 

நானும், நீங்களும் என்னைக்கோ  ஒரு நாள் போகத்தானே போறம்.  இதில வருத்தப்பட என்ன இருக்கு.?  இருந்தாலும் உங்க அன்புக்கு, அதாம்மா துஷ்டி கேட்க அவ்வளவு தூரத்திலுருந்து வந்ததுக்கு நன்றி.. இதுக்கு நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்..” என்றாள்..  வந்தவள், என்ன எதிர்பார்த்து வந்தாளோ இங்கு, முகம் சுண்டிப்போய், பேய் அறைந்தாற்போல், வெளி யேறினாள். “என்ன உமா, யார் இவங்க? துக்கம் கேட்கவா வந்தாங்க?…  எதோ உள் நோக்கத்த்தோட  வந்தாப்பல இருக்கே” என்ற போது, உமா “யு ஆர் கரக்ட்..  என்னைக் குத்தி கிளறி, வேதனைப்படுத்தி பார்க்கணும்னு தான்.  இதனாலல்லாம் நான் வருத்தப்படுவேன்னு  நினைக்கிறாங்க.

ஆனா ஒண்ணு அவங்க பிள்ளை செஞ்ச தப்பை இவங்க உணரலை  இப்ப வந்தாங்களே இங்கே, இவங்க பிள்ளையாண்டான் எங்காபிசில வேலை பார்க்கிறவன்.  கை நிறைய சம்பளம், ஒ.டி.  போனஸ் எட்செட்றா, எட்செட்றா.  இருந்தாலும் கையூட்டு வாங்கறவன்.  அதை கண்டிச்சுருக்கேன் பல தடவை ஒரலாய்.. அப்புறம் எழுத்து மூலமாய்..  இவ ஒரு பொம்பீளை..  இவ என்ன சொல்றது..?  பார்த்துடுவோம் ஒரு கைனு கூட்டம் சேர்த்துகிட்டு லஞ்சம் வாங்கினப்ப  லஞ்ச ஒழிப்புத்துறை வந்து கையும், மெய்யுமாய் பிடிச்சுகிச்சு அவனை..  ஆனா சத்தியமாய் நான் காரணம் இல்லை..  பாதிக்கப்பட்ட ஒருத்தன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  போட்டுக்கொடுத்துட்டான்.. இப்ப வந்து போனாங்களே இந்த அம்மாவோட பிள்ளையாண்டான் தான் பிடிபட்டவன்.  இந்த அம்மா எங்கிட்ட வந்து முறையிட்டு எப்படியாவது தன் மகனை காப்பாற்றணும்னு கெஞ்சினாங்க. பட், என் கை மீறிப்போச்சு.  நான் ஒண்ணும் செய்ய முடியாத நிலைமைனு எடுத்து சொல்லியும் அவங்க கேட்கலை.  நான் தான்  அவங்க பிள்ளையான்டான் ஸஸ்பென்ஷனுக்கு காரணம்னு எங்கிட்ட ஒரு காண்டு.  என்னை அங்கேயே சபிச்சாங்க நீ விளங்க மாட்டேனு. இப்ப, என் புருஷனின் அகால மரணம் நான் அவங்களுக்கு பண்ணின கொடுமையாலதான்னு நினைச்சு என்னை வேதனைப்படுத்தணும்னு துக்கம் நடந்து ஒரு மாசத்துக்கு பிறகு என் வீடு தேடி வந்து  என்னை அழவைக்கப் பார்க்கிறாங்களாம். 

மடியில் கனம் இல்லாதப்ப நான் எதுக்குடி பயப்படணும்?நான் ஏண்டி அழணும் ஒரு மரணத்துக்கு.? ஆனாலும் எனக்குள்ளேயும் ஒரு சோகம்,துக்கம், வருத்தம், இருக்குதான்.. அதை நான் ஏன் வெளிக்காட்டிக்கணும்…?  ஐ மீன் வெளிச்சம் போட்டு பிறருக்கு காட்டணும்.?  என் துக்கம், என் மகிழ்ச்சி என்னோட… அட மகிழ்ச்சியையாவது தேவைப்பட்டா, விருப்பப்பட்டா, நெருங்கினவங்க கிட்ட, அதுவும் ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறவங்ககிட்ட, பகிர்ந்துக்கலாம்..  ஆனா சோகத்தை, துக்கத்தை, நெவர்.. இது என் சுபாவமும் இல்லை..  நான் ஏண்டி கதறிக்கதறி அழணும், சொல்லு..? நான் அழ மாட்டேன், அழ மாட்டேன், அழவே மாட்டேன்” என்ற உமா மெல்ல விசும்ப ஆரம்பித்து,  போகப்போக பெரும் குரலில் ஹோவென  அழ ஆரம்பித்தவள், என் முகம் பார்த்து,தன்னை சமாளித்துக்கொண்டு, “ஒருக்கணம்  உணர்ச்சி வசப்பட்டுட்டேண்டி.  வா சாப்பிடப் பேகலாம். அப்புறம் மூவீ, தென் பீச்..  நைட் ஹோட்டல்ல டின்னர் முடிச்சுகிட்டு வீடு திரும்பறோம் என்ன” என்று கல, கலவென பேச ஆரம்பித்தாள் ஒரு புன்னகையுடன். “யு ஆர் எ ஃபன்டாஸ்டிக் லேடிடி” என்றேன் அவள் கைகள் பற்றிக்கொண்டு…

Series Navigationமீன்குஞ்சுஅஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *