பெரிய கழுகின் நிழல்

This entry is part 18 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

எஸ்.சங்கரநாராயணன்

அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது.  நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி கருப்பும் சாம்பலுமான நிறம். சற்று முதிர்வான சிறகுகள் பழுப்பு தந்திருக்கக் கூடும். ஒடுங்கிய தலைக்குக் கீழ் ஜாடி போல பருமன். அதன் அலகு தனி எடுப்பாய் நீட்டி முன்பக்கம் வளைந்திருந்தது. மூக்கு நுனியே நகம் போலத்தான் தெரிந்தது. தீவிரமான கண்கள். சதா எதையும் நோட்டம் விடுகிற… பார்க்கிற அல்ல, நோட்டம் விடுகிற கண்கள். சரி. கழுகு எதற்கு எப்படி அந்த அறைக்குள் வந்தது. பெருங் காட்டின் ஆழங்களில் வேவு பார்த்தபடி மகா உயரங்களில் சஞ்சரிக்கும் கழுகு அல்லவா அது? அதுவரை அவள் பார்த்திராத, அறிந்தேயிராத கழுகு. அவளிடம் அதன் தேவைதான் என்ன?

இரவு விளக்கின் நீல ஒளி. ஒரு மயக்கத் தக்க கனவு நிலையை அந்த அறைக்குத் தந்தது. சாதாரண நாளில் அது பார்த்திபனுக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுத்திருக்கும். அவனே தளர்ந்திருந்தான். எத்தனை நல்ல பெண் இவள். சுசிலா. சதா புன்சிரிப்பு காட்டும் முகம். மெலிந்த நீண்ட உடல். சந்தன நிறம். கன்னங்கள் ஒடுங்கி ஒரு தேசல் வாழைக்காய் போல காணும். எப்பவும் துறுதுறுவென்று இருப்பாள். கலகலப்பான பெண். சும்மா உட்கார்ந்திருந்தால் கூட அவள் முக பாவனையில், உள்ளே அவளுக்கு எதோ இளையராஜா பாட்டு ஓடிக் கொண்டிருப்பதாய்த் தோன்றும்.

சுசிலா மாசமாய் இருந்தாள். அவன் அவளருகில் இருந்தால் அவன் கையை எடுத்துத் தன்னுடன் வைத்து மூடிக் கொள்வாள். “என்ன இது?” என்றால் “சும்மா,” என்பாள். பெண்களின் உலகம் எளிமையானது. மிக மிக நேர்மையானது. ஆசை அல்லது காதல் ஆண்களுக்கு இல்லை என்பது அல்ல. ஆனால் அதைக் காட்டிக் கொள்ள ஆண்கள் பெண்களைப்போல மெனக்கிடுகிறார்கள் இல்லை, என்று நினைத்துக் கொண்டான் பார்த்திபன். காதல் என்பது ஒரு கனவு நிலை. அதை ஊதிப் பெருக்கி பலூன் போல எறிந்து விளையாட வல்லவர்கள் பெண்கள். கொண்டாட்டம் போடுகிறார்கள். சட்டென பால் போல பொங்கிச் சிரிக்கும் பெண்கள் மகிழ்ச்சியைச் சுற்றிலும் சிதற விடுகிறார்கள். வாசனை போல மிதக்க விடுகிறார்கள். இடங்களுக்கே ‘பெண்வாசனை’ என்பது உண்டு.

உள்ளே கரு தங்கும் வரை மசக்கை படுத்தி யெடுத்தது. எதைச் சாப்பிட்டாலும் புரட்டிக் கொண்டு வெளியே வந்தது. உடலை நடுக்கி சர்ரென்று வெளியே சீறும் வாந்தி. பிறகு ஒரிரு வாரத்தில் அது அடங்கி அவள், அவர்கள் கணவனும் மனைவியும் ஆசுவாசப் பட்டார்கள். உள்ளே கரு தங்கி செட் ஆகும்வரை கவனமாக இருக்கச் சொன்னார்கள். நடந்தாலும் அதிர நடக்காத கவனம் வேண்டும். வேகமாக அசைய வேண்டாம். மாடி ஏறி இறங்குதல் தவிர்க்கலாம். என்னென்ன முன் எச்சரிக்கைகள்… ஒரு திகிலான சுவாரஸ்யம் இருந்தது வாழ்க்கையில்.

சுசிலா விழித்தபோது நல்ல வெயில் வந்திருந்தது. மருத்துவமனை இரண்டாவது தளத்தில் தனி அறை. திரைச்சீலைகளைத் திறந்து ஒதுக்கி வைத்திருந்தான் பார்த்திபன். வெயிலின் ஒரு பகுதி வெளிச்சமாய் திரைச்சீலையின் ஓரப் பகுதியில் பளீரிட்டிருந்தது. திரைச்சீலையின் உட்பகுதி சரியாகப் பொரியாத அப்பளம் போல் நிழலடித்து உட் சுருண்டு கிடந்தது. வெயில் ஒரு ஒளித் தகடு போல ஜன்னலுக்குள் நுழைந்து அவளது கட்டிலுக்குச் சற்று அருகில் வரை தரையில் சூடாய் விழுந்திருந்தது, கொட்டி விட்ட தயிர்.

மகா சோர்வாய் உணர்ந்தாள் சுசிலா. முதுகுத் தண்டின் கீழ்க் கடைசி எலும்பில் இன்னும் சுணக்கம் தெரிந்தது. அப்படியே முதுகு அழுந்தப் படுத்துக் கிடக்கலாம் போலிருந்தது. சோம்பல் உதறி ஒரு பிடிவாதத்துடன் தலையைத் தூக்கினால் உடம்பே கிடுகிடுவென சொளகில் தானியம் போல நடுங்கி அதிர்கிறது. “வேணாம் படுத்துக்கோ சுசி. என்ன வேணும்?” என்றபடி பார்த்திபன் கிட்டே வந்தான். “பாத்ரூம்” என்றாள். மெல்ல கைத்தாங்கலாய் அவனைப் பிடித்தபடி எழுந்து நின்று சிறிது தள்ளாடி சமாளித்து நின்றாள். கழைக் கூத்தாடி போல அவளுக்கு சமநிலைப்பட ரெண்டு கையும் விரிக்க வேண்டி யிருந்தது. “பிடிச்சிக்கவா?” தலையாட்டி மறுத்தாள். அவள் உடம்பில் தெம்பே இல்லை. ரத்தம் அத்தனையும் வற்றி விட்டாற் போல இருந்தது. ஏற்கனவே அத்தனை சதைப் பிடிப்பானவள் இல்லை. இப்போது இருந்த சக்தியும் உறிஞ்சப் பட்டுவிட்டது.

டைல்ஸ் பதித்த சதுர சதுரமான தரையில் பாண்டி யாடுவது போல அவள் நடந்து போனாள். பாத்ரூம் போய் கதவைச் சாத்திக் கொண்டாள். தாள் போடவில்லை. நேற்று மதியத்தில் இருந்து அப்படியொரு தூக்கம் தூங்கி யிருக்கிறாள். நர்ஸ் மணிக்கொருதரம் வந்து பார்த்துப் போனது எதுவும் சுசிலாவுக்குத் தெரியாது. இரண்டு பாட்டில் டிரிப்ஸ் ஏத்தியபின் உறங்க விட்டு விட்டார்கள். அதிலேயே உணவு வழங்கப் பட்டிருக்கலாம், எழுப்ப வேண்டாம் என்று இருந்தது. நல்ல உறக்கம் வேண்டும் இப்போது அவளுக்கு. அதுவே அவளைப் பாதி குணமாக்கி விடும்.

வெளியே வந்தவள் “மணி என்ன?” என்று கேட்டாள். “அவ்வளவா?” என்றாள். “இப்ப உடனே எழுந்துக்கிட்டு என்ன பண்ணப் போறே?” என்று புன்னகையுடன் கேட்டான் பார்த்திபன். அவள் பதிலுக்குப் புன்னகைக்கவில்லை. அவன் சொன்னதை அவள் காதில் பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. திரும்ப அதே பாண்டியாட்ட நடை நடந்து வாஷ் பேசினுக்குப் போய் விரலால் பல் தேய்த்து வாய் கொப்பளித்தாள். அவன் ஃபிளாஸ்கில் காபி தயாராய் வைத்திருந்தான். அவளுக்கு வேண்டுமா, என்று அவன் கேட்கவில்லை. ஓரளவு பசியாய் இருப்பாள் அவள். தவிரவும் காபி உற்சகத்துகும் சுறுசுறுப்புக்கும் ஏற்ற பானம். அவன் தந்த காபியை வாங்கிக் குடித்துவிட்டு திரும்பப் போய் கட்டிலில் சரியுமுன் அவன் போய் அவள் முதுகைத் தாங்கிக் கொண்டான்.

“எதும் இளையராஜா பாட்டு, செல்லுல கேக்கறியா?” வேணாம், என தலையாட்டினாள். “இன்னும் தூங்கணும்…” என்றாள். “சரி. பேசாமல் படுத்துக்கோ” என்றான். “போர்த்தி விடவா?” என்று கேட்டான். வேணாம், என தலையாட்டினாள். அவனோடு எதுவும் பேசக்கூட அவள் முயற்சி செய்யவில்லை. மணி ஒன்பதரை. அவள் கண் விழித்துப் பார்க்கும் வரை அவன் காத்திருந்தான். இன்னும் அவன் காலை சாப்பிடவில்லை. அது நினைவே இல்லை. சீரான மூச்சுடன் சிறிது வாயைத் திறந்தபடி அவள் திரும்ப உறங்க ஆரம்பித்திருந்தாள். உறக்க மிருகத்தின் சிறு உறுமல். இட்லி போல எதுவும் அவளுக்குக் குடுக்கலாமா, என்று அவன் டாக்டரிடம் கேட்க விரும்பினான்.

நேற்று போட்ட ஊசியில் கலந்திருந்த மயக்க மருந்து அவளை இன்னும் தூக்கத்தில் ஆழ்த்தி யிருக்கலாம். தவிரவும் அவளுக்கே மன ஓய்வு வேண்டி யிருந்ததோ என்னவோ. யோசனைகள் பொங்கி பிரளயம் போல அவளை ஆக்கிரமித்து பீரிட்டு அழுகையாக ஆத்திரமாக வெடித்தபின், சக்தியெல்லாம் வடிய அவள் உடல் தளர உறங்க ஆரம்பித்திருந்தாள். மனக் குட்டை குழம்பிக் கிடந்தது. மெல்ல தெளிவடைய வேண்டும்.

போன வாரம் தான் சீமந்தம் நடந்தது. தெரிந்தவரும், உறவினருமாக ஒரே கூட்டம். கல்யாண மண்டபம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு வயிறு எடுப்பாய்த் தெரிந்தது. ஒல்லி உடம்புக்கும் அதற்கும் அது தனியாய் துலக்கமாய் அடையாளப் பட்டது. தலை நிறையப் பூவும் முகம் நிறைந்த சிரிப்புமாய் மனம் நிறைய இளையராஜா அவளில் இசையமைத்துக் கொண்டிருக்கலாம். அன்றைக்கு வாசித்த நாதஸ்வரக்காரனும் ஜோராக வாசித்தான். மேடைக்கு வந்து வாழ்த்திச் சென்ற எல்லாரிடமும் தலையாட்டியபடியே சுசிலா காதை நிறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டு அவன் வாசித்து முடித்ததும் அவள் நிதானதித்து அவனது அடுத்த பாட்டு என்ன என கவனித்தாற் போல இருந்தது.

அவள் தூங்குவதை கிட்டே போய் கவனித்து விட்டு மெல்ல அறையை விட்டு வெளியே வந்தான். வராந்தாவில் நர்ஸ் அமர்ந்திருந்தவள் அவனைப் பார்த்தாள். எதும் தேவையா, என்கிற பார்வை அது. “அவங்க நல்லா உறங்கறாங்க.” அவள் தலையாட்டினாள். “நான் கீழே போய் எதுவும் சாப்பிட்டுட்டு வரேன்…” என்றான். “சரி. நான் ஒரு பார்வை பாத்துக்கறேன்…” என அவள் புன்னகைத்தாள். ரெண்டடி நடந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். “அவங்களுக்கு இட்லி மாதிரி எதுவும் இப்ப தரலாமா?” என்று கேட்டான். “மருந்து ஒவ்வாமை இருக்குமா பாக்கணும்…” என்றவள், “எட்டு மணி நேரம் தாண்டிட்டது இல்லே மருந்து ஏத்தி… குடுக்கலாம்” என்றாள்.

கேன்ட்டின் பரபரப்பாய் இருந்தது. ஆஸ்பத்திரி கேன்ட்டின் போல இல்லை. பதிவான ஓட்டல் போலவே வியாபார மும்முரம். உட்கார நாற்காலி இல்லை. நாலு நாற்காலி, பக்கத்துக்கு ஒன்று என்று போட்ட மேசையில் ஒரு நாற்காலியை யாரோ எடுத்துப்போய் வேறு டேபிளில் ஐந்து பேராய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நேரம் டிபன் என்று பொங்கலோ பூரியோ தீர்ந்திருக்கக் கூடும், என்று தோன்றியது. காலை நேரங்களில் ஓட்டல்களில் பொங்கல் வடை சாப்பிட்டு, ஒரு ஃபில்டர் காபி என்பது நல்ல சாய்ஸ். நேரம் கடந்திருந்தது. பார்சலும் வாங்கிக் கொள்ள ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

நேற்று வரை அம்மாவும் அவர்கள் கூட இருந்தார்கள். நிலைமையின் தேள்க் கொடுக்கு அவர்களையும் தீண்டித் துடிக்க வைத்திருந்தது. ராத்திரி நான் மட்டும் தங்கிக் கொள்கிறேன், நீ வீட்டுக்குப் போகலாம்… என்று சொல்லி அனுப்பி விட்டான். பெண் நோயாளிக்கு ஒரு பெண் துணை என்பது சரியாக இருக்கும், என அம்மா சொன்னபோது, “வேண்டாம்… நான் பார்த்துக்கறேம்மா” என அழுத்தமாய் மறுத்து விட்டான். அம்மா கிளம்ப மனசில்லாமல் கிளம்பினாள்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை. சீமந்தம் முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான அளவில் டாக்டர் செக் அப் என்று போயிருந்தார்கள். மாசா மாசம் அப்படிப் போகிறதுதான். அன்றைக்கு டாக்டர் முகத்தில் கவலை தெரிந்தது. பரபரப்புடன் “இன்னொரு ஸ்கான் பண்ணிறலாமா?” என்று கேட்டாள் டாக்டர். “தேவைன்னா பண்ணிறலாம் டாக்டர். எதும் பெரிய பிரச்னையா?” என்று புன்னகை தோய்ந்த பயத்துடன் கேட்டான் பார்த்திபன். பெரும்பாலும், சமாளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும், என நினைத்தான். “வயத்துல பேபி மூவ்மென்ட் இருக்காம்மா?” என்று கேட்டாள் டாக்டர். இவளுக்கு, சுசிலாவுக்கு வித்தியாசமாய் எதுவும் இருந்ததாகச் சொல்லத் தெரியவில்லை.

திரும்ப அவன் சுசிலா இருந்த அறைக்கு வந்தபோது, அவன் கதவைத் திறந்த சத்தம் கேட்டு அவள் கண்ணைத் திறந்தாள். பெரிதும் அசைவுகள் இல்லை. அவள் தன்னாழத்தில் தான் இருந்தாள். சோர்வின் பிடியில் மூளை சோம்பிக் கிடந்தது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். “எப்ப எழுந்துக்கிட்டே?” என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. சொற்களால் கலைக்கப்படாத மௌனத்துடன் இருந்தாள் அவள். அவனது சொற்கள் அவளது மௌனக் குளத்தில் கல்போல அதிரவில்லை, வட்ட அலைகளை உருவாக்கவில்லை, என உணர்ந்தான். “சாப்பிடப் போயிட்டு வந்தேன்” என்றான். அதற்கும் பதில் இல்லாமல் அவனைப் பார்த்தாள். யோசனை என்று எதுவும் இல்லாமல் அவளது மூளை காலியாய்க் கிடந்தது. “இட்லி… பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். சூடா இருக்கு. சாப்பிட்டிர்றியா?”

அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. “சசி?” அவள் அவனைப் பார்த்தாள். காதில் விழுகிறது. “இட்லி சாப்பிடு… அப்பறம் தூங்கு” என்றான். கிட்டேபோய் அவள் எழுந்துகொள்ள உதவி செய்தான். வெயில் இன்னும் உக்கிரப்பட்டு தரையில் தயிர் சிந்தின அடையாளம் இன்னும் அதிகமாகி யிருந்தது. ஜன்னல் திரைச்சீலைகளை திரும்ப இழுத்து விட்டுவிட்டு ஏ/சி போடலாமா என நினைத்தான். வாழை இலை சுற்றி நான்கு இட்லிகள். சட்னி வேண்டாம் என்று தலையாட்டி மறுத்தாள். “சாம்பார் மட்டும் தரவா?” சரி என்பதுபோல தலையாட்டினாள்.

அவள் திரும்ப கலகலவென்று பேச அவன் அவசரப்படக் கூடாது, என நினைத்துக் கொண்டான். இன்னொரு ஃப்ளாஸ்கில் வெந்நீர் இருந்தது. அந்த மருத்துவமனையிலேயே வெளி வராந்தா பக்கம் சுடுநீர், குளிர்நீர் வழங்குகிற யந்திரம் இருந்தது. போய்ப் பிடித்து வந்து வைத்திருந்தான். இரவு அவள் விழித்துக் கொள்ளவே இல்லை. இரவு பிடித்து வைத்திருந்த வெந்நீரே இருந்தது. “காபியா வெந்நீர் வேணுமா?” என்று கேட்டான். இரண்டு ஃபிளாஸ்கும் அருகருகே இருந்தது. வலது ஃபிளாஸ்கைக் கை காட்டினாள். “வெந்நீரா?” என்று கேட்டான். தலையாட்டினாள். ஒரு தம்ளரில் பாதிக்கு ஊற்றிக் கொடுத்தான். குடித்துவிட்டு திரும்ப நீட்டினாள். டம்ளரை வாங்கப் போனபோது மறுத்துத் தலையாட்டினாள். “இன்னும் வேணுமா?” என்று கேட்டான். ம் என தலையாட்டினாள். திரும்ப அரை தம்ளர் தண்ணீர் அருந்தினாள்.

எங்கோ தூரத்தில் இளையராஜா பாடல் கேட்டது. சாதாரணமாய் அவள் இதை எழுதியது யார், வாலியா, வைரமுத்துவா… என எதாவது அந்தப் பாடல் பற்றி யோசனை செய்வாள். அப்போது அவள் அந்தப் பாடலைக் கேட்ட மாதிரியே தெரியவில்லை. “உடம்பெல்லாம் வலிக்கறா மாதிரி இருக்கா?” என்று கேட்டான். தலையாட்டினாள். அவளிடம் பெரிய யோசனை என்று எதுவும் இல்லை. ஓர் யந்திரத்தின் ஓய்வு நேரம் போல இருந்தது அது. “உடம்புல தெம்பு வந்ததும் நாம டிஸ்சார்ஜ் ஆயிறலாம்…” என்றான். அவள் பதில் சொல்லமாட்டாள் என்று நினைத்தான். அதிகபட்சம் தலையாட்டல். அவ்வளவே அவளிடம் இருந்து பதிலாய் வந்தது. ம்  அல்லது ம்ஹும். தலையாட்டல்.

“படுக்கைலயிருந்து இங்க வந்து சேர்ல உட்கார்ந்துக்கணும்னா உட்கார்ந்துக்கோ.” ம்ஹும். அவளை உற்சாகப் படுத்த ஐபாடில் பாட்டு வைத்தான். பிஜியெம் முடிந்து பாட்டு துவங்குமுன் ம்ஹும், என தலையாட்டினாள். ஒரு மாதிரி தொண்டையில் சிரமம் தெரிந்தது. “வாந்தி வருதா?” ம்ஹும். நேற்றைய மருந்து இன்னும் அவளுக்குள் கசப்பை வைத்திருக்கிறது. மூணு இட்லி வாங்கி வந்திருந்தான். சாதாரணமாகவே மூன்றுதான் சாப்பிடுவாள். ஒண்ணரை தான் இப்போது உள்ளே இறங்கியது. கையால் ஆசி வழங்குவதுபோல, போதும், என்றுவிட்டாள். வெந்நீர் நிறைய, ஒண்ணரை தம்ளர் அருந்தினாள். மெல்ல மெல்ல உணவு அதிகம் எடுத்துக் கொள்வாள் என நினைத்தான். மிகப் பெரும் அமைதியில் இருந்தாள் அவள். அவளிடம் எதுவும் பேச்சுக் கொடுக்கலாமா, இல்லை திரும்ப அவள் உறங்கப் போகிறதானால் போகட்டும் என விட்டுவிடலாமா, என யோசித்தான்.

கட்டிலைக் காட்டி பின்பக்கமாக சிறிது உயரவசத்தில் தூக்கி மாற்றச் சொன்னாள். அவளது சமிக்ஞை அவனுக்குப் பிரிந்தது. படுக்கையும் சிறிது சாய்தளத்துக்கு வந்தது. அப்படியே வாய் சிறிது திறந்த வாக்கில் தன்னைப்போல தூங்கிப் போனாள். பெரிதும் இயக்கம் காட்டாத மூளை. அவளே குழந்தை போலத்தான் நடந்து கொண்டாள். எத்தனை பரபரப்பாய் இருப்பாள் அவள். டிவி அல்லது ரேடியோ வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும். எதாவது பிடித்த பாடல் வந்தால் கூடவே ஒரு வரி பாடுவாள். அந்த பிஜியெம்கள் கூட அவளுக்கு நன்றாக நினைவு இருந்தது. காலம் அவளை இப்போது முடக்கிப் போட்டு விட்டது.

இன்பொரு ஸ்கான் எடுத்தபோதே தெரிந்துவிட்டது. டாக்டர் அவளது அடிவயிற்றில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்துப் பார்த்தபோது பயந்திருந்தாள். உள்ளே… சிசு… அதன் இதயத் துடிப்பு அவளுக்குக் கேட்கவில்லை. என்ன ஆயிற்று? “குழந்தை உள்ளே நகர்றது தெரியுதாம்மா?” என்று அவள் சுசிலாவைக் கேட்டாள். அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. இது அவளுக்கு முதல் பிரசவம். உள்ளே வளரும் குழந்தை பற்றி அவளுக்கு என்ன தெரியும்.

கர்ப்பப் பைக்குள் ஒரு திரவத்தில் நீந்துகிறது குழந்தை. சுசிலாவுக்கு அந்த திரவம் வற்றிப்போய் விட்டிருந்தது. இது எப்படி ஆனது, இதை எப்படி அந்த டாக்டர் முன்னால் கவனிக்கவில்லை என்று தெரியவில்லை. முந்தைய ஸ்கேன் இரண்டு மாதம் முன் எடுத்தது. அப்போது இந்த விஷயம் கண்டுபிடிக்கப் படவில்லை. அப்போது திரவம் வற்றாமல் இருந்ததோ என்னவோ. சரி. அதை இப்ப பேசி என்ன செய்வது.

திரவம் வற்றிவிட்டதால் குழந்தை உள்ளே நீச்சல் அடிக்க முடியவில்லை. அதற்குத் தேவையான உணவும் சரிவர அதற்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். குழந்தை வயிற்றுக்கு உள்ளேயே, பிறக்குமுன்னமேயே இறந்து விட்டது. “என்ன சொல்றீங்க டாக்டர்?” என்று பதறினாள் சுசிலா. “ஸ்டில்பார்ன் பேபி” என்றாள் டாக்டர். அவர்கள் உலகம் வேறு. குழந்தை இறந்து விட்டது, என துடிப்பில் சுசிலாவும் அவனும் இருந்தார்கள். “இப்ப பெரிய உயிர் முக்கியம் நமக்கு” என்றாள் டாக்டர். அவர்கள் தலையாட்டினார்கள். “உடனே அந்தக் குழந்தையை வெளியே எடுக்கணும்…” என்றாள்.

உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்க அவளே தொலைபேசியில் ஏற்பாடுகள் செய்தாள். குந்தை இறந்து போனதுக்கு வருத்தப்பட நேரம் இல்லை. அம்மாவுக்கு டாக்டரின் கிளினிக்கில் இருந்தே தகவல் சொன்னான் பார்த்திபன். காரில் அவனும் சுசிலாவும் வீடு திரும்பியபோது அவள் தயாராய் இருந்தாள். அவர்களைப் பார்த்ததும் அவளும் எதுவும் கேட்கவில்லை. காரில் பின்சீட்டில் சுசிலாவுடன் அம்மா உட்கார்ந்து கொண்டார்கள். இரண்டு ஃப்ளாஸ்க். கை துடைக்கிற சிறு துண்டு. பிஸ்கெட் பாக்கெட்… என தோன்றியதை அம்மா ஒரு வயர்க்கூடையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ம். அத்தோடு சிறு பொதிவில் விபூதி. கார் போய்க் கொண்டிருந்தது. அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுசிலா அப்படியே கிடந்தாள். அழவில்லை. அழ முடிந்தால் நல்லது. அவள் தனக்காக அழுகிறாளா, இறந்துவிட்ட குழந்தைக்காக அழுகிறாளா, என்பதே குழப்பமாய் இருந்தது. தான் பற்றிய பயமும் இருக்கலாம். பார்த்திபன் இதையெல்லாம் யோசிக்காமல் சாலையில் கவனமாய் வாகனம் ஓட்டிப் போகவேண்டும், என நினைத்துக் கொண்டான்.

குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டது. ஆக அது தானாகவே இனி முட்டி வெளியே வர வாய்ப்பு இல்லை. பிரசவ வலியும் அவளுக்கு இப்போது இல்லை. ஆஸ்பத்திரியில் அவளுக்கு ரத்த அழுத்தம் எல்லாம் சரி பார்த்துவிட்டு, இடுப்பு வலி எடுக்க என்று இடுப்பில் ஊசி போட வேண்டும் என்றார்கள். ஒருதரம் இரண்டுதரம் வலியைக் கிளர்த்த என்று ஊசி போடுவார்கள். வேறு வழியில்லை என்றால், டி அன்ட் ஈ (டைலேஷன் அன்ட் இவாகுவேஷன்) பண்ண வேண்டி யிருக்கும், என டாக்டர் விளக்கினாள்.

அவர்கள் யாருமே வெளிப்படையாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நிலைமை கலவரமாய் இருந்தது. அவர்கள் குடும்பத்தில் இப்படி ஆனதே கிடையாது. அவர்கள் இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதே கிடையாது. சரி. அதையெல்லாம் இப்ப பேசி என்ன செய்ய? நல்லாம் நல்லபடியா முடியணுமே ஈஸ்வரா, என்று இருந்தது அம்மாவுக்கு. நேற்றுதான் சீமந்த வைபவத்தின் புகைப்பட ஆல்பம் வந்தது. இப்போதுகூட தற்செயலாக டாக்டர் செக் அப் என்று போனபோதுதான் இந்த விஷயத்தையே கண்டு பிடித்திருக்கிறது. அதுவும் இறந்துபோன உயிரை வயிற்றில் சுமப்பது, என்பது நினைக்கவே நடுக்கமெடுத்தது அவளுக்கு. தான் எதுவும் இசகு பிசகாகப் பேசியோ காரியம் ஆற்றியோ குழப்பம் ஏற்படுத்திவிடக் கூடாது, என நினைத்துக் கொண்டாள்.

பிறகு இடுப்பில் சுசிலாவுக்கு ஊசி போட்டார்கள். சிறிது வலி வந்தது. என்றாலும் பெரிதாய் இல்லை. இடுப்பு எலும்பை விரித்து குழந்தையை வெளியேற்றுகிற அளவில் வலி உந்தவில்லை. ஊசி போட்டபின் சாப்பிட வேண்டாம் என்று விட்டார்கள். அவளுக்கு ஒருபுறம் பசியே உடம்பை நடுக்கியது. இதில் வலித்து குழந்தையை யவெளியேற்ற அவளுக்குத் தெம்பு இருக்குமா என்றே தெரியவில்லை. ஒரு ஊசிக்கும் அடுத்த ஊசிக்கும் இடையே எத்தனை மணிநேரம் இடைவெளி விட வேண்டும், என்று தெரியவில்லை.

நாலு ஐந்து மணி நேரம் இருக்கும் என்று தோன்றியது. இரண்டாவது முறை ஊசி போட்டபோது வலி வந்தது. உடனே அவசர அவசரமாக பிரசவ அறைக்கு அழைத்துப் போனார்கள். அம்மா அவள் நெற்றியில் விபீதி பூசி அனுப்பி வைத்தாள். முனகல்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு சுசிலா பிரசவ அறைக்குப் போனாள். கூடவே ஓடினான் பார்த்திபன். நடந்ததெல்லாம் பரவாயில்லை. இனி இவள் பத்திரமாக வெளிவந்தால் போதும், என்று தோன்றியது. டாக்டர் சொல்லி யிருந்தாள். “நல்லவேளை, சீக்கிரமே பிரச்னையைக் கண்டு பிடிச்சிட்டோம், அதாவது பிரசனை பெரிசாகறதுக்குள்ள” என்றாள் டாக்டர்.

பதினைந்து நிமிடத்துக்குள் சுசிலா அந்தக் கருவை வெளியேற்றி விட்டாள். அவளது முனகல்கள் அடங்கி விட்டன. அந்த நிகழ்வைவிட அது தந்த பயம் அவளுக்குப் பெரிதாய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இதெல்லாம் நம் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும், என்று இருந்தால் யார் எப்படித் தப்பிக்க முடியும்? அடுத்த அரைமணி நேரத்தில் அவளை நகர்படுக்கையில் வைத்து வெளியே கொண்டு வந்து விட்டார்கள். கிட்டேபோய் அவளைப் பார்த்தான். அழுதிருந்தாள். வலியால் வந்ததா, நடந்ததின் வேதனையா தெரியாது. அவளுக்கு அவனது ஆறுதல் தேவை இல்லை. அது அழுது கரைய வேண்டிய துக்கம், என்று தோன்றியது.

அவளுள் பிறக்கப் போகும் குழந்தை பற்றிய பெருங் கனவுகள் இருந்திருக்கலாம். அவள் பெண் குழந்தையை விரும்பினாள். பிறந்தது பெண் குழந்தைதான். கொண்டுவந்து காட்டினார்கள். நிறைய கருகருவென்ற தலைமுடி இருந்தது. உடம்பை விட தலை பெரிதாய் இருந்தாற் போல இருந்தது. அவளிடமும் காட்டினார்கள். அவள் பார்த்துவிட்டுத் தலையாட்டினாள். பொங்கிப் பெரிதாய் அழக்கூடும் என நினைத்தான். அழவில்லை. அவனைப் பார்த்து “உங்களை ஏமாத்திட்டேன்…” என்றாள் சுசிலா. “எதையும் யோசிச்சி மனதைக் குழப்பிக்காதே சுசி. பேசாமல் படுத்து ரெஸ்ட் எடு. உடம்பு தேறட்டும்…” என்றான் பார்த்திபன்.

பிரசவம் போல இது அத்தனை சிரமமானது அல்லதான். உடல் வலியை விட மன வலி, அதுதான் சங்கடம். சரியான நேரத்தில் விஷயத்தைப் புரிந்து கொண்டதில், பெரிய உயிருக்கும் அத்தனைக்கு ஆபத்து இல்லைதான். சுசிலாவுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை. இந்நேரம் அம்மா கூட இருப்பதை விட அவர்கள் இருவர் மாத்திரம் இதைப் பேசிக் கொள்ளலாம், என்று அவனுக்குத் தோன்றியது. அவள் உடலில் தெம்பு ஊறட்டும். இன்னும் ஒருநாள் இங்கே தங்கிவிட்டுப் போகலாம், என நினைத்தான் பார்த்திபன். டாக்டர் சரி என்றிருந்தாள்.

திடீரென்று அவளுக்கு, சுசிலாவுக்கு மனசில் என்னவோ குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். காற்றில் ஆடும் ஜன்னல் திரைச்சீலைகள் அவளை பயமுறுத்தின. யாரோ உள்ளே நுழைகிறாற் போல அவளுக்குத் தோன்றியதா? ஜன்னலைப் பார்க்க அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் உடம்பு சிலிர்த்தது. “என்னாச்சி?” என்று கேட்டான் பார்த்திபன். கிட்டே வந்தபோது அவளுக்கு அவனிடம் ஓர் ஒவ்வாமை ஏற்பட்டது. அவளுக்கு அவன்மீது ஒரு கசப்புணர்வு வந்தது. அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் கிட்டேவந்து அவளைத்… “தொடாதே!” என விலகிக் கொண்டாள். சரி, என உடனே அவன் பின்வாங்கினான்.

“உங்களுக்கு என்னைப் பிடிக்கல இல்லே?” என்று கண் நிறையக் கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டாள். அவன் அவளைப் பார்த்தபடி அப்படியே நின்றான். “பேசாமத் தூங்கு இவளே…” என்றான். “பதில் சொல்லுங்க…” என்றாள். “எல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என்றான். “எனக்கு இப்பவே எல்லாம் தெரிஞ்சாகணும்…” என்றாள். “இவளால எனக்கு ஒரு குழந்தை பெத்துத் தர முடியாது. இவ அதுக்கு லாயக்கே இல்லை. அப்டிதானே என்னைப் பத்தி நினைக்கறீங்க?” என்றாள். “எனக்குத் தெரியும். அப்டிதான் உங்க மனசுல ஓடுது….” என்றாள். “உங்க மனசுல உள்ளதெல்லாம் விஷம்.”

அவள் உடம்பில் ரத்தம் ஜிவ்வெனப் பாய்ந்து முகம் செக்கச் செவேல் என்று ஆகி யிருந்தது. அவன் அம்மாவுக்குதான் ரொம்பக் கலவரமாய் இருந்தது. “பேசாம படுத்துக்கோ சுசிலா” என்றாள் அம்மா. கடுங் கோபத்துடன் அவள் அம்மாபக்கமாகத் திரும்பினாள். “அம்மாவும் பிள்ளையுமா நாடகம் ஆடறீங்களா நாடகம்?” என்று கத்தினாள். அம்மா “என்னடிது, என்னென்னமோ பேசறே?” என்னுமுன் பார்த்திபன் அம்மாவை அடக்கிளான்.

சுசிலாவுக்கு நல்ல ஜுரம் வந்திருந்தது. நெஞ்சு ஏறியேறி இறங்கி மூச்சு வாங்கியது. டாக்டர் வந்து பார்த்துவிட்டு உடனே ஊசி போட்டாள். “கொஞ்சம் அவங்க டென்ஷனா இருக்காங்க” என்றுவிட்டு “பேசாம அவங்க தூங்கட்டும். தூங்கி யெழுந்தால் சரியாயிரும்” என்றுவிட்டுப் போனாள். சுசிலா எதுவும் சாப்பிடவில்லை. அவள் கடுங் கோபத்துடன் இருந்தாள்.

குழந்தை இல்லாமல் போனது தன் கையாலாகாத் தனம் என்று அவளுக்குள் குற்ற உணர்ச்சி எழுந்திருக்கலாம். கணவனின் அன்பு இனி அவளுக்குக் கிடைக்காமல் போகலாம். அவள்மேல் அவன் வெறுப்பு காட்ட ஆரம்பிக்கலாம், என உள்ளே பயம் வந்திருக்கிறதா என்ன? அவள் ஏன் அப்படி நினைத்துக் கொள்ளவேண்டும். அவனுக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது.

வெளியே வந்து டாக்டரிடம் அவன் பேசினான். “இந்த ஏமாற்றத்தை அவங்களால தாங்க முடியல அதான்” என்றாள் டாக்டர். “அவங்க மூளை குழம்பிக் கிடக்கு… நல்ல தூக்கம் தேவை இப்ப அவங்களுக்கு. டிரிப்ஸ் ஏத்தச் சொல்லி யிருக்கிறேன். அதுல தூக்க மருந்தும் ஏத்தி அவங்களைத் தூங்க வைக்கிறேன்…” என்றாள் டாக்டர். தலையாட்டி நன்றி சொல்லிவிட்டு வேளியே வந்தான்.

“எனக்கு பயமா இருக்குடா” என்றாள் அம்மா. “அம்மா நீ வீட்டுக்குப்போ. நான் இவளைப் பாத்துக்கறேன்” என்றான் பார்த்திபன். அவளுக்குக் கிளம்பிப் போக மனசே இல்லை. சுசிலா இரவு முழுக்க திகைத்துக்கொண்டு படுக்கையில் உருண்டுகொண்டு கிடப்பாள் என நினைத்தான். இரவு சாப்பிடக் கூட அவள் எழுந்து கொள்ளவில்லை. நல்ல ஜுரம் இருந்தது. இரத்த அழுத்தம் வேறு அதிகமாய் இருந்தது. வீட்டுக்கு அவளை அழைத்துப் போயிருந்தால் அவளைச் சமாளிக்கத் திண்டாடி யிருப்போம் என்று தோன்றியது. நல்லவேளை. இங்கேயே இவளை வைத்துக்கொண்டு சமாளிப்பது எளிய காரியம்.

இரவில் கெட்ட கெட்ட கனவுகள் வந்தன அவளுக்கு. கரிய பெரிய கழுகு ஒன்று அவளது அறைக்குள் நுழைந்தாற் போல இருந்தது. நல்லா ஆள் உயரத்துக்குப் பெரிய கழுகு. அவள் அவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவளது தலைக்குமேல் கழுகு ஒன்று வட்டமிட்டாற் போல பிரமை. பிரமைதான். கழுகு இங்கே எங்கே வந்தது. என்ன வேலை அதற்கு? சிறகை பிரம்மாண்டமாக விரித்தது அது. அவளுக்குப் பின்னால் நின்றிருந்தது போல. அதன் நிழல் அவனைப் பாதி மறைத்து விட்டது. சற்று கரித்துப் போய் அவன் விகாரமாய்த் தெரிந்தான் அந்த நிழலில்.

யாரோ அவளது குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். அவள் உடம்பில் தெம்பே இல்லை. அவன் பாட்டுக்குக் கூட்ட நெரிசலில் புகுந்து புகுந்து ஓடுகிறான். என்னால் எப்படி பின்னால் துரத்தி ஓடிவர முடியும்? அவளுக்கு மூச்சிரைக்கிறது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். கண்ணில் சூடாய் வெந்நீர் வழிய வழிய அநாதரவாய் நின்றாள்.

சற்று தாட்டிகமான பெண் ஒருத்தி. புதிதாய் மணமானவள் போலிருக்கிறது. என்னமாய் ஆனந்தமாய்ச் சிரித்தபடி நிற்கிறாள். அவள் அருகில் அந்தப்பெண்ணின் கணவன்.. யாரவன்… என்று பார்க்குமுன் அந்தக் காட்சியும் நழுவி விட்டது. மின்னி மின்னி நகரும் காட்சிகள். இடி இல்லை. பெரு மழை கொட்டுகிறது. அந்தப் பெருமழைக்குதான் அந்த வனக் கழுகு உள்ளே வந்திருக்கிறதா? அந்த மழையில் அவள் நனைகிறாளா? குளிர் நடுக்குகிறதே.

பார்த்திபன் கிட்டே வந்து அவளைப் பார்த்தான். இரவு விளக்கின் நீல ஒளி. அவள் கண் பாப்பாகள் துடித்தபடி யிருந்தன. மனசில் என்ன நினைக்கிறாள் தெரியவில்லை. புயலடித்த தோப்பில் அவள் நடந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. சிறு சப்தமும் வராத அளவில் அவன் அமைதி காத்தான். உறங்கட்டும்.

மதியச் சாப்பாட்டுக்கே நேரமாகி விட்டது. அவனுக்கே பசித்தது. இவள் சரியாகவே சாப்பிடவில்லை. ஒண்ணரை ரெண்டு இட்லி எப்படிப் போதும்? அவள் உடம்பே இப்போது அயர்ந்துபோய்க் கிடக்கிறது. துவண்டு வாடிக் கிடக்கிறாள். மெல்ல அவள் கண் விழித்தாள். அல்லது சற்று முன்பாகவே விழிப்பு வந்து உள் யோசனையாய் இருந்தாளோ என்னவோ.

அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவால்லையா?” தலையாட்டினாள். “நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றாள். அவள் பேச ஆரம்பித்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “டாக்டர் கிட்ட கேட்கிறேன்… உனக்கு இப்ப சாப்பிட?” என்று கேட்டான். “ஹா” என்று பெருமூச்சு விட்டாள். “வீட்ல போயி…” என்றாள்.

அறைக்கு வெளியே வந்து டாக்டரின் அலைபேசிக்கு அழைத்தான். இந்நேரம் அவள் வீட்டுக்குப் போயிருப்பாள் என்று தெரியும். ‘எஸ்?” என்று டாக்டரின் குரல் கேட்டது. “இப்ப கொஞ்சம் பேச ஆரம்பிச்சிருக்காங்க டாக்டர்” என்றான் மகிழ்ச்சியுடன். “தட்ஸ் குட்” என்றாள். “டிஸ்சார்ஜ் ஆயிறலாமா?” என்று கேட்டான். “ஆயிறலாம். மேலும் தொந்தரவு இருக்காது” என்றாள் டாக்டர். “நான் ஆஸ்பத்திரியைக் கூப்பிட்டுச் சொல்லிர்றேன்.”

அம்மாவிடம் தகவல் சொல்லி விட்டு ஆஸ்பத்திரியில் பில் செலுத்தி விட்டுக் கிளம்பினான். அவள் எழுந்துகொண்டு கைப்பையில் இருந்த சீப்பை எடுத்துத் தலை வாரிக் கொண்டிருந்தாள். அவன் புன்னகை செய்தான். அவள் பதில் புன்னகை செய்யவில்லை. “லிஃப்ட் வரை நடக்க முடியுமா சுசி?” தலையாட்டினாள். இருந்தாலும் பைகளை எடுத்துக் கொண்டு அவளுக்கு நெருக்கமாகவே வந்தான். லிஃப்ட்டில் கீழே வந்தார்கள். ஆஸ்பத்திரி வாசலில் ஒரு மரத்தடி பிள்ளையார் இருந்தது. அவன் பிடித்திருந்த கைகளைப் பிரித்துக் கொண்டு நின்று செருப்புகளைக் கழற்றிவிட்டு பிள்ளையாரைக் கரங் கூப்பி வணங்கினாள்.

காரில் முன் பக்கமாகவே ஏறிக் கொண்டாள். வீடுவரை அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. “இன்னும் அலுப்பு தீரல்ல உனக்கு” என்று மாத்திரம் சொன்னான். “ம்” என்று குரலால் பதில் சொன்னது பிடித்திருந்தது. “வீட்டுக்குப் போனதும் சூடா ரசஞ் சாதம் பண்ணச் சொல்லிருக்கேன். சாப்பிடலாம்” என்றான். ஆஸ்பத்திரி விஷயம் எல்லாம் மறக்க அவள் விரும்பி யிருக்கலாம். அவனும் நினைவு படுத்த விரும்பவில்லை.

வீடு வந்ததும் அவள் முகத்தில் மேலும் தெளிவு வந்தாற் போல இருந்தது. இது என் உலகம், என அவள் மீண்டாற் போலத் தோன்றியது. வாசல் தோட்டத்தில் செடி ஒரு ரோஜாப்பூ பூத்திருந்தது. போகிற போக்கில் அதை வருடித் தந்தபடியே உள்ளே வந்தாள் சுசிலா. அம்மா வாசல் கதவைத் திறந்தாள். உள்ளே போனவள் அப்படியே ஹால் சோபாவில் அமர்ந்தாள். சிறிது மூச்சிறைத்தது. “பசிக்கிறதா?” என்று கேட்டான் பார்த்திபன். “ம்” என்றாள்.

சாப்பிட்டுவிட்டு மேசையிலேயே கை கழுவினாள். அம்மா வந்து தட்டை எடுத்துக் கொண்டு போனாள். படுக்கை அறையில் ஏ/சி ஆன் செய்திருந்தான் பார்த்திபன். திறந்த கதவு தன்னியல்பாய் மூடிக் கொண்டது. போய்ப் படுத்துக் கொண்டாள். அவன் கிட்டே போய் அவளுக்குப் போர்த்தி விட்டான். “யூ டியூபில் எதும் பாட்டு போடவா? பக்கத்தில் வெச்சிக்கறியா?” அவள் கையை நீட்டி, வா என அவனைக் கூப்பிட்டாள். அருகே வந்தான். கூடப் படுத்துக் கொள்ளச் சொன்னாள். அவனைக் கட்டிக்கொண்டாள். திரும்ப தூங்க ஆரம்பித்தாள். அவனுக்குப் பசித்தது. அவன் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி என்ன? அவன் மனசில் இளையராஜா பாடல் ஒன்று ஆரம்பித்திருந்தது.

•••

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *