குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

This entry is part 5 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

நடேசன்

குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது.  கோபுரங்கள் இஸ்லாமிய வடிவமும்,  வளைவுகள் ஐரோப்பிய முறையும் கலந்த கலவையாக அந்தக் கட்டிட வடிவம் இருந்தது.  அந்த நகரத்தில் அதைப் பார்க்கப் பலர் வந்தார்கள். இந்தியாவின் பிரதான கவர்ச்சியாக இருக்கும் தாஜ்மகாலும் ஒரு சமாதி என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

ஜுனகாத் நகரில் பெரிய  கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். பழைய கோட்டை.  அதிக பராமரிப்புள்ளதாகத் தெரியவில்லை.  ஆனால்,  பிரமாண்டமாகத் தெரிந்தது.  

எனக்கு ஜுனகாத்தில்   முக்கியமெனத் தெரிந்த விடயம் அங்கிருந்த  பல ஆழமான படிக் கிணறுகள். அவை, அழகான சிற்ப  வேலைப்பாடுகள் கொண்ட  வளைவுகளுடன் தெரிந்தன. கிணற்றின் கீழ்படிவரை சென்றால் அங்கு  குளிரூட்டப்பட்ட  இடங்கள் போல்  குளிராக இருந்தது.  எனது கற்பனைத்திரையில்  தண்ணீர் எடுக்க வந்த பெண்கள்,  படிகளில் குந்தியிருந்து பேசி இளைப்பாறும் காட்சிகள் விரிந்தன . நான் பிறந்த எழுவைதீவில்,  தண்ணீர் எடுக்க அம்மா ஒரு கிலோமீட்டர் தூரம் செல்லும் போது நானும் அம்மாவோடு போவேன். தண்ணீர் அள்ளியபின்பு  ஊர் விடயங்கள் பல அலசப்பட்ட பின்பே அம்மா மீண்டும்  குடத்தை இடுப்பில் வைப்பார். பெண்களுக்கு  இந்தத்  தண்ணீர் எடுக்கும் இடங்கள்,  தற்போதைய முகநூல்போல்,  சுதந்திரமான வெளியாகவும்,  எதையும் பேசிக் கொள்ளும் ஊடக வலயமாக இருந்தன.

குஜராத்தில் பல இடங்களில் இப்படியான கிணறுகள்,  அக்காலத்தில் சிற்றரசர்களாலும் நவாப்புகளாலும் பொதுமக்களுக்கு கட்டப்பட்டிருந்தன. இந்தியாவின் தென் மாநிலங்களோடு ஒப்பிடும்போது,  குஜராத் ஈரமற்ற மாநிலமாகத் தெரிந்து. சௌராஷ்டிரம் எனப்படும் இந்தப்  பகுதியில்  வருடத்திற்கு 550 MM மழையே பெய்கிறது. இது  தார்பாவைனைத்தில் (313MM) பெய்யும் மழையிலும் சிறிதே கூடியது. நமது வறண்ட யாழ்ப்பாணத்தில் இதைவிட இரண்டு மடங்கு மழை பெய்கிறது. நாம் நீரைத் தேக்குவதில்லை ஒரு விதத்தில் குஜராத்தியினர் பலர் ஏன் வியாபாரிகளாக மாறினார்கள், வெளிநாடுகள் சென்றார்கள் என்பதை  ஊகிக்க முடிந்தது.    

********

மவுரியப் பேரரசன் அசோகனின் கட்டளைகள்,  பிராகிருத மொழியில் (Prahirit) பிராமி எழுத்து  (Brahmi) வடிவத்தில் செதுக்கப்பட்ட பாறைகள் குஜராத்தில் உள்ள ஜுனகாத் ( Junagadh)  இல் இருந்தன என்பது அங்கு போகும் வரை எனக்குத் தெரியாது . வழிகாட்டி அழைத்துக் கொண்டுபோனபோது ஏதோ பழைய சிற்பங்களைப்  பார்க்கப் போகிறேன் என நினைத்தேன்.

2260 ஆண்டுகள் முன்பாக அசோக மன்னனால் 14 அரச கட்டளைகள்  பாறையில்  எழுதப்பட்டுள்ளது .  அருகே நமக்குப் புரிய, ஆங்கிலத்தில் அதனது மொழியாக்கமுள்ளது. அதிலுள்ள   இரண்டாவது அரச கட்டளை மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் வைத்திய வசதி செய்யப்படவேண்டும் என எழுதப்பட்டு  இருந்தது. அதைப் படித்ததும்  எனக்குக் கால்கள் நிலத்தில் நிற்கவில்லை. மிருக வைத்தியனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது கிறிஸ்துவுக்கு 260 வருடங்கள்  முன்பாக அரசகட்டளையாகி இருந்தது என்பதை ஏற்கனவே அறிந்ததன் காரணத்தால்  எனது நாவலுக்கு அசோகனின் வைத்தியசாலை எனப் பெயர் வைத்தேன்.  ஆனால்,  அதை நேரில் பார்க்கும்போது  எனக்கு ஏற்பட்ட உணர்வு,  இளம் வயதில் வரும் காதலுணர்வுக்கு சமமாக இருந்தது.

ஐரோப்பாவில் ரிண்டபெஸ்ட் (Rinderpest) என்ற வைரசால் மாடுகள் இலட்சக்கணக்கில்  இறந்ததால்  அதற்கான வைத்தியம் மற்றும் நோயை  ஆராய்வதற்காக  1762  இல் முதலாவது மிருக வைத்திய பல்கலைக்கழகம் பிரான்சில் உருவாக்கப்பட்டது  (first veterinary college in Europe in Lyon, France in 1762).  இங்கு மனிதர்களது உணவுத் தேவையே முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால்,  அசோகனது கட்டளையில் ஜீவகாருண்யம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக அரச அடுக்களைச் சமையலில் மிகவும் குறைந்த அளவே மாமிசம் பாவிக்கப்பட்டதாகவும், அதாவது ஒரு நாள் மட்டும் மாமிசம் சமைத்தார்கள் எனவும் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

நேபாளத்தில் அசோகனது எழுத்துக்கள் உள்ள தூணைப்பார்த்தேன். ஆனால்,  அது மதச்சார்பான ரும்பினியில் இருந்தது   அது  பாடலிபுரத்திலிருந்து சில நூறு ( 218 miles) மைல்களே . ஜுனாகாத் மவுரியத் தலைநகரிலிருந்து  ஆயிரம் (1143 miles) மைல்கள் தூரத்தில் உள்ள இடம். அக்காலத்தில் அவ்வளவு தூரத்தில் ஒரு அரசால் கட்டளை பிறப்பித்து அமுல் நடத்துவது இலகுவானதல்ல.

அசோகனது தாத்தாவான சந்திரகுப்த மவுரியனது காலத்தில் அரச கட்டளைகள் வாய் வடிவமாகவே சென்றன. அக்காலத்தில் எழுத்து இருக்கவில்லை.  அத்துடன் அவனது அரண்மனை  மரத்திலானது என்று கிரேக்க ( மசடோனியா ) நாட்டின் அரச தூதுவராகத் தங்கியிருந்த கிரேக்க நாட்டவர் (Megasthenes)  கூறுகிறார்.

அவர்களின் கூற்றை வைத்துப் பார்த்தால் பிராமி எழுத்து வடிவம் அசோகன் காலத்திலோ அல்லது அவனது தந்தை பிந்துசாரனது காலத்திலோ இந்தியாவின் கங்கை சமவெளிக்கு    வந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு.

 இந்த பிராமி எழுத்துக்கும் சிந்து நதிக்கரையில் கண்டு பிடித்த  மொழி வடிவத்திற்கும்  தொடர்பில்லை என்கிறார்கள் ( சிந்து நதிக் கரை எழுத்துகள்- படங்கள் கொண்டது )  அத்துடன் பிரமி எழுத்து மத்திய கிழக்கிலிருந்து இருந்த  அரமிக்கின் வடிவமே (Aramaic) என்கிறார்கள். அதே நேரத்தில் பிரமி  எழுத்துக்கள் இலங்கையிலும்    ( அநுராதபுரம்,  திசமகராம,  கந்தரோடை ) மற்றும்  தமிழகத்திலும் கிமு  600  ஆண்டுகளில் உள்ள மட்பாண்டங்களில் இருந்ததாகப் பல தகவல்கள் உள்ளது. அதன் அடிப்படையில் வட இந்தியாவிற்கு முன்பாக இலங்கை, தென் இந்தியாவுக்குக் கடல் மூலத்தொடர்புகளால் பிராமி எழுத்துவடிவம் வந்திருக்கலாம் என எண்ணமுடியும்.  இதை விடச் சிந்து நாகரீக எழுத்துகள், அந்த நாகரீகத்தின் அழிவின்பின்பு   இந்தியாவின் மற்றைய இடங்களுக்குப் பரவியதா என்பதும் மொழி ஆராய்ச்சியாளர்களிற்கான கேள்வி. நமக்குத் தேவையற்றது.

அசோகனின் கட்டளைகளின் பின்பாக நாங்கள் சென்ற இடம் கீர் வனம்

இறுதியாக ஜுனாகத் (Junagadh) சமஸ்தானத்தை ஆண்ட நவாப் (Nawab Mohammad Mahabat Khanji III) இந்தியா- பாகிஸ்தான் சுதந்திரகாலத்தில் பாகிஸ்தானோடு தனது சமஸ்தானத்தைச்  சேர்க்க முயன்று தோல்வியடைந்தபோது,  பாகிஸ்தானிற்கு குடும்பத்தோடு சென்றார். ஆனால்,  அந்த நவாபின் நல்ல செயல்  விடயமே நாம் செல்லும் சிங்கங்களின் சரணாலயம் . நவாப் தனது வேட்டைக்கு உருவாக்கிய காடே தற்பொழுது கீர் தேசிய வனமாக உள்ளது . இங்கு 500 மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன என்பதுடன் இனப்பெருக்கமடைகின்றன என்பதும் முக்கியமான விடயம் . இங்கு மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

இங்கு நாங்கள் சென்ற காலம் வறண்ட கோடைக்காலம், அத்துடன் ஏராளமான இந்திய பயணிகள் வந்திருந்தார்கள். ஒரு நாள் முழுவதும் ஜீப்பில் சுற்றிய போதும் அங்கு சிங்கங்களைக் காணமுடியவில்லை. இதுவும்  நேபாளத்தில்  சிறுத்தைகளைத் தேடிய பயணம் போன்று முடிந்தது.  இரைதேடும் மிருகங்களை காண்பதற்கு அதிஸ்டமிருக்கவேண்டும். ஏமாற்றமாக இருந்தாலும் ஏராளமான முதலைகள் மான்கள் மரைகள் என்பவற்றைக் காணமுடிந்தது .

ஆசியச் சிங்கங்கள் எல்லா இடங்களிலும் அழிந்த பின்பு இங்கு பாதுகாப்பாக இனப்பெருக்கம் செய்கின்றன என்பது மனதிற்கு திருப்தி தரும் விடயமாக இருந்தது . அத்துடன் அந்த வனத்தில் இன்னமும் பழங்குடி மக்கள் வசிப்பதையும் காணமுடிந்தது.

மீண்டும் அகமதாபாத் வந்தபோது,  புது டில்லி போக உத்தேசித்திருந்த எமக்கு  அங்குக் கலவரங்களும்,  அதன்பின்  கொலரா தொற்றும் ஏற்படதாக அறிந்தபோது,  சென்னையை  நோக்கி வந்தோம். சென்னையில்  ஒரு கிழமை நின்ற பின்னால்,  மெல்பன்  வந்த இரு கிழமைகளில்  கொரானாவுக்காக முழு நகரமும்  மூடப்பட்டது.

இந்தப் பயணத்தில் புத்தர் பிறந்த, உபதேசம் செய்த இடங்களுடன்  மகாத்மா காந்தி வாழ்ந்த இடங்களை பார்க்க முடிந்தது.  இலங்கை,  நேபாளம், மற்றும்  இந்தியாவில் வாரணாசி,  குஜராத் என ஆறு கிழமைப் பயணத்தின் நினைவுகள்,  எடுத்த ஒளிப்படங்கள்  தற்போதைய கொரோனோ  முடக்க நாட்களில் மனதைத்  தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.

—0—

 

 

Series Navigationசிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்கலியுக அசுரப்படைகள்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *