ஐரோப்பா பயண கட்டுரை

author
0 minutes, 17 seconds Read
This entry is part 10 of 12 in the series 5 செப்டம்பர் 2021

Eztergom, Budapest _ Hungary

மனோஜ் 

புடாபெஸ்ட்’லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும் கூட. 1000தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட தேவாலயம் நிற்கும் இந்த இடம், ஹங்கேரியின் வரலாற்றில் மிக பெரும் ஒற்றை திருப்புமுனை நிகழ்ச்சிக்கு வித்திட்டது. ரோமர் , ஹன்ஸ், மக்யார்கள் (ஹங்கேரிய மொழியில் ஹங்கேரியின் பெயர் மக்யார் ) என்று ஆண்டு வந்த காலங்களில், 1001’ல் ஹங்கேரியன் முதலாம் மன்னர் என்று கருதப்படும் ஸ்டீபன் I (ஹங்கேரியில் இஸ்துவன்), அது வரை இயற்கை வழி பாகன் வழிபாடு முறையிலிருந்து கிறிஸ்துவராக மாறி அக்கால போப் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பதவி ஏற்று, இன்றய தற்கால ஹங்கேரி கத்தோலிக்க கிறிஸ்துவ இராஜ்யமாக மாற்றிய தளம் இந்த எஸ்டெர்கோம்.


இந்த மதமாற்ற அபிஷேகத்தை நினைவு கூறும் இந்த சிலை 2௦௦௦த்தில் நிறுவப்பட்டு 40 அடி உயர கம்பீரத்தில் நிற்கிறது. சிலையின் பின்னால் ஹங்கேரியின் தானுப் நதி. நதிக்கு மறுகரை ஸ்லோவாகியா நாடு. இந்த தேவாலயத்தின் பலிபீடத்தில் (Altar) உள்ள ஓவியம் ஒரு முழுநீள ஒற்றை கேன்வாஸில் வரையப்பட் உலகின் மிகப்பெரிய ஓவியமாக கருதப்படுகிறது. சுமார் 230 அடியில் இந்த தேவாலயத்தின் குவிமாடம் (DOME) உலகின் 15வது உயரமானது. குவிமாடம் சுற்றி வர வசதி உண்டு. உயரம் புரியாமல் 400 போல  படியேறி  200 அடி உயரத்தில், குவிமாடத்தை சுற்றி வரும் ஒரு அடி போல உள்ள மரப்பாதையில் காலடி வாய்த்த அந்த தருணம் என் இதயம் நின்றது. வீட்டு மொட்டை மாடியிலேயே குலை நடுங்கி நடுவில் நிற்கும் எனக்கு நடுமுதுகு குளிர்ந்து உடல் தெப்பலாய் வியர்த்தது. சுமார் இடுப்பு உயரத்திற்கு ஒரு கம்பி வேலி. அந்தப்பக்கம் பரந்து விரிந்து கிடக்கும் வெற்றிடமாக இவ்வுலகம். ஒரே ஒரு ஆள் சுற்றி நடந்து வர மட்டும் ஒரு அடி போல மரத்திலான சுற்றுவழி. சிலை போல் உறைந்து நான். பின்னால் ஆட்கள். நான் நகர்ந்தாலொழிய பின்னால் இருப்பவர் என்னை கடக்க முடியாது என்ற நெருக்கடி. வேறு வழியே இல்லாமல், என் மானம் காப்பாற்றி கொள்ள ஒரு வகையாய் அடி மீது அடி வைத்து நகர்ந்து சுற்றி வந்த நிமிடங்கள் பல யுகங்கள் போல் நீண்டது. சுற்றி வந்து கீழிறங்கிய தருணம் செத்து, சொர்கமோ நரகமோ போய் திருப்பி அனுப்பப்பட்டது போல் உணர்வு. மொத்தத்தில் அன்றய காமெடி பீஸ். பின்னர் பல முறை சென்று வந்துள்ளேன். கீழிருந்த படியே மேல பார்த்து மட்டும் பெருமிதம் கொள்கிறேன். நிலாவிலிருந்து பூமியை பார்த்த ஒரு விண்வெளி வீரனின் பெருமிதம் !

ஐரோப்பா பயண கட்டுரை

 Budapest, Hungary  

ஆகஸ்ட்-2021 முதல் வார இறுதியில், இங்குள்ள பாலடோன் ஏரி (Lake Balaton – ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏரி) சென்றிருந்த போது , அங்கு ஆட்டமும் பாட்டமுமாக  வந்திருந்தார்கள்  இங்குள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தாள்ஸ் .   நம்ம ஊர் பல கலர் ஜிகு ஜிகு பாவாடை தாவணியில், பூவும் பொட்டுமாக இந்த ஊரு வெள்ளை தேவதைகள் தோலக் தாளத்திற்கு வளைந்து நெளிந்து ஆடி கடந்தார்கள். எங்களை போல சில இந்திய முகங்களை பார்த்து extraவாக மலர்ந்தார்கள்.  அங்கவஸ்திரம், ஜிப்பா,  ருட்ராக்ஷ  மணி தரித்த ஸோல்ட்டன் மாமாக்கள், பேலா சித்தப்பாகள், லாஸ்லோ அத்திம்பேர்கள் நடு குடுமி, சந்தன பொட்டுமாக, நம்ம அருகே வந்து Nike shoes காலோடு அதிகமாக நாலு ஸ்டெப்ஸ் போட்டு, புடாபெஸ்ட்ற்கு கொஞ்சம் போல வெளியில் உள்ள தங்கள் பிரிந்தாவனத்திற்கு அழைப்பு நோட்டீஸ் கொடுத்து ஆடியபடியே தங்கள் குழுவோடு கலந்து மறைந்தார்கள்.  நாங்கள் கிளம்பும் வரை, எங்கோ  ஒரு மூலையில் அந்த டோலக் ஒலியும் பாட்டும் ஒளித்து கொண்டே இருந்தது.    30 நிமிட பயண தூரமே உள்ள அந்த ISKCON நந்தவனம் போக வேண்டும் என்று பல நாளாக நினைவோடு நிற்கிறது.   இன்னும் போக இயலவில்லை.  தங்கள் பண்ணையிலேயே விளைந்த காய் கனிகளும், பசுவின் கறந்த பாலும், நல்ல சைவ  சாப்பாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.    அங்கே மறக்காமல்  கிருஷ்ணனிடம் என் பிரார்த்தனை  “ கோகுல கிருஷ்ணா,    முகுந்தா – மெட்ரோ விட்டு வெளியே வரும்  ஒவ்வொரு  முறையும், உங்க தேவதை விரட்டி வந்து ரசீதும் கையுமா டொனேஷன் கேட்பதிலிருந்து, ஒண்ணு தப்பிக்க வழி  பண்ணு,  இல்ல ஒவ்வொரு முறையும் ஒரு  ஆயிரம் போரின்ட் (forint)  கொடுக்க  எனக்கு வசதி பண்ணி கொடு.  எல்லா முறையும் என்னால வேற தெருவால சுத்தி  ஓடி ஒளிய முடியல கண்ணா “ 

Series Navigationமுன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!கவிதையும் ரசனையும் – 21
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *