கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

 

அழகியசிங்கர்

 

 

          சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன்.

          தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம்கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.

 

          கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.

 

          பெண் படைப்பாளியான சுகந்தி சுப்ரமணியனும் மனப்பிறழ்வுடன் தன் வாழ்நாளைக் கடத்தியவர்.  இவருடைய கவிதைகள் எல்லாம் மனப்பிறழ்வை இன்னும் துல்லியமாகக் காட்டுகின்றன.

 

          இப் புத்தகத்தில் ஜெயமோகன் சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளைக் குறித்து இப்படிக் கூறுகிறார்.

 

        “எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது, அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.” என்கிறார்.

 

          இன்னொரு இடத்தில் ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார்.

 

          2009இல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன் ஒரு குறுஞ்செய்தியில் எனக்குத் தெரிவித்திருந்தார்.  அந்த குறுஞ்செய்தி விதவிதமான நினைவுகளை எழுப்பியது.  பல வருடங்கள் தாண்டிச் சென்று விட்டிருந்தன.  சுகந்தி கவிதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டிருந்தார்.  சிலகாலம் மனநோய் விடுதியில் இருந்துவிட்டு மீண்டு வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை.  அந்த மரணம் ஒரு பெரிய விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற அடையாளம் என்ற வாழ்க்கை என்ற அறையைத் திறந்து

அவர் வெளியேறிவிட்டார்.

 

          திருப்பூர் தமிழ்ச் சங்க விருது வாங்கத் திருப்பூர் சென்றபோது சுகந்தி சுப்ரமணியனைப் பார்த்திருக்கிறேன். அப்போது என்னிடம்  அவர் கவிதைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தார்.

 

          அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவருடன் பேசும்போது இவருக்கா மனப்பிறழ்வு என்று தோன்றியது.

 

          அவருடைய புதையுண்ட வாழ்க்கைஎன்ற கவிதைத் தொகுதியைக் குறித்து விமர்சனம் எழுதியிருந்தேன்.

 

          இந்தத் தொகுதியில் இருப்பவை பெரும்பாலும் கவிதைகள்.  சில கதைகள்.  சில டைரிக் குறிப்புகள். 

 

          எந்த ஆண்டில் இதையெல்லாம் எழுதினார் என்பது பற்றிக் குறிப்புகள் இல்லை.

 

          அவர் கணவர் சுப்ரபாரதி மணியன் ஒரு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர் என்பதால் சுகந்தி எழுத்துக்களைப் பாதுகாத்துத் தொகுத்துள்ளார்.

 

          இப்போது ஒரு கவிதையைப் பார்ப்போம்.

 

                    ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்

                    எத்தனை வீர சாகசம் பெண்ணே

                    முதல் வரியில் வந்தது

                    குழந்தை சிரிப்பு மனதில்.

 

                    இரண்டாவதில் தண்ணீர் பிடி சண்டைகள்.

                    மூன்றாம் வரியில் குளிரில் விறைத்து 

                    செத்த லட்சுமி கிழவி

                    நான்காவதில் கேஸ் தீர்ந்த அலுப்பில்

                    ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்

         

                    ஐந்தாம் வரியில் 

                    ஓசியில் டிவி சினிமாவுக்கு

                    அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்

                    ஆறாவதாய் சின்னம்மாவின்

                    மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்

                    ஏழாவது வரியில்.

 

                    இன்னும் சமையல் ஆகவில்லை.

                    இன்னொரு கடைசி வரியாய்

                    கவிதையை முடிக்க ஒரு வரி

                    சொல்லேன் பெண்ணே!

 

 

          சுகந்தி சுப்ரமணியன் கவிதையில் முக்கியமான ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். சின்னம்மாவின் மெனோபாஸ் கஷ்ட அழுகைகள் என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார்.

 

          பெண்கள் படும் துயரங்களை பதிவு செய்திருக்கிறார்.  பொதுவாக ஆண்கள் வழியாக உலகத்தைப் பார்க்கும் பெண் கவிஞர்கள் தங்களுடைய பிரச்சினைகளை எழுத்தில் பதிவு செய்ய மாட்டார்கள்.  சுகந்தியின் கவிதையில் பெண் தான் படும் வலிகள் பதிவாகி உள்ளன.

 

          முதன் முதலில் சுகந்திதான் தன் கவிதைகளில் தன் வலியை அதாவது பெண் படும் வலியைப் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. தமிழில் இவர்தான் முன்னோடியாக இருப்பாரா என்று தோன்றுகிறது.  இன்னும் ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வரமுடியும்.

 

          இவருடைய இரண்டாவது கவிதையில் ஒரு ஆணின் திமிர்தனம் எப்படி வெளிப்படுகிறது என்பதை நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார். இதோ அந்தக் கவிதை.

 

                    நான் போகின்ற பாதையெல்லாம்

                    பெண்ணென்று பயமுறுத்தும் எல்லாரும்.

 

                    என் குழந்தை தவிர

                    ரேஷன் கடையில்

                    சர்க்கரை எடை 

                    குறைந்த காரணம் கேட்டதும்

                    பாமலின் டின்னுக்கு எழுதியவன்

                    அதை அடித்து ஸ்டாüக் இல்லையென்றான்.

 

                    பெண்ணுக்கென்ன கேள்வி என்றான்

                    கியூவில் நின்ற ஆண்களும், பெண்களும்,

                    வானம், வீதி, வாசனம் பார்த்தனர்

 

                    இடுப்பிலிருந்த என் குழந்தை

                    முகம் பார்த்துச் சிரித்தது.

 

          சுகந்தியின் கவிதையை மேலும் நான் விவரிக்க விரும்பவில்லை. கவிதையைப் படித்தவுடன் நமக்கு அக் கவிதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரிகிறது.

 

          பெரும்பாலும் சுகந்தி அவருடைய வீட்டைப் பற்றி அவருடைய வாழக்கைக் சூழல் பற்றி குழப்பமான மனநிலையைப் பற்றி எழுதி உள்ளார்.  

 

          இப்படி குடும்ப உறவைப் பற்றி கவிதைகள் எழுதியதால் இவர் கவிதைகள் நான்கு சுவருக்குள் முடிந்து விட்டனவோ என்று தோன்றுகிறது.

 

          தலைப்பில்லாமல் எல்லாக் கவிதைகளையும் எழுதி உள்ளார்.

மூன்றாவதாக நான் குறிப்பிடுகிற கவிதை முழுக்க முழுக்க பெண் மையக் கவிதை.  

 

          நான் சமீபத்தில் ஒரு பெண் கவிஞரின் கவிதைகளைப் படித்தேன்.  அது முழுக்க காதல் கவிதைகள்.  எல்லாம் கருத்துக் கொட்டல்கள்.  அனுபவம் சற்றுக்கூட இல்லை.  போஙூயான வார்த்தைகள். 

 

          ஆனால் சுகந்தி கவிதைகள் இயல்பாக அவர் நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது.  இதோ இன்னொரு கவிதை.

 

 

          என் குழந்தையின்

          தொப்புள் கொடியை

          அறுத்தது யார்?

          பாட்டியாநர்ஸô?

          நினைவில்லை

 

          என் முதல் கர்ப்பம்

          பற்றிய முதல் செய்தியை

          யாரிடம் சொன்னேன்?

          ஞாபகமில்லை

 

          பள்ளியில் அ, , ,

          கற்றுக் கொடுத்த ஆசிரியர் யார்

          மறந்து போனது

 

          பள்ளி மைதானத்தில்

          விளையாடும்போது ருதுவான கணத்தில்

          என் கைபிடித்து சந்தோஷம் கொண்ட

          முகம் எது?

          நினைவில்லை.

 

          சட்டெனச் செத்துப் போன அப்பா

          எனக்காய் விட்டுப் போன வார்த்தைகள்

          எவை? எவை?

          நினைவில்லை.

 

          முதல் பிரசவம் குறித்து

          பயமுறுத்திச் சொன்னவர் யார்?

          மறந்து போனது

 

          பாஷை புரியாத ஊரில்

          புது பாஷையில்         

          முதல் கேள்வி கேட்ட பெண்?

          நீள்கிறது நினைவில்லைகள்,

          ஏதோ ஒருவகையில்

          எல்லாவற்றிற்கும்

          முக்கியத்துவம் இருந்தும்

 

          அடுக்கடுக்காய் ஒரு பெண் படுகிற பதற்றம் இக் கவிதை முழுவதும் தெரிகிறது.  பெண்களால் உணருகிற பெண்ணைப் பற்றிய கவிதை இது.

 

          மொத்தத்தில் இவர் கவிதைகள் மூலம் இவர் குரல் இப்படி ஒலித்துக்கொண்டிருக்கிறதுமனப்பிறழ்வான மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார்  இன்னும் இவர் படைப்புகளை  ஆராய விரும்புகிறேன்.

 

                                                            (இன்னும் வரும்)

    

Series Navigationநான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும். 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *