சூடேறும் பூகோளம்

This entry is part 7 of 23 in the series 6 ஜூன் 2021
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 
 
 
********************
 
 
 
 
இந்த பூமி நமது
இந்த வான்வெளி நமது
இந்த நீர்வளம் நமது
முப்பெரும் சூழ்வளத்தை
துப்புரவாய் வைக்கும்,
ஒப்பற்ற பொறுப்பு நமது.

++++++++++++++

 

சூடு காலம் வருகுது ! புவிக்குக்
கேடு காலம் வருகுது !
நாடு, நகரம், வீடு, மக்கள்
நாச மாக்கப் போகுது !
புயல் எழுப்ப வருகுது !
பூத மழை பொழியப் போகுது !
நீரை, நிலத்தை, குளத்தை,
பயிரை, உயிரை, வயிறை
முடக்கிப் போட வருகுது !
கடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி
கரைநகர் மூழ்கப் போகுது !
மெல்ல மெல்ல ஏறி வெப்பம்,
மேலே மீறிப் போகுது !
சூட்டு யுகப் பிரளயம்,
வீட்டை நோக்கித் தாக்குது !
உன்னை, என்னை,
உலகின்
கண்ணைப் பிதுக்கப் போகுது !

ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகைச் சாம்பல் !
ஓஸோன் குடையில்
ஓட்டை விழுந்து,
உருக்குலையும் வாயுக் கோளம் !
துருவப் பனிமலைகள்
உருகி
உப்பு நீர்க் கடல் உயரும்!
பருவக் கால நிலை
தாளம் தடுமாறிப்
வேளை தவறி நாளை இன்றாகும்,
கோடை நீடிக்கும்,
குளிர் காலப் பனிமலைகள்
வளராமல் போகும்
துருவ முனைகளில் !
நிலப்பகுதி நீர்மய மாகும் !
நீர்ப்பகுதி
நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாச மடைய,
புனித வாழ்வு வாசமிழக்க
நுழைந்து விடும்,

**************

பூகோளம் மின்வலை யுகத்தில்

பொரி உருண்டை ஆனது !

ஓகோ வென்றிருந்த

உலகமின்று

உருவம் மாறிப் போனது !

பூகோள மஸ்லீன் போர்வை

பூச்சரித்துக் கந்தை ஆனது !

மூச்சடைத்து விழி பிதுக்க

வெப்ப யுகப்போர் தொடங்கி விட்டது !

கோர நோய் பற்றும் பூமியைக்

குணப்படுத்த தக்க மருத்துவம் தேவை !

காலநிலை மாறுத லுக்குக்

காரணங்கள் வேறு வேறு !

கரங் கோத்துக் காப்பாற்ற

வருவீ ரெனக் கூறு கூறு !

++++++++++++

ஓரிடத்தில் எரிமலை கக்கி

உலகெலாம் பரவும்

கரும்புகைச் சாம்பல் !

துருவப் பனிமலைகள்

உருகி

உப்பு நீர்க் கடல் உயரும்!

பருவக் கால நிலை

தாளம் மாறி

வேளை தவறிக் காலம் மாறும்,

கோடை காலம் நீடிக்கும்,

அல்லது

குளிர்காலம் குறுகும்; பனிமலைகள்

வளராமல்

சிறுத்துப் போகும்

துருவ முனைகளில் !

நிலப்பகுதி நீர்மய மாகும் !

நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !

உணவுப் பயிர்கள் சேத மாகும் !

மனித நாகரீகம் நாசமடைந்து

புனித வாழ்வு வாசமிழந்து

வெறிபிடித் தாடும்

வெப்ப யுகப் பிரளயம் !

+++++++++++++

தரணி எங்கும் தொழிற் துறைகள்

சூழ்வெளியில்

கரும் புகை ஊட்டுமடா!

கயவர் கூட்டம்

காட்டு மரங்களில் தீ மூட்டுமடா!

போரிலும் புகைதான்!

ஈராக் எண்ணைக் கேணிகளும்

எழுப்புதடா தீப்புகையே !

தவறு செய்யும் மனிதர் கூட்டம்

தப்பிக் கொண்டு போகும் !

துப்புரவு செய்தி டாமல்

தொழிற் சாலைகளின்

கரிவாயு மூட்டம்

விரிவானில் நாள் தவறாது

அடுக்க டுக்காய்ச் சேருமடா!

நிலவளம், நீர்வளம், கடல்வளம்,

மனித நலம், உயிர் நலம்,

பயிர்வளம்

புனிதம் யாவும்

இனிவரும் யுகத்தில்

சிதைந்து போகுதடா!

வெப்ப யுகப் பிரளயம்,

வீதி முன் வந்து நிற்குதடா!

++++++

எங்கெங்கு காணினும் வானில்

இருட்புகை மூட்டமடா!

ஈராக் ஆயில் கேணிகள்

தீப்புகை எழுப்புதடா!

தவறு செய்யும் மனிதர் கூட்டம்

தப்பிடப் பார்க்குமடா!

துப்புரவு செய்திடாமல்

தொழிற்சாலைக்

புகை போக்கி மூலம்

கரிவாயு மூட்டம்

விரிவான் நோக்கிப் போகுதடா!

நிலவளம், நீர்வளம், கடல் வளம்,

மனித நலம், உயிரினப் பயிர்வளம்

புனிதம் சிதையப் போகுதடா!

வெப்ப யுகப் பிரளயம்,

வீட்டு முன்னே நிற்குதடா!
 

++++++++++++

வெப்ப யுகப் பிரளயம்,

குப்பெனவே

உப்புக் கடல் உயர்ந்தது!

நரக வாசல் திறந்து

மாதிரிச் சூறாவளி,

பூத வடிவில், பேய் மழையில்

சூதகமாய் அரங்கேற்றும்,

வேதனை நாடகம்!

நியூ ஆர்லீன்ஸ்

எழில் நகரம்

ஒருநாள் அடித்த சூறாவளி மழையில்

பெருநரக மானது!

மந்தையாய் மூன்று லட்சம்

மாந்தர்கள்

வீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு

நாடு கடத்தப் பட்டார்!

அந்தோ உலகில் நேர்ந்த முதல்

விந்தை யிது!

++++++++++

நிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது!

மின்சார வண்டி உயிர் பெற்றது!

நீராவி எஞ்சின்

ஆயுள் ஓய்வெடுத்து

டீசல்

வாகனம் இழுத்தது!

குறைவாக்கப் பட்டாலும்,

தெரியாமல் தினமும்

தொழிற்கூடம் வெளியாக்கும்

கழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்!

எரிப்பில் விளையும்

கரி வாயுக்களும்,

கந்தக வாயுக்களும்,

சூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்!

புப்புசங்கள் நுகர்ந்து

அப்பாவி மாந்தர் தீரா

நோயில் வீழ்வார்,

ஆயுளும் குன்றி விடும்!

++++++++++++++

பட்டப் பகலென்றும்,

நட்ட நிசி யென்றும்,

பொட்டுப் பரிதிக்கு

கட்டுவிதி யில்லை! ஆயினும்

கால விதிக்கடி பணியும்!

வெட்ட வெளியில்

வெப்பத்தைக் கக்கிச்

சுட்டு விடுவதும் அதுவே! கனல்

பட்டெனத் தணிந்து,

பார்மீது

பனிக் குன்றைப்

படைப்பதும் அதுவே!

++++++++++

காலமும், சூழ்வளியும்,

கடல் மட்ட ஏற்றத் தணிவும்

நீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,

பயிர்கள் ஏதோ

பசுமை மினுப்பில் தோன்றும்!

யந்திர வாய்கள்

புகைபிடித்து ஊதியதும்,

பச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து

பாலை மணலாகும்!

காலநிலைச் சீர்பாட்டைப்

பாழாக்கும் கேடுகள் பூமியைத்

தாலாட்டு கின்றன!

பால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்

கால்தடம் பதிக்கும்

பசும்புல் தளமாகி

ஆடு, மாடுகள் பசிக்கு மேயும்

காடுகளாய்

அங்கி மாற்றிக் கொண்டன!

புனித மிழந்து புதையுது,

மனித நாகரீகம்,

வெப்ப யுகப் பிரளயம்,

உப்பி வந்து!

+++++++++++

குடுகுடுப்புக் காரனாய்

காலக் குயவன்,

முடுக்கி விட்ட பம்பரக் கோளம்!

உடுக்க டிக்கும்

நடுக்கமுறும் நமது கோளம்!

பல்லாயிரம் ஆண்டுக் கொருமுறை

பரிதியைச் சுற்றி வரும்

வட்ட வீதி நீளும்!

முட்டை வீதி யாகும்!

கோளத்தின் சுழலச்சு சரிந்து

கோணம் மாறி

மீளும் மறுபடியும்!

பனிக் களஞ்சியம்

துருவத்தின் ஓரத்தில் சேர்ந்து,

பருவக் காலத்தில்

உருகி ஓடும்!

காலக் குயவன்

ஆடும்

அரங்கத்தை மாற்றி,

கரகம் ஆட வைப்பான்!

சூட்டுக் கோளம் மீண்டும்

மாறும்,

பனிக்கோளாய்!

+++++++++++++++

பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு

மினுமினுக்கும்,

இன்றைய மரங்களின் இலைகள்!

ஆயினும்

அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,

கோலம் மாறும் போது,

காலமும், கடல் மட்டமும்

மனிதக்

கைப்பிடியில் சிக்கி?

புனித நிலத்தைப்

புண்படுத்திப்

பாலை மணலாய்ப் பாழாக்காதே

மனிதா!

+++++++++++++++++++

தாரணி எங்கும்

நீர், நிலம், நெருப்பு,

வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்

ஆயுதங்களாய் மாறிக்

கோர வடிவத்தில்

பேரழிவு செய்யும்!

எங்கெங்கு காணினும்

பொங்கும் புகை மூட்டம்!

வடதுருவப் பனிமலைகள் உருகிக்,

கடல் மட்டம் ஏறும்!

பருவக் காலநிலை மாறிப்

பெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,

நிலப்பகுதி நீர்மய மாகி மக்கள்

புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!

மனித நலம், உயிரினம், பயிர்வளப்

புனிதம் சிதைக்கும்

சூட்டு யுகப் பிரளயம்,

வீட்டு முன் வந்து நிற்குதடா!

+++++++++++

விரைவாய்க் கடல்மட்ட உயரம்

ஏறும் போக்கைத்

தெரிவிக்கும் பூகோளத் துணைக்கோள்கள் !

பத்தாயிரம் அடிக்குக்

கீழே உள்ள

சுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் !

பனிக்குன்றும்,

பனிச்சிகரமும் ஒரு காலத்தில்

பனி சுமந்த

பழங்கதை சொல்லா !

நில வரட்சி, நீர் வரட்சி நெடுங்காலம்

நீடித்துப்

பயிர்வளர்ச்சி சிறுத்து விடும் !

வேகமாகத்

தண்ணீர்ப் பூமி

தாகமாய்ப் பிச்சை எடுக்கும்

கண்ணீரோடு !

++++++++++++++

சூட்டு யுகப் பிரளயம் !

காட்டுத் தீ போல் பரவுது !

ராக்கெட் மீது வருகுது !

வானைத் தொடும் பனிமலைகள்

கூனிக் குறுகிப் போயின !

யுக யுகமாய் வழக்கமான

இயற்கை அன்னையின்

சூழ்வெளிச் சுற்றியக்கம் யாவும்

சுதி மாறிப் போயின !

பழைய பனிச்சிகரம் தேய்ந்து

நழுவி அவ்விடத்தில்

புதுப் பனிமலை வளர வில்லை !

பருவக் காலக் கோலங்கள்

வயது வரும் முன்பே

நடமாடி

தடம் மாறிப் போயின !

மனித நாகரீகம் மங்கிப்போய்

புனித வாழ்வைப் புழுதி யாக்க

துரித மாக வருகுது !

பூத வடிவில்

பாதகம் செய்யப் போகுது

வெப்ப யுகப் பிரளயம் !

++++++++++++++

தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்

காரணி யில்லை

சூரியக் கதிர்வீச்சு மட்டும் !

கடந்த இருபது ஆண்டுகளாய்

வெப்ப யுகப் பிரளயம்

காசினியில் அரங்கேற

விஞ்ஞானம் கூறும் விந்தை
கண்ணாடி மாளிகை
விளைவு !
பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்க்
கரும் பாறையாக

ஜீவ நதிகளில்
நீரோட்டம் தளரும் !
உயிர்வளப்
பயிரினச் செழிப்புகள் சிதைந்து
புலம்பெயரும் பறவை இனம்
தளமாறிப் போகும் !
வரலாறு
தடமாறிப் போகும் !

++++++++++++

மனிதர் படைக்கும்
நச்சு வாயுக்கள் சேர்ந்து
ஓஸோன் துளைகள்
உண்டாகும் !
மென்மையில் திண்மை யாகும்
வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
வண்ண நீர்க்கோளம் !
தூயச் சூழ்வெளியில்
பூமியின்
ஆயுள் நீடிக்க வேண்டும் !
ஓஸோன்
ஓட்டைகள் ஊடே
புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
சூட்டு யுகப் புரட்சி
நாடு நகரங்களில்
நர்த்தனம் ஆடும் !
நீரின்றி,
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலம் தவிப்பர்
நில மாந்தர் !

+++++++++++++++

முடிவுரை

நோய் பீடித்துள்ளது பூகோளத்தை !
குணமாக்க மருத்துவம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணங்கள் பல்வேறு !
கரங் கோத்துக் காப்பாற்ற
வர வேண்டும் பல்லறிஞர் !
சிந்தனை யாளர் பங்கெடுப்பும்,
எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும்,
செல்வந்தர் நிதி அளிப்பும்,
புவிமாந்தர் கூட்டு ழைப்பும்
அவசியம் தேவை !

ஜெஃப்ரி குளூகர்,

[Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

Series Navigationபுதராகிய பதர்தனிமை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *