குருட்ஷேத்திரம் 9 (திருதராஷ்டிரனால் காலத்தின் கையில் ஊசலாடிய குருதேசம்)

This entry is part 6 of 12 in the series 5 செப்டம்பர் 2021

 

ப.மதியழகன்

 

 

குருடனாய்ப் பிறந்த திருதராஷ்டிரன் தனது மகனின் கண்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தைப் பார்க்கிறான். தான் குருடனாகப் பிறந்ததை ஒரு இழப்பாக அவன் கருதியதே இல்லை. திருதராஷ்டிரன் தனது உயிரை மகன் துரியோதனன் மீது தான் வைத்திருந்தான். அதிகாரமோகம் திருதராஷ்டிரனிடமிருந்துதான் துரியோதனனுக்கு வந்திருக்க வேண்டும். தனது மனைவி காந்தாரியின் சகோதரன் சகுனியின் சொற்களே திருதராஷ்டிரனுக்கு வேதவாக்காக இருந்தது. மூத்த இளவரசன் தான் இருக்க தனது குருட்டுத்தன்மையைக் காரணம் காட்டி பாண்டுவுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது திருதராஷ்டிரனுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது. முதல் மரியாதை பாண்டுவுக்கு கிடைப்பதைப் பார்த்து திருதராஷ்டிரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சகுனியின் சதுரங்க காய் நகர்த்தல் இங்குதான் ஆரம்பமாகிறது.

 

பாண்டு இயல்பாகவே சாதுவான குணாதிசயம் கொண்டவன் அதனை கோழைத்தனம் என்று பாண்டுவின் காதுபடவே பேச வைத்தான் சகுனி. அதனால் பாண்டு மற்ற குருதேச மன்னர்களைப் போல் திக்விஜயம் செய்ய நேர்ந்தது. திருதராஷ்டிரன் பாண்டுவின் அஸ்திதான் திரும்பி வருமென்று காத்திருந்தான். நிலைமை வேறாக இருந்தது பாண்டுவின் திக்விஜயம் வெற்றியில் முடிந்தது. பீஷ்மர் பாண்டுவை சாம்ராட் எனப் புகழ்ந்தது பழுக்கக் காய்ச்சிய எண்ணெய்யை காதில் ஊற்றியது போல் இருந்தது திருதராஷ்டிரனுக்கு. சகலமரியாதைகளும் பாண்டுவுக்கு அளிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மதங்கொண்ட யானையைப் போல் திருதராஷ்டிரன் மனம் நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தது.

 

சகுனியின் செயல்பாடுகளும், திருதராஷ்டிரன் நடந்து கொள்ளும் விதமும் பாண்டுவுக்கு மனவருத்தத்தை அளித்தது. பாண்டு பகைமையை விரும்பாதவன் ராஜ்யத்தை துறந்துவிட்டு மனைவியோடு காட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். தற்காலிக ஏற்பாடாக திருதராஷ்டிரன் குருதேச அரசனானான். காந்தாரி கற்பமுற்றதும் குருதேசத்தின் மூத்தவாரிசை பெற்றெடுப்பாள் என்ற பேராசை திருதராஷ்டிரனுக்கு எழுந்தது, ஆனால் தருமன் முந்திக்கொண்டான். இருபது வருடங்களுக்குப் பிறகு பாண்டுவின் அஸ்திதான் அஸ்தினாபுரம் திரும்பியது.

 

குந்தி விதவையாக பாண்டுவின் ஐந்து புதல்வர்களுடன் அஸ்தினாபுரம் திரும்பினாள். திருதராஷ்டிரன் உத்தமன் போன்று பாண்டுவுக்காக நீலிக் கண்ணீர் வடித்தான். சகுனியோ ராஜ்யத்தில் உரிமை கொண்டாட வந்துவிட்டார்கள் என நினைத்தான். பாண்டவர்கள் மீதான பகைமை உணர்வு துரியோதனனிடத்தில் இயல்பாகவே இருந்தது. அதை தீமூட்டி வளர்த்து வந்தான் சகுனி. பீஷ்மர் பாண்டவர்களையும், கெளரவர்களையும் துரோணரிடம் தனுர் வேதம் பயில்வதற்கு ஏற்பாடு செய்தார். அர்ச்சுனன் யாராலும் வீழ்த்த முடியாத வில்லாளியாக உருவெடுத்தது சகுனிக்குப் பொறுக்கவில்லை. தேரோட்டி அதிரதனின் வளர்ப்பு மகனான கர்ணனுக்கு அங்கதேசத்தை தாரை வார்த்து கொடுத்து துரியோதனனின் நண்பனாக்கி கர்ணனை துரியோதனனின் நிழலாக செயல்படவைத்தவன் சகுனி.

 

பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையேயான பகைமையைத் தணிக்க ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுப்பது என முடிவுசெய்யப்பட்டது. இந்தத் திட்டம் சகுனியின் மூளையில் தான் உதயமானது. திருதராஷ்டிரன் வளமானப் பகுதிகளை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு வனப்பகுதியை மட்டுமே பாண்டவர்களுக்கு அளிக்க முன்வந்தான். பாண்டவர்கள் விலகிச் சென்றாலும் பாண்டுவுக்கு தான் செய்த துரோகத்துக்கு சாட்சியாக அவர்கள் இருப்பதை திருதராஷ்டிரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாண்டவர்களை அழிக்கவே திட்டமிட்டு அவர்கள் வசித்த அரக்கு மாளிகை எரியூட்டப்பட்டது. செத்துக் கிடந்த அப்பாவிகளை பாண்டவர்கள்தான் என நினைத்து எக்காளமிட்டுச் சிரித்தான் திருதராஷ்டிரன். தர்மவான் விதுரன் புண்ணியத்தில் பாண்டவர்கள் அந்த சதியிலிருந்து தப்பித்தார்கள்.

 

தருமனுக்கு சூதின் மீது இருந்த வெறியை சகுனி பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தான். விதுரன் அழைத்தால் பாண்டவர்களால் மறுக்கமுடியாது என திருதராஷ்டிரனிடம் யோசனை சொன்னதும் சகுனிதான். தருமன் திரெளபதியை பணயம் வைத்து தோற்றதை சொன்னதும் பேருவகை கொண்டு பூரித்தான் திருதராஷ்டிரன். துரியோதனனுக்காக அரசனிடம் இருக்க வேண்டிய தர்ம, நியாயங்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்தினான். தன் மகன்  மீது வைத்த பாசம் அவன் மனதையும் குருடாக்கிவிட்டது.

 

எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஒரு சூழ்நிலையை அவன் ஆயுட்காலத்திலேயே திருதராஷ்டிரன் எதிர்கொண்டான். துரியோதனன் போரில் இறந்த செய்தி அவனுக்குத் தெரியப்படுத்தப்பட்டதும் உலகமே இருண்டுவிட்டது அவனுக்கு. உனக்கு உயிர் கொடுத்த நானே உன்னைப் பலிகொடுத்துவிட்டேனே என அழுதுபுரண்டான். போரில் வென்ற பாண்டவர்கள் கண்ணனோடு திருதராஷ்டிரனைக் காண வந்தார்கள். எங்கே பீமன் என்று திருதராஷ்டிரன் கைகள் காற்றைத் துழாவின. திருதராஷ்டிரனின் கொடூர மனத்தை கிருஷ்ணன் உணர்ந்திருந்தான். தன் முன்பு கொண்டு வந்து வைக்கப்பட்ட இரும்பு பொம்மையை துரியோதனனைக் கொன்ற பீமன் என நினைத்து மதம் கொண்ட யானை பலத்துடன் இருகைகளினால் இறுக்கிக் கொன்றான். சத்தியத்தை மீறி தான்தோன்றித் தனமாக நடந்துகொண்ட திருதராஷ்டிரனின் அஸ்தியைக் கரைப்பதற்கு நூறுமகன்களில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. தான் நினைத்ததை தனது மகனின் மூலம் நிறைவேற்ற முயலும் எந்தத் தகப்பனுக்கும் திருதராஷ்டிரனின் வாழ்க்கை நல்ல பாடமாகும்.

 

 

Series Navigationகோவில்கள் யார் வசம்?குருட்ஷேத்திரம் 10 (வசுதேவ கிருஷ்ணனின் தந்திரத்துக்கு அஸ்வத்தாமன் தந்த பதிலடி)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *