நடந்தாய் வாழி, காவேரி – 2

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 11 in the series 4 ஜூலை 2021

 

 


அழகியசிங்கர்

 

          ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும். 

          அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும்.

          ‘நடந்தாய் வாழி காவேரியைப் படிக்கும்போது  அதில் ஒரு பகுதி நான் வசித்த பகுதி.  அதை அவர்கள் எழுதிய விதத்தைப் படித்து ரசிக்க முடிந்தது.

          இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி பங்களூரிலிருந்து ஆரம்பிக்கிறது. 

          இப்பயண நூலால் பல புராணக் கதைகள் தெரிய வருகின்றன. சரித்திர கதைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது.  அங்கு வாழ்ந்து வரும் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.  

          இதைவிடப் படிப்பதற்கு எளிமையாகவும் ஒரு பயண நூலைப்  படிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.

          நான் இன்னும் தொடர விரும்புகிறேன்.

 

          திருமுக்கூடலில் உள்ள அகஸ்தியேச்வரா ஆலயம் ஒரு பெரிய அமைப்பு.  அந்த ஆலயத்தில் அகஸ்தியேச்வரா மணலால் அமைந்த லிங்கமாகத் தோற்றமளிக்கிறார்.

இன்னொரு புராணக் கதை.  ஒரு சமயம் அகஸ்தியர் இங்கு லிங்கம் ஒன்றைப் பூஜிக்க விரும்பி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நர்மதையிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொணரும்படி ஹனுமானுக்கு உத்தரவிட்டாராம்.  ஹனுமான் லிங்கத்தைக் கொண்டு வராததால் அகஸ்தியரே மணலைக் கொண்டு ஒரு லிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். ஹனுமான் வந்தவுடன் மணல் வடிவத்தைப் பார்த்து கோபம் கொண்டு அதைத் தகர்த்து விட முயன்றார்.  ஹனுமானின் முயற்சிகள் வெற்றி  பெறாவிட்டாலும் அவருடைய தாக்குதலின் விளைவாகத்தான் அந்த லிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டது என்பது ஐதிகம்.

சோமநாதபுரத்தில் பிரஸன்ன சென்னகேசவ ஆலயம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஹோய்சால சிற்பச் செல்வத்தின் சிறந்த சின்னங்களில் ஒன்றான இந்த அமைப்பு ஹளேபீடு ஆலயத்தைப் போல் அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் மொத்தத்தில் பார்ப்பதற்கு அதைவிட அதிக அழகாகத் தோற்றமளிக்கிறது. மூன்று பகுதிகள் கொண்ட இந்தக் கோவில் ஹோய்சால மன்னன் மூன்றாவது நரசிம்மன் காலத்தில் கி.பி.1269இல் கட்டப்பட்டது.  அந்த மன்னனின் ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரி  சோமநாதர் என்பவர் அந்த ஆலயத்தைக் கட்டுவதில் முயற்சி மேற்கொண்டு அங்கு ஒரு கிராமத்தையும் அமைத்தார். அவருடைய பெயரே அந்த கிராமத்திற்கும் சோமநாதபுரம் என்று இடப்பட்டது.

          வரலாற்று வழியில் திப்பு சுல்தானும், ஐதீக ரீதியில் ஸ்ரீரங்க நாதரும் தவிரஸ்ரீரங்கப்பட்டணத்தின் மற்றுமொரு சிறப்பு.  அங்கு அடிக்கடி தொத்து நோய் ஏற்படும் என்பது.

          ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்குப் போகும் வழியில் திப்புவின் பிரசித்தி பெற்ற நிலவறைச் சிறைச் சாலையைப் பார்த்தார்கள்.

          கோவில்களில் பல்வேறு கல்வெட்டுக்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  கி.பி.1210 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஆகும். 

          ஸ்ரீரங்கப்பட்டிணம் 1120 ஆம் ஆண்டில் விஷ்ணுவர்த்தனின் சகோதரன் உதயாதித்யனால் நிறுவப்பட்டதென்பதும் வரலாறு மூலம் அறியப்படும்.

          ரங்கநாதர் ஆலயம் தவிர கங்காதரேஸ்வரர் ஆலயம், நரசிம்மர் ஆலயம் இரண்டும் திராவிட பாணியில் அமைந்தவை.  

          பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் படையினர் ஏழு ஆண்டுக் காலத்திற்குள் இருமுறை முற்றுகையிட்டார்கள்.  திப்பு சுல்தான் தீவிரமாக எதிர்த்துப் போராடினார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.  

          1799இல் மாலவல்லி  என்னும் இடத்தில் நடந்த போரில் திப்புவின் படைகளைத் தோற்கடித்துவிட்டு பிரிட்டிஷ் படைகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தை நெருங்கின.  

          கும்பாஸ் என்ற சமாதி திப்பு தன்னுடைய தாய், தந்தை இருவருக்கும் நிறுவியது.  சதுர வடிவில் உச்சியில் ஒரு மூட்டமும், மூலைகளில் விமானப் பலகணிகளும் கொண்ட அழகான கட்டடம் கும்பாஸ்.

          கிருஷ்ணராஜ சாகரம் நோக்கிப் புறப்பட்டார்கள்.  கண்ணம்பாடி அணையையும் பிருந்தாவனத் தோட்டத்தையும் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

          சித்தாபூரில் வர்ணா என்னும் ஒருவகைப் பாம்புகள் மரக்கிளைகளில் ஏராளமாகச் சுற்றிக்கொண்டிருக்குமாம். புலி  நடமாட்டம் அதிகமாம்.  இரவு படுக்கப் போகுமுன், பரண் மீது படுப்பார்கள்.  வீடுகளைச் சுற்றி முள் கம்பிகளைப் போட்டு புலி  வராமல் வேலி  கட்டியிருப்பார்கள்.

          தலைக்காவேரி காவேரி பிறக்குமிடம் ஒரு சிறிய சுனை.   சுமார் நான்கடுக்கு நான்கடி சதுரமாக ஒரு சின்ன தொட்டிபோல் கட்டியிருக்கிறார்கள்.  அங்கே இருக்கும் பெரிய பட்டர் காவேரியைப் பற்றிக் கதை சொல்கிறார்.

          சஹ்யாத்திரி மலை என்று இந்தப்பிராந்தியத்தைக் கூறுகிற வழக்கம்.  மேற்குத் தொடர்ச்சி மலைக்கே இப்படி ஒரு பெயர் என்று நினைக்கிறேன். பிரும்மகிரி என்றும் இதைச் சொல்வதுண்டு.  கவேரா என்ற மகரிஷி இங்குத் தவம் செய்தார்.  பிரும்ம அவருக்கு லோபா முத்திரை என்ற பெண்ணை அருளினார். எழில் மிக்க  அந்தப் பெண்ணை அகத்தியருக்கு மணம் செய்து கொடுத்தார் கவேர முனிவர். வோபாமுத்திரை விஷ்ணு மாயையின் அம்சம்.  அவளே தன்னை இரு உருவங்களாக ஆக்கிக்கொண்டாள் என்றும் கூறுவார்கள்.  ஒரு அம்சம் லோபமுத்திரை என்ற பெண்.  இன்னொரு அம்சம் காவேரி என்ற புனித நீராக அகத்தியரின் கமண்டலத்திலிருந்ததுஒரு நாள் ஒரு காகம் கமண்டலத்தின் மீது அமர்ந்து அதைக் கவிழ்த்துவிடவே நீர் கீழே பெருகி ஓடத் தொடங்கிற்று.  திருமாலின் உருவமான நெல்லி  மரத்தின் அடியிலிருந்து காவேரி முன்னேறிற்று.  பிரும்மகிரியிலிருந்த ஒரு சிறு ஓடையாக ஓடும் காவேரியோடு, பாக மண்டலத்தில் கனகா என்னும் நதி கலக்கிறது.  கங்கையோடு முனையும் மறைவான சரஸ்வதி என்ற நதியும் சேர்வதாகச் சொல்கிறார்கள்.                                  பாகமண்டலம் கடைத்தெருவில் வண்டி நுழைந்தது.  பாகமண்டலம ஒரே நிழல்காடு, நெடிய மரங்கள், சோலைகள், அதைப் பார்க்கும்போது இன்னொரு இடம் ஞாபகம் வந்தது.  அதுதான் சாயாவனம்  என்ற சாயக்காடு.

          பாகமண்டலத்தில்தான் காவேரியின் முதல் உபநதி கனகா வந்து கலந்து கொள்கிறது.கனகா காவேரியுடன் கூடம் இடத்திற்கு அருகில் பாகண்டேசுவரர் ஆலயம் இருக்கின்றது.  

          இப்போது குடகு நாடை விவரிக்கிறார்கள். குடகு நாட்டின் அழகை அந்தப் பாதையில் போகும்போதுதான் தெரிகிறது.  குளிர்ந்த காற்று, நிசப்தம், பட்சி ஓசைகள், காற்றில் கலக்கும் அலைத் தாவரங்கள்மணக்கலவைகள், ஒவ்வொரு திருப்பத்திலும் மாறி மாறி வரும் புதிய புதிய மலை, பள்ளத்தாக்குக் காட்சிகள், ஆங்காங்கு தென்படும் குடகியரின் தனிப்பட்ட உடுத்தும் முறை – இவைதான் குடகு.

          சாலையில் ஒரு இடத்தில் திரும்பியதும், திடீரென்று காவேரி சோலையோரமாகக் காட்சி கொடுத்தாள். நாபோலுவைத் தாண்டிக் குஷால் நகருக்குச் செல்லும் வழியில் பத்திரி என்ற கிராமத்திற்கருகே காவேரி திரும்பவும் குறுக்கிட்டாள். 

வீரராஜபேட்டையில் அவர்கள் குடகியர்களைப் பார்க்கிறார்கள். 

          ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மைல் உள்ள ஒரு கிராமத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டிருந்தது.  ஜங்கம சந்நியாசிகளால் நிறுவப்பட்டது.  ஜங்கமகட்டே என்ற பெயர் இந்த அணைக்கு. அணைக் கட்டியிருப்பதால் இந்தக் கிராமத்துக்கு கட்டேபுர என்று பெயர் வைத்திருக்கிறார். ஊர் வாசிகள் இரவு நேரத்தில் இந்த அணைக்கட்டு பகுதியை பொதுக் கழிவிடமாகப் பயன்படுத்துவார்கள்.

          கிருஷ்ணராஜ சாகர் மூலம் மைசூர் வருகிறார்கள். சிவசமுத்திரத்திற்கு அதற்கு முன் போகிறார்கள்.  அதை விட்டு அவர்களால் வர முடியவில்லை.

          சாத்தனூர் சிறிய பஞ்சாயத்து சிறு நகரம். அங்கிருந்து அர்க்காவதி சங்கமத்திற்குச் சென்றார்கள். லம்பாடி கிராமத்தைப் பார்க்கிறார்கள்.  ஆர்க்காவதி ஆறு காவேரியோடு சங்கமம் ஆகிறதைப் பார்க்கிறார்கள்.   ஹன்னடு சக்ர என்ற இடத்தைப் பார்க்கிறார்கள்.  அங்கிருந்து மேகதாட்டு என்ற இடத்திற்கு வருகிறார்கள்.  

          போகும் வழியில் ஒரு கிராமத்திற்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறான்.  வறுமை நிறைந்த கிராமம்.  காபூஙூகள் போன்ற நாடோடிகளும் கன்னடம் பேசும் நாயக்கர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். லம்பாடிகள் ஏன் இங்கு வந்தார்கள்.  ஏன் இங்கயே தங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

          பெண்ணாகரத்தில் அன்று வாரச் சந்தை.  அங்கிருந்து கிளம்பி வர மனதே இல்லை அவர்களுக்கு. 

                                                                                                (இன்னும் வரும்)

 

 

Series Navigationமூன்றாம் பாலினப் படங்கள் – மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் – திரைப்பட விமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *