பிச்ச

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 11 in the series 25 ஜூலை 2021

 

           

வேல்விழிமோகன்

                

 

      அந்த புல்லாங்குழலை எடுத்து வைத்துவிட்டு படிக்கட்டு பக்கம் போன தியாகு திடீரென்று சிரித்துக்கொண்டான்.. பிறகு பக்கத்து அறையை திரும்பி பார்த்தான்.. கதவு மூடியிருந்தது.. “அப்பாடா..” என்று சொல்லிக்கொண்டான்.. தெருவில் ஒரு பிச்சைக்காரன் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.. “போ.. போ..” என்று சொல்லுவான்.. இன்றைக்கும் சொன்னான்..

      “போ.. போ..”

      “நான் ஏதும் கேக்கலையே..”

      “அப்படியா.. அப்ப எதுக்கு பாக்கற..?”

      “நீதானே பாட்டு பாட்றது.. அழகான.. புள்ளி மானே…” இழுத்தான்..”எப்படி..?”

      இவனுக்கு கொஞ்சம் சந்தோழமாக இருந்தது.. விக்கி இப்படி சொன்னதில்லை.. ஆனால் திரும்பி படுத்துக்கொள்வான்.. அல்லது காதுகளில் ஹெட்போனை செருகிக்கொள்வான்.. பக்கத்து அறையில் தாம்சன் மட்டும் இவனை பாக்கும்போது “உங்களுக்கு நல்ல தெறம.. கச்சேரில எங்கேயாவது வாய்ப்பு கிடைக்குமான்னு பாருங்க..”

      “கச்சேரியெல்லாம் கிடையாது..”

      “பின்ன..?”

      “சினிமா.. டிவி.. எங்கூர்ல மட்டும் ஸ்கூலுக்கு கச்சேரி போடுவேன்..”

      “ஏன்..?”

      “நான் படிச்ச ஸ்கூலு.. அதனாலதான்..”

      “சினிமா பெரிய கனவாச்சே.. ஏதாவது முயற்சி உண்டா..?”

      “சொல்லியிருக்கேன். சென்னைல நண்பர்கள் இருக்காங்க.. அப்பறம் நீலாவுக்கு.”

      “யாரு நீலா..?”

      “என்னோட படிச்ச பொண்ணு. கல்யாணம் ஆகி சென்னைல இருக்குது.. அவ வீட்டுக்காரன் டிவி சீரியல்ல வர்றான்.. அவன் மூல்யமா டிரை பண்ணரேன்னு சொல்லியிருக்கா..”

      “நடந்துடும்..” என்பான் தேவா.. பக்கத்து அறையில் அந்த தேவாவோடு இன்னொரு குரங்கு இருக்கிறது.. பசுபதி.. அந்த குரங்கும் அதைத்தான் சொல்லும்.. “நடந்துடும்..”

      “இதப்பாரு.. நீ கண்டுக்காத.. தொடர்ந்து ஊதிட்டேயிரு.. டிவிக்கு அப்ளை பண்ணு.. லோக்கல்ல கச்சேரி பண்ணு.. நல்லாயிருந்தா உம்பேரு பரவும்.. கச்சேரிக்கு கூப்புடுவாங்க.. அப்பறம் டிவிக்கு ஜம்ப் பண்ணிக்கலாம்.. அப்படியே சினிமாவுக்கும்.. இருக்கற வேலைய உட்டுடாதே.. நல்ல நிலைக்கு வரும்போது பாத்துக்கலாம்..” என்பான் தாம்சன்..

அடுத்த தாம்சன் இந்த பிச்சைக்காரன்தான்.. “உம் பேரு என்னா..?” என்றான் அவனிடம்.. சுவருக்கு அப்பால் கொஞ்சம் நெருங்கி வந்து..”பிச்ச..” என்றான்..

“பிச்சையா..?”

“இல்லீங்க.. பிச்ச.. பச்சமுத்து பேரு.. பிச்சன்னு ஆக்கிட்டாங்க..ஆனா மகேஸ்வரி என்னைய பச்சன்னுதான் கூப்புடும்”

“மகேஸ்வரி யாரு..?”

“எம் பொண்டாட்டி..”

“தினமும் இந்தப்பக்கம் போற மாதிரி தெரியுதே..?”

“எல்லாம் தொழில் ரகசியம்..”

“அப்படியா..?”

“ஆமாங்க.. முன்னாடி பலகார கடைல தினமும் அஞ்சு ரூபாயும் கொஞ்சம் மிக்சரும் தருவாங்க.. நான் ராசிக்காரனாம்.. அப்பறம் விநாயகர் கோயிலு..”

“அங்கென்ன..?”

“பொங்கல் தருவாங்க.. இல்லன்னா உளுத்த வடையும் பழமும்..”

“தினமுமா..?”

“ஆமாங்க.. அந்த பஸ் ஓனரு பொம்பள வந்து கொடுத்துட்டு போகும்.. மகளுக்கு கொழந்த இல்லையாம்.. அஞ்சு வருசமா வருது.. பாக்காத கோயிலு இல்…

“இரு.. இரு.. நீ ஏதோ சொன்னியே பாட்டுன்னு..?” என்றதும் அவன் மௌனமாக இருந்தான்.. எங்கேயோ பார்த்தான்.. இவனை பார்த்து சிரித்தான்.. பிறகு கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்து ஓரமாக போட்டான்..

“என்னாய்யா..?”

“நானு உன்ன விட வயசானவன்.. நீ.. வா.. போன்னு பேசறியே..”

“ஓ.. ஆமா.. “ இவன் தாடையை சொறிந்துக்கொண்டு.. “சரிதான்.. மாத்திக்கறேன்.. ஏதோ பாட்டுன்னு சொன்னீங்களே..?”

“அதுவா தம்பி.. இந்தப்பக்கம் போகும்போது நின்னு கேப்பேன்.. பத்து நிமிசம் கூட நின்னுருக்கேன்.. மகேசு கூட நல்லா ஊதும்.. அதுக்கு நல்லா பாட்டு வருமுன்னு பஸ் ஸ்டேண்டு பக்கம் இருக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.. அங்க மட்டும்தான் அது கெடக்கும்..”

“மகேசு..?”

“அதாங்க மகேஸ்வரி.. எம் பொண்டாட்டி.. தில்லானா மோகனாம்பா நல்லா பாடுவா..”

அதை விடுங்க.. எம் பாட்ட பத்தி என்னவோ சொல்ல வந்தீங்களே..?”

      “அருமங்க.. முக்கியமா அந்த பன்னீர் புஷ்பங்களே.. நாடகம்.. டிராமான்னு போறீங்களா..?”

      “இல்லீங்க.. இப்பதான் ஆரம்பம்.. நீங்க போங்க.. எனக்கு வேலைக்கு நேரமாச்சு.. ?”

      “ஏதாவது துட்டு..?”

      “இருங்க வர்றேன்..” உள்ளே வந்து தூங்கிக்கொண்டிருந்த விக்கியை மிதித்தபடி காசுகளை பொறுக்கிக்கொண்டு திரும்ப வந்து ஐந்து ரூபாயை கொடுத்தபோது..”பல நாள் கேட்டிருக்கேன்.. போ..போ..ன்னுவீங்க..” என்றவன் “பத்தா கொடுக்க கூடாதா..என்னா வேல செய்யறீங்க..?”

      “எம் எல் எம்..”

                                    0000

      அந்த அலுவலகம் நகரத்தின் மைப்பகுதியில் ஒரு சந்தில் மூன்றடுக்கு மாடி தாண்டி மாடியில் ஒற்றை அறையில் இருந்தது.. ஒரு டேபிள்.. பத்து பதினைந்து இருக்கைகள்.. கதவோரம் தொங்கும் நீல நிற துணி.. வெளியே இடது மூலையில் மூங்கில் குச்சிகள்.. வெற்றுப்பைகள்.. மக்கிப்போன புத்தகங்கள் போட்டிருந்த இடத்தில் ஒரு பாத்ரூம்.. ரூமுக்கு வெளியே விரிப்பு போட்டு நுழைந்தவுடன் அந்த சேரை பார்த்தமாதிரி அமைத்திருந்தார்கள்..

      தியாகு அந்த சேரை பார்த்து வணக்கம் போட்டான்.. முன்னாடி ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தார்கள்.. ஒரு பெண் எதிரில் அந்த சேருக்கு பக்கத்தில் அந்த குள்ள மனிதரிடம் கீழே குனிந்து பேசிவிட்டு “வாங்க தியாகு சார்..” என்றாள்..

      உட்கார போன தியாகு உட்காராமல் “ஹி..ஹி..” என்றான்.. “இப்படி வாப்பா” என்பது போல அந்த குள்ள மனிதர் சைகை செய்ய பக்கத்தில் நகர்ந்தான்.. வழவழப்பான ஒரு அட்டையை திறந்து உள்ளிருந்து ஒரு கவரை எடுத்தார்.. முகர்ந்து பார்த்து “வாசனைய பாரு..” என்றார்..

      “மல்லிப்பூ வாசன..”

      “ரூமே  தூக்குதய்யா..” எடுத்து அந்த உறையை உடைக்க உள்ளிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சோப்பு வெளியே வந்தது.. அந்தப் பெண் கை தட்டியது.. மற்றவர்களும் எழுந்து தட்ட இவன்..”வாவ்..” என்றான்.. அப்படி சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும்.. கண்களை அகல விரித்து வியப்பு காட்டினான்.. எல்லாரையும் “பாருங்க.. பாருங்க..” என்பது போல ஆச்சரியமாக பார்த்தான்.. அவருக்கு அதெல்லாம் தேவை.. இதற்கெல்லாம் இந்த ஒன்றரை வருடத்தில் பாத்ரூமில் பயிற்சி எடுத்திருக்கிறான்.. அவனுடைய வியப்பு அவருக்கு திருப்தி அளித்தது.. மற்றவர்களை கவனித்தார்.. அவர்கள் தொடர்ந்து கை தட்டிக்கொண்டே இருந்தார்கள்..

      ஒருத்தன் சுற்றி சுற்றி வந்து மொபைலில் படம் பிடித்துக்கொண்டிருந்தான்.. குள்ள மனிதர் “நல்லா எடுப்பா.. இன்னிக்கு இதுதான் வைரல் வீடீயோ..” என்று அந்தப் பெண்ணை பார்க்க அவள்..”ஷூயர்” என்றபோது உதடுகள் நடிப்பது தெரிந்தது..

      “உக்காருங்க..” என்று அந்த சோப்பை முகர்ந்து கண்களில் மயக்கத்தை காட்டினார்.. “தா.. அந்த பையலுக்கு இத வச்சு குளிடான்னா ஒரு வாரத்துல செவப்பாயிடுவான்.. “ என்று சிரிக்க சம்பந்தப்பட்டவன் எழுந்து நின்று வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக்காட்ட அந்தப் பெண் “வெல்கம்.. வெல்கம்..” என்றது..

      குள்ள மனிதர் எழுந்தார்.. தனது டையை சரி செய்துக்கொண்டு குரலை கனைத்துக்கொண்டு திடீரென அந்த பெண்ணிடம் காதோரம் ஏதோ கிசுகிசுத்தார்.. அது சிரித்தபோது பற்களை வெளியே காட்டியது.. நாசுக்காக அந்த சுடிதாரின் மேல் விரிப்பை சரி செய்துக்கொள்ள தியாகு.. “ரூம் பூராவும் இந்த வாசனைதான் அடிக்குது சார்..” என்றான் பவ்யமாக..

      “இருங்க.. இருங்க. வந்திடறேன்..” சோப்பை உயர்த்தி பிடித்து..”நம்ம டாட் கம்பெனியோட இன்டர்நேஷ்னல் லெவல் புராடக்ட்..” என்றபோது மறுபடியும் கூட்டம் எழுந்து நின்று கைதட்டியது..

      “இருங்க.. இருங்க.. நம்ம கம்பெனிது ஏற்கனவே ரண்டு புராடக்ட் மார்க்கெட்டல விட்டிருக்கோம்.. அது நம்மளை டாப்ல உக்கார வச்சிருக்குது.. நமக்கெல்லாம் தெரியும்.. மத்த மார்க்கெட்டிங் கம்பெனியெல்லாம் மூக்கு மேல விரல வச்சுட்டு நம்மள வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. டாட் கம்பெனின்னா மார்க்கெட்டிங் உலகத்துல இந்தியாவுல அதுவும் தமிழ்நாட்ல நம்பர் ஏழாவது இடத்துல இருந்தது இன்னிக்கு மூணாவது எடத்துல இருக்குது.. நான் சொல்றேன் பாருங்க.. இன்னிக்கு இந்த சோப்ப..”நிறுத்தி.. “இது சாதாரண சோப்பு இல்லைங்க.. எல்லாமே இயற்கை.. வர்ற வாசனை இயற்கை.. அதனோட சேர்க்கை எல்லாமே இயற்கை.. நோ கெமிக்கல்.. உலகத்திலேயே கெமிக்கலே இல்லாம தயாரிக்கப்பட்ட முதல் சோப்பு இதுதான்..” கத்தினார்.. வீடியோ ஆகிறதா என கவனித்தார்.. ஒரு பக்கம் சாய்ந்து “இது என் கைக்கு வந்து அஞ்சு மணி நேரம்தான் ஆகுது.. இப்ப இதுக்கு நான் அடிமை..” என்று அந்த சோப்பை அந்த பெண்ணின் மூக்கருகே காட்ட அவள் கண்கள் சொருக இழுத்துப்பார்த்து..”வாவ்.. “ என்றாள்..

      “பாத்தீங்களா.. பொம்பளைங்களுக்கு புடுச்சா அது சக்சஸுன்னு அர்த்தம்..”

      தியாகு எழுந்து..”சார்.. இந்த சோப்போட விலை..?”

      “அவசரப்படாதீங்க தியாகு.. உங்களுக்கு எல்லாமே அவசரம்..” அந்தப் பெண்ணைப் பார்த்து சிரித்து ஏதொ சைகை செய்ய அது ரோபோ மாதிரி இவனைப்பார்த்து சிரிப்புடன் கண்களை உருட்டியது.. இவன் மற்றவர்களை திரும்பிப் பார்த்து “ஹி…ஹி.. “ என்றான் மறுபடியும்.. அவர்களும் அவனுக்கு ஆறுதல் சொல்லுவது போல உதட்டில் அவசரமாக ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டார்கள்..

      “பாருங்க இத முழுக்க முழுக்க டெஸ்ட் பண்ணித்தான் வெளிய விட்டிருக்காங்க.. டாட் கம்பெனியோட இன்சினியர்ஸ்.. சாரி.. டாக்டர்ஸ் இரவும் பகலுமா ஆராய்ச்சி செஞ்சி கண்டுபுடிச்சதுதான் இது.. ஒரு முறை இதை வாங்கினா நாப்பத்தியெட்டு முறை இதை பயன்படுத்தலாம்.. அதாவது ஏறக்குறைய இருபது நாளைக்கு மேல வரும்.. அதுமட்டுமில்ல உங்க உடம்போட நிறமே மாறும்.. அமெரிக்காவுல இது பத்தின கட்டுரைய வெளியிட்டு ஆச்சரியப்பட்டிருக்காங்க.. இப்பவே ஆன்லைன்ல புக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. ரஷ்யால இந்த சோப்பு பத்தின ஒரு கருத்தரங்கமே நடந்திருக்குது.. தியாகு கேட்டாரில்லையா.. என்ன சார் சோப்போட விலைன்னு.. ரொம்ப சாதாரண விலை.. அதாவது ஐநூத்து பத்து ரூபாய்.” நிறுத்தி ஒரு நொடி கூட்டத்தை பார்க்க அது அசைவில்லாமல் அவருடைய அடுத்த சொற்களை தேடியது..

“தெரியும்.. தெரியும்.. நீங்க மனசுல நினைக்கறது.. என்னடா. இவ்வளவு காஸ்ட்லியான தயாரிப்ப வெறும் ஐநூறு ரூபாய்க்கு கொடுக்கறாங்களான்னு ஆச்சரியப்பட்டு பாக்கறீங்க.. இதேதான் அமெரிக்காவிலேயும் நடந்தது..  டாட் கம்பெனி என்ன சொல்லுதுன்னா இது பணக்காரங்களுக்கான சோப்பு இல்ல.. ஏழைகளுக்கான சோப்புன்னு சொல்லுது.. எல்லா சோப்புகளுமே மக்களை ஏமாத்துது.. நாம புரியவைக்கனும்.. ஒரு இயற்கையான சோப்பு உடலோட நிறத்தை மாத்துதுன்னா அதனோட மகிமைய மக்களுக்கு புரிய வைக்கனும்.. இதனோட நன்மை என்னன்னா பெண்களை அழகா மாத்தும்.. அவங்களோட கண்ணாடி அவங்கள அழகானவங்களா மாத்தி காட்டும்.. காரணம் கண்ணாடி இல்லை.. இந்த சோப்பு.. மார்க்கெட்டிங் எப்படி பண்ணறதுன்னு ஏற்கனவே ரண்டு புராடக்ட் மூல்யமா பாத்தோம்.. மொதல்ல நம்மளோட குறி பணக்காரங்க.. தானா வந்து குவிவாங்க.. ஆண்களும் இதுக்கு மயங்குவாங்க. என்னை மாதிரி.. வழக்கம்போல ஒரு சோப்பு வாங்கறவங்களை இன்னொருத்தர அறிமுகப்படுத்த சொல்லுங்க.. அதுதான் நம்ம அடித்தளம்.. அதை மறந்துரக்கூடாது.. இன்னிக்கு நவீனா ஓட்டல்ல பஞ்சாப்ல இருந்து வந்திருக்கிற டாட் கம்பெனி எக்ஸ்கியூட்டிவ் மிஸ்டர் பாகல் சிங் இந்த சோப்ப அறிமுகப்படுத்துவாரு.. ஒவ்வொருத்தரும் நம்ம டீம்ல பத்து பத்து சோப்பை வாங்கி எனக்கு பெருமை சேத்தனும்.. என்ன தியாகு சார்… வாங்கிடலாமா..?”

தியாகு தன்னிச்சையாக தலையாட்டினான்..
                                    0000

தாம்சன் டீம் அறைக்கு வந்தபோது விக்கி இவன் கதையை கேட்டு அப்படியே துங்கிவிட்டிருந்தான்.. தூக்கம் அவனுக்கு தானாக வந்தது.. தூஙுகுவதற்கு முன்பு அவன் சொன்னது இதுதான்..”அந்த சோப்பு கதைய கேட்டா நல்லா தூக்கம்தான் வருது..”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிப்பு வருதுன்னு சொன்னியே..”

“ஆமா.. ஆனா அந்த சோப்பு விளம்பரத்துக்கு ஒரு சிங்கு வந்தது.. ஓட்டல்.. வீடியோ.. டான்ஸ்.. வாட்ஸ்அப்புல பறக்கவிட்டது.. பத்து சோப்ப வாங்க வச்சது.. பத்தாத்துக்கு ஓட்டல் செலவுக்கும் சேத்து ஆயிரம் ரூபாய புடுங்கனது.. எல்லாம் சரி.. உங்கள சாப்புடாம கூட அனுப்பிச்சிட்டானுங்களே.?.”

“ஏழாயிரம் காலி இன்னைக்கு..அந்த சிங்கு வெள்ளையா ஒரு பொம்பளைய கூட்டிக்கிட்டு வந்தான்.. அந்தாளு பொண்டாட்டியாம்.. நம்பமுடியல. வெளிய அவ்வளவு நீளத்துக்கு ஒரு காரு நிக்குது.. படகு மாதிரி.. எல்லா சிட்டியிலேயும் சோப்பு விளம்பரத்துக்கு போறதுக்கு பிளான் குடுத்துட்டாங்களாம்.. நோ டைம்னு பத்து வார்த்த பேசிட்டு சோப்ப கொடுத்துட்டு பின்னாடி வழியா அந்த வெள்ளக்காரிக்கூட போயிட்டான்.. “

“பின்ன தூக்கம் வராம என்ன பண்ணும்.. இந்தியா பாவம்.. உன்னைய மாதிரி நெறைய கொல்டிப்பசங்கள எம்.எல்.எம்முல போட்டு அவங்கெல்லாம் டைய கட்டிக்கிட்டு டூ வீலர கடனுக்கு வாங்கிட்டு ஆனா சோப்பு விக்கத்தான் போறானுங்க.. அப்பறம் ஆள் பிடிக்க.. சீட்டு கம்பெனிக்கு ஆள் சேத்தற மாதிரி.. சீட்டு கம்பெனிக்கு அது நியாயம்.. உனக்கு..?”

“ஒன்ற வருசம் ஆகுது இதுல சேந்து.. போட்டத எடுக்கனுமில்ல.. எட்டாயிரம் வாங்கினாங்க.. ஆள சேத்தனும்னு சொன்னாங்க.. டை கட்டணும்.. இன் பண்ணனும்னு சொன்னாங்க.. வீட்ல திட்டு விழுதேன்னு வட்டிக்கு வாங்கி கொடுத்தேன்.. இதுவரைக்கும் இந்த ஒன்ற வருசத்துல இருபத்தி ஏழு பேரை சேத்திருக்கேன்.. அதெல்லாம் பத்தாதுன்னு தினமும் திட்டிட்டே இருக்காரு வரதராஜூ..”

“வரதராஜூ..?”

“எங்க டீம் பாஸூ.. ஏதோ ஒரு கம்பெனில குப்பை கொட்டிக்கிட்டிருந்தவரு இன்னிக்கு சொந்த வீடு.. ஒரு தியேட்டருக்கு பார்ட்னர்.. ரண்டு காருன்னு இருக்காரு..  அதைய காட்டித்தான் பேசறாரு.. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் பாப்பர்.. இப்போ பாப்புலருன்னு வசனம் சொல்லிட்டே இருப்பாரு.. எல்லாம் காலேஜு பசங்க.. அந்த வெங்கடேசன் இருக்கான் பாரு.. வீட்ல சண்டை போட்டு சீட்டு பணத்தை நஷ்டத்துல எடுத்துட்டு வ்ந்து கொடுத்தான்.. தினமும் புலம்பறான்.. “

“புலம்பாம..” அந்த விக்கி உதடுகளை தடவி சிரித்தான்.. பக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்ட் பக்கம் ஒரு டிவி ஷோரூமில் வேலை அவனுக்கு.. மாச சம்பளம் பதினோராயிரம்.. இரண்டு வருடமாக இருக்கிறான்.. மூவாயிரம் சாப்பாடு மற்றும் இதர செலவுக்கு.. மீதி வீட்டுக்கு.. எங்கேயும் போகமாட்டான்.. கடை.. ரூம்.. வழியில் தள்ளு வண்டி கடைகளில்தான் சாப்பிடுவான்.. தியாகு மசாலா பொரி வாங்கி வரும்போது விரும்பி சாப்பிடுவான்..

“இந்த ஏரியாவே வேலையில்லாத பசங்களோட ஏரியா.. வெளிய இருந்து வந்து தங்கிட்டு.. எவ்வளவு ரூமுங்க பாத்தியா.. கேண்டீன்.. சலவைக்கடை… இன் பண்ணிட்டு தலை வாரிட்டு கெளம்பிடறாங்க.. சர்வர் வேலைல ஆரம்பிச்சு ஃபேக்டரில மெஷின ஓட்டற வரைக்கும் செய்யறானுங்க.. வீட்டுக்கு துட்டு அனுப்பறானுங்க.. கல்யாணம் ஆகாதவங்க கொஞ்சம் தண்ணி அடிக்கிறானுங்க..”

தியாகு சிரித்து..”கல்யாணம் ஆனவன்தான் அதிகமா அடிக்கறான்..”

“உங்களுக்கு இந்த மார்க்கெட்டிங் பிசினஸூக்கு தேவையானது இல்லை.. பொய் பேசனும்.. நடிக்கனும்.. சட்டை காலர்ல அழுக்கு இல்லாம பாத்துக்கனும்.. இங்கிலீஸ் தெரியனும்.. டாப்ல இருக்கறவன் சுரண்டி எடுத்துடுவான்.. கீழ வர்றவங்க ஏமாளிங்க பணம் வரும்னு உக்காந்திருப்பாங்க.. கொடுக்கற பணத்துக்கு பில்லு இருக்காது.. அட்ரஸு இருக்காது.. கார்ல வந்து அடுத்த மீட்டிங்கு துபாய்லன்னு சொல்லுவாங்க.. உங்க காசுலேயே மும்பை,, டெல்லி.. கோவா.. ஏன்.. சிங்கப்பூருன்னு கூட கூட்டிட்டு போவானுங்க.. டிவிட்டரு.. ஃபேஸ் புக்கு.. வாட்ஸ் அப்பு.. யு டீயுபுன்னு வீடியோவா அள்ளி விடுவானுங்க.. பசங்களுக்கு வீட்ல சொல்லிக்கறதுக்கு பெருமையா இருக்கும்.. அதுதானே அவனுக்கு வேணும்.. இதுவரைக்கும் எவ்வளவு கைல இருந்து போயிருக்குது..? உண்மைய சொல்லனும்..” என்றதும் இவன் தரையை பார்த்து யோசித்தான்..
      அவன் பதில் சொல்ல முயலும்போது பந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.. அப்போதுதான் விக்கி அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு தூங்கிவிட்டான்.. பக்கத்து அறையை திறக்கும் சத்தம்.. அப்படியென்றால் மணி இரவு பணிரண்டுக்கு முன்னே அல்லது பின்னே.. தாம்சன் மற்ற இரண்டு பேரோடு மேம்பாலம் பக்கம் உதயா ஓட்டலில் பாஃஸ்ட் புட் வேலையை முடித்துவிட்டு திரும்புகிற நேரம்.. தேவாவும் பசுபதியும் எட்டிப்பார்த்து “என்னா.. இன்னமும்  சாரு முழிச்சிட்டிருக்காரு..”

“பிரச்சன..”

“என்னா பிரச்சன..?”\

“சோப்பு எப்படி விக்கறதுன்னு..”

                              0000

தேவா அருகில் வந்து உட்கார்ந்து தியாகுவின் முதுகை தடவிக்கொடுத்தான்.. அவன் கன்னத்தை வருடினான்.. அருகில் சுவரில் இரண்டு முறை பல்லை கடித்துக்கொண்டு லேசாக குத்தினான்.. தரையிலும் அந்த சேஷ்டையை செய்து “டை கட்டினா உனக்கு புடிக்குது.. நாம சொல்லறதுக்கு என்னா இருக்குது..”

பசுபதி..”அவரு பெரிய ஆளுப்பா.. ரண்டு மாசம் கழிச்சு மலேசியா போறாராமே..?”

“போவாரு… போவாரு..” திரும்பி விக்கியை பார்த்து..”தூங்கிட்டானா..? நிம்மதியான பொழப்பு..” இவனிடம்.. “சாப்புட்டிங்களா..? வாங்க .. இட்லி இருக்குது.. சாப்புடலாம்..”

“சோப்பு விழயத்த கேளுப்பா..விக்கி மெஸேஜ் அனுப்பிச்சான்..ரேட்டு கேட்டுடாதீங்கன்னு.. சஸ்பென்ஸா இருக்குது.. “ என்றான் பசுபதி.. தியாகு “இட்லியெல்லாம் வேணாம்.. நான் சாப்புட்டேன்.. நீங்க போயி சாப்புடுங்க.. சோப்பெல்லாம் என்னோட விழயம்.. செய்யற தொழிலே தெய்வம்.. “

“அவன் மாறமாட்டான்.. நீ வா தேவா.. “ பசுபதி நகர்ந்தான்.. தேவா இவன் கன்னத்தை மறுபடியும் வருடினான்.. அவன் கண்கள் அறையில் அலைந்தது.. ஒன்றிரண்டு புத்தகங்கள்.. பைகள்.. மூன்று பெட்டிகள்.. பாய்.. தலையனை ஒரு பிளாஸ்டிக் குடம்.. ஏதோ வாசனை.. “என்னய்யா வாசனை..?”

“சோப்பு..”

“எங்க..?”

“பைல..”

“எவ்ளோ..?”

“ஐநூத்து பத்து..” என்றதும் தேவா கைகளை முறித்து எங்கேயோ பார்த்து நிதானமாக..”ஏதாவது தள்ளுபடி..?”

“அந்த சோப்போட ஒரிஜினல் ரேட்டு எட்நூறு.. மத்த நாடுங்களுக்கு அதே ரேட்தான்.. இந்தியாவுல மக்களுக்காக டிஸ்கவுண்டு..”

“நல்ல சேவை.. எங்கிட்ட அவ்வளவு பணமில்லையே..”

“இருக்கும்போது வாங்கிக்க..”

“நாப்பது ரூபா இருக்குது.. தர்றீங்களா..?.. நான் பத்துரூபா சோப்பதான் பயன்படுத்தறேன்.. லைபாய்.. நாப்பதே ரொம்ப அதிகம் பிரதர்..”

“இதெல்லாம் உங்களுக்கான சோப்பு இல்ல..”
      “பின்ன..?”

“எல்லாம் கார்ல போறவங்களுக்கு.. பைபாஸ்ல சாப்புட்டு டிப்ஸூ அம்பது… நூறுன்னு கொடுக்கறாங்களே.. அவங்களுக்கு.. அப்பறம் பியூட்டி பார்ல வெயிட்டிங்கல இருக்காங்களே.. முக்கியமா பொம்பளைங்க.. அவங்களுக்கு.. செவப்பா ஆகனமுன்னு மார்க்கெட்டுக்கு படையெடுக்கறாங்களே.. அவங்களுக்கு.. சம்பளம் வாங்கிட்டு என்ன பண்ணறதுன்னு முழிக்கிறாங்களே அவங்களுக்கு.. இங்க வாய் ஜாலத்த வச்சு பொழைக்கலாம்.. டை.. கோட்டு.. சூட்டு.. ஏசி மீட்டிங்.. அந்த குள்ள மனுசன் வரதராஜூ .. மலேசியா கனவு.. நடிப்பு.. இதெல்லாம் எனக்கு புடிச்சிருக்குது.. கொஞ்சம் கவலை.. நிறைய சந்தோசம்.. நடிப்போட இதுவும் ஒரு நடிப்பு.. தினமும் மசாலா பொரி வாங்கி சாப்புடற அளவுக்கு பைல காசு இருக்குது.. போதும்.. நவீனமா ஏமாத்தறது ஒரு தொழில்நுட்பம்னு குள்ளமனுசன் சொல்லுவாரு.. நாங்க அதைத்தான் செய்யறோம்.. ஒட்டுண்ணின்னு வச்சுக்கோங்களேன்..”

“அப்ப புல்லாங்குழல்.. கச்சேரி.. டிவி.. சினிமா..?”

“அது எதிர்காலம்..”

“மியூசிக் டைரக்டர் ஆயிட்டா தாம்சன.. எங்கள ஞாபகம் வச்சிருப்பியா..?”

தியாகு யோசிக்க ஆரம்பித்தான்.. தரையை பார்த்தான்.. ஒரு கையை உயர்த்தி “அப்ப சூழ்நிலை எப்படி இருக்குமோ..?”

“சரி.. சோப்பு தர்றியா.. இல்லையா..?”

“அதெல்லாம் புக் ஆயிடுச்சு.. வாட்ஸ்அப்புல போட்டவுடனே அள்ளிட்டாங்க பொம்பளைங்க.. இன்னும் ரண்டு இருக்குது.. ஷாம்பு ஒன்னு.. இன்னொன்னு பேஸ்டு.. ரண்டையுமே அமேசான் காட்ல இருந்…..

“ஒரு நிமிசம் இரு வர்றேன்.. “ தேவா அங்கிருந்து அகன்ற பிறகு இவன் உடனே கதவை சாத்தி பாயை விரித்தான்.. மொபைல் அடித்தது.. தாம்சன்தான்.. எடுத்து “ஹலோ..”

“இங்க ஒருத்தன் சிரிச்சுட்டே இருக்கான்..”

“யாரு..>“

“தேவா.. “

“ஏனாம்..?”

“மியூசிக் டைரக்டரு.. சூழ்நிலை.. ஐநூத்து பத்து..அது இதுன்னு….”

“அதெல்லாம் நடக்கும்.. நீங்களும் சிரிச்சுக்கோங்க.. “

                              0000

இட்லி சுமாராகத்தான் இருந்தது.. வழியில் பாட்டி கடையில் வாங்கினது.. கடையின் பெயரே பாட்டி கடைதான்.. ஆனால் உள்ளே அந்த பாட்டிதான் இருக்கும்.. தேவா “யூ டியூப்பு பாட்டி.. “ என்பான்.. அதில் பாட்டியின் சிரிப்பு.. ஆவி பொங்கும் இட்லி.. கருவேப்பிலை மிதக்கும் சட்னி.. அஞ்சு ரூபாய்க்கு இரண்டு இட்லி சமாச்சாரமெல்லாம் வந்துவிட்டது..  “நீங்க ஓட்டல்லதானே வேல செய்யறீங்க.. வரும்போது ஆளுக்கு ஒரு பார்சலோட வர்றது..?” என்பாள்..

“அதெல்லாம் ரைஸ் சமாச்சாரம் பாட்டி.. சிக்கனு.. ஆயிலு.. வினிகரு.. சாஸூன்னு எல்லாமே ஒடம்புக்கு ஒத்துக்காத ஐட்டம்.. தினமும் சாப்பிட முடியாது..”

பசுபதி கடைசி இட்லியை அப்படியே ஏறக்குறைய முழுங்கிவிட்டு..”நாளைக்கு பாட்டிக்கிட்ட சட்னிக்கு விளக்கம் கேக்கனும்..”

“சட்னிக்கு இல்ல.. இட்லிக்கு..” என்றான் தாம்சன்..

“ஆமா.. இட்லிக்கு..”

“இந்த தேவா இன்னும் சிரிக்கறான் பாரு..பக்கத்து ரூம்காரனுக்கு இயற்கையா அப்படி அமைஞ்சுப் போச்சு.. வேல அப்படி.. நிறைய பொய்யி.. ஆனா ஒன்னு உண்மை..”

“என்ன..?”

      “அவனோட புல்லாங்குழல் வாசிப்பு… “விரலை சுருக்கி..”ஆத்து மேட்டுல.. ஒரு பாட்டு கேக்குது.. அட்டா.. “

      “இதையெல்லாம் பிச்ச எடுக்கறவங்க கூட செய்யறாங்க.. அந்தாளுக்கு இசையெல்லாம் தெரியாது.. ராகம்.. பல்லவி.. உகும்.. ஆனா எல்லாம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்கறான்.. லோக்கல்ல பல்லவி மியூசிக்குன்னு ஒன்னு இருக்குது.. மாசத்துக்கு நாலு கச்சேரி போடறாங்க.. அங்க சேந்துக்கலாம்.. வாய்ப்பு தருவாங்க.. சோப்பு வித்துக்கிட்டு அதையும் பாத்துக்கலாம்..”

      “அவனுக்கு கச்சேரி  கனவெல்லாம் கிடையாது.. டிவி.. சினிமான்னுதான் பேசறான்.. அதுவும் அந்த நீலா வீட்டுக்காரன் மூல்யமா டீவி சீரியலுக்கு பேசிட்டிருக்கறதா சொல்றான்.. “

      “நீலா யாரு..?” என்றான் தேவா அந்த கிண்டலான முகத்துடனேயே

      “அவனோட ஃபிரண்டாம்.. நான் நம்பலை.. ஆனா தலையாட்டினேன்.. அப்படி ஒருத்தி இல்லவே இல்லை.. நம்மக்கிட்ட புளுகறான்.. வேல அப்படி..”

      பசுபதி ஏப்பம் விட்டு எச்சிலையை சுருட்டி வெளியே தொட்டியில் போட்டுவிட்டு உள்ளே வந்து “இதுக்கு நாமளே பரவாயில்ல.. வெயிலு.. நெருப்பு.. கால் கடுக்கு நிக்கறது.. ஓனரு திட்டினா வாங்கிக்கறது.. டேஸ்ட் இல்லைன்னு கஸ்டமர் திட்டுனா அப்படியான்னு வருத்தப்படறது.. சராசரி இந்தியனோட வேல மாதிரி இல்ல..?”

      “ஆனா வேக்குமே..” என்றான் தேவா..

                                    0000

      காலை ஏழு மணிக்கு தியாகு குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு டை கட்டிக்கொண்டு விக்கியை வழியனுப்பிவைத்துவிட்டு.. விக்கி உடனே கிளம்பாமல் அந்த பையை எடுத்து முகர்ந்து பார்த்து..”அந்த சோப்பு சமாச்சாரமா..?”

      “ஆமா..”

“      “பேரு..?”

      “டாட்..”

      “அப்படின்னா..?”

      “பேருக்கெல்லாம் விளக்கம் இருக்கா..?.. டாட்.. அவ்வளவுதான்.. போட்டா ஆள மாத்திடும்.. செவப்பா.. தோலு மினுமினுப்பா.. பொண்ணுங்களுக்கு சீக்கரம் கல்யாணம் ஆயிடும்..”

      “காட்டுங்க..” எடுத்து பார்த்துவிட்டு.. “இதுவா.. நம்ம காதிபவன்ல கெடைக்குதே.. இருபதோ முப்பதோ ரேட்டு.. அதே வாசனை..”

      “ஏங்க .. இத அமேசான் காட்டுல இருந்…..

      “சரி.. நான் வர்றேன்.. பத்தரம்.. குழல் ஊதலையா இன்னிக்கு..?” கேட்டுக்கொண்டே போய்விட்டான்.. சோப்பு பையை தூக்கினபோது புல்லாங்குழல்  கண்ணில் பட்டது.. பையை மாட்டிக்கொண்டு குழலை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு மறுபடியும் பையை கீழே வைத்துவிட்டு “ஸ்ஸ்… “ என்று ஆரம்பித்தான்.. பிறகு அப்படியே சரிந்து உட்காரந்து ஒரு சில நொடிகளில் “உறவுகள்.. தொடர்கதை..” வந்து.. குழல் பிசிறு தட்டி சரியாகி புகை மாதிரி மென்மையாகி “உணர்வுகள் ..சிறுகதை..”

      அவனுக்கு அந்த ஒரு சில நொடிகள் அவனை மறக்க வைத்தது.. குள்ள மனிதர்.. சோப்பு.. அந்த என்னவோ சிங்.. அப்புறம்  அந்த ரோபோ பெண்.. டை.. பக்கத்து சமையல் மாஸ்டர் பசங்க.. அந்த பிச்ச.. பிச்ச.. சட்டென்று நிறுத்திவிட்டு எழுந்து சன்னல் வழியாக பார்த்தான்.. எதிர் வீட்டின் மூடிய கதவு தெரிந்தது.. பசுபதி எச்சிலை சுவரோரம் துப்பிக்கொண்டிருந்தான்.. அந்த மொட்டை மாடியில் இரண்டு காகங்கள் உட்கார்ந்திருந்தது.. பசுபதி நகர்ந்து சன்னல் வழியே வெறுமை தெரிய பக்கத்து அறையில் பேச்சுக்குரல் கவனிப்பை கலைக்க முயன்றது.. அந்தாள் இல்லை..   

      “..இந்தப்பக்கம் போகும்போது நின்னு கேப்பேன்..”

      என்னுடைய முதல் ரசிகன்.. தியாகு வெளியே வந்து சுவரை தாண்டி தெருவில் பார்த்தான்.. காய்கறி கூடைப்பெண்.. லோடு ஆட்டோ.. ஐஸ் வண்டி.. இரண்டு குட்டிகளுடன் மல்லாந்திருந்த நாய்.. காற்றில் அலையடித்த கட்சிக்கொடி.. கிழிந்து தொங்கும் போஸ்டர்.. கீச்சுக்குரலுடன் நகரும் பெரிய பன்றி..

      “அஞ்சு ரூபாயும் மிக்சரும் தருவாங்க..”..

      போயிருப்பானோ.. ?.. உள்ளே வந்து பையை தூக்கிக்கொண்டு கதவை சாத்தி வெளியேறி தெருவில் நடந்து அந்து பாட்டிக்கடை பக்கம் கடக்கும்போது “அய்யா…யா..”

      தியாகு நின்றான்.. அவன்தான்.. பிச்ச..

      “அய்யா.. ஏதாவது கொடுத்துட்டு போங்க..” அந்தாள் வயிற்றை தடவி தலையை கீறியதில் பழக்கதோழம் தெரிந்தது.. இவன் சிரிக்க முயன்று அவன் அந்நியமாக பார்க்க.. இவனுக்கு கோவம் வந்து தொடர்ந்து நடந்தான்..

      “அய்யா…..யா…யா…”

      “போ.. போ…”

                              0000

     

 

Series Navigationநடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *