கனடாவில் கலோவீன் தினம்

This entry is part 5 of 18 in the series 31 அக்டோபர் 2021

       

குரு அரவிந்தன்

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. 

பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.

பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம்  குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். 

அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats)  இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.

கலோவின் தினத்திலன்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவைமாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று  பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு கலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்.

இந்த மாதத்தில் அனேகமான கடைகளில் கலோவின் தினத்திற்கான பொருட்களே முக்கிய வியாபாரப் பொருட்களாக இருக்கும். கலோவீன் ஆடைகள், முகமூடிகள் போன்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும். கலோவீன் கதைகள் அடங்கிய புத்தகங்கள், கலோவீன் புகைப்படங்கள், கலோவீன் ஒளிப்பட குறுந்தட்டுக்கள் போன்றவையும் அதிகம் விற்பனையாகும். அங்காடிகளில் பெரிய, சிறிய பூசணிக்காய்கள், ஆப்பிள் பழங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். வேலைத்தலங்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் விதம் விதமான ஆடைகள் அணிந்து, முகத்திற்கு மைபூசி வருவார்கள். பெண்கள் தேவதைகள், மந்திரக்காரி, சூனியக்காரி போன்று ஆடைகள் அணிந்திருப்பர். காலோவீன் வாழ்த்து மடல்கள் வரைந்து ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர். பத்திரிகைகள் சிறுவர்களுக்கான கலோவீன் சித்திரம் வரையும் போட்டி, கலோவீன் நிறம் தீட்டும் போட்டி போன்றவற்றை இந்த வாரங்களில் நடத்துவர். பெரிய அங்காடிகளிலும் சிறுவர், சிறுமிகளை ஊக்குவிப்பதற்காக இப்படியான நிறம் தீட்டும் போட்டிகளை நடத்திப் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பர்.

இத்தினத்தில் அனேகமானவர்கள் முகமூடி போட்டும் உருமாற்றம் செய்தும் இருப்பதால் மாலை நேரத்தில் நகர் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கும். சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக் கருதி, மாலைநேரத்தில் குழந்தைகள் தனியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கும். 1978ம் ஆண்டு கலோவீன் என்ற பெயரில் ஜோன் காப்பென்ரரின் நெறியாள்கையில் ஆங்கிலப் படம் ஒன்றும் வெளிவந்திருந்தது. 2007ம் ஆண்டு மீண்டும் கலோவீன் படம் ஒன்று இதே பெயரில் றொப் சோம்பியால் (Rob Zombie) படமாக்கப்பட்டது. சுமார் 12 படங்களுக்கு மேல் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.

Series Navigationகுருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)நாமென்ன செய்யலாம் பூமிக்கு?
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *