இறுதிப் படியிலிருந்து கர்ணன்

author
3
0 minutes, 51 seconds Read
This entry is part 20 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

                                                                        ப.ஜீவகாருண்யன்

நேரம் நடுநிசி ஆகியிருக்கும் போல் தெரிகிறது. பாசறையில் எனது பாதுகாப்பு வீரர்களும் கண் மூடியிருக்கின்றனர். அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் அமைதி கோலோச்சுகிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. விடிந்தால் களத்தில் அர்ச்சுனனை எதிர் கொள்ள வேண்டும். விவரம் தெரிந்த நாளிலிருந்தே அமைதியிழந்து போன எனது வாழ்க்கையில் இந்த இரவு கொடுமை கூடியதாக இருக்கிறது.

குருகுலத்தின் முன்னோடியாக-மூத்தவராக இருந்து பத்தாம் நாள் போரில் பேடி சிகண்டியை எதிர்கொள்ள மனமில்லாமல் கையறு நிலையில் நின்று அர்ச்சுனனின் அம்பால் வீழ்ந்த பீஷ்மர், காலம் முழுவதும் என்னை ‘சூதன்!’ என இழித்துப் பேசிய காரணத்தில்-நண்பன் துரியோதனனின் வேண்டுதலையும் புறந்தள்ளி-போரில் ஈடுபடாமல் இருந்தேன். பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்து துரோணர் சேனாதிபதியானதும் களத்திலிறங்கினேன். இந்திரனாலும் எதிர் கொள்ள இயலாதவராக-இணையற்ற வீரராக இருந்த துரோணர் கிருஷ்ணனின் சூழ்ச்சியில் பலியான பிறகு சேனாதிபதியானேன். ‘பெற்றோர் யார்?’ என்னும் தேடுதலில் பிள்ளைப் பிராயத்திலிருந்தே பேதலித்துப் போயிருந்த எனது மனம் கிருஷ்ணன், பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் கேட்டு துரியோதனனிடம் தூது வந்த நாளில் பெருஞ்சூறாவளிக்காட்பட்ட பெருத்ததொரு மரம் போல ஆணி வேரறுந்து வீழ்ந்து விட்டது.

அத்தையின் புதல்வர்களுக்கு ஆதரவாக துரியோதனனிடம் பாதி ராஜ்ஜியம் கேட்டுத் தூது வந்த கிருஷ்ணன், தனது தூது காரியம் முடிந்ததும் அஸ்தினாபுரம் விட்டுப் புறப்பட்டிருந்தால் இன்று நான் இத்தனை அவதிப்பட நேர்ந்திருக்காது; இந்தத் தூக்கமில்லா இரவு எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், கிருஷ்ணன், ‘தான் வஞ்சகன், தந்திரம் நிறைந்தவன்’ என்பதை என்னிடம் மெய்ப்பித்து விட்டான்: ஊத வேண்டிய சங்கைக் காலமறிந்து ஊதி எனது உறக்கத்தைக் கலைத்து விட்டான்.

’தூதுப் பேச்சில் துரியோதனனிடம் தோல்வியுற்ற கிருஷ்ணன் மாலை மயங்குகின்ற நேரத்தில் எதற்காக வீடு தேடி வந்திருக்கிறான்?  ‘துரியோதனனின் உற்ற நண்பன் நீ. நீ அவனிடம் பாண்டவர்களுக்காகப் பரிந்து பேசு!’ எனக் கேட்டுக் கொள்வதற்காகவா? அல்லது…’ வெகுவாகக் குழம்பியவன், எதிரியே ஆனாலும் வீடு தேடி வந்தவரை வரவேற்கும் பண்பில் கிருஷ்ணனை வரவேற்றேன்; உபசரித்தேன். அவனிடம், ‘கிருஷ்ணா, எளியவன் கர்ணனின் வீடு தேடி வந்திருக்கிறாய். உனக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் சொல்!’ என்றேன். கிருஷ்ணன், ‘அவையில் தூதுவன் என்றும் பாராமல் துரியோதனன் தன்னைக் கொல்ல முயற்சித்தது குறித்து, அதற்கு நானும் துணை நின்றது குறித்து ஏதேனும் கேட்பானோ?’ என்றும் யோசித்தேன்.

கூரிய பார்வையுடன் குறு நகையுதிர்த்த கிருஷ்ணன் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். ‘கர்ணா, உன்னைப் பெற்றெடுத்த தாய் யாரெனத் தெரியுமா?’ எனக் கேட்டான். கிருஷ்ணனின் கேள்விக் கூர்மையில் அதிர்ந்து அலமலந்து போன நான் அவனை வெகுளியாய்ப் பார்த்தேன்.

‘யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள துரியோதனனுடன் வந்திருந்த உன்னை நெருக்கத்தில் உற்றுக் கவனித்து, உனது உருவத்தில் சந்தேகம் கொண்ட நான் குந்தி போஜனுடன் ஏற்பட்ட தற்செயலான சந்திப்பில் அவர் மூலம் எனது அத்தை குந்தி உனது தாய் என்பதை அறிந்தேன்! நீ, ஆற்றில் எனது அத்தை மிதக்க விட்ட பெட்டி மூலம் அதிரதனுக்குப் பிள்ளையானவன் என்பதையும் அறிந்தேன்! ஆண்டுகள் கணக்கில் யாரும் அறியாததாக நான் பாதுகாத்து வந்த ரகசியம் இன்று வெளிப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு வந்து விட்டது. ஆகவே, நடக்க இருக்கும் போரில் பாண்டவர்கள் உனது சகோதரர்கள் என்பதையுங் கடந்து நியாயத்திற்காக நீ பாண்டவர்களுக்கு ஆதரவாகப் போர் புரிய வேண்டும்! ‘வேண்டும்’ என்பதை வேண்டுதலாய் முன் வைக்கிறேன். என்ன சொல்கிறாய், கர்ணா?’

மூச்சு விட நேரமற்றவன் போல் கிருஷ்ணன் பேசி முடித்து எவ்வளவோ நேரம் ஆகியிருந்தது. நான் அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக நிலை குலைந்து சிலையாகியிருந்தேன்.

‘என்ன சொல்கிறாய், கர்ணா?’ எனத் தூண்டினான், கிருஷ்ணன்.

எத்தனை நேரம் ஊமையாகவே நின்று விட முடியும்? பேசித் தீர வேண்டிய கட்டாயத்தில் பேசினேன்.

‘கிருஷ்ணா, இத்தனைக் காலமாக கிருஷ்ணன் உன்னை நான் சாமான்யனாகத்தான் கருதியிருந்தேன். இன்று எனது எண்ணம் பொய்த்து விட்டது. பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த ரகசிய முடிச்சைக் காலம் அறிந்து கட்டவிழ்த்திருக்கிறாய்! ஆனாலும் கிருஷ்ணா! நேற்றும் இன்றுமாக இந்த நொடி வரையிலும் துரியோதனனின் உற்ற தோழனாக இருந்து விட்ட நான் பாண்டவர்கள் எனது சகோதரர்கள் என்னும் காரணத்திற்காக-நியாயம் பாண்டவர்கள் பக்கம் என்பது உண்மையே ஆயினும் துரியோதனனிடமிருந்து விலக மாட்டேன்! சகோதரர்களையும் விட கர்ணன் எனக்கு நட்பு பெரியது! ஆகவே, நேற்றும் இன்றும் என்றும் என்னும் கணக்கில் நாளையும் இறக்கும் பரியந்தம் வரையிலும் நான் சஞ்சலம்-சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் துரியோதனன் பக்கந்தான்.’

உணர்ச்சிப் பூர்வமான எனது பதில் கிருஷ்ணன் ஏற்கனவே என்னிடம் எதிர்பார்த்ததாக இருந்திருக்கும் போலிருக்கிறது. எனது பதில் குறித்து எள்ளளவும் சலனப்படாதவனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட கிருஷ்ணன், ‘நல்லது கர்ணா! கேட்க வேண்டிய முறையில் உன்னிடம் பாண்டவர்களுக்கு ஆதரவு கேட்டேன். நீ உனது எண்ணத்தில் உறுதியாயிருக்கிறாய். ஒரு வகையில் உன்னுடைய பதில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தூது செய்தியைப் பாண்டவர்களுக்குத் தெரிவிக்க நாளைக் காலையிலேயே நான் உபப்லாவியம் புறப்பட இருக்கிறேன். எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். நாளைக் காலை வைகறை வேளையில் நதிக்கரையின் சூதர் படித்துறையில் அத்தை உனக்காக் காத்திருப்பார்கள். தவறாமல் அத்தையைச் சந்தித்துப் பேசு!’ என்று என்னிடம் விடை கேட்ட கிருஷ்ணனிடம், ‘கிருஷ்ணா, ‘உன்னுடைய உறுதி மிகுந்த பதில் ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.’ என்கிறாயே! எனது பதில் எந்த வகையில் உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது?’ எனக் கேட்க நினைத்தவன், ‘நாளைக் காலை சூதர் படித்துறையில் தவறாமல் உனது அத்தையைச் சந்திக்கிறேன்!’ என்று உறுதியளித்து அவனிடம், ’உனது அன்புக்குரிய அத்தைக்கும் பாண்டவர்களுக்கும் நான் அவர்களுடைய ரத்தம் என்பது தெரியுமா?’ என்றொரு கூர்மையான கேள்வியை முன் வைத்தேன். எனது கேள்விக்கு,  ‘இதுவரை யாருக்கும் தெரியாது!’ எனச் சுருக்கமாகப் பதில் சொன்ன கிருஷ்ணன், சற்றும் நான் எதிர் பாராத வகையில் திடீரெனக் குனிந்து எனது பாதங்களைத் தொட்டான். கிருஷ்ணனின் திடீர்த் தீண்டுதலில் சில்லிட்டுப் போனவன், ‘இது என்ன கிருஷ்ணா?’ என்று வார்த்தைகளில் குழறினேன்.

‘பாண்டவர்களின் எதிரி துரியோதனனின் நண்பனே ஆனாலும் நீயும் எனது அத்தையின் புதல்வனல்லவா? அதிலும் அர்ச்சுனனின் சமவயதுக்காரனான என்னைவிட வயதில் மூத்தவனல்லவா?’ என்ற கிருஷ்ணனை நெகிழ்ச்சியுடன் வியப்பு மேலிடப் பார்த்தேன். அவனிடம், ‘கிருஷ்ணா, போர் முடிகின்ற வரையிலும் பாண்டவர்களிடம் நான் அவர்களது சகோதரன் என்பதைத் தவறியும் தெரிவித்து விடாதே! உனது அத்தையும் யாரிடமும் தெரிவிக்காத வகையில் பார்த்துக் கொள்!’ என்று எச்சரிக்கை செய்தேன். கிருஷ்ணன், ‘சரி!’ என்பது போல் தலையசைத்து விடைபெற்றுப் புறப்பட்டான்.

இன்றைய இரவு போலத்தான் இருந்தது அன்றைய இரவும். விடிய விடிய விழித்திருந்து சூதர்கள், படித்துறைக்கு வருவதற்கு முன்பாக நாணல்கள் அடர்ந்த படித்துறையில் குந்தியைச் சந்தித்தேன். அறுபது வயதுகளை நெருங்கும் நிலையில் நான்கு  சூத மனைவிகள், எட்டு மகன்கள், பதினெட்டு பேரன், பேத்திகளைக் கண்ட பிறகு, ‘பெற்றவள் இவள்தான்!’ என்னும் உறுதியில் ஒரு பெண்ணை முதன் முதலாகச் சந்திக்கும் ஆடவன் ஒருவனின் மன நிலை எப்படியிருந்திருக்கும் என்பதை இப்போது விவரித்துச் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை.

சூதர் படித்துறையில் குந்தியுடனான சந்திப்பு, பெற்ற தாய்க்கும் பிள்ளைக்குமிடையிலான விநோத சந்திப்பாக ரகசியமாக நிகழ்ந்தது. நான் கோபக் கொந்தளிப்பில் இருந்தேன்.

‘மன்னித்து விடு கர்ணா!’ என்ற அம்மா மேலும் பேசத் தயங்குவது தெரிந்தது. ‘எதற்காக இந்த அம்மா மன்னிப்புக் கேட்கிறார்கள்?’ என்னும் யோசனையுடன், ‘விடியும் வேளை நெருங்குகிறது. சூதர்கள் வந்து விடுவார்கள். நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. ஆகவே, என்ன சொல்ல வேண்டுமோ தயங்காமல் சீக்கிரம் சொல்லுங்கள்!’ என்றேன் அம்மாவிடம்.

‘பாண்டவர்கள் உனது சகோதரர்கள் எனத் தெரிந்த பிறகும் எதிரணியில் ஏன் நீ நிற்க வேண்டும், கர்ணா?’ எனக் கேட்டார் அம்மா.

கொதிக்கும் கோபத்தை மறைத்துக் கொண்டேன்.

‘பாண்டவர்கள் எனது சகோதரர்கள் ஆனது இன்றுதானே, அம்மா! ஆனால், துரியோதனன் எனது ஆருயிர் நண்பன் ஆனது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு! அதுவுமில்லாமல் அறிந்தோ அறியாமலோ பாண்டவர்களுக்கெதிரான துரியோதனனின் பல மோசமான காரியங்களில் கர்ணன் நானும் குறிப்பிடத் தகுந்த கூட்டாளியாகியிருக்கிறேன். இந்த மறுக்க முடியாத உண்மையின் பின்னணியில் திடீரென உறவினனாக அதிலும் நெருங்கிய உறவினனாக முளைக்கும் கர்ணன் என்னை உனது புதல்வர்கள் அவர்களுக்கெதிரான எனது செயல்களையெல்லாம் மறந்து சகோதரன் என ஏற்றுக் கொள்வார்களா?’

‘உடன் பிறந்தவன்!’  என்னும் ஒற்றைக் காரணம் பாண்டவர்களுக்கு உன் மீதிருக்கும் பகைமையை ஒழித்து விடும், கர்ணா! நிச்சயம் பாண்டவர்கள் உன்னை சகோதரனாக ஏற்றுக் கொள்வார்கள். சகோதரன் என ஏற்றுக் கொள்வதோடு நில்லாமல் ‘மூத்தவன்!’ என முன்னிறுத்திக் கொண்டாடுவார்கள்!’ 

‘சரி, அம்மா! பாண்டவர்கள் உனது எண்ணப்படி என்னை சகோதரனாக ஏற்றுக் கொள்வார்கள்; தலையில் தாங்கிக் கொள்வார்கள்; கொண்டாடுவார்கள். ஆனால், உனது பாசத்துக்குரிய மருமகள் திரெளபதி, கர்ணன் என்னை இன்னொரு கணவனாக ஏற்றுக் கொள்வாளா? ஒரு வேளை நாளை அரியணை எனக்குரியது என்றாகுமானால் உனது அழகிய அன்பு மருமகள் அரசியாக எனது பக்கத்தில் அமர்வாளா?’ என்னும் எனது குதர்க்கமான கேள்வியில் வாயடைத்துப் போன அம்மாவின் முக மாற்றத்தை வைகறை இருளின் தழுவலில் என்னால் சரியாக உணர முடியவில்லை.

‘கர்ணா, நடக்க இருக்கும் போரில் அர்ச்சுனன் ஒருவனைத் தவிர்த்து மற்ற நால்வரை உனது ஆயுதம் தீண்டக்கூடாது. அவர்களுக்கு எந்த வகையிலும் உன்னால் மரணம் சம்பவிக்கக் கூடாது. இதுதான் எனது ஒற்றை வேண்டுகோள்!’ என்ற அம்மாவின் வார்த்தைப் பின்னணியில் கிருஷ்ணனின் சூட்சுமம் ஒளிந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது எனக்கு.

‘அம்மா அர்ச்சுனனும் நானும் தேர்ந்த வில்லாளிகள். ஒரே நேரத்தில் இருகரங்களாலும் பாணங்களைப் பிரயோகிக்கும் சவ்யசாசிகள். அர்ச்சுனன் ஒருவனைத் தவிர்த்து விட்டால்  மற்றைய உனது நான்கு புதல்வர்களில் பீமன் ஒருவன் தான் கர்ணன் என்னுடன் போரிடும் வல்லமை கொண்டவன்; ஒரு வகையில் என்னிலும் வல்லமை மிகுந்தவன். நடக்க இருக்கும் போரில் நான் அர்ச்சுனன் ஒருவனை மட்டுமே எதிர் கொள்வேன். நாளைய போரில் நானிறந்தாலும் அர்ச்சுனனிறந்தாலும் நிச்சயம் உனக்கு அய்ந்து பிள்ளைகள் மிச்சமாயிருப்பார்கள். ஆகவே, கவலை கொள்ளாதே!’ என்று குந்திக்கு ஆறுதலளித்தவன் அவள் தாள் பணிந்து எழுந்தேன். தாய்-மகன் தழுவிக் கொள்வதற்கும் நேரமற்றுப் போன அந்த இடர்ப்பாடான நேரத்தில் திடீரென எனக்குள் ஒரு கேள்வி கிளர்ந்தது.

‘அம்மா, கர்ணன் நான் உனது மகன் என்னும் உண்மை நேற்று கிருஷ்ணன் மூலந்தான் உனக்குத் தெரிந்ததா?’

படிகளில் மேலேறிக் கொண்டிருந்தவளை எனது திடீர்க் கேள்வி தடுத்து நிறுத்திற்று. கூடவே, ‘கர்ணன் நீ என் மகன் என்பது உனது வளர்ப்புத் தாய் ராதையின் வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்!’ என்று அவளிடமிருந்து வெளிப்பட்ட எனது கேள்விக்கான பதில், ‘அடடா! இத்தனை அழுத்தமானவர்களா இந்தப் பெண்கள்?’ என்று என்னை அளவில்லாத அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.

திடுக்கிட்டுப் போனேன். 

‘அம்மா, போர் முடிகின்ற வரையிலும் பாண்டவர்களிடம் நான் அவர்களது சகோதரன் என்பதைத் தெரிவிக்காதே, அம்மா! தவறியும் தெரிவிக்காதே!’ என்று சற்றே குரலை உயர்த்திய நான் படித்துறையில் நிலை குலைந்து சாய்ந்தேன்.

ஒரு வேளை அம்மா குந்தி, பாண்டவர்கள் வழியில் பட்ட அவமானம் கருதியே நான் துரியோதனன் அணியில் நிற்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். ஆனால், உண்மை அது இல்லை. உண்மையில் பாண்டவர்கள் மூலமாக அதிலும் குறிப்பாக பீமன் ஒருவன் மூலமாகத்தான் நான் அவமானப்பட்டேன். ராஜ குமாரர்களின் வீர தீரத்தை உலகம் அறிய சிலம்பக் கூடத்தில் துரோணர் நடத்திய போட்டியின் போது, ‘யாக அர்க்கியத்துக்கு நாய் ஆசைப்படக்கூடாது! அரச குமாரர்களுக்கிடையிலான போட்டியில் சூதன் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்? வில், அம்பைக் கீழே போடு! தேரோட்டி மகன் நீ உனது குலத்தொழிலின் வழக்கத்தில் சாட்டையைக் கையிலெடு! குதிரைகளை விரட்டு!’ என்ற பீமனின் வார்த்தைகள் எனக்களித்த அவமானம் சாதாரணமாக மறந்துவிடக் கூடியதல்ல. அதே போல திரெளபதியின் சுயம்வரத்தில் அவளது கிளர்ச்சியூட்டும் அழகில் நெஞ்சம் குலைந்து வில்லெடுத்து நாணேற்றி வெற்றி பெறும் தருணத்தில்-நாணேற்றுகின்ற தருணத்தில், ‘க்ஷத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் மட்டுமே சுயம் வரத்தில் போட்டியிடத் தகுந்தவர்கள். சூதர்கள் போட்டியில் பங்கேற்க இடமில்லை!’ எனச் சொல்லி திரெளபதியின் சகோதரன் திருஷ்டத்துய்மன் மேடையிலிருந்து என்னை தள்ளாத குறையாக இறக்கிய போது திரெளபதி என்னைப் பார்த்த ஏளனப் பார்வையும் அதனால் ஏற்பட்ட அவமானமும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதல்ல. ஆனாலும் இங்கே நான் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். இளவரசர்கள் திறன்காட்டும் போட்டி நடந்த சிலம்பக் கூடத்தில் அர்ச்சுனனுக்கெதிராக நான் வீம்புடன் மேடையேறி பார்வையாளர்கள் வியக்க, அர்ச்சுனன் செய்த அனைத்து அஸ்திர சாகசங்களையும் அலட்சியமாக செய்து காட்டிய போது- அவனை விட வேகமாகவும் வித்தியாசமாகவும் செய்து காட்டிய போது- அவன் நல்லதொரு வீரனுக்குரிய தகுதியுடன்தான் என்னிடம் வார்த்தையாடினான். ‘வீணாக என்னுடன் மோதி ஏன் உயிர் துறக்க நினைக்கிறாய்? ஓடிப்போ! உயிர் பிழை!’ என்று அவன் இழிவு படுத்தாத வார்த்தைகள் கொண்டுதான் என்னிடம் சதுராடினான்.

ஆக, அர்ச்சுனனுக்கெதிராக பதினெட்டாம் நாளில் நாளை நான் நடத்த இருக்கும் போர் பீமன், திருஷ்டத்துய்மன் இருவரும் என்றோ என்னை இழித்துப் பேசியதன் விளைவல்ல; நடக்க இருக்கும் போர் திரெளபதியின் ஏளனச் சிரிப்புக்கு எதிரானதும் அல்ல. பொதுவாக, இந்த நொடியில் பாண்டவர்களுக்கெதிராக எனது நெஞ்சில் எந்தக் குரோதமுமில்லை. கூடவே பாண்டவர்கள் என் உடன் பிறந்தவர்கள் என்றறிந்த பிறகும் அவர்கள் மீது எனக்கு எந்த விதமான பாசமுமில்லை.

கர்ணன் எனக்கு என்றென்றும் துரியோதனனுடனான பாசம்-நட்பு மட்டுமே பெரியது. துரியோதனன் ஒருவனின் பாசத்திற்கு மட்டுமே நான் கட்டுப்பட்டவன்.

சிலம்பக் கூடத்தில், ‘தேரோட்டி மகன்! சூதன்!’ என என்னை அவமதித்தவர்களையெல்லாம் எளிதாகப் புறக்கணித்து அங்க தேசத்துக்கு அவன் என்னை அதிபதியாக்கிய தருணத்தில் அவனது எதிர்கால கனவுகள், நம்பிக்கைகள்  அத்தனையையுங் கடந்து அன்று நான் அவனது  ‘நட்பு’ என்கின்ற தழுவுதல் ஒன்றுக்கு மட்டுமே ஆட்பட்டவன் ஆனேன்.

அங்கதேசத்துக்கு அதிபதி ஆக்கிய போதும் துரியோதனன் பலவகயில் பல நேரங்களில் என்னை சூதனாகத்தான் நடத்தி வந்திருக்கிறான். ஆனாலும் அவன் எனது உயிர் நண்பனாக இருக்கிறான்.

‘ ‘அர்ச்சுனனையே சவாலுக்கு அழைக்கிறான்! மேடையில் நின்று அர்ச்சுனனுக்கும் மேலாக அஸ்திர வித்தை காட்டுகிறான்! சிறந்த வில்லாளியாகத் தெரிகிறான்! எதிர்காலத்தில் எந்த வகையிலும் நமக்கு உதவுவான்!’ என்னும் சிந்தனையுடன் அவன் என்னை அங்க தேச அதிபதியாக்கியிருக்கக் கூடும்.’ என்று அன்று நான் துரியோதனனை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால், துரியோதனன் தனது உறுதி மிக்க நட்பின் வழியில் எனது சந்தேகத்தை அவனது மனைவி பானுமதியின் இடை ஆபரணத்தைத் தவறுதலாக நான் இழுத்தறுத்த  நாளில் தவிடு பொடியாக்கினான்.

அரண்மனையின் மணி மண்டபத்தில் ஆளில்லாமல் பகடைகளுடன் தனியே அமர்ந்திருந்த பானுமதியின் எதிரே ஆட்டத் துணையாக ஆட அமர்ந்தவன் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் சூழல் மறந்திருந்தேன். துரியோதனனின் வருகையை அறிந்த பானுமதி அவனுக்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்திருக்க முயன்ற போது –துரியோதனனின் வருகையை அறியாத நான்- ‘பானுமதி ஆட்டத்தில் தோற்போம் என்பதறிந்து எழுந்திருக்கிறாள்!’ என நினைத்து  அவசரகதியில் அவளது இடை ஆபரணத்தைப் பிடித்திழுத்தேன். இழுத்த வேகத்தில் ஆபரணம் அறுந்து விட்டது.

‘சிதறியிருக்கும் இந்த முத்துகளைச் சேர்க்கவோ? கோர்க்கவோ?’ எனக் கேட்கும் பழகிய குரல் கேட்டு திடுக்கிட்டவன் திகைத்துப் போனேன். எதிரே என்றும் போன்ற இயல்பில் புன்னகை பூத்த முகத்தினனாய் அருமை நண்பன் துரியோதனன்!

மனைவியின் இடை ஆபரணத்தைப் பிடித்திழுத்த எனது இழி செயல் மறந்து, ‘சிதறியிருக்கும் முத்துகளைச் சேர்க்கவோ? கோர்க்கவோ?’ என்று அன்று என்னிடம் வினவிய துரியோதனனின் அன்புக்கு-நட்புக்கு ஈடாக கர்ணன் எனது உயிர் கூட துச்சந்தான்.

ஒரு வேளை நாளைய போரில் நான் இறக்க நேர்ந்து விட்டால் துரியோதனன் கதறுவான். அனைத்து நேரங்களிலும் அன்பு காட்டிய காந்தாரி கதறுவார்கள். அம்மா குந்தி என்னை கட்டி அணைத்துக் கதறுவார்கள். பிறகு குந்தியை, கிருஷ்ணனை ஒருங்கே திட்டித் தீர்த்து பாண்டவர்கள் எனது இறப்புக்காகக் கதறுவார்கள். ஆனால்… ஆனால்… எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், ‘எழிலரசி இவளை வில் வளைத்து வெல்வேன்! மனைவியாக்கிக் கொள்வேன்!’ என்று நான் காமுற்ற-காதல் கொண்ட திரெளபதி, தனது மாமியார் குந்தியைப் போல், தனது அய்ந்து கணவர்களைப் போல் என்னை தீண்டுவாளா? கட்டியணைத்துக் கதறுவாளா?

ஆண்கள் நிறைந்த சபையில் ஆடை கலைந்து தன்னை நிர்வாணமாகப் பார்க்க நினைத்த எனது ஆசை குறித்து, ‘அந்தப்புரத்திலிருந்து இழுத்து வந்த பிறகு துச்சாதனா, ஏன் தயங்குகிறாய்? எள்ளுப் பதர்களான  அய்வரின் இந்த அழகிய தாசியின் ஆடைகளைக் களை! இவளை துரியோதனனின் தொடை மேல் இருத்து!’ என்று நான் துச்சாதனனை தூண்டியது குறித்து நிச்சயம் திரெளபதிக்கு வன்மம் இருக்கத்தான் செய்யும். ‘ ‘பிறகு, நாளை ஒரு வேளை போர்க்களத்தில் நான் மாண்டு போக நேர்ந்தால் திரெளபதி என்னை கட்டியணைத்துக் கதறுவாளா?’ என்று ஏன் வீணே கேள்வி தொடுக்கிறாய்?’ என்று என்னை குத்திக் குடைகிறது எனது பொல்லாத மனம்.

கனவிலும் என்னை தீண்டாமல் விலகிச் செல்லும் திரெளபதியின் உறுதிப்பாட்டில் மனம் கேட்கும் கேள்வியில் நிறையவே நியாயமிருக்கிறது.                              

உண்மையில், ‘நாளை நடக்க இருக்கும் போரில் அர்ச்சுனனைவென்று விட வேண்டும்-கொன்று விட வேண்டும்!’ என்னும் வேகமோ-வெறியோ எனக்கில்லை. சகோதரர்களே ஆயினும் சமபலம் கொண்ட வீரர்கள் இருவருக்கிடையிலான போர்! இறப்பது குறித்தும் கவலையில்லை! பிழைத்து இருப்பது குறித்தும் ஆர்வமில்லை! வெற்றி அல்லது வீர மரணம்! இரண்டில் எனக்குரியதாக இருப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்.

‘சிறிது நேரம் உறங்கினால் போதும்!’ எனத் தோன்றுகிறது. ஆனாலும் பாழும் உறக்கம் நடு நிசி தாண்டி நாழிகைகள் பல ஆன பிறகும் கனவு திரெளபதியைப் போலவே என்னை தீண்ட மறுக்கிறது.

                 ***

       

            

            

Series Navigationசோமநாத் ஆலயம் – குஜராத்குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  valavaduraian says:

  எந்தவிதசிக்கலும் மாற்றமும்இல்லாத மிகச் சாதாரணமான கதை. அப்படியே பாரதம்தான். ஒரு கருத்துப் பிழை. கர்ணன் 17-ஆம் நாள் போரிலேயே மடிந்து விடுகிறான், 18-ஆம் நாள் அவன் இல்லை

 2. Avatar
  jananesan says:

  கர்ணனின் கொதிப்புமிகு தன்மானமும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் பிசிறில்லாத நன்றி உணர்வும், இறுதிக்கட்டத்திலும் திரௌபதி மேல் தீராமோகமும் தூக்கத்தைப் பறித்துக் கொண்டன. மகாபாரதத்தின் சூத்திரதாரியும் முதன்மை வில்லனும் கிருஷ்ணனே. எளிமையும் சரளமும் உளவியல் பூர்வமுமான எடுத்துரைப்பு.வாழ்த்துக்கள் ஜீவகாருண்யன்.

 3. Avatar
  ப.ஜீவகாருண்யன் says:

  |7ஆம் நாள் யுத்தம் என்பதை 18ஆம் நாளென தவறாக எழுதியுள்ளேன். தவறினைச் சுட்டியுள்ள வளவ துரையன் அவர்களுக்கும கதை குறித்து பதிவாகவும் பேசியிலும் கருத்து வழங்கியுள்ள ஜனநேசன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *