இறுதிப் படியிலிருந்து –   சகுனி

author
0 minutes, 4 seconds Read
This entry is part 13 of 17 in the series 22 ஆகஸ்ட் 2021

 

`                                 

                                       ப.ஜீவகாருண்யன்

அக்காள் காந்தாரியும் அழகிய தங்கைகள் பத்துப் பேரும் அஸ்தினாபுரத்து இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மனைவியாகப் போகும் மகிழ்ச்சியில் நான் சகோதரிகளுடன்  பலநாட்கள் வண்டிப் பயணத்தில் அஸ்தினாபுரம் வந்தடைந்தேன்.  ‘மொத்த தேசத்தில் பதினாறில் ஒரு பங்கு மட்டுமே விவசாயத்திற்கு!’ என்னும் வகையில் மலைகளும் மடுக்களும்  குன்றுகளும் குகைகளும் நிறைந்த காந்தாரத்தில் தந்தை சுபலனின் சிறிய மாளிகையின் வனப்பில் மகிழ்ந்து போயிருந்த நான் யமுனை நதிக்கரையோரத்தில் காட்டையடுத்து, காடுகள், கழனிகளை அடுத்து அமைந்திருந்த  அஸ்தினாபுர அரண்மனையின் அழகிலும் அதன் விஸ்தீரணத்திலும் பிரமித்துப் போனேன். அரசனே ஆனாலும் ஆடவன் ஒருவன் இரண்டு மூன்று பெண்களை மனைவியாக்கிக் கொள்வதை நியாயமாக நினைத்திருந்த நான்,  ‘ஒற்றை ஆடவனுக்கு ஒரே குடும்பத்தின் பதினோரு சகோதரிகள் மனைவிகளா! அநியாயமாக அல்லவா இருக்கிறது? தந்தை ஏன் இப்படியொரு தவறான  முடிவுக்கு ஆட்பட்டார்?’ என்னும் எண்ணத்தைக் கடந்து, ‘சரி, தந்தை பெரிதாய் ஒன்றும் தவறு செய்து விடவில்லை. சகோதரிகளுக்கு வசதி மிகுந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது. சகோதரிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தால் போதும். திருமணம் முடியட்டும். காந்தாரம் திரும்புவோம்!’ என்னும் முடிவுக்கு வந்தேன். திருமண ஏற்பாடுகளைத் தெரிந்து கொள்ள அரண்மனையை அலசிச் சென்றவன், நெடுநெடு உயரத்தில் கனத்தத் தோள்களும்,  பெரியதொரு பாறைத்துண்டு போல பரந்த மார்பும், கரணைகள் போல கால்கள், கைகள் கொண்டவராக, கம்பீரப் புருஷராகத் தெரியும் மனிதர் தான் சகோதரிகளுக்குக் கணவராகப் போகிறவர் எனத் தெரிந்து அதிசயித்தேன். ’குறையொன்றுமில்லை. அன்புச் சகோதரிகளுக்கு அடலேறு போல கணவர் வாய்த்திருக்கிறார்!’ என்று மகிழ்ச்சி கொண்டேன். ஆனால், எனது அளவு மீறிய அந்த ஆனந்தக் களிப்பு அடுத்த சில நொடிகளில், ‘சகோதரிகளைக் கைப்பிடிக்க இருப்பவன் பிறந்த நாள் முதல் உலகத்தை இருளாகவே பார்த்துப் பழகிப் போன பிறவிக்குருடன்!’ என்னும் உண்மையை அறிந்ததில் உடைந்து போன மண்கலயமாக உருக்குலைந்து நின்றேன்.

‘பார்த்தாலே பசியாறிவிடும்!’ என்னும் வடிவிலான தங்கப் பதுமைகள் போன்ற எனதழகுச் சகோதரிகளைக் கைப்பிடிக்க இருப்பவன் குருடன் எனத் தெரிந்தே படு குழியில் தள்ளினாரா தந்தை? பிறவிக் குருடனுக்கு பதினோரு பச்சிளஞ் சிட்டுக்களை எப்படிப் படையலிடத் துணிந்தான் பீஷ்மக் கிழவன்?’

இரத்தம் கொதித்தது.

‘மாற்றானுடைய அரண்மனையில் சகோதரிகளுக்கு நடக்க இருக்கும் அக்கிரமத்துக்கெதிராக ஒற்றை மனிதனாகக் கொதித்து–குதித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.’ என்னும் புரிதலில் ஓட்டுக்குள் அடைக்கலம் கொள்ளும் ஆமைபோல ஒடுங்கிப் போனேன். ‘அய்யோ! ஏமாற்று மோசடியாகி விட்டதே இளம் பெண்களின் வாழ்க்கை!’ என்று அன்புச் சகோதரிகளுக்காக அலமலந்துக் கண்ணீர் வடித்தேன்.  காந்தாரம் திரும்பும் முடிவைக் கைவிட்டேன். திருதராஷ்டிரன் மகிழும் வகையில் சிறந்த வகை குதிரைகளால் புகழ் பெற்ற எனது சின்னஞ் சிறிய காந்தார தேசத்தை தந்தையின் அனுமதியுடன் அஸ்தினாபுர ஆட்சிப் பெட்டிக்குள் அடக்கினேன். ‘வாழ்வோ சாவோ-நல்லதோ கெட்டதோ  சகோதரிகளுடன் இருந்து எதையும் எதிர் கொள்வது!’ என்னும் முடிவெடுத்தேன். தந்தையுடன் சகோதரர்கள் இருக்கும் துணிவில் அழகுக் காந்தாரத்தை அடியோடு மறந்தேன்.

எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. வந்த நாள் முதல் இந்த நாள் வரை அஸ்தினாபுரம் அரண்மனையில் எந்தக் குறையுமில்லை எனக்கு.  காந்தாரி கண்களைக் கட்டிக் கொண்டது அவளது தனிப்பட்ட விருப்பமாகி விட்ட சூழலில் அவளுக்கும் மற்ற சகோதரிகளுக்கும் கூட, ‘கணவன் கண்களற்றவன்!’ என்னும் குறையொன்றைத் தவிர வேறு குறைகளில்லை. பதின்மூன்று ஆண்கள், ஒற்றைப் பெண் துச்சலை என காந்தாரி பதினான்கு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள். மற்ற சகோதரிகளுக்கும் நான்கு, அய்ந்து என்னும் கணக்கில் புதல்வர்கள் வாய்த்து விட்டார்கள். அஸ்தினாபுரம் வந்த பிறகு நான்கு வருடங்கள் கழித்து நானும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து இன்று பேரன் பேத்திகளைக் கொஞ்சுகிற கிழவனாகி விட்டேன்.

கெளரவர்கள், பாண்டவர்களுக்கிடையில் ராஜ்ஜியப் பங்கீட்டுப் பிரச்சனையில் ரத, கஜ, துரக, பதாதிகள் நிறைந்ததாகப் பதினோரு அக்ரோணியம்-ஏழு அக்ரோணியம் சேனை கணக்கில் யுத்தம் ஏற்பட்டுப் பதினாறு நாட்களாகி விட்டன.  ‘பதினோரு அக்ரோணிய சேனை, ஏழு அக்ரோணிய சேனையை எளிதாக வென்று விடும்!’ என்று தான் எண்ணினேன். ‘மருமகன் துரியோதனன் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும்!’ என்றும் விழைந்தேன். ஆனால், எனது எண்ணம்-விழைவு என்ன ஆகுமோ தெரியவில்லை. இன்று கெளரவ தரப்பில் நானும் எனது புதல்வன் உலூகனையும் சேர்த்து துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சல்லியன், கிருபன், கிருதவர்மா, துரோணரின் புதல்வன் அசுவத்தாமா ஆகியோரே   மிச்சமாகியிருக்கிறோம்.

மறைத்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நடந்து கொண்டிருக்கும் போருக்குக் காரண கர்த்தாக்கள் ஆன ஒரு சிலரில் சகுனி நான் முக்கியமானவனாக முன் நிற்கிறேன்.

யுதிஷ்டிரன் நிகழ்த்திய ராஜசூய நிகழ்வின் விமரிசையில் மனம் வெதும்பித் தவித்த துரியோதனன் என்னிடம் புலம்பினான்.

‘மாமா, தம்பிகளை ஆதாரமாகக் கொண்டு சக்கரவர்த்தியாக ராஜசூயம் நடத்திய யுதிஷ்டிரனின் காலடியில் அரசர்கள் அணி அணியாக  மண்டியிட்டு வரிசை செய்ததைப் பார்த்திலிருந்து இரவும் பகலுமாக எனது மனம் ஓயாமல் எரிகிறது. எரியும் குரோத நெருப்பை எதைக்கொண்டு அணைப்பது? கோடையில் வற்றிச் சுருங்கும் குளம் போல இப்போது நான் வற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலை நீடித்தால்…’

நான் துரியோதனனின் தோள்களைத் தொட்டு ஆறுதல் செய்தேன். அவனிடம், ‘துரியோதனா, பாண்டவர்களின் வளர்ச்சி கண்டு உன்னைப் போலவே நானும் எரிந்து, கருகிக்கொண்டு தானிருக்கிறேன். எதிரியை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்றுதான் அரக்கு மாளிகை திட்டம் வகுத்தேன். உனது தந்தையும் திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார். ஆனாலும் அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்கள் எப்படியோ தப்பி விட்டார்கள். அந்தத் தப்புதல்தான் இன்று அவர்களை ராஜசூய யாகம் நடத்தும் அளவுக்கு வளர்த்திருக்கிறது. ஆனாலும் கவலைப் படாதே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! அடிப்படையில் பலசாலிகளான  பாண்டவர்களுக்கு ராஜசூய யாகத்தின் மூலம் மேலும் பலம் கூடியிருக்கிறது; திரெளபதியால் பாஞ்சாலன் துருபதனின் பெருந்துணை வாய்த்திருக்கிறது. ஆகவே, இப்போதைய சூழலில் பாண்டவர்களுடன் மோதி எதையும் சாதிக்க முடியாது. சூழ்ச்சியின் மூலமே அவர்களை வெல்ல முடியும். தாமதிக்காமல் அவர்களை ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அஸ்தினாபுரம் வரவழை.  சூதாட்டத்தில் சகுனி என்னை வெல்ல இன்று வரை யாரும் பிறக்கவில்லை. யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவன். சூது மீதான யுதிஷ்டிரனின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சூதாட்டம் நடத்தி பாண்டவர்களின் வாழ்க்கையைச் சுருட்டிக் காட்டுகிறேன்!’ என்றேன்; துரியோதனனிடம் சொன்னபடி சூதுப் போதையில் தன்னிலை மறந்த யுதிஷ்டிரனை சூழ்ச்சியில் வென்றேன்.    

போர் என்ற ஒன்று இல்லாமல் இருதரப்பும் சமரசம் கொள்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் துரியோதனனின் முன் நின்று கெஞ்சின. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் கேட்டுத் தூது வந்த கிருஷ்ணன் கூட, ‘பாதி ராஜ்ஜியம் இல்லையென்றால் அய்ந்து கிராமங்களாவது கொடு!’ என்று கெஞ்சாத குறையாகத்தான் துரியோதனனிடம் உரிமைப் பங்கீடு கேட்டான். துரியோதனன் அய்ந்து கிராமங்களையும் மறுத்து, ‘ஊசி நிழல் விழும் இடமும் கொடுக்க மாட்டேன்!’ என்று உறுதிபடக் கூறிய பின்னணியில் சகுனி, கர்ணன் ஆகிய எங்களிருவரின் தூண்டுதல் துரியோதனனுக்கு போதையூட்டுவதாக இருந்ததை நானோ கர்ணனோ மறுத்து விட முடியாது.

‘தூதுவன் கிருஷ்ணனிடம் துரியோதனன் ஏன் இத்தனை மூர்க்கமாகப் பேசுகிறான். இந்தப் பேச்சு முறையற்றதாயிற்றே! முதலையும் மூர்க்கனும் கொண்டது விடாது என்பார்களே! துரியோதனன், ’ஆன்றோர் சொல் உண்மை!’ என்பதற்கிணங்க அட்டூழியம் பேசுகின்றானே! இதன் விளைவு ஆபத்தாயிற்றே!’ என்று பீஷ்மரும் விதுரரும் எச்சரித்த பிறகும் நிதானங் கொள்ளாத நான்,  ‘போர்க்களத்தில் வந்து பாண்டவர்களைச் சந்தி!’ என்று கிருஷ்ணன் துரியோதனனை எச்சரித்த பிறகு, ‘உத்தரம் தீப்பிடித்துக் கொண்டது. இனிமேல் அடிக்கழியை யார் பிடுங்கினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை!’ என்னும் தெளிவில் துரியோதனனின் செயல்களுக்குத் தூண்டுகோல் ஆனேன்.

‘பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் உரிமையாகாத வகையில் சகுனியும் கர்ணனும் துரியோதனன் பக்கத்தில் காவல் நிற்கிறார்கள்; திருதராஷ்டிரன் நியாயம் மறந்து திருடர்களுக்குத் துணையாக நிற்கிறான். அதிலும் துஷ்டன் சகுனிதான் கள்ளப் பகடை மூலமாக பாண்டவர்களை வனவாசத்துக்கு ஆட்படுத்திப் போருக்கு மூல காரணமாகியிருக்கிறான்!’ என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பீஷ்மரும் விதுரரும் பொது ஜனங்களின் எதிரில் புலம்பியிருக்கிறார்கள்.

‘சகுனி, கள்ளப் பகடையின் மூலம் பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அபகரித்தான்!’ எனப் பிதற்றுபவர்களின் பிதற்றலில் உண்மையில்லாமலில்லை. யுதிஷ்டிரனுக்கு எதிராக எப்படிக் கள்ளப் பகடையாடினேன் என்பது எனக்கு மட்டுமே உரித்தான ரகசியம்; கள்ளப் பகடை எனது பிரத்தியேகப் படைப்புச் சூத்திரம்!

சகுனி நான் கள்ளப் பகடை ஆடினேன்.

ஆனால், ‘நாலும் தெரிந்தவன், நியாய அநியாயங்கள் உணர்ந்தவன், பெரியவர்களை-பிராமணர்களைப் போற்றுபவன்!’ எனப் பெரும் பெயரெடுத்த நன்னெறியாளன் யுதிஷ்டிரன் விருந்துக்கு வந்த இடத்தில்,  ‘விருந்துண்டோம்! விடை பெற்றோம்!’ என்று அஸ்தினாபுரம் விட்டு இந்திரப்பிரஸ்தம் ஏகியிருக்க வேண்டியதுதானே! கையளவு முத்துகளைப் பணயமாக்கி  ஏன் அமர்ந்தான் என்னுடன் பகடையாட? ‘அடுத்தடுத்துத் தோற்றுக் கொண்டிருக்கிறோம்! நாடு நகரங்களை இழந்து விட்டோம்!’ என்றான பிறகும், ‘பயப்படாதே! நாடு நகரம் போனாலென்ன? பணயமாவதற்கு மிச்சமாக சகோதரர்கள் இருக்கிறார்கள். திரெளபதி இருக்கிறாள். பிறகு என்ன?’ என்ற எனது தூண்டுதலுக்கு ஒப்புதலாக,  ‘எப்படியும் வென்று விடலாம்!’ என்னும் நப்பாசையில்தானே அவன் எனக்கெதிராகப் பகடையை எடுத்தான்? எந்த க்ஷத்திரியனாவாது மனைவியைப் பணயம் வைத்து சூதாடுவானா? யுதிஷ்டிரன் ஆடினானே?  க்ஷத்திரிய தர்மங்களைப் பழுதற அறிந்தவன் பகடையாட்டத்தில் சொந்தச் சகோதரர்களை, கட்டிய மனைவியை அதிலும் அய்வருக்கும் உரிமையான அழகிய பத்தினியைப் பணயப் பொருளாக வைத்ததைப் பற்றி-அந்தப் பகடைக் காதலனைப் பற்றி- என்னைக் குற்றவாளியாக்கிக் குறை கூறும் பெரியவர்கள் ஏன் எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை? பகடையாட்டத்தில் பைத்தியமாக இருந்த யுதிஷ்டிரனை, ’குற்றவாளி!’ எனக் குறிப்பிடுவதற்கு யாருக்கும்  மனமில்லை; துணிவுமில்லை.   

உண்மை எதுவாயினும் பீஷ்மருக்கும் விதுரனுக்கும் அவர்களின் உண்மை எந்த அளவுக்கு நியாயமோ அதே அளவில் சகோதரிகளின் புதல்வர்களுக்காக எனது விருப்பம்-செயல் நியாயமானது என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால்…

துரியோதனன், முற்றி முதிர்ந்து போன பீஷ்மரைச் சேனாதிபதியாக  முன்னிறுத்தியது எனக்குப் பிடிக்கவில்லை. நான் துரியோதனனிடம் கேட்டேன்.

‘தலைமை தாங்கி பாண்டவர்களை எதிர்க்க எத்தனையோ இளையவர்கள், நடு வயதுக்காரர்கள் இருக்க குடுகுடு கிழவனை பெருஞ்  சேனாதிபதியாக நியமனம் செய்திருக்கிறாயே! பீஷ்மர் சேனாதிபதியாக இருப்பது சரியென நினக்கிறாயா?’

‘மாமா, பீஷ்மரைப் பெருஞ் சேனாதிபதியாக்கியது ஒட்டு மொத்தமாக சரியென்று நினைக்கவில்லை. மாறாக ஒரு வகையில் சரியென்றுதான் நினைக்கிறேன். பாண்டவர்கள், கெளரவர்கள் இருதரப்பினரிடையும் பாசம் குறையாதவராக இருக்கும் கிழவருக்கு, சேனாதிபதியாகி விட்ட கடமையில் பாண்டவர்களுக்கெதிராகக் களம் காணும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ‘நமது முன்னோடி-மூத்தவர் தலைமை தாங்கியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக நின்று உதவுங்கள்!’ என்று  நமது தரப்பினரை ஊக்கப்படுத்த முடியும். அதே நேரத்தில் ‘தாத்தாவை முன்னிறுத்தி விட்டானே துரியோதனன்! தாத்தாவை எதிர்த்து எப்படிப் போரிடுவது?’ என்னும் குழப்பத்தில் பாண்டவர்களைப் பலவீனப்படுத்த முடியும்!’ என்று இரு வகையில் யோசிக்கிறேன். எனது யோசனை சரிதானே?’ என்று என்னை எதிர்த்துப் பேச முடியாதவனாக்கினான், துரியோதனன்.

ஒரு வகையில் என்றில்லாமல் பல வகையிலும் துரியோதனனின் யோசனை அன்று சரியென்றே பட்டது எனக்கு. ஆனால், போரில் நானும் துரியோதனனும் நினைத்ததற்கு நேர் மாறாக இருந்தது பீஷ்மரின் நடவடிக்கை. கெளரவர் அணியில் பெருஞ் சேனாதிபதியாக நின்று போரிட்ட பீஷ்மர் பலமான பல சேனாதிபதிகளின் துணையிருந்தும் பத்து நாள் போரையும் உப்புச் சப்பில்லாத வகையில் நடத்தினார் என்பதை அவர் அம்புப் படுக்கையில் படுத்த பிறகுதான் என்னால் அறிய முடிந்தது. பீஷ்மர், கெளரவ அணியின் சேனாதிபதி என்று தலைமை தாங்கினாரே ஒழிய ஒவ்வொரு நாளும், ‘எப்படியாவது போரை நிறுத்திவிட வேண்டும்!’ என்னும் எண்ணத்துடன் பாண்டவர்களுக்கெதிராக ஒப்புக்காக நின்றார் என்பதே உண்மை நிலவரமாக இருந்தது. பீஷ்மர் தலைமையேற்றிருந்த பத்து நாள் அளவிலும் பாண்டவர் தரப்பில் குறிப்பிடத் தகுந்தவர்களாக யாரும் மரணிக்கவில்லை. ஆனால், எங்கள் தரப்பில் எத்தனையோ முக்கியஸ்தர்கள் இறந்துபடும் சூழல் நேர்ந்தது. பீஷ்மரை அடுத்து துரோணர் பெருஞ் சேனாதிபதி ஆன பிறகே பாண்டவர் தரப்பை எங்களால் ஓரளவு பலவீனப்படுத்த முடிந்தது. ஆனாலும் கூட நடந்து முடிந்துள்ள இந்தப் பதினாறு நாள் போரில் துரியோதனன் துச்சாதனன் இருவரைத் தவிர கெளரவ சகோதரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அதிசயம் போல பெருந்தீனிக்காரன் பீமன் ஒருவனிடம் சிக்கி வீர மரணம் எய்தி விட்டனர்.

இப்பொழுது வெற்றித் தேவதையை வசியம் செய்வதற்கு கர்ணன் ஒருவனை நம்பும் நிலை துரியோதனனுக்கு ஏற்பட்டிருக்கிறது. நாளை நடக்க இருக்கும் போரில் கர்ணனுக்கு எதிராகப் பல வகையிலும் பலம் பொருந்தியவர்களாக மும்மூர்த்திகளாக பீமன், அர்ச்சுனன், திருஷ்டத்துய்மன் என்னும் மூன்று முக்கிய எதிரிகள் இருக்கிறார்கள். மூவரில் பீமன், திருஷ்டத்துய்மன் இருவரைத் தவிர்த்து விட்டாலும் ஒற்றைக்கு ஒருவனாக கர்ணனை நேர் நின்று எதிர்க்கக் கூடியவனாக இன்னும் சரியாகச் சொல்லப் போனால் கர்ணனினும் வல்லமையுடையவனாக அர்ச்சுனன் இருக்கிறான்.

களத்தில் அர்ச்சுனனுக்கெதிராக கர்ணன் சிறந்த வில்லாளியே ஆயினும் பீஷ்மர், துரோணர் புடை சூழ விராடனின் ஆநிரைகளைக் கவர்ந்து வரச் சென்ற தருணத்திலும் வேறு சில நிகழ்வுகளிலும் அவன் அர்ச்சுனனின் எதிர் நிற்க இயலாதவனாக ஓடியவன் என்பதும் மறுக்கவியலாத உண்மையாக இருக்கிறது. இன்றைய பதினாறாம் நாள் போரிலும் தேடி வந்து பொறியில் சிக்கிய எலியாக கர்ணனிடம் ரணகளப்பட்ட நகுலன் யாரும் எதிர் பாராத அதிசயமாக, கர்ணனின் கருணைக்கு ஆட்பட்டுத் தப்பியவனாக உயிர் பிழைத்திருக்கும் விபரீதமும் நடந்திருக்கிறது. கர்ணன் என்னும் சிங்கத்தின் பிடியிலிருந்து அந்த நகுல சிறு நரி பிழைத்தது எந்த வகையிலும் நம்ப முடியாததாக இருக்கிறது.   அதுவுமில்லாமல், ‘போரில் சூதன் கர்ணனுக்கு க்ஷத்திரியன் நான் தேரோட்ட வேண்டுமா?’ என்று துரியோதனனிடம் சல்லியன் வேறு தகராறு செய்து கொண்டிருக்கிறான். ஆனால், போரில் எதிராளி அர்ச்சுனனுக்கு இணக்கம் மிகுந்த, சூட்சுமங்கள் நிறைந்த தேரோட்டியாக துவாரகை கிருஷ்ணன்  வாய்த்திருக்கிறான்.

நேற்றிரவு நான் காணக் கூடாததாக ஒரு கனவினைக் கண்டேன். அறுபதாண்டுகளுக்குக் குறைவில்லாததாக வளர்ந்திருக்கும் நெடிய வாழ்க்கையில் நல்லதும் கெட்டதுமாக எத்தனையோ கனவுகள் கண்டிருக்கிறேன். ஆனால், நேற்றிரவு நான் கண்டது உடல், உள்ளத்தை ஒருங்கே உலுக்கும்- ஒடுக்கும் வகையிலான கொடுங்கனவு!

ஆளரவமற்றுப் போன குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்-ரத்த அடையாளமில்லாத புழுதிக் களத்தில் அந்தி சாயும் நேரத்தில் நானும் கர்ணனும் மட்டுமே நிராயுதபாணிகளாக நின்று கொண்டிருக்கிறோம். எக்காளம் முழங்குகிறது. ‘எக்காளம் முழங்குகிறதே! என்ன விஷயம்?’ எனக் கேட்கிறேன் கர்ணனிடம். ‘வெற்றியைக் குறிப்பதாகத்தான் எக்காளம் முழங்குகிறது!’ என்கிறான், கர்ணன். ‘யாருடைய வெற்றியைக் குறிப்பதாக, எக்காளம்?’ என்று கர்ணனிடம் கேட்க மறந்து விட்டேன். வெற்றிக் களிப்பில் பூரித்துப் போனேன்.

‘ஆஹா! துரியோதனன் ஒருவனைத் தவிர்த்து மற்ற கெளரவர்கள் அனைவரும் மூர்க்கன் பீமனின் கதை அடியை வாங்கித் துடிதுடித்து இறந்து போன பிறகு, பிதாமகர் பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்களெல்லாம் அர்ச்சுனன் கணையின் அடியுண்டு வீழ்ந்துபட்ட பிறகு, பதினோரு அக்ரோணியச் சேனை, கிளைகளனைத்தும் அற்றுப் போன பெருமரமாக மொட்டையாக ஆன பிறகு, ‘பரந்து பட்ட குரு ராஜ்ஜியம் முழுவதும் துரியோதனனுக்குப் பூரண உரிமை!’ என்னும் உறுதியுடன் வெற்றி விளைந்திருக்கிறது! பிறகென்ன? இதுவரை நாம் நடத்திய அரசியல் நாடகங்களுக்குரிய பலன் பழுதில்லாமல்-கொஞ்சம் பழுதுகள் கூடியதாக கிடைத்திருக்கிறது!’ என்று மகிழ்ச்சி அடைந்தவனின் தூரத்துப் பார்வையில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. ‘இது என்ன விந்தையாயிருக்கிறது! பொழுது சாயும் நேரத்தில் போர்க்களத்தில் பெண்ணுக்கென்ன வேலை?’ என்று திகைத்தவன் எதிரில் தெரிந்த பெண்ணுருவம் எங்களை நோக்கி வருவது கண்டு திடுக்கிட்டேன். யார் என அறிய முடியாத அந்தப் பெண்ணுருவம் அடிமேல் அடி வைத்து அன்னம் போன்ற நடையில் மெல்ல மெல்ல எங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

‘வருவது யார்?’ எனக் கேட்டேன் கர்ணனிடம்.

‘ஏன், கண்கள் பஞ்சடைந்து விட்டனவா? வருவது வெற்றித் தேவதை என்பது தெரியவில்லையா?’ என்ற கர்ணனின் கேள்வியில் வியந்து எதிர் வரும் பெண்ணை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன்.

கையில் பெரியதொரு பல வண்ண மலர் மாலையுடன், பூரணச் சந்திரப் பொலிவு முகத்துடன், ஒடிந்து-ஒசிந்து-ஒய்யாரமாக வரும் பெண்ணின் அழகில்-அங்க லாவண்யத்தில் பிரமித்துப் போனவன், ‘எதிர் வரும் அழகி ஒற்றை மாலை கொண்டு வருகிறாளே! இங்கே இணையாக இருவர் நிற்கிறோமே! இருவரில் யாருக்கு உரித்தாகப் போகிறது இந்த மாலை?’ என்னும் குழப்பம் கொண்டேன்;  ‘இருவரில் என்னை விட கர்ணனே மாலைக்குத் தகுதியானவன்! மாலை கர்ணனுக்குரியதாயினும் மகிழ்ச்சிதான்!’ என்று கர்ணனை மனதார மதித்து நின்றேன்.

நேர் நிற்கும் எங்களிருவரை நோக்கி நெருங்கி நெருங்கி வருகின்ற வெற்றித் தேவதை, சகுனி எனது பார்வையில் வெகுவாக நாணம் கொண்டவளாகத் தெரிந்தாள்; கூர்ந்த பார்வையில் கொஞ்சம் திரெளபதியைப் போல மிடுக்காகவும் தெரிந்தாள். ‘மாலை யாரேனும் ஒருவருக்கு உரித்தாகட்டும்!’ என்னும் பான்மையில் கண்களை மூடினேன். நெகிழ்ந்துக் கிளர்ந்திருக்கும் நெஞ்சைக் கிள்ளுவதாக-அள்ளுவதாக அருகில்  ‘கிளுக்’ என்று வெற்றித் தேவதையின் சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது. மிகவும் பாரம் கூடியதாக மாலை எனது கழுத்தில் விழுந்திருந்தது. ‘அய்யோ! ஏன் இந்த மாலை இத்தனை பாரம் கூடியதாக இருக்கிறது? ஏன் மாலை மாலையாக இல்லாமல் உருண்டைக் கோளங்களின் கூட்டணியாக உறுத்தலாக இருக்கிறது? மாலையிலிருந்து ஏன் இத்தனை துர்க்கந்தம் வீசுகிறது? மாலையிலிருந்து மார்புப் பரப்பை நனைப்பதாக என்ன திரவம் பிசு பிசுத்து வழிகிறது?’ என்னும் கேள்விகளுடன் கண்களைத் திறந்தவன் திடுக்கிட்டு அலறினேன்.

அருகில், ‘மனிதர்களில் குரூரமான மகா பாவியே! திருதராஷ்டிரனுக்கும் அதிகமாக துஷ்டன் துரியோதனன் மீது பாசமா உனக்கு? பாண்டவர்களுக்கெதிராக ஏனடா உனக்கு இத்தனை வன்மம்?  ‘அசுவத்தாமன் இறந்தான்!’ என்னும் செய்தியில் மனங் குலைந்து தேரில் திகைத்த துரோணரின் தலையை  வாள் கொண்டு திருஷ்டத்துய்மன் வெட்டிய காட்சியில் பயந்து வாலை உள்ளொடுக்கி ஓடும் நாய் போல் களத்தை விட்டு  ஓடிய கோழைதானே நீ? சூழ்ச்சியில் பிழைப்பவனே! வீரம் என்றால் என்னவென்று விவரம் அறிவாயா நீ?’ என்றொரு ஆங்காரக் குரல் கேட்டது.

பீதியுடன் கண்களைத் திறந்து எதிருறும் காட்சியை வெறித்தேன்.  

இத்தனை நேரம் எழிலுறு சிலையாக என்னை மயக்கிச் சீரழித்த வெற்றித் தேவதை கூர்மை கொண்ட கோரைப் பற்களுடன், குருதி கொப்பளிக்கும் வாயுடன்,  சீற்றம் மீறும் செக்கச் சிவந்த விழிகளுடன்,  ‘ஆஹாஹா! ஆஹா!’ என்று அதிராட்டம் போடும் விபரீதத்தில் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போனவன், கனமும் துர்க்கந்தமும் கூடியதாகக் கழுத்தை உறுத்திக் கொண்டிருந்த ரத்தக் கலவை குலையாத மண்டையோடுகளால் ஆன மாலையைக் கழுத்திலிருந்து கழற்றித் தூர வீசினேன்; தனது கழுத்தில் வீழ்ந்த மண்டையோட்டு மாலையைக் கழற்ற முடியாதவனாக ஏற்கனவே-எனக்கு முன்பே குருதிச் சேற்றில் குப்புறக் கவிழ்ந்திருந்த கர்ணனின் மீது மயங்கிச் சரிந்தேன்.

பாண்டவர்களுக்கெதிராக பல வகையில் நான் செய்த தவறுகள் குறித்து காலங் கடந்து இப்போது யோசிக்கிறேன்; கண்கள் பார்வையற்றுப் போன பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறேன்.

‘நாளை என்ன நடக்கப் போகிறது போர்க்களத்தில்?’ என்பது தெரியவில்லை.

                                    *** 

         

                                         

Series Navigation  இறுதிப் படியிலிருந்து –    மாத்ரி    குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *