தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 14 of 15 in the series 5 டிசம்பர் 2021

வளவ. துரையன்

                  காத்த ஆமை ஓடும் கபாலமும்

                  கோத்த சன்ன வீரம் குலாவவே. [341]

 

[கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க]

 

முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம் எனும் வெற்றிமாலையும் மார்பில் அசையவும்,

===============

                   வந்த வந்த மாயவர்கள் மாய்தொறும்

                   தந்த சங்க நாதம் தழங்கவே. [342]

[வந்தவந்த=தோன்றிப் பின் மறைந்து தோன்றிய; மாயவர்கள்=திருமால்கள்; மாய்தல்=மடிதல்; தழங்கல்=ஒலித்தல்]

ஊழிதோறும் தோன்றி மறைந்த மாயவர்கள் மடியும்போதெல்லாம் அவர்கள் விட்டுப் போன சங்குகளை எடுத்துக் கொண்டு பூதகணங்கள் ஒலி முழக்கம் செய்யவும்,

                     திருக்கொள் மார்பன் தீர்விக்ரமம் செய்த

                     உருக்கொள் நீன்குரல் காளம் ஊதவே. [343]

திரு=இலக்குமி; உருக்கொள்=உருவுடைய எலும்பு; காளம்=ஊதுகொம்பு]

வாமனனாக வந்தபோது திருமகள் தங்கியிருந்த மார்பை உடைய திரிவிக்ரமனின் எலும்புகளை எடுத்துப் பேய்கள் எக்காளம் ஊதவும்,

                    ஓடி ஓடி வீழ் தருமர் ஊர்தியின்

                    கோடி கோடி கொம்புகள் குறிக்கவே. [345]

தருமர்=எமதருமர்; ஊர்தி=வாகனம்; குறிக்கவே=சொல்லவே]

கோடி கோடியாய் ஓடி ஓடிக் காலமெல்லாம் மறைந்த எமதருமர்கள் வாகனமாகிய எருமைக் கடாவின் கொம்புகளை எடுத்துக் கொண்டு வாயில் வைத்துப் பேய்கள் முழக்கமிடவும்,

                    கொண்ட குலவேல் விடுபொறிக் குழாம்

                    அண்ட வானமீன் நிரை மயங்கவே. [346]

[பொறி=நெருப்பொறி; அண்டம்=ஆகாயம்; நிரை=கூட்டம்]

வீர்ர்களின் சூலம், மற்றும் வேல் இவைகளிலிருந்து வெளிவரும் நெருப்புப் பொறிகள் ஆகாயத்திலிருக்கும் சந்திரமண்டலத்தையே ஒளிமங்கச் செய்யவும்,

                    வில்லின் வான் அடையவும்திருக்

                    கொற்ற வில்லின் நாண்விழி கொளுத்தவே.    [347]

அவர்கள் தம் பினாகம் எனும் அழகிய வில்லில் நாணாகப் பூட்டிய தட்சகன் என்னும் பாம்பின் கண்கள் உமிழும் நெருப்பு வானம் முழுதும் பரவி மற்ற ஒளிகள் யாவையும் மங்கச் செய்யவும்,

                     பூத நெற்றியில் புண்டரம் புகுந்து

                     யாது தானர் நெய்த்தோர் இழக்கவே.      [348]                     

                                                                                       [புண்டரம்=திருநீற்றுப் பட்டை; தானர்=அசுரர்; நெய்த்தோர்=இரத்தம்]

பூதகணங்கள் தம் நெற்றியில் திருநீற்றுப் பட்டை பூசுவதற்காக, அசுரர் உடலைக் குத்திக் கிழித்து அவர் உடலிலிருந்து வரும் இரத்தத்தை எடுக்க அவர்கள் இரத்தம் இழக்கவும்,

              ஏனையோர் இருந்து இணையது எனவே

              சேனை வல்லபம் செய்த செய்தியே.                          [350]

[ஏனையோர்=மற்றவர்கள்; வல்லபம்=வலிமை]

இப்படிப் படைகள் செல்வதைப் பார்த்த மற்றவர்கள் “ஏன், எதற்கு இப்படி” என்று வியப்படைய வீரபத்திரருடன் வந்த படைகள் யாவும்  வலிமை கொண்டிருந்தன.

Series Navigationபால்வெளிப் பாதையில்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *