மீன்குஞ்சு

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 17 in the series 2 மே 2021

ஜனநேசன்


“அப்பா,  நீச்சல் பயிற்சிக்கு பணம் தர்றேனு சொன்னீங்களே குடுங்கப்பா,  இந்த கொரோனா விடுமுறையிலே பழகிக்கிறேன்ப்பா    “  என்று ஆறாவது படிக்கும்  மகன் கௌதம் கொஞ்சும் மொழியில் கேட்டான்.

அப்பா சுந்தர் தனது பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து “அரைமணி நேரம்.  பொறு,  அப்பாவே வந்து நீச்சல்குளத்தில் பயிற்சியாளரிடம் சொல்லி சேர்த்துவிட்டு வர்றேன்.”

“ இல்லப்பா,  பக்கத்த வீட்டு ஃபிரண்டஸ்கள் நாலுபேரு சேர்ந்து போறோம்பா ”

“சரி,  அப்போ  கவனமா போயிட்டு வாங்க.    நாளையிலிருந்து காலையில்  ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரை நீச்சல் பழகிட்டு  வர்லாம்     “ என்று சொல்லி அனுப்பினார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மனைவி நந்தினி அடக்க‌ முடியாமல் கெக்கலியிட்டு சிரித்தாள்.  மாதக்காலண்டர் தாள்கள் கால்களைத்  தூக்கி ஆடின. என்னவென்று  ‌  மனைவியை ஊடுருவிப் பார்த்தான்.

“ ஒன்னுமில்லை, மகள் முழுநிலாவையும் நீச்சலுக்கு.  அனுப்பனும்னு ஆசை!” ” இதுக்கு இப்படி கெக்கலியிட்டு சிரிக்கணும்னு அவசியமில்லையே, நீ எதையோ மறைக்கறே .”

 “மறைக்க என்ன இருக்கு. நீங்க  கடப்பாரை நீச்சலடித்த  பழைய நினைப்பு வந்தது    .சிரிச்சேன்.”

சுந்தரும் வெட்கத்தோடு சிரித்து அவளை அடிப்பதுபோல்  கை ஓங்கினான். அவள் நழுவி ஓடி அடுப்படி திரைச்சீலை மறைவில் ஒளிந்து சிரித்தாள்.

இருவர் சிரிப்பின் அலைகள் திரண்டு  பதினைந்து ஆண்டுகளுக்கு.  முந்திய நினைவுகளை  மோதின.

சுந்தருக்கும் நந்தினிக்கும் கல்யாணமாகிய மறு மாதத்தில் அலுவலகத்திற்கு மூன்றுநாள் விடுப்பு கிடைத்தது .நந்தினி கிராமத்திலிருக்கும் தாய் வீட்டிற்கு போய் வரலாமென்று அழைத்தாள். புதுப்பெண்டாட்டி சொல்வதற்கெல்லாம் இசைந்து போகும் பருவம். அவளசைவுக்கு இவன் இசைந்தான். அன்றிரவே கிராமம் போனார்கள் . மாமியார்.  வீட்டில் அன்பு ஒழுக  வரவேற்றனர்.

மறுநாள் காபிக்கு பின் சுந்தரிடம் மைத்துனர்,    வயல்பக்கம் போயிட்டு அப்படியே குளித்து வரலாம் என்றான் .வயலில் நந்தினியைப் போலவே பயிர்கள் செழுசெழு வென்றிருந்தன .மரம் செடி கொடியெல்லாம்  நந்தினியாகத்   தெரிந்தாள்!

சுற்றிப் பார்த்து காலைக் கடனெல்லாம் முடித்த பின் மைத்துனன்  ,                “கரண்ட் இல்ல மாப்பிள்ளை .கிணற்றில் இறங்கிக்  குளிப்போம்“ என்று சொன்னதுக்கு சுந்தர் தலையாட்டினான். இருநூறடி ஆழக்கிணறில் இறங்கப் போகும் போது,  அம்மாடி,  இவ்வளவு ஆழக் கிணற்றிலா என்று அங்கலாய்த்தான்.

“ மாப்பிள்ளை ,பயப்பட வேண்டாம் .நாம் படிக்கட்டில் இறங்கி தான் குளிக்கப் போறோம்.    “    என்றான்.

சமதளத்தில் இருந்து அறுபது படிகள் இறங்கினார்கள் .மைத்துனர் ,கவனம் மாப்பிள்ளை என்று எச்சரித்துக்  கொண்டே முன்னால் இறங்கினான். கிணற்றுக்கு பக்கத்தில் இருந்து ஆலமரம்  கிணற்றுக்குள் தனது.  விழுது சடைகளைத்   தொங்க போட்டு இருந்தது.  நந்தினியின் நீண்ட சடைப்பின்னல்  போலிருந்தது .சுந்தர் மலைத்துப் போய் இறங்காமல்  விழுதுகளைப் பார்த்தபடி நின்றான்.

“என்ன மாப்பிள்ளை அப்படி திகைச்சுப் போய்.  பார்க்கிறீக. கிணற்றில்  தண்ணீர் நிறைய இருக்கும் போது ஆலமரத்தில் ஏறி அந்த விழுதில் தொங்கியபடி கிணற்றில் குதித்து நீந்தி விளையாடுவோம். எங்க நந்தினி மேல்படிக்கட்டிலிருந்து கீழே குதித்து தன் சோட்டுப் பிள்ளைகளோடு தண்ணிக்குள் ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும்.    தண்ணீர்  குறையவும் நாங்க நந்தினியை. கிணற்றுப் பக்கமே  வரவிட்டதில்லை“  என்று சொல்லிக் கொண்டே கீழிருந்து மூன்றாவது படிக்குப்  போய் நின்று, கவனமா வாங்க மாப்பிள்ளை,  என்று  கிணற்றில் குதித்தான். தெறித்த நீர்த்துளிகள் இவனைக்  கேலி செய்வதுபோல் இருந்தது . சுந்தர் கிணற்றின் சுவரைப் பிடித்தபடி கடைசிபடிக்கு இறங்கி வலதுகாலை தண்ணீருக்குள் மெல்ல விட்டான் .நந்தினி மாதிரி தண்ணீர் ஜிலுஜிலுத்து கிளுகிளுப்பூட்டியது  மெல்லத் தொடைவரை விட்டான்.

தண்ணீருக்குள் மிதப்பு  நீச்சலில் இருந்த மைத்துனன் ,சும்மா இறங்குங்க  மாப்பிள்ளை. இடுப்பளவு ஆழம்  தான் என்று ஓரிடத்தில் நின்று காட்டினான்.  சுந்தர், நந்தினியை நினைத்துக் கொண்டே மெல்ல இறங்கும்போது  தொப்பென்று வழுக்கி விழுந்தவன் கைகளை அசைத்து கால்களை  உதைத்து தண்ணீரை கொப்பளித்தபடி மூன்றுமுறை நீருக்குள் முக்குளித்து  போய் வந்தான் .சுந்தர் நீச்சலடிக்க முயல்கின்றான் என்று எண்ணி மைத்துனன் படிக்கு  வந்து உடல் தேய்த்துக் கொண்டிருந்தான்.

நீருக்குள்ளிருந்து சத்தமில்லை.  காற்றுக் குமிழ்கள் மட்டுமே வந்தன. அதிர்ச்சியாகிப் போனான். உடனே குதித்து முக்குளித்து தேடி சுந்தரின் ஜட்டியைப்  பிடித்து இழுத்து தூக்கினான்.  வயிறு உப்பியிருந்தது.    கிணற்றுக்கு மேலே கொண்டு போவதுற்குள் எதும் நேர்ந்தால் என்ன செய்வது?  படிக்கட்டிலே அவனை சாய்த்து வைத்து வயிற்றை.  அழுத்தி  அழுத்தி ,உள்ளே போன தண்ணீரை எல்லாம் வெளியேற்றினான் .  கடைசியாக குடித்த காபி வரை வெளியேறி. விட்டது.  ஈரத்துணியால் அழுத்தி முகத்தை தேய்த்து விட்டு நெஞ்சுபகுதியில்.  மெல்ல குத்திகுத்தி மசாஜ் செய்தான்.

மாப்பிள்ளை ,  நந்தினி வந்திருக்கு மாப்பிள்ளை என்று மூன்றுமுறை சொல்லவும் மெல்ல இமைகள் திறந்தன .நீரில் விழித்த  அயற்சியால்  மீண்டும் மூடிக்கொண்டன . உலர்ந்த துண்டால் சூடேற தலையை  ,உடலைத் துடைத்து விட்டான். சுந்தர்  கண்களைத் திறந்து நந்தினி, நாம எங்கே.  இருக்கிறோம் என்றான்.

   குளிச்சுகிட்டு  இருக்கோம் மாப்பிள்ளை  ,வாங்க  மெல்ல போவோம் என்று அவன்  துணிகளை சரிபண்ணி விட்டு,  மைத்துனன் முழுபலத்தையும் பயன்படுத்தி கவனமாகத்  தூக்கி ஒவ்வொரு படியாக நடத்திச் சென்றான். கிணற்றின்  மேல்தளம்  வந்தபின் சுந்தரின் இடதுதோள்பட்டைக்கு கீழாக தன் கையைக் கொடுத்து முதுகைத்தாங்கி மெல்ல நடத்தி வீட்டிற்குள் அழைத்து வந்தான் .நல்லவேளை, இடைவழியில் யாரும் கவனித்துப் பார்க்கவில்லை.   பார்த்திருந்தால் ஊரே  இவர்கள் வீட்டின் முன் கூடியிருக்கும். அவர்களுக்கு.    விளக்கம் சொல்லியே ஓய்ந்து போயிருக்கணும்!

   சுந்தரின் கோலம் பார்த்ததும் நந்தினி கதறி அழுதாள். சுந்தரும் மாமனார் வீடென்று அழுககையை  அடக்கி பார்த்தான். அடக்க முடியவில்லை.    நந்தினி கதறலில் இவனும் கரைந்து தேம்பினான்.  மாமானார் தனது மகனைத் திட்டினார். நீச்சல் தெரியாதவரை எப்படி கிணற்றில் குளிக்க கூட்டிப் போகலாம்?    எதாவது நடக்கக் கூடாதது  நடந்தால்.  அதுக்கு   யார் பதில். சொல்றது என்று கடிந்தார்

 .“நான் சொன்னதை அவரு கவனிக்கவில்லை .அவரு சொன்னதை நானும்   கவனிக்கவில்லை  .நல்லவேளை!.  எதுவும் விபரீதம் நடக்கவில்லை. மாப்பிள்ளை கண்ணையே திறக்கவில்லை.  மயங்கி இருந்தவர் நந்தினி வந்திருக்கேன் என்றதும் தான் கண்ணையே திறந்தார்.  மாப்பிள்ளை ,    நந்தினி மேல உயிரையே வச்சிருக்காருன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன்“  என்று சொல்லவும் எல்லாரும் கொல்லென்று சிரித்தனர். நந்தினி வெட்கம் பொங்க தலைகுனிந்து ஓரக்கண்ணால் பார்த்தாள்.    சுந்தர் அசடு வழிந்து குனிந்தான்.

மாமியார் தலையிட்டு, “நம்ம குலசாமி புண்ணியத்தில்  நமக்கு வந்த ஆபத்து விலகிறிருச்சு!        நந்தினி ,மாப்பிள்ளையை வெண்ணீரில் குளிக்க வை.  கொஞ்சம் இதமா இருக்கும்!      காலாகாலத்தில் இட்டலியும் கோழிக்குழம்பும்,  கடலைசட்டினியும் ஊத்தி சாப்பிட வை!” என்று சூழலை நகர்த்தினார்.

       “சுந்தர்,  குளிக்கும்போது எத்தனையோ நீச்சல் இருக்கு .கடப்பாரை நீச்சல் அடிச்சிருக்கீக  “ என்று நந்தினி கேலி  செய்தாள் .வேற  நீச்சல்  நீ கத்துதர்றியா  என்று  அப்பாவித்தனமாய் கேட்டான். இருவருக்கிடையே நெருக்கம் கூடியது .நந்தினி சொன்னாள்; “நமக்கு பெண்பிறந்தால்  அவளை நீச்சல் பழகச்செய்து அவளை நீச்சல்  வீராங்கனை ஆக்கணும்.!“ அவன் கேட்டான் ,”மகன் பிறந்தால்…”

அவள் பதிலளித்தாள்; “ஏன்  ,  உங்களுக்கு மகள் பிடிக்காதா…?”.  அவன்  உடனே அணைத்தான்;  “நந்தினி வழியாக எந்தப் பிள்ளைப்  பிறந்தாலும் சந்தோஷமே!”

சுந்தர் கிணற்றில் மூன்று நாள் கிடை தண்ணியை.      குடித்ததால்.      தும்மலும்.  இருமலும் மாறி மாறி.  வந்தது.    மாமனார் வீடென்று அடக்கிப் பார்த்தான். முடியவில்லை.  தும்மலும் ,இருமலும் மாமனார் வீடறியுமோ? மாமியார் சொல்லி நந்தினி ஒரு டம்ளர் கோழிக்குழம்பில் நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைத்தாள்.  தலையிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணிலிருந்தும் நீர்வழிந்தது.  சாப்பிட்டவுடன் சேரில் இருந்தபடியே தொலைக்காட்சி.  பார்த்தவாறே தூங்கிவிட்டான்.  மதியம்  சாப்பாடு ஆட்டுக்கறியுடன்.      மிளகுரசம் குடிக்க வைத்தார்கள். கண்ணில் நீர் பொங்க நெற்றியில்  முத்துக்கள்  வழிய  பருகினான்  .தும்மல் நின்று இருமல் தொடர்ந்தது.  மருமகனுக்கு நெஞ்சில் சளி கட்டிவிட்டது என்று மாலையில்  சுக்கு மிளகு பனங்கருப்பட்டி போட்டு.  பச்சரிசிமாவில் பால்கொழுக்கட்டை மாமியார் செய்து கொடுத்தார்.    மறுநாள் மாமியார் பருத்திப்  பால்  செய்து கொடுத்தார் மாமியாரின் கவனிப்பில்  .சளி இருந்தஇடம் தெரியாமல் போனது.                                                 மூன்றாம் நாள் ஊர் திரும்பினார்கள்.

     இந்த பயணம் நீச்சலின் மீது தீராஆவலை ஏற்படுத்தியது .சோம்பேறித் தனமும் விடுப்பு கிடைக்காமையும் சுந்தரின் நீச்சல்ஆசை கைகூடவில்லை. அதனால் பதினைந்து வருஷம் கழித்து இப்போது முதல்கட்டமாய் மகனை நீச்சலுக்கு அனுப்புவதற்கு விசாரித்து வந்தான்

   .“இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்துக்குப் பின்னால் நிறையபசங்கள்  நீச்சல் கத்துக்க வர்றாங்க  சார். எல்நினோ  தாக்கத்தாலே  எப்போ மழை வரும் கொட்டித் தீர்த்து வெள்ளம் பெருக்கெடுக்கும்ன்னு கணிக்க  முடியலைன்னு  இப்போ  உள்ள  இளந்தாரிகளெல்லாம்  நீச்சல்  கத்துக்க  வர்றாங்க  சார் ! இப்போ  கொரோனா தளர்வில்  கூட்டமில்லை; உங்க பையனை அனுப்பி வைங்க ஒருவாரத்தில் சூப்பரா கத்துத்  தர்றேன்  “ என்று பயிற்சியாளர் உற்சாகம் பொங்கக் கூறினார். அடுத்தகட்டமாய் கோடை விடுமுறையில்  நந்தினியின்  துணையோடு  மகள் முழுநிலவை  நீச்சல்பயில  அனுப்பி நீச்சல்  வீராங்கனையாக்கத் திட்டம்.!

நந்தினி    ,சுந்தரை உலுக்கினாள். “என்னங்க ஒரே சிந்தனையில் முங்கிப் போயிருக்கீங்க.  நான்கூட சமையலை முடிச்சுட்டு வந்திட்டேன்.  உக்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இருக்கீங்க “ என்றாள் .சுந்தர் கனவிலிருந்து விழித்தது  போல் ,பையன் கௌதம் நீச்சலுக்கு பணம்கட்டப் போனவன் வந்துட்டானா என்று கேட்டான்.  வரவில்லை என்றதும்.  கூடப்போன பக்கத்து வீட்டுப் பையன்கள்.  வந்துவிட்டார்களா என்று விசாரித்துவரச் சொன்னான். அவர்களும் வரவில்லை  என்று  தெரியவந்ததும்  சுந்தருக்கு  பதற்றம்  பற்றிக்  கொண்டது .போயி ரெண்டு  மணி  நேரமாச்சு .இன்னும் வரலை.  கூடப்போன பக்கத்துவீட்டுப் பையன்களும் வீடு திரும்பலை.       என்னான்னு விசாரிச்சுட்டு வர்றேன் என்று உடைகளை மாற்றிக்கொண்டு மாடிப்படியில் இருந்து கீழ்தளத்துக்கு  தாவினான்.

    அவனுங்க வந்துருவானுங்க  ,நீங்க  ஏன்  பதறிறீங்க  என்றாள். அவள்  பேசிக்கொண்டிருக்கும் போதே வராந்தாவுக்குப் போய் வண்டியை கிளப்ப முயன்றான். வண்டிச்சாவி எடுத்து வராததை உணர்ந்து ,கீழே இருந்தவாறே  சத்தமிட்டு வண்டிச்சாவியைப் போடச் சொன்னான். அவள் சாவியைக்  கொண்டு கீழே வந்தாள்    “பதறாமல் போங்க .பையன்க எதுக்க  வந்தாலும் வந்துருவான்க”

 

சுந்தருக்கு பதற்றம் குறையவில்லை .ஏற்கனவே நாம் தண்ணியில் ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம்.  விளையாட்டுத்தனமாக.  மகனை அதில் சிக்க  வைத்து விட்டோமோ?…  என்று பதறி வண்டியை.    எடுத்துக் கொண்டு பறந்தான். வீட்டிலிருந்து கிளம்பியதும் தெரியவில்லை. எதிரில் வந்த வாகனங்களும் கண்ணில் பதியவில்லை.    போக்குவரத்து நெருக்கடிகளைத் தாண்டி பத்தாவது நிமிடத்தில் நீச்சல்  குளத்திற்கு வந்து சேர்ந்தான்

 .நீச்சல்குளத்தைச் சுற்றி பணியாளர்களும் பார்வையாளர்களும் கூட்டமாக இருந்தனர். பதற்றம் கூடியது. மகனுக்கும் கூடப்போனப் பையன்களுக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்திருக்க க்கூடாது.    குலசாமியை வேண்டிக் கொண்டான்.

நீச்சல்  பயிற்சியாளர் கண்ணில் பட்டார்.  ,  வணங்கிவிட்டு  ,  என்னசார் கூட்டம் என்று பதற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டான்.  “ ஒன்னுமில்லை வாராந்திர சுத்தம் பண்றாங்க. படிந்த பாசி,  குப்பைக் கூளங்களை நீக்கி புதுத்  தண்ணீர் நிரப்புவோம்.  பொதுவெளியில் என்ன வேலை செய்தாலும் வேடிக்கை பார்க்கவும் ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே.”

“ சார்  ,கௌதம்னு.  ஒருபையன்.  நீச்சல்  பழக பணம்கட்ட.  வந்தானா?”

 “ ஆமாசார். கெட்டிக்காரன்.  இன்னிக்கே  பழகணூம்னு  ஒத்தக்காலுல நின்னானுங்க. அவனை  மூணு ரவுண்டு  நீந்தச் சொல்லிக் கொடுத்தேன்.  நாலாவது ரவுண்டு தானா மீன்குஞ்சு மாதிரி நீந்தினான். ஐந்தாவது ரவுண்டு டைவு அடிக்கட்டுமான்னு.  கேட்கிறான். ஒவ்வொரு  ஸ்டெப்பா  போகணும்னு  அனுப்பி  வச்சேன்! ஒருமணிநேரம் பயிற்சி முடிச்சிட்டு அவனும் அவன்கூட வந்த பையன்களும் போயி ஒருமணி ஆச்சே .அவனுக போனப்புறம் தான் சுத்தம்பண்ணும்  வேலையை ஆரம்பிச்சோம்.    என்றார்.

 

Series Navigationமீளுதல்…நெஞ்சில் உரமுமின்றி
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    திண்ணை இணைய இதழ் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி. மீன்குஞ்சு கதை பொருத்தமான. படத்துடன் நன்றாக வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *