கிண்டா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

          வேல்விழிமோகன்                     

 

அந்த குதரைக்கு “கிண்டா..”ன்னு பேரு வச்சேன். ஏன் அந்த பேருன்னு எனக்கு தெரியாது. ஆனா அப்படி கூப்புடும்போது தலையை ஆட்டும். சில சமயம் கனைக்கும். சில சமயம் காலை உதைக்கும். அது சந்தோசமா இருந்தாலும் காலை உதைக்குமுன்னு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா நான் பின்னாடி பக்கமா நிக்கமாட்டேன். சந்தோசத்துல என் பல்லை உடைச்சதுன்னா..

குதரைக்கு ஒரு இது இருக்குது.. அதாவது அதனோட சக்தி.. திறம.. புஜ பலம்னு சொல்லுவாங்களே.. அப்பறம் அதுக்கு மேல இருக்கற முடி.. தலைல இருக்கற கொண்ட.. கொண்டன்னு சொல்ல முடியாது.. ஒரு மாதிரி தலை முடின்னு கூட சொல்லிக்கலாம்.. எனக்கு தெரிஞ்சத சொல்லறேன். எனக்கு முதல்ல சொல்லவே தெரியாது. படிச்சிருந்தா ஒருவேள சரியா சொல்லுவேனோ என்னாவோ.. முதல்ல கிண்டாவை பத்தி சொல்லிடறேன்.. அது ஒரு அனாதைங்க.. அதுக்கு யாரும் கிடையாது.. சூப்பி பாயி வீட்ல ஒரு ஓரமா நின்னுட்டு இருந்தது.. ஒடிசலா பாக்கறதுக்கே பரிதாபமா.. தரைய பாத்துக்கிட்டு.. பாயி நான் பாக்கறதை பாத்துட்டு “அது ஓஞ்சுப்போச்சுப்பா.. எங்கேயாவது கொண்டு போயி விட்டுடலாமுன்னு இருக்கே..”ன்னு சொன்னாரு..

“ஏன் பாயி..?”

“நல்லா வண்டிய ஓட்டினேன் அதைய வச்சுக்கிட்டு.. ஊர்ல குதர வண்டின்னா அது முதல்ல நம்ம வண்டிதான்.. ராசாவாட்டம் ஓடுவான். ஆனா வயசாயிடுச்சு பாரு.. பராமரிக்க முடியல.. காரணம் துட்டு இல்ல..”

“பாவமா இருக்குது..”

“கூட்டிட்டு போய்டறியா..?”ன்னு சும்மா தமாசுக்குதான் பாயி கேட்டாரு. நான் கூட தமாசுக்கு “ஏன் பாயி தமாசு பண்ணறீங்க..?”ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. அப்பறமா ரண்டு.. மூணு முற பாய் வீட்டுக்கு போக வேண்டியிருந்தது..  அது அங்கேதான் இருந்தது.. பாயி ஓட்டுன வண்டி கூட ஒரு ஓரமா அனாதையா ஒடுங்கிப்போய் அழுக்கா.. பாக்கும்போதே எனக்கு அந்த வண்டி மேல ஆசையா இருந்தது.. வெளிய நீலக்கலரு.. சக்கரத்துல கூட பச்சக்கலரு பெயிண்டு.. உள்ளாற உக்கார்ற இடத்துல கோணிப்பைங்க இருக்குது.. கிழிஞ்சு அழுக்கா.. மொத்தமா வண்டியே அழுக்கு பொம்மை மாதிரி இருக்குது.. ஆனா கம்பீரமா.. எத்தனை பேரை எத்தனை நாளைக்கு ஓட்டியிருக்குமுன்னு நினைக்கறப்ப வந்த வண்டி என்னைய பாத்து சிரிக்கற மாதிரி இருந்தது.  நான் உயிரில்லாதவன். எம்மேல உனக்கு எதுக்கு கரிசனம் அப்படீங்கற மாதிரி. பாயி என்னைய பாத்துட்டு “வண்டி மேல ஏதோ கண்ணு மாதிரி தெரியுதே..?”ன்னு கேட்டாரு.

“வண்டி மேல இல்ல. குதர மேல..”

“அப்படியா..?”

“வண்டிய ஓட்டலாமா இப்ப..?”

“சரிதான்..”னு என்னைய பாத்தவரு “அப்ப வண்டி மேலேயும் ஒரு கண்ணுன்னு சொல்லு..”

“அப்படிதான் வச்சுக்கோங்க..”

“காசுக்கு வேணாம்..”

“யாரு கேட்டா..?”

“சும்மா தர்றேன். ஆனா குதர காசுக்குதான்..”

“எம்புட்டு..?”

“ஆயிரம் ரூபா..”ன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணும் புரியல. நிஜமாவே பாயி தமாஸா பேசலைன்னு தெரிஞ்சுக்கிட்டு “எங்கிட்ட சல்லிப்பைசா இல்லைய்யா..”

“அப்படின்னா ஒண்ணு செய்யி..”

“சொல்லுங்க..”

“தள்ளிட்டு போயிடு அதையும்..”

“அதையும்னா..?”

“வண்டியோட சேத்தி..” ன்னு சொன்னவரு சட்டுன்னு அந்த குதர பக்கமா போயி நின்னுட்டு அதனோட கழுத்து புடுச்சுக்கிட்டு அதை அப்படியே கட்டிப்புடுச்சுக்கிட்டு “இந்த ஒத்த குதரைக்காக வண்டிய வாங்கினேன். திருப்பத்தூர்ல இருந்து. இதை மட்டும்தான் கட்டி ஓட்டினேன்..”ன்னு சொன்னப்ப திடீருன்னு குதர வயித்து மேல தலைய வச்சுக்கிட்டு பிசு.. பிசுன்னு சத்தம் வராம அழறாரு.. நான் ஏதும் சொல்லலை. அந்த குதர இப்ப தலைய ஆட்டனது.. பின்னாடி ஒரு உத. சந்தோசத்துக்கு இல்ல. அதுவும் சேந்து அழற மாதிரி தெரியுது. கீழ தரையையே பாக்குது. எலும்பும் தோலுமா இருக்கற வயித்தை தடவிக்கொடுத்து “எங்க பசியை ஆத்துச்சுப்பா நாலு வருசத்துக்கு. நிம்மதியா பசியில்லாம சாப்புட்டோம். அந்த நாலு வருசத்துல எங்களை வாழ வைச்சதுய்யா இது. ஆனா மனசு கேக்கல. சாப்பாடு போட முடியலன்னு சொல்ல முடியாது. என்னாவோ.. இழுத்துக்கிட்டு போயிடு..”ன்னு உள்ளாற போயிட்டாரு.

அந்த குதர இப்ப என்னைய பாக்கற மாதிரி தெரியுது. இல்ல. மறுபடியும் தரைய பாத்துட்டு இருக்குது. பக்கத்துல போயிட்டு அத தடவி தரனமுன்னு போல இருக்குது. ஆனா பக்கத்துல போறதுக்கு ரொம்ப யோசிக்கறேன். ஏன்னா நான் செய்யறது எனக்கு புரியல. இது சரிதானான்னு பலமா யோசிக்கறேன். அப்ப கிண்டா குதர போட்ட லத்தி வாசன வருது. மூத்தர வாசனையும். அந்த இடத்துல நிறைய ஈரமா இருக்குது. அந்த வண்டிய பாக்கும்போது வண்டியும் குதரையும் ஒரே மாதிரி வயசானவங்களா தெரியுது. இருந்தாலும் குதரைய பாக்கற மாதிரி அந்த வண்டியவும் பாக்கறேன். அப்ப எனக்கு ஒரு யோசன வருது. அது பைத்தக்காரத்தனமா இருக்குதுன்னு பொண்டாட்டி மூஞ்சிய தூக்கு வச்சுக்கிட்டு பத்து நாளு பேசாம இருந்தது வேற விழயம். ஆனா நான் பின்வாங்கல இந்த விழயத்துல. அதுதான் குதரையோட வண்டியையும் தள்ளிட்டு போறது..

                              0000

எனக்கு ஒரு பொண்ணு.. ரண்டு பசங்க.. பொண்ணுதான் பெருசு.. எட்டாவது படிக்குது. பசங்க அஞ்சாவது.. மூணாவது படிக்கறாங்க.. அந்தஃ குதர வண்டிய நான் கையாலேயே தள்ளிட்டு ஒரு கிலோ மீட்டரு நடந்து எங்க தெருவுல நுழைஞ்சப்போ ஊரே வேடிக்க பாக்கற மாதிரி கூடிட்டாங்க.. அந்த வண்டி அழுக்கும்.. சககரங்களோட நறுக்.. நறுக் சத்தமும் அந்த தெருவ அப்படியே  பொகை மாதிரி கிளப்பிவிட்டு எல்லாரையும் வாசலுக்கு வரவழைச்சது. ஊட்டுக்குள்ளாற குந்திட்டு இருக்கறவங்க கூட.. ஜன்னலு வழியா எட்டி பாக்கறவங்க கூட வெளிய வந்து அந்த வண்டிய கவனிக்கறப்போ எனக்கு பெருமையா இருந்தது. “எதுக்குடா..?”ன்னு அந்த மரத்தடில இருக்கற பெருசு  கேட்டப்ப “எல்லாம் பசங்களுக்காக..”

“அப்படியா..?”ன்னு சொன்னவரு உள்ளாற தொட்டு பாக்கறாரு.. பசங்களும்.. சுத்திலும் நிறைய பேரு வயசு வித்தியாசமில்லாம வந்து தடவி பாக்கறாங்க.. கொஞ்சம் வயசானவங்களுக்கு குதர வண்டி பாசம் இருக்கலாம்.. ஏன்னா அவங்க இதுல போயிருப்பாங்க ஒரு முறையாவது.. பதனஞ்சு வருசத்துக்கு முன்னாடி.. பெரியவரே “இந்த வண்டி நம்ம பாயோடது ஆச்சே..?”ன்னு சொன்னப்ப எனக்கு ஆச்சரியமா இருந்தது..

“உங்களுக்கு அவரை தெரியுமா..?”

“மார்க்கெட்டுல ஆரம்பிச்சு ஊருக்கு வெளிய காலேஜூ வரைக்கும் இந்த வண்டிதான் அப்ப பிரபலம். அவன் ஏறி உக்காந்திட்டு காலியா இருக்கற இடத்துல சாட்டைய வேணுமுன்னே சொடுக்கி விட்டான்னா குதர சும்மா பறக்கும்.. பயப்படறவங்க இருந்தா கத்தறது ஊருக்கே கேக்கும்.. குச்சிய சக்கரத்துல விட்டு டர்ர்ர்ர…..ர்ர்ர்ர்….ருன்னு ஓட்டுவான் நின்னுக்கிட்டே.. ம்.. அப்ப ஓடுன வண்டிய இன்னும் வச்சிருக்கான்னா..” என்றவர் மறுபடி அந்த வண்டிய பாத்துட்டு “அப்படியே இருக்கற மாதிரி இருக்குதே..”ன்னு மறுபடியும் ஆச்சரியாம சொல்லறாரு..

எனக்கு அவரு சொல்ல சொல்ல அந்த வண்டி மேல பிரியம் அதிகமாயிருச்சு.. அப்பறமா மெதுவா அந்த பசங்கள பாத்துக்கிட்டே அவருக்கிட்ட “இன்னொரு விசயமும் இருக்குது மாமா..”

“என்னடா..?”

“குதரயும் வரப்போகுது..” என்றபோது அவர் புரியாமல் “என்னடா சொல்லற..?”

“ஆமா..’’

‘குதரயா..?’

“ஆமா.. அதே குதர..”

“அதே குதரயா..?” என்றவர் கண்களை விலக்காமல் “என்னடா சொல்லற..?”

“ஆமா மாமா.. இன்னமும் அது இருக்குது.. இப்பவோ. எப்பவோன்னு.. “

“பதனஞ்சு வருசத்துக்கு முன்னாடி பாத்ததுடா..” என்று சொன்ன பெருசு அங்க இருந்த பசங்கள பாத்து “டேய்.. போங்கடா.. அந்த வண்டி சும்மா இருக்குது.. விழுந்திடும்..”னு சொன்னப்ப ஒரு பையன் பக்கமா வந்து “இது ரிக்சா வண்டிதானே..?”

“ஆமாடா..” என்ற பெருசு “நான் போயிருக்கேன் அப்ப..”

“யாரு இழுப்பாங்க..?”

“குதர..”

“குதரயா..?”

“ஆமாடா.. அந்த குதர நாளைக்கு வரும்..”னு என்னைய பாத்தப்ப நானு அங்க பசங்க.. பொம்பளைங்க கூடிட்டு அந்த வண்டிய சுத்தி.. சுத்தி பாக்கறத பாத்துட்டு பின்னாடி பொண்டாட்டி முறைக்கறதையும் பாத்துட்டு பெருச பாக்கறப்போ அவரு தெமேன்னு தன்னோட இடத்துக்க போக பாக்கறாரு.. இப்ப பசங்க அப்படியப்படியே கலைஞ்சு போறாங்க என்னைய பாத்துக்கிட்டே.. பின்னாடி பத்ரகாளி மாதிரி அவ நிக்கறான்னு தெருஞ்சுக்கிட்டு எம் மேல வந்து விழுந்த பெரிய பொண்ண கட்டிக்கிட்டு “வண்டியா புடுச்சுருக்குதா..?”

“ஆமாப்பா..”

“வண்டில உக்காந்திட்டு உன்னைய சுத்தி காட்டறேன்..”

“எப்ப..?”

“சீக்கரமா..”

“எப்புடிப்பா..?”

“குதர தள்ளும்..”னு சொன்னப்ப நான் தைரியமா பின்னாடி திரும்பி பாத்தேன். அவ இல்லை. எம் பொண்ணு எல்லாம் தெரிஞ்சவ. “அம்மா இல்லை..”ன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே “அப்பா.. குதரை எப்பப்பா வரும்..? சின்னசா.. பெருசா..?”

“பெருசு..”

“பயமா இருக்குதுப்பா..”

“ஏம்மா..?”

“ஓடிருச்சுன்னா இழுத்துக்கிட்டு..”

“ஓடாது..”

“ஏம்பா..?”

“அதுக்கு வயசாயிடுச்சு.. ம்..” அந்த பெருசை காட்டி “அவரு மாதிரிதான் அதுவும்..”

“அய்யே.. நடக்காத குதரையா..? எனக்கு ஒண்ணும் வேணாம்.. நீ கூட்டிக்கிட்டு வராத..”

“ஏம்மா..?”

“பாவம்பா..”

“ஆனா உனக்கு புடிக்கும் பாரு. சும்மா கெழட்டு ராசா மாதிரி இருக்குது. குளிப்பாட்டி நல்லா சாப்பாடு போட்டா இன்னும் ரண்டு வருசத்துக்கு இருக்கும்..”

“அப்பறம்..?”

“அப்பறமா..?”ன்னு யோசிச்சு என்னா சொல்றதுன்னு தெரியாம முழிச்சப்போ பின்னாடியிருந்து எம் பொண்டாட்டி சொல்லறா..

“செத்துரும்..”

                                    0000

மறுநாளு குதரய தள்ளிட்டு வந்தேன். ஏறக்குறைய அப்படிதான் இருந்தது. தள்ளிக்கிட்டு வர்ற மாதிரி. ஆனா பாய் வீட்ல இருந்து கிளம்பும்போது பாயி வீட்ல சொந்தக்கார பையன் ஒருத்தன் மட்டும்தான் இருந்தான். போன் பண்ணிட்டு பேசறப்போ பாயி “தள்ளிட்டு போயிடு குதரய.. நல்லா பாத்துக்கோ..”ன்னு சொல்லிட்டு வச்சிட்டது எனக்கு சங்கடமா இருந்தது.. ஏறக்குறைய இருபது வருசத்துக்கு மேல அங்க இருந்திருக்கலாம் இந்த குதர.. ஆனா பாயி ஏதும் கண்டுக்காம பேசினது அவரு குதரய அன்னைக்கு கட்டிப்புடுச்சு அழுதது சும்மாவோன்னு நினைக்க வச்சிருச்சி.. சர்தான் போய்யான்னு குதரைய மெதுவா தடவி இழுத்துக்கிட்டு வந்தப்ப எனக்கு ரொம்ப ஆச்சரயமா போயிடுச்சு.. கூடவே வந்துட்டது அது. அந்த தெருவுல கூட வேடிக்கையா பாக்கறாங்க.. அவங்களுக்கும் குதர மேல ஒரு இது இருக்குதுன்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பெருசா ஏதும் முகத்துல காட்டாம வேடிக்க பாக்கற மாதிரிதான் பாக்கறாங்க. இவங்களோடவும் அத்தனை வருசம் அது இருந்திருக்குதுங்கிறது ஒரு சிலரோட பார்வைல தெரிஞ்சது.. நாலஞ்சு பேரு “எங்கப்பா கூட்டிக்கிட்டு போறே..?”ன்னு கேட்டுக்கிட்டு நிக்கறாங்க..

“வாங்கிட்டேன் குதரைய. கூட்டிக்கிட்டு போறேன்..”

“எங்க..?”

“எங்க இடத்துக்கு..”

“பாயி விக்கமாட்டாரே..?”

“வித்துட்டாரு.. வண்டிய நேத்து தள்ளிட்டு போனத பாத்தீங்களே..?”

“அதை உடைக்கறதுக்கு கொண்டு போறியோன்னு  நினைச்சுட்டோம்..”

“ஆங்.. ராசா குதர மாதிரி பண்ணறேன் பாருங்க.. எம் பசங்கள ஊர்வலமா கூட்டிக்கிட்டு போவேன் அதுல.. அந்த தெருவுல இருக்கற பசங்கள கூட..”

“எவ்வளவுக்கு வாங்கின..?”

“இன்னும் பேசலைங்க.. ஆனா தள்ளிட்டு போய்டச்சொன்னாரு.. அவரு சொல்றதை பாத்தா வண்டி.. அப்பறம் இந்த குதர எல்லாம் சேத்தி பத்தாயிரம் ஆகுமுங்க..”

“பத்தாயிரமா..?” என்று அவர்கள் வாயை பிளந்ததை பெருசு கேட்டு “உண்மையாடா..?”ன்னு அவரும் வாய பொளக்கறாரு..

“அட நீங்க வேற.. குதரைய சாதாரண குதர இல்லைன்னு காட்டறதுக்காக அப்படி சொன்னேனுங்க..”

“பாயி திட்டப்போறான்யா..”

“திட்டிக்கிட்டு போகட்டும். குதரை என்னோடது இனிமே. நான் இருபதாயிருமுன்னு கூட சொல்லுவேன்..”னு சொன்னப்ப பெருசு ரொம்ப களைப்பா சிரிச்சப்ப எனக்கு அவரு மேல ரொம்ப கோவமா வந்து “உம் பையன் என்னத்தையோ சொல்லிட்டு போறான். அவனோடவே ஒரு மூலைல குந்திட்டு இருக்க வேண்டியதுதானே..”
“எம் பொண்டாட்டி இருக்கற வரைக்கும் இருந்தேனே..”

“வேற வழியில்லாம..”

“ஆமா.. அவளைய இப்படி கொண்டாந்து வைக்க முடியுமா..? ஒரு மரத்தடில அனாதையாட்டம்..”னு சொல்லிட்டு வீச்சு.. வீச்சுன்னு அழறாரு. அப்ப அந்த இடத்துல கொஞ்சம் தள்ளி ஒரு கட மட்டும் இருக்குது. பொட்டிக்கட.. ரண்டு பேரு முறுக்கு வாங்கிட்டு சாப்புட்டு கத பேசிட்டு இருக்காங்க.. இருட்டா இருக்குது. மரத்தடில அவரோட முகம் இருட்டோட சேந்து இருட்டா தெரியுது. எங்கேயோ பாத்துட்டு அழறதை நிறுத்திட்டு அந்த குதரைய பாக்கறாரு.. அது அந்த வண்டிக்கு பக்கத்துல நின்னவாக்குல அமைதியா இருக்குது.. “தூங்கி விழுது..”ன்னு சொல்லிட்டு “அதுக்கு தடுப்பு வேணும்.. தண்ணி வேணும்.. அப்பறம் சாப்பாடு வேணும்.. புல்லு.. கொள்ளு.. காய்ங்க எப்பவாச்சும் நிறைய இருந்தா.. அதை விடு.. இந்த வண்டிக்கு பேரு என்னா தெரியுமா..?”ன்னு கேக்கறாரு..

“குதர வண்டி..”

“மண்ணு.. மண்ணு. பாயி சொல்லலையா..?”

“இல்லியே..”

“ஜட்கா வண்டி..”

“ஓ.. இப்பதான் ஞாபகத்துக்கு வருது. நான் ஜட்கா வண்டிக்கு சொந்தக்காரன்..”

“ஆனா அதைய வச்சு அந்த பாவப்பட்ட ஜீவன வதைக்காத. புருயுதா..?”ன்னு சொன்னப்ப அவரு தமாசுக்கு சொல்லலைன்னு புருஞ்சுக்கிட்டேன். அவரை விட்டு பிரிஞ்சப்ப அவரு படுத்துட்டு அந்த மரத்திடில அந்த கல்லு மேல கண்ணை மூடிட்டு ஏதும் பேசாம கிடக்கறாரு. சுத்திலும் வீடுங்க.. டிவி சத்தமா வருது. பெரும்பாலும் சாப்புடுவாங்க.. இல்லைன்னா சாப்புட்டு பசங்களோட பேசிட்டு சிரிச்சுட்டு அல்லது சண்டைய போட்டுக்கிட்டாலும் ஏதோ ஒரு நிம்மதியில படுக்கைல கிடப்பாங்க..

ஆனா இவரு..? ம்.. கஸ்டமா இருந்தது அவரைய விட்டு கிளம்பறப்ப.. குளுரா வேற இருந்தது.. அந்தஃ பொட்டி கடைய சாத்திட்டாங்கன்னா பிசோன்னு ஆயிடும் இந்த இடம்.. சுத்திலும் வீடுங்க கொஞ்சம் தள்ளி இருந்தாலும் எல்லாமே இப்பவே இருட்டாயிடுச்சு.. ஒரு தெரு லைட்டு மட்டும் விட்டு விட்டு எரியுது.. நான் அந்த குதரைய தாண்டறப்ப அத ஓரமா நின்னு சத்தம் தராம கவனிக்கறேன். அதுக்கு முன்னாடி பச்சு புல்லு இருக்குது. சாப்புட்ட அடையாளம் தெரியுது. பக்கத்துல குண்டால தண்ணி.. தண்ணியும் குடுச்சுருக்குது. எனக்கு சந்தோசம்.. பாய் வீட்ல இருக்கறத விட இங்க நல்லாவே இருக்குது இடம்.. ஆனா தெருவுல இருக்கறது சரிப்பட்டு வராது. இதுக்கு தனியா ஒரு இடத்தை ரெடி பண்ணனும்.. அப்பறம் நாளைக்கு குளிப்பாட்டி.. நடக்க வச்சு.. வண்டிய எப்படி ரெடி பண்ணறதுன்னு யோசித்து.. அதுக்கு ஆள வச்சு வேலைய ஆரம்பிச்சு.. அடுத்து வாரத்துக்குள்ள வண்டிய ரெடி பண்ணிட்டு ஜட்கா வண்டி ரெடின்னு ஜம்பமா சொல்லிக்கிட்டு அப்படியே குழந்தைங்கள அதுல ஏத்திக்கிட்டு மொள்ளமா நடக்க வச்சு..

“முடியுமா..?”ன்னு கேக்கறேன் குதரைக்கட்ட.. அது தலையை தூக்கி நான் நிக்கற பக்கமா பாத்துக்கிட்டு தலைய ஆட்டுது.. பெருசு என்னைய பாக்கற மாதிரி திரும்பி படுத்துக்கிட்டு “என்னய்யா சொல்லுது குதர..?”

“முடியுமாம்..”

                                    0000

 பெருசு காலைல எழுந்தப்போ குதரைய காணோம். அவரு யாருக்கிட்டேயும் பேசாம எழுந்திருச்சு அந்த வண்டி பக்கமா போயிட்டு குதரை பூட்டற மரப்பட்டைய தாண்டி உள்ளாற எட்டி பாக்கறாரு. அவரு சரியா இப்ப வரைக்கும் வண்டிக்குள்ளாற கவனிக்கல. உள்ளாற அப்பவெல்லாம் பச்ச புல்லும் அதுக்கு மேல கோணிபையும் இருக்கும். .மெத்துன்னு இருக்கும். பசிக்கறப்ப புல்ல உருவி.. உருவி பாயி போடறத இவரு பாத்திருக்காரு. அப்பவெல்லாம் டௌனுக்கு ஓரமா மூணு டெண்டு கொட்டாயி இருக்கும். ரண்டாவது ஆட்டம் வரைக்கும் குதர வண்டிய வெளியில நிக்க வச்சிருப்பாரு பாயி. அந்த நேரத்துல வண்டிக்கு டிமாண்டு அதிகமா இருக்கும். மொதல்லேயே படம் விடறதுக்கு முன்னாடியே குடும்பத்தோட வந்தவங்க போயி பாயிக்கட்ட பேசி பணத்தை குடுத்துட்டு அப்பறமாதான் வந்து மறுபடி படத்த பாப்பாங்க. அவங்க அவங்களை பாவமா நினைச்சுக்கிட்டு படம் போச்சேன்னு அந்த அஞ்சு நிமிச கேப்புக்கு புலம்பிட்டே பாப்பாங்க. இதுல சிவாஜி படத்துக்குதான் இந்த மாதிரி நிறைய நடக்கும். இந்த ஏரியாவுல அப்பவெல்லாம் சிவாஜின்னா உயிரு. அவரு படத்துக்கு போயிட்டு அழாம வரமாட்டாங்க. இல்லைன்னா ரொம்ப.. ரொம்ப சந்தோசமா வருவாங்க. அந்த படத்துல சிவாஜி கோட்டு போட்டுக்கிட்டு முடியை வேற மாதிரி டோப்பா வச்சுக்கிட்டு வயசானாலும் இளமையா வந்திட்டு போனாதான் இப்படி சிரிச்சுட்டே வருவாங்க. பொம்பளைங்களுக்கு சிவாஜி படத்த பாத்துட்டு அழாம வர்றது புடிக்காது. அது அப்படி அமைஞ்சுப்போச்சு.. பாயி குதர வண்டில பெரிய குடும்பத்த தூக்கிட்டு போறத பெருசு நிறைய முற பாத்திருக்காரு.. இப்ப அந்த வண்டிக்குள்ளாற கைய வச்சு பாக்கறாரு.. மொடமொடப்பா இருக்குது. ஒரு பல்லி ஓடுது. கரப்பான் பூச்சு ஒண்ணு ஓரமா நழுவுது. ரண்டு பக்கமும் காத்தாடி மாதிரி ஆடுது. வேகமா ஆடினா வண்டியோட மேல் பக்கமெல்லாம் கீழ விழுந்திடும் போல இவரு பயமா அதுக்கு மேல ஏறி உக்காந்து கவனிச்சப்ப ஏதோ சத்தம் வருது சக்கரத்து பக்கமா. ஆனா அவரு கொஞ்சம் நிதானிச்சு இன்னும் உள்ளாற போயிட்டு மெதுவா படுக்கற மாதிரி உக்காந்தப்ப நாலஞ்சு பசங்க ஓடிவந்து எட்டிப்பாத்து இவரு செய்யறத வேடிக்க பாக்கறாங்க. பிறகு சிரிச்சுக்கிட்டே ஒரே ஓட்டமா ஓடறப்பதான் பக்கத்துல அந்த பொம்பள வந்து எட்டிப்பாக்கறது தெரியுது. இவரு “ஈஈஈ..”ன்னு இளிக்கறப்ப அவ “அந்தாளுக்குதான் புத்தியில்லைன்னா உனக்கு கூடவா..?”

“புத்தி இல்லாமதான் இப்படி மரத்தடில படுக்கு கெடக்கறேன்..”

“வார்த்தைக்கு வார்த்தை இப்படி சொல்லிட்டே இரு. உன் பையன் ஏதோ பேச்சுக்கு சொல்லிட்டா அதையே புடுச்சுக்கிட்டு வீட்ட விட்டு வெளிய வந்து அனாத மாதிரி இப்படி யாரு உன்னைய மண்ணுல படுத்து உருள சொன்னா..”

“வண்டில வந்து உக்காந்துட்டு சொகுசா இருக்கானேன்னுதானே இந்த பேச்சு பேசறே..?”

“அட புத்தி கெட்ட மனுசா..”ன்னு சொன்னவ “இந்த வண்டிய ஏன்டா கொண்டாந்து நிறுத்தியிருக்கான்னு நான் அந்தாளை திட்டிட்டு இருக்கேன்.. நீ வண்டிய பத்தி பேசிட்டு..”

“அவனை.. இவனைன்னு சொல்லாதம்மா..”

“சரி அது.. இதுன்னு வச்சுப்போம். பொண்டாட்டிய வாடி.. போடின்னு பேசறப்பவும் இந்த மாதிரி கேக்கனும்..”னு சொன்னவ கொஞ்சம் ஒதுங்கி நின்னுக்கிட்டு “வண்டி உடைஞ்சு கீழ விழப்போகுது..”

“அதெல்லாம் விழாது..”ன்னு சொல்லிட்டு பெருசு அப்படியே படுத்துக்கிறாரு. அந்தம்மா வேடிக்க பாத்துட்டே வீட்டுக்குள்ளாற போயிடுது. அவரு கொஞ்சம் பின்னாடி போனா வண்டி குடை சாஞ்சுடும். அதனால முன்னாடி பக்கமா உடம்பை வளைச்சு படுத்துக்கிறாரு. அப்பவெல்லாம் வண்டில போகும்போது புல்லு வாசனையோட குதர வாசனையும் வரும். முன்னாடி உக்கார்றப்ப குதரையோட வாலு மேல அடிக்கும். அத பின்னாடி முகுதுல தொட்டுப்பாக்கும்போது வழவழன்னு அது லேசா அசையும் போது பயமா இருக்கும். பாயி “சும்மா இருய்யா. பறந்திடும் அப்பறம்..”னு பயமுறுத்துவாரு.. ஓடும்போது கேக்கற டக்.. டக் சத்தம் அவருக்கு இன்னும் கேக்குது காதுல. வேகமா போனா பிடிக்காது. காத்துல ஆடற மாதிரி மெதுவா போகனும். அந்த டக்.. டக் சத்தம் சீரா வரணும். அது ஒரு இசை மாதிரி அப்படியே உள்ளுக்குள்ளாற வந்து உக்காந்திட்டு குதர வண்டிலதான் போகனும் எப்பவும்னு நினைக்க தோணும். பாயோட ஜட்கா வண்டிக்கு அப்பறம் நாலஞ்சு வண்டிங்க வந்தது. பாய் வண்டிய விட அழகா.. பாயோட குதரைய விட அம்சமா.. ஆனா பாயோட வண்டில என்னமோ இருக்குது.. குதரைல கூட.. பெருசு எப்பவும் பாய் வண்டியதான் தேடுவாரு. அதுல உக்காந்தாதான் திருப்தி. அதுல உக்காந்திட்டு பாய்க்கிட்ட பேச்சு கொடுத்துட்டே போனாதான் நல்லாருக்கும். பெருசு ஏதோ சத்தம் கேட்டு எழுந்திருச்சு வண்டிய விட்டு இறங்கி பாக்கறாரு. அந்த குதர வருது. பின்னாடியே நான்தான்..

குதரைய அந்த மேட்டுல குளத்தாங்கர பக்கமா போர் பைப்புல தண்ணிய அடிச்சு அடிச்சு ஒரு வாளில புடுச்சு.. புடுச்சு ஊத்தி கழவி கூட்டிக்கிட்டு வர்றேன். ரோட்ல.. தெருவுல மறுபடி வேடிக்க பாக்கறாங்க. அவங்களுக்கு இப்ப தமாசா தெரியுது. பொட்டி கடைக்காரி “சாமிக்கு வெட்டறதுக்கா..?”ன்னு கேக்குது..

எனக்கு கோவமா வருது. “வெட்டறதுக்கு இல்ல.. வளக்கறதுக்கு..”ன்னு சொன்னதும் குபீருன்னு பெருசா சிரிக்குது அந்த பொம்பள..

பொண்டாட்டி வாசல்ல நின்னுக்கிட்டு வேடிக்க பாக்கறா. அவ கண்ல கொஞ்சம் கோவம் தணிஞ்சிருக்குது. இருந்தாலும் புதுசா ஏதோ தெரியுது. அதுதான் அந்த கிண்டலான புன்னக. இடுப்புல கைய வச்சுக்கிட்டு அவ பாக்கற பார்வைல கூட அந்த கிண்டல் தெரியுது. சர்தான் போடின்னு குதரைய வண்டிப்பக்கமா நிறுத்தினப்போ பெருசு “கழுவிட்டியா..?”

“ஆச்சுங்க..”

“இனிமே ஓட்டனுமாக்கும்..”

“ஆமாங்க..”

“வண்டிய தயார் பண்ணனுமே..?”

“அது செஞ்சுக்கலாம் மாமா.. முதல்ல லேசா ஓட்டிப்பாக்கலாம்..”னு சொன்னப்ப பெருசு சிரிச்சுக்கிட்டு “சாதாரணமா சொல்லறே. ஆனா சும்மாதானே விளையாட்டுக்கு ஓட்டப்போற.. இல்லைன்னா அதுக்கு பெருசா வேலையிருக்குது. ஒரு ஜட்கா வண்டிய விட ஓடற குதரைக்கு தேவையானது அதிகம்..”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. நான் ஓட்டறதை பாருங்க..” ன்னு அந்த குதரைய நான் கட்டியிருந்த லுங்கிய கழட்டி துடைக்க ஆரம்பிச்சப்போ பொண்ணடாட்டி வெடுக்குன்னு உள்ளாற போயிட்டா. அந்த குதர கனைக்குது. குளிச்சிருக்கறது அதுக்கு புடுச்சிருக்கும் போல. தலைய மேல.. கீழ ரண்டு முற ஆட்டுது. இந்த இடம் புதுசு அதுக்கு. ஆனா அதுக்கு பழகினா மாதிரி தோணுறப்பதான் இன்னொரு விழயமும் புருஞ்சது. ஒரு கைய போட்டுதான் கழுத்து மேல அப்படியே “வா.. போலாம்..”னு சொல்லிட்டு கூட்டிக்கிட்டு போனேன் குளிப்பாட்ட.. அப்பறமா திரும்ப வரும்போதும் அதே மாதிரி. கயிறு ஏதுமில்லாம. ஆனா குதர வண்டி பக்கமா வந்து நின்னுக்கிச்சு. வரும்போது அதுவாவே வந்தது. அதுவாவே ரோடு பக்கமிருந்து தெருவுல திரும்பிச்சு. எனக்கு அது அப்படி செஞ்சதும் தலையும் புரியல.. காலும் புரியல. பாயி இதைய கட்டிப்புடுச்சு அழத்தான் செய்தாரு. ஆனா கவனிக்கல. தூரமா இருந்து அழுது என்னா பண்ண. குளிப்பாட்டனும். சாப்பாடு வைக்கனும். அப்பறம் நடக்க வைக்கனும். வேடிக்க காட்டனும். எனக்கு இப்படி நினைச்சப்ப அந்த குதர ஆச குறையக்கூடாதுன்னு உள்ளுக்குள்ளாற வேண்டிக்கிட்டேன். ஒரு கயிறு கொண்டாந்து அந்த வண்டியோட முன்னாடி ஓட்ட வழியா விட்டு குதர கழுத்துல சுத்தி பெருசை பாக்கறேன். என்னோட சின்னப்பசங்க ரண்டு பேரும் அந்த பொட்டிக்கடக்காரியும் இன்னும் ஒரு சிலரும் வேடிக்க பாக்கறாங்க. நான் மெதுவா குதர மேல கைய போட்டு “போலாம்..”னு சொல்லறேன். குதர ஒரு முற மேல தலைய தூக்கிட்டு தரைய பாக்குது. எனக்கு தயக்கமா இருக்குது. அப்பறமா மெதுவா நகருது. வண்டியும் சேந்து. குதரையோட கழுத்துல கயிறு சரியா உக்காரலை. ஆனா பின்னாடி பாத்துக்கலாம் அதைன்னு நினைச்சுக்கிட்டு கயிறை லேசா ஒரு பக்கமா நானும் புடுச்சு லூசு விடறேன் குதரைக்கு. அது நிதானமா போனாலும் சாதாரணமாவே போகுது. எனக்கு கைய தட்டனும் போல தோணுது. ஆனா பெருசு கைய தட்டுது. விசிலு அடிக்குது. அவருதான் இப்ப சொன்னாரு. “கிண்டா குதர.. அருமைடா..”ன்னு..

கிண்டான்னு ஏன் அவரு சொன்னாருன்னு எனக்கு தெரியாது. அதுக்கு என்னா அர்த்தமுன்னும் எனக்கு தெரியாது. ஆனா அந்த வார்த்த எனக்கும் பதிஞ்சு போச்சு. “நல்லா நடக்கறே கிண்டா..”ன்னு சொன்னப்ப அது நிதானமா அப்படியே திரும்புது. எனக்கு ஆச்சரியாமான ஆச்சரியம். அப்ப கிண்டா மேல எனக்கு ரொம்ப மரியாதை வந்தது. பாயிக்கு அது ஒரு குதரையா தெரிஞ்சிருக்கலாம். அவரு செஞ்ச நல்ல விசயம் அதை அவரு யாருக்கும் கொடுக்காம கூடவே வச்சுக்கிட்டது. பிறகு எனக்கு கொடுத்தது. தெரியாத விழயம் இது புத்திசாலி குதரன்னு.. எனக்கு அது சரியான்னு தெரியல. அந்த தெருவுல அது திரும்புன இடத்துல மட்டும்தான் அகலமா இருக்கும். இல்லைன்னா முன்னாடி ரோடுக்கு போயிட்டு திரும்பி வரனும். அடடான்னு அந்த குதரையோட கழுத்தை புடுச்சு அணைச்சுக்கறேன். குதர ஒரு நொடி அப்படியே நிக்குது.. அப்படியே நிக்குது. நான் புடுச்சுருக்கறது அதுக்கு புடுச்சுருக்கும் போல. இப்ப லேசா நகருது. நான் அந்த கயிறை அதுக்கு வலிக்காத மாதிரி கழுத்து பக்கமா லூசா புடுச்சுட்டே போறேன். குதர இப்ப மறுபடி லேசா திரும்பி வீட்டு பக்கமா போயிட்டு அதே இடத்துல நிக்குது. நான் அப்படியே மறுபடியும் அதை கட்டிக்கறேன். அது மூச்சு விடறதும் அந்த உடம்புல அது போறதும் எனக்கு கேக்குது. அந்த வயித்த தொட்டு பாக்கும்போது திருப்தியா சாப்புடற மாதிரி எனக்கு தோணுது. இப்ப ஓரமா வேடிக்க பாத்துக்கிட்டிருந்த எம் பசங்க பக்கத்துல வந்திட்டு அம்மாவை பாத்துக்கிட்டே என் காலை சீண்டறாங்க. குனுஞ்சு பாத்து அப்படியே அவங்களை தூக்கி உள்ளாற வச்சுக்கிட்டு அப்ப பக்கத்துல வந்து நின்ன பக்கத்து வீட்டு சின்ன பாப்பாவையும் தூக்கி உள்ளாற வச்சுட்டு “கொஞ்சம் அழுக்காதான் இருக்கும். சரி பண்ணிக்கலாம்..”னு சொன்னப்ப பெருசு காலை இழுத்திட்டு வேக வேகமா வந்து எங்கிட்ட சொல்லாமலேயே பின்னாடி போயிட்டு அந்த கால் வைக்கறதுக்காக நீட்டிக்கிட்டிருந்த தகரம் மேல காலை வச்சுட்டு என்னைய பாக்கறாரு..

நான் வண்டியோட முன்னாடி பக்கத்த புடுச்சுக்கிட்டு அவர பாக்கறேன். அவரு முக்கிட்டு ஒரு காலை அந்த படி மேல வச்சு ஏர்றதுக்கு பாக்கறாரு. ரண்டு கையும் பக்கவாட்டுல பத்திட்டு இருக்குது. ஆனா முடியல. மறுபடி என்னைய பாக்கறாரு. பசங்க சிரிக்கறாங்க. அந்த பாப்பா திரும்பி பெரியவர ஏறாத அப்படீங்கற மாதிரி கைய ஆட்டுது. அதுக்கு பெருசு சிரிச்சுக்கிட்டு “இப்ப பாரு..”ன்னு சொல்லிக்கிட்டு மறுபடி முயற்சி பண்ணறாரு. முடியல. தடுமாறி கீழ விழ பாக்கறாரு. அவரோட கண்ல ஏதோ தெரியுது. தனக்கு ரொம்ப வயசாயிட்டதா நினைக்கிறாரு போல. திரும்பி போயிடலாமான்னு கூட யோசிக்கற மாதிரி தெரியுது. பசங்க இன்னமும் சிரிக்கறாங்க. அந்த பாப்பா இன்னமும் கைய ஆட்டிட்டு இருக்குது. அவரு இப்ப பலமா முக்கிட்டே ஒரு பக்கமா புடுச்சுட்டு எப்படியோ ஏறி குந்திக்கிட்டப்போ வண்டி பின்னாடி சாயற மாதிரி இருக்கும்போது குதர தானா முன்னாடி போகுது. அதுக்கு பழக்கம் போல. இந்த மாதிரி நேரத்துல எப்படி சமாளிக்கறதுன்னு.. இல்லைன்னா அதுக்கு கழுத்துல புடிப்பு வருமுன்னு அதுக்கு தெரிஞ்சிருக்குது. இப்ப எனக்கு என்னா பயமுன்னா வண்டிக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னுதான். பின்னாடி சாய்ஞ்சுக்க மெத்துன்னு முதுகுபுறத்துல ரண்டு பக்கமும் வண்டி சீட்டு மாதிரி இருக்குது. மேல குட மாதிர வளைஞ்சு உள்ளாற சொகுசா காட்டுது. கீழ பலக மேல மெத்துன்னு போட்டுக்கிட்டா எவ்வளவு தூரத்துக்கும் போலாம். பாயி இந்த வண்டிய நடுவுல அப்பப்போ சரி பண்ணி வச்சிருக்காருன்னு தோணுது. இல்லைன்னா இத்தன வருசம் தாக்கு புடுச்சுருக்காது. அப்படின்னா குடும்பத்தோட அவரும் குதரைய பூட்டிக்கிட்டு தெருவுல வேடிக்க காட்டியிருப்பாரு போல.. நான் மறுபடி குதரக்கிட்ட சொல்லறேன். “சரி.. போலாம்..”னு. அது லேசா நகருது. சாதாரணமாவே. வண்டி சக்கரம்தான் கொஞ்சம் சத்தமா போடுது. வேல செய்யனும். கிரீசு அடிக்கனும். சக்கரங்கள சரி பாக்கனும். உள்ளாற சுத்தம் பண்ணி துடைச்சு விட்டு ஏதாவது வாசனையா தெளிச்சு விடனும். அப்பறம் குதரைக்கு தினமும் சாப்பாட்ட நல்லா கவனிக்கனும். புல்லு இல்லாம கொள்ளு.. கேரட்டு.. கீர.. அப்படீன்னு நிறைய தரனும். இன்னும் ஏதாவது இருந்தா பாய்க்கிட்ட விசாரிச்சுக்கனும் அப்படீன்னு நினைச்சுக்கிட்டே குதர கூடவே போறேன். அதுக்குள்ளாற பசங்க “கிண்டா.. கிண்டா.”.ன்னு கத்தறாங்க. பெருசு சொல்லியிருக்கும் போல. அப்ப ஒரு சிலரு வீட்டுக்கு வெளிய வந்து நின்னு பாக்கறாங்க. பசங்க வண்டிய காட்டி பேசறாங்க. சீக்கரமே இங்க பசங்கள உக்கார வச்ச வேடிக்க காட்டனமுன்னு நினைச்சுக்கறேன். ஒரு குழந்த ஓ..ன்னு அழுது. அந்தம்மா பக்கத்துல அதைய தூக்கிட்டு வந்தப்ப குதர நின்னுட்டுது. அந்த பொம்பள ஆச்சரியமா குதரைய பாத்துக்கிட்டே “நின்னுருச்சே..”ன்னு சொல்லறா. அவளுக்கு குழந்தைய உக்கார வைக்க வர்றாங்கன்னு குதரைக்கு தெரியறது ஆச்சரியத்த தாண்டி பிரியமாவும் வந்துருச்சு. உடனே குழந்தைய எம் பசங்க மேல உக்கார வச்சுட்டு “கெட்டியா புடுச்சுக்கோங்க..”ன்னு சொல்லிட்டு அந்த குதரைக்கு முன்னாடி வந்துட்டு அதனோட முகத்த தடவி கொடுக்கறா. அப்ப குதர ஒரு கால லேசா பின்னாடி உதைக்குது. அதுக்கு அந்த பொம்பள என் முகத்த பாக்க.. நானு “அதுக்கு சந்தோசம்..”னு சொல்லறேன்.. இப்ப இன்னும் ரண்டு மூணு பொம்பளைங்க பசங்கள.. குழந்தைங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க.. அப்பறம் இன்னும் ஒரு பொம்பள ஓடி வருது.. அப்பறம் ரண்டு பசங்க ஓடி வர்றாங்க.. இன்னொரு குழந்த தள்ளி இருக்கற வீட்ல இருந்து கைய காட்டி “உம்.. உம்..”னு அம்மாக்கிட்ட அடம் புடிக்குது. அந்தம்மாவும் அந்த குழந்தைய தூக்கிட்டு ஓடி வருது. உள்ளாற பெருசுக்கிட்ட குழந்தைய கொடுக்கறப்ப குழந்த முன்னாடி தாவுது. ஏன்னா முன்னாடிதான் எல்லாரும் ஒருத்துர மேல ஒருத்தரா உக்காந்திட்டு இருக்காங்க. எனக்கு ஒரே சந்தோசமா இருக்குது. எம் பொண்டாட்டி வெளிய வந்து பாத்துட்டு உள்ளாற போறது தெரியுது. அவளும் கொஞ்ச நாளு போச்சுதுன்னா உக்காருவான்னு தோணுச்சு. இப்ப குதர தானா நகருது. நான் அப்பதான் “போலாம்..”னு சொல்ல வாயெடுத்தேன். ஆனா அதுவா புருஞ்சுக்கிட்டு நகருது. எனக்கு அது இப்ப குதர மாதிரி தெரியாம ஒரு வளந்த புள்ள மாதிரி தெரிஞ்சது. மறுபடி கழுத்துல இறுக்கமா காட்டாம இருக்க கயிற ஒரு பக்கமா புடுச்சுட்டு நடக்கறேன். பசங்க கத்தறாங்க..

“கிண்டா.. கிண்டா..”ன்னு. மொத்த தெருவும் எட்டிப்பாக்குது. நிறைய பேரு பக்கத்துல வர்றாங்க. பொம்பளைங்க எட்டிப்பாக்கறாங்க. ஆம்பளைங்க வெளிய வர்றாங்க. சிறுசுங்க ஓடி வருதுங்க..”எனக்கு.. எனக்கு..”ன்னு. இப்ப அந்த பசங்களோட பெருசு குரலும் சேந்து சத்தமா கேக்குது..

“கிண்டா.. கிண்டா..”

                                    0000

நான் ஏன் இதை செய்தேன்னு எனக்கு தெரியாது. நகரத்துல ஒரு சின்ன புள்ளி மாதிரி நானு.. யாருக்கும் இந்த யோசன வந்திருக்காது. நான் செஞ்சேன். எந்த ஐடியாவும் இல்லை. நானும் பாயும் உக்காந்து பேசலை. “இழுத்துக்கிட்டு போ..”ன்னு சொன்னாரு.. இழுத்துக்கிட்டு வந்துட்டேன். இப்ப அந்த தெருவுல கிண்டா குதர ஹீரோ மாதிரி ஆயிடுச்சு. வந்து ரண்டு.. மூணு நாளு ஆயிருக்குமான்னு தெரியல. அந்த வண்டிய தயார் பண்ணறதுக்கு ஆளை போட்டாச்சு. நாளைக்கு வேலைய ஆரம்பிக்கறேன்னு சொன்னான். பெரிய செலவெல்லாம் இல்லை. சக்கரத்த சரி பாக்கனும். உள்ளாற உக்கார்ற இடத்துல ஓட்ட.. ஓட்டையா  இருக்குது. அதை சரி செய்யனும். அப்பறம் ம்.. அவ்வளவுதான்.. ஓட்டவா போறோம்..? சும்மா பசங்களுக்காக.. அப்பறம்.. ம்.. அவ்வளவுதான்.. பசங்க சந்தோசம்தானுங்களே முக்கியம். என் வீட்டு பசங்க.. அக்கம் பக்கத்துல.. அப்பறம் தெருவுல.. பசங்க மட்டுமில்லாம வயசு வித்தியாசமில்லாம எல்லாருமே வண்டில ஒரு சவாரிக்கு விரும்பறது முகத்துல தெரியுது. நம்ம குதர வயசானாலும் இழுக்குதே சாதாரணமா..

என் வேல பெயிண்டு அடிக்கறதுதாங்க.. அந்த வாசனைல உடம்பு ஊறிப்போச்சு.. கட்டடத்துக்கு.. வீட்டுக்கு.. பெரிய பெரிய கடைங்களுக்குன்னு தொழிலு போயிட்டுதாங்க இருக்குது. கொரானால முடங்கிட்டாலும் எந்திருச்சு நிக்க கத்துக்கிட்டேன். அதே சமயம் ஊரடங்குன்னு வீட்ல கிடக்கறப்ப பிரச்சன வரக்கூடாதுன்னு சேத்து வைக்கறதை கட்டாய படுத்திக்கிட்டேன். என்னாங்க சந்தோசம் நமக்கு வீட்டை தவர..? வீட்டுக்கு போனா பசங்க முகத்த பாக்கலாம். பொண்டாட்டிக்கிட்ட சிரிச்சு பேசி அவ மடியில படுத்துக்கிட்டு ஏதாவது கத பேசலாம். முடிஞ்சா வம்பு பண்ணி சண்டையாவது போட்டு அப்பறம் சமாதானம் பண்ணற மாதிரி இறங்கி போனா ஏதாவது சாபம் கொடுக்கறதை வாங்கிட்டு அப்பறம் சிரிக்கற அழக பாக்கலாம்.. கூட இப்ப இந்த கிண்டா விசயத்தையும் சேத்திக்கிட்டா மிதக்கற மாதிரிதான் இருக்குது. கிண்டாக்கு இந்த ரண்டு நாள்ள நிறைய சிநேகிதிங்க.. சிநேகிதனுங்க.. எல்லாமே குட்டீசுங்க.. பாச்சு குடிக்கற குழந்தைங்கள்ல ஆரம்பிச்சு கிண்டாவ தொடாதவங்க இல்லீங்க. அது சாதுவா நின்னுக்கிட்டு எல்லாத்தையும் வேடிக்க பாக்குது. யாரும் பின்னாடி இல்லன்னா உதைக்குது. உதைக்கும்போது கூட பாத்துதான் உதைக்குது. என்னால நம்ப முடியல. ஆனா அது பேசற குதரன்னு இப்பதான் புரியுது. பேசுதுன்னா தலையாட்டறது.. நகர்றது.. உதைக்கறது.. கனைக்கறது இப்படி.. அதாவது புருஞ்சுக்கறது.. இப்ப எனக்கு அடுத்து அதுக்கு புஷ்டியா என்னா தர்றதுன்னு யோசனை போகுது.. கொள்ளு.. கொள்ளு கஞ்சி.. கொள்ளு பருப்புன்னு அதிகமா யோசிக்கறேன்..

ஒரு இடத்துல தொங்கிட்டே பெயிண்ட அடிச்சுட்டு மதியம் சாவகாசமா இறங்கி நாங்க ஒரு நாலஞ்சு பேரு ஒண்ணா உக்காந்து சாப்புடறப்போ போன் வந்தது.. பொண்டாட்டிதான்..

எடுத்து “என்னா..?”ன்னு கேக்கறதுக்குள்ள “குதரய தேடிட்டு பாயி வந்தாரு..”ன்னு சொல்லறா..

“என்னா சொல்றே..?”

“ஆமா.. வந்துட்டு வா போலாமுன்னு கூப்புடறாரு..”

“உன்னையவா..?’

‘அட நாசமா போனவனே.. இப்புடி கூடவா தமாசு பண்ணுவாங்க..?’

‘அப்பறம்..?”

“போயுடுச்சு…”

““போயிடுச்சா..?”

“அது கூடவே போயிடுச்சு..”

நான் வேகமாக “என்னா நடந்ததுன்னு தெளிவா சொல்லேன்.. நீயே வரச்சொல்லிட்டியா பாய குதரய புடிக்கலைன்னு..?”

“இல்ல.. இல்ல..”

“பின்ன..?”

“அவராதான் வந்தாரு. குதரய பிரிஞ்சு இருக்க முடியலைன்னு சொன்னாரு. தாராளமா கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லிட்டேன். வண்டிய வேணுமுன்னா நீங்களே வச்சுக்கோங்கன்னு சொன்னாரு..”

“அத வச்சுக்கிட்டு என்னத்தை பண்ண?”

“அதையேதான் சொன்னேன் நானும்..”

“அப்பறம்..?”

“வண்டிய பின்னாடி எடுத்துக்கறேன்னு சொல்லிட்டு குதரையோட போனாரு..”

“ம்..” என்று நான் அப்படியே கிடந்தேன். சாப்பாடு கைல ஒட்டிக்கிட்டு மத்தவங்க வேடிக்க பாக்கறாங்க. ஒரு நொடி பெரிய சலிப்பு வந்த மாதிரியிருந்தது. ஆனா அத ஏத்துக்க முடியலைன்னாலும் பாயோட பாசத்த பத்தி நினைச்சு பாக்கறேன். அவரோட அழுகைல உண்ம இல்லாம இல்ல. ஏதோ சொல்லிட்டாரு.. புடுச்சுட்டு போன்னு.. ஆனா மனசு தாங்கலை போல..

“சரி.. சரி.. பாத்தக்கலாம்..”னு பொண்டாட்டிக்கிட்ட சொல்லற மாதிரி எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கறேன். அதுக்கப்பறம் எனக்கு சாப்புட தோணல. வேலைலேயும் கவனம் போகல. கீழ குனுஞ்சு பாத்தா ஏறக்குறைய இருபதடி உயரத்துல தொங்கிட்டு இருக்கேன். அந்த உயரம் பயமா இருந்தது இப்ப.. சில நேரம் பயம் வரும். பத்தடில கூட வரும். கீழ விழுந்து அடிபட்டதுன்னா எத்தன அடி உயரமா இருந்தா என்ன..? பசியெடுக்குது. சாப்புட்டு இருக்கலாமுன்னு தோணுது. அந்த பில்டிங் ஓனரு பொண்டாட்டியோட கீழ ஒரமா உக்காந்திட்டு எதையோ சாப்புட்டுக்கிட்டு சிரிச்சுட்டே பேசிட்டு இருக்கான். அந்த பொம்பள அலங்கார பொம்ம மாதிரி இருக்கறது எரிச்சலா இருக்குது. அவ சிரிக்கறது.. பேசறது கூட எனக்கு புடிக்கல. அதுல ஏதோ ஒரு நடிப்பு இருக்கற மாதிரி தெரியுது. அப்பறம் கவனிச்சா அந்தாளு கூட அப்படிதான் பேசிட்டிருக்கான்னு தெரிஞ்சப்ப ரண்டு பேரு மேலேயும் எரிச்சலா வந்தது. ஆனா அவங்க பக்கமா திரும்பி பாக்காம வேல செய்யறதுக்கு முயற்சி பண்ணேன். ஆனா சத்தம் வந்துட்டே இருக்குது. அப்பறம் அந்த ரோட்ல அடிக்கடி ஒரு ஆட்டோ “புர்ரு.. புர்ருருருரூ..” ன்னு வர்றதும் போறதுமா இருந்தது. அது கூட எனக்கு புடிக்கல.. அப்பறம் வேல செய்யறது கூட புடிக்கல.. இன்னொருத்தன அவன் ஏதோ செஞ்சப்ப திட்டினப்போ அவன் உர்ர்…ருரு..ன்னு  பாத்தான். அவனுக்கு இப்படி பேசறது புடிக்காதுன்னு எனக்கு தெரியும். ஆனா நான் அவன்கிட்ட ஏதும் பேசிக்கல.. அந்த ஓனரும் ஓனரு பொண்டாட்டியும் இடத்த காலி பண்ணிட்டது நல்லதா போச்சு.. இறங்கி அந்த பெயிண்டு டப்பாவ மூடிட்டு அவங்க உக்காந்திட்டிருந்த சேர்ல போயிட்டு உக்காந்திட்டேன். பெரும்பாலும் அப்படி நானு உக்காரமாட்டேன். அந்த ஆளும் அந்த பொம்பளையும் இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான் உக்காந்தேன்.. கூட இருந்தவங்க வேலைய செஞ்சுட்டே என்னைய வேடிக்க பாத்தாங்க அப்பப்ப.. எனக்கு எரிச்சலு இப்ப அந்த குதர மேல போச்சு. அதை நல்லா திட்டனமுன்னு தோணுச்சு. ஆனா ஏதும் நினைக்காம இருந்தேன்..

ரொம்ப நேரமா அப்படியே இருந்தேன். அப்பறமா நிதானமா எழுந்து மத்தவங்களோட சேந்துக்கிட்டு கிளம்பறதுக்கு தயாரானப்போ கூட அந்த குதரைய பத்தியே நினைச்சுட்டு இருந்தேன்..

அப்பறம் ஏதோ தெளிவு கிடைச்சா மாதிரி இருந்தது.. ஏதோ ஒண்ணு தோணுச்சு எனக்கு..

அதாவது அந்த குதர செஞ்சது சரிதான்னு.. அப்ப நான் பாய் வீட்டுக்கு அப்பப்போ போயிட்டு அதுக்கு தீவனம் தரனமுன்னு நினைச்சுக்கறேன்.. அப்ப எனக்கு சந்தோசமா இல்லைன்னாலும் ஒரு திருப்தியா இருந்துச்சு.. 

அப்ப பொண்டாட்டிக்கட்ட இருந்து மறுபடியும் போன் வருது.. எடுக்கனமுன்னு தோணலை.. குதர மறுபடி வந்துருக்கலாம்.. அல்லது பாயி வண்டிய தள்ளிட்டு போக வந்திருக்கலாம்.. அல்லது பெருசுக்கு ஏதாவது ஆயிருக்கலாம்.. இன்னிக்கு ரொம்ப இருமிட்டு கிடந்தாரு.. நான் போனை எடுக்காம அப்படியே விட்டுட்டேன்..

வீட்டுக்கு போயிட்டு குதரையும் இல்லை வண்டியும் இல்லைன்னா அத எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறேன்.. அப்பவும் விடாம மொபைலு அடிச்சுட்டே இருக்குது.. இதுக்கு மேல எடுக்காம இருக்கப்படாதுன்னு மொபைல எடுத்து காதுல வைக்கும்போது திக்கு.. திக்குன்னுது..

அவ பேச ஆரம்பிக்கறா..

                              0000

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *